இலக்கிய மரபு – சிறுகதை – மு.வரதராசன்

 

அமைப்பு

சுவையான ஒரு நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை அமைப்பு ; கவர்ச்சியான ஒரு காட்சி ; நெருங்கிப் பின்னப்பட்ட சிறு நிகழ்ச்சிகள் ; ஒருவரின் தனிப் பண்பு ; ஒரு சிறு அனுபவம் ; வாழ்க்கையின் ஒரு பெற்றி ; அற உணர்வால் விளைந்த ஒரு சிக்கல் – இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது இவை போன்ற ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாக அமையலாம்.

கருவின் சிறப்பால் அமையும் சிறுகதை, ஒருவரின் பண்பின் சிறப்பால் அமையும் சிறுகதை, உள்ளத்தில் பதியும் உணர்வின் சிறப்பால் அமையும் சிறுகதை எனப் பாகுபாடு செய்யலாம். இவற்றுள் உணர்வின் சிறப்பை ஒட்டிய சிறுகதையே சிறந்தது என்று போ Edgar Allen Poe என்னும் அறிஞர் கருதினார்.

சுருங்கச் சொல்வதாயினும், எடுத்த கதைப் பொருள் உணர்ச்சி புலப்பட’ விளக்கப்பட் டிருத்தல் வேண்டும். இன்னும் கூகிதலாக விளக்கியிருப்பினும் பயன் மிகுந்திருக் காது என்று சொல்லத் தக்கவாறு அளவான விளக்கம் வேண்டும். ஒரு நாள் நிகழ்ச்சியாக இருப்பினும், அன்றி ஒரு சில ஆண்டுகளின் நிகழ்ச்சியாக இருப்பினும், விளக்கம் போதும் என்ற நிறைவு தோன்றுமாறு அமைய வேண்டும்.

நோக்கம், குறிக்கோள், செயல், உணர்வு ஆகியவை சிதறாமல் ஒன்றுபட்டு அமைய வேண்டும். அதாவது, ஒரு நோக்கம், அதற்கு இடையூறாக வேறு ஒன்று புகாமல் அமைத்தல் ; ஒரு குறிக்கோள், அதை ஒரே போக்கில் புலப்பட உணர்த்தல்; ஒரே செயல், அதைத் தெளிவுறக் காட்டல் ; ஒரே உணர்வு, அதை உள்ளத்தே பதியுமாறு உணர்த்தல் என இவ்வாறு நேரிய முறையில் அமைக்க வேண்டும். இவற்றைச் சிதைக்கும் வேறு பிறவற்றைப் புகுத்தல் ஆகாது.

சிறுகதையின் இலக்கணம் எனப் பலர் பலவாறு கூறியுள்ளனர். எவையும் முடிந்த முடிபாக இல்லை எனலாம். சிறந்த சிறுகதையின் அமைப்பே சிறுகதையின் இலக் கணம் எனலாம்.

சிறுகதை குதிரைப் பந்தயம் போல், தொடக்கமும் முடிவும் சுவை மிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பர் செட்ஜ்விக்.

நாவல் : சிறுகதை

கதைமாந்தரின் பண்புகள் படிப்படியே விளக்கமுறல், காலம் நகர்ந்து செல்லல் – இவைகள் /நாவலின் அடிப்படைகளாகும். ஆயின், சிறுகதையில் காலம் நகரத் தேவை இல்லை ; ஒரு சிறு கால மாறுதல் ஏற்படினும் போதும். கதைமாந்தர் நகரத் தேவை இல்லை’; அவர்கள் வளரவும் தேவை இல்லை , கதைமாந்தரும் தேவை இல்லை.. இவை இல்லாமலே சிறுகதை அமைய முடியும். நாவலில் இளைஞர் வளர்ந்து முதியராதல் உண்டு ; சிறுகதையில் அவர்களை ஒரே நிலையில் காட்டியும் முடித்து விடலாம்.

கட்டுப்பாடு

சிறுகதை அளவில் சிறிய தாக அமையும் காரணத்தா லேயே, கட்டுப்பாடுகள் உடையதாகின்றது. ஒரே முறை யில் படித்து முடிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும் என்றும், ஒரே ஒரு பயன் அல்லது விளைவு உடைய தாக இருத்தல் வேண்டும் என்றும், அதனால் கதையில் வரும் சில நிகழ்ச்சிகளும் கதைமாந்தர்களும் அந்த ஒன்றனுக்குப் ‘பயன்படக் கூடிய வரையறையோடு அமைய வேண்டும் என்றும் கூறுவர். + தொடக்கம் முதல் முடிவு வரையில் ஒரே நோக்கம் உடையதாக விளங்கல் வேண்டும் ஆகையால், குறித்த ஓர் ஆளைத் தேடிச் செல்பவரின் ஊர்ப் பயணம் போல் வேறு எதுவும் குறுக்கிடாமல் அமைதல் வேண்டும்.

சிறுகதையில் கதை சிறிதாக இருந்தாலும், கதை மாந்தர் ஒரு சிலராகவே இருந்தாலும், கதை நிகழ்ச்சி ஒன்று இரண்டாகவே இருந்தாலும், ஒரு முழுத்தன்மை மட்டும் கட்டாயம் வேண்டும். தேவையற்ற வருணனைக்கோ, வேண்டாத நிகழ்ச்சிகளுக்கோ இடம் தராத சிறுகதை என்னும் இந்தக் கலை, சிறிய வடிவிலேயே முழுத் தன்மை பெற்று விளங்குவதால், அரிய கலை என்று போற்றத் தக்கதாகும்.

உரையாடல்

சிறுகதைகளில் உரையாடல் மிகுந்திருத்தலும் உண்டு ; குறைந்து அமைதலும் உண்டு. கதைமாந்தரின் பண்பை விளக்குவதற்கோ, கதை நிகழ்ச்சியைப் புலப் படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமைய லாம். அது, எழுதுவோரின் திறனைப் பொறுத்ததே ஆகும். உரையாடல் வாயிலாக அல்லாமல், வேறு வகை யாலேயே கதையையும் பண்புகளையும் புலப்படுத்த வல்ல ஆசிரியர்க்கு உரையாடல் அவ்வளவாகத் தேவைப்படுவ தில்லை. ஆதலின் உரையாடலே இல்லாமல் முடியும் சிறு கதைகளும் சில உள்ளன. முழுதும் உரையாடலாகவே அமைந்துள்ள சிறுகதைகளும் ஒரு சில உள்ளன.

வருணனை

சிறுகதைகளில் நீண்ட வருணனைகளுக்கு இடமே இல்லை. பொதுவாக நோக்கின், நாவல் முதலியவற்றிலும் வருணனைகள் வர வரக் குறைந்துவருகின்றன. முந்திய நூற்றாண்டுகளில் மக்களிடையே பழக்கமும் குறைவாக இருந்தது ; நடை உடை வழக்கங்களும் மிக மிக வேறுபட் டிருந்தன. ஆகையால் ஒரு வகையான நடையுடை உடைய வர்கள் மற்றவர்களின் நடையுடை முதலியவற்றை அறிய ஆர்வம் கொண் டிருந்தனர். போக்குவரத்து மிகுதி, கல்வி வளர்ச்சி முதலியவற்றால் வாழ்க்கை எல்லா மக்களுக்கும் ஏறக்குறைய ஒரே வகையாக அமைந்து வருகிறது; வேறுபாடுகள் குறைந்துவருவதால், எல்லோருக்கும் எல் லோரைப் பற்றியும் தெரியும் நிலை உள்ளது. ஆதலின் மக்க ளைப் பற்றியும் பழக்க வழக்கங்களைப் பற்றியும் இப்போது கதைகளில் குறிப்பிட்டால் அது போதும் ; வருணித்தல் தேவையில்லை.

சிறுகதை எழுத்தாளர்கள் சிறந்த கலையுணர்ச்சி உடையவர்கள். அவர்களின் வருணனைகளில் அந்தக் கலைச் சிறப்பு விளங்கும். ஏதேனும் ஒன்றைப் பற்றி விளக் கும்போது, அந்த விளக்கத்தால் அந்தப் பொருளை மனக் கண் உடனே காணும். கண்ணால் காண்பது மட்டும் அல் லாமல், மற்றப் புலன்களாலும் உணர்வதுபோன்ற அனு பவம் ஏற்படும். சிறந்த சிறுகதை ஆசிரியராகிய சொ என்பவர் கார்க்கி என்ற ஆசிரியரிடம் தெரிவித்த அனுபவம் இது.

ஆனால் சிறுகதையின் கருவுக்கோ உணர்ச்சிக்கோ வேண்டாத ஒன்று எந்த வருணனையிலும் இடம் பொக் கூடாது. ஒரு வீட்டின் கூடத்தின் சுவரில் படம் ஒன்று மாட்டிவைக்கப்பட்டதாகக் கூறினால், அந்தப் படம் எந்த வகையிலேனும் கதையின் கருவுக்கோ உணர்ச்சிக்கோ பயன்பட வேண்டும். இல்லையேல், அதைப் பற்றிய குறிப்பு அந்த வருணனையில் கூடாது என்பர்.

“புகைவண்டி நிலையத்தில் எட்டிப் பார்த்தேன். நண்பனைக் கண்டு மகிழ்ந்தேன் ” என்று செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் மட்டும் கூறிச்செல்வது நல்ல கதை ஆகாது.

இதைப் படிப்பவரின் நெஞ்சில் அந்த நிகழ்ச்சிகள் படமாக அமைவதில்லை; நன்கு பதிவதில்லை. “புகைவண்டி நின்றது. நிலையப் பலகை கண்ணெதிரே தெரிந்தது. வெள்ளை நிறம் தீட்டிய பலகையில் கருநிற எழுத்துக்கள் கொட்டையாக ‘ஆவடி’ எனத் தெரிவித்தன. என் கையை யாரோ தொட்டது உணர்ந்து திரும்பிப் பார்த்தேன். நண்பனுடைய மலர்ந்த முகத்தில் முத்துப்போன்ற பற்கள் தோன்ற விளங்கிய முறுவலைக் கண்டேன்” என்று இது போல் எழுதினால் நிகழ்ச்சிகளைப் படிப்பவரின் உள்ளத்தில் பதியவைக்க முடியும். செய்திகளையும் இவ்வாறே உணர்ச்சி யோடு கூட்டிக் குழைத்துத் தந்தால் அவை நெஞ்சில் பதி யும். இது கலைப்படைப்புக்கு இன்றியமையாத திறனாகும்.

கரு

சில சிறுகதைகளில் கரு மிகச் சிறப்பாக விளங்கும் ; சில சிறுகதைகளில் கதைமாந்தரின் பண்பு சிறந்து நிற் கும்; வேறு சில சிறு கதைகளில் உணர்ச்சி சிறப்புற் றிருக்கும். அந்தந்தச் சிறப்புப் பற்றிச் சிறுகதை போற்றப் படுதல் உண்டு. கருவின் சிறப்பு, பண்பின் சிறப்பு, உணர்ச்சியின் சிறப்பு என அச் சிறப்புக்கள் பற்றி உணர்ந்து கூறப்படும் சிறுகதைகளில், கரு மிகச் சிறப்பாக அமைந்த சிறுகதைகள் படிப்பவரின் நெஞ்சில் நீங்காமல் நிற்பனவாகும்.

கதையின் கரு நாட்டுக்கு நாடு வேறுபடும். சோமர்’ செட் மாம் எழுதியுள்ள ஒரு கதையில் (Home and Beauty), மாண்டுபோன தாகப் பலராலும் கருதப்பட்ட ஒரு போர் வீரன், ஊர்க்குத் திரும்பிவந்து பார்த்தபோது அவனு டைய மனைவி அவனுக்கு உயிர்த் தோழனான ஒருவனை மணந்து வாழ்வதைக் காண்கிறான். இந்தப் போக்கில் மேனாட்டுக் கதைகள் அமையலாம். ஆனால் இந்த நாட்டில் இவ்வாறு அமைவது அரிது. காரணம், நாட்டுக்கு நாடு மக்களின் மனப்பான்மையில் இன்னும் வேறுபாடுகள் இருத்தலே ஆகும்.

முழுமை

சிறுகதை, அளவில் சிறிய கதையாக அமையினும், அதில் ஒரு முழுமை அமைதல் வேண்டும். கூறத் தக்கன எல்லாம் விடாமல் கூறப்பட்டன என்றும், திறனுடன் கூறப்பட்டன என்றும் படிப்பவர்க்கு மன நிறைவு ஏற்படும் வகையில் அமைதல் வேண்டும். இன்னும் விரிவாக எழுதி யிருப்பின், ஒரு குறைவும் நேர்ந்திருக்காது எனினும், ஒரு பயனும் மிகுந்திருக்காது என்று எண்ணத் தக்க வகையில் அமைதல் வேண்டும்.

இயைபு

சிறுகதையில் கூறப்படுவது ஒரு மணி நேர நிகழ்ச்சி யாகவும் இருக்கலாம்; ஒரு நாள் செய்தியாகவும் இருக்கலாம்: ஒரு வாரத்து நிகழ்ச்சிகளாகவும் இருக்கலாம் ; ஓர் ஆண்டு அல்லது பல ஆண்டுகளின் வாழ்க்கையாகவும் இருக்கலாம். ஒருவரின் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியும் சிறுகதை யாக இருக்கலாம்; அல்லது அவருடைய முழு வாழ்க்கை யும் அதில் அமையலாம். ஓர் இடமே களமாக அமை யினும் அமையலாம் ; பல்வேறு இடங்களும் வரினும் வர லாம். ஒருவர் இருவரே கதைமாந்தராகவும் அமையலாம் ; பலரும் வந்து அமையலாம்.

ஆயின், ஒருமுக இயைபு அதில் விளங்கல் வேண்டும். கூறப்படுவன எல்லாம் ஒரு காரணம் பற்றியனவாக, ஒரு நோக்கம் உடையன வாக, ஓர் உணர்ச்சியை விளைப் பனவாக இருத்தல் வேண்டும். அந்த ஒருமுக இயைபுக்கு இடையூறானவற்றையும் வேண்டாதவற்றையும் நுழைத்த லும் சேர்த்தலும் ஆகா.

தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம் படிப்பவரின் ஆர்வத்தை யும் கற்பனையையும் தூண்டக் கூடிய வகையில் அமைவது உண்டு. தேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் இவ்வகை யான தொடக்கத்தை அமைத்துச் சிறுகதை எழுதியுள்ளனர்.

“எதிர்பாராமல் வீட்டினுள் அடைக்கப்பட் டிருந்த தம் மனைவியின் நாயைக் காப்பதற்காக முயன்றபோது, காப்டன் பாரஸ்டியர் ஒரு காட்டுத்தீயில் சிக்கி மாண்டதாகச் செய்தி படித்தபோது, பலர் திடுக்கிட்டார்கள்”: இப்படிச் சோமர் செட்மாம் எழுதிய (The lion’s skin என்ற) ஒரு சிறுகதை தொடங்குகிறது.

“தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல் இருந்தது. சிவராமையர் டேஞ்ஜரஸ் – என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந் து.” இவ்வாறு தொடங்குகிறது கு.ப.ராஜகோபாலன் எழுதிய ‘விடியுமா’ என்ற சிறுகதை.

இத்தகைய தொடக்கங்கள் சிறுகதைக்குக் கவர்ச்சியூட்டிச் சுவை மிக்க அமைப்பைத் தருகின்றன.

தோற்றம்

சிறுகதை என்ற இலக்கிய வகை உலகத்தில் தோன்றி வளர்ந்து ஒரு நூற்றாண்டு தான் ஆயிற்று. அமெரிக்காவில் எட்கார் ஆலன் போ பற்பல சிறுகதைகளை எழுதிக் கலைச் செல்வமாகத் தந்த பிறகே, உலக அறிஞர்கள் சிறுகதையைத் தனிவகையான இலக்கியமாகப் போற்றத் தொடங்கினர். அதற்குமுன் எல்லா நாடுகளிலும் கதை கள் வழங்கிவந்தன. வாய்மொழிக் கதைகளும் இருந்தன; எழுதப்பட்ட கதைகளும் இருந்தன; வீட்டுப் பாட்டிமார் முதல் நாட்டுப் புலவர் வரையில் யாவரும் கதைகளைப் போற்றினர்; கதைகள் உரைநடையிலும் இருந்தன; செய் யுளிலும் இருந்தன; அவற்றுள் நீண்ட பெரிய கதைகளும் இருந்தன ; சுருங்கிய சிறிய கதைகளும் இருந்தன. ஆனால் அவை சிறுகதைகள் என்னும் பெயர்க்கு உரியன அல்ல. எட்கார் ஆலன் போவும் ஐரோப்பாவில் ரஷ்யா, பிரான்சு முதலிய பல நாட்டு அறிஞர்களும் (ஓ.ஹென்றி, மாப்பசான், செகோ முதலானவர்) ஒரு தனி மரபைப் போற்றி எழுதி வளர்த்தவைகளே சிறுகதை இலக்கியம் ஆயின.

தமிழ் நாட்டில் சிறுகதை ஒருவகை இலக்கியமாக வள ரத் தொடங்கியது இந் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆகும். ஆயினும் இது இந்த நாற்பது ஆண்டுகளுக்குள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்மொழியில் இன்று தேர்ந்த சிறுகதை எழுத்தாளர் பலர் உள்ளனர். உலகத் துச் சிறுகதை இலக்கியத்தோடு போட்டியிடக்கூடிய செல் வத்தைத் தமிழ்மொழி பெற்றுவிட்டது எனலாம்.

மேலை நாட்டில் சிறுகதை ஒரு தனி இலக்கியமாக வளர் வதைக் கண்டு தமிழ்மொழியும் அந்தப் பேறு பெற வேண் டும் என்று ஆர்வம் கொண்டவர் வ. வே. சு. அய்யர். அவ ருடைய மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்” மற்றவர்களின் முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. வங்காளத்தில் தாகூர் எழுதிய சிறுகதைகள் தமிழ்நாட்டு அறிஞர்களுக்கு ஒருவகைத் தூண்டுகோலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமைந்தன. அவற்றைக் கண்ட பாரதியார் தாமும் தமிழில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆயின் வெற்றி பெறவில்லை.

வ.வே.சு. ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகளை 1927-ஆம் ஆண்டில் வெளியிட்டு வெற்றி பெற்றார்.

வளர்ச்சி

நாவலுக்குச் சொன்னவற்றில் உணர்ச்சி கற்பனை முத லிய பல சிறுகதைகளுக்குப் பொருந்தும். சுவையமைப்பு, உரையாடல் அமைப்பு, இயற்கை வருணனை முதலிய பலவற் றில் நாவல் போலவே சிறுகதையும் அமையும். ஒரு திங்கள் வெளியீட்டிலோ வார வெளியீட்டிலோ ஒரே இதழில் முழு மையாய் வரக்கூடிய தாக இருப்பது சிறுகதையே ஆதலின், அவை சிறுகதையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கார ணமாக அமைந்தன. ஓர் இதழில் புலப்படுத்தக்கூடியவாறு நாவலின் ஒரு பகுதியையோ அல்லது ஒரு பண்பையோ வெளியிட முடியாது. பண்புகளைப் படிப்படியே வளர்த்து விளக்க வேண்டியிருப்பதாலும், கதை நிகழ்ச்சிகளை அடுத் தடுத்து நகர்த்திச் செல்ல வேண்டியிருப்பதாலும் சிக்கலும் கோவையும் மிக்க நாவலால் முடியாத அதனைச் சிறுகதை செய்ய முடிந்தது. அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரையில் உள்ள காலவரையறையில்படித்து முடித்து மகிழக் கூடியதாக சிறுகதை விளங்கவேண்டும் என்பது எட்கார் ஆலன் போவின் கருத்து. இப்போது கால்மணி நேரத்தில் படிக்கக் கூடிய சிறு கதைகள் பெருகியுள்ளன , ஐந்து நிமிடத்தில் படிக்கக் கூடிய சிறுகதைகளும் சில இதழ்களில் வெளியாகின்றன. இக்காரணத்தாலே சிறுகதைக்குத் தனி வளர்ச்சி அமைவதாயிற்று.

சிறுகதை எழுதப்பட்ட தொடக்கத்தில், உள்ள இலக்கணங்களின்படி எழுதப்படவில்லை. சிறிய கதையே அப்போது சிறுகதையாகக் கருதப் ஆதலின் கதையின் சுருக்கமே அப்போது சி இலக்கணமாகக் கொள்ளப்பட்டது. * ஆனால் இன்று சிறு கதை என்பது தனியான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்து சிறப்பிடம் பெற்றுவிட்டது. சென்ற நூற்றாண்டின் தொடக் கத்தில் தோன்றிய சிறுகதைகளே அவ்வாறு தனிவளர்ச்சி அமைத்துத் தந்தன எனலாம். அவர்களின் இலக்கிய முயற்சியால், சிறுகதைக்கு என ஓர் அழகான வடிவம் அமைவதாயிற்று. அந்த வடிவ அமைப்பாலேயே சிறு கதை இலக்கியச் சிறப்புப்பெற்றது.

காலத்தின் விளைவு

பழங் காலத்தில் தன்னுணர்ச்சிப் பாட்டுக்கள் பெற் றிருந்த இடத்தை இக்காலத்தில் சிறுகதை என்ற இலக்கிய வகை ஓரளவிற்குப் பெற்றுள்ளது எனலாம். இக்காலத்து நாவலாசிரியர் சிலர் முற்காலத்தில் இருந்திருப்பின், காவியப் புலவர்களாக இருந்திருப்பர் ; அதுபோலவே, இக்காலத் துச் சிறுகதை ஆசிரியர்கள் சிலர் பழங்காலத்தில் வாழ்ந் திருப்பின், தனிப் பாட்டுக்கள் பல பாடும் கவிஞர்களாக இருந்திருப்பர். காலத்திற்கு ஏற்ப இலக்கியத்தின் வடி வமும் வளர்ச்சியும் மாறியமைவதையே இவற்றின் வாயி லாகக் காண்கிறோம்.

இக்காலத்து இலக்கிய வகைகளுள் மிக வேகமாக வளர்ந்துவருவது சிறுகதையே ஆகும் ; பெரிதும் வரவேற் கப்பட்டுச் செல்வாக்காக உள்ள தும் அதுவே ஆகும். ‘வில்லாத – நெருக்கடி – மிகுந்த – இக்கால வாழ்க் யில், விரைவில் படித்து முடித்து மகிழக் கூடியதாக ‘பது அதற்குக் காரணம் ஆகும். வார இதழ்களும் – இதழ்களும் வளர்ந்துள்ள வளர்ச்சியும் ஒரு காரணம் எனலாம். எவ்வாறெனில், அந்த இதழ்கள் வெளியிட்டு ஒரே இதழில் முடிக்கக் கூடிய அளவில் அமையக் கூடியது சிறுகதையே. ஆகவே, கட்டுரைகளும் செய்திகளும் நகைச்சுவைத் துணுக்குகளும் ஆய்வுரைகளும் வெளியிடும் ஓர் இதழ், கதையும் வெளியிட விரும்பும் போது, அதற்கு உதவியாக உள்ளது சிறுகதையே. ஆதலின், வார இதழ்களும் திங்கள் இதழ்களும் பலவாய்ப் பெருகி வளர வளர, சிறுகதைகளும் மிகப் பல தேவையாகின்றன. சிறுகதை எழுதுவோர்க்கு நல்ல வாய்ப்பும் ஏற்படுகிறது.

சிறுகதைகளைப் பலவகையாகப் படைத்து மகிழந்து, ஏறக்குறைய நூறு கதைகளைத் தமிழுக்குத் தந்தவர் (சொ. விருத்தாசலம் என்னும்) புதுமைப்பித்தன். அடுத்த நிலையில் சிறு கதைகள் எழுதிப் புகழ் பெற்றவர்கள் கு.ப.ராஜகோபாலன், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி முதலான வர்கள். இன்று நம்மிடையே வாழ்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர் சிலர் அத்தகைய புகழ்க்கு உரியவர்கள்.

இவர்கள் எழுதும் சிறுகதைகள் வெறும் பொழுது போக்கிற்கு உரியனவாக மட்டும் நிற்காமல், இவர்களின் உள்ளத்து உணர்ச்சிக்கும் விழுமிய கோக்கிறகும் இடந் தந்து அமைதல் காண்கிறோம். எங்கோ கற்பனைவானில் பறந்து பொழுது போக்காமல், வாழ்க்கைப் போராட்டங் களையும் சிக்கல்களையும் கற்பனை செய்து அழகாகப் படைத் துக் காட்டு தலால் இவை சிறந்து விளங்குகின்றன.

அமெரிக்காவில் இன்று இருநூறாயிரத்திற்கு மேற் பட்ட சிறுகதை எழுத்தாளர் உள்ளனர் என்பர். தமிழ் நாட்டிலும் ஈராயிரம் மூவாயிரம் சிறுகதை எழுத்தாளர் உள்ளனர் எனலாம். ஒவ்வொரு நாட்டிலும் இறு மற்ற இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு எழுதுவே விட, சிறுகதை எழுதுவோரின் தொகையே மிகுந்துவருகிறது. உணர்ச்சியுடன் வாழத் தெரிந்து, தாம் உணர்ந்ததைக் கடிதம் போல் எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் ஒரு சிறுகதையேனும் எழுதிவைத்து மறைய முடியும் என்று ஆங்கில அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். ஆதலின், தமிழ் நாட்டில் சிறுகதை யாசிரியர்களின் தொகை இனியும் பெருக இடம் உண்டு எனலாம்.

ஆனால் சிறுகதையின் இலக்கியத் திறன் குறையாமல் காத்தல் வேண்டும். வார இதழ்களும் மற்ற வெளியீடுகளும் பெருகுவதால், அவற்றிற்குத் தேவையானபடி சிறுகதைகள் எழுதிக் குவிப்பதில் பயன் இல்லை. கலை, உள்ளத்து உணர்வு தூண்டப் படைக்கப்படுவது. அத்தகைய தூண்டுதல் இன்றி, எழுதியனுப்ப வேண்டிய நெருக்கடியால் பிறக்கும் சிறுகதைகள் பல கலைச்சிறப்புக் குன்றிப் போகின்றன. சில கதைகள் ஊர் பெயர் முதலியன மாறிப் புதியன போல் தோன்றினும், பழைய கதைகளின் போலி வடிவங்களாக ஆகின்றன. சிறுகதைகளை வளர்த்த இதழ்களே, இவ் வாறு அவற்றின் சிறப்புக்கு இடையூறாகவும் உள்ளன. இந்த மாசு படியாமல் உண்மைப் படைப்பாக வரும் சிறு கதைகளே இலக்கியமாக வாழ வல்லன.

– மார்ச் 1960, இலக்கிய மரபு, மு.வரதராசன்.

2 thoughts on “இலக்கிய மரபு – சிறுகதை – மு.வரதராசன்

  1. சிறுகதை எழுத வேண்டும் என்ற தாகம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான கட்டுரை இது.
    பயனுள்ள கட்டுரைகளை தந்து
    எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்
    சிறுகதை டாட் காம்’க்கு நெஞ்சார்ந்த நன்றி.
    ஜூனியர் தேஜ்

    1. மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொன்ன பல பயனுள்ள ஆலோனைகளை ஏற்று, அதனை செயல்படுத்தி வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *