சிறப்படைந்த கண்ணாயிரம்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மெய்யூர் என்னும் ஓர் ஊரிலே கண்ணாயிரம் என் னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் பல நூல்களையும் படித்து அறிவிற் சிறந்திருந்தான். ஒருநாள் ஓர் அறிஞர் மெய்யூருக்கு வந்து ஒரு சொற் பொழிவு செய்தார். அவர் பேசிய பொருள், “பெருமை.” “ஒவ்வொருவரும் இவ்வுலகத்திலே புகழுடன் வாழ்ந்து பெருமையடைய வேண்டும்,” என்றும், “புகழ் உண்டாகுமாறு உலகில் வாழ்பவர்கள் தாம் சிறந்தவர்கள்,” என்றும், “காதவழி கூடப் பேரில்லாதவர்கள் கழுதைக்கு ஒப்பானவர்கள்,” என்றும் அவர் தமது சொற்பொழிவிலே கூறிவிட்டுச் சென்றார்.
சொற்பொழிவைக் கேட்டவர்கள் ஒரு காதால் வாங்கி, அதனை மற்றொரு காதால் விட்டுவிட்டுப்போய் விட்டார்கள். அறிவிற் சிறந்தவனாக இருந்த கண்ணாயிரம் மற்றவர்களைப் போலக் கேட்டதை அப்படியே விட்டுவிடவில்லை. தான் புகழுண்டாகுமாறு வாழ்ந்து சிறப்படைய வேண்டும் என்று எண்ணினான். புகழ் பெறுவதற்குச் சிறந்தவழி யாது என்று எண்ணமிட் டான்.
மற்றவர்களிடத்தில் அன்பு பாராட்டுதல், எவ் வுயிர்க்குந் தீமை செய்யாதிருத்தல், உண்மையே பேசு தல் ஆகிய மூன்றையும் கடைப்பிடித் தொழுகினான். இவைகளைக் கைவிட்டுவிடுமாறு பல சமயங்கள் நேர்ந் தன. ஆயினும் கண்ணாயிரம் பொறுமையிழந்து தன் கொள்கைகளை விட்டுவிடவில்லை. ஐந்தாறு ஆண்டுகள் மனவுறுதியுடன் நின்றான். அதன் பிறகு கண்ணாயிரத்தின் புகழ் எங்கும் பரவியது. ஊராளும் மன்னன் கண்ணாயிரத்தை அழைத்துத் தன்னுடைய அமைச்சனாக அமர்த்திக்கொண்டான். ஆகவே, ஒவ்வொருவரும் பெருமை பெறத்தக்க வழியிலே நடத்தல் தான் சிறந்ததாகும்.
“பீடுபெற நில்” (இ – ள்.) பீடு – பெருமையை ; பெற – பெறும்படியாக ; நில் – நல்லவழியிலே நில்.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955