சிறந்த நிர்வாகிகள்





(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருத்துவமனை வராந்தாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தனக்கிருந்த ஒரே துணையும் இனி இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலையில் உட்கார்ந்திருந்தார் மங்கை ஆச்சி.
முந்தைய நாள் மாலை மலையாண்டி செட்டியார் கழிவறையில் மயங்கி விழுந்ததும் பக்கத்து கிளினிக்கிற்கு தூக்கிக்கொண்டுபோய்ப் பார்த்ததில் இரத்தக்கொதிப்பு அதிகமாகி விட்டது ‘உடனே பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கு’ என்று நாக்குக்கடியில் மாத்திரையை வைத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வண்டி பிடித்து அனுப்பி விட்டார்கள்.
பெரிய ஆஸ்பத்திரியில் ஆச்சியை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு செட்டியாரை ஸ்ட்ரெட்சரில் படுக்கவைத்து உள்ளே தள்ளிக்கொண்டு போய் எல்லா ட்யூப்களையும் சொருகி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள். எல்லாவற்றுக்கும் உதவியாக இருந்த நண்பர் நாகராசன் சற்றுமுன்னர் ‘தான் வேலைக்குச் செல்ல வேண்டும். அவசரமானால் அழையுங்கள்’ என்று கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
டாக்டர் வெளியே வந்து ‘நீங்கள் அவர் மனைவியா?’ என்று கேட்டு விட்டு, இரத்தக்குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு இருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லிவிட்டுப் போனதோடு சரி. அதன்பிறகு ஒன்றும் தெரியவில்லை. கதவிடுக்கு வழி யாகப் பார்த்ததில் செட்டியாருக்கு பிராணவாயு ஏற்றிக்கொண்டிருப்பது போல தெரிந்தது. சீருடை அணிந்த தாதிகளும், மருத்துவமனைச் சிப்பந்திகளும் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். மங்கை ஆச்சியின் எண்ணங்களும்தான்.
மகன் மணிவண்ணனுக்குத் தகவல் சொல்லியாகி விட்டது. தவமாய்த் தவமிருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு பெற்ற ஒரு மகனும் இப்படி பக்கத்தில் இருந்து பார்க்கமுடியாமல் வெளிநாட்டில் இருக்கிறானே என்று எண்ணி மாய்ந்து போனார் மங்கை ஆச்சி.
போனில் டாக்டர் என்ன சொல்கிறார் என்று விவரங்களைக் கேட்டுக்கொண்டு, தான் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகவும், மனைவி மலர் ஜப்பானில் இருப்பதாகவும், அவளை உடனே புறப்பட்டுவரச் சொல்வதாகவும், தைரியமாயிருக்கும்படியும் தான் மீண்டும் அழைப்பதாகவும் சொல்லிவிட்டுப் போனை வைத்தான் மணிவண்ணன்.
செட்டியாருக்கு வயது எழுபதைத் தாண்டி விட்டது. ‘பேரன் பேத்தின்னு பகுசி பார்க்காமல் போகப்போகிறாரோ?’ என்று நினைத்தார் மங்கைஆச்சி. அன்று மகன் கல்யாணவீட்டில் ‘சீக்கிரமா பேரப் பிள்ளையப் பெத்துக்குடு’ என்று சொன்னதற்கு அவன் சொன்னது இன்னும் பச்சையாக நினைவில் இருந்தது மங்கையாச்சிக்கு. ‘அம்மா, திருமணம் பண்ணிக்கிறது பிள்ளை பெத்துக்கறதுக்கு மட்டும் இல்ல. நானும் மலரும் எப்படி எங்க வாழ்க்கையை அமைச்சுக்கிறதுன்னு ஒரு திட்டமே வச்சிருக்கோம். அதனால இரண்டு வருடத்துக்கு அமைதியா இருங்க. முதல்ல அவளுக்கு வேலை, அப்புறம் வசதியா ஒரு வீடு, அப்புறம்தான் எல்லாம்’ என்று வாயை அடைத்து விட்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த செட்டியாரும் ‘இங்க பாரு மங்கை இந்தக் காலத்து பிள்ளைங்க நல்லாப் படிச்சவங்க.. எப்படி யோசிக்கிறாங்க பாரு’ என்று சிரித்ததும் நினைவிருக்கிறது. அங்கிருந்த அலங்காரப்பலகையில் மணி எம்.பி.யே. வெட்ஸ் மலர் எம்.பி.யே. என்று மின்னிக்கொண்டிருந்த ஜிகினாக் களையே பார்த்துக் கொண்டிருந்தார் மங்கையாச்சி, கல்யாணத்துக்கு வந்தவர்கள் ‘ரெம்பொ நாளானாலும் நல்ல மருமகளா எடுத்துட்டே மங்கை. இருவரும் எல்லா வகையிலும் பொருத்தமான ஜோடிகள்’ என்று வாழ்த்தி விட்டுப் போனபோது பெருமையாகத்தான் இருந்தது.

அவன் சொன்னபடியேதான் நடந்து கொண்டிருக்கிறது. மருமகளுக்கு நல்ல வேலை அமைந்து அவள் பதவி உயர்ந்தாள். மாதத்தில் இருபது நாட்களுக்கு ஜப்பான், ஹாங்காங், சைனா என்று பறந்து கொண்டிருக்கிறாள். மகனோ மேற்கில் பறக்கிறான். ஒரு வருடம் ஓடி விட்டது. காண்டோ வீடு வாங்கி போன மாதம்தான் குடிபுகுந்தான். அம்மாவையும் அப்பாவையும் தங்களோடு வந்திருக்கும்படி கேட்டான். மங்கைதான் ‘எனக்கு எச்.டி.பி. வீடு போதும். பழகிய இடம்’ என்று மறுத்து விட்டார்.
பணம் மட்டும்தான் வாழ்க்கையா? என்று எண்ணிக்கொண்டிருந்த மங்கை ஆச்சியின் கவனத்தைக் கலைத்தது கைப்பைக்குள் சிணுங்கிய கைத்தொலைப்பேசி. அவசரமாக எடுத்து ‘அலோ’ என்றார். மணிவண்ணன் தான் பேசினான். எல்லாம் விசாரித்துக் கொண்டு சொன்னான், ‘அம்மா, மலர் போனிலேயே எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டாள். அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாள். உனக்குத் துணைக்கு தமிழ் பேசுகிற பெண்மணி ஒருவரையும் ஏற்பாடு செய்திருக்கிறாள். டாக்டரிடம் பேச, அவர் சொல்வதை புரிந்து கொள்ள உனக்கு உதவியாக இருக்கும். நீங்கள் நம்ம வீட்டுக்குப் போய்த் தங்கிக்கொள்ளுங்கள். அங்கு வீட்டு வேலைகள் மற்ற வேலைகள் செய்ய இரண்டு பணிப்பெண்கள் இருக்கிறார் கள். நம்ம கார் இருக்கிறது. டிரைவர் ரவி இருக்கிறான். மலர் உன்னிடம் பேசி விவரங்களைத் தருவாள். நாளை மலர் புறப்பட்டு வருகிறாள். நான் வார இறுதியில் அங்கே இருக்க முயற்சிக்கிறேன். அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள். வேறு ஏதாவது…’ என்று இழுத்தான் மணிவண்ணன்.
“மணி நீங்கள் இருவரும் சிறந்த நிர்வாகிகள். அங்கிருந்தபடியே என் மருமகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டாள். அதற்கு நன்றியப்பா. நீ…சீக்கிரம் வரமுடிஞ்சா வந்திருப்பா, நீ கூட இருந்தா துணையா இருக்கும். எனக்கு ஒன்னும் புரியல. நீ வந்துருப்பா… அப்பாவுக்கு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மங்கை ஆச்சிக்குப் பேசமுடியா மல் அழுகை முட்டிக்கொண்டு வந்து விட்டது.
“அழாதிங்கம்மா…ஏம்மா அழறீங்க…?”
கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டு சொன்னார் மங்கையாச்சி, “அப்பாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா, கொள்ளி போட நீ வந்துரணும்ப்பா… அதுக்கு ஆளெல்லாம் வைக்கமுடியாதுப்பா… அதை நெனச்சேன் அழுதுட்டேன்….”
அவளின் அந்தச் சொற்களின் தாக்குதலுக்காளான மணியிடமிருந்து நீண்ட நேரத்துக்கு எந்த பதிலுமில்லை. தொலைபேசி இணைப்பு இன்னும் துண்டிக்கப் படாமலேயே இருந்தது.
– தமிழ்முரசு
– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.