சிறகு முளைத்த சிங்கம்






அந்தச் சிங்கத்துக்கு வேட்டையாடுவது என்றாலே அலுப்பாக இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் இரை எங்கே இருக்கிறது எனக் காற்றின் திசையில் மோப்பம் பிடித்து, அந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். இரை அசரும் வரை காத்திருந்து, பாய்ந்து தாக்க வேண்டும். பறவைகளுக்கு அப்படியில்லை. அவை வானில் பறப்பதால், இரை இருக்கும் இடம் எளிதில் தெரிந்துவிடும். ‘நமக்கும் அப்படி சிறகுகள் இருந்தால் எப்படி இருக்கும்?’ என நினைத்தது.
கடவுளை நினைத்துத் தவம் செய்தது. கடவுளும் வந்தார். சிங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகச் சொன்னார்.
சிங்கத்துக்கு, அழகான தங்க நிறச் சிறகுகள் முளைத்தன. ஆனால், அதன் உடல் சுருங்கிப்போனது. வானில் மகிழ்ச்சியோடு பறந்தது. இத்தனை நாளும் இந்த அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே என எண்ணியது. காட்டைச் சுற்றிச்சுற்றிப் பறந்து வந்தது.
சற்று நேரத்தில் அதற்குப் பசி எடுத்தது. கீழே பார்த்தது. ஒரு பக்கம் வரிக்குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. இன்னொரு புறம் காட்டெருமைகள் கூட்டம். மான்கள், நதிக்கரையோரம் நீர் அருந்திக்கொண்டிருந்தன. ஒரு மான் மட்டும் அசட்டுத் தைரியத்தில், தனியாகப் புற்களைக் கடித்துக்கொண்டிருந்தது. கொழுத்த வேட்டைதான் என எண்ணியபடி சிங்கம் அதன்மீது பாய்ந்தது.
சிங்கம் தாக்கினால், மான் நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிடும். அது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலுமே ஒழிய எதிர்த்துப் போராடாது. இப்போதோ, மான் எதிர்த்துப் போராடுகிறது. மற்ற மான்களும் உதவிக்கு ஓடிவருகின்றன. கர்ஜனை செய்து அவைகளைப் பயமுறுத்த நினைத்து, வாயைத் திறந்தது சிங்கம். ஆனால், கேவல் போன்ற ஒலிதான் வந்தது. தன் உடல் மட்டும் சுருங்கவில்லை. தனது பலமும் குறைந்துபோனதை உணர்ந்துகொண்டது சிங்கம்.
பயந்துபோய், ஒரு மரத்தின் மீது அமர்ந்துகொண்டு, மீண்டும் கடவுளை அழைத்தது.
‘‘நான், பறக்க சிறகுகள் வேண்டும் என்றுதானே கேட்டேன். ஏன் என் உடல் சுருங்கியது?” எனக் கேட்டது சிங்கம்.
‘‘உடம்பு கனமாக இருந்தால், எப்படிப் பறக்க முடியும்? அதனால்தான், உடம்பைச் சுருக்கினேன்” என்றார் கடவுள்.
‘‘நான் கர்ஜித்தால் காடே அதிரும். இப்போது ஏன் இப்படி?” எனக் கேட்டது.
‘‘அப்படி கர்ஜித்தால், அந்த அதிர்வில் சிறகுகள் உதிர்ந்துபோகாதா? அதனால், குரலை மாற்றினேன்” என்றார் கடவுள்.
‘‘மான்களே என்னை எதிர்த்துப் போராடுகின்றன. அப்படியானால், புழு, பூச்சிகளைத்தான் சாப்பிட வேண்டுமா? ஒரு சிங்கம், புழுவைச் சாப்பிட்டு உயிர் வாழ்வது அசிங்கம்” என்றது சிங்கம்.
கடவுள் சிரித்தார். ‘‘நீதானே பறவைபோல இருக்க விரும்பினாய். எல்லா உயிரினங்களுக்கும் பலமும் அதற்கேற்ப பலவீனமும் இருக்கும். காட்டுக்கே ராஜாவான நீ, பறவைகள் போல இருக்க ஆசைப்பட்டாய். ஓர் அனுபவமாக இருக்கட்டும் என வரம் கொடுத்தேன்” என்றார் கடவுள்.
புரிந்துகொண்ட சிங்கம், பழைய உருவத்தையே பெற்றது. உடம்பைச் சிலுப்பிக்கொண்டது. அந்தச் சிலுப்பில், அதன் சோம்பேறித்தனமும் தூசாகப் பறந்தது.
– 31-07-2016, சுட்டி விகடன்.
![]() |
எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க... |