சினேகம்
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 124
(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘என்ன நாய்க்கரே! தானா சிரிச்சுக்கிறீங்க… வர்றீங்களா… ஒரு டீ அடிக்கலாம்…’ என்றது ஒரு குரல்.
விழிப்புக்கும் உறக்கத்துக்கும் ஊடாக, கனவில் திளைத்தி ருந்தவர், உணர்வுக்கு மீண்டார், வெட்கத்துடன் சிரித்துக் கொண்டார். குரலின் சொந்தக்காரனைப் பார்த்தார்.
யாரும் இல்லை.
வீதியின் இருபுறமும் தேடினார். பால் குவளையுடன் ஒருவர் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். ரிக்ஷா வண்டியில் பள்ளி செல்லும் குழந்தைகள். இவர்களாக இருக்க முடியாது.
அவர் வழக்கமாக உட்காரும் ஒதியஞ்சாலை மைதான ஓரம். அதே தூங்கு மூஞ்சு மரத்தடி. எப்போவாவது எரியும் விளக்கு மரம். ஓரம் கிழிந்த ஒற்றைப்பாய். கிளிக்கூண்டு. கூண்டுக்கு வெளியே விக்னேசுவரர். உள்ளே வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர். டீ குடிக்கக் கூப்பிட்டவர் இவர்களாகவும் இருக்க முடியாது. கூண்டுக் கிளியும் தன்னையும் தவிர வேறு ஜீவன்கள் அருகில் இல்லை.
“என்னடாது… குரல் வருது… ஆளைக்காணோம்… குறளி வித்தையால்லே இருக்கு…” என்றார் வாய்விட்டு.
நாய்க்கர் எது பேசினலும் அதை எதிரொலிக்கிற வழக்கம் பச்சைக் கிளிக்கு ஏற்பட்டிருந்தது.
‘கிக்கீ’ என்றது அது.
‘நீ யாரையாச்சும் பாத்தியா… நாய்க்கரேன்னு கூப்பிட்டுச்சே ஒரு குரல்… டீ சாப்பிடவேறு கூப்பிட்டுச்சு…’
‘கிக்கீ…’
‘இல்லியா..உனக்கு தெரியாமே யாரு வருவா.. போவ… போற வர ஆளுங்க நோட்டம் விட்டாலே என்னைக் கூப்பிட்டுச் சொல்லுவியே நீ… குரல் கேட்ட மாதிரி இருந்துச்சி… ஆளைக் காணும்… அதான் கேட்டேன்…”
நாய்க்கர் கண்ணை மூடிக்கொண்டார். மூடியதும் இருட்டு வருகிறது. வெளிச்ச ரேகைகள் கட்டாயமாகக் கண்ணுக்குள் பிரவேசித்துச் சிவப்பும், ஆரஞ்சுமாகக் கோடுகள் கிழிக்கின்றன. இன்னும் கொஞ்சம் கெட்டியாகக் கண்ணை மூடிக்கொண்டால் என்னென்னவோ மனசுக்குள் வந்து குதியாட்டம் போடுகிறதே.
நினைவுகள், சம்பவங்கள், குடுகுடுப்பைக்காரன் சட்டை மாதிரி, வர்ண வர்ணமான, விதவிதமான சம்பவங்கள்…
நாய்க்கர் மேலே மேலே போய்க் கொண்டிருந்தபோது, அவரை மண்ணுக்குக் கொண்டு வந்தது வயிறு.
உந்திச் சுழிக்கு நேராகத் தொடங்கி, வயிறு முழுக்கப் பரவி, துணி பிழிவதுபோல் குடலை முறுக்கி ஒரு உதறு உதறி நின்றது வலி. நாய்க்கருக்குத் தெரிந்துவிட்டது. இது பசி.
நேற்று மத்தியானம் ரெண்டு மசால் வடையும் டீயும் சாப்பிட்டிருந்தார். சாயங்காலம் ஒரு டீ. அவ்வளவுதான் இன்று காலை வரையிலும் வயிற்றில் ஒரு பருக்கை விழவில்லை. ‘ஏன் போடவில்லை?’ என்று கேட்கிறது வயிறு. அதன் பாஷை அது.
‘ஒரு டீ குடிச்சா நல்லாயிருக்கும். இருக்கும்தான். துட்டு வேணுமே. இன்னேரம் துட்டு இருந்தா ரெண்டு வாட்டியில்லே டீயை ஊத்திக்கிட்டு இருப்பேன்.’
‘கிக்கீ.’
‘அதான் உனக்குத் தெரியுமே… உனக்குத் தெரியாமயா நான் உண்ணுறதும் உறங்கறதும்… கிளியம்மா…’
‘கிக்கீ…’
சரட்டென்று ஒரு நட்சத்திரம் விழுவது போல, காலை நிகழ்ச்சி ஒன்று அவர் நினைவுக்கு வந்தது.
வைகறையில் எழுந்து கொள்கிற நாய்க்கர் தெருக்குழாயில் பெண்கள் வருவதற்கு முன்னமே குளித்து, கழுத்துக்குக் கீழே இறங்கி வருகிற தலை முடியைத் துவட்டிக் காய வைத்து, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, மேலே மார்பை மூடிய துண்டும், கெட்டி நீலக் கைலி கீழேயும், கட்டைச் செருப்பு டக்கு டக்கென்று ஒலிக்க, கிளிக் கூண்டும் பாயுமாகப் புறப்பட்டுப்பிள்ளையார் கோயில் வாசலில் நின்று ரெண்டு நிமிஷம் கண்ணை மூடிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி சுகுமாரன் நாயர் டீக்கடை பெஞ்சில் ‘சம்முவா’ என்று முணுமுணுத்தவாறு நாய்க்கர் குந்தினார் என்றால், கிழக்கு வெளுத்து விட்டது என்று பொருள்.
இன்று காலையில் கூடப் பழக்க தோஷத்தால் சுகுமாரன் கடை வாசலில் வந்து அமர்ந்தார். சுகுமாரன் ஊது பத்தியைக் கொளுத்திச் சாமி படங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தான். ஓரக் கண்ணால் நாய்க்கரைப் பார்த்து, ‘உட்காருங்க’ என்று கண் ணாலேயே சொல்லி விட்டுக் காரியத்தைத் தொடர்ந்தான்.
கையில் காசு இல்லாதது அப்போது தான் சட்டென்று அவருக்கு உறைத்தது. பதறிப் போய் எழுந்து சத்தமில்லாமல் நழுவி விட்டார்.
‘என்ன மடத்தனம் பண்ண இருந்தேன் பாத்தியாம்மா கிளியம்மா…சுகுமாரன் போனி பண்றதுக்குள்ளே கடனுக்குப்போயி நின்னா நல்லாவா இருக்கும் சேச்சே…’
‘கிக்கீ’
‘என்ன சோசியக்காரரே… போனி ஆச்சா..’ என்றது ஒரு குரல்.
திடுக்கிட்டுப் போனார் நாயக்கர். இம்முறை அரூபம் இல்லை. நிஜமான மனுஷன்தான். கிளீனர் கிஷ்டன். ஆயில், அழுக்கு, பீடி வாசனைகள் கலந்தடிக்க எதிரில் நின்றிருந்தான்.
‘இனிமே தான்’ என்றார்.
‘இவ்ளோ காலங்கார்த்தால எவன் வருவான்னு உக்காந்தி ருக்கீரு.. வாயேன் ஒரு டீ சாப்பிடலாம்…’
எதிர்சரகத்திலேயே வரிசையாக டீக்கடைகள், பெட்டிக் கடைகள், இரவு பரோட்டாக் கடைகள் எல்லாம் இருந்தன. நாய்க்கர் எழ இருந்தார். என்னமோ பிடித்து அவரை அழுத்தியது. மனம் மாறி, ‘நீ போய்வா… நான் இப்பத்தான் சாப்பிட்டேன்…’ என்றார். வாயை மூடித் தொங்கிக் கொண்டிருக்கிற நரை மீசையைத் தடவி விட்டுக் கொண்டார்.
கிஷ்டன் போய்விட்டான்.
நாய்க்கர் சமைந்து போய் உட்கார்ந்திருந்தார். ‘எது என்னைத் தடுத்துச்சி… ஏன் நான் போகல்லே… உபசாரத்தோடு வந்த டீயை எதுக்காக மறுத்தேன்?’
அவருக்குப் புரியவில்லை. புரிகிற மாதிரியும் இருந்தது. கிஷ்டனின் அழைப்பில் ஒரு ‘ஐயோ பாவம்’ இருந்திருக்குமே?
நாய்க்கர் தலை நிமிர்ந்து கிளியைப் பார்த்துச் சொன்னார். ‘எங்க அப்பாவை நீ பாத்திருக்கையா பச்சையம்மா… நல்லமுத்து நாய்க்கருன்னா அவனவனும் தலைப்பாவை அவிழ்த்துக் கக்கத்துல வச்சுக்கிட்டு நிப்பானுவ… நீ பார்க்கனுமே அதை… வேஷ்டி முனையை தொடையில சொருகிக்கிட்டு நிப்பானுவ… ராசா மாதிரி வாழ்ந்தவங்க நாங்க…’
எதிர் சரகத்து டீக்கடையிலிருந்து, சர்ரென்று காற்றில் சுழன்று கொண்டு வந்தது வடை வாசனை. மசால் வடை போடத் தொடங்கிவிட்டான் கடைக்காரன். கடலைப் பருப்பும் வெங்காய மும் மினுங்குகிற, பிட்டால் ஆவி பறக்கிற மசால் வடை. நினைத்த மாத்திரத்தில் அந்த வலி மீண்டும் வந்து விட்டது நாய்க்கருக்கு. உந்திச் சுழிக்கு நேராகத் தொடங்கி, வயிறு முழுக்கப் பரவி, துணி பிழிவது போல குடலை முறுக்கி, ஓர் உதறு உதறி நின்றது வலி, பசியாகிய வலி.
நாய்க்கர் தனக்குள் முழுகிப் போனார்…
…நாலு கைத் தாவாரம். நடுவில் வாசல். கம்பளம் விரித்துப் பத்துப் பதினைந்து பேர் உட்கார்ந்திருக்கிறார்கள்.
‘நம்ம பஞ்சாயத்துல ரெண்டு பக்கத்துக்கும் சம்மதம்தானே…’ என்கிறார் நல்லமுத்து நாய்க்கர். கூட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி அட்டணைக்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்.
‘உங்க வார்த்தைக்கு எதிர்வார்த்தை ஏது, எள்ளுமுனை பிசகுமா நாய்க்கர் நாயம்?’ என்று இரண்டு பக்கத்தார்களும் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறார்கள்.
‘சரி… அப்போ கையை நனையுங்க..’ என்கிறார் நல்லமுத்து நாய்க்கர்.
லாரி ஒன்றின் ராட்சஸ ஹார்ன் சத்தத்தைக் கேட்டு நாய்க்கர் திடுக்கிட்டு விட்டார். அவரை அலக்காகத் தூக்கித் தரையில் போட்டது மாதிரி இருந்தது. அவர் கிளியிடம் திரும்பினார். “கேட்டியாம்மா கிளியம்மா… அப்பாரு எல்லாரையும்பாத்து, ‘சரி கையை நனையுங்க’ன்னதும் அவனவனுக்குத் திடுக்குன்னாயிட்டுது. ஒருத்தர் ரெண்டு பேருன்னா பரவாயில்லே, பத்துப் பதினைஞ்சு பேரு… திடும்னு போயி பந்தியிலே குந்தினா நல்லாவாயிருக்கும். ‘பரவாயில்லே, இன்னொரு வாட்டி சாப்பிடறது’ என்னைப் பார்த்து, ‘பையன் கல்யாணத்துக்கு வட்டியும் முதலுமா சாப்பிடறது அப்பிடின்னாரு ஒரு பெரியவரு. ‘அப்போ சரி போயிட்டு வாங்க’ன்னு சொன்னாரா எங்க அப்பா? அதுதானே எங்ககிட்டே கிடையாது. அப்பா சொன்னாரு. ‘அது இக்கவே இருக்… இப்போ கையை நனைங்க… சாப்பாட்டு நேரத்துல, நாய்க்கன் வீட்லேந்து மனுஷங்க பட்டினியா போறதாவது? அப்புறம் இந்த உசுரு வாழ்க்கை எதுக்கு. பேசாமே கையை நனைங்க…’ அப்படீன்னாரு. அப்புறம் எவன் என்ன பேசறதுக்கு இருக்கு. அப்பாரு என்னைப் போயி பந்தி விசாரிக்க அனுப்புனாரு… பச்சையம்மா… எனக்கு இன்னைக்கும் நல்லா ஞாபகத்துல இருக்கு. என் கண்ணு முன்னால நடந்தது மாதிரியில்லே இருக்கு. வாழக்காயி குழம்பும், எண்ணெய் மினுக்கிற உருளைப் பொரியலும், பொன்னாங்கண்ணிக் கூட்டும் அன்னைக்கு. கேளேன் இந்தக் கூத்தே.. ஒரு நரைச்சுப் போன பெரிசு என்னைப் பார்த்து சொல்லுச்சு, ‘பெரியசாமி, ராசாவுக்குப் படை ஊழியம் பண்ண பரம்பரைப்பா நீயி… வன்னிய ஷத்திரியன் ஆச்சே உங்க அப்பன்’. அப்படீங்குது… கடை வாயில் தயிர் வழியுது…
பெரியசாமி நாய்க்கர் மீசையைத் தடவிக் கொண்டார். ‘தூத்தேறி… பசிச்சவன் பழங்கணக்குப் பார்க்கிறா மாதிரி இப்ப எதுக்கு அது எல்லாம்? போனது போச்சு… வாய்ச் சொல்லும் முலைப் பாலும் வந்துட்டா பிறகு உள்ள போவுமா என்ன? தரித்திர புத்தி. எச்சி இலையை மடிச்சு இடுப்பில் சொருவிக்கிட்ட மாதிரி, சரி உடு அத்தே…’ என்றார்.
கிளி ‘கிக்கீ’ என்றது.
வடை மணம் மீண்டும் வந்து அவர் புலன்களைத் தாக்கி, மீண்டும் அவருக்கு வலியைத் தோற்றுவித்தது. அவர் மீண்டும் கிளியைப் பார்த்தார். கிளி ‘கிக்கீ’ என்றவாறு மூக்கைச் சிறைக் கம்பிகளில் வைத்துத் தீட்டிக் கொண்டது. கூண்டைத் திறந்து, கிளியை எடுத்து மேலே மூடு பலகையின் மீது விட்டார். அவ்வாறு விடப்படும் போதெல்லாம் அது, ஓர் அடி நீளமே உள்ள கூண்டின் ஒருமுனை தொடங்கி மறுமுனை வரை நடைபோடும். வழக்கத்துக்க மாறாக, கிளி பிடித்து வைத்தது மாதிரி அப்படியே தலையைக் கவிழ்ந்து கொண்டு நின்றது. கழுத்து மோதிரம் தெரிய தரையைப் பார்த்தது கிளி.
பழக்க தோஷத்தால், பெருங்காய டப்பியை எடுத்தார். திறந்தார்.
நாய்க்கர் துணுக்குற்றார். டப்பி காலியாக இருந்தது. நேற்று ராத்திரியே அது காலியாகத்தான் இருந்தது. பஸ் உரிமையாளர் மாரியப்ப உடையார் சம்சாரம், புண்ணியமாகக் கருதி கிளிக்கு அவ்வப்போது நெல் கொடுப்பது வழக்கம். நேற்று மாலை நாய்க்கர் அவள் வீடு தேடிப் போயிருந்தார். அந்த அம்மாள் வெளியூர் போய் விட்டிருந்தார். வீட்டுக்குப் பக்கத்தில் செட்டியார் கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். அவர் வீடு போய்ச் சேரும் போது அது சாத்தியிருந்தது. வேறு கடையில் வாங்கி இருக்கலாம். நாய்க்கரிடம் சில்லறை இல்லை.
தலையைக் கவிழ்ந்து கொண்டு, யோசனையில் ஆழ்ந்திருந்தார் நாய்க்கர்.
‘உம்… பாத்தியா.. நான் என்னைப் பத்தி தானே, என் வவுத்துப் பசியைப் பத்தி தானே நொந்துகிட்டு இருக்கேன்… உன்னைப் பத்தி என்னடா ஒரு உசுரு சென்மம் பக்கத்துல குந்திக்கிட்டு கிடக்கேன்னு யோசிச்சுப் பார்த்தனா-‘
தெரு ரொம்பச் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மரக்கிளையின் ஊடே சூரியக் கதிர் அவர் முகத்தில் விழுந்தது. சற்றுத் தள்ளி சாய்ந்து கொண்டார்.
‘இந்தக் கிளிக்குஞ்சு வயித்துக்கும் ரெண்டு மணி போட வக்கத்துப் போயிட்டேனே-‘ என்று முனகிக் கொண்டார். கிளி ‘கிக்கீ’ என்று உற்சாகமில்லாமல் முனகிக்கொண்டு ரெண்டு எட்டு எடுத்து வைத்தது.
‘பச்சையம்மா’
‘கீ..’
‘கொஞ்சம் பொறுத்துக்கோம்மா…’ என்றார். அப்படியே மரத்தில் சாய்ந்து கொண்டார். மீண்டும் அந்த வலி. வயிற்றை நடுவாகக் கிழிக்கிற மாதிரியான அந்த வலி.
நாய்க்கர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இருக்கிற நேரத்தில், கிளி ‘கிக்கீ…’ ‘கிக்கீ’ என்று தொடர்ந்து கத்தியது.
நாய்க்கர் சிரமப்பட்டுக் கண்ணைத் திறந்தார்.
கிராமத்தினர் என்று பார்த்த மாத்திரத்தில் அறியத்தக்க, நடுவயதுப் பெண்ணும், ஓர் இளம் பெண்ணும் அவர் முன்னால் வந்து குந்தினார்கள்.
கண்மறைக்கும் திரைப்படலத்தின் ஊடே, வந்தவர்களை உற்று நோக்கினார் நாய்க்கர்.
‘என்னங்க நாய்க்கரே… என்னைய தெரியலையா… நான்தான் வில்லியனூரு பழநியம்மா… போனமாசம்கூட வந்து சோசியம் பார்த்துக்கிட்டு போனேனே…’
‘அடடே… அவங்களா, உக்காருங்க… வயசாயிடுச்சில்ல… அதான் கண்ணை மறைக்குது… ஒவ்வொரு புலனா செத்தக்கிட்டே போயி, ஐம்புலனும் அத்து, ஆறாம் புலனும் போறது தானே கதையோட முடிவு… அத்த உடுங்க… சௌக்கியம்தானே… இதாரு…’
‘ஆமா’ இது எங்க அக்கா மவ… என் கிட்டேதான் வளர்றது… போனமாசம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்க… பாத்தாங்க. தபால் எழுதறதா சொல்லிக்கிட்டு போனாங்க… போனவங்க போனவங்கதான். சம்மதம் கொடுத்தாங்கன்னா வர தையில முடிச்சுடலாம்… பார்த்து சொல்லுங்க… வயது வந்த பொண்ணை எம்மாங் காலம் வச்சுக்கிட்டு இருக்கிறது… சும்மாத் தூக்கிக்கிட்டு வந்து புள்ளையச் சொந்தம் கொண்டாடறது மாதிரி…”
‘பேஷா… பாத்துடுவோம்… நம்ம பச்சையம்மா கிளீனா’ சொல்லிப்புடுவாளே… வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுள்ளே அவகிட்டே… பச்சைக்கிளின்னு நினைக்காதீங்க… அவ சுகரிஷி வம்சமில்லே…? ஹும்’ என்றார் நாய்க்கர்.
இரண்டு பெண்களும் மேல் பலகையில் இருந்த கிளியை மிகுந்த நம்பிக்கையோடும், கொஞ்சம் பக்தியோடும் கூடப் பார்த்தார்கள்.
நாய்க்கர், சீட்டுக் கட்டுகளைப் போல அடுக்கி வைக்கப் பட்டிருந்த தெய்வங்களின் படமும் வாக்கும் அச்சிடப்பட்ட அட்டைகளை எடுத்துப் பாயில் விரித்தார்.
“பொண்ணு பேரு சொல்லுங்க.”
“மகாலட்சுமி…”
கிளியை இறக்கிப் பாயில் விட்டார் நாய்க்கர்.
“அம்மா பச்சையம்மா. மகாலட்சுமி என்கிற பேர் ராசிக்கு நல்ல பலன் சொல்லும்மா- நல்லது, நடந்தது, நடக்கப் போறது, நடப்பது நாலையும் பாத்து நல்ல குறி சொல்லும்மா… வில்லியனூர் பொண்ணுக்கு வில்லங்கம் இல்லேன்னு, வாழப்போறப் பொண் ணுக்கு தாழ்வேதம் இல்லேன்னு, சீட்டெடுத்துக் கொடும்மா சீருள்ள பொண்ணுங்க-” என்றவாறு கிளியை எடுத்துப் பாயில் விட்டார்.
கிளி பழக்க தோஷத்தால் நெல்மணியை எதிர்பார்த்து நின்றது. பிறகு கிடைக்காது என்று தனக்கே தெளிவு ஏற்பட்டது போல, சீட்டை அணுகி, இரண்டை எடுத்துக் கீழே போட்டு விட்டு, மூன்றா வது சீட்டை, வாயில் கவ்விக் கொண்டு போய் நாய்க்கரிடம் கொடுத்தது. அவர் அதைப் பெற்றுக் கொண்டவுடன், தானாகவே கூண்டுக்குள் சென்று புகுந்து கொண்டது.
உறையிலிருந்து சீட்டை எடுத்துப் பிரித்தார். அவர் புருவங்கள் மேலேறின. “அருமையான ஜாதகம்.. காளியாத்தாவே பிரசன்னம் ஆயிருக்கா…இனி என்ன குறை? மலை மாதிரி வந்தது பனி மாதிரி போயிடாதா?” என்றவாறு படத்தை வந்தவர்களிடம் காட்டினார் நாய்க்கர்.
காளி உக்கிரமாகக் காட்சி அளித்தாள். இருட்டே மேனியாக, இரத்தநிற நாக்கு வெளியே துரத்திக் கொண்டு தொங்க, மண்டை ஓடுகள் மாலையாக, ஒரு கையில் இரத்தம் சொட்டும் அரிவாளும், மறுகையில் அரிந்த அசுரன் தலையும், தலை உருண்ட எருமையு மாகக் காட்சி தந்தாள் அவள்.
பெரியவள் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அவள் முகத்தில் முதலில் பயமும், பின் பக்தியும் மாறி மாறி மின்னின. இளம்பெண் விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். நாய்க்கர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார்.
“தலையெழுத்தின் தெய்வம்; உனைத் தாங்கும் தெய்வம்
தகுதிநிலை தரும் தெய்வம்; மூன்று பேர்க்கும்
கலைதந்த மாகாளி கருணை யாலே
கவலையெலாம் போயொழியும்; தைக்குப் பின்னால்
நிலை உயரும்; நிம்மதியும் வந்து சேரும்!
நினைத்தமணம் கைகூடும், நிலமும் நீச்சும்
பலன்கொடுக்கும்; பசுமாடு, கன்று போடும்
பைரவியாள் துணையிக்கப் பயமேன் நெஞ்சே!”
படித்து நிமிர்ந்த நாய்க்கர், இருவரையும் பார்த்தார். அவர்கள் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந் தார்கள். ‘காளியாத்தா நல்ல வாக்கு சொல்லியிருக்கா. நம்ம தலை யெழுத்தை எழுதின தெய்வம் ஆரு? பிரும்மா! அவனையும்; உனக் குக் காசு கொடுத்துப் பொருள் கொடுத்துச் சோறு போடற தெய்வம் ஆரு? விஷ்ணு! அவனையும்; செத்துப் போனா நரகம் மோட்சம்னு நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி பிரிச்சு அனுப்பி வைக்கிற தெய்வம் ஆரு? சிவபெருமான்! ஆக இந்த மூனு பேருக்குமே நீ சிருஷ்டி பண்ணு, நீ காப்பாத்து, நீ சங்காரம் பண்ணுன்னு வேலையைப் பிரிச்சு கொடுத்திருக்கிற பெரிய தெய்வம் நம்ம காளி ஆத்தா தான். அவ வந்திருக்கா. இனி கவலையில்லேடா, வர்றதைக்கு அப்புறம் உங்க நிலைமை உசரும்… அப்படீங்குது பட்சி. வில்லியனூர் அம்மா! இதுல முக்கியமான சேதி இருக்கு பாருங்க…. நினைத்த மணம் கைகூடும்னு இருக்கு… பட்சி சொல்லு பரமசிவன் சொல்லு. ஆக, வர்ற தையில பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம். மாப்பிள்ளை அப்படி இப்பிடி இருந்தாலும் காளி ஆத்தா அவன் காதைப் பிடிச்சு இழுத்து வந்து, ‘உம்… கட்டுடா தாலியைன்னு கழுத்துல ரெண்டு வைப்பா…’ என்று விட்டு இளம் பெண்ணைப் பார்த்தார்.
அவள் வெட்கப்பட்டுக்கொண்டு தலை கவிழ்ந்து உட்கார்ந்தி ருந்தாள். தலைமுடிக்குத் தடவிய எண்ணெய் நெற்றியில் வழிந்து முகம் பரவிச் சிரிப்போடு வழிந்தது.
முதியவள் வெகு நிம்மதியோடு இருந்தாள். தன் இடுப்பில் சொருகி இருந்தச் சுருக்குப் பையை எடுத்துத் திறந்து ஓர் எட்டணா காசை எடுத்து நாய்க்கர் முன்னால் வைத்தாள்.
அவர் காசை எடுத்து, கூண்டையும் பாயையும், சேர்த்துச் சுற்றி இரட்டை முறித்து தன் காதுக்குள் சொருகிக் கொண்டார்.
‘நாங்க வர்றோம்’ என்று வந்தவர்கள் கிளம்பினார்கள்.
‘ஆகா… போய்ட்டு வாங்க… நல்லது நடக்கும்… கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. கல்யாணச் சோறு நமக்கும் கிட்டும்னு இருக்கு போல…!’
‘கண்டிப்பா… நீங்க இல்லாமையா… நானே கல்யாண கடுதாசி கொண்டாந்து தர்றேன்…!’ என்றாள் பெரியவள்.
‘நான் வர்றேங்க.’ என்றாள் இளம்பெண்.
‘மகராஜியா போய் வாம்மா…’ என்று விடை கொடுத்தார் நாய்க்கர்.
இருவரும் சென்றதும், நாய்க்கர் காசை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். எழுந்தார். ரோட்டைக் கடந்து டீக் கடைக்கு முன்னால் வந்து நின்றார். எட்டணாவுக்கு இரண்டு மசால் வடைகள் வாங்கி எரிகிற வயிற்றில் போடலாமா என்று யோசித்தார். சூடாக ஒரு டீ சாப்பிடலாமே என்கிற ஒரு யோசனையும் வந்தது. டீக் கடைக்குள் நுழைந்தார். ‘ஒரு ஸ்டிராங் டீ போடுப்பா-‘ என்றார் டீ மாஸ்டரைப் பார்த்து.
சூடாக டீ வயிற்றில் இறங்கும்போது ஆனந்தமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு அதில் லயித்தபடியே டீயைக் குடித்து முடித்தார். பிறகு பக்கத்துப் பெட்டிக் கடைக்குப் போனார்.
‘என்ன சோசியரே… பழம் வேணுமா…’ என்றார் கடைக்காரர். ஒரு அளிந்த பூவம் பழமாகப் பார்த்து, நாலணா கொடுத்து வாங்கிக் கொண்டு, ரோட்டைக் கடந்து கூண்டருகில் வந்து உட்கார்ந்தார்.
கூண்டில் இருந்த கிளிக்குப் பழத்தை உரித்துவைத்தார்.
‘கிக்கி’ என்று கத்திக்கொண்டு, கிளி உயிர் பெற்றது போலப் பழத்தைக் கொத்தித் தின்றது.
மீண்டும் அந்த வலி. உந்திச் சுழியில் தொடங்கி, வயிறு முழுக்க வியாபித்து உடம்பை உதறி எடுக்கும் வலி.
கொஞ்ச நாழியாவது படுக்கத்தான் வேண்டும் என்று நினைத்தார். ‘சம்முவா’ என்றவாறு கையைத் தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு சுருட்டிக்கொண்டு படுத்தார். கண்ணை மூடினார், நாயக்கர்.
– 1986
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அகல் விளக்கு
மு.வரதராசன்
August 7, 2026
கோழி மொட்டு கம்பெனி…
யுவராஜ் சம்பத்
August 4, 2026
மலை வாழை அல்லவோ கல்வி
எஸ்.மதுரகவி
August 4, 2026
