சினம்




ஆளவந்தாரை இன்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டும் என்பதால் சீக்கிரம் எழுந்து ரெடியாக வேண்டியிருந்தது. நாளைக்கு காலையில் அவருக்கு ஆபரேசன் என்பது முடிவாகியிருக்கிறது. ஆபரேசனின்றி அவர் குணமாகிவிட எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதற்கு அவருடைய முழு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. முதலில் அவருக்கு ஆஸ்பத்திரிக்கு வருவதற்கே இஷ்டமில்லை. வேறுவழியில்லாமல் கட்டாயத்தின் பேரில்தான் ஒத்துக்கொண்டார்.
ஆளவந்தார் உறவுக்காரர் ஒன்றுமில்லையென்றாலும் கூட நீண்ட வருடங்களாக நட்பையும் தாண்டி வேண்டியவராக இருக்கின்றவர். சொந்த ஊரில் ஈஸ்வரன் (அண்ணன்) அவருக்கு அமர்த்தியிருந்த ரூமிலும், இங்கு வந்தால் என்னுடனுமாக அவரது நாட்கள் செலவாகும். எனக்கு அறிமுகமான காலத்திலிருந்தே அவரது குடும்பத்தினரோடு அவருக்கு ஒட்டுமில்லை, உறவுமில்லை.
வழுக்கையுடன் கூடிய மிக நீளமான பின்னந் தலைமுடியுடனும், மிக நீளமான தாடியுடனும் என்று அவரது தோற்றமிருக்கும். நீண்ட நெடிய வருடங்களாக தலை சீவிக்கொள்வதில்லை என்பதால் முடி ஒன்று திரண்டு ஜடை வேறு விழுந்திருக்கும். எப்போதும் வெள்ளை வேஷ்டி, சட்டைதான் அணிவது வழக்கம்.
முடிவெட்டுவதில்லை… ஷேவிங் செய்வதில்லை… தலை சீவுவதில்லை… கண்ணாடியில் முகம் பார்ப்பதில்லை என்று தேவையில்லாத கொள்கைகளை வைத்துக் கொண்டிருப்பதுடன், அவ்வப்போது வாயைக்கட்டுகிறேன் பேர்வழி என்று மௌனவிரதங்கள் இருப்பதும் அவரது வழக்கமாகும். கோபம் வேறு பழியாக வந்து தொலைக்கும்.
கண்பார்வை குறைவாக இருக்கிறது… பல் கூச்சமும், வலியும் இருக்கிறது… காரம் சாப்பிட்டால் சேரமாட்டேன்கிறது என்று அவர் சொன்ன சின்னச் சின்ன பிரச்சனைகளையெல்லாம், ஒவ்வொரு தடவையும் அவர் இங்கு வந்தபோதெல்லாம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுபோய் சரி செய்தாகிவிட்டது. முன்பு வந்து போனபோது இருந்ததை விட, இந்ததடவை அவருக்கு அதிகமான பிரச்சனை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி மூத்திரம் போய் வரவேண்டியதாகவும், மலச்சிக்கலும் அவருக்கிருந்தது. கிட்டத்தட்ட ஒருவருடங்களாக இந்த பிரச்சனைகள் அவருக்கிருந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரன் தனக்கு மிகவும் நெருக்கமான ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு போய் வாங்கி கொடுத்த மருந்து மாத்திரைகளை சரிவர சாப்பிடாமல் அவரது வியாதியினை அதிகப்படுத்திக்கொண்டு விட்டவராக இருந்தார்.
மூத்திரம் அடிக்கடி போகவேண்டியிருப்பதைத் தவிர்ப்பதற்காக தண்ணீர் குடிக்காமல் இருந்து, அது மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டதுடன், உடம்பில் நீர்ச்சத்தும் குறைந்து போய்…. வந்தது பாதி… தானாக வரவழைத்துக்கொண்டது பாதியென்று அவரது உடல்நிலை மோசமடைந்திருந்தது.
ஒரு கட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாதவராக, தன் தூரத்து சொந்தமான சண்முகத்திடம் எல்லாவற்றையும் சொல்ல, பக்கத்து ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆளவந்தாரைச் சேர்த்துவிட்டு, சண்முகம் சொல்லாமல் கொள்ளாமல் ஊர் திரும்பியதும், ஆளவந்தாரைப் பார்த்துக்கொள்ள யாருமில்லையென்று தெரிந்த ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள், இவருக்கு ஒரு பாயைக் கொடுத்து ஒரு ஓரமாகப் படுக்கப் போட்டதும், இந்த ஏனோதானோ வைத்தியக் கொடுமை தாங்காமல் ஆளவந்தார் அங்கிருந்து புறப்பட்டுவந்து விட்டதும் ஈஸ்வரன் சொல்லக் கேள்விப்பட்ட போது தூக்கிவாரிப்போட்டது.
“எதுக்கு சண்முகம் கூட்டிட்டுப் போகணும்? அங்க சேர்த்துட்டு தனியாக விட்டுட்டு வரணும்? இதுக்கு அவரை கூட்டிட்டுப் போகாமலேயே இருந்திருக்கலாம். அவருக்கு தொந்தரவுக்கு மேல தொந்தரவுதான இது?”
“அதனால தாண்டா அவரை உங்கிட்ட புறப்பட்டுப்போகச் சொல்லிட்டேன். கொஞ்சம் நல்லாபாத்துக்க. அவர்கிட்ட என்னென்ன பிரச்சனையிருக்குன்னு கேளு. சரிபண்ணிடலாம்.”
ஈஸ்வரன் சொன்னதற்கு நான் சம்மதிக்கவே, தனக்கு சண்முகத்தால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் புறப்பட்டு வரவே மனமில்லாமல் இருந்தவரை, வேண்டியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கார் அமர்த்தி இங்கு அனுப்பி வைக்க மிகுந்த கோபத்துடன் வந்து சேர்ந்தார்.
வந்ததும் வராததுமாக அவர் கோபத்துடன் இருப்பது தெரியாமல், நான் அவரிடம் பேச்சுக் கொடுக்க, “ஆஸ்பத்திரிக்கு போகணும்னு தெரியாது. முன் கூட்டியே யாரும் எனக்குச் சொல்லலை. அவசரம், அவசரமாகூட்டிட்டு வந்துட்டாங்க” என்று வார்த்தைகளை திணறியபடியும், நிறுத்தி நிறுத்தியும் கூறியதோடு, இரண்டு கைகளாலும் படபடவென்று தன் தலையில் அடித்துக்கொண்டார். கோபத்துடன் என் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரைச் சமாதானப்படுத்தி “சாப்பிட்டீங்களா?” என்று நான் கேட்டதற்கு, முகத்தை திருப்பிக் கொண்டே “விஷத்தைச் சாப்பிட்டேன்” என்று பதில் சொல்ல நான் அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டு அமைதியாக இருந்தேன். அடிக்கடி அவர் கடைபிடித்த தேவையற்ற மௌனவிரதங்கள் அவரது திணறலான பேச்சுக்கு காரணமாகிவிட்டிருந்தது. வார்த்தைகள் தட்டுத்தடுமாறி அவர் பேசுவதைப் பார்க்கும்போது “இதெல்லாம் தேவையா?” என்று அவர் மீது எனக்கு கோபம் வந்தது.
இரண்டு நாட்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனபோது, தனது வியாதியையும், அதனால் வயிறாற சாப்பிட முடியாமலும், வெளியில் எங்கும் செல்ல முடியாமல் முடங்கிப் போனதையும், திக்கித்திக்கி அவர் டாக்டரிடம் சொல்லி முடித்தபோது எனக்கு ஒருமாதிரியிருந்தது. மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்த்து “பயப்படவேண்டியதில்லை. மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்திடலாம்” என்று டாக்டர் சொன்னதும் ஆளவந்தாரின் முகம் தொங்கிப்போனது.
மருந்துகளை வாங்கிக்கொண்டு வெளியில் வந்ததும், “அந்த டாக்டர் ஒரு கறுப்பு ஆடு. சுத்த வேஸ்ட். ஆபரேசன் பண்ணாம இதைச்சரிபண்ண முடியாது” என்று ஆவேசமாக விமர்சனம் செய்தார். ஈஸ்வரனிடம் நடந்ததைச் சொன்ன போது,
“இந்த கோபம்தாண்டா குடும்பத்துகிட்டயிருந்து மட்டுமில்லாம, அவர் கூட பழகினவங்க கிட்டயிருந்தும் அவரை பிரிச்சு வைக்குது. இந்த எண்பது வயசுல இவருக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா அந்த காலத்துல எப்படியிருந்திருப்பார்னு பாத்துக்க. குடும்பத்துல இவர் நடந்து கிட்டதைப்பார்த்து பொண்டாட்டி புள்ளைங்க ஆரம்பத்துல பயப்பட ஆரம்பிச்சாங்க. அப்புறம் நடுங்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. தன்னோட தப்பை உணராம குடும்பத்தை உதறிட்டு வெளியில வந்துட்டாரு. இவர் இப்படி படக்குன்னு எல்லாரையும் தூக்கியெறிஞ்சு பேசுறதுனால பழகினவங்களையும் ஒவ்வொருத்தரா இழக்க ஆரம்பிச்சிட்டாரு. தன்மேல கொடூரமான கோபக்காரன்கிற முத்திரை விழறதை ஏத்துக்கமுடியாம ஒரு கட்டத்துல, தலைமுடிய வளர்த்து, தாடிய வளர்த்து, கோயில் குளம்னு போயி, தன்னை ஒரு சாதுமாதிரின்னும், ஆன்மீக வாதின்னும் காட்டிக்க முயற்சி செஞ்சு, தன்னோட அடையாளத்தை மாத்திக்கிட்டார். அடையாளத்தை மீறியும் அவரோட கோபந்தான் கடைசில ஜெயிச்சது. வயசும் வேற ஆன உடனே, இந்த சுமை நம்ம தலைமேல விழுந்திடப்போகுதேன்னு பழகினவங்களும் ஒவ்வொருத்தரா ஒதுங்க ஆரம்பிச்சிட்டாங்க.” ஈஸ்வரன் சொல்லச்சொல்ல, இயல்பு நிலைமீறிய அவரது கோபம் அவருக்கு எந்த அளவிற்கு வாழ்க்கையில் எதிரியாகியிருக்கிறது என்பது புரிந்தது.
தன்னுடைய அலட்சியமான பிடிவாதத்தினால், டாக்டர் சொன்ன எதையும் கடைபிடிக்காமல் போகவே, ஒரு மாதத்திற்கு பிறகும் ஆளவந்தாரின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் தென்படவில்லை. ஆபரேசன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னதும், “ஊர்ல யாருக்கும் சொல்லணுமா?” என்று நான் கேட்ட போது கூட “பழனிச்சாமிக்கு சொல்லணும், மாணிக்கத்துக்குச் சொல்லணும்” என்று யார், யார் பெயரையோ சொன்னாரே ஒழிய தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சொல்லவேண்டுமென்று அவர் வாயிலிருந்து வரவேயில்லை.
“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கும் புரியாது. நம்மளும் அவருக்கு புரியவைக்கவும் முடியாது. அவங்க வீட்ல உள்ளவங்க பாவம்டா. அவங்களுக்கு நான் யார் மூலமாவது சொல்லி அனுப்பிடறேன்” என்று ஆளவந்தாரின் மனைவிக்கு ஆபரேசன் பற்றி தகவல்சொல்ல ஈஸ்வரன் பொறுப்பெடுத்துக் கொண்டான்.
அட்மிஷன் கவுண்டரில் டாக்டர் எழுதிக்கொடுத்த அட்மிஷன் ஸ்லிப்பைக் காட்டியதும், சம்பிரதாயமாக சில தாள்களில் என்னிடம் கையெழுத்துப் பெற்றனர். அவருடைய “இரத்த சொந்தங்கள் யாரும் வந்திருக்கிறார்களா?” என்று அவர்கள் கேட்டதற்கு, நான் இல்லை என்று பதில்சொல்ல ஆளவந்தாரின் முகம் இறுகிப்போனது.
ஆபரேசனுக்காக முன் பணம் கட்டி அறை ஒதுக்கப்பட்டவுடன், ஆளவந்தார் தன் தலையை தடவியபடியே எதையோ யோசித்துக் கொண்டிருந்தவராய் படுத்துக்கொண்டார். வார்டில் இருந்த டியூட்டி டாக்டர் வந்து ஆளவந்தாரிடம் விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அட்மிஷனுக்கு ஏற்பட்ட காலதாமதத்தினால் உண்டான கோபத்தில் வேண்டாத வெறுப்போடு டாக்டரின் கேள்விகளுக்கு ஆளவந்தார் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று என்பக்கமாய் திரும்பிய வார்டு செகரெட்டரி,
“நீங்க யாரு அவருடைய பையனா?”
“இல்லை. வேண்டியவர்”
“அவரோட புள்ளைங்க யாரும் கூட வரலியா?”
“இல்லை சார்”
“இவரென்ன அனாதையா?”
சற்றும் எதிர்பாராமல் ஆளவந்தாரை அனாதையா என்று அவர்கள் கேட்டதும் திக்குமுக்காடிப்போனேன். பின்னர், சமாளித்துக்கொண்டு,
“அப்படியெல்லாம் இல்லைசார். இவங்க வெளியூர். உடம்புக்கு முடியலைன்னு வந்த இடத்துல திடீர்னு ஆபரேசன் வரைக்கும் வந்துருச்சு. இவரோட வீட்லையும் வயசானவங்க. அவங்களை அலையவைக்க வேணாம்னு நாங்க அவங்களுக்கு சொல்லலை. பசங்களும் வெளிநாட்ல இருக்காங்க. அதான் நாங்களே பார்த்துக்கலாம்னு கூட்டிட்டு வந்து சேர்த்திட்டோம்” என்று ஒருவழியாய் சமாளிக்க வேண்டியதாயிற்று.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஆளவந்தாரின் முகம் கடுகடுவென்று மாறியது. கண் சிவந்து காணப்பட்டது. அவர் எதாவது திட்டிவிடுவாரோ என்று பயந்து, அவரை எதிர்கொள்ள முடியாமல் அறைக்கு வெளியே வந்து வேடிக்கை பார்ப்பது போல் நின்று கொண்டேன். அவருக்கு தேவையில்லாத சிலரை நான் ஞாபகப்படுத்தி விட்டதாகவும், அவர்களுக்கு ஆதரவாய் நான் பேசியதாகவும் ஆளவந்தார் உணர்ந்திருக்க வேண்டும் என்று எனக்குப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு சிராய்ப்பாக இருந்தது.
விடிந்தால் ஆபரேசனென்று முடிவாகியிருந்த சூழலில் இரவு பதினோரு மணிக்குமேல் திடீரென்று “ஆபரேசனுக்கான மொத்தப்பணத்தையும் உடனே நீங்க கட்டணும்னு பில்லிங் செக்ஷன்ல இருந்து போன் பண்ணாங்க. உடனே போய்க் கட்டிட்டுவந்துருங்க” என்று வார்டு செகரெட்டரி கூறியதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“என்னங்க இந்த அர்த்தராத்திரியில திடீர்னு வந்து இப்படி சொல்றீங்களே? மொதல்ல முடிஞ்சதைக் கட்டுங்கன்னுதான சொன்னாங்க?”
“அப்ப ஆபரேசனுக்குள்ள பணத்தைக் கட்டிடுங்க. நான் வேணும்னா சொல்லிக்கிறேன்.”
“அதெப்படிங்கமுடியும். காலைல ஏழுமணிக்குள்ள மீதப்பணத்துக்கு என்ன பண்ண முடியும் சொல்லுங்க?”
“வெளிப்படையாவே சொல்லிடறேன். அவரோட வீட்ல இருந்து யாரும் அவர் கூட வரலைன்னதும் நிர்வாகத்துல சந்தேகப்படறாங்க. நிறைய பேர் பரிதாபப்பட்டு யாரையாவது இங்க கொண்டுவந்து சேர்த்துட்டு ரெண்டுநாளைக்கு கூட இருக்கற மாதிரி இருந்திட்டுப் போயிடறாங்க. அப்புறம் எங்களுக்கு சிரமமாப் போயிடுது. என்னதான் நீங்க அவருக்கு வேண்டியவர்னு சொன்னாலும் எங்க பாதுகாப்பை நாங்க பாத்துக்கணுமில்லையா?”
“ நான் வேணும்னா பில்லிங் செக்சன்ல நேர்ல போய் சொல்லிட்டுவர்றேன்.”
தூங்காமல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆளவந்தார் விடுக்கென்று எழுந்து உட்கார்ந்தார். அவரைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கீழே வந்து பேசிப்பார்த்தும் பலனில்லாமல் போகவே, இரவோடு இரவாக நண்பர்களுக்குச் சொல்லி பணம் ஏற்பாடு செய்து ஆபரேசனுக்கு முன்பாக கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட எனக்குள் என்னென்னவோ தோன்றி மறைந்தது.
ஆபரேசன் முடிந்த சிலமணி நேரங்களுக்குப் பிறகு, “அவருக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கோம். தூங்கறதுக்கு ஊசியும் போட்டிருக்கோம். அதையும் மீறி தூங்காம அசைஞ்சுக்கிட்டேயிருக்கார். ரத்தக் கசிவு வந்தா பிரச்சனையாயிடும். எதும் சொன்னா கோபப்படறார். நீங்க வந்து சொல்லிட்டுப்போங்க” என்று நர்ஸ் சொல்ல நான் உள்ளே சென்றேன். என்னை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
“எதையும் நினைச்சுக்கிட்டேயிருக்காதீங்க. அசையாம படுத்துத் தூங்குங்க. எல்லாம் சரியாயிடும்” என்று நான் கூறியது தான் தாமதம்
“மொதல்ல இவரை வெளியில போகச் சொல்லுங்க. உடனே வெளில அனுப்புங்க” என்று சுற்றிலும் நோயாளிகள் இருப்பதைக்கூட உணராமல் கத்தினார். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நானாக வெளியேறினேன். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரன் போன் செய்ய அப்போதிருந்த மனநிலையில் எல்லாவற்றையும் நான் கூறிவிட வேண்டியதாயிற்று.
“விடுடா. எதுவும் நினைச்சுக்காத. எல்லார்கிட்டயும் அவர் அப்படித்தான் நடந்துக்குவார். கவனமாபார்த்துக்க. கோபம் வர்ற மாதிரி நடந்துக்காத” என்ற ஈஸ்வரனின் அறிவுரை தான் அப்போது சரியாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. அதன் பிறகு அவரிடம் நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் சொல்ல நினைத்தவற்றை கூட ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் மூலமாகவே எடுத்துச் சொல்ல வேண்டியதாகிப்போனது.
கூடுதலாக சண்முகம் வேறு நேரில் வந்து, ஆளவந்தார் தனக்கு மிக முக்கியமானவர் மாதிரியும், அவர்மீது மிகுந்த அக்கறை உள்ளவன் போல் அவன் காட்டிக்கொண்டதாகவும் பேசிவிட்டு போனதை, ஈஸ்வரன் மூலமாக கேள்விப்பட்ட போது, வார்த்தையால் வாழ்பவர்களுக்கும், வாழ்க்கையால் வாழ்பவர்களுக்குமான வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது இந்த இரண்டு மாத காலத்தில், ஒரு முறை கூட சண்முகம் என்னிடம் ஆளவந்தாரின் உடல் நிலை குறித்து விசாரிக்கவே இல்லை. அந்த உறுத்தல் கூட இல்லாமல், சண்முகத்தால் எப்படி இப்படியெல்லாம் கூறமுடிகின்றது என்பதும் எனக்கு புரியவில்லை.
சிறிது நேரம் கழித்து கேன்டீனுக்கு சாப்பிட வந்தபோது கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தது. சாப்பாடு வந்து சாப்பிட நேரமாகும் போல் தெரிய சப்பாத்திக்கு ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தேன். எதிர் இருக்கையில் ஒரு வயதான பெண்மணி சாப்பாட்டினை பிசைந்து எடுத்துச் சாப்பிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வாதம் மாதிரி எதாவது பாதிப்பு இருக்க வேண்டும். விரல்களை அசைக்கவும் மடக்கவும் முடியாதவராக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அருகிலிருந்த அவரது கணவர் அவரின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு அவருக்கு உதவி செய்யப்போக, அந்த பெண்மணி கூச்சத்துடன் நிராகரித்தார்.
விடாப்பிடியாக அவரது கணவர் தட்டில் உள்ள சாதத்தினை கீரையுடன் பிசைந்து ஊட்டி விட அந்த அம்மா சாப்பிட ஆரம்பித்தார். நான் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த அம்மாவின் முகத்தில் வெட்கமும், தன் மீது தனக்கேயான பரிதாபமும் அப்பிக்கொண்டது. அதைப் புரிந்து கொண்டவனாய் நான் தலையைக் குனிந்து கொண்டு அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். கண் ஜாடையில் அந்த அம்மா அவரது கணவரிடம் என்னைக் காட்ட, அவர் என் பக்கமாய் திரும்பி பேச ஆரம்பித்தார்.
“என்ன தம்பி பார்க்கறீங்க? நரம்புல பிரச்சனை. விரல்கள் வேலை செய்ய மாட்டேங்குது. இத்தினி வருஷமா எனக்கு சமைச்சுப் போட்டு, துவைச்சுப்போட்டுன்னு முகம் கோணாம பாத்துக்கிட்டவங்க. எனக்கு எந்த குறையும் வச்சதில்லை. வீட்டுக்கு வந்தவங்களுக்கு கூட வாய்க்கு ருசியா ஆக்கிப் போட்டு பசியாறினப்புறம் தான் அனுப்பி வைப்பாங்க. போதாத காலம். அவங்க நிம்மதியா சாப்பிட முடியலை. வெளியில வந்தா கஷ்டமாயிருக்கும்னு எங்கயும் போறதில்லை. அதுக்காக ஆஸ்பத்திரிக்கு வராம இருக்க முடியுமா? அவங்க சிரமப்படறது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் நான் இதை பாக்கியமா நினைக்கிறேன், நமக்கு பணிவிடை செஞ்சவங்களுக்கு திரும்பவும் பணிவிடை செய்யறபாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும் சொல்லுங்க. அதுமட்டுமில்ல அவங்களோட பிரியத்தை இன்னும் அதிகமா பெறக்கூடிய சந்தர்ப்பமும் எனக்கு கிடைச்சிருக்கு. என்ன தம்பி நான் சொல்றது சரிதான?”
அவர் சொல்லச் சொல்ல எனக்கு நெகிழ்வாக இருந்தது. அந்த பெண்மணி நிச்சயமாய் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கேன்டீனை விட்டு வெளியில் வந்தபோது என்னைக்கடந்து போனவர் ஆளவந்தாரின் மனைவி மாதிரியே தெரியவும் நின்று திரும்பிப் பார்த்தேன்.
“நீங்க ஈஸ்வரனோட தம்பி தான?”
“ஆமாம்மா”
“அவர் எப்படியிருக்காருப்பா?”
“நல்லாயிருக்காரும்மா. வாங்க போய்ப் பார்க்கலாம்”
அழைத்ததும் சற்றுத் தயங்கினார்.
“ஏம்மா?”
“ஈஸ்வரன் எல்லாத்தையும் சொன்னாம்ப்பா. ஆபரேசன்னு முடிவானதும் கூட எங்ககிட்ட சொல்லணும்னு அவருக்குத் தோணாமப் போச்சுப்பாரு”
“அதவிடுங்கம்மா. எல்லாத்தையும் மனசுல வச்சுகிட்டு. வாங்க போய்ப் பார்க்கலாம்.”
“இல்லைப்பா. ஏதோ ஒரு வேகத்துல மனசு கேக்காம புறப்பட்டு வந்திட்டேன். ஆனாலும் ஆஸ்பத்திரிக்குள்ள நுழையவே கால் வரலை. நீங்கள்லாம் நல்ல பசங்கதாம்பா. அவரோட புள்ளங்கமாதிரி அவரைப் பாத்துக்கறீங்க. நான் குத்தம் சொல்லலை. இப்படி ஒவ்வொரு கட்டத்துலயும் யாரோ ஒருத்தர் அவருக்கு ஒத்தாசையா இருக்கறதுனால தான் இதுமாதிரி சமயங்கள்ல கூட அவருக்கு குடும்பம்னு ஒண்ணு இருக்குங்கறது ஞாபகத்துக்கு வரலை. திடுதிப்புன்னு என்னையும் புள்ளைங்களையும் நடுத்தெருவுல நிறுத்திட்டுப் போயி பல வருஷமாச்சு. இத்தனை நாளா படாதபாடுபட்டு புள்ளைங்களையும் வளர்த்து ஆளாக்கிட்டேன். பேரக் குழந்தைகளும் பிறந்தாச்சு. எங்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாம தூக்கி எறிஞ்சுட்டுப் போற அளவுக்கு நாங்க எந்த தப்பும் பண்ணலை. சரி வயசானப்புறம் கடைசி காலத்துலயாவது எங்க நினைப்பு வரும்னு நம்பிக்கிட்டிருந்தேன். அந்த நம்பிக்கையும் இப்ப சுக்கு நூறாயிடுச்சு.”
“அப்படியெல்லாம் இல்லைம்மா. அவரு சொல்லணும்னு நினைச்சிருக்கலாம். இத்தினி வருசம் கழிச்சு எங்க கிட்ட சொல்லி அனுப்புறதுக்கு சங்கடப்பட்டுக்கிட்டு கூட சொல்லாம இருந்திருக்கலாம். இந்த சமயத்துல பழசைப் போட்டுக் குழப்பிக்கவேண்டாம். வாங்க போய்ப்பார்த்துட்டு வந்திடலாம்.”
“இது மாதிரி சமாதானம் நிறைய கேட்டுட்டேன். இவரைப் பத்திக் கேள்விப்படற ஒவ்வொரு தடவையும் என்னைய நானே சமாதானப் படுத்திகிட்டு அவரைப்பார்க்க வந்தப்ப எல்லாம், என்னை அவர் அவமானப்படுத்தி துரத்தி அடிச்சிருக்கார். இவர் கிட்டயும் எதுவும் செய்ய முடியாம, புள்ளைங்ககிட்டயும் எதுவும் சொல்ல முடியாமன்னு நான் அவஸ்தைப்படறது எனக்குத்தாம்ப்பா தெரியும். இன்னமும் கூட அவருக்கு எங்க ஞாபகம் வரலைங்கறது சுருக்குங்குதுப்பா. அவர் சொல்லி அனுப்பாதப்ப நாம எதுக்கு வந்தோம்? எதுக்குப் பார்க்கணும்னு தோணுது.”
“உங்க நிலைமை எனக்கும் புரியுதும்மா. அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. வாங்க போகலாம்.”
“அவரைப் பார்த்தாலும் உடம்புக்கு எப்படியிருக்குன்னு கேக்கறதைக் காட்டிலும், இப்படி ஒதுங்கிப் போனதுக்கு என்ன காரணம்னு தான் மொதல்ல எனக்குக் கேக்கத்தோணும். ஏன்னா அந்த கேள்வியத்தான் வருசக்கணக்கா எனக்குள்ள அடைச்சு வச்சிருக்கேன். என்ன பெருசா காரணம்? கோபந்தாம்ப்பா. பைசாவுக்கு பிரயோசனமில்லாத கோபம்… நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு புரிஞ்சுக்காத கோபம்… வேண்டியவங்க யாரு வேண்டாதவங்க யாருன்னு உணர்ந்துக்க முடியாத கோபம் … அந்த கோபம்தான் காரணம். அவருக்கு அந்தக் கோபம் வந்தா வார்த்தை எல்லாம் நெருப்பாய் வந்து விழும். அந்த நெருப்புல அன்னியோன்யமும், பாசமும் பொசுங்கிப்போக ஆரம்பிச்சுச்சு. இதை நான் கேட்டதுக்கு என்னையும் புள்ளைங்களையும் அந்த நெருப்புல தூக்கிப் போட்டுட்டு போயிட்டார்.” என்று கூறியபடி தன்னையடக்க வழியின்றி கண் கலங்கியவரின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல முயன்ற போது
“விடுப்பா” என்று என் கையை உதறி விட்டார். எதுவும் சொல்ல முடியாமல் நான் அவரையே வெறித்துப் பார்த்த போது
“என்னப்பா பார்க்கறே? இந்த இடைவெளிக்கு நானும் எதுவும் தப்பு பண்ணாமயா இருந்திருப்பேன்னு நினைக்கறியா?”
“அய்யய்யோ அப்படியெல்லாம் நினைக்கலைம்மா”
“நினைச்சாலும் தப்பில்லைப்பா. நானும் ஒரு தப்பு பண்ணிருக்கேன். அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டதே தப்பு தான். அதனால தான் இன்னைக்கும் நான் இப்படி அந்நியப்பட்டு நிக்கறேன். நான் வந்துட்டுப்போனேன்னு கூட அவர்கிட்ட சொல்ல வேணாம். அப்புறம் உங்ககிட்ட கோபப்படுவார். நல்லா பாத்துக்கங்கப்பா”
சொல்லி முடித்ததும் விடுவிடுவென்று ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த ஆளவந்தாரின் மனைவியை தடுத்து நிறுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தேன். அனுபவிக்கும் போதுதான் வலியின் வேதனை புரியும். வலியின் வேதனைகளுக்கு வார்த்தைகள் மட்டுமே மருந்தாகும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது புரிந்தது.
ஆளவந்தாரிடம் எப்போதாவது பேசிக்கொண்டிருக்கும் போது, “காலம் பதில்சொல்லும்” என்கிற வார்த்தையை அவர் அடிக்கடி உபயோகிப்பதுண்டு. இப்போது அதே வார்த்தை அவருக்கும் பொருந்திப்போவதாக நான் உணர்ந்தேன்.
– தாமரை இலக்கிய மாத இதழில் பிரசுரமானது