சிநேகிதனே!.. சிநேகிதனே!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 163
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம் – 9

“என்னப்பா! பட்சி மாட்டிக்கிடுச்சு போலிருக்கு?” – இந்து வேலைக்குச் சேர்ந்த மறு நாளே ராமு நண்பன் அறைக்குள் வந்தான்.
“ஆமா.” – வசந்த் கர்வத்துடன் தலையசைத்தான்.
“எப்போ முடிக்கிறதா திட்டம்?”
“கனியைத் தானா கனிய வைக்கனும்.”
“முடிச்ச பிறகு?”
“கழற்றி விட்டுடுவேன்.”
“வேலையிலிருந்தா?”
“ஆமா.”
“ஏன்??”
“இருந்தா சங்கடம்.”
“தொல்லை கொடுப்பாள் தொடருவாள், கஷ்டம்ன்னு யோசிக்கிறீயா?”
“ஆமா.”
“வெளியே போய் உன் சுயரூபம் தெரிஞ்ச பிறகு சும்மா இருப்பாளா?”
“பொட்டைக் காக்கா எட்டிக் கொத்த முடியாது.”
“அது அந்த காலம். இப்போ எட்டிக் கொத்துறதோட விடாது. நார்நாராய்க கிழிச்சு தொங்க வைச்சுடும்.”
“நீ என்னை ரொம்ப பயமுறுத்தறே ராமு?”
‘‘பயமுறுத்தலை நடப்பு!‘‘
“சமாளிப்பேன்!”
“அப்புடி சமாளிச்சு கஷ்டப்படுறதைவிட சும்மா இருக்கிறதே சுகம் இல்லியா?”
வசந்த் அவனைப் பார்த்தான்.
“இந்துவை தொடாமல் விடலாம் இல்லியா?”
“செய்யலாம் மனசுக்குள்ள குறை இருக்கும்.”
“குறையைத் தூக்கி குப்பையில போடு.”
“மன்னிக்கனும். முடியாது!”
“நீ வம்புல மாட்டுறேன்னு எனக்குத் தோணுது.”
“எனக்குத் தோணலை.”
“எச்சரிக்க வேண்டியது என் கடமை. எச்சரிச்சுட்டேன். அப்புறம் உன் விருப்பம்.” – எழுந்தான்.
“நன்றி!”
“தேவை இல்லே…!” – சொல்லி செல்லும் ராமுவையே பார்த்தான்.
‘இவன் ஏதாவது வில்லங்கம் செய்வானா. எதற்கு எச்சரிக்கிறான். இந்துவைக் காப்பாற்றுவானா, அவளுக்குப் பக்கபலமாக இருந்து தடுப்பானா, தப்பிக்க வைப்பானா, இல்லை எதிரியாகிப் போய் ஏதாவது செய்வானா? ஏன் புதிராய் இருக்கிறான்?!’ – யோசிக்க யோசிக்க வசந்திற்குக் குழப்பமாக இருந்தது.
இவன் தனக்கு எதிரானால் என்ன செய்யலாம்..? – என்றும் யோசனை ஓடியது.
வாசலில் நிழலாட நிமிர்ந்தான்.
இந்து உள்ளே வந்தாள்.
புடவையில் ரொம்ப நளினமாக இருந்தாள். கையில் நோட்புக் பென்சில்.
“என்ன இந்து?”
“பத்து மணிக்குப் பரசுராம் கம்பெனிக்கு ஏதோ கடிதம் எழுதனும்ன்னு சொன்னீங்க “
“ஆமாம் மறந்துட்டேன். உட்கார்‘‘ எதிர்நாற்காலியைக் காட்டினான்.
அமர்ந்தாள்.
“வேலை புடிச்சிருக்கா இந்து?”
“புடிச்சிருக்கு. உங்க தயவு.”
“உன் எதிர்காலம்?”
“மன்னிக்கனும் நம்ம தனிப்பட்ட விசயங்களை வெளியில பேசலாம்.”
“வெளியைவிட இது பாதுகாப்பான இந்து. என் தனி அறை!”
“இருக்கலாம். இது நீங்க தேடி சம்பாதிச்ச இடமில்லே. உங்க அப்பா கஷ்டப்பட்டது. அவர் இடத்துல நாம பேசுறது தப்பு.” அவள் குரலில் உறுதி இருந்தது.
ஆடிப் போய் பார்த்தான்
“நான் சொன்னது தப்பா?” இந்து அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“இல்லே! நாம கம்பெனி விசயமா பெங்க@ரு போகனும் இந்து.”
“மன்னிக்கனும். நான் வரமுடியாது.”
“ஏன்?”
“கம்பெனி எம்.டி கூட செக்ரட்டரி போகனும் என்கிற அவசியமில்லே.?”
“ஆயிரம் வேலைகளிருக்கும் எடுத்துக் கொடுக்கிற புரோகிராமரே நீதான்.”
“அதை நீங்களே ஒரு தாள்ல எழுதி எடுத்துப்போய் முடிக்கலாம்.”
“அதுக்கு நான் ஒரு செக்ரட்டரியைச் சம்பளம் குடுத்து வைச்சிருக்கனும்ங்குற அவசியமில்லியே?”
“அலுவலக வேலைக்கு மட்டும் செக்ரட்டரி. நோ அவுட்டோர். அப்படி இருந்தால் இந்து அங்கே மட்டுமில்லே. வேலைக்கும் வரமாட்டாள்.” கறாராகச் சொன்னாள்.
‘இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறாள். கோபப்படாமல் விட்டுப்பிடிக்கவேண்டும்!‘ முடிவிற்கு வந்து “நல்லது நானே பார்த்துக்கிறேன்!” – என்றான்.
ஒப்புக்கு ரொம்ப அக்கரையாய் டிக்டேஷன் கொடுத்து அனுப்பினான்.
‘ருசிகண்ட பூனை. படியும், மயில் தானே இறகு போடுமென்றால் போடாது போலிருக்கிறதே! பிய்த்துதான் எடுக்க வேண்டுமா. இதுதான் இவள் தலைவிதியா? இந்தப் பெண்கள் ஏன் கற்பை ரொம்ப கெட்டி கட்டியாய் காபந்து செய்கிறார்கள்?!’ – நினைத்தான்.
இந்து பிடிகொடுக்காமல் நழுவ நழுவ அவள் மேல் மோகம் அதிகமாக வசந்திற்குள் உடல் சூடு கண்டது.
‘கூண்டுகுள்ள வந்துட்டே வைச்சிருக்கறேன் மவளே!‘ பெருமூச்சுவிட்டு அணைத்தான். சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவனாக அழைப்பு மணியை அழுத்தினான்.
பியூன் எதிரே வந்து நின்றான்.
‘‘இந்து!” – சொல்லி அனுப்பினான்.
சிறிது நேரத்தில் இந்து நுழையும்போது….
“ஹலோ! அப்பாவா?! அமெரிக்காவுல இருந்து எப்போ திரும்புறீங்க. சரி. நான் அதெல்லாம் முடிச்சுடுறேன். நீங்க ஒன்னும் கவலைப்படவேணாம். நான் அம்மாவைப் பத்ரமாப் பாத்துக்கிறேன். ஆடிட்டை நானே சரிபடுத்திடுறேன். கவலைப்படாம நீங்க எப்போ வேணுமின்னாலும் வரலாம். போன காரியம் நல்லவிதமா முடிஞ்சுதுல எனக்கு சந்தோசம். ஓ.கே வைச்சுடுறேன்!” – வைத்தான். ‘‘அப்பாகிட்ட பேசினேன்‘‘ – இவளிடம் சொன்னான்.
“இன்னும் அப்பா அமெரிக்காவுலதான் இருக்காரா?” இந்து ஆச்சரியமாக கேட்டாள்.
“அவர் எப்போவோ திரும்பிட்டார். நெனைச்சா அமெரிக்கா போவார் வருவார்.” என்றவன், “அப்புறம் இந்து ஒரு
முக்கியமான வேலை தட்டக்கூடாது” – என்று அவசரமாய்ச் சொல்லி அவளைப் பார்த்தான்.
“என்ன?”
‘‘அப்பாவுக்கு மகாபலிபுரம் போற வழியில ஒரு தனி பங்களா இருக்கு. அங்கே இந்த கம்பெனியோட ஆடிட் ரகசிய பைலெல்லாம் இருக்கு. போன முறை அவசரத்துல எல்லாம் மானாவாரியா போட்டு வந்தாச்சு. அதை ஒழுங்குபடுத்தி வைச்சுட்டு வரனும்” என்றான்.
மகாபலிபுரம் தனி பங்களா என்றதுமே இவளுக்குள் சொரக்கென்றது. உள்ளுக்குள் கலவரம் மூண்டது.
“அப்பா இருந்தா அதை நான்தான் செய்வேன். அவர் இல்லேங்குறதுனால உன்கிட்ட விடுறேன். கம்பெனி கணக்கு வழக்குகளை நம்பிக்கையான ஆள்தான் செய்யனும்.” இந்த நம்பிக்கையான ஆள் என்பதற்கு அழுத்தம் கொடுத்து உச்சரித்து அவளை அடிக்கண்ணால் பார்த்தான்.
அந்த வார்த்தைக்கு அவன் எதிர்பார்த்த பலன் இருந்தது. இந்து முகம் கொஞ்சம் இளகியது.
“எப்போ முடிக்கனும்?” – கேட்டாள்.
“இன்னைக்கோ நாளைக்கோ முடிச்சா எனக்கு திருப்தி இந்து.”
“சாயந்தரம்ன்னா லேட்டாகுமே?”
“ஒரு மணி நேரம் செலவழிச்சா போதும்”.
“வீட்டுல நான் சொல்லாம வந்திருக்கேன்.”
“பரவாயில்லே இப்போகூட சொல்லலாம்.”
வீட்டில் சொல்லலாமென்றால் இவன் மனதில் வஞ்சமில்லை. இந்து மனதில் பட்டது. அதே சமயம் தன்மீது அக்கரை காட்டும் ஆளை இப்படி தவறாக எடை போடலாமா?
தோன்றியது. அதற்காக அவளே உள்ளுக்குள் கொஞ்சம் வெட்கப்பட்டாள்.
“புதுசா வேலைக்கு வந்திருக்கே.வீட்டுல பிரச்சனை வரும்ன்னா இப்பவேகூட போய் முடிச்சுட்டு வந்துடலாம்” – கொக்கியைப் போட்டான்.
இந்துவிற்கு இது நல்ல யோசனையாக தோன்றியது. யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. பட்டது.
“ஒரு மணிநேரம் போதுமின்னா இப்பவே போய் முடிச்சுட்டு வந்துடலாம்” – என்றாள்.
‘வரே வா இதுதான்டி எனக்கு வேணும். உன்னை வழிக்கு கொண்டுவர அப்பாகிட்ட பேசுறாமாதிரி எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு.’ – மனசுக்குள் நினைத்த வசந்த். “என் கார்ல கிளம்பி போய் இப்பவே முடிச்சு திரும்பலாம்.” என்றான்.
இந்த இடத்தில் இந்து தயங்கினாள்.
வசந்த்துடன் இவள் தனியே பூங்காவில் பேசியிருக்காளேயொழிய ஓட்டல், சினிமா என்று தனிப் பயணம் சென்றதில்லை. கொஞ்சம் அசந்தால் ஆளை அடித்து அபேஸ் பண்ணி விடுவார்கள் என்று ஆண்களைப் பற்றி இவளுக்கு நன்றாகவேத் தெரியுமென்பதால் இவன் எவ்வளவு வற்புருத்தியும் நோ.
இப்போது மட்டும் எப்படி செல்வது? யோசித்தாள்.
“நீங்க முன்னாடி போங்களேன். நான் பின்னாடி வர்றேன்.” என்றாள்.
“இடம் தெரியுமா?”
“விலாசம் குடுங்க வந்திடுறேன்”
“இந்தா விசிட்டிங் கார்டு. மாமல்லபுரம் போற எந்த பேருந்து ஏறினாலும் நடேசன் காட்டேஜ்ன்னா சரியா இறக்கி விடுவான். பேருந்து நிறுத்தத்துலேர்ந்து கொஞ்சம் தெற்கே நடந்து மேற்கே பார்த்தா ஒரு அழகான பங்களா தெரியும். அதுதான் என் அப்பா எனக்காக கட்டிவிட்டிருக்கிற காட்டேஜ். தைரியமா வரலாம்.” – கார்டை கொடுத்தான்.
வாங்கிக் கொண்டாள்.
“ஜஸ்ட் கால் மணிநேர பயணம்தான். நான் இப்பவே கிளம்பி எல்லாத்தையும் தூசி தட்டி வைக்கிறேன். நீ வந்ததும் வேலையை முடிச்சு புறப்பட்டுடலாம்.” – வசந்த் எழுந்தான்.
இந்துவும் அறையை விட்டு வெளியே வந்தாள். தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு அலுவலகத்தைவிட்டு வெளி வந்தாள்.
பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள்.
‘எந்த ஆணை நம்ப முடியும்?’ மனசுக்குள் கொஞ்சம் இடறல் எழுந்தது.
எதற்கும் இருக்கட்டுமென்று பிளாட்பார இரும்பு கடையொன்றில் தற்காப்பிற்கில்லையென்றாலும் வெங்காயம் நறுக்கவாவது உதவும் என்று நல்ல கத்தியாகப் பார்த்து வாங்கினாள். பத்திரமாக மடித்து பையில் வைத்துக்கொண்டு பேருந்து ஏறினாள்.
அத்தியாயம் – 10
‘மணி ஏழாச்சு. வேலைக்குப் போன மருமகளை ஏன் இன்னும் காணோம்!‘ – தணிகாசலமும் காமாட்சியும் கலங்கிக் கொண்டிருக்கும்போதுதான் வாசல் கதவை யாரோ படபடவென்று தட்டினார்கள்.
“அழைப்பு மணி இருக்கும்போது எவன் நாகரீகம் இல்லாம இப்படி கதவை இடிக்கிறது?” – தணிகாசலம் கோபாவேசத்தோடு எழுந்தார். மனைவி பின்னால் வர வந்து கதவைத் திறந்தார்.
உள்ளத்தில் பதற்றம். உடம்பில் வியர்வை. இந்து பிசாசு அடித்தவள் போல் நின்றாள்.
“என்னம்மா?” – தணிகாசலம் பதறினார்.
“ஒன்னுமில்லை மாமா.” – இந்து அவசரஅவசரமாக உள்ளே நுழைந்தாள்.
“என்னங்க இது?” – காமாட்சி கணவனை கலக்கமாகப் பார்த்தாள்.
“தெரியலையே!” – கையை விரித்தார்.
இருவரும் இந்துவின் அறைக்குள் நுழைந்தார்கள்.
“ஏன் இப்புடி வியர்வையில நனைஞ்சி வந்திருக்கே?‘”
“பேருந்துல கூட்டம் மாமா”
“ஏன் லேட்டு”
“அ….ஆபீஸ்ல வேலை.”
“உன் முகம் எதையோ கண்டு பயந்த மாதிரி இருக்கு.” இந்துவிற்குள் வயிற்றைக் கலக்கியது.
“ஒன்னும் இல்லே மாமா வழியில ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு ஆள் மேல லாரி ஏறி…” – முடிக்கவில்லை அவள் உடல் ஆடியது.
“தினமும்தான் இப்புடி நடக்குது. பயப்படுற நீ பார்க்காம வந்திருக்கனும்” தணிகாசலம் இரக்கப்பட்டார்.
“மொதல்ல போய் குளி.” காமாட்சி வரம் கொடுத்தவள் போல் சொன்னாள்.
இந்துவிற்கும் குளித்தால்தான் உடல் பதற்றம் தணியும் போலிருந்தது.
“சரி அத்தே!” – ஹேண்ட் பேக்கை கழற்றி வைத்துவிட்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்தாள். கதவை இறுக்கி தாளிட்டுவிட்டு ஷவரைத் திறந்தாள். உடம்பில் சிலீரென்று நீர் பட்டது. மொத்தமாய் நனைய
உடம்பிலுள்ள மொத்த உஷ்ணமும் கொஞ்சம் தணிந்த மாதிரி இருந்தது, துவட்டி.. உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள். காமாட்சி மருமகளுக்குத் தயாராக காபி எடுத்துக் கொண்டு வந்தாள். தணிகாசலம் நாற்காலியில் இருந்தார். அழைப்பு மணி அடித்தது.
போய் திறந்தார்.
ஒரு இன்ஸ்பெக்டர்இ இரண்டு கான்ஸ்டபிள்கள், வேட்டி சட்டை அணிந்த ஒரு கிராமத்தான்.
“அந்த பொண்ணுதான் சார்!” – அவன் அங்கிருந்தபடியே இந்துவை கை காட்டினான்.
இந்து மிரண்டாள்.
வேகமாக உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் இந்துவிடம் வந்து, “நீ கொலையாளிம்மா!” சொல்லி விலங்கை எடுத்தார்.
“சார் நான் கொல்லலை! கொல்லலை!” – இந்து அலறி பின்வாங்கினாள்.
ஊடன் இருந்த மாமியாருக்கும் , மாமனாருக்கும் மயக்கம் வராத குறை.
“என்ன சார் நடந்துது?” – தணிகாசலம் சாமாளித்து இன்ஸ்பெக்டரைக் கேட்டார்.
“இவுங்க ஒருத்தனைக் கொலை செய்துவிட்டு வந்திருக்காங்க.”
“இவளா??!”
“ஆமாம். சாட்சி இவன்.” – கிராமத்தானைக் காட்டினார்.
“இவன் மாடு மேய்ச்சிக்கிட்டிருந்தப்போ இந்த பெண் பேருந்தைவிட்டு இறங்கி நடேசன் காட்டேஜ் பக்கம் நடந்து போயிருக்கு. கொஞ்ச நேரத்துல உடல் தொப்பரையா மொகத்தைத் தொடச்சிக்கிட்டு வெளியே வந்திருக்கு. ஏதோ அசம்பாவிதம்ன்னு நெனைச்சி இவன் அந்த காட்டேஜ்குள்ள போய் பார்த்திருக்கான். உள்ளே ஒரு ஆள் கத்தியால குத்தப்பட்டு ரத்த வெள்ளத்துல கெடந்து செத்திருக்கார். இவன் திரும்பி வந்து பார்க்க இவ ஆட்டோ புடிச்சி ஏறி இருக்கா. இவனும் ஆள் எங்கே போறாள்னு கண்காணிக்கிறதுக்காக தானும் ஒரு ஆட்டோ புடிச்சி தொடர்ந்திருக்கான். இவள் இங்கே நுழைஞ்சிட்டாள். உடனே எங்களுக்குத் தகவல் குடுத்தான். வந்துட்டோம்.” – நிறுத்தினார்.
“நான் கொல்லலை ! கொல்லலை‘” – இந்து மீண்டும் அலறினாள்.
“சரி யார் கொன்னா?”
“எனக்குத் தெரியாது. நான் நுழையும்போது வசந்த் செத்துக்கெடந்தார். பதறி அடிச்சு திரும்பிட்டேன்.”
“படிச்சவள் போல இருக்கே. இந்த கிராமத்தான் தகவல் கொடுத்திருக்கான் நீ ஏன் கொடுக்கலை?”
“பயம், கை கால் நடுக்கத்துல எனக்கு என்ன செய்யனும்னு தோணலை.”
“பொய். இப்போ எல்லா பொம்பளைங்களும் துணிச்சலா இருக்காங்க”
“இவள் பயந்தாங்கொள்ளி சார்.” – தணிகாசலத்திற்கு உடல் ஆடியது.
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க சார். கொலைக்கு உடந்தைன்னு உங்களையும் கைது செய்ய வேண்டிவரும்..” இன்ஸ்பெக்டர் முறைத்தார்.
தணிகாசலம் முகத்தில் பயம் வந்து அப்பியது, இருந்தாலும் இந்துவைவிட அவருக்கு மனமில்லை.
“நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க இன்ஸ்பெக்டர்!” என்றார்.
“தயவுசெய்து விசாரிக்கும்போது குறுக்கே வராதீங்க சார்” என்று அவரை அடக்கிய இன்ஸ்பெக்டா; “கையில என்னம்மா காயம்?” அவள் விரலைப் பார்த்துக் கேட்டார்.
“அலுவலகத்துல பென்சில் சீவும்போது பிளேடு வெட்டிடுச்சு”
“இது நீ உபயோகப்படுத்தின கத்தி காயம்ன்னு நான் சொல்றேன்”
“இல்லே சார். இது பிளேடு காயம்தான்.”
“சரி இது உன் கத்திதானே?” தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டினார். ‘நம் கத்தி இவர் கையில் எப்படி வந்தது?’ – இந்து மிரட்சியாக பார்த்தாள்.
“நான் சொல்றேன். நீ காட்டேஜைவிட்டு வெளியே வந்ததும் இதை வீசி எறிஞ்சே. இதைப் பார்த்ததும்தான் இவள் ஏன் கத்தியை வீசி எறியறாள்ன்னு இவனுக்குச் சந்தேகம் வந்துது. ஓடிப்போய் பங்களா உள்ளே பார்த்திருக்கான். ஆள் கத்தி குத்துப்பட்டு செத்திருக்கான். ஆள் கொஞ்சம் படிச்சிருந்தாலும் புத்திசாலி நீ தப்பிச்சுடக்கூடாதுன்னு பின் தொடர்ந்திருக்கான். அப்புறம் அவன் எங்களுக்குத் தகவல் குடுக்க நாங்க போய் கொலையைப் பார்த்துட்டு கத்தியையும் கைப்பற்றி உன்னைப் புடிச்சோம்”
சம்பவங்கள் அப்படியே கோர்வையாக இருக்க இந்து திரு திருவென்று விழித்தாள்.
“எனக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தமில்லே சார்!” அழுதாள்.
“சம்பந்தமில்லாத நீ ஏன் அங்கே போனே?”
“வ….வ..வந்து வந்து…”
“உண்மையைச் சொல்லு?”
“அந்த ஆளு அலுவலக வேலையாய் அங்கே அழைச்சார்”
“அலுவலகம் எங்கே இருக்கு?”
“அசோக் நகர்ல”
“அசோக் நகர்ல அலுவலகம் இருக்க அங்கே என்ன வேலை?”
சாட்சி, சம்வங்கள் சரியாய் இருக்கே. உண்மை எடுபடுமா?! – இந்துவிற்குள் தடுமாற்றம்.
“ஆக நீ கொலை செய்ய போயிருக்கே. இல்லே விபச்சாரத்துக்குப் போயிருக்கே.”
இதைக் கேட்ட அடுத்த வினாடி…
“ஐயோ!” – இந்து தலையைப் பிடித்துக்கொண்டு அலறினாள்.
“அங்கே உங்களுக்குள் தகராறு கொலை செய்துவிட்டு வந்திருக்கே”
“சார் எங்க மருமக….” காமாட்சி ஏதோ சொல்ல வாயெடுத்து அழுதாள்.
“யாரும் எதுவும் சொல்ல வேணாம். எல்லாத்தையும் கோர்ட்ல வந்து சொல்லிக்கோங்க” – இன்ஸ்பெக்டர் இந்து கைகளில் விலங்கு பூட்டி அழைத்துச் சென்றார்.
தணிகாசலம், காமாட்சி சில விநாடிகள் சிலையானார்கள். அடுத்தக் கட்ட நடிவடிக்கையாய்… இந்து அண்ணன் அண்ணிக்கு சேதி சொன்னார்கள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
