சித்தியின் புத்தி!




விரைவில் தை நோம்பி வரப்போவதை நினைத்து குஷியில் இருந்தாள் மாயா. தை நோம்பி வந்தால் புது துணி போடலாம். திருவிழாவிற்கு போகலாம். லட்டு, முறுக்கு, அதிரசம், பொங்கல், அபிஷேகம் திண்ணலாம். ‘அன்னாடும் தை நோம்பியாக இருக்கக்கூடாதா?’ என நினைத்து அவள் பிஞ்சு மனம் ஏங்கியது.

“ஏண்டி மாயா…. அங்கே என்னடி புழுதிக்காட்டுக்குள்ளே புள்ளார் புடிச்சுட்டு, துணியெல்லாம் அழுக்கு பண்ணீட்டு இருக்கறே…? ரெண்டு நாளா சாணி அள்ளாம மாடுக படுக்க முடியாம நின்னுட்டு இருக்கறத பாக்கலியா? இப்படியே நாலு நாளைக்கு நின்னுச்சுன்னா கால் கொழம்புல புண்ணு வந்து படுத்த படுக்கையாயிருமே… அன்னாடும் பத்துப்படி கறக்கற மாடு. அப்புறம் நீ குடிக்கிற பழைய சோத்துல மோருங்கூட இருக்காது பாத்துக்கோ…. இப்புடியே திரிஞ்சீன்னு வெச்சுக்கோ, வருசமொருக்கா தை நோம்பிக்கு எடுத்துக்குடுக்கிற துணியும் எடுத்துக்குடுக்க மாட்டேன். அடுத்த தை நோம்பி வரைக்கும் இருக்கற கந்தத்துணிய, கிழிஞ்சத ஊசீல நூல் கோத்து தெச்சுத்தா போடோணும்….” சித்தி ராமி சொல்வதைக்கேட்டவுடன் மூங்கில் கூடை எடுத்து மாடுகள் போட்ட சாணியை அள்ளினாள் பத்து வயதே நிரம்பிய மாயா.
மாயா பிறந்து தாயின் மார்பில் பால் குடிக்கவில்லை. தாய் இறந்து விட்டதாக பிரசவம் பார்த்த மருத்துவச்சி சொல்ல தாயின் தாய் வளர்ப்பில் மாட்டுப்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என குடித்து வளர்ந்தாள். தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள, பத்து வயதாகும் நிலையில் தாயின் தாய் இறந்து விட, சித்தியிடம் வளரும் நிலைக்கு ஆளானாள்.
“அஞ்சாவது படிச்சதே போதும். இவளப்போயி பெரிய படிப்பெல்லாம் படிக்க வெச்சா நம்ம சொன்னபடி கேக்க மாட்டா. ஆட்ட, மாட்ட அவுத்துட்டு மேய்க்கட்டும். எனக்குப்பொறந்த கொழந்தைக்கு தொட்டலாட்டட்டும். வயசுக்கு வந்தா என்ற பொறந்தவன் ஒருத்தன் இருக்கவே இருக்கறான் மங்குனி…. அவந்தலைல புடிச்சு கட்டி வெச்சுட்டா எனக்கு நிம்மதி. அவனுக்கும் கண்ணாலமானமாதரையுமாச்சு, எனக்கும் வேலைக்கு ஆள் கெடைச்சாப்பலையும் ஆச்சு. எப்பவுமே நம்ம காலடிலியே கெடக்கும் பாரு இந்தக் கழுத…” தன் தாயிடம் பெருமையாகச்சொல்லிக்கொண்டாள் ராமி.
“என்னிருந்தாலும் நீ வெவரசாலிதான். மலையளவு பாடு பட்டாலும் கடுகளவு புத்தியும் இருக்கோணும். தம்பிக்காரனுக்கு கொழந்த பொறக்காது. மூத்த குடிக்கு பொறந்தவள அவனுக்கு கட்டிப்போட்டா அப்பஞ்சொத்தும் வந்துரும், புருசஞ்சொத்தும் சேந்துரும். உன்ற வகுத்துல பொறந்த மவன் ராசனுக்கு பூராச்சொத்தும் கெடைச்சுப்போகும். அப்பறமென்ன அம்பதேக்கராவுக்கு ஒரே பொண்ணப்பெத்துவளத்தர அருக்காணி பொண்ணைவே கட்டிப்போட்டா நீ நூரேக்கராக்காரி ஆயிரலாமில்ல… ஏங்கண்ணு நாஞ்சொல்லறது எப்புடி….?” தாய் ரங்கம்மா சொன்னதை சிரித்து ‘ஆமாம்’ எனும் படி ராமி தலையாட்டினாள்.
“பதனெட்டு வயசு முடிஞ்சு கண்ணாலம் பண்ணோனுமுன்னு கவர்மெண்ட் சொல்லுது. ஆனா பதெனெட்டாயிட்டா, பொம்பளக்கழுதீகளுக்கு ஒலக அறிவு வந்து தொலைஞ்சுட்டா, நாம சொல்லற மாப்ளைக்கு கழுத்த நீட்ட மாட்டாளுக. அந்தக்காலத்துல பதிமூனுல வயசுக்கு வந்துட்டா பதனைஞ்சுக்குள்ள கண்ணாலத்தப்பண்ணிப்போடுவாங்க. ஒடனே பதனெட்டுக்குள்ள கொழந்த பொறந்துட்டா தோட்டங்காட்டீமு, கட்ன புருசனீமு சுத்தீட்டு கெடப்பாளுக. ஒன்னுக்கு நாலப்பெத்து உட்டுப்போட்டா வேலைக்கு வெளில ஆளுக கூப்படற வேலை மிச்சம். மாயாளுக்கும் வயசுக்கு வந்ததும் புடிச்சு என்ற தம்பிக்காரனுக்கு கண்ணாலத்த மூச்சுப்போடுலாம்னு தான் இருக்கறேன்” தனது யோசனையை அருகில் பாயில் படுத்திருக்கும் கணவனை முத்தமிட்டுச்சொல்ல, கணவனால் மகுடிக்கு மயங்கிய பாம்பைப்போல எதுவும் பேச இயலாமல் போக, ” இது வரைக்கும் நீ என்ன சொல்லி நாங்கேக்காமப்போயிருக்கறேன். நீ சொல்லற படியே பண்ணிப்போடலாமெடு ராமி….” என கூறிய கணவனுக்கு போனஸாக இன்னொரு முத்தமும் கொடுத்து தனது கட்டுப்பாட்டுக்கோட்டை மீறாமல் பார்த்துக்கொண்டாள் சூழ்ச்சியின் மறு வடிவமான ராமி. இதை அடுத்த பாயில் தலையுடன் போர்வையைப்போர்த்தி தூங்குவது போல் பாவனை செய்து தூங்காமலிருந்த மாயா தனது காதைக்கூர்மையாக்கிக்கேட்டதில் அதிர்ச்சியடைந்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
பதிமூன்று வயதில் ஆடு மேய்க்கும் காட்டிற்குள் பருவத்திற்கு வந்ததை கல்யாண பயத்தில் சித்தியிடம் சொல்லாமலேயே மறைத்து விட்டாள் மாயா. இரண்டு வருடம் பின்பு பதினைந்து வயதாகியும் வயதுக்கு வரவில்லையென மருத்துவச்சியை அழைத்து பரிசோதிக்கச்சொன்னாள் சித்தி. பரிசோதித்து முடித்த மருத்துவச்சி “இந்தப்பொண்ணோட ஒடம்பு அமைப்புக்கு பதனெட்டுல தான் வயசுக்கு வரும். கண்ணாலமும் அதுக்கு முன்ன பண்ணினா உசுருக்கு ஆபத்து ” எனக்கூற தலை மேல் கை வைத்து அமர்ந்து விட்டாள் சித்தி ராமி. மாயா தான் தினமும் வணங்கும் காட்டு கருப்பராயனுக்கு மானசீகமாக நன்றி சொன்னாள். தான் சொல்லிக்கொடுத்ததை அப்படியே சொன்ன மருத்துவச்சிக்கும் கைகூப்பி நேரிலேயே ‘நன்றி’ என்றாள்.
மாயாவின் ஆடைகளை சித்தி ராமி எப்போதும் துவைத்ததில்லை. துவைத்திருந்தால் மாதம் ஒரு முறை தீட்டால் வரும் ஆடையில் படியும் ரத்தக்கறையை வைத்து கண்டு பிடித்திருப்பாள்.
பதினெட்டு வயது முடிந்த அடுத்த பத்து நாட்களில் வந்த மாதத்தீட்டை வயதுக்கு வந்து விட்டதாக சித்தியிடம் மாயா சொன்ன போது ராமிக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. தாத்தா சொத்து பேத்திக்கு உயில் எழுதி வைத்ததை அவளது கையெழுத்தில்லாமல் மாற்ற முடியாது. இரண்டு தோட்டத்தில் ஒரு தோட்டம் அவளது பெயரில் உள்ளதை ஒரு நாள் பெட்டியில் வைத்திருந்த பத்திரத்தை படித்துப்பார்த்து மாயா தெரிந்து கொண்டதிலிருந்து கவலையிலிருந்தாள் சித்தி ராமி.
“வயசுக்கு வந்த பொண்ண கண்ணாலம் பண்ணாம வெச்சிருந்தா…. நாலு பேரு என்னத்தா பேசுவாங்க. பெத்த தாயி இருந்தா உட்டுருப்பாளா….? சித்திக்காரிங்கறதுனால தான கண்டுக்காம இருக்கறான்னு. அதனால உனக்கு வர்ற பங்குனில என் பொறந்தவன் மங்குனிக்கு கண்ணாலத்தப்பண்ணிப்போடலாம்னு உங்கப்பனும் நானும் முடிவு பண்ணிப்போட்டோம்….”
“ஆரு? அந்தக்கேனக்கிறுக்கனுக்கா….? வேற ஆளப்பாரு. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காட்டீம்பரவால்ல. அவன மட்டும் கட்டிக்க மாட்டேன்…”
“என்னடி…. புதுசா வாயி நீளுது…. எதுத்துப்பேசறே….?”
“குப்பக்குழில கொண்டு போயி தள்ளப்பாக்கற உன்ற பேச்ச ஒன்னி மேல் நங்கேக்கறதா இல்ல. ராணி மாதர வாழ நெனைக்கற என்னைய சாணி அள்ளப்போட்டது பத்தாதுன்னு சொத்த மொத்தமா முழுங்கோணுமுன்னு கோணிச்சாக்கத்சுத்தீட்டு திரியற பைத்தியகாரத்தம்பிக்கு கட்டி வெச்சிரலாம்னு பாக்கிற நீயெல்லாம் ஒரு சித்தியா….?”
“என்னடி எதுத்துப்பேசறே…. உங்கொப்பங்காரங்குட்ட சொல்லி சாட்டவார்ல வெளுக்கச்சொல்லறம்பாரு”
“என்ற அப்பன் சாட்டவார்ல உன்னைய வெளுக்கறாரா, என்னைய வெளுக்கறாரார்னு கொஞ்ச நேரம் போனதுக்கப்பறம்பாரு….” என மாயா சொல்லி முடிக்கும் போதே வந்து நின்ற தந்தையிடம் “ஓ…”வென அழுதாள் மாயா.
“நீ எதுக்கு சாமி அழுகறே….? ராசாவாட்டா ஒரு மாப்பளைய பார்த்துட்டு வந்திருக்கறேன். நாளைக்கு காத்தாலைக்கு உன்னையப்பொண்ணுப்பாக்க வாராங்க. நேரத்துல எந்திரிச்சு போண்டா கீண்டா, லட்டு பலகாரம்னு சுட்டு வையி கண்ணு” என மாயாவின் தந்தையும் தனது கணவனுமான ராயன் தன் மகளிடம் கூறியதைக்கேட்டு கோபம் தலைக்கேற கத்திப்பேசினாள் ராமி.
“ஏனுங்க உங்களுக்கு பைத்தியம் கியித்தியம் புடிச்சுப்போச்சா? என்ற தம்பிக்காரனுக்குன்னே வளந்த பொண்ணப்போயி அடுத்தவனுக்கு எப்படிங்க கட்டி வெக்க முடியும்?”
“ஏங்கட்டி வெக்க முடியாது? இப்ப என்ன நிச்சியமா பண்ணிப்போட்டோம்…?”
“இத பாருங்க என்ற பேச்ச மீறி நீங்களும் உங்க பொண்ணு சிறுக்கியும் எப்படி கண்ணாலம் பண்ணப்போறீங்கன்னு பாத்துப்போடறேன்” என சபதம் போட்டவளாய் தலைக்குடுமியை அவிழ்த்து தலை விரி கோலமாக அங்கிருந்து சென்றாள்.
இரவில் காட்டிற்குள் சுற்றிக்கொண்டிருந்த தனது தம்பியை அழைத்து வந்து மாயா தூங்கும் பாயில், அவளுக்குப்பக்கத்தில் படுக்கச்சொல்லி விட்டு கணவனும் வெளியே எழுந்து சென்று விட்டதால் கதைவைச்சாத்தி வெளிப்பக்கமாக பூட்டி விட்டாள் ராமி. மங்குனியும் அதே போல அக்கா சொல்லை மீறாமல் பாயில் சென்று படுத்துக்கொண்டான்.
காலையில் மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும் கை கூப்பி வரவேற்று வணங்கி, வீட்டுத்திண்ணையில் பாய் விரித்து அமர வைத்து விட்டு மகள் மாயாவை அழைத்தார் ராயன்.
“உங்களுக்கென்ன பைத்தியமா? ஒரே பாயில ஊட்டுக்கதவச்சாத்தி என்ற தம்பி மங்குனி கூட புருசம் பொண்டாட்டியாட்டா படுத்துட்டு இருக்கறவ எப்புடி காப்பித்தண்ணி கொண்டு வந்து மாப்பிளைக்கு கொடுப்பா…? ” எனக்கூறிய மனைவியின் பேச்சைக்கேட்டு அதிர்ந்த ராயன், வாழ்வில் முதலாக மனைவி கன்னத்தில் மாப்பிள்ளை வீட்டினர் முன் பளார் என ஓங்கி அறைந்தார்.
இதை சிறிதும் எதிர் பாராத ராமியும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அப்போது மாயா வந்தவர்களுக்கு லட்டு, போண்டா, காபி என கொடுத்தவள் மாப்பிள்ளையைப்பார்த்து கண்ணடித்தபடி கொலுசின் சலங்கை சத்தம் ஒலிக்க, கால்களை அழுத்தி வைத்து வீட்டிற்குள் சென்றாள். மாப்பிள்ளையின் முகம் நூறு சூரியன்கள் ஒன்று சேர்ந்தது போல் பிரகாசித்தது.
குழப்பமடைந்த ராமி ஓடிச்சென்று அறைக்கதவின் பூட்டைத்திறந்து உள்ளே சென்று பார்த்த போது பாயில் மாயா முன்பு பார்த்தது போலவே போர்த்தி படுத்திருப்பது போலிருந்தது. அருகில் மங்குனி குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தான்.
போர்வையை விலக்கிப்பார்த்த போது சோளத்தட்டு ஒரு கத்தையை வைத்து அவளது போர்வையை அவள் படுத்திருப்பது போல அதன் மீது போர்த்தி விட்டு வெளியே வந்து தனது சூழ்ச்சியிலிருந்து தப்பித்திருக்கிறாள் மாயா, என்பதைப்புரிந்த போது தனது திட்டம் மொத்தமாக உடைந்து சுக்குநூறானதாக நினைத்து வேதனை மனதில் மேலோங்க, மயக்கமடைந்து கீழே சரிந்தாள் மாயாவின் சித்தி ராமி.