சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 178 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றிற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. நாள்தோறும் ஆண் சிங்கம் ஏதாவது மிருகங்களைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுக்கும். பெண் சிங்கம் அதைக் குட்டிகளுக்கு ஊட்டி அவற்றை அன்புடன் வளர்க்கும். 

இப்படி நடந்து வரும் நாளில் ஒரு நாள், உயிருள்ள ஒரு நரிக்குட்டியைக் கௌவிக் கொண்டு வந்து ‘இதை உன் குட்டிகளுக்கு உணவாகக் கொடு டு என்று சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்றது ஆண் சிங்கம். அந்த நரிக்குட்டி அழகாக இருந்ததால் பெண் சிங்கத்திற்கு அதைக் கொல்ல மனம் வர வில்லை. அதைத் தன குட்டிகளோடு சேர்த்து அதற்கும் நல்ல உணவு வகைகள் கொடுத்து வளர்த்து வந்தது. 

சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டியும் வளர்ந்து வந்தது. தாமாக இரை தேடக் கூடிய அளவு வளர்ந்ததும், அவை ஒரு நாள் காட்டுக்குள் புகுந்தன. 

அப்போது அவை சென்ற வழியாக ஓர் யானை வந்தது. அதைக் கண்டவுடன் நரிக்குட்டி பயந்து ஓடியது. உடனே சிங்கக் குட்டிகள் இரண்டும் அதை நோக்கி, “இப்படிப் பயந்து ஓடுவது சரி தானா?” என்று ஏசிக் காட்டின. 

“நான் ஒன்றும் பயந்து ஓடவில்லை. நான் எதற்குப் பயந்து ஓட வேண்டும்?” என்றெல்லாம் சொல்லி அந்தச் சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டி சச்சரவிட்டது. 

இருப்பிடத்திற்குத் திரும்பிவரும் வரையும், வந்த பின்னும் அவை சச்சரவிட்டுக் கொண்டே இருந்தன. 

இதைக் கவனித்த பெண் சிங்கம், நரிக்குட்டி யைத் தனியே அழைத்து, 

“நீ உன்னை ஒரு சிங்கம் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாய். உண்மை யதுவல்ல. நீ ஒரு நரிக்குட்டி. அறிவறியாத என் குட்டிகளோடு சேர்த்து நான் உன்னை வளர்த்தேன். அவைகளும் உன்னை ஒரு வகையான சிங்கம் என்றே எண்ணிக் கொண்டுள்ளன. உன் பிறப்புத் தெரிந்தால் அவை சீறும் ஆகையால் அவை தெரிந்து கொள்வதற்கு முன் ஓடி விடு”என்று கூறியது. உடனே அங்கிருந்து அந்த நரிக்குட்டி ஓடி விட்டது. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 4 – பெற்றதை இழக்கச் செய்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *