சபதம் – ஒரு பக்க கதை





அந்த டாஸ்மாக் பாரில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த பையனை பாதி போதையில் இருந்த சக்திவேல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தார்.
சந்தேகமே இல்லை இது அவருக்குப் பழக்கமான கணேசனின் மகன்தான்.
“டேய் சுகுமார்’
“என்னையா கூப்பிட்டீங்க’ சுகுமார் கேட்டான்.
“நீ சக்திவேலோட பையன்தானே?’
“ஆமா சார்’
“உனக்கு ஏண்டா இந்தப் பொழப்பு, நல்லா படிச்சு டிகிரி வாங்கின நீ எதுக்கு பாருல வேலை பார்க்குற.. வேற வேலைக்குப் போகலாமே?’ கேட்டவருக்கு நிதானமாக பதில் கூறினான் சுகுமார்.
“சார், நான் இங்கு வேலை பார்க்கலை, ஒரு அரசியல்வாதி கையில காலுல விழுந்து இந்த பாரை லீசுக்கு எடுத்து நடத்துறேன். இந்த பாருலதான்
குடிச்சு குடிச்சு எங்க சொத்து முழுவதையும் கரைச்சார் எங்க அப்பா. எங்க அப்பா எங்க விட்டாரோ அங்கிருந்தே இழந்ததைப் புடிக்கணுங்கற சபதத்துலதான் இந்த பாரை லீசுக்கு எடுத்து நடத்துறேன்’ பதிலைக் கேட்ட சக்திவேல் மனதில் நினைத்தார்.
“சேற்றில் முளைத்த செந்தாமரை’ என்று.
– சகிதா முருகன் (டிசம்பர் 2012)