சந்நியாசி சம்சாரி ஆனான்




ஒரு சிற்றூரில் சந்நியாசி ஒருவன் இருந்தான். அவன் நாள்தோறும் வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்டு, இரவில் மரத்தடியில் தூங்குவான்.
ஊரை ஒட்டியுள்ள பறம்போக்கு நிலத்தில் சிறுகுடிசை போட நினைத்தான். அதற்காக பலரிடம் யாசகம் வாங்கி, ஒரு குடிசையைக் கட்டினான்.
பக்கத்தில் இருந்த காலி இடத்தில், கீரை முதலிய காய்கறிகளைப் பயிர் செய்தான், அதை விற்று, கிடைத்த பணத்தில் தானே சமைத்து உண்ண தொடங்கினான்.
குடிசையில் எலித்தொல்லை உண்டாயிற்று. அவனுடைய வேட்டி துண்டுகளை எலிகள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.
அதற்காக, பூனை ஒன்று வாங்கி வளர்க்கலானான். பூனைக்குப் பால் வாங்கி வருவதற்காக ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்தான்.
காய்கறி விற்பனையால் கிடைத்த பணம், சிறுகச் சிறுக சேர்ந்து இருந்ததால், ஒரு பசுவை வாங்கிக் கட்டினான்.
பூனைக்குப் பால் கிடைத்தது, தானும் தினமும் பால் குடித்தான். பால் கறக்கவும், பசுவைக் கவனித்துக் கொள்ளவும் சமைக்கவும் பழைய வேலைக்காரியை முழுநேரமும் வேலைபார்க்கும்படி ஏற்பாடு செய்து கொண்டான்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த சந்நியாசி, வேலைக்காரியையே தன் மனைவியாக வைத்துக் கொண்டான்.
‘சந்நியாசி கோவணம் காத்த கதை’ என்று மக்கள் கூறுவார்கள்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்