சந்திரவர்ணன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 144 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதற்பகுதி: பூர்வ கதை | இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்

1-வது வினோரஞ்சிதப் பதுமை சொல்லிய விக்கிரமாதித்தன் பூர்வீகக் கதைகள்

நவரத்தினச் சிங்காதனத்தின் முதற்படிக்குக் காவலாகிய வினோத ரஞ்சிதப் பதுமையானது போஜ மஹாராஜனையும், நீதிவாக்கிய மந்திரியையும் நோக்கி. கேளுமையா பூமான்களே! என்று விக்கிரமாதித்தனின் பூர்வீகக் பின்வருமாறு கதைகளைப் சொல்லத் தொடங்கியது.

கதை – 1 | கதை – 2

1. சந்திரவர்ணன் கதை

நந்தியாபுரம் என்ற நகரத்தில் சந்திரவர்ணன் என்னும் ஓர் அந்தணன் இருந்து வந்தான். அவன் நான்கு வேதம். ஆறு சாஸ்திரம், பதினெண் புராணம், இருபத்தெட்டு ஆகமம். அறுபத்து நான்கு கலைகள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தான். இருந்தும் தான் கற்று அறிந்தவைகளுக்கும் மேலானவற்றை அவன் அறிய விருப்பம் கொண்டவனாக நல்ல குருவைத் தேடிக் கிளம்பினான்.

அவ்விதம் தேசாந்திரியாகச் சஞ்சரித்து வரும் நாளில் அவன் ஒருநாள் தாகவிடாய் பொறுக்கமாட்டாமல் ஒரு மலையடிவாரத்தி லிருந்து தடாகத்தில் இறங்கித் தண்ணீர்ப் பருகித் தாகம் தீர்த்துக் கொண்டான். சிறிது நேரம் அவன் ஆயாசம் தீர அதன் கரையிலிருந்த அரசமரத்தடியில் படுத்தான்.

அம்மரத்திலே நெடுநாளாய் பிரம்ம ராக்ஷஸன் என்னும் ரிஷி தவம் செய்து கொண்டிருந்தான். அன்றையத் தினம் பிரம்ம ராக்ஷஸன் தன் அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டு கண்விழித்துப் பார்த்தபோது, மரத்தடியில் அந்தணன் ஒருவன் படுத்திருப்பதைக் கண்டான். உடனே குளத்திலிறங்கி, ஸ்நானம் செய்து ஒரு பிராமணனைப் போன்று உருக்கொண்டு அவன் எதிரில் வந்தான்.

“ஸ்வாமி, தாங்கள் யார்? எக்காரணம் கொண்டு திருடர்களும் கொடிய மிருகங்களும் நிறைந்த இவ்வனத்தில் தனியாக வந்துள்ளீர்கள்?” என்று கேட்டான் பிரம்ம ராக்ஷஸன்.

அதைக்கேட்ட சந்திரவர்ணன் ”ஐயா! நான் நந்தியாபுரத்தைச் சேர்ந்தவன்! நான் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், நான் கற்றுக் கொள்ளாத விஷயங்கள் கணக்கின்றி இருக்கின்றன. ஆகவே தகுந்த குருவை நாடி என் அறிவை மேலும் விருத்தி செய்து கொள்ளப் புறப்பட்டு வந்துள்ளேன். தாங்கள் அறிஞர் போல் தோன்றுகிறது. என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்று வேண்டினான்.

”எனக்கு மெத்த சந்தோஷமே; ஆனால் நான் சொல்லுகிற படி நீ இருந்தாயானால் உனக்கு நான் அறிந்துள்ள வித்தை சித்தியாகும்” என்றான் பிரம்ம ராக்ஷஸன்.

அதற்கு சந்திரவர்ணன் இணங்கவே, “அந்தண சிரேஷ்டா! ஆறுமாதத்துக்கு நீ அன்ன ஆகாரமின்றி, நித்திரையும் ஒழித்து விரதம் இருக்க வேண்டும். நான் இம்மரத்தின் மேல் இருந்து கொண்டு நான் கற்ற வித்தை அனைத்தையும் அரச இலைகளில் எழுதிக் கீழே போடுகிறேன். நீ அவற்றைச் சேகரித்து தினம் அவற்றிலுள்ளபடி அப்பியாசம் செய்து வா” என்றான் பிரம்ம ராக்ஷஸரிஷி. அப்பால், பசியும், நித்திரையும் அவனை வாட்டாமலி ருக்கும்படி அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தான் பிரம்ம ராக்ஷஸரிஷி.

இரவும் பகலும் ஓயாமல் குரு சொன்ன வார்த்தை தப்பாமல் சந்திரவர்ணன் சகல வித்தைகளையும் அறிந்து கொண்டான். ஆறு மாதம் தவம் முடிந்ததும் தேவலோகத்திலிருந்து புட்பக விமானம் வர, பிரம்ம ராக்ஷஸன் சாபம் நீங்கிப் புறப்பட்டான். அப்போது சந்திரவர்ணனை அருகில் அழைத்து “என் வார்த்தை தப்பாமல் நடந்து நீ வித்தையைக் கற்றுக் கொண்டாய். இனி நீ உன் நகரம் திரும்பி நல்ல பெண்ணாகப் பார்த்து மணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடு!” என்று உபதேசித்தான்.

சந்திரவர்ணன் அங்கிருந்து புறப்பட்டுத் தன் நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது கன்னியாபுரி என்ற பட்டணம் வந்தான். அங்கே அலங்காரவல்லி என்னும் தாசி வீட்டின் திண்ணையில் சிறிது இளைப்பாறுவதற்காக அமர்ந்தான். ஆறுமாதமாக அன்ன ஆகாரமில்லாதிருந்தபடியால் அவன் தன்னைமறந்து அங்கே நித்திரையிலாழ்ந்து விட்டான்.

இரவு பத்து நாழிகை ஆன சமயம், கோவிலேலே தன் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பிய தாசி, தன் வீட்டுத் திண்ணையிலே பிரேதம் போன்று – மூச்சு மட்டும் ஓடிக்கொண் டிருக்க அந்தணன் படுத்துக் கிடப்பதைக் கண்டு பதறிப் போய் அக்கம் பக்கத்திலிருந்த வைத்தியர்களைக் கூப்பிட்டாள். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, “அம்மா. அப்பிராமணன் ஆறுமாதம் ஆகாரமும் நித்திரையுமின்றி இருந்ததால் இப்படிக் கட்டையாகக் கிடக்கிறான். தினமும் மூன்று வேளை ஒருபடி அரிசி வடித்து, அதனுடன் ஒரு படி நெய் கலந்து இவனுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி வந்தீர்களானால் மயிர்க் கால்களின் வழியே அன்னம் உட்சென்று பிழைத்தெழுவான்” என்றனர்.

தாசியும் அவ்விதம் மூன்று நாட்கள் செய்துவர, சந்திரவர்ணன் நித்திரை கலைந்து எழுந்தான். கண் விழித்ததும், தான் தாசி வீட்டிலிருப்பதை உணர்ந்த அவன். வேகமாக எழுந்து வெளியே சென்றான். அப்போது தாசி குறுக்கே வந்து ”ஸ்வாமி உம்மை மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினால் மூன்று நாட்கள் கண்ணை மூடாமல் உம்மைப் பாதுகாத்து வந்தேன். நீங்கள் இப்படி என்னைத் திரஸ்கரித்து என்னை விட்டுப் போவது நியாயமா?” என்று கேட்டாள்.

ஆனால் சந்திரவர்ணன் அதற்கிணங்க மறுக்கவே, அவள் அந்நகரத்து மன்னனிடம் அழைத்துச் சென்று வழக்காடினாள். சபையிலிருந்த புரோகிதர், “அரசே பிராமண குலத்தில் பிறந்த புருஷர்கள் தங்கள் குலத்திலல்லாமல் வேறு குலத்தின் பெண்ணை மணக்க வேண்டுமென்றால், நான்கு வருணத்திலுள்ள பெண்களை ஒரே முகூர்த்தத்தில் மணக்க வேண்டுமென சாஸ்திரம் சொல்லி யிருக்கிறது” என்றார்.

அதைக் கேட்டு அவனும், பிராமணனின் மேதாவிலாசத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தவனாய், ”புரோகிதரே அப்படியானால், என் குமாரத்தி சித்திரரேகையையும் உம்முடைய குமாரத்தி கல்யாணியையும் இதோ நமது சபையில் இருக்கும் வைசியக் குலச் சோமசேகரன் செட்டியாரின் குமாரத்தியான கோமளாங்கியையும் தாசி அலங்காரவல்லியுடன் ஒரே முகூர்த்தத்தில் இப்பிராமண னுக்கு மணம் செய்து வைக்கப்பிரியப்படுகிறேன்” என்று சொன்னான். அதைக் கேட்டு அவர்களும் சம்மதிக்க, நல்ல சுப முகூர்த்தத்தில் சந்திரவர்ணன் நால்வரையும் மணந்தான்.

தன் பத்தினிமார் நால்வருடன் கோலாகலமாக நாட்களைக் கடத்தி வருகையில், சந்திரவர்ணனுக்கு, பிராமண ஸ்திரீயிடம் வல்லவ ரிஷி என்றும், அரசகுமாரி சித்திரரேகையிடம் விக்கிரமாதித்தன் என்றும், வைசியப் பெண் வயிற்றில் பட்டி என்றும் நான்காவதான தாசி அலங்காரவல்லியிடம் பர்த்ருஹரி என்றும் நான்கு குமாரர்கள் பிறந்தார்கள்.

குமாரர்கள் நால்வரும் ஒருங்கே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வரும் நாளையில், புத்திரனின்றி அந்நகரத்து மகாராஜா இறந்துவிடவே மருமகனான சந்திரவர்ணன் அரசனாக முடிசூட்டப் பெற்றான்.

சந்திரவர்ணன் அந்திய காலத்தையடைந்த போது அவனை சுற்றிலும் நான்கு குமாரர்களும் வருத்தத்துடன் நின்றிருந்தனர். அப்போது அவன், தன்னுடைய இளையகுமாரனும் தாசி வயிற்றுப் புத்திரனுமான பர்த்ருஹரியைப் பார்த்து, ”இவனுக்குக் கலி யாணம் நடந்தால் பிள்ளைகள் பிறப்பர்; அப்படிப் பிறந்தால் நமக்கு மோக்ஷமில்லை” என்று நினைத்து அழுதான்.

பர்த்ருஹரி தன் அறிவினால் அதையுணர்ந்து, “தந்தையே நீங்கள் கவலையுறாதீர்கள். நான் கல்யாணம் செய்து கொண்டால் பிள்ளைகள் பெற்று உங்கள் நற்கதிக்குத் தடையாக இருக்க மாட்டேன். என் மனைவிகளுடன் நான் ஒருபோதும் தொடர்பு கொள்வதில்லையெனச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்” என்றான்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த சந்திரவர்ணன் தன் குமாரர்களை அருகில் அழைத்து “மைந்தர்களே! அலங்காரவல்லி தாசியினால்தான் நான் மற்ற மூவரையும் என் மனைவியராகப் பெற்றேன். ஆகவே அவளுக்குப் பிறந்தவனே எனக்குப் பிறகு பட்டம் ஏறவேண்டும்” என்று தெரிவிக்க, அவ்வாறே சகோதரர்களும் தங்களில் இளையவனான பர்த்ருஹரியை அரசனாக முடிசூட்டினர். சந்திரவர்ணனும் கவலையின்றி வாழ்க்கையை நீத்தான்.

அதன் பின்னர் மூத்த குமாரனான வல்லப ரிஷி, தன் இளைய சகோதரனான பர்த்ருஹிரியை ஆசிர்வதித்து, அவனுக்குத் துணையாக விக்கிரமன், பட்டி இருவரையும் இருக்கச் செய்து, தான் தவமியற்ற காட்டுக்குச் சென்றான்.

உலக பந்தத்தை ஒருவன் வெறுத்துத் தள்ளினாலும், அனுபவித்தாலன்றி அது தீராது என்பதையும், ஒவ்வாத குலத்துப் பெண்ணிடம் அபரிமிதமான ஆசை வைத்தாலும், அவளுடைய சந்ததியினரால் மோக்ஷம் கிடைப்பதற்கு மத சம்பிரதாயம் இடம் கொடாது என்பதையும் சந்திரவர்ணன் வாழ்வு எடுத்துக் காட்டியது. அவனுடைய பிள்ளையான பர்த்ருஹரி அரசபீடம் ஏறிய கதையோ, அதிகாரப்பதவி. வகிப்பவன் தன் சந்ததியின் மீது கருத்து செலுத்தக் கூடாது என்பதை நினைவுறுத்தியது. வல்லப ரிஷியின் துறவறமோ, அந்தணப் பெண்ணின் குமாரனுக்கு அரசாள உரிமையிருந்தாலும், தவம் செய்ய வேண்டுமே தவிர நாட்டை அரசாள்வது அதர்மமாகும் என்று குறிப்பிட்டது.

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *