கொலைப்பித்தன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 5, 2025
பார்வையிட்டோர்: 2,494 
 
 

(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

கேசவனைப் பிடிக்கவில்லை

அன்று மாலை நான்கு மணியாயிற்று. சொத்துக்களின் விவரமடங்கிய சில முக்கியமான தஸ்தாவேஜிகளைச் செல்லையா விடம் ஒப்படைத்துவிட்டு, வக்கீல் வேதாசலமும் தம் வீட்டுக்குப் போய்விட்டார். பழனியப்பன் மட்டும் ஏதோ கிலேசம் பிடித் தவன் போல் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். 

“என்ன பழனீ, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே, அவன் அருகில் வந்து அமர்ந்தான் செல்லையா. 

“ஒன்றுமில்லை, நண்பா! நான் ஊருக்குப் போகவேண்டும்!” என்றான் பழனியப்பன். 

“ஊருக்கா ? எந்த ஊருக்கு?” 

“என் சொந்த ஊருக்கு.” 

“ஏன்? அதற்குள் என்ன அவசரம்?” 

“இனிமேல் நான் இங்கு எதற்காக இருக்கவேண்டும்? உனக்கோ. வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் வந்துவிட்டது. காதலில் உனக்கு நாட்டமிருக்குமானால், மஞ்சுளா அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். உனக்கு உயிர்த் தோழனாக இருந்து உதவிபுரியக் கண்ணன் இருக்கிறான். இதர விஷயங்களில் உனக்கு வழிகாட்டுவதற்குத் துப்பறியும் கேசவன் வந்து சேர்ந்துவிட் டார். இனி என்னுடைய தேவை உனக்கு எதற்காக வேண்டும்?” என்றான் பழனியப்பன். 

அவன் இப்படிப் பேசுவது, செல்லையாவுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. ஒருவேளை, எல்லா மனிதருக்கும் இயல் பாகவே எழக்கூடிய ஓர் அற்பப் பொறாமைதான் இதற்குக் காரணமாயிருக்குமோவென்று அவன் சந்தேகித்தான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல், “பழனீ, நீ என்ன சுத்த அசடா யிருக்கிறாய்? மற்றவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலென்ன? எனக்கு நீயல்லவா உண்மையான நண்பன்? உன்னை விட்டு நான் அரைக்ஷணம் பிரிந்திருக்க மாட்டேன். எப்போதும் நீ என் கூடவேதான் இருக்கவேண்டும்!” என்றான் அவன். 

“அது முடியாது, செல்லையா” என்று உறுதிவாய்ந்த தொனியில் உரைத்தான் பழனியப்பன், “நான் குப்பை மேட்டில் பிறந்தவன். இம்மாதிரி உப்பரிகையின் வாசம் எனக்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ளாது. என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்கு இதை விட்டு நான் ஓட வேண்டியவன்தான். அந்தக் காரியத்தை இன்றைக்கே செய்துவிட்டால் எல்லோருக்கும் நல்லது. ஆனால் நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும். அதாவது, கொஞ்சம் பண உதவி. அதுவும் உன்னிடம் நான் அதிகம் எதிர் பார்க்கவில்லை. ஒரு நூறு ரூபாய் கொடு. நான் போய்விடுகிறேன்!” 

“உனக்குப் பணம் தேவையானால், நூறு ரூபாய்தானா? எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். நாளையே தருகிறேன். ஆனால் நான் உன்னைப் போகவிட மாட்டேன்!” 

“நான் போகத்தான் போகிறேன்!” 

“நீ இவ்வளவு பிடிவாதமாகப் பேசுவதற்குக் காரணம்?” 

“அந்தத் துப்பறியும் கேசவனை எனக்குப் பிடிக்க வில்லை!” என்றான் பழனியப்பன். 

“அட பைத்தியமே! இந்த அற்ப விஷயத்துக்காகவா நீ இவ்வளவு அங்கலாய்த்தாய்? நான் என்னவோவென்று பயந்து விட்டேன்! துப்பறியும் கேசவனை உனக்குப் பிடிக்காவிட்டால் அவரை நாளையே போகச் சொல்லிவிடுவோம்!” 

“வேண்டாம். எனக்குப் பிடிக்காவிட்டாலும், அவனை உனக்குப் பிடித்திருக்கிறது. அவனுடைய சேவை உனக்குத் தேவைப்படும். அவனைப் போன்ற ஒரு திறமைசாலியான துப்ப றியும் நிபுணன் இந்த இந்தியாவிலேயே கிடையாது. ஆனால் என்னைப்போன்ற நண்பர்கள் உனக்கு எத்தனையோபேர் கிடைப்பார்கள். மேலும், நான் உன் கூடவே இருப்பதனால் உனக்கு என்ன பிரயோஜனம்? உண்மையில் நான் இங்கு வந்திருக்கவே கூடாது. கோடித்தீவிலேயே தங்கியிருக்க வேண்டும். இனி அதை நினைத்து என்ன பிரயோஜனம்?” என்று விரக்தியோடு புன்ன கைத்தான் பழனியப்பன். கடைசியாக, “செல்லையா, நாளைக் காலையில் துப்பறியும் கேசவன் இங்கு திரும்பிவருவதற்குள், நான் இவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டும்!” என்று தீர்மானமாகப் பழனியப்பன் கூறி முடித்தான். 

“அப்படியானால், துப்பறியும் கேசவனுக்கும் உனக்கும் ஏற்கெனவே ஏதேனும் பகைமையுண்டா, பழனியப்பா?” 

“அதெல்லாம் ஒன்றுமில்லை, செல்லையா! இதற்கு முன்பு அவனை நான் பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம் இந்தியாவுக்குத் திரும்பியதும் அவன் நம்மை நிழல்போல பின் தொடருவானென்று நான் நினைக்கவேயில்லை. இனி நான் இங்கிருப்பது ஒரு நாளும் சாத்தியமல்ல. தயவு செய்து என்னை வற்புறுத்தாதே!” என்றான் பழனி யப்பன் கெஞ்சலான குரலில். 

இவன் ஏன் இப்படிப் பேசுகிறான் என்று செல்லையாவுக்குக் கொஞ்சம்கூடப் புரியவில்லை. பழனியப்பன் தன் தீர்மானத்தை மாற்றிக்கொள்வான் என்றும் அவனுக்குத் தோன்றவில்லை. 

“சரி, பழனி. நீ ஏதோ ஒரு பிடிவாதத்தில் இப்படிப் பேசு கிறாய். ஆனால் எனக்காக நீ உன் திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதற்கும், இன் றிரவு நன்றாக ஆலோசித்துப் பார். நாளைக் காலையில் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்!” என்றான் செல்லையா. 

அத்தியாயம் – 8

மஞ்சுளாவின் யோசனை!

செல்லையாவும் பழனியப்பனும் வெள்ளை மாளிகையில் உரையாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அதன் ஒருபுறமுள்ள பத்மாவதியின் வீட்டில் அவளும் அவள் மகள் மஞ்சுளாவும் ஓர் அந்தரங்கமான சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தனர். 

“அம்மா! செல்லையா என் வலைவீச்சில் வீழ்ந்துவிட்டான் என்றே நிச்சயித்துக்கொள்! பன்னிரண்டு வருஷ காலமாய் அவன் என் போட்டோவைக் கைவிடாது காப்பாற்றி வந்திருக் கிறான்! இன்று என்னை நேரில் கண்டவுடன் அவன் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தான் தெரியுமா? என் அழகைப் பார்த்து அப்படியே பிரமித்துப்போய், பெண்களைப் போல் நாணிக் கோணித் தலை கவிழ்ந்து கொண்டான்! முட்டாள்!” என்று சிரித்தாள் மஞ்சுளா. உண்மையில் அவனும் நன்றாய் அழகாய்த் தானிருக்கிறான், அம்மா,” என்று சொல்லிக் கொண்டே வெற்றிலைக் காவியால் தன்னுடைய உதடு சிவந்திருக்கிறதா வென்று அழகு பார்த்துக் கொண்டாள். அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு திட்டம் உருவாகி வருவதற்கு அறிகுறியாக, அவளது புருவங்கள் சுழித்தன. 

இரண்டு நிமிஷங்கள் மௌனமாகச் சிந்தித்துவிட்டு, அவள் மீண்டும் பேசினாள் : 

“அம்மா! கண்ணனும் கோதண்டமும் என்னென்னவோ யுக்தி செய்கிறார்கள். அந்த யுக்திகளெல்லாம் சித்தியாகி, செல்லை யாவின் சொத்துக்களெல்லாம் நம் கைக்கு வந்தாலும், அதை நாம் முழுசாக அனுபவிக்க முடியாது…” என்று குரலை இழுத்தாள் மஞ்சுளா. 

“ஆமாம். கண்ணனுக்கும் கோதண்டத்துக்கும் நாம் ஒரு பெருந் தொகையைப் பகிர்ந்து கொடுக்கவேண்டி வரும்!” என்றாள் பத்மாவதி. 

“அதில் நமக்கு லாபமென்ன? அதைவிட, அவ்விருவருடைய தயவையும் எதிர்பாராமல், நாமே நம் சொந்த முயற்சியால் அந்தச் சொத்துக்களை அடைந்துவிட்டால்?” 

“எப்படியடி?” 

“செல்லையாவை நான் கலியாணம் செய்துகொள்வதன் மூலம்!” என்று கூறிவிட்டு, தன் அன்னையின் முகபாவத்தைக் கூர்ந்து கவனித்தாள் மஞ்சுளா. 

பத்மாவதியின் முகத்தில் ஒருவித அவநம்பிக்கை நிழலாடியது. “திருமணத்தின் மூலம் சொத்துக்களைப் பெறலாமென்று, நானும் இப்படித்தான் என் வாழ்வில் இரண்டு தடவைகள் முயன்று பார்த்தேன். ஒன்றும் பலிக்கத்தான் இல்லை!” என்றாள் அவள். 

“ஆனால், இந்தத் தடவை என் முயற்சி நிச்சயமாகப் பலிக்கு பென்று நான் திண்ணமாகக் கூறுகிறேன் !” என்று எதிரே யிருந்த மேஜைமீது தன் கையால் ஓங்கியடித்தாள் மஞ்சுளா. இன்னும் நான்கு மாதங்களில், வெள்ளைமாளிகையின் ஐச்வர் யங்கள் அனைத்திற்கும் செல்லையாவே பரிபூரண உரிமையாளனாகி விடுவான். நான் அவனுடைய மனைவியாகிவிட்டால், அதன்பிறகு அவன் தீடீரென்று இறந்து போனால்கூட, சொத்துகளெல்லாம் அவனது மனைவியாகிய எனக்கே கிடைக்கும்! என் அம்மாவின் கடந்தகால சிறைவாழ்க்கை அதன்பிறகு வெளியானால்கூடக் கவலை பில்லை!” என்றாள் அவள். 

தன் மகளின் வார்த்தைகளை ஆமோதிக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லாமல், சிறிது நேரம் மௌனமுற்றிருந்தாள் பத்மாவதி. 

“இதில் யோசிப்பதற்கு என்ன அம்மா இருக்கிறது? நான் கூறுவதுதான் சரியான வழி ! நீ மட்டும் ‘சரி’ யென்று ஒரு வார்த்தை சொல்லம்மா. உரலைச் சுற்றும் நொண்டிக் கோழியைப் போல், அந்தச் செல்லையாவை என் பின்னாலேயே சுற்றித் திரிய வைக்கிறேன்!” என்று மமதையோடு சிரித்தாள் மஞ்சுளா. 

“கோடித் தீவில் செல்லையா இத்தனை வருஷங்களாக ஒரு நாகரிக யுவதியையும் காணாமல் காலத்தைக் கழித்துவிட்டு வந்திருக்கிறான். உன்னுடைய போட்டோவின் மீதும் ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கலாம்! ஆனால் அது நீடித்திருக்க வேண்டுமேயடி!” 

“ஏனம்மா நீடித்திருக்காது? என்னைவிட வேறு எவளம்மா இந்த வட்டாரத்தில் அழகானவள்?” என்று கேட்டாள் மஞ்சுளா. 

“யாராவது உன்னைப்பற்றி எதிராகச் செல்லையாவிடம் வத்தி வைக்கக் கூடும்! அல்லது நீ நினைக்கிறபடி, அவன் அவ்வளவு முட்டாளாகவும் இல்லாமலிருக்கலாம்!” 

“எனக்கெதிராக யாரம்மா செல்லையாவிடம் சொல்ல முடியும்? கிருஷ்ணமூர்த்தியின் பெண்களை அவன் நம்பமாட்டான்!” 

“சரிதான், மஞ்சுளா. ஆனால், நம் கண்ணனும், கோதண்டமும் உன்னைச் சந்தேகித்து விடாதபடி ஜாக்கிரதையாக நடந்து கொள்ளடி! நாம் குறுக்குத்திட்டம் போடுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்! அதில் அவர்களுக்கு லாபமில்லை! மேலும் நீ இப்படி நினைக்கிறாய் என்று தெரிந்தாலே நம் கண்ணனே நமக்கு எதிரியாகிவிடக் கூடும்!” என்றாள் பத்மாவதி. 

“அந்தக் கவலை உனக்கு வேண்டாமம்மா! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று சிரித்தாள் மஞ்சுளா. 

அத்தியாயம் – 9

சதித் திட்டம்

தாயும், மகளும் ஒரு தனித்திட்டம் வகுத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் வேறோரிடத்தில் வேறொரு சதியைத் தயாரித்துக் கொண்டிருந்தனர் கண்ணனும், கோதண்டமும். 

“விஷயங்கள் போய்க் கொண்டிருக்கும் தோரணை ஒன்றும் நன்றாய் இல்லை. இந்தத் துப்பறியும் கேசவன் இதில் சம்பந்தப் பட்டிருப்பது, நம் திட்டங்களுக்கு எல்லாம் பெருத்த இடையூறாய் முடியப்போகிறது!” என்று அவநம்பிக்கையோடு தலையை ஆட்டினான் கோதண்டம். 

“முதலில் இங்கே அந்தத் துப்பறியும் கேசவனை வரவழைத்தவன் ஓவியன் கிருஷ்ணமூர்த்திதான்! இப்போது அவனை அமர்த்திக் கொண்டிருப்பவன் செல்லையா. எப்படியாவது பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த முத்தையா முதலியாரின் கொலையைத் துப்பறிந்து, தன் தந்தை மீதுள்ள அபவாதத்தை நீக்கிக்கொள்ள விரும்புகிறான் செல்லையா! துப்பறியும் கேசவன் தான் சிறந்தவர் என யாரும் சிபாரிசு செய்வார்கள். செல்லையாவிடம் சொல்லி அவனை நீக்க முயன்றால் நம்மீது சந்தேகம் உண்டாகும்! அவனைக் கேசவன் கழுகுக் கண் வைத்துப் பாதுகாப்பான். இன்றிரவு கேசவன் சென்னைக்குப் போயிருக்கிறான். நாளை காலையில் கட்டாயம் அவன் திரும்பி வந்துவிடுவான். அதற்குள் இன்றிரவே நம் காரியத்தை நாம் சாதுரியமாக முடித்துவிட வேண்டும்!” என்றான் கண்ணன். 

“இன்றிரவேயா? அதற்கு நீ வகுத்து வைத்திருக்கும் திட்டத்தையே இன்னும் எனக்குத் தெளிவாக்கவில்லையே?” 

“ஏன் அவசரப்படுகிறாய்? அதை விளக்குவதற்காகத்தானே நான் இப்போது உன் வீடுதேடி வந்திருக்கிறேன்?” என்று ஆரம்பித்தான் கண்ணன். 

“காலஞ்சென்ற செந்தில்நாத முதலியாருக்கு ஓவியர் கிருஷ்ணமூர்த்தியைத் தவிர இவ்வூரில் இன்னொரு நண்பரும் இருக்கிறார். கிருஷ்ணமூர்த்திக்கும் அவர் நண்பர்தான். உனக்கும் அவரை நன்றாய்த் தெரியும்…” என்றான் கண்ணன். 

“யாரவர்? பேரைச் சொல்லு” என்று கேட்டான் கோதண்டம். 

“அவர்தான் உன் எஜமானர் எல்லப்ப பிள்ளை!” 

“ஆ! அப்படியா?” என்று வியப்போடு விழித்தான் கோதண்டராமன் எல்லப்பபிள்ளையின் மளிகைக் கடையில் அவன் சிறிது காலமாகக் குமாஸ்தாவாயிருந்தவன். அன்று எட்டு மணிக்கு அவர் பெண்ணின் திருமணத்தையொட்டி முக்கியமான நண்பர்களுக்குத் தனி விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன் திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்தான் கண்ணன். 

“அந்த நிசி விருந்துக்கு, செல்லையாவைக் கட்டாயம் அழைப்பார் எல்லப்பபிள்ளை. அவர் அதை மறந்துவிட்டாலும், அவருக்கு நினைவூட்டவேண்டியது என் பொறுப்பு. செல்லையா, பழனியப்பன், மஞ்சுளா இம் மூவரையும் அழைத்துக்கொண்டு, இன்றிரவு நான் அந்த விருந்துக்குப் போவேன். எல்லப்பபிள்ளை வீட்டின் நிசி விருந்துக்குப் பல பெரிய மனிதர்களும் வந்திருப்பார்கள். அவர்கள் விருந்தின்போது ரகசியமாக விஸ்கி பிராந்தி முதலான பல மது வகைகளை ஷர்பத் போல் குடிப்பார்கள் என்பது உனக்குத் தெரியும்!” 

“வெள்ளை மாளிகையிலிருந்து செல்லையாவையும், அவன் நண்பன் பழனியப்பனையும் விருந்துக்கு அழைத்து வந்து குடிக்க வைத்து மயங்க வைப்பதா?” 

“ஆமாம்! கலியாண வீட்டின் விருந்தில் அவ்விருவரும் நன்றாகக் குடித்துவிட்டு மயங்கி விழுவார்கள்; அல்லது சுயநினைவு இல்லாமல் கலாட்டா செய்வார்கள். நாம் உற்ற சமயத்தில் கைகொடுத்து உதவும் நண்பர்கள் போல அவ்விருவரையும் கலியாண வீட்டிலிருந்து தூக்கிக்கொண்டு போய் வெள்ளை மாளிகையில் படுக்க வைத்து விட்டு, கலியாண வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவோம். இன்றிரவு வெள்ளை மாளிகையில் செல்லையாவும், பழனியப்பனும் மட்டுந்தான் குடிவெறியில் சுய நினைவில்லாமல் படுத்துக் கிடப்பார்கள். அப்போது ஒரே ஓர் ஆள் மட்டும் உள்ளே நுழைவான்!” 

“யார் அந்த ஆள்?” 

“சித்தவெறியன் கனகப்பன்? பழிவாங்கத் துடிக்கும் அந்தக் கிழட்டு வேலைக்காரனைச் சற்று முன்தான் சந்தித்தேன். சரியாக நடுச்சாமத்தில் முத்தையா முதலியாரின் ஆவி வெள்ளை மாளிகைக்கு வரும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறான்! கொலைகாரன் மகனான செல்லையா, வெள்ளை மாளிகையை மிதிக்கும் இன்றிரவிலே ஏதாவது விபரீதம் நடக்கும் என்றும், பன்னிரண்டு வருஷங் களுக்கு முன் முத்தையா முதலியார் கொலை செய்யப்பட்ட அதே நேரத்திலே, முத்தையா முதலியாரின் ஆவி செல்லையாவைப் பழிவாங்கும் என்றும் எண்ணுகிறான். அதைத் தன் கண்ணால் நேரில் பார்க்க வேண்டுமென வெள்ளை மாளிகைக்கு வர ஆசைப்படுகிறான்!” என்றான் கண்ணன். 

“அந்த நேரத்திலே கனகப்பன் வெள்ளை மாளிகைக்கு வந்து செல்லையாவைக் கொலை செய்து விடுவானோ?” 

“அது சாமானியமல்ல! செல்லையாவைக் கனகப்பன் கொலை செய்வதற்கு முன்னால் கனகப்பனைத்தான் செல்லையா கொலை செய்து விடுவான்!… அது கிடக்கட்டும், கோதண்டம்! இன்றிரவு கலியாணவீட்டு விருந்தில் எவ்வளவு பெரிய கூத்து நடக்கப் போகிறது தெரியுமா?” 

“செல்லையாவும் பழனியப்பனும் குடித்துவிட்டுக் கூத்தடிப்பார்கள் என நினைக்கிறாய்! ஆனால் அவர்கள் குடிப்பார்களா?…” 

“அதுதான் உன் வேலை! நான் அவ்விருவரையும், மஞ்சுளாவையும் அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பே நீ கலியாண வீட்டிற்குப் போய் சில காரியங்களைச் செய்யவேண்டும்!… இன்னும் ஒரு முக்கியமான விஷயம்! நாம் மஞ்சுளாவை உபயோகித்துக் கொள்ளலாமே தவிர, நம்முடைய இந்தச் சதித்திட்டம் அவளுடைய அம்மாவிற்குக் கூட இப்போது தெரிய வேண்டாம்!” என்றான் கண்ணன். 

“நான் என்ன காரியங்களைச் செய்யவேண்டும்?” 

கோதண்டனது இந்தக் கேள்விக்கு, அவன் காதில் ஏதோ குசுகுசுவென்று கண்ணன் ரகசியமாகக் கூறினான். அதைக் கேட்டதும் அவன் முகம் பளிச்சென்று மலர்ச்சியுற்றது. 

“ரொம்பச்சரி. நான் அப்படியே செய்கிறேன். நீ இப்போதே போய்ச் சித்தவெறியன் கனகப்பனைப் பார்த்துவிட்டு வா!” என்றான் கோதண்டம்.

– தொடரும்…

– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *