கொரோனா வெட்டு
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 2,309
“ஏங்க, உங்க மகன் முடி வெட்டணும்னு அடம்பிடிக்கிறான்”
“முடித்திருத்தங்களுக்கு அனுமதியில்லை”
பெருந்தொற்று காலம்.
“அவசரம்னா குளியலறைக்கு வரச் சொல்லு நானே வெட்டிவிடுறேன்”
ஒப்பந்தம் முடிவானதும் குளியலறை முடித்திருத்தகமானது.
“ஏங்க, ஹவுஸ் ஓனர் பேரனும் அடம்பிடிக்கிறானாம்”
“…”
“சரி வரச் சொல்லு”
சிறு வயதில் வேப்பமரத்தடியில் கல்லில் அமர்த்தி உடைந்த கண்ணாடியை கையில் கொடுத்து கிட்ணன் முடிவெட்டுவார். மகாபாரத கிளைக் கதைகள் சொல்வார். வாயில் எச்சில் ஒழுக. தூங்கி தூங்கி விழுவோம். கூலியாக இருபத்தஞ்சு பைசா தருவார் அப்பா.
மலரும் நினைவுகளிலிருந்து சில கதைகளை சொல்லி சிறுவனுக்கு முடித்திருத்தினேன்.
நன்றாக இருப்பதாக கண்ணாடி பார்த்து சொல்லிவிட்டு ஓடிப் போனான் சிறுவன்.
பேரனின் முடிவெட்டை பரிசோதித்துவிட்டு தாத்தா(ஹவுஸ் ஓனர்)மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.
பணமோ அல்லது பாராட்டோ கிடைக்கலாம். முகம் மலர்ந்து பார்த்தேன் அவரை.
“நீ என்ன சாதி? அம்பட்டையனா?”- என்றார்.
செத்துப் போனேன்!
ஏனெனில் நேற்றுவரையில் என்னை ‘நீங்க’ என்றுதான் அழைத்து வந்தார்.