கொட்டியா அவில்லா..! கொட்டியா அவில்லா…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 89 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாலுக்குள் சர்க்கரையைப் போட்டுக் கலக்கிய சியா மளா, யூனிபாரத்துடன் வரும் மாலாவைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். 

“என்னம்மா… காலையிலிருந்து என்னைப் பார்த்தால் எதையாவது. கூறிக்கொண்டேயிருக்கிறாய்…?” மாலா சினந்தாள். 

“நான் சொல்வதைக் கொஞ்சம் கேளு… மாலா, ஊர் இருக்கும் நிலையில் பரீட்சைக்குச் செல்ல வேண்டியது அவசியந்தானா…?” 

“ஊம்…” 

“நான்கு நாட்களாக ஊரடங்கு உத்தரவு… ஒரு கடை கூட கிடையாது. வாங்கி வைத்த பொருட்கள் எத்தனை நாளைக்கு வரும்… வெறும் சாதம் மட்டும் வடித்து, தோட்டத்திலிருந்த வாழைக்காயைப் பறித்து வறுவல் பண்ணியிருக்கிறேன்… இதுதான் இன்று முழுவதும் சாப்பிட வேண்டும்… இந்த நிலையில் உன்னால் பரீட்சையெழுத முடியுமா…?” 

“போம்மா… எப்ப பார்த்தாலும் சாப்பாட்டைப் பற்றிய கவலை தான்… அப்பாவோ…அண்ணனோ இருந்தால் இதற்கெல்லாம் மறுப்புச் சொல்வார்களா? இப்படிப் பயந்தால் வாழ முடியுமா…? ஏதோ பத்து மைலா போகப் போகிறேன்…நடந்து போனால்கூட நாற்பது நிமிட நேர நடைதான்…. தனியாகவா போகிறேன்… எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து போவதாகத்தானே தீர்மானம் பண்ணியிருக்கிறோம்… மத்தியானக் சாப்பாட்டை மட்டும் இதற்குள் போட்டுத் தந்துவிடு…” என ‘டிபன் பாக்ஸை’ எடுத்து சமையல் கட்டு மேசையில் வைத்தாள். 

அதைப் பார்த்ததும் சியாமளாவின் கண்கள் கலங்கின. ஒவ்வொரு நாளும் அந்த டிபன் பாக்சில்தான் வளவனுச்குச் சாப்பாடு கொடுத்து அனுப்புவாள் சியாமளா. 

யாழ்ப்பாணத்து வங்கியொன்றில் வளவன் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். தந்தை இறந்ததிலிருந்து இந்தக் குடும்பத்தின் பொறுப்பு முழுவதையும் அவனே தாங்கி வந்தான். 

அன்றைக்குப் போதாத வேளை. 

‘”ஊர் நிலைமை நன்றாகவேயில்லையப்பா… இன்றைக்கு மட்டும் லீவெடுத்துக் கொள்ளேன்…” என்றாள் தாயார். 

அவனுச்கும், தந்தையைப்போல் பிடிவாதம் ஜாஸ்தி. 

“அதெல்லாம்…ஒன்றும் நடவாதம்மா… நம்ம இனம் பயந்து பயந்து சாகிறதாலேதான்…அவனுகளுக்கெல்லாம் திமிர் ஜாஸ்தியாப் போச்சு… விரைவிலே அவர்களுக்கு பாடம் புகட்டினால்தான்…நாங்கள் நிம்மதியாய் வாழலாம்… அம்மாவுக்கு எப்பப் பார்த்தாலும் பயம்… நீயும் அப்படி வளராதே மாலா… வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடக் கற்றுக்கொள்…” – சைக்கிளில் ஏறி அமர்ந்த வளவன் தாயாருக்கு தைரியம் சொல்லிவிட்டுச் சென்றான். 

ஆனால் அன்று மாலை அவன் வீடு திரும்பவில்லை. வழியிலேயே அவனைச் சோதனை போட்ட ராணுவ வீரர்கள், அவனது கைகளில் இந்திய சுதந்திர வரலாற்றுவீரர்களின் சரித்திரம் அடங்கிய புத்தகம் இருந்ததற்காக விசாரணைக்கு இழுத்துச் சென்றார்கள். 

பின்னர் நான்கைந்து நாட்கள் கழித்து பாதி எரிந்த நிலையில் அவனது உடல் யாழ், அரசு மருத்துவமனையில் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சித்தப்பிரமை தீர்வதற்கு சியாமளாவுக்கு மூன்று மாதம் பிடித்தது. 

‘டிபன் பாக்ஸ்’சில் சாதத்தையும், வறுவலையும் வைத்து மூடிய சியாமளா, அதை மாலாவிடம் கொடுத்தாள். 

“மாலா! எல்லாம் சரியாக மூடி வைத்திருக்கிறாயா…? கை நழுவக் கூடாது-நான் கூறியபடி பள்ளிக்கூட மைதானத்தில் நிற்பான்… ஞாபகமிருக்கட்டும்… ” பாலன் மாலாவின் முதுகில் கையை வைத்து அன்புடன் விடை கொடுத்தான். 

“எனக்காக… ஒருவேளை பட்டினியாக இருந்து விடு… என்ன…!” 

“பாலன் அண்ணா… ஒருவேளையென்ன…ஒரு நாள் முழுவதும் வேண்டுமானாலும் நான் பட்டினி இருப்பேன்… நீ கூறியவற்றை மட்டும் கச்சிதமாக முடித்துவிட்டேன் என்றால்…வளவன் அண்ணா சொர்க்கத்திலும் மகிழ்ச்சியடைவார்.” 

“ஓ. கே…அது உன்னால் முடியும்… போய் வா…” 

மாலாவும், அவளுடன் இரண்டொரு மாணவிகளும் சேர்ந்து கொண்டனர். மாண வர்கள் பத்துப் பதினைந்து பேரும் இவர்களுக்குத் துணையாக வந்து சேர்ந்தனர். வெள்ளைப்புறாக் கூட்டமொன்று நடந்து செல்வதுபோல் அனைவரும் மாதகல் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்றனர். 

“‘பஸ்’சை நம்பி நிற்பதில் பிரயோசனமில்லை… அது எப்ப வரும்…எப்ப நிற்குமென்பது கடவுளுக்குத்தான் தெரியும்…” பேனாவைச் சட்டை ‘பாக்’ கெட்டில் செருகிய படி கூறினான், தீனதயாளன். 

மாதகலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தான் அவர்களது பரீட்சை மண்டபம் இருந்தது. ‘பஸ்’ சில் நம்பிக்கையற்றுப்போய், எவ்லோருமாக நடந்து செல்வதென்றே முடிவெடுத்தார்கள். 

மாலாவுக்கு எப்படியாவது பாலன் குறிப்பிட்ட நேரத் துக்கு அங்கு போய்விட வேண்டுமென்ற அவசரம். 

“கலா, நடந்தே போய்விடலாமடி…” எனத் தோழியை அவசரப்படுத்தினாள். 

“சரி… சரி… நடப்போம்.” 

“ஆனால் ஒருவரும் காச்சு…மூச்சென்று கத்தக் கூடாது.” 

“டேய், மெயின் ரோட்டால் நடப்பதைவிட குறுக்குச் சந்துகளில் நடந்தால்தான் நமக்கு சேப்…” 

“பேசிக் கொண்டே நிற்காமல் நடவுங்கள்…” மாலாவுக்குப், பொறுமையாக நிற்க முடியவில்லை. 

நகரின் பிரதான வீதியை விட்டு விலகி, சற்று உள்ளே வளைந்து சென்ற ‘கிறைவல் ரோட்’ டில் நடந்தார்கள். 

கொஞ்ச தூரம் சென்றனர். எதிரே ஒரு ராணுவ டிரக். 

மாலாவுக்கு நெஞ்சு திக்கென்றது. மாணவர்கள் வீதியைவிட்டு விலகி வேலியோரமாக நடந்தார்கள். 

அவர்களது மூச்சுகளே வெளிவராத மாதிரி அனைவர் முகத்திலும் பிரேதக்களை. டிரக் அவர்களைத் தாண்டிச் சென்றது. 

மாலாவின் கடைக்கண் பார்வையில் அந்த டிரக் நிறைய ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் அணிவகுப்பது போல் அடைப்பட்டிருப்பது தெரிந்தது. 

“…..ம்…நடையைக் கொஞ்சம்… துரிதப்படுத்துங்கோ…” மாணவர்களில் ஒருவன் அடிக்குரலில் அதட்டினான். 

அவர்களது நடையின் வேகம் அதிகரித்தது, நான்கைந்து கஜதூரம் சென்றனர். 

அவர்களைத் தாண்டிச் சென்ற டிரக் வண்டி ஒரு ‘ரேன்’ அடித்துப் பயங்கரமான இரைச்சலுடன் அவர்களுக்குப் பின்னால் வந்து நின்றது. 

மாலாவுக்கு ஓடிவிடவேண்டும் போலிருந்தது …ம்ஹூம்… ஓடக்கூடாது… தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்… 

“பொடியங்க… எல்லாம்… இங்காலவா…” உயரமான டிரக்கிலிருந்து குதித்த ராணுவ வீரனொருவன் அரை குறைத் தமிழில் சட்டளையிட்டான். 

மாணவர்களின் கை, கால்கள் எல்லாம் வெடவெடத்தன. ஒருவரின் கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்தனர். 

“பெட்டைங்களெல்லாம்… மற்றப்பக்கம்…மற்றப் பக்கம்…” துப்பாக்கி முனையால் பையன்களையும், பெண்களையும் வேறுபடுத்தி நிறுத்தினான், ராணுவ வீரன். 

மாணவர்கள் வீதியின் ஒரு பக்கத்திலும், எதிர்ப்பக்கத்தில் மாணவிகளுமாக நிறுத்தப்பட்டனர். 

“கையில் இருப்பதைக் கீழே போடு…ம்…” கடுங் குரலில் எச்சரித்தபடி மோகனின் முகத்தில் துப்பாக்கியால் இடித்தான். 

மாணவர்கள் அனைவரும் தொப் தொப்பென்று தாங்கள் பரீட்சைக்குக் கொண்டு சென்ற உபகரணங்களைக் கீழே போட்டனர். 

“ஹான்ட்ஸ் அப்…” 

அவர்கள் கைகள் உயர்ந்தன. 

மாணவர்களை வரிசையில் நிறுத்தியவன் ‘டிரக்’கில் உள்ளவர்களுக்கு எதையோ கூறினான். 

டிரக்கிலிருந்து குதித்த மற்றைய ராணுவ வீரர்களின் துப்பாக்கி முனைகள் மாணவர்களைக் குறி வைத்தது. 

“டுமீல்…டுமீல்…” 

“அம்மா… ஐயோ… ஐயோ… அம்மா…” அவலக் குரல்கள் எழுந்தன. 

மாலாவுக்குப் பக்கத்தில் நின்ற கலா கண்களைப் ‘பொத்திக் கொண்டு மாலாவின் தோளில் சரிந்தாள். 

மாலா மெதுவாக அவளைக் கிடத்தி விட்டு மெல்ல நிமிர்வது போல் – பாலன் கொடுக்கும்படி சொன்ன ‘டிபன்பாக்சை’த் திறந்தாள். 

புத்தம் புதிய கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்டு ஆயத்தமான நிலையில் அதற்குள் மின்னியது, 

அதனைக் கையில் எடுத்தாள். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் அதிலிருந்த தோட்டாக்கள் ராணுவத்தினரை நோக்கிப் பாய்ந்தது. 

என்றோ ஒரு நாள் அண்ணன் வளவன் அவளிடம் இதே போன்ற துப்பாக்கியொன்றைக் காட்டிக் கூறிய விளக்கம் இந்தச் சமயம் உதவியது. 

“டிமீல்… டுமீல்” 

அசுர வேகத்தில் இயக்கப்பட்ட துப்பாக்கி ராணுவ வீரர்கள் சிலரின் உடலைக் கிழித்துக் கொண்டு சென்றன. எங்கிருந்து அக்குண்டுகள் வருகின்றன என்பதை அவர்களால் ஊகிக்க முடியவில்லை 

“கொட்டியா… அவில்ல… கொட்டியா அவில்ல… இக்மட்ட துவாண்ட…” 

டிரக்கிலிருந்த ராணுவ வீரர்கள் “புலி வருகுது.. புலி வருகுது…” டிரக்கைச் சீக்கிரமாக எடுத்துக் கொண்டு ‘ஓடும்’படி சிங்களத்தில் கத்தினார்கள். 

வீதியில் விழுந்து கிடந்த தங்கள் சக தோழர்களையும் திரும்பிப் பார்க்காமல் ராணுவ டிர்க் பாய்ந்து சென்றது. 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *