கொடுத்து வாங்குவது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 4,233 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

இம்ரான்கான் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர். கராச்சியில் குடியிருந்தார். இது அந்த இம்ரான்கான் அல்ல. இவருக்குக் கிறிக்கெற் விளையாடத் தெரியாது. பார்த்த மாத்திரத்திலேயே ஒருவித மதிப்பு ஏற்படும் தோற்றம். சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். எப்போதும் பாகிஸ்தானிய தேசிய உடையில் காணப்படுவார். தூய வெண்மை ஆடைகளைத்தான் எப்போதும் அணிவார். பிரகாசிக்கும் முகம். 

கிளிஃப்டன் எனும் இடத்திலுள்ள ‘கிளாக்சி அபார்ட்மென்ட்’டின் நான்காவது மாடியில் எங்களது வீடு இருந்தது. கீழே மூன்றாவது மாடியில் இம்ரானின் வீடு. தனது மனைவியுடன் குடியிருந்தார். மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளில். கிளாக்சி அபார்ட்மென்ட் தொகுதியின் நலன் காக்கும் குழுத் தலைவராகவும் இம்ரான்கான் செயற்பட்டார். 

நாங்கள் குடிபோனபோது நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஒரு விழா போலவே அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். சகல வீடுகளுக்கும் பொதுவான திறந்தவெளி முற்றத்தில் இரவுச் சாப்பாடு நடந்தது. 

‘இந்த அபார்ட்மெண்டுக்குக் குடிவந்திருக்கும் முதலாவது வெளிநாட்டவர் இவர்கள். எங்களது நட்பு நாடான இலங்கையிலிருந்து வந்திருக்கிறார்கள்’ என இம்ரான்கான் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். 

எங்களுக்குத் தேவைப்பட்ட சகல உதவிகளையும் செய்து தந்தார். திருமணமாகிப் புதிதாகக் குடிபோகும் பிள்ளைகளுக்குத் தேவையான பாத்திர பண்டங்களை வாங்கித் தருவது போன்ற கரிசனையுடன் எங்களைத் தனது காரில் அழைத்துச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவி செய்தார். இன்ன இன்ன இடங்களில் நல்ல பொருட்களை வாங்கலாம் என சுப்பர் மார்க்கட்டுகள், மீன் சந்தைகள் போன்ற சில இடங்களையும் கூட்டிச் சென்று காட்டினார். கராச்சியிலுள்ள சில இந்துக் கோயில்களுக்கு அழைத்துப் போனார். (கோயில்களுக்குக் கவனிப்புக் குறைந்து போயிருந்தாலும் பாகிஸ்தானிய இந்துக்கள் பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்தனர்.) அவ்வப்போது கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும் செய்தியையும் இம்ரான்கான் தெரியப்படுத்தினர். 

கராச்சியில் ‘தமிழ் கொலனி’ எனும் ஓர் இடம் உள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது இந்தப் பக்கம் பிரிக்கப்பட்டவர்களாயிருக்கலாம். நாங்கள் தமிழர்கள் என்று அறிந்ததும் அந்த இடத்துக்குக் கூட்டிப் போனார். (கிட்டத்தட்ட சேரி அமைப்புப் போன்ற வாழ்விடங்கள்தான். அங்கு கிருஸ்ணன் என்பவருடன் பேசினோம். அவர்களுடைய தற்போதைய பரம்பரைக்குத் தமிழ் எழுத வாசிக்கத் தெரியவில்லை. உருது மொழியில் படிக்கிறார்கள். தமிழ் பாட்டுக் கசட் தரமுடியுமா எனக் கேட்டார் கிருஸ்ணன். தமிழ் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் சினிமாப் பாட்டுக்களின்மேல் அப்போது எனக்கு ஒரு மரியாதையும் ஏற்பட்டது.) 

இவ்வாறாக, குடியிருக்கப் போன ஆரம்ப நாட்களில் வந்த லீவு நாட்களிலெல்லாம் இம்ரான் பல மணி நேரங்களை எங்களுக்காகச் செலவு செய்தார். நாளாக ஆக புதிய இடம் எங்களுக்குப் பழக்கப்பட்டதும் இயல்பாகவே, நான் என் பாடு… நீ உன் பாடு என்றாகிவிட்டது. காலையில் ஏழு மணிக்கு வேலைக்குப் போனால் திரும்பி வர இரவு ஏழு மணியாகிவிடும். அதனால் இம்ரான்கானைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவாயிருந்தன. காணும்போது புன்முறுவல்கள் மலர்த்தி… அல்லது ஓரிரு வார்த்தைகளில் நட்பைப் பகிர்ந்து கொள்வோம். 

நாட்கள் நகர்ந்து ஏழோ எட்டு மாதங்கள் கடந்திருந்தன. 

ஒரு லீவு நாள். மாலை நாலு மணி போல நாங்களும் அமலதாசன் குடும்பத்தினரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே போயிருந்தோம். திரும்ப வந்தபோது இரவு மணி எட்டு. வந்து உடைகள் மாற்றுவதற்கிடையிலேயே கோலிங்பெல் அடித்தது. கதவைத் திறந்தேன். இம்ரான்கான் எதிரில் நின்றார். 

அழைத்தும் உள்ளே வராமல் வாசலில் நின்றபடியே பேசினார். (அல்லது ஏசினார்.) மூச்சை அடக்கி அடக்கி சற்று பக்குவமாகத்தான் ஏசினார். (படியேறி வந்ததால் அவருக்கு மூச்சிரைத்ததா – அல்லது கோபத்திலா என்பது புரியவில்லை) 

“வெளியே போகும்போது தண்ணீர் ரப்களை பூட்டிவிட்டுப் போங்கள். வீணாகத் தண்ணீர் ஓடுகிறது…” 

தண்ணீர் குழாய்களை எல்லாம் பூட்டிவிட்டுத்தான் போயிருந்தோம். எனினும் மனைவியிடமும் அமலதாசன் குடும்பத்தினரிடமும் இன்னொருமுறை பாத்றூம்களைப் பார்க்கச் சொல்லி உறுதி செய்து கொண்டேன். தண்ணீர் சற்றேனும் லீக் பண்ணி ஓடவில்லை. அதை அவரிடம் கூறினேன். 

இம்ரான்கானின் தொனி சற்று உயர்ந்தது… “பொய் சொல்ல வேண்டாம். தண்ணீரை வீணடிப்பது கூடாது. இது உங்களுக்கு விளங்க வேண்டும்.” 

‘பொய்’ என்ற சொல் என் தன்மான நரம்புகளைச் சட்டெனத் தீண்டியது. சூடு பொங்கியது. “உங்களுக்கு எப்படித் தெரியும்? தண்ணீர் இங்கு ஓடவில்லை. வேறு வீடுகளில் திறந்து விட்டிருப்பார்கள்… போய்ப் பாருங்கள்…” 

சத்தங்கள் உச்சஸ்தாயியை அடைய, அவருக்குப் பின்னால் அவரது மனைவி வந்து நின்று கலங்கினார். இங்கு என் மனைவி கையைப் பிடித்து உள் இழுத்தாள். 

அவர் இன்னும் சத்தம் போட்டார்… “சொக்கித்தார் சொன்னான்… இங்கிருந்துதான் தண்ணீர் வருகிறதாம்…” 

சொக்கித்தார் என்பது இந்த வீட்டுத் தொகுதிக்குக் காவலாளி. அவன் சொல்வதை நம்புகிறார். என்னை நம்பவில்லை. நான் கத்தினேன்…. “அவனுக்கு எப்படித் தெரியும்? பூட்டியிருந்த வீட்டிற்குள் வந்து பார்த்தானா? மரியாதை கொடுத்துத்தான்… மரியாதை வாங்க வேண்டும். உங்களுக்குப் பேசத் தெரியவில்லை. எங்களை நம்பாவிட்டால் போங்கள்… போய் வேறு எங்காவது பாருங்கள்…!” 

ஓங்கி அடித்தேன் கதவில். சடாரென்று பெரிய சத்தத்துடன் அது பூட்டிக் கொண்டது! கதவு என்பது திறப்பதற்கும் பூட்டுவதற்கும் மட்டும் உதவுவதில்லை. முகத்தில் அடிப்பதற்கும், ஓங்கி அறைவதற்கும் உதவுகிறது. அதன்பின் சத்தம் இல்லை. இம்ரான்கான் போய்விட்டார். 

நான் மென்மையானவன்தான். இங்கிதமாகப் பழகத் தெரிந்தவன்தான். ஒவ்வொருவருடைய குண இயல்புக்கேற்ப அஜஸ்ட் பண்ணிப் பழகவும் தெரியும். ஆனால் அந்தப் ‘பொய்’ என்ற சொல் என்னைச் சுட்டு விட்டது. நியாயத்துக்குப் புறம்பான அவரது பேச்சுக்கள் (ஏச்சுக்கள்) என்னைக் குதறிவிட்டன. 

அதன் பின்னர் என்னைக் காண நேர்ந்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு (அல்லது மாற்றிக் கொண்டு) போய்விடுவார் இம்ரான்கான். அவரது அத்தியாயம் இத்துடன் முடிந்தது என்றுதான் நினைத்தேன். ஆனால் இன்னும் இருக்கிறது. 

பாகிஸ்தானுக்கு என் மனைவியை அழைத்து வந்ததற்கான முழுப் பலனும் எனக்கு இந்தக் கால கட்டத்திற்தான் கிடைத்தது. அதாவது, தாயாகும் பரீட்சையில் அவள் பாஸாகியிருந்தாள். 

நாளும் பொழுதுமாக அவளது உடற்தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. சிறிது சிறிதாகப் பெரிது பெரிதாகிக் கொண்டிருக்கும் வயிற்றுடன் அவள் நடக்கும் ஸ்டைலைக் காண இரக்கமாகவும் இருக்கும். 

கர்ப்பம் தரிக்கும் காலங்களில் பெண்களுக்கு சாப்பாட்டிற்கு மனமில்லாமலிருக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதை அப்போது நேரடியாகவே அனுபவித்தேன். (அனுபவித்தேன் எனக் குறிப்பிட்டதற்குக் காரணம் உண்டு. மனைவிக்குத் தேவையான பணிவிடைகள் செய்யும் பொறுப்பு முழுமையாக என்மேல் விழுந்தது.) எதைச் சாப்பிட்டாலும் குமட்டுகிறது என வாந்தி எடுக்க பாத்றூம் பக்கம் ஓடுவாள். (அப்போதுதான் எனக்குப் பதவி உயர்வு கிடைத்த நேரம். அதனால் அமலதாசன் மிஸிசும் பாராமுகமாக இருந்தார்.) ஆர்வத்துடன் ஈடுபட்டேன். 

கதைகள் எழுதுவதற்குக் கற்பனை செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தேன். எப்படிக் கறி சமைக்கலாம் எனக் கற்பனை செய்யத் தொடங்கினேன். எனது படைப்புத் திறமையை சமையற் கலையில் பிரயோகித்தேன். புதிய புதிய சூப் வகைகள், கறி வகைகளை எல்லாம் அரிய ஆராய்ச்சிகளின் பின் கண்டுபிடித்தேன். அவற்றை என் மனைவி மட்டும் ரசித்து (சுவைத்து அல்ல) சாப்பிடுவாள். (ஏனெனில் எனக்கே அவற்றைச் சாப்பிட முடியாமலிருந்தது.) 

ஆனால் எனது கைக்கு (கற்பனைக்கு) எட்டாத சங்கதிகளும் இருந்தன. 

“கைக்குத்தரிசிச் சோறு சாப்பிட ஆசையாயிருக்கு…” என என் மனைவி ஒருநாள் கூறினாள். 

பாகிஸ்தானில் இதை எங்கே போய்த் தேடுவது? அங்கு பொதுவாகப் பாவனையிலுள்ளது பாஸ்மதி அரிசிதான். யாரிடமாவது இதைப்பற்றி விசாரிக்கலாமென்றால்… உரல், உலக்கை போன்ற சமாச்சாரங்களை எப்படி ஆங்கிலத்தில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் சோர்ந்துபோய் விடவில்லை. கொழும்பிலிருந்த எனது தம்பிக்குத் தந்தி அடித்தேன். அடுத்த விமானத்தில் வந்து சேர்ந்தது கைக்குத்தரிசி. 

இன்னொரு நாள் மனைவிக்குப் புளியங்காய் மேல் ஆசை வந்துவிட்டது. நான் அதுவரை பாகிஸ்தானில் புளிய மரங்களைக் கண்டதில்லை. அதன்பின் வேலைக்குப் வேளைகளிலும் போய்வரும்போதும் பாதையோரங்களில் நோட்டமிட்டேன். ஆனால் புளிய அதுபற்றி மரங்களோ எங்கும் தென்படவில்லை. என்னுடன் வேலை செய்யும் பாகிஸ்தானியர்கள் சிலரிடம் விசாரித்தேன். அதற்குரிய ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட்டால் அவர்கள் வேறு வேறு சாமான்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்கள். அவர்கள் கறிக்குப் புளி பாவிப்பதில்லையோ? 

எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஓவியக் கலையில் எனக்குள்ள ஆற்றலை முதன் முறையாகப் பயன்படுத்தி பக்கத்தில் ஒரு புளியமரத்தை வரைந்தேன். புளியங்காயையும் பெரிசு படுத்தி வரைந்தேன். கம்பனியில் மினிபஸ் ஓட்டும் ரபீக்கிடம் அதனைக் காண்பித்தேன். ‘இது சாப்பிடக் கூடியது. சாப்பிட்டால் புளிக்கும்’ போன்ற விபரங்களையும் முக பாவனையில் காட்டினேன். 

“சரி என்னுடன் வாருங்கள்!” என்றான் ரபீக். பயலுக்குப் புரிந்துவிட்டது என்று சந்தோசமாயிருந்தது. (மனைவிக்குப் புளியங்காய்க் கறி செய்து கொடுக்கலாம் என அந்தக் கணமே எனது கற்பனை சிறகடித்துப் பறக்கத் தொடங்கி விட்டது.) ஆனால் வாகனத்துக்குள் ஏறியதும் தான் ரபீக் திட்டத்தைச் சொன்னான். அவன் ஒரு குறிப்பிட்ட ரோட்டில் ஓட்டிக்கொண்டு போவானாம். புளிய மரத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது எனது பொறுப்பு. ‘சரி’ என்றேன். 

அவனும் லேசுப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் விஷயம் தெரிந்தவன்தான். பெரிய மரங்கள் இருமருங்குமுள்ள வீதியில் என்னைக் கொண்டு ஓடினான். நானும் பார்த்துக் கொண்டே போனேன்… ஒரு திருப்பத்தில் அது நின்றது! அது காய்த்துக் குலுங்கிக் கொண்டு நின்றது. 

“ரபீக்…! நிப்பாட்டு… நிறுத்து…!” இப்படித்தான் சொல்ல முயன்றேன். ஆனால் புளியமரத்தைக் கண்ட எனது பரவச நிலையில் சத்தம் சரியாக வெளிப்படாமற் போனது. வேறு ஏதோவிதமாக அது கேட்டிருக்கவேண்டும். 

எனது சத்தத்தைக் கேட்டு ரபீக் சடின் பிரேக் போட்டான். 

‘இதுதான்….’ என ஒரு குழந்தையைப் போலக் கையைக் காட்டினேன். 

அவன் மரத்தில் ஏறி, பை நிறையப் பிடுங்கி வந்தான். வெற்றிப் பெருமிதத்துடன் வீட்டுக்குப் புளியங்காய்களைக் கொண்டு வந்தேன். என் மனைவி அதில் ஒன்றே ஒன்றைத் தெரிந்தெடுத்துக் கடித்தாள். 

“சீ…சீ… இந்தப் பழம் புளிக்குது!’ 

மாதங்கள் கடந்து கொண்டிருந்தபோது உடற் சோதனைக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ வீட்டிலிருந்து கீழே இறங்கி ஏறுவது மனைவிக்குச் சிரமமாயிருந்தது. வயிறு பெருத்துக் கொண்டு வந்தபோது அவளது கால்களும் சற்று வீக்கமடைந்தன. மனைவியின் கையை என் தோளின் மேல் போட்டுப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையினால் இடுப்பை அணைத்தபடி நாலாவது மாடியிலுள்ள வீட்டுக்கு ஏறுவேன். 

சில வேளைகளில் இம்ரான்கான் இந்தக் காட்சியைக் காணுவர். பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு போய்விடுவார். ஒருநாள் இம்ரான்கானின் மனைவி தங்கள் வீட்டு வாசலில் நின்றார். எங்களுக்காகவே காத்து நின்றது போலிருந்தது. கூச்சமோ தயக்கமோ அவரைப் பேசவிடாது தடுப்பது போலுமிருந்தது. எங்களுக்கும் அதே சங்கடம். இப்படி இரண்டொருமுறை சந்திப்பு நிகழ்ந்தது. 

அடுத்து வந்த ஒருநாளில் பிற்பகல் மூன்று மணியளவில் கதவு மணி ஒலித்தது. கதவைத் திறந்தால் திருமதி இம்ரான்கான். என்னைக் கண்டதும் தயங்கிப் பின் வாங்கினார். (நான் வேலைக்குப் போயிருக்கக்கூடும் எனக் கருதியிருப்பார்… ஆனால் அன்று நான் லீவ்) அறைக்குள்ளே சென்று மனைவியை அனுப்பி வைத்தேன். 

ஏதோ சாப்பாட்டு வகை செய்து வந்து மனைவிக்குக் கொடுத்திருக்கிறார் திருமதி இம்ரான். ‘அவர் ஏசுவாரா?… அவர் ஏசுவாரா…?’ என என்னைக் குறிப்பிட்டுப் பலமுறை மனைவியிடம் கேட்டிருக்கிறார். உள்ளே அழைத்தும் வரவில்லை என மனைவி கூறினாள். 

பின்னரும் பல தடவைகள் இது தொடர்ந்தது. “நீங்களும் எனது மகளைப் போல… கர்ப்ப காலத்தில் இப்படித் தனிய இருந்து கஸ்ரப்படுவது கவலையாயிருக்கு…” எனக் கூறுவாராம். வந்து நீண்ட நேரம் தனக்குத் துணையாக இருந்து போவார் என மனைவி நன்றியுடன் கூறுவாள். 

பிரசவகாலம் நெருங்க நாங்கள் இலங்கை வர ஆயத்தமானோம். பயணப்படும் செய்தி அறிந்து அயல் வீட்டு நண்பர்கள் வந்து தங்கள் அன்பைத் தெரிவித்துக் கொண்டு போனார்கள். 

இம்ரான்கானின் வீட்டுக்குப் போய் பயணம் சொல்லிவிட்டு வரும்படி மனைவி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். ‘சரி போகலாம்’ என நானும் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். 

அப்போது அவர் வந்தார். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அமரச் சொல்ல முதலே உள்ளே வந்து அமர்ந்தார். குசலம் விசாரித்தார். அன்பாகப் பேசினார். போகும்போது எனது கைகளைப் பிடித்துக் கொண்டு வாழ்த்தினார். 

“கூடாத சம்பவங்களை மனதில் வைத்திருக்க வேண்டாம்…. மறந்து விடுங்கள்…” எனக் கூறினார் இம்ரான்கான். 

பெருந்தன்மை மிக்க அந்தப் பெரிய மனிதன் விடை தந்து திரும்பப் போகும் போது வாசல்வரை வந்து, வழி விட்டுக் கதவைச் சாத்தக்கூட மனமில்லாது பார்த்துக் கொண்டு நின்றேன்.

– மல்லிகை, 2002.

– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *