கொடுத்துவைத்தவர்…
கடற்கரை.
பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம்
கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை.
மழைக்கு ஒதுங்க அருகிலிருக்கும் கோவிலுக்குள் ஓடத்துவங்கினர்
சிறுவர் சிறுமியர்…ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் நுழைந்தனர்
பெரியவர்கள்.
மழையில் நனைந்துகொண்டே மெதுவாய் கோவிலை அடைந்தனர்
காதலர்கள்.
கடல்நீரில் கரையவேண்டிய பிள்ளையார்
மழைநீரில் கரைந்துகொண்டிருந்தார்.
“கொடுத்துவச்ச பிள்ளையாருப்பா உப்புத்தண்ணில
கர்யாம நல்ல தண்ணீல கர்யிராரு”
முணுமுணுத்துக்கொண்டே சென்றாள் பஞ்சுமிட்டாய்
விற்கும் கிழவி.
– Sunday, September 16, 2007
![]() |
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க... |