கொஞ்சமாவது படித்திருக்கிறாயா?




ஆற்றங்கரையில் ஒருவன் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் குளிக்கப்போன ஒருவன் ஆழத்தில் சிக்கிக் கொண்டான்.
துணி துவைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “தோழனே ! என்னைக் காப்பாற்று என்று குரல் கொடுத்தான்.
“உன்னைக் காப்பாற்றினால், எனக்கு என்ன தருவாய்” என்று கேட்டான் துணி துவைத்தவன்.
“நான் படித்தவன் உனக்குக் கல்விக் கற்றுத் தருகிறேன்” என்றான் தண்ணீரில் சிக்கிக் கொண்டவன்.
துணி துவைப்பவன் சரி என்று அவனிடம் நெருங்கும் போது ”நீ கொஞ்சமாவது படித்திருக்கிறாயா? இல்லையா?” என்று கேட்டான்.
”நான் ஒன்றுமே படிக்கவில்லை” என்றான் துணி துவைத்தவன்.
“உனக்கு ஆரம்பத்திலிருந்து என்னால் கற்றுத்தர முடியாது. நான் ஆற்றோடு போனாலும் போகிறேன்” என்று கூறிவிட்டான் அவன்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்