கெட்டது – ஒரு பக்க கதை





அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட் மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம். சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு உறுதியாகத் தெரிந்தது.
இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும். லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே பொறுப்பு என்பதால் பிரச்னை வர வாய்ப்பில்லை. சட்டென்று அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தான் மாதவன்.மாலை உற்சாகமாய் வீடு திரும்பியவனை அழுதபடி வரவேற்றாள் மனைவி.
‘’ஏம்மா அழறே?’’
‘‘ஹவுசிங் லோன் கட்ட 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு பஸ்ல போனேங்க. எவனோ பையை கிழிச்சி பணத்தை எடுத்துட்டான். திரும்பி வரக் கூட காசில்லாம நடந்தே வந்தேன். நாம யாருக்கும் கெட்டது நினைச்சதில்லையே. ஏங்க இப்படி?’’ – கேட்ட மனைவியை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மறுநாள் முதல் வேலையாக அந்த வாடிக்கையாளரை வரவழைத்து மோதிரத்தைக் கொடுத்துவிட முடிவு செய்தான்.
– பத்மா சபேசன் (மார்ச் 2014)