குழந்தைக்கு நாமம்! – ஒரு பக்கக் கதை






“கணேசய்யர்வாள், எனக்கென்னவோ உங்களிடத்திலே ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டுடுத்து, சார்!”

இப்படி என்னிடம் வந்து சொன்னவர், எங்கள் ஆபீஸில் வேலை பார்த்து வந்த குமாஸ்தா குருசாமி. அவரோடு நான் பழகி யதே இல்லை என்றாலும், அவருக் குப் பணக் கஷ்டம் இருந்தது என்று மட்டும் கேள்விப்பட்டிருந் தேன். ஆகவே, மேற்கூறிவாறு அவர் பேசியபோது, எனக்குச் சந் தேகந்தான் உண்டாயிற்று. ஏதோ பணம் கடன் கேட்கத்தானே அவர் பேச்சை அப்படி ஆரம்பித் திருக்க வேண்டும்?
“ரொம்ப முகஸ்துதி பண்றேளே! உங்களுக்கு இப்போ பணக் கஷ்டம் போலிருக்கு?” என்று எடுத்ததுமே கேட்டு விட்டேன்.
ஆனால், அவர் உஷ்ணமாக, “என்ன ஸார் அப்படி என்னை நினைச்சுட்டேள்? உண்மையிலேயே உங்க பேரிலே எனக்கு மதிப்பு இல்லாதபோனா, என் பிள்ளைக்கு உங்க பெயரையே வைக்கத் தீர்மானிச்சிருப்பேனா? போங்கோ சார், நீங்க என்னைப் பத்தி ரொம்பக் கேவலமா நினைச்சுட்டேள்!” என்று வருத்தத்தோடு பதிலளித்தார்.
நான் அவரைப் பற்றி எண்ணி யது தவறு என்பதை உடனே உணர்ந்து கொண்டேன். “ஏதோ தெரியாமே சொல்லிட்டேன்” என்று மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அத்துடன், செய்த குற்றத்திற்குப் பரிகாரமாக, “குழந் தைக்கு ஏதாவது துணிமணி வாங்கிக் கொடுங்கோ” என்று சொல்லி ஒரு பத்து ரூபாய் நோட்டையும் அவரிடம் கொடுத்து அனுப்பினேன்.
ஆனால், மறுநாள் என் நண்பர் வேலாயுதம் பிள்ளையைச் சந்தித் துப் பேசியபோது, குருசாமியைப் பற்றி அவர் கூறிய ஒரு விஷயம் எனக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியது. “என் பெண் குழந்தைக்கு உங்கள் சம்சாரத்தின் பெயரையே வைக்கப் போகிறேன்” என்று சொல்லி அவரிடமிருந்தும் ஒரு பத்து ரூபாயை வாங்கிச் சென்றிருந்தாராம் அந்த குருசாமி. அயோக்ய ராஸ்கல்!
உடனே குருசாமியைத் தேடிப் பிடித்து, “ஓய்..! மோசடியா பண் றீர்? எங்கிட்டே ஒரு தினுசாக வும், வேலாயுதம் பிள்ளைகிட்டே வேறொரு தினுசாகவும் சொல்லியிருக்கீரே?” என்று மிரட்டினேன்.
“மோசடி என்ன சார் இதுலே? பிள்ளைக்கு உங்க பேரையும், பெண்ணுக்கு அவர் சம்சாரத்தின் பெயரையும் வைக்கிறதுன்னுதான் நான் தீர்மானம் பண்ணியிருக் கேன்…”
“அப்படீன்னா, உங்களுக்குப் பிறந்திருக்கிறது பிள்ளையா, பெண்ணா?”
“இரண்டும் இல்லை.”
“அப்படீன்னா..?”
“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே சார்! அதுக்குத்தான் பணம் சேகரிச்சிண்டு வரேன் இப்போ! இருபது ரூபாதான் கிடைச்சிருக்கு இது வரையிலே. மீதிக்கு என்ன பண்றதுன்னுதான் யோசனையா இருக்கு!”
– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.