குள்ளநரி குறுந்தாள்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழுத்த குள்ளநரி ஒன்று இருண்ட குகையில் வாழ்ந்து வந்தது. அந்தக் குள்ளநரிக்குக் குறுந்தாள் என்பது பெயர். அது பகலில் தூங்கும்; இரவில் விழித்து இரை தேடும். அதற்கு ஒரு மனைவி உண்டு; இரு குழந்தைகளும் உண்டு. மனைவியின் உதவியால், குறுந்தாள் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தது.
ஒருநாள் இரவு, குறுந்தாள் தன் மனைவியைப் பார்த்து, “இன்று நான் சிறந்த உணவு கொண்டுவரப் போகிறேன்.” என்று சொல்லிப் புறப்பட்டது. அப்போது, மனைவி, “குடியானவர் யாராவது உன்னைப் பிடித்துக் கொள்ளக் கூடும்; ஆகையால், சாக்கிரதையாகப் போய் வருக,” என்றது.
“என்னை யாரும் பிடிக்க முடியாது; நான் விரைவில் வீடு திரும்புவேன்,” என்று குறுந்தாள் கூறிற்று; கூறியதும், ஒரு பையைத் தோளின்மேல் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றது.
குறுந்தாளுக்குப் பசி மிகுந்தது; அது அருகே இருந்த வயல் வழியாக விரைந்து சென்றது. செல்லும் வழியில் ஒரு குடியானவன் வீட்டில், பெரிய பஞ்சரம் (கூடு) ஒன்று அதற்குத் தென்பட்டது. அதைக் கண்டதும் குறுந்தாள் மகிழ்ந்தது. “என்ன நல்ல காலம்! என்ன அழகான பெட்டைக்கோழி! நான் அதைக் கொண்டுபோய் என் மனைவிக்குக் கொடுப்பேன்,” என்று அது தனக்குள் சொல்லிக்கொண்டது.
குள்ளநரி, மெல்ல மெல்ல, அதன் அருகே சென்றது. பெட்டைக்கோழி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆகையால், குள்ளநரி வந்ததை அது தெரிந்து கொள்ளவில்லை.
“இது எனக்கு எளிதில் கிடைக்கும்; இதோ இந்த வழியாக உள்ளே பாய்ந்து அதைக் கொன்று விடுவேன்,” என்று குள்ளநரி நினைத்தது; நினைத்த படியே, உள்ளே குதித்துச் சென்றது; சென்று கோழியின் அருகே உட்கார்ந்தது; “எனக்கு நல்ல உணவு கிடைத்து விட்டது” என்று எண்ணி மகிழ்ந்தது.

ஆனால், கோழியோ, அசையாமல் இருந்தது. “எழுந்திரு, நான் உன்னை உண்ணப் போகிறேன்,” என்று குறுந்தாள் அதற்குச் சொல்லிற்று. அவ்வாறு சொல்லிய பிறகுதான், அந்தப் பெட்டைக்கோழி ஒரு கண்ணைத் திறந்து பார்த்தது. அப்பொழுது அது சிறிதும் அஞ்சவில்லை. அஞ்சாமல், “ஏஓ, அப் படியா?” என்றது.
குறுந்தாள் கோபம் கொண்டது; கோபத்தால் உறுமியது; “நான் உன்னை உண்ணப்போகிறேன்,” என்று மீண்டும் சொல்லியது. கோழியோ, தலையை அசைத்து, “அப்படியானால், நான் உனக்காக மிகவும் வருந்துகிறேன்,” என்று கூறியது. குள்ளநரி வியப்பு அடைந்தது. “என்ன! எனக்காகவா வருந்துகிறாய்? நீ உனக்காகவே வருந்தவேண்டும்,” என்று கூறிற்று.
பெட்டைக்கோழி மறுபடியும் உறங்கத் தொடங்குவது போல் இருந்தது; அப்போது, “என்னை உண்ணுவது எதுவோ, அதற்காக நான் வருந்துகிறேன்,” என்று சொல்லிற்று. குறுந்தாள், அப்போது, “ஏன் அப்படி ? நீ அழகாக இருக்கின்றாயே! கொழுத்திருக்கின்றாயே! உன்னை உண்டால் என்ன?” என்று கூறிற்று.
உடனே, அந்தப்பேடை, “ஓஓ, அப்படியானால், மந்திரக்காரி உன்னைப் பார்க்கிறவரைக்கும் நீ காத்திரு,” என்றது.
இதைக் கேட்டதும், குறுந்தாள் அஞ்சியது; “மந்திரக்காரியா! மந்திரக்காரியா!” என்று அலறியது. ஏன் தெரியுமா? மந்திரக்காரி என்றால், அதற்கு மிகுந்த பயம் உண்டு. உலகத்தில் வேறு யாருக்கும் அது அவ்வளவு அஞ்சாது.
பெட்டைக்கோழி கொட்டாவி விட்டுக் கொண்டே அதைப் பார்த்தது. பார்த்துக் கொண்டே, “ஆம், ஆம். மந்திரக்காரிதான். அவள் இதோ இந்த மரத்தின்மேல் வாழ்கிறாள். என்னைக் காப்பாற்றுகிறவள் அவள் தான். என்னை நீ பிடித்து உண்டால், அவள் உன்னைப் பிடித்து உண்பாள். அவளிடம் உள்ள பானையில் உன்னை வேகவைத்துச் சமைப்பாள்,” என்று கூறிற்று.
குள்ளநரி நடுங்கியது; நடுக்கத்தோடு, “என்னைச் சமைக்க வேண்டிய தில்லை,” என்று சொல்லிற்று. அந்தப் பெட்டைக்கோழியும், “என்னை உண்ண வேண்டியதில்லை,” என்று சொல்லிற்று.

“நான் விரைந்து ஓடி வீடு சேர்வேன்,” என்று சொல்லிவிட்டுக் குள்ளநரி சுற்றிச் சுற்றிப் பார்த்தது; மந்திரக்காரி வந்து விட்டாளோ, என்று பயந்து அவ்வாறு பார்த்தது. “இந்தப் பெட்டைக்கோழி எனக்கு உணவாகக் கிடைக்காது என்று தெரிகிறது,” என்று சொல்லிற்று. அறிவுடைய அந்தக் கோழி கண்ணை மூடிக்கொண்டே, “உன் விருப்பம் போல் செய்யலாம்,” என்று சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டது.
குறுந்தாள் மெல்ல மெல்ல அவ்விடம் விட்டுச் சென்றது; மந்திரக்காரி அங்கே இருக்கிறாளா, என்று அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தது; “இனி, எப்போதும் பெட்டைக் கோழியைத் திருட, முயற்சி செய்யமாட்டேன்,” என்று சொல்லிக்கொண்டே தன் குகைக்கு ஓட்டம் பிடித்த்து.
ஆனால், உண்மையில், மந்திரக்காரி ஒருத்தியும் அங்கே இல்லை. இது குள்ளநரி குறுந்தாளுக்குத் தெரியாது.
“குள்ளநரியை வெருட்டி அனுப்புவதற்கு வழி இதுதான்,” என்று பெட்டைக்கோழி தெரிந்து கொண்டது. இரவுதோறும், அது அமைதியாகத் தூங்கிற்று. குள்ளநரி குறுந்தாள் உணவுக்காக வேறு இடங்களில் முயற்சி செய்ய வேண்டியதாயிற்று.
– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.