குற்றமும் சுற்றமும்!





“உக்கார எடங்கெடுத்தா படுக்க பாய் கேட்ட கதையால்ல இருக்குது” சம வயதுள்ள பக்கத்து வீட்டு துளசியம்மாளிடம் விசாலாட்சி பாட்டி சலிப்புடன் பேசினாள்.
“என்னாச்சக்கா? ஏ… ரொம்பந்தா சலிச்சுக்கிறே….? இப்ப வந்துட்டு போனானே…. உன்ற நங்கையா அருக்காணி பையன் சுப்பையன், அவனெனத்தையாச்சுஞ்சொன்னானா?” கை உரலில் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கொட்டிய வெற்றிலை பாக்கை எடுத்து வாயில் திணித்த படி கேட்டாள் துளசியம்மாள்.
“நீயே சொல்லு. எம்பட கண்ணாலமான போது என்ற மாமியாக்காரி சோறாக்கறதுக்கு ஒழுக்கமா ஒடையாத நாலு சட்டி பானையாச்சும் வெச்சிருந்தாளா? இருந்ததெல்லாத்தீமு சொத்திருக்கற எடம் கெடைச்சுப்போச்சுன்னு மகனுக்கு ஒன்னுமில்லாம மக அருக்காணிக்கே மூட்ட கட்டி சீதனமா அனுப்பி வெச்சுட்டா. முறுக்கமான ஆளா இருந்தங்காட்டிக்கு முருகேசன நானுங்கட்டிக்கறேன்னு சொல்லிப்போட்டேன். இல்லீனா ஆரு கட்டியிருப்பா? நீயே சொல்லு. ஓடு போட்ட ஊடுங்கெடையாது, நாலனப்பு காடுங்கெடையாது. பொறம்போக்குல ஓலைச்சாலைல வெறகடுப்புல ஆக்கித்தின்னு போட்டு, பாயில படுத்தே நாலு புள்ளப்பெத்தேன். அப்புறந்தா நாலு பேர்த்தப்போல நாமளும் வாழ்ந்து போடோணும்னு என்ற அம்மாக்காரி போட்ட தாலிக்கொடிய வட்டிக்கார நஞ்சப்பசெட்டியாருகுட்ட அடமானம் வெச்சு ஆடுகள வாங்கி மேய்க்கப்போக, அந்தக்கருப்பராயம்புண்ணியத்துல ரெட்ட, ரெட்ட குட்டிகளா போட்டு பெருகுச்சு. நாலு குட்டிகளையும் ஒரே ஈத்துல சிலதுக போட்டுச்சுக. பத்துவருசத்துல நாலாயரம் சேத்தி நாலனப்பு காடு வாங்குனேன்னு வெச்சுக்க. அப்புறம் கெணத்த வெட்டி, தோட்டம்பண்ணிப்போட்டேன். புள்ளைய, பசங்கள பெருசு பண்ணி கண்ணாலம்பண்ணி, சீர் செறப்பு பண்ணி, நாலு பேருக்கு சமமா, கௌரவமா வாழ்ந்த பின்னால இப்ப வந்து ஒறவாட வந்தா ஒத்துக்குவனா….? அவம்பையன் ராசுக்கு என்ற பேத்தி நெலாவ பொண்ணு கேக்கறாம் பாத்துக்க. என்ற தகுதி அவனுக்கு இருக்குதா? ரண்டனப்புங்கூட இல்லாத பையனுக்கு நாலனப்பு வெச்சிருக்கிற என்ற பையம்புள்ளைய, பேத்திய, கவுண்டப்பையன், சொந்தக்காரப்பையனுங்குற தகுதி போதுமுன்னு நானுங்கட்டிக்குடுக்க ஒத்துக்குவனா….?”
தொடர்ந்து பேசியதால் வந்த இருமலை நிறுத்த சொம்புத்தண்ணீரை எடுத்து குடித்தாள்.
“அல்பனுக்கு வாழ்வு வந்து அர்த்த ராத்திரில கொடைப்புடிச்சானாம்…. அந்தக்கதையால்ல இருக்குது உன்ற தம்பி பொண்டாட்டி விசாலாச்சி கத”
தாய் அருக்காணியிடம் புலம்பினான் சுப்பையன்.
“ஏண்டா என்னாச்சு….? அந்த மூளி எளங்காரி ஊட்டு வாசல நீ எதுக்குடா போயி முதிச்சே….? உம்பட பையனுக்கு அவ பேத்திய பொண்ணுக்கேக்கப்போனயாக்கு….?”
“ஆமா. கேக்க முறை இருக்குதுன்னு தாங்கேட்டேன். அவ பேத்தி எம்பட பையன ஆட்டுக்காட்லயும், மேட்டுக்காட்லயும் சுத்திச்சுத்தி வாரத தடுக்க வேண்டியதுதானே…. அத உட்டுப்போட்டு, பேத்திய என்ற பையனுக்கு கொடுக்கலாமில்லன்னு கேட்டதுக்கு மரியாதையில்லாம ‘எந்திரிச்சு போமாட்டையா?’ ன்னு கேக்கறா…. மாமனூடார்ந்தாலும் மரியாதையில்லாத இடத்துல இருக்கப்படாதுன்னு மறு பேச்சுப்பேசாம நானும் எந்திரிச்சு வந்துட்டம் பார்த்துக்க….” சொன்ன சுப்பையன் தன் தாயருகே திண்ணையில் அமர்ந்து தன் மனைவி கொடுத்த மோரை வாங்கிக்குடித்தான்.
“அவ என்னடா இன்னைக்கு புது சொத்துக்காரி. உம்பட பாட்டந்தான இந்த ஊர்லயே அந்தக்காலத்துல மொதல் கந்தாயம். தட்டாந்தோட்டத்து ராமணகவுண்டங் குடும்பம்னா பேரு போன குடும்பம். சமீன் மாதர ஊருக்கே தான, தருமம் பண்ணி வாழ்ந்தாங்க. ஆரு கண்ணு பட்டுச்சோ இன்னைக்கு கைபிடி மண்ணும் இல்லாம கரைஞ்சு போச்சு. இருக்கறதுக்கு ஊடுதான் மிஞ்சியிருக்கு. கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாதுங்கற மாதர பெரிய மனுசன் பெரிய மனுசந்தா, சில்லரை சில்லரைதான். நெற கொடம் தளும்பாது, அரக்கொடம் தளும்பீட்டுத்தா இருக்கும். என்னதான் பல வருசம் பகையா இருந்தாலும் ஊடு தேடி வந்தவங்கள இப்படியா மரியாத இல்லாம நடத்தறது…? என்ற குடும்பத்துக்கும் ஒரு காலம் வரும். போன சொத்து திரும்பி வரும் பாரு. அவளுது இருக்கறது போக எத்தன நாளாகப்போகுது…?” ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி கோபமும், கவலையும் கலவையாகப் பேசினாள் அருக்காணி.
“எங்க குடும்பத்தையே மன்னிச்சிட்டேன்னு சொல்லு” தன் மனம் கவர்ந்த ராசுவின் கைகளைப்பிடித்தபடி கெஞ்சலாகக்கேட்டாள் நிலா.
“ஏன்..? எதுக்கு..? என்னாச்சு…?” புரியாமல் கேட்டான் ராசு.
“என்ற பாட்டிகுட்டப்போயி உங்கப்பா உனக்கு என்னை பொண்ணு கேட்டாராமா… அவங்க புத்தி ஊருக்கே தெரிஞ்ச புத்திதானே…. மரியாதையில்லாம ‘சொந்தமா இருந்தாலும் சொத்துப்பத்து இல்லாதவனுக்கெல்லாம் பொண்ணுக்குடுக்க முடியாது’ ன்னு எடுத்தெரிஞ்சமாதர சொல்லிட்டாங்களாம். எங்கம்மா பாட்டிய கண்டபடி கெட்ட வார்த்தைல திட்டிப்போட்டாங்க. ‘ஆரம்பத்துல நாமளும் குடிசைல இருந்து வந்தவங்கங்கிறதையே மறந்துட்டியா?’ ன்னு என்ற அப்பனும் திட்டிப்போட்டாரு. கோவத்துல இப்ப ரெண்டு நாளா கஞ்சி, தண்ணி கூட குடிக்கமாட்டேன்னு புடிவாதமா கட்டில்லயே படுத்துக்கெடக்கறாங்க என்ற பாட்டி….” கவலையுடன் பேசினாள் நிலா.
“கவலப்படாதே…இந்த ஜென்மத்துல நானும், நீயுந்தான் கல்யாணம் பண்ணிக்க போறோம். கூடிய சீக்கிறம் நானும் நாலனப்பு காடு வாங்கத்தாம்போறேன். அப்புறம் வந்து உங்க பாட்டி குட்டயே என்ற அப்பன அனுப்பி வெச்சு உன்னப்பொண்ணு கேட்கப்போறேன். அதுவரைக்கும் வேற மாப்பிள வந்தா புடிக்கலேன்னு சொல்லிப்போடு…”
“வேற மாப்ள பார்க்க மாட்டாங்க…. ஏன்னா என்ற அப்பனம்மாளுக்கு நிலாவ ராசுக்கு கொடுக்கோணும்ங்கிறதுதான் ஆச. பாட்டியால தா மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம தவிச்சுட்டு இருக்கறாங்க. பாட்டி சொத்துக்காரனுக்குத்தா என்னக் கொடுக்கோணும்னு புடிவாதமா இருக்காங்க. அவங்க சொத்தில்லாத என்ற தாத்தாவக்கட்டி ஆடு, மாடு மேச்சு சொத்து வாங்க கஷ்டப்பட்ட மாதர அவங்க பேத்தி நாங்கஷ்டப்படக்கூடாதுன்னு யோசிக்கறாங்க…”
“அவங்க நெனைக்கிறதும் சரிதான். தம்பேத்தி நல்லா இருக்கோணும்னு பாட்டி நெனைச்சதுல தப்பில்ல.
நானும் சொத்து வாங்கீட்டு மொறையா பொண்ணுக்கேட்டு வந்து உன்ன கட்டிக்கப்போறேன். ஒன்னி மேலு உங்க பாட்டிய பட்டினில படுத்துக்கெடக்கிற மாதர செய்ய மாட்டேன்” தன்னைக் காதலிக்கும் ராசு உறுதியாகக்கூறியதால் கவலை மனதை விட்டு ஓடியது நிலாவிற்கு.
அடுத்த இருண்டு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. ராசு குடும்பத்தினரின் பூர்விகச்சொத்து குத்தகைக்கு விட்டதால் வழக்கு வந்து கீழ் கோர்ட் தீர்ப்புப்படி கைவிட்டுப்போன சொத்து பத்து அனப்பு, மேல் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வர கைக்கு வந்தது. அதே சமயம் நிலா குடும்பத்துக்கு இருந்த நாலு அனப்பு சொத்தும் கடன் வாங்க தனது மூன்று பெண்களுக்கு விசாலாட்சி பாட்டி அடமானம் வைக்க பத்திரம் கொடுத்த வகையில் அவர்கள் வாங்கிய கடனைக்கட்டாததால் வட்டிக்கு கொடுத்தவர் கிரையம் செய்து கொண்டார்.
இப்போதும் விசாலாட்சி பாட்டி அழுது கொண்டு சாப்பிட மனமில்லாமல், சரியாக உறங்காமல் இருந்தாள். தனது சொத்து போன கவலை ஒருபுறமிருக்க, தான் கேவலப்படுத்திய கணவனின் அக்காள் அருக்காணி மகன் சுப்பையன் கோர்ட் தீர்ப்புப்படி மறுபடியும் பழையபடி சொத்துக்காரனாகி விட்டானே…. எனும் கவலை மறுபக்கம் வாட்டியது.
மதியாதார் வாசல் மிதியாதே’ எனும் பழமொழியை மறந்து, ‘குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை’ எனும் பழமொழிக்கேற்ப தன் வீட்டிற்கு சுப்பையன் மறுபடியும் வர, வெலவெலத்துப்போனாள் விசாலாட்சி பாட்டி.
“ஏனத்த..… தொன்னூறு வயிசில என்னத்துக்கு சொத்த நெனைச்சு நீ கவலப்படறே….? நேரத்துக்கு சோறுங்கறமா? படுத்து தூங்கறமா? நம்மளத்தேடி வாரவங்க கூட நாலு வார்த்த மனசுட்டுப்பேசறமா? ன்னு இருக்கறத உட்டுப்போட்டு அவிய செரியில்ல, இவிய செரியில்ல, அதுல சொத்த, இதுல சொத்தைன்னு பேசுவாங்களா…? அன்னைக்கு நீ என்னைய பேசுன மாதர வேற ஆராய்ச்சியும் பேசியிருந்தீன்னா இன்னைக்கு என்னைய மாதர எதார்த்தமா வருவாங்கன்னா நெனைக்கிறே...? சொத்து இன்னைக்கு வரும் நாளைக்கு போயிரும்… சொந்தம் இன்னைக்கு போனா நாளைக்கு வராது. எல்லாச்சொந்தமும் வராது. என்ற மாதர நல்ல சொந்தம் மட்டுலும் வரும். நீங்க…. அப்புறம் நாங்களும் போனதுக்கப்புறம் நம்ம கொழந்தைக ஒத்தையா நின்னு அனாதையா போகுங்க. ஒரு நல்லது கெட்டதுன்னா சொந்த பந்தம் பத்துப்பேருக்கு பதுலா நூறு பேரு இருந்தா ஊர்ல மத்தவங்க ஆரும் பயப்படுவாங்க. மதிப்பும் கொடுப்பாங்க” சொன்ன தன் கணவனின் அக்கா அருக்காணி மகன் சுப்பையனின் கைகளை இறுக்கமாகப்பிடித்தாள் விசாலாச்சி பாட்டி.
“என்ற புத்திய ஏதாச்சுங்கெடைச்சா எடுத்து அடிச்சக்கோணும் போல எனக்கே தோணுது. இத்தன நல்லவன கெட்ட வார்த்தைல பேசிப்போட்டம்பாரு. சுப்பியா… நீ நாந்தூக்கி வளத்துன பையன். கோழி முதிச்சா குஞ்சு சாகுமா….? அந்த மாதர நாம்பேசிப்போட்டத நீ மனசுல எதையும் வெச்சுக்கப்படாது. இப்பச்சொல்லறேன் உன்ற பையன் ராசுக்கு ஒரு கைபிடி மண்ணு இல்லீன்னாலுஞ்சேரி, என்ற பேத்தி நெலாவ கட்டி கொடுப்பம்பாத்துக்க” என விசாலாட்சி பாட்டி கூறியதைக்கேட்டு சுப்பையன் உள்பட குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |