குறும்பு செய்யாமை
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 801
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆழ்ந்த கருத்தொன்றுமின்றிப் பிறர்க்கு விளையாட்டுக் கென்றே, வெறும் தொல்லை விளைக்க, ஒருவன் வேணு மென்றே செய்கின்ற சிறுகேடே குறும்பென்பது இக்குறும்புத் தனம் பெரும்பாலாகச் சிறியவர்களிடத்தும், சிறுபான்மை பெரியவர்களிடத்தும் உண்டு.
அக்குறும்பாவது: அடைப்புவரிச்சுக்களை யுடைத் தல் ; அரைகுறையாக நிறந்தீட்டி யெழுதியிருக்கும் எழுத் துக்களைத் கீறிக் கெடுத்தல்; ஒப்பனைத் தோட்டத்தில் மரப் பட்டைகளைச் செதுக்குதல், அல்லது கொத்துதல்; ஆங்குள்ள இருக்கைகளின்மேல் கீறிவைத்தல், அல்லது பெயர்களை எழுதிவைத்தல்; ஆங்குள்ள கட்டடங்களின் தரையைக் கறைப்படுத்துதல்; பொருள்களைத் தாறுமாறாக இடம்விட்டு இடம் மாற்றி வைத்தல்; பூங்காவிற் சென்று பூக்களைப் பறித்து வீணாகச் சிதறிவிடுதல்; பழத்தோட் டத்திற் சென்று பழங்களைப் பறித்துத் தின்பதுந்தவிர கணக்கற்றவைகளைப் பறித்தெறிந்துவிடுதல் ஆகிய இவைகளும் இவை போன்றவைகளுமாம்.
விடுதிகளிற் சிலர் தட்டுமுட்டுகளுக்குச் சிறுகேடுகள் செய்வதுந்தவிர, சில பொருள்களை மறைவாக எடுத்துக் கொண்டும் போய்விடுகின்றனர். சிலர் மணவீடுகளிலும். இவ்வறே செய்கின்றனர். இத்தகையன வெல்லாம். தீமை செய்வதுங் கொள்ளையடிப்பதுமாகும்.
இன்னும் ஒருவருக்கொருவர் பகடி செய்துகொள்ளு. தலும், அச்சங் காட்டுதலும், சிற்றுயிர்களை மிரட்டுதலும் முதலியவை குறும்பேயாகும். இவை சிறு கேடுகளெனி னுஞ் சிலவேளைகளில் இவற்றின் விளைவு பெருங் கேட் டைத் தருவதாகும்.
சிலர் பகைமையா லுங் குறும்புகள் செய்வதுண்டு. இரவில் மறைவாகப் பிறன் தோட்டத்திற் சென்று பயன்தரு மரங்களையும் செடிகளையும் வெட்டிப்போடுதல், பிறன் வயலிற் சென்று பயிர்களை அழித்துப்போடுதல், பிறன் மாடுகன்றுகளுக்கு ஊறுபாடு செய்தல் முதலியவைகள் பெருங் குறும்புகளாகும். பகைமையினால் இவ்வாறு கொடுங்குறும்புகள் செய்பவர்களை நன்மக்கள் எல்லோ ரும் வெறுத்துப் பகைத்துத் தள்ளிவிடுவார்களேயொழிய வேறென் செய்வார்கள் !
1. குளவியும் தேனீயும்
ஒரு பகல் ஒரு குளவி ஒரு தேனீயைப் பார்த்துச் சொல்லு து:-மக்கள் உன்னை விரும்புகின்றார்கள், என்னை வெறுக் றார்கள்; நான் உன்னைவிடப் பார்ப்பதற்கு அழகாயிருக் றேன்; நாம் இருவரும் பறக்கும் உயிர்கள் ; இருவரும் தேன் உண்ணுகின்றோம். சினமூட்டப்பட்டால் இருவரும் மக்களை கொட்டுகின்றோம்; நான் மக்கள் வீட்டிலேயே இருந்து காண்டி க்கின்றேன், நீயோ காட்டில் திரிந்து கொண்டிருக்கின்றாய் ஆனாலும் அவர்கள் உன்னை நாட்டுக்குக் கொண்டுவந்து, உனக் கெனத் தனி வீடுகட்டிக் கொடுத்து, உன்னை அதனில் வாழச் செய்து, தீனியும் ஊட்டுகின் றனர் ; இஃதென்ன வியப்பு ; இதற் கென்ன காரணம்! எனக்குச் சொல்வாயா ?- இவ்வாறு குளவி தேனீயைக் கேட்டது.
அதற்குத் தேனீ சொல்லுகின்றது:நீ மக்கட்குத் தீங்கான குறும்புகள் செய்கின்றாயேயொழிய நன்மை யொன்றுஞ் செய்வ தில்லை; ஆகையால் மக்கள் உன்னைப் பார்ப்பதற்கே அஞ்சு கின்றனர்; நானோ காட்டில் அலைந்து திரிந்து அவர்கட்கு இன்றி யமையாது வேண்டற்பாலாகிய தேனைச் சேகரித்துவைக் கின்றேன். அதனால் அவர்கள் என்மீது நட்புக் கொண்டிருக் கின்றனர். இனி நீ ஒன்று செய்; அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாக மக்கள் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனாலும் இனிமேல் நீ அவர்கட்குத் தீங்கான குறும்புகள் ஒன்றுஞ் செய்யாமலிரு; போய்வா என்றது.
2. யானையும் தையற்காரனும்
இந்திய நாட்டில் ஒரு சிறு நகரில் தையற்காரன் ஒருவன் வீட்டுத் தெருவறையிற் பலகணிக்கு நேராக இருந்து, ஒரு நேர்த்தியான புதுத்துணியை உடையாகத் தைத்துக்கொண்டிருந்தான். அத்தெரு வழியே நீரருந்த ஒரு குளம்நோக்கிச் சென்றுகொண் டிருந்த ஒரு யானை, அவனைத் துன்புறுத்தவேண்டுமென்கிற எண்ணஞ் சிறிதுமின்றித் தன் தும்பிக்கையால் பலகணியைத் தொட்டுத் தடவிற்று. தையற்காரன் குறும்பெண்ணங்கொண்டு யானையின் தும்பிக்கை நுனியில் தன் ஊசியாற் குத்தினான். உடனே யானை தும்பிக்கையை வெளிவாங்கிக்கொண்டு, குலுக்கு நடையுடன் குளம் நோக்கி விரைந்து சென்றது. சென்று யானை நீரைக்கலக்கிச் சேறாக்கிச் சேற்றைத் துதிக்கைநிறைய முகந்து கொண்டது. பின் தையற்காரனின் தையலறையின் பலகணி யண்டை வந்துநின்று, அச் சேற்றையெல்லாம் அவன்மேலும், அவனுடைய துணி உடைகளின் மேலும் கொட்டிவிட்டுப் போய் விட்டது. அவன் விதிர் விதிர்த்து மனங்கலங்கித் திடுக்கிட்டுப் போனான். கடையிலிருந்த துணிகளும் உடைகளும் சேற்றால் பாழ்பட்டுப்போயின. தையற்காரன் தான் செய்த குறும்புத் தனத்தினால், அக்கம்பக்கத்தாருடைய நகைப்புக்காளாய், ஊதியக் கேடும் அடைந்தான்.
3. இன்ச்கேப் கட்டிய மணி
காத்துலாந்து நாட்டின் கடற்கரை யோரத்தில் இன்ச்கேப் என்னும் ஒரு முனையுண்டு. அங்கு புயற்காற்றும் கடற் கொந்த ளிப்பும் அடிக்கடி உண்டாவது வழக்கம். ஆங்கு இருட்டில் கப் பல்கள் திக்குத்தெரியாமல் அம்முனைப் பாறைமீது மோதப்பட்டுப் பாழ்படுவதுண்டு. இதனைக் கண்ட மடாதிபதி அபரபிரதாக்கியன் என்பவர், மக்கள் படும் தொல்லையை யொழிக்க அம்முனை முகட்டில் ஒரு மணியைக் கட்டிவைத்தார். புயலினால் அலைகள் அப் பாறையின்மேல் மோதும்போதெல்லாம் அம்மணி கணகண வென்றடிக்கும். அவ்வொழிகேட்டுக் கப்பல்கள் தொலைவில் சென்று இடுக்கணிற் படாமலேகிவிடும்.
இவ்வாறிருக்க இராலிப் என்னுங் கடற் கொள்ளைக்காரன் ஒருபோது தன்படகுடன் அவ்வழியாக வந்தான். அப்போது கடல் அமைதிபெற்றிருந்தது. அம்முனைப் பாறையிற் கட்டப் பட்டிருந்த மணியைக்கண்டு அவன் குறும்புக்கென்று அம்மணிக் கட்டை அறுக்க, அஃது உடனே ஆழ்நீரிற் கடலடியில் முழுகிப் போய்விட்டது. அதனால் மகிழ்ச்சியடைந்து இராலிப் தன்வழி சென்றான்.
சிலநாட்களுக்குப்பிறகு இராலிப் தன்னுடைய சூறைப்பொருட் செல்வத்துடன் தன் படகேறிக்காற்றுநோக்கித் திரும்பி அம்முனை வழி வந்துகொண்டிருந்தான். திடீரென் று வானம் பேரிருள டைந்து, சூரியனிருக்குமிடந் தெரியவில்லை. சுற்றுமுற்றும் புயலுங் காற்றும் பேரிரைச்சல் கொண்ருந்தது. நீரென்றும் நிலமென்றும் வேறுபாடு காணப்படவில்லை. படகு இன்ச்கேப் முனைக்குநேரே தள்ளப்பட்டு வருகின்றது. மணி இருந்தாலன்றோ அடிக்கும்!
திட்டெனப் பாறைமேல் படகு ஓமாதிப் பட்டெனப் பிளந்தது. இன்ச்கேப் முனையென்று கண்டுகொண்டான் கடல் திருடன் ! ‘ஐயோ, என் செய்தேன்!’ என்று தலைமேற் கைகளை மோதி யடித்துக் கொண்டான். படகு அலைகளுக்குள் அகப்பட்டுக் கட லடிகண்டது. சிறுகுறும்பு அவன் உயிருக்கும் உடைமைக்கும் உலைவைத்தது.
க. ஒருவன் பள்ளம் வெட்டினான்; வெட்டின பள் ளத்தை ஆழத் தோண்டினான்; தான் தோண் டின குழியிலேயே விழுந்துபட்டான். தான் செய் குறும்பு தன் தலைமேலேயே படும்; தான் செய் கொடுமை தன் உச்சிமேல் விழும். -சங்கீதம்
உ. குறும்பு செய்வது முட்டாளுக்கு விளையாட்டு ; அதன் விளைவறிந்த அறிவாளியோ அது செய் யான்.
ங. சுருசுருப்போடு நலத்தைத் தேடுகின்றவன் மக் களின் நேயத்தைப் பெறுவான்; குறும்பு தேடு கிறவனோ அது தன்னிடமே வரக் காண்பான். -நீதிமொழிகள்.
ச. கெடுவான் கேடு நினைப்பான். -பழமொழி.
ரு. கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம் நடுவுஓரீஇ அல்ல செயின். -வள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.