குருஷேத்திரம்





அங்கம் 2 | அங்கம் 3 | அங்கம் 4
சாரதாவின் பூப்புனித நீராட்டு விழா அன்று தான் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதைப்பெரிய அளவில் ஊர்கூட்டி ஆரவாரமாகச் செய்வதற்கு அப்பா குகநாதனிடம் வசதியிருக்கவில்லை. செந்தூரனின் படிப்புச் செலவு வேறு கையைக் கடிக்கிறது. அதற்கும் தாரளமாகக் காசு அனுப்பமுடியாத நிலைமைதான்.அவரின் மூத்ததம்பி சிவநாதன் ரயில்வேயில் கிளார்க்காக இருக்கிறார். கொழும்பிலே தன் மனைவியோடு வாடகை வீட்டில் இருந்தார். அவருக்குப் பிள்ளைகள் இல்லாதபடியால் செந்தூரன் அவர்கள் வீட்டிலேயே தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். அதுமட்டுமல்ல அவனின் படிப்புச்செலவும் சிவநாதன் தலைமீதுதான். அவரை அப்பாவே சிறுவயதில் வளர்த்து ஆளாக்கிவிட்டதால் அதற்கு நன்றிக்கடனாகச் செந்தூரனைப் படிக்க வைக்க வேண்டிய பெரும்பொறுப்பை அவரே அப்பாவின் கட்டளைக் கிணங்க ஏற்று வழிநடத்தி வருகிறார்.

ஆசையப்பா என்று அவரை அழைப்பார்கள். ஆசையம்மா கொஞ்சம் ஒரு மாதிரி. செந்தூரன் மீது உள்ளுர வெறுப்பிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாதவாறு பாசாங்காக மனதைத் தொடாத அவள் நடத்தைகள் குறித்துச் செந்தூரன் மனதில் சிறு நெருடல் இருந்தாலும் வெளிப்டையாக இதுபற்றிஅவன் பேசுவதில்லை. அதற்குக் காரணம் அவனுடைய படிப்புக் கனவு ..கலைப்பிரிவில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் படித்துவருபவன். இந்த வருடத்தோடு அதுவும் நிறைவுபெறுகிறது. அதில் விசேடசித்தி எய்தினால் பல்கலைக்கழகத்தில் அவன் ஒரு விரிவுரையாளராக வரமுடியும் அதுவும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தான் இடம் கிடைக்க முடியும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறக்காத காலமது.
சாரதாவின் இரண்டாவது தண்ணீர் வார்ப்புச் சடங்கு முடிய அவன் புறப்பட வேண்டும். அதற்குத் தயாராக வீடுகளை கட்டியிருந்தது. குகநாதனின் இன்னுமொரு தம்பியான ராமநாதன் திருநெல்வேலியிலுள்ள ஓர் ஆண்கள் கல்லூhயில் அதிபராக இருக்கிறார். அவருடைய மனைவி பார்வதி. அவளுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண்மக்கள்.ஒரு பெண்பிள்ளை. சாரதாவை விட இரண்டு வயது இளையவள். சாரதா அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போவதுண்டு. சிலசமயம் தொடர்ச்சியாக அவர்கள் வீடே கதியென்று கிடப்பாள். பார்வதிச் சித்திக்கு அவளோடு நல்ல ஒட்டுதல்.
பட்டுப்புடைவை, நெக்லெஸ் சகிதம் அவளைத் தோயவார்த்து அலங்கரிப்பதற்காகச் சித்தி வந்திருந்தாள். சித்தப்பாவையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். மாமியின் குரலும் வராந்தாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. வாழ்க்கை பற்றி அபூர்வமான காட்சி விளக்கங்களுடன் தெண்டை கிழிய அவள் பேசுவாள். சாரதாவுக்கு அதைக் கேட்கச் சலிப்பாக இருக்கும். அவள் அதைச் சுவாரஸ்யமின்றிக் கேட்டவாறே முகம் களையிழந்து அறை மூலையிலே நின்று கொண்டிருந்தாள். இதையெல்லாம் மீppறிச் சாரதாவின் சடங்கையையும் தாண்டி அம்மாவுக்கு விருந்து படைக்கிற கவனம். அதற்கான தயார்படுத்தல் இன்னும் முடியவி;ல்லை.
அது முடிந்தபின் சாரதாவுக்கான சடங்கு களை கட்டி நடக்கத் தொடங்கியது. அவளைத் தோயவார்த்து, அலங்கரித்து மணையில் அமர்த்தியிருந்தார்கள். வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. அக்கா பவானியும் , சுபாவும் கூடப் பிரகாசமான தேவதைகள் போல் அங்குமிங்கும் நிலைகொள்ளாமல் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ஆரத்தியெல்லாம் காட்டிமுடிந்ந பின் சாரதா மீண்டும் அறைக்குத் திரும்பினாள்.
சித்தியும் கூடவே வந்தாள். அவள் செய்காரியக்காரி என்று மாமி வாய் ஓயாமல் அவள் துதிபாடிக் கொண்டிருப்பாள். ராமநாதன் மீது அவளுக்குத் தனியொட்டுதல். எல்லோரையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவாள். அண்ணன் குகநாதன் குடும்பத்தைப் பொறுத்தவரை அவளுக்கு அவர்கள் நிழல் கூடக்கரிக்கும். அம்மாவைக் கண்டால் ஆகாது. ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பாள். அப்போது கூட காற்றில் அலை பாய்ந்த அவளின் கோபம் பீறிடும் கடும் குரலை ஜீரணிக்க வழியின்றிச் சாரதா மிகவும் நொந்துபோயிருந்தாள். வேண்டாத அந்த அலங்கார வேடம் வேறு. சிலுவைப்பாரமாக நெஞ்சில் கனத்தது. சித்தியைப் பார்த்து அவசராமகக் கூறினாள்.
‘சித்தி, இது எனக்குச்சுமையாக இருக்கிறது.கழற்றிவிடவே?’ என்று கேட்டாள்.
‘இல்லை சாரு, இப்பதான் நீ அழகாக இருக்கிறாய் இந்த அழகோடு நீ நாள் முழுக்க இருக்க வேண்டாமா.சீ இது என்ன பைத்தியக்காரத்தனம்’
‘இல்லை, சித்தி சிறகு முறிந்த கதையாக இருக்க எனக்கு. ஓர் இடமும் போக முடியேலை என்னைச் சுற்றி நிறையக் காவல் தெய்வங்கள்.இல்லை கண்கொத்திப் பாம்பு மாதிரி pஇந்தச்சமூகத்தினர் கண். எனக்கு வேரறுத்த மாதிரி எல்லாம் இருக்கு. இந்த நிலையிலே நான் ஒன்றையும் ஆராதிக்க விரும்பேலை. இந்த வேடத்தைக் கழற்றிப் போட்டால்தான்; எனக்கு ஆவேசம் தீரும்’.
‘என்ன சொல்கிறாள் இவள்? வேதப்பிரகடனமாக இருக்கிற பெண்களின் வாழ்க்கை பற்றி ஏன் இவ்வளவு மந்த ஓட்டம் இவளுக்கு.?பெண்களென்றால் பூஜிக்கப்பட வேண்டிய தெய்வங்கள் மாதிரியல்லவா. எவ்வளவு புனிதமான கற்பின் நீரோட்டம் மாதிரி எங்களுடைய வாழ்க்கை இவளுக்கு என்ன தெரியும்’;.
சித்தி இதையெல்லாம் நிறைய யோசித்து அவளின் முகத்தை நேர்கொண்டு பார்த்தவாறே உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள்.
‘ சாரு! நீ இப்படியெல்லாம் பேசவே கூடாது.வாழ வேண்டிய வயதில் இது என்ன சாமியார் மாதிரி விசர்க்கதை. உனக்கு ஆசைகள் நிறைய வர வேணும.; என்றாள் சித்தி மேல்போக்காக. இதை அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பேது சபேசனின் தலைக்கறுப்பு வாசலில் தெரிந்தது. சித்தியின் முதல் தலைமகன் அவன்.வெள்ளை வெளேரென்று பளிச்சென்ற நிறம் அவன். கண்கள் அமானுஷ்ய களையோடு பளிங்கு மாதிரி நிர்மலமாக இருக்கும்.பால் போல வெள்ளை உள்ளம் அவனுக்கு. சாரதாவின் வயது தான் இருக்கும் அவனுக்கு.அவர்கள் வீட்டிற்கு அவள் போகும் போதெல்லம் அவளும் அவனும் சேர்ந்து நிறைய விளையாட்டெல்லாம் விளையாடுவார்கள். விடுமுறை வந்தால் வீட்டில் அவனுக்கு இருப்புக்
கொள்ளாது. தம்பி தங்கைகளோடு அப்பாவையும் கூட்டிக்கொண்டு கொழும்பில் சந்தோஷமாக விடுமுறையைக் கழிக்க இரயில் ஏறி விடுவான்.
அவர்களுடைய ஆசையப்பா சிவநாதன் அங்குதான் இருக்கிறார். அவர்கள் உலகம் வேறு. சாரதாவினுடைய பொற்காலம் அந்தக் கிராமத்துடனேயே சுருங்கிவிட்டது. அதுவும் இனி இல்லை.
இந்த நிலையில் சபேசனைக் கண்டதும் அவனுக்கு முகம் கொடுக்க முடியாதவளாய் துருவத்தில் மறைந்து போய்விட்ட தன் சுதந்திரமான இருப்புக்களை நினைத்து அவள் அழுகை மேலிட்டவளாய் கண்களை மூடிக்கொண்டாள். சபேசனுக்கு அவளைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அபரிதமாக களைளொட்டும் அவளின் அன்றைய அழகையே வெறித்துப் பார்த்தபடி அவன் வாசலில் நிலை தரித்து நின்று கொண்டிருந்தபோது சித்தி கூறினாள்.
‘நீ போ சபேசா பெரியம்மா விருந்து படைக்கப் போறா. போய் வயிறு முட்டச்சாப்பிடு.’அவன் போனதும் சாரதா கேட்டாள், அப்போது அவள் கண்கள் மயக்கத்திலிருந்து விடுபட்டமாதிரி ஒரு புதிய சோபை தெரிந்தது.
‘எனக்கும் விருந்துச் சாப்பாடு தானா?’
‘இல்லை இன்றைக்கும் உனக்குப் பத்தியச் சாப்பாடுதான் காரம் கூடாதல்லே’என்றாள் அம்மா.
அவள் கேட்டாள்
‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நான் பட்டினி கிடக்க வேணும்?’
‘என்ன இப்படிச் சலித்துக் கொள்கிறாய்;. இப்பவே இப்படியென்றால் கல்யாணமாகிப் பிள்ளைகள் பெறும் போது நீ எப்படித் தாங்கப் போறாய்?அதுக்கு கொஞ்சம் உனக்குப் பலம் வேணாமா?’என்றாள் சித்த காரமாக.
சாரதா மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாமல் மனம் கனத்து மௌனமாய் இருந்தாள்.தேர்ச்சில்லிலே அகப்பட்டு நசிந்து போகிற மாதிரி எவ்வளவு பெரிய வாழ்க்கைச் சுமை பெண்களுக்கு. இதிலிருந்து விடுபட அல்லது சுதந்திரமாக இருக்க என்னவழி என்று பிடிபடாத மயக்கமாய் இருந்தது. அவள் எதிலும் ஓட்டாமல் துருவத்தில் விலகி நின்ற போது மறுபடியும் வாசலில் ஒளிக்கீற்றாய் செந்தூரனின் முகம் தெரிந்தது. அவளுக்கு அவன் தான் எல்லாம்.அபரிதமான அவனது அன்பின் அணைப்பில் சுகம் கண்டவள் அவள். இப்போது நேர் தரிசனமாக அவனைக்கண்ட போது அழுகை முட்டியது. அவன் கேட்டான்.
‘என்ன சாரு? அழுகிறாயா? நீ அழவே கூடாது. உனக்கு இறக்கை முளைச்சிருக்கு. நீ ஒரு தேவதை மாதிரியாகிவிட்டாய்.எதற்கு இந்த அழுகை எல்லாம்.? கண்களைத் துடைத்துக் கொள். காலம் இப்பதான் உனக்கு வழிவிட்டிருக்கு. இன்றைக்கு நான் பயணம் போறன். நீ சமர்த்ததாக இரு. நீ இனிக்கிராமத்துச் சின்னப் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம். இராமநாதன் கல்லூரிக்கு அக்காவோடை போகலாம்.’என்றான் குரலில் மகிழ்ச்சி பொங்க.
சாரதா தலை ஆட்டினாள்.அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. ஒருவர் முகத்தைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாhற் போலிருந்தது. நிச்சலனமாக இருந்த அறைக்கு வெளியே அலைபாயும் குரல்கள் கேட்டன. பவானியக்காவும், சுபாவக்காவுமாகச் சேர்ந்து கூடிக்களித்துப் பேசிக்கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியாமல் அவள் தனிமையில் அடைபட்டுவிட்ட வெறுமையுடன் நிலைகுலைந்து போய் நின்று கொண்டிருந்தாள். அறையை விட்டுச் சித்தி கழன்றுபோய் வெகு நேரமாகிவிட்டிருந்தது.
– தொடரும்…