குந்தளப் பிரேமா






(1951ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
16. உண்மையைச் சொன்னான்
ரமணியிடம் அன்று என்றுமில்லாத உற்சாகமும் ஆனந்தமும் குடிகொண்டிருந்ததையறிந்த பிரேமா ஒரு நிமிடம் திகைத்துப்போனாள்.

‘அப்பா அனுப்பிய கடிதங்களெல்லாம் வந்ததா?’ என்று தீனஸ்வரத்தில் பிரேமா பிறகு வினவினாள்.
ரமணி:- ‘ஆம் பிரேமா! உன் தகப்பனாருக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு மட்டுமல்ல, வனஜாவை நான் காப்பியடித்திருப்பதாகப் புகார் செய்து கடிதம் எழுதிய ஒவ்வொருவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.’
பிரேமா:- ‘நீங்கள் சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே!’
ரமணி:- புரியாது பிரேமா! எல்லாம் புரியவேண்டிய காலம் வந்துவிட்டது. விரைவில் தெரிந்து கொள்ளுவாய். இவ்வளவு புகார்களும் கிளம்பியிராவிட்டால் வனஜா புத்தகத்தை நான் படித்திருக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் எனக்கே தெரியாமலிருந்த பல உண்மைகளும் தெரிந்திருக்கப் போவதில்லை. அந்தக் கதையை எழுதிய சாந்தாவை நான் கையெடுத்துக் கும்பிட வேண்டும்!
பிரேமா:- அப்படியா! நேரில் கும்பிடும் நாள் அதிக தூரத்திலில்லை. நாளை மறுதினம் சாந்தா கொழும்புக்கு வருகிறாள்.
ரமணி:- யார்? சாந்தாவா? கொழும்புக்கு வருகிறாளா? நாளை மறுதினம் வருகிறாளா? உண்மைதானா பிரேமா?
“உண்மையேதான். இப்பொழுதாவது தெரிகிறதா அவளுடைய நஷ்டஈடு வழக்கு எவ்வளவு தூரத்துக்கு மிஞ்சி விட்டதென்று?”
ரமணி வீடு அதிர்ந்து போகும்படி கலகலவென்று நகைத்தான்.
நஷ்டஈடு வழக்குத் தொடர்ந்த வனஜா கதையின் ஆசிரியை சாந்தா கொழும்புக்கு வருகிறாளென்ற செய்தியைக் கேட்டதும் ரமணி பயந்து போவானென்று எதிர்பார்த்தாள் பிரேமா. அதற்கு மாறாக ரமணி வீடு கிடுகிடுத்துப் போகும்படி சிரிக்கவே பிரேமாவுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ரமணி சிரிக்க, அதைப் பார்த்து பிரேமா கற்சிலை போல் சமைந்திருக்க அந்தச் சமயத்தில் பாரிஸ்டர் இளைய தம்பியின் ஆள் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான்.
பிரேமா:- ‘ஏன், என்ன சமாச்சாரம்?’ என்று வந்தவனைக் கேட்டாள்.
பணியாள்:- எஜமான் உங்களைக் கூட்டியரச் சொன்னாக.
ரமணி:- யாரை? என்னையா? இருக்கும். நான் எதிர் பார்த்ததுதான்.
பணியாள்:- இல்லீங்க, சின்ன அம்மாளை.
ரமணி:- சரி, என்னிடம் கேட்பதை உன்னிடம் கேட்கப் போகிறார் போலிருக்கிறது. எப்படியானாலென்ன, விஷயம் ஒன்றுதானே.
பிரேமா: “சரி நீ போ! இதோ வந்துவிட்டேனென்று சொல்லு” என்று சொல்லிப் பணியாளைப் போகச் சொல்லி விட்டு ரமணியைப் பார்த்து “உங்கள் போக்கு எனக்குப் பெரிய புதிர் மாதிரியிருக்கிறது. இப்பொழுதாவது சொல்லக் கூடாதா இந்தக் கூத்துகளெல்லாம் என்ன என்று? அப்பா ஒரு பக்கம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்தக் கேஸ் கோர்ட்டுக்குப் போனால் வெளியில் தலைகாட்ட முடியாமற் போய்விடுமே. என்று எங்களுக்கு வர்ணிக்கமுடியாத வேதனையாயிருக்கிறது. நீங்களானால் சிரிக்கிறீர்கள்”.
ரமணி: அப்படியானால் வனஜாவை நான் காப்பியடித்திருப்பேனோ என்று நீயும் என்னை சந்தேகிக்கிறாயா?
பிரேமா:- என் மனம் அப்படி நினைக்க மறுக்கிறது. ஆனால் வனஜாவைப் படித்துப் பார்த்தால் என் அறிவே என்னை ஏமாற்றுவது போலிருக்கிறது.
ரமணி:- பிரேமா உன்னுடைய அன்பும் விசுவாசமும் பரிசுத்தமானது. போன ஜன்மத்தில் நீ எனக்கு உடன் பிறந்த சகோதரியாக இருந்திருக்கவேண்டும். அந்தப் பூர்வ ஜன்மப் பாசம்தான் இன்னமும் உனக்கு என்னிடம் அலாதியான அன்பு சுரக்கச் செய்கிறது. இனியும் உனக்கோ அல்லது உன் தகப்பனாருக்கோ நான் வேதனை கொடுக்கமாட்டேன். உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். வனஜாவைப் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. உண்மையில் குந்தளப்பிரேமா என்னுடைய சுயசரித்திரம். அதில் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் எனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள். அவை சிறிதும் மிகைப்படுத்தியவைகளல்ல. உண்மைச் சம்பவங்களை கூடிய மட்டில் மறைக்காமல் அப்படியே எழுத முயற்சித்திருக்கிறேன். இன்னொரு விஷயமும் இப்பொழுதே சொல்லி விடுகிறேன். குந்தளப்பிரேமாவின் முற்பகுதியை இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் எழுதிவிட்டேன். சென்னையில் படித்துக் கொண்டிருந்தபொழுது இதன் முற்பகுதியை நான் எழுதி ஒரு சமயம் கமலாலயத்திலேயே பிரசுரிக்க எடுத்துச் சென்றேன். பிறகு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. புத்தகம் அச்சில் வந்து அதைக் குந்தளம் படிக்க நேரிட்டால் ஒரு சமயம் அவள் மனம் நோகுமோ என்று எண்ணி அச்சிடும் யோசனையைக் கைவிட்டேன். ஆனால் அதை என்னிடம் அனுதாபமுடையவர்களும் சென்னையில் உயர்ந்த பதவிகளை வகிப்பவர்களுமான இரண்டு மூன்று நண்பர்களிடம் அப்பொழுதே குந்தளப்பிரேமாவின் கைப்பிரதிகளைக் காட்டியிருக்கிறேன். அவர்களில் இருவர் இப்பொழுது ஜில்லா நீதிபதிகளாயிருக்கிறார்கள். ஆகையால் சாந்தா உண்மையாகவே வழக்குப் போடுவாளாயின் குந்தளப்பிரேமா எனது சுய முயற்சியென்பதை சுலபமாக நான் ருசுப்படுத்த முடியுமென்பதோடு பதிலுக்கும் அவள் மீது நஷ்டஈடு வழக்குத் தொடர்ந்து பணம் வசூலிக்கவும் முடியும். இதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். ஆனால் நிச்சயம் இந்த விஷயம் அவ்வளவு தூரத்துக்குப் போகாது. சாந்தா கொழும்புக்கு வருவதின் நோக்கமே வழக்குத் தொடருவதற்காகவோ அல்லது நம்மிடமிருந்து நஷ்டஈடு வசூலிப்பதற்காகவோ இரண்டுக்குமல்ல!
பிரேமா:- ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
ரமணி:- நினைக்க நியாயமான காரணங்கள் இருக்கின்றன, பிரேமா! வனஜாவில் அவள் எழுதியுள்ள விஷயங்களை குந்தளத்தினிடமிருந்து கேட்டறிந்தே எழுதியிருக்க வேண்டும். இதில் சந்தேகத்துக்கே இடம் கிடையாது. குந்தளத்தின் தூண்டுதல் பேரிலேயே வனஜாவை அவள் எழுதியிருப்பாளென்பது என் அபிப்பிராயம். குந்தளப்பிரேமா தொடர் நாவலை சாந்தாவோ அல்லது குந்தளமோ படித்திருக்கவேண்டும். அதன் ஆசிரியரை நேரில் பார்க்கவே சாந்தாவை குந்தளம் அனுப்பியிருப்பாளென்று நினைக்கிறேன். எப்படியும் சாந்தாவின் மூலம் குந்தளத்தைப் பற்றிய சகல தகவல்களையும் நான் தெரிந்து கொள்ளலாமென்று நம்புகிறேன்.
பிரேமா:- கடவுள் கிருபையினால் குந்தளத்துக்கு இன்னும் திருமணம் நடக்காமலிருந்து உங்களை மணந்து கொள்ள அவள் விரும்புவதாகவுமிருந்தால் இந்தத் துறவறத்தைக் கைவிட்டுவிடுவீர்களா?
ரமணி:- அவ்வளவு பாக்கியம் எனக்குக் கிடையாது பிரேமா. வீண் கனவுகண்டு எவ்வளவோ ஏமாற்றங்களை அனுபவித்தாகிவிட்டது. இனியுமா அப்படி ஏமார்ந்து அல்லற் பட வேண்டுமென்கிறாய்? போதும் பிரேமா, போதும்!
பிரேமா:- அப்படிச் சொல்லாதீர்கள் மிஸ்டர் ரமணி! இரவைத் தொடர்ந்து பகல் வருவது போல கஷ்டத்தைத் தொடர்ந்து சுகமும் ஏற்பட்டே தீரவேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்குப் பக்கபலமாயிருக்கும். நீங்களும் குந்தளமும் தம்பதிகளாகி சந்தோஷமாக இருக்கும் நன்னாளை நானும் பார்க்கத்தான் போகிறேன்.
இப்படிச் சொல்லிவிட்டு மன ஆறுதலுடன் பிரேமா அச்சாபீஸிலிருந்து வெளிப்பட்டாள். இதயத்திலிருந்து ஏதோ ஒரு பெரிய சுமையைக் கீழே இறக்கிவைத்துவிட்டதைப்போன்ற உணர்ச்சி அவளிடம் ஏற்பட்டது. அதே சமயம் அடுத்தடுத்து வெளியான பரபரப்பை உண்டு பண்ணக் கூடிய விபரங்கள் அவளுக்கு ஒரே திகைப்பாயிருந்தன. அவற்றை லீலாவுக்கும் சொல்லி கலகலவென்று பேசித் தீர்த்தாலொழிய நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.
நேராக லீலாவின் வீட்டைநோக்கி காரை விடச் சொன்னாள். வீட்டில் விசாரித்த பொழுது லீலாவும் நடராஜனும் தன்னுடைய வீட்டுக்குத்தான் போயிருக்கிறார் ளென்று கேள்விப்பட்டு அவர்களிடமும் தகப்பனாரிடமும் ஏக காலத்தில் எல்லா விபரங்களையும் சொல்லித் தீர்க்க வேண்டுமென்ற ஆவலுடன் காரில் வேகமாக வீட்டை நோக்கித் திரும்பினாள்.
வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக ‘அந்தப் பயல் ரமணியைப் பார்க்கப் போயிருந்தாயாமே! அங்கு எதற்காகப் போனாய்? இன்னமும் அவன் முகத்தில் விழிக்கத் தோன்றுகிறதே உனக்கு?’ என்று சிறிது கோபமாகச் சொன்னார் பாரிஸ்டர் இளையதம்பி.
பிரேமாவிடம் இளையதம்பி இப்படி ஒரு நாளும் பேசியதில்லையாதலால் அவருடைய தொனியைக் கேட்டு நடராஜனும் லீலாவும்கூடச் சிறிது கவலைப்பட்டார்கள். ஆனால் பிரேமாவின் முகத்தில் கவலையோ வருத்தமோ கிறிதும் இல்லாதது அவர்களுக்கு ஆச்சரியமாயிருந்தது! கொஞ்சமும் பதட்டமில்லாமல் நிதானமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ‘அப்பா! நீங்கள் நினைப்பதைப்போல ரமணி அவ்வளவு கெட்ட மனிதரில்லை. அனாவசியமாக ஒருவரை இவ்வளவு கேவலப்படுத்திப் பேசாதீர்கள். உண்மை தெரிந்தால் பிறகு நீங்களே ரமணியை இப்படி அவமதித்ததற்கு வருத்தப்படுவீர்கள்’ என்றாள் பிரேமா.
இளையதம்பி:- இன்னும் என்ன உண்மை தெரிய வேண்டுமென்கிறாய்? நீ ஒரு வெள்ளை மனது படைத்தவள். யாரையும் சுலபமாக நம்பி ஏமாந்துவிடுகிறாய்.
பிரேமா:- இல்லை அப்பா! ரமணியின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய மர்மம் புதைந்துகிடப்பதாக அடிக்கடி உங்களிடம் நான் சொல்லியிருப்பது ஞாபகமிருக்கும். அவை இப்பொழுது வெளியாகும் காலம் வந்துவிட்டது. இதன் பலனாக அநேகமாக அவருக்குக் கல்யாணமும் நடக்கலாம் அப்பா!
‘கல்யாணமா? ரமணிக்கா கல்யாணம்?’ என்று லீலாவும் நடராஜனும் ஏககாலத்தில் ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
‘ஆமாம்! அது ஒன்றுதான் பாக்கி! இன்னும் ஏதாவது ஒரு புதிய கரடியை அவிழ்த்துவிட்டிருப்பான். அதைக் கேட்டுக்கொண்டுவந்து உளறுகிறாள்!’ என்று அலட்சியமாகச் சொன்னார் இளையதம்பி.
இதன்பின் ரமணியுடன் தான் பேசிக்கொண்டிருந்த விபரங்களையெல்லாம் பிரேமா ஆதியோடந்தமாக எடுத்துச் சொன்னாள். இந்த விபரங்களைக் கேட்டதும் லீலாவும் நடராஜனும் திகைத்துப் போய் விட்டார்கள். பாரிஸ்டர் இளையதம்பிக்குக்கூட சிறிது நம்பிக்கையேற்படுவதைப் போலிருந்தது. ரமணி எப்படிப் போனாலும் புத்தகத்தை அவன் காப்பியடிக்கவில்லையென்பதை சுலபமாக ருசுப்படுத்த முடியு மென்றும் அதற்குப் பல பிரபலஸ்தர்களின் சாட்சியங்கள் இருக்கின்றனவென்றும் ரமணி சொல்லியதாக பிரேமா தெரிவித்தது இளையதம்பியின் கோபத்தையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டது. ரமணியின் மீது கொண்டிருந்த அவ்வளவு ஆத்திரமும் இப்பொழுது சாந்தாவின் மீது திரும்பியது. ‘ரமணி சொல்லியது மட்டும் உண்மையாயிருந்தால் எவ்வளவு ஆயிரம் செல்வானாலும் அந்த சாந்தாவை நான் இலேசில் விடுகிறேனா பார்! பதிலுக்கு அவள் பேரில் கேஸ் போட்டு மான நஷ்டம் வசூலிக்காவிட்டால் நான் பாரிஸ்டர் இளைய தம்பியில்லை!’ என்று வர்மம் பேசினார் அவர்.
பிரேமா: வழக்குக்கும் எதிர் வழக்குக்கும் இடமே யிருக்காது அப்பா. ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?
இளையதம்பி: என்னவோ பார்க்கலாம். இன்னும் நான்கு தினங்கள்தானே இருக்கிறது சாந்தா கொழும்புக்கு வர! அதன்பின் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது.
இரண்டு தினங்களுக்குப் பின் இலங்கைப்பத்திரிகைகளெல்லாம் தமிழ்நாட்டின் தனிப்பெரும் இலக்கிய மேதையான சாந்தா இலங்கைக்கு விஜயம் செய்வதாயும் கமலாலயத்தின் புதிய கட்டிடமொன்றைத் திறந்து வைப்பதற்காகவே அவள் இலங்கைக்கு வருகிறாளென்றும் ஒரு செய்தியைப் பிரபல்யமாகப் பிரசுரித்திருந்தன. நஷ்டஈடு வழக்கைப்பற்றி பத்திரிைகளில் ஒரு பிரஸ்தாபத்தையும் காணோம். கமலாலயத்தினர் ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டியிருப்பது உண்மைதானென்றாலும் அதை சாந்தா திறந்து வைக்கப் போகிறாளென்பது பத்திரிகைச் செய்தியைப் பார்த்த பிறகுதான் பிரேமாவின் குடும்பத்துக்கும் லீலாவின் குடும்பத்துக்கும் தெரியலாயிற்று. அதுவரை நஷ்டஈடு வழக்கு ஒன்றை மட்டும் உத்தேசித்தே சாந்தா இலங்கைக்கு வருவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னை கமலாலயம் நேரடியாகவே இலங்கைப் பத்திரிகைகளுக்கு சாந்தாவைப் பற்றிய பல ரசமான விபரங்களை அனுப்பி வைத்திருந்தது. அவளுடைய இலக்கிய சேவையையும் அவள் நாவல்களின் கற்பனைத் திறனையும் சொல் நயத்தையும் பாராட்டி பல பத்திகள் பத்திரிகைகளிலே பிரசுரிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒன்றிலாவது சாந்தாவின் புகைப்படம் பிரசுரிக்கப்படக் காணோம். இதன் காரணத்தை ஒரு பத்திரிகை மட்டும் குறிப்பிட்டிருந்தது.
“சாந்தா எவ்வளவோ பிரசித்திபெற்ற ஆசிரியையாயிருந்தும் அவரை நேரில் பார்த்தவர்கள் கமலாலய பிரசுரகர்த்தா ஒருவரைத் தவிர வேறு ஒருவருமில்லையென்றால் எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். இவ்வளவு கீர்த்தி வாய்ந்த ஒரு ஆசிரியை ஒருவர் கண்ணிலும் படாமல், தான் யாரென்பதையும் காட்டிக் கொள்ளாமல் சமூகத்திலிருந்து அடியோடு ஒதுங்கி அடையாளம் தெரியாமல் வாழ்க்கை நடத்துவதென்பது அதிசயத்திலும் அதிசயமானது. இதை யாரும் சுலபமாக நம்பமுடியாத அதிசயமென்று வர்ணித்தாலும் மிகையாகாது. இந்த சாந்தாவுக்கு புகைப்படம் கிடையாதாம். அவர் இதுவரை தம்மைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதே யில்லையாம். ‘நான்தான் அந்த ஆசிரியை சாந்தா’ என்று சொல்லிக் கொண்டு பகிரங்கமாக அவர் வெளியில் வருவது இதுதான் முதன் முறையென்றும் இவ்விதம் பகிரங்கமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு அவர் இலங்கை வருவது தெரிந்தால் அவர் யாரென்பதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள அவரது பல்லாயிரக்கணக்கான அபிமானிகளும் இலங்கைக்குப் புறப்பட்டு வருவார்களென்று அஞ்சி சாந்தா இலங்கைக்குப் புறப்படுவது பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதென்றும் இந்த விஜயத்தைப்பற்றி இந்தியப் பத்திரிகைகளில் ஒரு வரிதானும் பிரசுரிக்கப்படவில்லை யென்றும் கமலாலயத்தார் அறிவிக்கின்றனர்.”
இவ்வாறு ஒரே ஒரு பத்திரிகைமட்டும் பிரசுரித்திருந்தது.
இந்தப் பத்திரிகைச் செய்திகளை லீலாவும் பிரேமாவும் எவ்வளவு ஆவலோடு வாசித்தார்களோ அதே போன்ற ஆவலுடன் ரமணியும் திரும்பத் திரும்பப் பலமுறை படித்தா னென்பதைச் சொல்லத்தேவையில்லை.
17. ஆசிரியை சாந்தா
மறுநாள் காலை பிரபல கதாசிரியை சாந்தா கொழும்பு கோட்டை ஸ்டேஷனில் வந்திறங்கினாள்.
அன்று விடியற்காலையே பிரேமா படுக்கையைவிட்டு ழுந்துவிட்டாள். சாந்தாவைப்பற்றி பத்திரிகைகள் வானளாவிப் புகழ்ந்திருந்ததை வாசித்தது முதல் சாந்தாவை நேரில் பார்க்கவேண்டுமென்ற ஆவல் அவளுக்கும் லீலாவுக்கும் துடித்துக்கொண்டிருந்தது. முதல்நாள் இரவு இருவருமே சரியாகத் தூங்கவில்லை. எப்பொழுது பொழுது விடியப்போகிறதென்று அவர்கள் காத்திருந்தார்கள்.
அன்று ரயில்வே ஸ்டேஷனில் ஏராளமான ஜனங்கள் திரண்டு நின்றனர். பல்வேறு சங்கங்களையும் சேர்ந்த தலைவர்களும் நிர்வாக உத்தியோகஸ்தர்களும் மலர்மாலைகள் சகிதம் கோட்டை பிளாட்பாரத்தில் நின்ற காட்சி தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புஷ்பங்களினால் பிளாட்பாரத்தை அலங்கரித்து வைத்திருப்பது போலத் தோன்றியது. இலங்கையின் சரித்திரத்தில் ஞாபகத்துக்கு எட்டியமட்டில் ஒரு எழுத்தாளரை வரவேற்க இவ்வளவு ஜனத்திரள் வேறு எப்பொழுதுமே கூடியிருந்ததில்லை. இந்தக் கூட்டம் போலிசாருக்கும் சரியான வேலையைக் கொடுத்ததெனலாம். ஒரு தமிழ்க் கதாசிரியைக்கு ஜனங்கள் இவ்வளவு உற்சாகமான வரவேற்பளிப்பார்களென்று போலிசார் எதிர்பார்க்கவில்லை! திடீரென்று விடியற்காலை ஜனங்கள் சாரி சாரியாக கோட்டை ஸ்டேஷனுக்குத் திரண்டு போவதைக் கண்டபிறகுதான், போலிஸ் இலாகா – தலைவர் விழித்துக்கொண்டார். அவர் மட்டுமென்ன? இலங்கையிலுள்ள ஆங்கில சிங்களப் பத்திரிகைகளும் சாந்தாவின் விஜயத்தை முதலில் அலட்சியம் செய்தன. தமிழ் ஆசிரியை என்பதற்காக தமிழ்ப் பத்திரிகைகள் சாந்தாவின் விஜயத்தைப் பிரமாதப்படுத்துவதாக அவை முதலில் நினைத்தன. ஆனால் அந்த ஆசிரியையிடம் மகா ஜனங்கள் வைத்திருந்த அபிமானத்தைக் கண்டதும் செய்தி திரட்ட “நான் முந்தி நீ முந்தி” என்று போட்டியிட்டுக் கொண்டு ஆங்கில சிங்களப் பத்திரிகைகளின் நிருபர்களும் கோட்டை ஸ்டேஷனில் வட்டமிட ஆரம்பித்தனர்.
விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதில் தனக்கு நிகர் இல்லையென்று பெயரெடுத்தது இலங்கை. அதிலும் பொது ஜனங்களின் பேரபிமானத்தைப் பெற்ற ஒருவர் வருவதென்றால் கேட்கவேண்டுமா? ரயில்வே அதிகாரிகளும் போலிசாரும் சாந்தாவின் வண்டி வந்தவுடன் வசதியாக சாந்தா கீழே இறங்கி நண்பர்களுடன் உரையாட சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். கமலாலயத்தினர் தெரிவித்ததற்கிணங்க புகைப்படமெடுக்கக்கூடாதென்று பத்திரிகைக்காரர்களுக்கு போலிசார் தெரிவித்தது அவர்களுக்குப் பெரிய ஏமாற்றமாயிருந்தது. லீலாவும் பிரேமாவும் வெகு நேரத்துக்கு முன்பே ஸ்டேஷனுக்கு வந்துவிட்டபடியினால் அவர்களுக்கு பிளாட்பாரத்தில் வசதியான இடம் கிடைத்தது.
சரியாக 7-30 மணிக்கு இந்தியா கோச்சு கோட்டை ஸ்டேஷனில் வந்து நின்றதும் ஸ்டேஷனில் காத்திருந்த ஜனக் கூட்டத்தைப் பார்த்து ரயிலில் பிரயாணம் செய்து வந்தவர்கள் திகைத்துப் போய் விட்டார்கள். ஏனெனில் இவ்வளவு ஆடம்பரமாக வரவேற்கப்படக் கூடிய ஒருவர் தங்களுடன் ரயில் வண்டியில் சகாப் பிரயாணியாக வருகிறாரென்பது அவர்களுக்கு அந்த நிமிடம் வரையில் தெரியாது. மண்டபத்திலும் தலைமன்னாரிலும் ஏறியிறங்கியபொழுது கூட அசாதாரணமான மதிப்பிற்குரிய எவரையும் பிரயாணிகள் கவனிக்கவில்லை. ஆகையால் மலர்மாலைகள் சகிதம் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிளாட்பாரத்தில் நிற்பதைக் கண்டு திகைத்துப்போனதில் ஆச்சரியமொன்றுமில்லை யல்லவா?
வண்டி ஸ்டேஷனில் நின்ற சில வினாடிகளுக்கெல்லாம் சென்னை கமலாலயத்தின் முதலாளி கேசவனும் அவன் மனைவி வஸுமதியும் முதலில் இறங்கினார்கள். வஸுமதியைக் கண்டதும் அவள்தான் சாந்தாவாயிருக்கவேண்டு மென்று நினைத்து ‘ஆசிரியை சாந்தாவுக்கு ஜே!’ என்ற கோஷம் காது செவிடுபடும்படியாகக் கிளம்பியது. பலர் அவசரம் அவசரமாக கொண்டு வந்திருந்த மாலைகளை வஸுமதிக்குப் போட நெருங்கினார்கள். தக்க தருணத்தில் கேசவன் குறுக்கிட்டு ‘இவள் சாந்தா இல்லை! கொஞ்சம் பொறுங்கள்! அதோ இறங்குகிறாள் கதாசிரியை சாந்தா!’ என்றார்.
சுமார் 22 வயதுவரை மதிப்பிடக்கூடிய ஒரு யுவதி வண்டியிலிருந்து இறங்கினாள். அவள் முகத்தை மற்றவர்கள் பார்த்துப் பரிச்சயம் செய்து கொள்ளுவதற்குள் அந்த முகத்தை மறைக்கும்படி மளமளவென்று பூமாலைகள் அவள் தோட்கள் மீது குவிந்தன. சில நிமிடநேரம் அங்கு தாமதித்தாலும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது போன்ற நிலைமை யேற்பட்டுவிட்டது. போலிசாரின் உதவியுடன் சாந்தாவும் அவளுடன் வந்தவர்களும் மெதுவாக ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தனர்.
பொதுஜனங்கள் காட்டிய பேராபிமானம் சாந்தாவின் மனதை உருக்கிவிட்டது. அவள் கண்களிலிருந்து ஓரிரண்டு துளி ஆனந்த பாஷ்பம் சொரிந்ததை அருகில் இருந்தவர்கள் மட்டுமே கவனித்திருக்க முடியும். “ஜே! ஜே” என்று ஜனங்கள் இடைவிடாமல் கோஷித்தனர். அவர்களுடைய ஆவலைப் பூர்த்தி செய்விக்காமற் போவது சாந்தாவுக்கு ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்வதைப்போலிருந்தது. சரேலென்று அவள் காரின் மிதிபலகை மீது ஏறி நின்று கொண்டாள். எல்லோருக்கும் தன்னை நன்கு தெரியும்படி சில நிமிட நேரம் கரம் குவித்துக் கொண்டு நின்று தனது வணக்கத்தைத் தெரிவித்து விட்டு அவள் காரில் ஏறிக்கொண்டாள். கார் கமலாலயத்தை நோக்கிப் புறப்பட்டது.
பிரேமாவும் லீலாவும் வீடு திரும்புகையில் வழியில் அச்சாபீஸிலே நுழைந்தார்கள். ரமணி வழக்கம் போலத் தனது அறையில் உட்கார்ந்திருந்தான். ஒரு வேலையிலும் மனம் செல்லாமல் ஜன்னல் கம்பிகளைத் திரும்பித் திரும்பி எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனைக் கண்டதும் ‘நீங்கள் ஸ்டேஷனுக்கு வரவில்லையே! அடா அடா அடா! என்ன கூட்டம்! எவ்வளவு உற்சாகமான வரவேற்பு! எத்தனை பூமாலைகள்! எவ்வளவு பலமான ஜே கோஷம்! ஒரு கதாசிரியைக்கு மகாஜனங்கள் இவ்வளவு பிரமாதமான வரவேற்பு அளித்ததாகக் கதைகளில் கூட நாம் படித்ததில்லை!’ என்றாள் பிரேமா.
‘அப்படியா!’ என்று பட்டுக்கொள்ளாமல் பதில் சொன்னான் ரமணி.
சாந்தாவின் மூலம் குந்தளத்தைப் பற்றி தனக்குக் கிடைக்கக்கூடிய தகவல்களைப் பற்றியே அவன் மனம் சிந்தனையிட்டுக் கொண்டிருந்தது.
‘ஏன், என்ன யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று லீலா குறுக்கிட்டுக் கேட்டாள்.
பிரேமா:- குந்தளத்தைப் பற்றி சாந்தா என்ன சேதி கொண்டுவந்திருப்பாளோ என்று யோசித்துக் கொண்டிருப்பார்! இயற்கைதானே.’
லீலா:- கடவுள் அருளினால் நல்ல சேதியாகக் கொண்டு வந்திருக்க வேண்டும். சாந்தாவின் முகத்தைப் பார்த்தாலே தெய்வாம்சமும் அருளும் சொட்டுகிறது. கடைந்தெடுத்த தந்தப் பதுமை மாதிரி இருக்கிறாள். அவள் வாயிலிருந்து வரும் செய்தி நல்ல செய்தியாயில்லாமல் வேறு விதமாக எப்படி இருக்க முடியும்?
பிரேமா:- அவ்வளவு பேரும் புகழும் கியாதி இருந்தும் கூட அவளுடைய உடையின் எளிமையைப் பார்த்தாயா? பெயருக்கு ஒரு மெல்லிய தங்கச்சங்கிலிகூட கழுத்திலில்லை. காதில் ஒரு தோடோ அல்லது கையில் இரண்டு வளையல்களோதான் உண்டா? செயற்கையழகு சிறிதுமின்றி சர்வசாதாரண உடையிலேயே சோபிக்கும் சாந்தா அழகு படுத்திக் கொண்டு விட்டால் அப்ஸரஸும் ரம்பையும் திலோத்தமையும் அவளுக்குப் பணிப்பெண்களாக வேண்டியது தான்.
லீலா:- பெரிய மனிதர்களென்றால் பணம் மட்டும் இருந்தால் போதுமா? அத்துடன் குணமும் வேண்டாமா? உலகம் சாந்தாவைப் புகழுவது வீணுக்கல்ல.
பிரேமா:- நாங்கள் பேசிக்கொண்டே போகிறோம். நீங்கள் சும்மா இருக்கிறீர்களே மிஸ்டர் ரமணி!
ரமணி:- இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?
பிரேமா:- சாந்தாவை எப்பொழுது பார்ப்பதாக உத்தேசம்?
ரமணி:- நீங்கள் வர்ணிக்கும் வர்ணனைகளைப்பார்த்தால் அவளை அவ்வளவு சுலபமாகச் சந்திக்க முடியும் போலத் தெரியவில்லையே.
பிரேமா:- உங்களுக்கு கமலாலயத்தின் முதலாளி மிஸ்டர் கேசவனைத் தெரியுமென்று சொன்னீர்களல்லவா? அவரும் வந்திருக்கிறார் சாந்தாவுடன்.
ரமணி:- அப்படியா? மிஸ்டர் கேசவனும் வந்திருக்கிறாரா? அப்படியானால் இப்பொழுதே டெலிபோனில் பேசிப் பார்க்கிறேன்.
இவ்விதம் சொல்லிவிட்டு ரமணி டெலிபோனை எடுத்து கமலாலயத்தை அழைத்தான். கமலாலய மானேஜர் முதலில் பேசினார். கேசவன் வேண்டுமென்று ரமணி கேட்கவே கேசவன் ‘யாரது?’ என்று டெலிபோனில் விசாரித்தார்.
ரமணி:- நான்தான் ரமணி பேசுகிறேன். அங்கு பேசுவது கமலாலய முதலாளி மிஸ்டர் கேசவன் தானே.
கேசவன்:- ஆமாம். வணக்கம். தங்களை நேரில் பார்த்ததில்லா விட்டாலும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுடைய எழுத்து வல்லமையைப் பாராட்டும் பல ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன்.
ரமணி:- நீங்கள் கேலி செய்கிறீர்களென்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் இப்பொழுது உங்களுடன் வாதிப்பதற்காக நான் அழைக்கவில்லை.
கேசவன்:- கேலி செய்வதாக ஏன் நினைக்கவேண்டும்?
ரமணி:- தாங்கள் வெளியிட்ட வனஜாவை நான் காப்பி யடித்ததாகக் குற்றஞ்சாட்டி விட்டு அதே வாயினால் வேறு விதமாகப் பேசுவதென்றால் அது கேலி இல்லாமல் வேறு என்னவாம்?
கேசவன்: சொந்த முறையில் உங்கள் எழுத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் தொழில்முறை யென்பது வேறு.
ரமணி:- அது இருக்கட்டும். உங்களுக்கு சுந்தரம் என்று ஒருவரைத் தெரியுமா?
கேசவன்:- எந்தச் சுந்தரத்தைச் சொல்லுகிறீர்கள்?
ரமணி:- திருச்சி பாஸ்கரய்யரின் மருமகன் சுந்தரம் சென்னையில் படித்துக் கொண்டிருந்த பொழுது அடிக்கடி உங்களை வந்து பார்த்து உங்கள் மூலம் பல புத்தகங்களையும் போட்டிருக்கிறானே அந்தச் சுந்தரத்தை.
கேசவன்: நன்றாகத் தெரியும். அவனுக்கென்ன மகா மேதாவி; எழுத்தில் சூரப்புலி. அவன் எழுதிய புத்தகங்களை இன்றைக்கும் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க உட்கார்ந்தால் பசி தாகம் கூடத் தெரியாது.
ரமணி:- சுந்தரத்தைப் பற்றி உங்களுடைய புகழ்ச்சியைக் கேட்பதற்காக அவனைத் தெரியுமா என்று விசாரிக்கவில்லை. ஒரு சமயம் அவன் குந்தளப்பிரேமா என்று ஒரு கதையைப் பிரசுரிப்பதற்காக உங்களிடம் கொண்டு வந்து காட்டவில்லையா?
கேசவன்: ஆமாம், ஞாபகமிருக்கிறது. ஆனால் அதை நான் படிக்கவில்லை. படிப்பதற்கு அவன் அதைக் கொடுக்க மறுத்துவிட்டான். ஏன் உங்களுக்குத் தெரியுமா அவனை?
ரமணி:- நன்றாகத்தெரியும். அவன் கொடுத்த குந்தளப் பிரேமாதான் இப்பொழுது நாங்கள் பிரசுரிக்கும் குந்தளப் பிரேமா. அதையே நாங்கள் வனஜாவைப் பார்த்து காப்பியடிப்பதாக அநியாயமாக நீங்கள் குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
கேசவன்:- மிஸ்டர் ரமணி! இதெல்லாம் தாங்கள் என்னிடம் சொல்லிப் பயனில்லை. இதைப் பற்றி நீங்களும் சாந்தாவும் நேரில் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டிய விஷயம். முடிவு செய்து கொள்ள முடியாமற் போனால் கோர்ட்டில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் எனக்கு சம்பந்தமில்லை?
ரமணி:- ரொம்ப நல்லது. சாந்தாவை நான் எப்பொழுது பார்க்கலாமென்பதையாவது சொல்ல முடியுமா?
கேசவன்:- எப்பொழுதா? இப்பொழுதே, இந்த நிமிடமே நீங்கள் விரும்பினால் பார்க்கலாம். தங்களைச் சந்திக்க சாந்தா ஆவலுடனிருக்கிறாள். இல்லையில்லை, கொஞ்சம் பொறுங்கள் கேட்டுச்சொல்லுகிறேன்.
சிறிது நேரம் கழித்து “மாலை 4 மணிக்கு நல்ல வேளை யாம். 4 மணிக்கு வருகிறீர்களா?” என்று கேட்டார் கேசவன்.
ரமணி:- சாந்தாவைச் சந்திப்பதற்குக் கூட நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்க்க வேண்டுமா?
கேசவன்: முகல் சந்திப்பு. அதிலும் வழக்கு விஷயமாகப் பேசப்போகிறீர்கள், அதனால் தான் நல்ல நேரத்தில் பேச்சை ஆரம்பிக்கலாமென்று சாந்தா அபிப்பிராயப்படுகிறாள்.
சரியென்று ரமணியும் ஒப்புக்கொண்டான்.
அன்று மாலை நாலுமணிக்கு சாந்தாவைச் சந்திக்க வருவதாகச் சொல்லி டெலிபோனை ரமணி கீழே வைத்தவுடன் “உங்களுடன் நாங்களும் வரலாமா? எங்களுக்கும் சாந்தாவை நேரில் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இன்று காலை பல ஆயிரம் ஜனங்களோடு ஒருவராக நின்று பார்த்தோம். அருகில் இருந்து ஓரிரண்டு வார்த்தை பேசிப்பார்க்க ஆசைப்படுகிறோம்’ என்றாள் பிரேமா.
‘கட்டாயமாக நீங்கள் இருவரும் வரத்தான் வேண்டும். நானே அழைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்களே சொல்லிவிட்டீர்கள்!’ என்றான் ரமணி.
‘சாந்தாவைச் சந்திக்கும் பொழுது பல விஷயங்களைப் பற்றியும் பேச்சு ஏற்படலாம். ஏன் உங்களுடைய குந்தளத்தைப் பற்றியும் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல சாந்தா பல விஷயங்களைச் சொல்லக் கூடும். அப்பொழுது நாங்களும் பக்கத்திலிருப்பது உங்களுக்கு விருப்பமில்லை யென்றால் நாங்கள் சாந்தாவைப் பார்த்தவுடன் திரும்பிவிடுகிறோம். நீங்கள் பேசிவிட்டுப் பிறகு வாருங்கள்!’ என்றாள் பிரேமா.
‘இனி உங்களுக்குத் தெரியக் கூடாதது ஒன்றுமில்லை. தாராளமாக நீங்களும் பக்கத்திலேயே இருக்கலாம். சரியாக மூன்றே முக்கால் மணிக்கு இங்கிருந்து புறப்பட்டால் சரியாயிருக்கும்!’ என்றான் ரமணி.
லீலாவும் பிரேமாவும் போனபிறகு ரமணி தனிமையில் உட்கார்ந்து சிந்திக்கலானான். சாந்தாவிடமிருந்து குந்தளத்தைப் பற்றி என்னென்ன தகவல்கள் கிடைக்கும்? குந்தளத்தின் மனநிலைமையை சாந்தா மூலமாக அறிய முடியுமா? தன் தாயார் என்ன ஆனாள்? கடுமையான காசநோய் வாய்ப்பட்டிருந்த அவளுக்கு பயங்கரமாக ஏதாவது ஏற்பட்டிருக்குமோ? பாஸ்கர ஐயருக்கு மனமாறுதல் ஏற்பட்டிருப்பது சாத்தியமா? இப்படியெல்லாம் அவன் மனம் ஓய்வின்றி சிந்தனையிட்டுக் கொண்டிருந்தது. அவனையறியாமலே அன்று பொழுது விடிந்தது முதல் ஒரு தனி உற்சாகமும் குதூகலமும் அவனிடம் குடிகொண்டிருந்தது. காலையிலிருந்தே வலது கண்ணும் துடித்துக் கொண்டிருந்தது. வலது கண் துடித்தால் நல்ல சகுனமென்பார்களே, ஆகையால் குந்தளத்தைப் பற்றி நிச்சயம் நல்ல செய்திதான் கிடைக்க வேண்டும், என்று ரமணி தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டான்.
லீலாவும் பிரேமாவும் சரியாக மூன்றேமுக்கால் மணிக்கு வந்து சேர்ந்தார்கள். அதே காரில் ரமணியும் ஏறிக்கொண்டான். எல்லோரும் கமலாலயத்தை நோக்கிச் சென்றனர்.
கமலாலயத்தின் வாசலில் இவர்களை எதிர்பார்த்ததைப் போல் மானேஜர் நின்று கொண்டிருந்தார். ரமணி, பிரேமா, லீலா ஆகிய மூவரையும் அவர் ஒரு அறையில் கொண்டு போய்விட்டார். அங்கு கேசவனும் வஸுவும் இருந்தனர். நெடுநாள் பழகிய நண்பர்களைப் போல கேசவன் எழுந்து வந்து ரமணியை மார்புறத்தழுவி ‘இவ்வளவு காலம் கழித்தாவது நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததே, அதுவே பெரிய சந்தோஷம் சுந்தரம்! உட்கார்!’ என்றான்.
வஸு மதி லீலாவையும் பிரேமாவையும் உபசரித்து உட்காரச் சொன்னாள்.
ரமணி: மிஸ்டர் கேசவன்! நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் நான் இலங்கையிலிருப்பதை தெரிந்து கொண்டு தான் இங்கு வநதிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?
கேசவன்:- ஆட்சேபனையென்ன? உங்கள் பெயரை நீங்கள் மாற்றி வைத்துக் கொண்டு விட்டால் உலகத்தையே ஏமாற்றி விடலாமென்று நினைத்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால், போட்டோப் படமெடுக்கும் காமிராவை ஏமாற்ற முடியுமா? இதோ பாருங்கள் உங்கள் படம். சரிதானே?
கேசவன் இரண்டு புகைப்படங்களை ரமணியிடம் கொடுத்தான். ‘என் படமல்லவா? இவை உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டான் ரமணி. உங்கள் பத்திரிகையில் உங்களுடைய படத்தைப் பிரசுரித்தால் யாருக்காவது உருவம் தெரிந்துவிடப் போகிறதே யென்று பயந்து நீங்கள் பிரசுரிக்காவிட்டாலும் எப்படியோ எனக்குக் கிடைத்து விட்டது பாருங்களேன். உங்கள் படத்தைத் தருவித்து மிஸ்டர் ரமணியென்ற பெயருக்குள் யார் புகுந்துகொண்டு கபடநாடகம் நடிக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு தான் நான் கொழும்புக்கு வந்திருக்கிறேன். நான் மட்டும் வரவில்லை. கொஞ்சம் பொறுங்கள். உங்களுக்குப் பரிச்சயமான இன்னொருவரையும் அழைத்து வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு கேசவன் எழுந்து போனான்.
சில வினாடிகளுக்கெல்லாம் பாஸ்கரய்யர் திறந்த கரங்களுடன் அறைக்குள் ஓடிவந்து ‘அப்பா சுந்தரம்! உன்னைத் தேடிப்பிடிக்க எவ்வளவு கஷ்டமாகிவிட்டதடா? சின்னஞ்சிறு வயதில் இப்படியா வீட்டையும், ஊரையும், வயது போன தாயாரையும் தவிக்கவிட்டுக் கப்பலேறிப் போவது?’ என்று கண்ணீர் வடிய சுந்தரத்தைத் தழுவிக் கொண்டார்.
சுந்தரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுக்கு எல்லாம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருந்தது. மாமா பாஸ்கரய்யரை எதிர்பாராமல் திடீரென்று சந்திக்க நேரிட்டதின் அதிர்ச்சியிலிருந்து தெளிவடைய அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தன. அவன் சாஷ்டாங்கமாக அய்யரை நமஸ்கரித்து ‘என்னை மன்னிக்க வேண்டும் மாமா!’ என்றான்.
அய்யர் அவனை எழுப்பி, ‘உன் தாய் உன்னைப் பார்க்க எவ்வளவு துடித்துக் கொண்டிருக்கிறாள் தெரியுமா? ஒரு இரவு அவள் நல்ல தூக்கம் தூங்கியிருப்பாளா? பகலும் இரவும் ஓயாது இருமிக்கொண்டே கண் விழித்திருக்கும் அவளுடைய நெஞ்சை உன்னுடைய பிரிவு சிறிது சிறிதாக அறுத்துக் கொண்டிருக்கிறது. உன் முகத்தைப் பார்த்து விட்டுத் தான் நிம்மதியாகப் பிராணனை விட வேண்டுமென்று அவளுடைய உயிரும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது’ என்றார் அய்யர்.
சுந்தரம்:- அம்மாவுக்குத்தான் ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக கடவுள் கிருபை இன்னும் கொஞ்சம் இருக்கிறது போலிருக்கிறது.
கேசவன்:- தாயாரிடம் கரிசனை காட்டும் பிள்ளையின் அழகைப்பாருங்கள். இரண்டு வருஷமாக தலை தெரியாமல் தீவாந்திரத்தில் போய் உட்கார்ந்து கொண்டிருந்து விட்டு இப்பொழுது தாயாருக்கு அனுதாபப்படுகிறான்!
அய்யர்:- அவனைக் குறைசொல்லிப் பிரயோசனமில்லை மாப்பிள்ளை!
மாப்பிள்ளை என்று கேசவனை அய்யர் அழைத்தது சுந்தரத்துக்கு சுருக்கென்று முள் தைத்த மாதிரியிருந்தது. மாப்பிள்ளை யென்று அழைப்பதின் அர்த்தமென்ன? குந்தளத்தின் கணவர்தானே அய்யருக்கு மாப்பிள்ளையாக முடியும்? ஏற்கனவே கேசவனுக்குக் கல்யாணமாகிவிட்டது. அவருடைய மனைவி வஸுமதியும் இதோ இருக்கிறாள். அப்படியிருக்க கேசவன் அய்யருக்கு எப்படி மாப்பிள்ளையாக முடியும்? ஒரு சமயம் வஸுமதி இருக்கும் பொழுதே அவளுடைய சம்மதத்துடன் குந்தளத்தையும் கேசவன் மணந்து கொண்டிருப்பாரோ? சில பணக்காரர்கள் இளம் மனைவி இருக்கும்பொழுதே பிள்ளையில்லையென்று நொண்டிச்சாக்குச்சொல்லிக் கொண்டு இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளுவதைப் பார்த்திருக்கிறோம். ஏன், நம்முடைய கதைகளி லொன்றிலேயே இப்படி எழுதியிருக்கிறோம். ஒருக்கால் அதுமாதிரி குந்தளத்தையும் கேசவன் மணந்து கொண்டிருப்பாரோ? அப்படித்தானிருக்கவேண்டும். இல்லாவிட்டால் கேசவனுக்கும் அய்யருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? கேசவனுடன் அய்யர் கொழும்புக்குப் புறப்பட்டுவர காரணமென்ன?
இப்படிச் சிந்திக்கலானான் சுந்தரம். இந்தப் பயங்கர எண்ணங்கள் அவனுக்கு சொல்ல முடியாத வேதனையை உண்டு பண்ணின. கேசவனைக் குந்தளம் மணம் செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தபொழுதே அவனுடைய நெஞ்சு ஆயிரம் சுக்கல்களாக வெடித்து விடும் போலிருந்தது. அவனுடை மனப்போக்கை அய்யர் ஒருவாறு ஊகித்துக்கொண்டார். உடனே அவர் சொன்னார்:- ‘சுந்தரம், மாப்பிள்ளை யென்று கேசவனை அழைத்தவுடன் ஏன் இப்படிப் பிரமைப் பிடித்தவன் மாதிரிப் பார்க்கிறாய்? உண்மையில் கேசவன் என்னுடைய மாப்பிள்ளை தானப்பா? நம் வீட்டில் குந்தளத்துக்குத் தாய் போலிருந்து வளர்த்த மகாலட்சுமி சங்கரியைத் தெரியுமில்லையா உனக்கு! அவளுடைய பெண்தான் கேசவனை மணந்திருக்கும் வஸுமதி. என் குழந்தையோடு குழந்தையாக வளர்த்த வஸுமதியின் கணவன் எனக்கு மாப்பிள்ளை முறையாகத்தானே வேண்டும்?’ என்றார்.
சுந்தரம்:- நான் உங்களைப் பற்றி மிஸ்டர் கேசவனிடம் எவ்வளவோ முறை பேசியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர் உங்களைத் தெரியும் போலக் காட்டிக்கொள்ளவே யில்லை. இதுதான் போகட்டு மென்றால், நான் திருச்சிக்கு வந்திருந்த பொழுது சங்கரி மாமிக்கு இப்படி ஒரு பெண் இருப்பதாகவும் என்னிடம் யாருமே சொல்லவில்லை. இதெல்லாம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை மாமா!
கேசவன்:- எப்படிச் சொல்லுவார்கள்? நான் கேட்டுக் கொண்டேன் மாமாவை என்னைப் பற்றி உங்களிடம் ஒன்றுமே சொல்ல வேண்டாமென்று. மாமாவைப் பற்றி நீங்கள் கன்னாபின்னாவென்று என்னிடம் உளறிக் கொட்டிய பிறகு எனக்கும் மாமாவுக்கும் சம்பந்தமிருப்பது தெரிந்தால் உங்களுக்கு மன நிம்மதியிருக்குமா? அதற்காகத்தான் சொல்ல வேண்டாமென்றேன்.
சுந்தரம்:- இப்பொழுதுதான் தெரிகிறது. இவ்வளவு நாடகத்துக்கும் கபட சூத்திரதாரி நீங்கள் தானென்று!
வஸுமதி:- இத்தனை கதை பேசுகிறவர் அக்கா குந்தளத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது விசாரிக்கிறாரா பார்த்தீர்களா?
இவ்வளவு நேரமும் மௌனமாயிருந்த வஸுமதி நாசூக்காக ஒரு கேள்வி கேட்டது சுந்தரத்தை வெட்கித் தலைகுனியச் செய்தது.
சுந்தரம்:- இல்லை! மாமா… என்று ஏதோ நொண்டிச் சாக்குச்சொல்ல வாயெடுத்தான்.
‘அவள் கிடக்கிறாள், சுந்தரம்! சிறுவயதிலிருந்தே யாரையாவது கிண்டல் கேலி செய்துகொண்டிருப்பதென்றால் வஸுவிற்கு ரொம்பப் பிரியம்! குந்தளம் சௌக்கியமாயிருக்கிறாள். உன்னை ரொம்ப விசாரித்ததாகச் சொல்லச்சொன்னாளப்பா!’ என்று பாஸ்கரய்யர் இடைமறித்துச் சொன்னார்.
சுந்தரம்:- ‘மாமாவை எதிர்பாராமல் பார்த்த அதிசயத்தில் என்னுடன் வந்திருப்பவர்களை அறிமுகம் செய்து வைக்க மறந்துவிட்டேனே! இதோ, இவள்தான் பிரேமா! நவலங்காவின் சொந்தக்காரி! பாரிஸ்டர் இளையதம்பியின் பெண்! அவளுடைய சிநேகிதை லீலா மற்றவள். இலங்கைக்கு வந்ததும் என்னை சொந்தத் தகப்பனார் போல ஆதரித்தவரின் பெண். லீலாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. பிரேமாவுக்கு அடுத்தவாரம் கல்யாணம்!’
கேசவன்:- இந்த விவரங்களெல்லாம் முன்னரே உங்களுடைய குந்தளப்பிரேமாவை வாசித்ததிலிருந்து எங்களுக்குத் தெரியும். இலங்கைக்கு வந்த கோபாலின் இரு சினேகிதைகள் இவர்கள்தான்! அவர்களையும் சந்திக்க நேரிட்டதற்கு ரொம்பச் சந்தோஷம்.
வஸு:- ‘நாம் பிரேமாவின் கல்யாணத்துக்கு இருந்து விட்டுத்தான் இந்தியா திரும்பப் போகிறோம். சரிதானே?’ என்று கேசவனைப் பார்த்துக் கேட்டாள்.
கேசவன்:- உங்கள் பெண்ணின் சமர்த்தைப் பார்த்தீர்களா மாமா! பிரேமாவைப் பார்த்து அரைமணியாகவில்லை, அதற்குள் எவ்வளவு சிநேகமாகி விட்டார்கள் இருவரும்! நம், வழக்கு முடிந்து தீர்ப்புக் கூற ஒரு மாதமாவது ஆகாதா வஸு! அதுவும் இலங்கைக் கோர்ட்டுகள் எப்படியோ! வழக்குமுடிந்து நஷ்டஈடு தொகையை வசூலிக்காமல் சாந்தா கிளம்பப்போவதில்லை. அவளை இலங்கையில் தனியாக விட்டு நாமும் கிளம்ப முடியப்போவதில்லை.
சாந்தாவின் பெயரை கேசவன் குறிப்பிட்டபொழுது தான் அங்கு வந்த உண்மையான காரணம் சுந்தரத்தின் நினைவுக்கு வந்தது. அதுவரை ஏதோ ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிப்பதைப்போல அவன் நினைத்துப் பேசிக்கொண்டிருந்தான். பிரேமாவுக்கும் லீலாவுக்கும்கூட தாங்கள் சாந்தாவைப் பார்க்கவே அங்கு வந்திருக்கிறோமென்ற ஞாபகமில்லை. சுந்தரத்தின் வரலாறுகள் அவர்களுடைய மனதை அவ்வளவுதூரம் கவர்ந்திருந்தன.
சுந்தரம்:- இத்தனை நாடகத்துக்கும் சூத்திரதாரியான நீங்கள் தான் இவ்வழக்குக்கும் சூத்திரதாரியா யிருக்கவேண்டும். நெஞ்சு அறியப் பொய் வழக்குத் தொடரச் சொல்லியிருக்கிறீர்களே, இது நியாயமா மிஸ்டர் கேசவன்? சாந்தாவைக் கொண்டு வனஜா கதையை நீங்கள்தான் எழுதச்சொல்லியிருக்க வேண்டுமென்பது இப்பொழுதுதான் தெரிகிறது.
கேசவன்:- இல்லை. நீங்கள் சொல்லுவதும் நினைப்பதும் தவறு! இப்பொழுது மாமாவுடைய அனுமதியுடனேயே வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடு வசூலிக்க சாந்தா வந்திருக்கிறாள். இதில் உங்களுக்கென்ன நஷ்டம்? நஷ்டஈடு கொடுக்கப் போவது பத்திரிகையின் முதலாளிதானே?
சுந்தரம்:- அது வேறு விஷயம்! சாந்தா எழுதிய வனஜாவை இந்த வாரம்தான் படித்தேன். உங்களுடைய நஷ்டஈடு நோட்டீஸ் வந்த பிறகுதான் அதை வாசித்துப் பார்த்தேன். அதுவும் என்னுடைய குந்தளப் பிரேமாவும் ஒரே கதை யென்றாலும் சத்தியமாக என் கதை காப்பியடித்த கதையில்லை.
கேசவன்:- இந்த விஷயம் எனக்குத் தெரியாது மிஸ்டர் சுந்தரம். இதில் சமரசமாகப் போவதுதான் நல்லதென்று எனக்குத் தோன்றுகிறது. ஏதோ, ரூ. 50000 இல்லாவிட்டாலும் ரூ.25000 ஆவது கொடுக்கத் தயாராயிருந்தால் தான் ராஜிசெய்துகொள்ள சாந்தா உடன்படுவாள். எதற்கும் நீங்களே அவளுடன் நேரில் பேசிப்பாருங்கள். அதோ அந்த அறையிலிருக்கிறாள் சாந்தா!….ஏன், தயங்குகிறீர்கள், போய்ப் பேசிப்பாருங்களேன்.
சுந்தரம்:- சரி, பார்க்கிறேன். பிரேமா, லீலா, வாருங்கள்; சாந்தாவுடனேயே பேசுவோம்.
கேசவன்:- அவர்கள் எதற்கு?
சுந்தரம்:- சாந்தாவைப் பார்க்கவே அவர்கள் ஆவலோடு வந்திருக்கிறார்கள்.
கேசவன்:- சாந்தா எங்கே ஓடிப்போகிறாள். இங்குதானே இருக்கப் போகிறாள்? அவர்கள் பிறகு பார்க்கட்டும். முதலில் நீங்கள் வழக்கு விஷயத்தைப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிப் பேசும்பொழுது மற்றவர்கள் பக்கத்திலிருப்பது அவ்வளவு உசிதமில்லை. அதை சர்ந்தா விரும்பவும் மாட்டாள்.
சரியென்று சொல்லி சுந்தரம் மட்டும் எழுந்து அடுத்த அறைக்குள் நுழைந்தான். அங்கு பார்த்த காட்சி அவனை அப்படியே கல்லாகச் சமைந்து போகச் செய்தது.
18. உடைந்த உள்ளங்கள் ஒன்று சேர்த்தன
அறையில் நுழைந்த சுந்தரம் அங்கு சாந்தாவுக்குப் பதில் குந்தளம் நிற்பதைக் கண்டு திகைத்துப் போய் விட்டான். சில நிமிட நேரம் அவனுக்கு தலை கிறுகிறுவென்று சுற்றுவதைப் போலிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகள் அவனுடைய நாவை அடைத்து விட்டன. கண்களை ஒரு முறை கசக்கிக்கொண்டு பார்த்தான்.
தூய வெண்ணிறப் பட்டாடை உடுத்து அதே குந்தளம்தான் அங்கு நின்று கொண்டிருந்தாள் தலை கவிழ்ந்த வண்ணம்.
“குந்தளம்! நான் காண்பது கனவு அல்லவே!” என்று மெதுவாகக் கேட்டான் சுந்தரம் அதிர்ச்சியிலிருந்து முற்றும் விடுபடாமல்.
”இல்லை அத்தான்! குந்தளம் தான்! உங்களுடைய மாமன் பெண் குந்தளம்தான். கனவில்லை அத்தான். கனாக் கண்டு கொண்டிருந்த எல்லோரும் இப்பொழுது கண் விழித்துக் கொண்டு விட்டோம்!” என்றாள் அவள்.
குந்தளம் அப்பொழுது தான் தலை நிமிர்ந்து சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் திவலைகள் கண்ணாடிக் கன்னங்களின் வழியாக வழிந்து முகவாய்க்கட்டை நுனியில் நின்று நர்த்தனம் செய்தன. “என்னைப் பார்ப்பதற்கு நீங்கள் சந்தோஷப்பட வில்லையா, அத்தான்?” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கேட்டாள் குந்தளம்.
”இதற்கு இரண்டு வருட காலம் தவம் செய்துகொண்டிருந்தேன் குந்தளம். ஒன்று கேட்கிறேன். வனஜா கதை உன் சம்மதத்துடன் எழுதப்பட்டதா? அதன் முடிவும் நீ சொல்லியபடிதான் சாந்தா எழுதினாளா?” என்று ஆவலுடன் கேட்டான் சுந்தரம்.
குந்தளம்:- “ஆமாம், அத்தான். வனஜா கடைசியில் தன்னுடைய காதலனையே கல்யாணம் செய்து கொள்ளுவதைத் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அந்த முடிவை நான் மட்டுமல்ல, அப்பாவும் அத்தையும் கூட ஆமோதித்திருக்கிறார்கள். அவர்களுடைய பரிபூரண சம்மதத்துடனேயே வனஜாவை சாந்தா இவ்விதம் முடித்தாள்.
சுந்தரம்:. அப்படியா! உண்மையில் தெய்வத்துக்கு ஈவிரக்கமிருக்கிறது! நன்றி கெட்ட கற்சிலையென்று கடவுளை நான் சபித்ததெல்லாம் அநியாயம். கடவுள் ஒருவர் இருக்கத்தான் செய்கிறார். இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய அதிசயங்கள் நடக்கவே நடக்காது.
குந்தளம்:- உங்களுடைய குந்தளப்பிரேமா கதையில் ஒரு அத்தியாயத்தை தற்செயலாக வஸு வாசித்தாள் நவலங்காவில் கமலாலயம் தங்களுடைய புத்தகம் ஒன்றுக்கு விளம்பரம் கொடுத்திருந்தார்களாம். அந்தப் பத்திரிகையின் பிரதி வந்ததும் அதில் குந்தளப்பிரேமா கதையிருப்பதை வஸு பார்த்தாள். கதையின் தலைப்பில் என் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டதும் அவளுக்கு சந்தேகம் தட்டியது. உடனே கொழும்பு கிளை ஸ்தாபனத்துக்கு எழுதி நவலங்காவின் பழைய பிரதிகளையெல்லாம் தருவித்து வாசித்தாள். அவளுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது. உடனே திருச்சிக்குப் புறப்பட்டு வந்து என்னிடம் சொன்னாள். குந்தளப்பிரேமாவை நானும் படித்த பின் நீங்கள் கொழும்பில் மாறுபெயருடனிருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாதபடி தெரிந்துவிட்டது. உங்கள் போட்டோவை வஸுவின் கணவர் தருவித்தார். பாக்கி ஏற்பாடெல்லாம் சங்கரி மாமியையும் வஸுவையும் சேர்ந்தது. அப்பாவையும் அத்தையையும் சரிப்படுத்தியது சங்கரி மாமிதான். அத்தைக்கும் கொழும்புக்கு வரவேண்டுமென்ற ஆசை. ஆனால் இந்தத் தள்ளாத வயதில், அதுவும் உடம்பு சரியில்லாத நிலைமையில் இங்கு வரக்கூடாதென்றும் உங்களைக் கையோடு அழைத்து வந்து விடுவதாயும் சமாதானம் சொல்லி விட்டு வந்திருக்கிறோம்.
சுந்தரம்:- என்னை இந்தியாவுக்கு அழைத்துப் போகவா வந்திருக்கிறீர்கள்?
குந்தளம்:- அத்தானுக்கு இனிமேல் துறவறம் வேண் டாம். கிரகஸ்தாச்ரமம் இல்லாமல் துறவறம் பலன் கொடுக்காது. சாந்தாவின் கதை இலக்கியத்தில் முடிந்தாலும் நிஜ வாழ்க்கையில் இன்னும் முடியவில்லை அத்தான். அந்தக் கதையை நிஜமாக்கி உங்கள் குந்தளப்பிரேமாவையும் முடிக்க வேண்டாமா?
சுந்தரம்:- என்னைப் போல பாக்கியசாலி இந்த உலகத்தில் இல்லை குந்தளம். உன் தெய்வீகமான அன்புக்கு நான் என்ன சொல்லுவேன்!
குந்தளம்:- நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம். பேசாமல் புறப்பட்டு எங்களுடன் இந்தியாவுக்கு வந்தால் போதும்.
சுந்தரம்:- இந்த வழக்கு விஷயம் ஒரு விதமாக முடிய வேண்டும். அந்த சாந்தா எங்கே? இங்கே இருப்பதாகச் சொன்னார்களே! நீ மட்டும் அவளிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிக் கொடுத்துவிடு. உடனே நான் புறப்பட்டு விடுகிறேன்
குந்தளம்:- ஆமாம், அவளை மறந்துவிட்டோமே. கூப்பிடட்டுமா? என்ன மாதிரி கடிதம் அவளிடமிருந்து வேண்டும் அத்தானுக்கு!
சுந்தரம்:- குந்தளப்பிரேமா அவளுடைய வனஜாவைப் பார்த்து காப்பியடித்ததில்லை யென்று அவள் கைபட ஒரு கடிதம் வாங்கிக் கொடுத்தால் அதை நவலங்காவில் பிரசுரித்து என் மீதுள்ள அபாண்டமான பழியைப் போக்கிக் கொண்டு புறப்பட்டு விடுகிறேன்.
குந்தளம்:- ஒரு கடிதம் என்ன! கூடை கூடையாக எழுதிக் கொடுக்கிறேன். கடிதம் எதற்கு அத்தானுக்கு! குந்தளப்பிரேமாவின் கடைசி அத்தியாயத்தை நானே எழுதி முடித்து விடுகிறேனே!
சுந்தரம்:- நீயே எழுதித் தருகிறாயா? அப்படியானால் அந்த சாந்தா நீதானா? என்று திகைப்புடன் கேட்டான்.
குந்தளம்:- நான்தான் சாந்தா; சாந்தாதான் நான்! ஒரு சமயம் என்னைக் கதை எழுதும்படி நீங்கள் சொல்லவில்லையா? நான் எழுதிக் கொடுத்தால் கமலாலயத்தில் சொல்லி அதைப் புத்தகமாகப் பிரசுரிக்கச் சொல்லுகிறேனென்று என்னுடைய புத்தகசாலையில் நின்று கொண்டு ஒரு நாள் சொன்னீர்களே, அதை மறந்து விட்டீர்களா? அப்பொழுது நான் இரவுபகலாக ஏதோ எழுதிக்கொண்டே யிருப்பதாக முனிசாமி கூட உங்களிடம் சொல்லவில்லையா?
சுந்தரம்:- ஆம், இப்பொழுது ஞாபகம் வருகிறது.
குந்தளம்:- வஸுமதியும் நானும் சேர்ந்து படித்தவர்கள். சிறு பிராயத்திலிருந்தே கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பற்றுதலுண்டு. நீங்கள் தனிமையில் படித்துக் கொண்டிருந்த பொழுது வஸு என்னை ஏதாவது கதை எழுதிக் கொடுக்கும்படி ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். என்னுடைய பெயர் கண்டிப்பாக எக்காரணத்தை முன்னிட்டும் யாருக்கும் தெரியக்கூடா தென்று சத்தியம் வாங்கிக் கொண்டு சாந்தா என்ற பெயரில் நான் ஒரு புத்தகம் எழுதினேன். அந்தப் புத்தகத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகப்படுத்தியது. சாந்தாவின் புத்தகத்தை உலகமே புகழுவதைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படுவதாக வஸு எனக்கு எழுதினாள். அது மேலும் மேலும் புத்தகங்கள் எழுதி வெளியிடவேண்டு மென்ற என் ஆவலைத் தூண்டியது. இந்து சமூகத்தின் சீர் கேடான நிலைமையையும் சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் கதைரூபமாக அம்பலப்படுத்த வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. இதற்கு புனைப்பெயர் ரொம்ப உபயோகமா யிருந்தது. வனஜாவை எழுதியது நான்தான் என்பது தெரியாமலே அதை நான் படிக்கக் கூடாதென்று அப்பா என்னிடம் கேட்டுக் கொண்டார்! அதிலிருந்து இரண்டு பக்கங்களை சங்கரிமாமி கிழித்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டி விதவா விவாகத்தின் நியாயத்தைப்பற்றி என்னுடன் விவாதித்தாள். நீங்கள் கொழும்பிலிருப்பது நிச்சயமாகத் தெரிந்து அப்பாவும் அத்தையும் என் இஷ்டப்படி நடக்கத் தயாராகும்படி சங்கரிமாமி செய்த பிறகுதான் சாந்தா நான் தானென்பது அப்பாவுக்குத் தெரியும். வனஜாவின் கதை முடிவை அப்பாவும் அத்தையும் இப்பொழுது பூரணமாக ஆமோதிக்கிறார்கள் அத்தான்.
சுந்தரம்:- என்னால் நம்பவே முடியவில்லை, குந்தளம்! இன்று பொழுது விடிந்தது முதல் ஒவ்வொன்றும் அதிசயமாக ஏற்பட்டு என்னை திக்குமுக்காடச் செய்கின்றன.
குந்தளம்:- உண்மையைத் தெரிந்துகொள்ள அத்தானுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆனால் அதை நீங்கள் கை நழுவவிட்டீர்கள். கிராமக் கோவிலில் நடந்ததை சற்று நினைவுபடுத்திப்பாருங்கள். உங்கள் நெஞ்சில் சாந்தா இருக்கிறாளென்று நான் சொன்னபொழுது நான நினைப்பது தவறு. என்னைத் தெய்வம் கைவிட்டுவிடும் என்று நீங்கள் சொல்லவில்லையா? அந்தத் தெய்வம் என்னைக் கைவிடாமல் கைகொடுத்துக் காப்பாற்றிவிட்டது, அத்தான்!
இப்படி குந்தளம் சொல்லிக் கொண்டிருக்கையில் இருவரும் சிறு குழந்தைகளாயிருக்கையில் அவர்களுக்கு வேடிக்கைக் கல்யாணம் செய்து வைப்பதற்கு உபயோகித்த அதே மேளவாத்திய கிராமபோன் பிளேட் இயங்கும் சப்தம் கேட்டது.

“மேளம் ரெடி! எல்லோரும் வரலாம்!” என்று சொல்லி பொக்கைப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டே பக்கத்து அறையொன்றிலிருந்து முனிசாமி வந்தான். குந்தளத்துக்கும் சுந்தரத்துக்கும் நடந்த சம்பாஷணையை கதவு மறை விலிருந்து முழுவதும் கேட்ட பிரேமா, லீலா, வஸுமதி முதலியோர்களும் கலகலவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
“நேரமாச்சு! முகூர்த்த நேரம் தவறிவிடப்போகிறது! மாலை மாற்றியாகட்டும்!” என்று சொல்லி இரண்டு மாலைகளை நீட்டினான் முனிசாமி.
“இந்தப் பொல்லாத பெண்தான ஆசிரியர் ரமணியை இந்தப் பாடுபடுத்தினவள்! அதற்குச் சரியான தண்டனை இது தான்! மாலையைப் போட்டுக் கட்டுங்கள் மிஸ்டர் ரமணி!” என்று சொல்லி முனிசாமியிடமிருந்து ஒரு மாலையை பிரேமா வாங்கி சுந்தரத்தினிடம் கொடுத்தாள். இன்னொரு மாலையை வஸுமதி வாங்கி, ”இந்தப் போக்கிரி அத்தானுக்கு எத்தனை ஏங்கினாய்? எத்தனை புத்தகம் எழுதினாய்? கன்னாபின்னா என்று எனக்கும் எத்தனை கடிதம் எழுதினாய்? இப்பொழுது சொல்லு அரைலட்ச ரூபாய் நஷ்டஈடு வேண்டுமா? அல்லது அத்தான் வேண்டுமா என்று?” எனக் கேட்டுக்கொண்டே மாலையை குந்தளத்தினிடம் கொடுத்தாள்.
“ஏன் நேரமாகல்லை! மாலை மாற்றியாகட்டும்! நல்ல நேரம் இது!” என்று சொல்லிக்கொண்டு பாஸ்கரய்யரும் கேசவனும் உள்ளே பிரவேசித்தனர்.
(முற்றிற்று)
– குந்தளப் பிரேமா, முதற் பதிப்பு: 1951, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.