குதிரைக்காரன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 886 
 
 

சதுரகிரி தேசத்து மன்னர் சூரியவர்மன் மகள் இளவரசி சாம்பவிக்கு இருப்புக்கொள்ளவில்லை.  கூண்டில் அடைபட்ட கிளியைப்போல் ஓரிடத்திலேயே அடிமை போல அடைபட்டுக்கிடப்பதை விரும்பாதவளாய் வெளியே சென்று நாட்டைச்சுற்றிப்பார்க்க மாறு வேடத்தில் நகர்வலம் போக வேண்டுமென தந்தையிடம் பிடிவாதம் பிடித்தாள்.

“அரண்மனைக்கு வெளியே செல்வது அவ்வளவு நல்லதல்ல. கொடியவர்களும், திருடர்களும், கொலைகாரர்களும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களும் நாட்டில் அதிகரித்து விட்டனர். எதிரி நாடான சப்தகிரி தேசத்து மன்னர் சந்திரவர்மன் நம் நாட்டின் மீது படையெடுத்துவரப்போவதாக ஒற்றர்கள் செய்தி கொண்டு வந்துள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் நீயும், மகாராணியான உனது தாயும் மிகுந்த எச்சரிக்கையுடன் காவலர்களுடைய பாதுகாப்பிலேயே, அரண்மனைக்குள்ளேயே இருப்பது தான் நல்லது” என கூறிய தந்தையின் பேச்சைக்காதில் வாங்கவே இல்லை.

“எனக்கு நீங்களே சிறு பிராயத்தில் போர் பயிர்ச்சி கொடுத்ததை மறந்து விட்டீர்களா தந்தையே….? ஒரே வீச்சில் ஒன்பது பேரின் தலையைக்கொய்து விடுவேன். நாட்டிற்குள் குற்றவாளிகள் அதிகரித்து விட்டதற்கு நாம் தான் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டும். காட்டிலும், சேற்றிலும் பாடுபடும் மக்கள் மன்னரான உங்களை நம்பித்தான் வரிகளை முறையாகச்செலுத்தி வாழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களை பயமுறுத்தும் கள்வர்களையும், கயவர்களையும் விட்டுவைப்பது நல்லதல்ல. அவர்களைக்களையெடுக்க நானே வீரர்களுடன் செல்கிறேன். எனக்கு இப்பொழுதே அனுமதி கொடுத்து ஆசீர்வதியுங்கள்” சொல்லி காலில் விழுந்த மகளை மன்னர் சூரியவர்மனால் தடுக்க இயலவில்லை.

“நமது தேசத்தின் சரித்திரத்தில் இதுவரை பெண்கள் போருக்குப்போனதில்லை, நகர்வலமும் சென்றதில்லை. அழகைப்பராமரித்து, வாரிசுகளைப்பெற்றெடுத்து வளர்ப்பதே கடமை என நினைத்து வாழ்ந்து வந்தனர். ஆனால் நீயோ சரித்திரத்தை மாற்றி எழுத முயற்சி செய்கிறாய்… அந்த பராசக்தி மகிஷனை சம்ஹாரம் செய்த வரலாறு வேண்டுமானால் நம் தேசத்துக்கு இன்றும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறது. அதை நினைவு படுத்தவே நவராத்திரி கொண்டாடுகிறோம். அன்னை பராசக்தியின் ரூபமாக உள்ள நீயும் நாட்டில் உள்ள கெட்ட எண்ணம் கொண்டு நல்லோரைத்துன்பத்துக்கு ஆளாக்குவோரை சம்ஹாரம் செய்து வெற்றியுடன் திரும்பி வா” மன்னர் சொல்லி மகளை வாழ்த்தினாலும் நாட்டின் வாரிசுக்கு பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கரை இருந்ததால், மகளுக்குத்தெரியாமல் மாறு வேடத்தில் நாட்டின் சாதாரண பிரஜைகளைப்போல வேடமிட்டு பல வீரர்களை பாதுகாப்பு கவசமாக அனுப்பி வைத்தார்.

இரவில் கிராமத்துப்பக்கம் சென்றபோது குதிரையில் எதிரே வந்த ஒரு வாலிபனை கைநீட்டி நிறுத்தினாள். ஆண் வேசம் போட்டிருந்தாலும் ஆண்போல கச்சிதமாக அவளால் பேச இயலாததால் குதிரைக்காரன் கேலி பேசி கைகொட்டிச்சிரித்தான்.

“நாளை தேவ மங்கையைக்காண்பாய் என நேற்று பார்த்த சோதிடர் சொன்னார். அவர் சொன்னது எப்போதும் பலித்தது போல் இப்போது பலிக்கவில்லை. இனிமேல் வேறு சோதிடரைத்தான் பார்க்க வேண்டும்” என கூறியதைக்கேட்ட மாறுவேடத்தில், அதுவும் ஆண் வேடத்திலிருந்த சாம்பவி “எங்கே இருக்கிறார் நீங்கள் நேற்று சந்தித்த சோதிடர்?” என கேட்டதும் மறுபடியும் சிரித்த வீரன்” ஏன் பெண் குரலில் பேசத்தெரிந்த நீங்கள் பெண்ணாக மாற முடியுமா? எனக்கேட்க வேண்டுமா?” எனக்கேட்டான்.

“ஆம்… தேவ மங்கையாக நான் மாற இயலுமா? எனக்கேட்க வேண்டும். ஏனென்றால் வருங்காலத்தை முன் கூட்டியே சொல்லும் சோதிடர் வாக்கு உங்கள் விசயத்தில் பலிக்க வைக்க வேண்டும் அல்லவா …?” என்றாள்.

“வரலாற்றில் இருப்பதெல்லாம் கட்டுக்கதை தான். தேவலோகம், ரம்பை, ஊர்வசி என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்களே தவிர நாடெல்லாம் சுறுறி வரும் என்னால் இது வரை அப்படியொரு அப்ஸரஸை பார்க்கவே முடியவில்லை. நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு வேளை நமது நாட்டு இளவரசி தேவ மங்கையைப்போல் இருக்க வாய்ப்புள்ளது.

என்னைப்போல் சாதாரண பிரஜையால் அரண்மனைக்குள் சென்று அவர்களைச்சந்திக்க வாய்ப்பே இல்லை…. செல்ல முயன்றால் அகழியில் உள்ள முதலைக்கு இரையாக நேரும்…” என குதிரையில் வந்தவன் சொன்னதைக்கேட்டு தன்னை மறந்து ‘க்ளுக்’ என சிரித்து விட்டாள்.

அவளது சிரிப்பைக்கேட்டு குதிரைக்காரன் அதிர்ச்சியடைந்து சுற்றும் முற்றும் தேடினான். அவனது முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் அதிகம் தெரிந்தன.

“சகல சாமுத்திரிகா லட்சணமும் பொருந்திய ஒரு பெண்ணிடமிருந்து தான் இப்படிப்பட்ட சிரிப்பு சத்தம் வெளிப்படும். உண்மையிலேயே தேவ மங்கையின் சிரிப்பேதான் இது. சாதாரண மங்கைகள் சிரிப்பதை நான் பல முறை கேட்டுள்ளேன். சிரித்தவள் மாயாஜாலக்காரியாக இருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். நீங்கள் யார்? குதிரை வியாபாரியைப்போல் உள்ளீர்கள்? பல ஊர்களுக்கு சென்று வந்ததில் பசிக்கறது. ஆனால் என்னிடம் பணம் இல்லை. இந்தக்குதிரையைத்தான் விற்க வேண்டும். விற்கவும் மனமில்லை. அரண்மனையில் இருக்க வேண்டிய குதிரை. பாவம் ஏழரை சனியோ எதுவோ…. என்னிடம் சிக்கி விட்டது. முடிந்தால் நீங்கள் வாங்கி அரண்மனையிலிருப்பவர்களுக்கு விற்று லாபம் பார்த்துக்கொள்ளுங்கள்” அவனது அப்பாவித்தனமான பேச்சு இளவரசியைக்கவர்ந்து விட்டது.

“சரி குதிரை உங்களிடமே இருக்கட்டும். சாப்பாடு நாங்கள் கொடுக்கிறோம். ஆனால் சிறு நிபர்ந்தனை…”

“என்ன நிபர்ந்தனை….?”

“ஒரு வாரம் எங்களுடன் வர வேண்டும்” 

“அட இவ்வளவுதானா….? தாராளமாக நீங்கள் செல்லுமிடமெல்லாம் நானும் வருகிறேன். ஆனால் எனது சின்ன ஆசையை மட்டும் நிறைவேற்றுவீர்களா…?

“அதென்ன சின்ன ஆசை…?” 

“இந்த நாட்டு இளவரசியின் முகத்தை ஏழு நாட்களுக்குள் பார்த்து விடுவதாக எனது நண்பனிடம் சபதம் எடுத்துள்ளேன்…”

“கண்டிப்பாக உங்களது பேராசை நிறைவேறும்” சொன்ன சாம்பவியின் கைகளைப்பற்றி நன்றி சொல்ல குதிரைக்காரன் தனது கைகளை நீட்டிய போது கை குழுக்க மறுத்து  கைகளை ஆடைக்குள் மறைத்துக்கொண்டாள்.

“எனது பேரழகிற்கு இந்த நாட்டின் இளவரசியே என்னைப்பார்த்தால் கை குழுக்கியிருப்பாள். நீங்களோ சாதாரண பிரஜை. பெண் குரலில் பேசும் ஆண். உங்களுக்கு எனதருமை எங்கே தெரியப்போகிறது…? சரி விடுங்கள். முதலில் சோறு கொடுங்கள். உண்டு விட்டு வந்து உற்சாகமாகப்பேசுகிறேன்” என்றவனை சமையல்காரன் உணவுக்கூடத்துக்கு அழைத்துச்சென்று உணவளித்தான். உண்ட மயக்கத்தில் உறங்கிப்போனான் குதிரையில் வந்தவன்.

கண் விழித்த போது முற்றிலும் புதிய இடத்தில் தான் இருப்பதைக்கண்டு அதிர்ந்தாலும், ராஜ மரியாதையுடன் நடத்தப்படுவதை அறிந்து மகிழ்ந்தான்.

“இளவரசியை நேற்று இரவு சந்தித்தீர்களா…?” கேட்ட பணிப்பெண்ணை ஏறிட்டவன் “இல்லையே… பெண் குரலில் பேசிய ஆண் குதிரை வியாபாரியைத்தான் அவரது நண்பர்களுடன் சந்தித்தேன். பசிக்கு உணவு கொடுத்தார்கள். ஒரு குதிரை வியாபாரிக்காக ராஜ போக உணவைத்தயாரித்திருப்பதும், அதை வழிப்போக்கனான எனக்கு கொடுத்ததும் வியப்பாக இருந்தது. வெகுதூரத்திலிருந்து வந்த களைப்பாலும், வயிறு நிறைய வித, விதமான உணவுகளை உண்டதாலும் உறங்கிவிட்டேன். நினைவு வந்தபோது இங்குள்ளேன். இதென்ன மாயாஜால நகரமா?” என வினவினான்.

அப்பொழுது “யாரங்கே….? அந்தக்குதிரைக்காரனை இங்கு அழைத்து வா…” என்ற குரல் எங்கேயோ கேட்ட பெண் குரலாகவும், அக்குரல் முன்பு கேட்டதை விட இனிமையாகவும் இருந்தது குழப்பத்தை உண்டாக்கியது.

பணிப்பெண் அழைத்துச்சென்ற போது, தான் இருப்பது அரண்மனை என்பதையும், தன்னை அழைத்துவரச்சொல்வது அதிகாரம் மிக்கவர் என்பதும் புரிந்தது.

அங்கே கண்ட காட்சி பிரமிப்பை ஏற்படுத்தியது. பூலோகத்திலும், மேலோகத்திலும் உயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அறைக்குள் சென்றான். 

“அமருங்கள்” என கூறிய பெண்குரல் வந்த திசையில் திரும்பியவனுக்கு முதலில் சோதிடர் தான் ஞாபகத்துக்கு வந்தார். ‘தேவலோக மங்கையைச்சந்திப்பீர்கள் என்றாரே….!’

ஆச்சர்யத்தோடு சேர்ந்து அதிர்ச்சி மனதைக்கவ்வியது.

“நான் தான் இந்த நாட்டினுடைய இளவரசி சாம்பவி. நேற்று இரவு குதிரை வியாபாரியாக மாறு வேடத்தில் நாட்டு மக்களின் நிலையை கண்காணிக்க மக்கள் வாழும் பகுதிக்குள் வந்தேன். அங்கே தான் உங்களை முதலாகச்சந்தித்தேன்…” எனச்சொன்னதும் வியர்த்தது குதிரைக்காரனுக்கு.

“உங்களைக்கேலி பேசிய என்னை முதலில் மன்னித்து விடுங்கள். பேரழகு கொண்ட தேவ மங்கையைப்போன்ற இளவரசியை காண்பதே இந்த ஜென்மத்தில் நான் செய்த பாக்கியம். என்னைப்போல் கேலி செய்தவனுக்கு உடலில் உயிர் இருப்பதும் பெரும் பாக்யமே…. நான் வணங்கும் சிவன் என்னைக்காப்பாற்றி விட்டார் எனக்கருதுகிறேன். தங்களை வணங்குகிறேன்” என கைகள் நடுங்க கூப்பி வணங்கினான் பல போர்களில் குறுநில மன்னர்களை வென்ற சப்தகிரி தேசத்து சந்திரவர்மனின் வாரிசும், இளவரசனுமான மாவீரன் காரவர்மன்.

எதிரிகளின் அரண்மனை ஒரு மாவீரனையும் கோழையாக்கும் வல்லமை கொண்டது என்பதை தற்போது தான் முதலாக உணர்ந்தான். ‘தேவ மங்கையைக்காண்பாய் என சொன்ன சோதிடர், கண்ட பின் படிக்கும் படி ஓலைச்சுவடியைக்கொடுத்தாரே…’ என நினைத்தவன் இங்கு படித்தால் சந்தேகம் வரும் என்பதால் படிக்காமல் விட்டு விட்டான்.

“நீங்கள் சந்திர வம்சத்தைச்சேர்ந்தவரா….?” இந்தக்கேள்வி இளவரசியிடமிருந்து வருமென எதிர்பாராதவன் தன்னை யாரெனக்கண்டு பிடித்து விட்டார்களே…. நெற்றியிலிருந்த சூரிய முத்திரை குளித்ததில் அழிந்து பச்சை குத்தியிருந்த சந்திர முத்திரை காட்டிக்கொடுத்து விட்டதே’என்பதை உணர்ந்தவன் இடுப்பிலிருந்து தன்னைப்பாதுகாக்க வாளை உருவினான். 

“வாளை அங்கேயே வையுங்கள். உங்களை நான் எனது முதல் பார்வையிலேயே அறிவேன். இல்லையென்றால் மன்னர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக்கொடுத்து அழைத்து வந்திருப்பேனா…? வாளைத்தான் இடையில் வைத்திருக்க அனுமதித்திருப்பேனா….? எனக்கு சமமாக அமரவைத்துத்தான் பேசியிருப்பேனா….? நீங்கள் சப்தகிரி தேசத்து மன்னர் சந்திரவர்மனின் ஒரே வாரிசு காரவர்மன் தானே….? “

“ஆம். தங்களைப்பற்றி பலர் கூறக்கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் மிகவும் கருணை மிக்கவர் என்பதும், அதே சமயம் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை கொண்ட வீரப்பெண்மணி என்பதையும் தெரிந்த பின்பே தங்களிடம் உதவி கோரியே இப்பயணம்…”

“என்னிடம் உதவி கேட்கும் அளவிற்கு நீங்கள் இருப்பதாகத்தெரியவில்லை. எங்கள் நாட்டின் மீது தங்களது தந்தை போர் தொடுக்க உள்ளதாக கேள்விப்பட்டோம். அச்செய்தி உண்மையில்லையா…?”

“அச்செய்தி முற்றிலும் உண்மை. போர் தொடுப்பதற்கான காரணமே நீங்களும், நானும் தான்….” 

“நானும் நீங்களுமா? கேட்கவே விசித்திரமாக உள்ளதே….?”

“அதற்கு முற்றிலும் எங்கள் குடும்ப சோதிடருடைய ஆலோசனையுமாகும்”

“சோதிடருடைய ஆலோசனை போரை நிறுத்தியதாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன். போரைத்தொடங்கியதாக முதலாக தற்போதுதான் கேள்விப்படுகிறேன்….” 

“நாம் இருவரும் திருமணம் செய்வதால் நமக்குப்பிறக்கும் குழந்தை ஒரு குடையின் கீழ் இவ்வுலகை ஆளுமாம்… இவ்விசயத்தை சோதிடர் சொல்லக்கேட்ட எனது தந்தை மந்திரியை தூதனுப்பி தங்களது தந்தையிடம் பெண் கேட்டுள்ளார். அவரோ என் தேசத்தில் வாழும் சூரிய வம்சத்தைச்சேர்ந்த சாதாரண வீரனுக்கு பெண்ணைக்கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர சந்திரவம்சத்துக்கு கொடுக்க மாட்டேன் என உறுதியாகக்கூறி விட்டாராம். இதைக்கேட்டதும் தங்கள் தேசத்துடன் போரிட்டு தங்களை மருமகளாக்க எனது தந்தை தயாரானதால், நம்மால் போரில் பல வீரர்கள் இரண்டு பக்கமும் இறக்க நேரக்கூடாது என நினைத்ததால் தங்களை சந்திக்க சூரிய வம்ச முத்திரையை நெற்றியில் பச்சை குத்தியது போல் வர்ணம் பூசி இங்கு வந்தேன். பசியுடன் வந்த எனக்கு அன்னபூரணியாக உணவு கொடுத்தீர்கள். உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நெனைக்கக்கூடாது என குரு கூறியுள்ளார். கண்டிப்பாக தங்களால் எனக்கு கெடுதல் வந்தாலும், என்னால் தங்களுக்கு கெடுதல் வராது” என கூறிய போது மன்னர் சூரியவர்மன் கைதட்டியபடி அங்கே வந்ததும் இருவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர். காரவர்மன் மன்னரின் காலில் விழுந்து வணங்கினான். 

“தங்களது பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படிப்பட்ட வீரமிக்க, நற்குணமுள்ள இளவரசனுக்கு எனது மகளைக்கொடுக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால் சூரிய வம்சத்துக்கும், சந்திரவம்சத்துக்கும் பல காலமாக பகை உள்ளது. சாபங்களும் உள்ளன. இதையும் மீறி எனது முன்னோர்களில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக உங்களது தாத்தா மனைவியாக்கிக்கொண்டார். அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டாள். அந்தப்பெண் தான் தங்களது தந்தையின் தாய். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் நான் பெண் கொடுக்க மறுத்தேன். நீங்கள் தங்களது அறைக்குச்சென்று ஓய்வெடுங்கள். நாளை குடும்ப சோதிடரிடம் கலந்து பேசிவிட்டு எனது முடிவைக்கூறுகிறேன்” என கூறியதும் இருவரும் தங்களது அறைக்குத்திரும்பினர்.

அறைக்குத்திரும்பி நிம்மதியாக, அதே சமயம் நாளை நல்ல செய்தி வரும் என்கிற எதிர்பார்ப்புடன் உறங்கிய காரவர்மன் மறுநாள் எழும்போது சிறையிலிருந்ததைக்கண்டு பதறினான். 

“கொம்புகள் உள்ள மிருகங்கள், ஆயுதங்களை வைத்திருப்போர், அரசர்கள் போன்றோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லையா  சப்தகிரி இளவரசரே….?” என பேசிய குரலை பல முறை கேட்டுள்ளான். அவனா இவன்….? உற்றுப்பார்த்து அதிர்ந்தான். நண்பனான மந்திரியின் மகன் கரகன்.

“எனது தந்தை உனக்காக இங்கு பெண் கேட்டு தூது வந்த போது நானும் உடன் வந்திருந்தேன். அப்போதே எனக்கும் சாம்பவிக்கும் காதல் மலர்ந்து விட்டது. எனது தந்தை சப்தகிரி நாட்டின் மந்திரியாக இருந்தாலும் சூரிய வம்சத்தை சேர்ந்தவர். சூரிய மொழி, சந்திர மொழி இரண்டையும் தெரிந்தவர் என்பதாலும், இரண்டு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த சௌகரியப்படும் என்பதாலும் உனது தந்தை எனது தந்தையை மந்திரியாக வைத்திருந்தாலும் எனது தந்தை மீது சந்தேகப்பார்வையுடனேயே இருப்பார். அதனாலேயே எனது தந்தையிடம் உன்னை சூரிய மொழி கற்க ஏற்பாடு செய்தார். சோதிடர் சொன்னதாக உனது தந்தை சொன்னதைக்கேட்ட எனது தந்தை, அப்படிப்பட்ட குழந்தை நானும் சாம்பவியும் சேர்வதால் கிடைத்து தன் வாரிசு உலகையாள வேண்டும் என ஆசைப்பட்டார். நீங்கள் மன்னர் பரம்பரை கிடையாது. எனது தாத்தா ஆண்ட தேசம் சதுரகிரி. அதுவும் சூரியதேசம்தான். தளபதியாக இருந்த சந்திரவம்சத்தைச்சேர்ந்த உனது தாத்தா எனது தாத்தாவிடம் இருந்த நாட்டை அவரைப்போரிட்டுக்கொன்று பிடுங்கிக்கொண்டதோடு அவர் மணக்க சுயம்வரத்தில் தேர்ந்தெடுத்த சதுரகிரி தேசத்து பெண்ணையும் அப்பெண்ணுக்கு விருப்பமின்றி விவாகம் செய்து கொண்டார். வீரத்தால் உனது தாத்தாவை வெல்ல இயலாத எனது தாத்தாவும் இறந்து போக, மனம் வெதும்பிய எனது தந்தை மந்திரியாக அமைச்சரவையில் சேர்ந்து தற்போது சூழ்ச்சியால் உனது தந்தையை வீழ்த்தி  சப்தகிரிக்கு அரசராகி உனது தந்தையை அங்கேயே சிறையில் தள்ளியுள்ளார். நான் விரித்த வலையில் சிக்கிய நீயும் இங்கே சிறையில் இருக்கின்றாய். இன்னும் ஒரு வாரத்தில் எனக்கும் சதுரகிரி தேசத்து இளவரசி சாம்பவிக்கும் விவாகம் நடக்கப்போகிறது. அதனால் இரண்டு பெரிய தேசங்களும் உலகிலேயே பெரிய தேசமாக உருவெடுக்கப்போகிறது. அப்பெரிய தேசத்தை ஒரு குடையின் கீழ் ஆளப்போகும் சக்ரவர்த்தி உனக்கும் சாம்பவிக்கும் பிறக்கும் குழந்தை அல்ல. சாம்பவியை மணக்கப்போகும் நான் தான். உனது தந்தை பேராசைப்பட்டது எனக்கு கிட்டியுள்ளது….” என கரகன் கூறியதைக்கேட்டு தந்தையின் பேராசை தம்மை இந்த நிலைக்குத்தள்ளிவிட்டதை எண்ணி காரவர்மன் மனம் கலங்கினான்‌. அவனது இடுப்பிலிருந்த சோதிடர் கொடுத்த ஓலை கீழே விழ எடுத்துப்படித்தான். ‘நிரந்தரச்சிறை நிச்சயம்’ என எழுதப்பட்டிருந்தது.

அடுத்த நொடி கரகனின் தலை வெட்டப்பட்டு கீழே விழுந்ததில் இரத்தம் காரவர்மன் மேல் தெறித்தது. வாளுடன் சாம்பவி ஒரு வீரப்பெண்மணியாக நின்று கொண்டிருந்தாள். 

“கரகன் என்னைக்காதலித்ததாகச்சொன்னது சுத்தப்பொய். மந்திரியாக இருக்கும் ஒருவர் மன்னனைப்போரிட்டு வெல்லாமல் சூழ்ச்சியால் வென்று மன்னனாக முயல்வதை எதிரி நாட்டு மன்னனாலும் ஏற்க இயலாது. உடனே நம் படைகளை அனுப்பி தங்களது தந்தையை சிறையிலிருந்து மீட்க எனது தந்தை உத்தரவிட்டுள்ளார்” என கூறியதைக்கேட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டான் காரவர்மன்.

“மண்ணை அம்பால் வென்று  ஆண்டுவிட முடியும். ஆனால் பெண்ணை அன்பால் வென்று தான் ஆள முடியும். தங்களை முதன் முதலாக குதிரையிலிருந்து ஒரு சுத்த வீரனாக, லாவகமாக இறங்குவதைப்பார்த்த முதல் பார்வையிலேயே எனக்குப்பிடித்து விட்டது. அப்போதே தங்களது மனச்சிறைக்குள் அகப்பட்ட கைதியாகி விட்டேன். தவிர தங்களது வெள்ளந்தியான, உண்மையான பேச்சு என்னைக்கவர்ந்து விட்டது. போரில் வென்ற மாவீரனும் மனைவியிடம் தோற்றுப்போக வேண்டும். அந்த குணமும் தங்களிடம் இருந்தது” என காரவர்மனிடம் கூறிய சாம்பவி, “யாரங்கே… சிறைக்கதவைத்திறந்து விடுங்கள்” எனக்கூறியவள், இரும்புச்சிறையிலிருந்து வெளியே வந்தவனை கட்டியணைத்து தனது இதயச்சிறைக்குள் நிரந்தரமாக அடைத்து விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *