குட்டிகதைகள் பத்து




a.என்னுடன் நீ !
பிறந்தது முதல் என்னோடு இருந்தாயே? இந்த பூமியில் எல்லாவற்றையும்
அனுபவித்தோமே !. இப்பொழுது மட்டும் ஏன் என்னுடன் ஒத்துழைக்க மறுக்கிறாய்?
மனம் உடம்புடன் பேச உடம்பு மெளனமாய் இனி என்னால் முடியாது, உன்னுடன் எண்பது வருடம் இருந்து விட்டேன்..நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். இனிமேல் நீ வேறு. நான் வேறு..
கிழவர் கட்டிலில் படுத்துக்கொண்டு “மனம் போன போக்கில்” பேசிக் கொண்டிருக்கிறார். (மனமும் உடலும் ஒன்றாய் வேலை செய்த காலத்தை)
இனி தாங்காது என்று சுற்றியுள்ளோர் பேசிக்கொள்கிறார்கள்.
(தி இந்து வில் நீரழிவு பற்றி ஒரு கட்டுரை படித்ததில் தோன்றிய சிறிய கதை)
b.வாழ்க்கையை வெறுத்தவன்
இனி இந்த உலகில் வாழ முடியாது, என்னை காதலித்து விட்டு இன்னொருவனை மணக்க இருக்கிறாள். முடிவு செய்தவன், அவளை திட்டி கடிதம் எழுத உட்காருகிறான். நீண்ட கடிதம், எழுதி முடித்தவுடன் தான் இப்படியே இருந்தால் அவள் நினைவுகளில் பைத்தியம் பிடித்து விடும், கொஞ்சம் வெளியே சென்றால் நல்லது என்று நினைத்தவன், சட்டையை மாட்டிக்கொண்டு கடை வீதிக்கு செல்கிறான்.
கடையில் ஏதோ வாங்க வந்த பெண்ணை கண்டதும், அட இவள் நாம் காதலித்தவள் போல் இருக்கிறாளே? அவளை இரசிக்க ஆரம்பித்தவன் வந்த வேலையை மறந்து அந்த பெண்ணை பின் தொடர்ந்தான்.
(மீண்டும் ஒரு காதல் கதை)
c.காலை மிதித்தவன்
எருமை மாடு போல் பேருந்தில் இடித்துக்கொண்டு ஏறியவனை எல்லோரும் வெறுப்புடன் பார்த்தார்கள். அவனிடம் சண்டை கட்டும் அளவுக்கு யாரிடமும் தெம்பும் இல்லை.தைரியமும் இல்லை.
சட்டென ஒருவன் எழுந்து, “சார் அந்த வலியவனை அழைத்து இந்த காலையும் மிதிச்சுங்கண்ணா நல்லா இருக்கும். என்றான்.
என்ன கிண்டலா? முறைத்தவனிடம், இல்லை சார் நாலு நாளா இரண்டு காலும் வலிச்சுது, வலது கால் நீங்க மிதிச்சதுல வலி நல்லாயிடுச்சு. இடது காலையும் மிதிச்சுட்டீங்கண்ணா நல்லாயிடும்.
மிதித்தவன் இப்பொழுது ஒதுங்கி நடந்தான்.
(இது எப்பொழுதோ படித்த நிகழ்வு)
d.வெள்ளை சட்டை
வீட்டில் ஒரே ரகளை, தங்கையை விரட்டினான், நான்கைந்து கலர் சட்டை தயாராய் இருந்தும் ஒரே ஒரு வெள்ளை சட்டையை அயர்ன் பண்ணி வைக்க சொன்னா? இழுத்தவனை அம்மா மிரட்டினாள். உனக்கு வேணுமின்னா நீ அயர்ன் பண்ணிக்கறதை விட்டுட்டு அவளை ஏன் மிரட்டுறே?.
மனம் கேட்காமல் அம்மா வெள்ளை சட்டையை தேய்த்து கொடுக்க இவன் கம்பீரமாய் போட்டுக்கொண்டு ஒரு விசேஷத்திற்கு கிளம்பினான்.
பேருந்தை சுற்றி வந்து ஏறலாம் என்று ஒட்டி நடந்து வர பேருந்துக் குள்ளிருந்து தலையை வெளியே நீட்டி ப்புளிச்…. வெற்றிலை சாறு…
e.ஞாபக மறதி
சே..எத்தனை முறை படித்தாலும் நினைவில் நிற்க மாட்டேனெங்கிறது. ஞாபக மறதி அடிக்கடி வருகிறது.
காலையில் எழுந்து படிக்கலாம் என்றால் எழுவதற்கே தாமதம். சரி மதியம் பரீட்சை இருப்பதால் அங்கேயே போய் நண்பர்களுடன் படிக்கலாம்.
போய் சேரும்போதே மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது. காலை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. சரி அந்த மர நிழலில் உட்கார்ந்து படிக்கலாம்.
மதியம் வரை ஒரு நண்பன் கூட வரவில்லை. ஏன் வரவில்லை.? அட எல்லோரும் ஏன் உள்ளிருந்து வருகிறார்கள்?
ஏண்டா எக்ஸாமுக்கு வரலை? மதியம்தானே எக்ஸாம். சரியா போச்சு, இன்னைக்கு காலையிலே எக்ஸாமுன்னு சொல்லியிருந்தாங்களே.
(இதுவும் எப்போதோ படித்த நிகழ்வுதான்)
f.வீர பரம்பரை
1947 க்கு முன்னால் ஏதோ ஒரு வருடத்தில் நடந்த கதை.
டுமீல்..டுமீல்…இரண்டு குண்டுகள் எதிரில் உறுமிக்கொண்டிருந்த பிரமாண்ட புலி அப்படியே சுருண்டு விழுந்தது. சுட்ட வெள்ளைக்காரனின் பின்னால் காமிராவை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த(கிடு கிடு வென நடுங்கி) என்னை அழைத்து அப்படியே போட்டோ எடு புலியின் மீது காலை வைத்து போஸ் கொடுத்தார்.
இதை வண்டியில் ஏற்றி பங்களாவுக்கு அனுப்பி விடு. சொல்லி விட்டு குதிரையில் ஏறி பறந்தார். எனக்கு சபலம், கீழே துப்பாக்கி, புலி, கையில் காமிரா.. பக்கத்தில் இருந்த பையனை அழைத்தேன்.
என் பேரனின் பேரன் “மக்கிப்போன” அந்த போட்டோவை கம்யூட்டரில் மெருகேற்றி வைத்து எங்க பரம்பரை வீர பரம்பரை. எங்க தாத்தாவுக்கு தாத்தா புலியை நேருக்கு நேராவே பார்த்து சுடுவாராம். சொல்லிக்கொண்டிருந்தான்.
g. மறைத்து மறைத்து
அங்கிருந்து வரும்போதே கவனித்து விட்டான்,தன் மகன் எதையோ மறைத்து மறைத்து எடுத்து செல்வதை.இருந்தால் இவனுக்கு பத்து வயது இருக்கலாம், இவன் எதை மறைத்து எடுத்து செல்கிறான்.
சட்டென மகனை பின் தொடர்கிறான். கையில் மறைத்து வைத்த பொருளை இறுக்கி வைத்து அங்கும் இங்கும் பார்த்து சட்டென குப்பைக்கூடையில் போட்டு விட்டு திரும்ப..நில்லுடா..
என்னடா குப்பையில போட்ட? கேட்டுவிட்டு குப்பை தொட்டியை எட்டி பார்க்க சிகரெட் பாக்கெட்.
சாரிப்பா..வீட்டுக்குள்ள நீ சிகரெட் பிடிக்கறதுனால பாப்பாவுக்கு ஆகாதாம். எங்க டீச்சர் சொன்னாங்க. யாரோ எதோவால் அடித்த்து போல் இருந்த்து அவனுக்கு.
h. நடிப்பு
என்னை விட்டுடு.. ப்ளீஸ்..அந்த பெண் கெஞ்ச கெஞ்ச அவளை மானபங்க படுத்த முயற்சி செய்தான் அந்த கொடியவன். அவள் போராடி அவனிடமிருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓட முயற்சிக்க, அதனால் அவன் வெறி பிடித்தவனாகி அவளை ஓங்கி அறைந்தான், அவள் மயங்கி சரிய….. விளக்குகள் எரிந்தன. “கட்” குட்..முணுமுணுத்தார் டைரக்டர்.
சாயங்காலம் என்னைய சீக்கிரம் அனுப்புங்க சார். எதுக்குய்யா? எனக்கு பொண்ணு பாக்க போறோம் சார்..வெட்கத்துடன் சொல்ல, அட்வான்ஸ் கங்கிராட்ஸ்யா அங்குள்ள அனைவரும் சொன்னார்கள். கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள் மயங்கி சரிந்து விழுவதாக நடித்த அந்த நடிகையும்.
i. செய்தி சொன்னவன்
வீட்டு வாசலில் யாரோ அந்நியன் நின்று கொண்டிருந்தான். பார்த்தால் இராணுவ வீரன் போல் இருந்தது. இவள் கணவனும் இராணுவத்தில் இருக்கிறான்.தற்போது போருக்கு போயிருக்கிறான். ஒரு மாதமாய் கடிதம் எதுவும் வரவில்லை.
யார் வேண்டும்? கண்களில் மிரட்சியுடன் ஒரு சிறு பையனை அணைத்துக்கொண்டு பெண் கேட்டாள்.
உங்கள் கணவ்ரிடமிருந்து..சொல்வதற்குள் அவள் பதறி அடித்து அவர் எங்கேயிருக்கிறார்? நல்லா இருக்கறாரா?
ம்..எச்சில் முழுங்கியவன், நன்றாய் இருக்கிறார். இப்பொழுது கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்..
ஐயோ என்னாச்சு? பதறினாள், அதற்குள் அவள் கண்களில் கண்ணீர்.
ஒன்றுமில்லை, சின்ன காயம், அவ்வளவுதான், உங்கள் இராணுவ மருத்துவமனையில்.சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து போகிறான்.
கடமையை முடித்து விட்டேன். சண்டையில் இவனால் சுடப்பட்டு மயங்கி விழுந்தவனை சோதித்தான். அதில் இருந்த கடித்ததில் மனைவிக்கு “மகனிடம் சொல் இரண்டு நாளில் வந்து விடுவேன்”.எழுதியிருந்தது.
கடிதத்தை படித்தவன், அவனை தூக்கி சென்று அவர்கள் எல்லையில் போட்டு விட்டு வந்தான்.முகவரியை ஞாபகமாய் வைத்துக்கொண்டு.
j.நேர்மை
அது ஒரு மேல் தட்டு மளிகை அங்காடி, சுற்று முற்றும் பார்த்தான் ஒருவரும் கவனிக்கவில்லை. சட்டென பேண்ட் பாக்கெட்டில் இரண்டு சோப்பு பாக்கெட்டை எடுத்து போட்டுக்கொண்டான்.
வரிசையில் நின்று பில் போட்டவுடன் பர்ஸை எடுக்க கையை உள்ளே விட்டவன் அதிர்ச்சியாகி விட்டான். பர்சை காணவில்லை. அதிகமாக கையை விட்டு தேடினால் சோப்பு இருப்பது தெரிந்து விடும். “ஒரு நிமிசம்” பாய்ந்து உள்ளே ஓடினான். கீழே அங்கும் இங்கும் தேடினான்.
என்ன அங்கிள் தேடறீங்க?, நான்கு வயது பெண் குழந்தை. “பர்ஸ்” சொன்னவனிடம் இதுவா அந்த குழந்தை காண்பிக்க, ஆமாம் ஓடிச்சென்று வாங்கியவன், அந்த குழந்தையை தூக்கி ஒரு முத்தம் வைத்தான். அதற்குள் அதன் பெற்றோர் வந்துவிட்டனர். அவர்களிடன் சொல்லிவிட்டு விரைந்து வந்தவன், கையில் பேண்ட் பாக்கெட்டில் போட்ட இரண்டு சோப் பாக்கெட் “இதுக்கும் பில் போட்டுடுங்க”