கிழமை – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,280
‘அப்பா… எந்த விசேஷத்தைச் சொன்னாலும் அதை ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கலாம்ன்னு சொல்றீங்க…இந்த ஞாயிற்றுக்கிழமையை எப்பப்பா விடப் போறீங்க…?’
கோபத்தோடு செல்வி கேட்க…
“என்னம்மா பண்றது… என் உத்தியோகம் அப்படி. லீவே கிடைக்கிறதில்லை. இன்னும் இரண்டு வருஷம் பொறு. ரிடையர் ஆயிடறேன். அதுக்குமேல நீங்க எந்தக் கிழமைல எந்த விசேஷத்தை வச்சாலும் எனக்கு ஆட்சேபனையில்லை’ என்றார் ராமலிங்கம்.
இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. செல்வியின் செல் சிணுங்கியது. “செல்வி… அப்பா பேசறம்மா… நல்லபடியா ரிடையர் ஆயிட்டேன். அதனால் வர்ற புதன்கிழமை
சிங்காரப்பேட்டைல இருக்கிற நம்ப குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தோட போறோம். நீ உன் குடும்பத்தோட வந்துடும்மா…’
“அப்பா… என் பொண்ணு ஸ்ரீநிதியை கான்வெண்ட்ல சேத்திட்டேன். அவளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் லீவு. இனிமேல ஞாயிற்றுக்கிழமைகள்ல வைக்கிற
விசேஷத்துக்குத்தான் என்னால வரமுடியும்… அதனால் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை போலாம்பா…’ என்றாள் செல்வி.
– இரா. வசந்தராசன் (பிப்ரவரி 2012 )