கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 5,639 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் – 1

பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்தது அந்த மருத்துவமனை. அதில் எட்டாம் நம்பர் பிளாக்கில் ஐந்தாவது தளத்தில் மூன்றாம் எண் அறையில் குணாளன் நாற்பது வயது இளைஞன் எண்பது வயது முதியவரைப் போல் எலும்பைத் தோல் மூடியவனாய் ரொம்ப மெலிந்து கட்டிலில் ஒரு பச்சை சவளைப் பிள்ளையைப் போல் சுருண்டிருந்தான். துணைக்கு பக்கத்தில் அவன் மனைவி மணோன்மனி, மைத்துனன் மாடசாமி கலக்கமாக நின்றார்கள்.

குணாளன் ரொம்ப நடுத்தர ரொம்ப நடுத்தர குடும்பத்து ஆள். இரண்டு கால்களும் ரொம்ப வீக்கமாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளாக அவன் உடம்பில் குப்பைக் கொட்டிய சர்க்கரை வியாதி இப்போது அவன் இரு கிட்னிகளையும் புழுதடையச் செய்துவிட்டது.

நகமும் சதையுமான தங்கள் பால்ய நண்பனை இந்த நிலையில் பார்க்க பாலா, பவித்ரன், சோமு, சுந்தருக்குக் கஷ்டமாக இருந்தது. மனசை கலக்கியது.

“எ..எப்படிடா இருக்கே ?” பாலாதான் முதலில் தனக்குள் பீரிட்டஅழுகையை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“இருக்கேன் !’ நோயாளிடமிருந்து மிக சன்னமாக பேச்சு வந்தது.

“சிகிச்கை ?” பவித்ரன் அக்கறையாய்க் கேட்டு பக்கத்தில் அமர்ந்தான்.

‘தினம் உயிரை வைச்சு உடலை சித்ரவதை பண்றாங்க…’ குணாளனுக்கு அழுகை முட்டியது. இருந்தவர்களுக்கு இதயம் பிழிந்தது, அவன் மனைவி கண் கலங்கினாள்.

“ரெண்டு பேரும் கலங்கக் கூடாது. கலங்கி ஒன்னும் ஆகப் போறதில்லே. கிட்னி பழுதுனால சாவு நிச்சயம் கெடையாது. தினம் டயாலிஸ் செய்து உயிர் வாழ வழி இருக்கு.’ ‘சோமு இரண்டு பேருக்கும் தைரியம் சொன்னான்.

“நாங்க இருக்கும் போது உனக்கு என்னடா கவலை?” சுந்தர் கொஞ்சம் சத்தமாக சொல்லி தன் பங்கிற்குத் தேற்றினான்.

“எங்க உயிரைக் கொடுத்தாவது உன் உயிரைக் காப்பாத்துவோம் ! அந்த முடிவுலதான் வந்திருக்கோம் நீங்க ரெண்டு பேரும் எதுக்கும் கலங்கக்கூடாது”. பாலா தங்கள் திட்டத்தைச் சூசகமாக சொன்னான்.

குணாளனுக்கு நண்பர்கள் பேச்சு தைரியத்தைக் கொடுத்ததோடு அல்லாமல் உள்ளுக்குள் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர்களை நேசமாய்ப் பார்த்தான்.

“கிட்னி மாற்று எப்போ ?” சோமு குணாளன் மைத்துனனை கேட்டான்.

“டாக்டரைத்தான் கேட்கனும்.” அவன் பதில் சொல்ல….

இதற்கு மேல் இது பற்றி நோயாளியின் எதிரில் நின்று பேசுவது சரி இல்லை என்பதை உணர்ந்த சோமு மற்றவர்களைப் பராத்தான். அவர்கள் இவன் குறிப்பு உணர்ந்து போகலாம்! தலையாட்டினார்கள்.

“சரி. நாங்க போய் டாக்டரை பார்த்துட்டு விசாரிச்சுட்டு வர்றோம்!” பவித்ரன் குணாளனிடம் சொல்லிக் கொண்டு எழுந்தான்.

அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தார்கள். மூன்றாவது தளத்தில் பெரிய டாக்டரின் அறை இருந்தது. அவர் பெயர் பலகையில் டாக்டர் தனுஷீக்குப் பின் ஏகப்பட்ட பட்டங்கள் இருந்தது. வாசலில் வெள்ளுடையில் காவலாளி இருந்தான். அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அந்த அறையின் உள்ளே நுழைந்தார்கள். நாற்பந்தைற்து வயது டாக்டர் ஆடம்பர மேசை நாற்காலி முன் கண்ணியமாக இருந்தார்.

‘வாங்க….’ கனிவாய் வரவேற்றார். “உட்காருங்க…” எதிர் இருக்கைகளைக் காட்டினார்.

அமர்ந்தார்கள்.

“சார்! நாங்க நோயாளி குணாளன் நண்பர்கள். நான் பாலா!” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினான்.

“சந்தோசம் சொல்லுங்க?”

டாக்டருக்கு ஒவ்வொரு வினாடியும் முக்கியம். அதிலும் இவ்வளவு பெரிய மருத்துவ மனையை வைத்து நிர்வகித்து சிறுநீரக மாற்றில் பெயரும் புகழும் வாங்கிக் கொண்டவருக்கு வினாடி காசு மட்டுமல்ல மனித உயிர். அதனால் நேரடியாக விசயத்திற்கு வந்தார்.

“நோயாளி எப்படி சார் இருக்கார்?” பாலாதான் கேட்டான்.

“ஆரோக்கியமா இருக்கார். “

“கிட்னி மாற்று எப்போ சார்?” சோமு.

“வெகு சீக்கிரம்.”

புரியாமல் பார்த்தார்கள்.

“நாளைக்கே கிட்னி கெடைச்சாலும் உடனே ஆபரேசன். நான் அந்த அளவுக்கு உங்க நண்பரைத் தயார் படுத்தி வைச்சிருக்கேன்.”

ஓ.கே. இவர் பக்கத்தில் தவறு தாமதம் இல்லை புரிந்தது,

“எவ்வளவு சார் செலவாகும்?” சுந்தர் கேட்டான்.

‘சுமார் ஐந்து லட்சம் செலவாகும்ன்னு நெனைக்கிறேன் கொடுக்கிறவங்க அதிகம் கேட்டால் இன்னும் அதிகமாகும்.” நால்வரும் ஒருவரை யொருவர் பார்த்து விழித்தார்கள்.

‘என்ன?’ டாக்டர் அவர்களை ஏறிட்டார்.

“சா…ர் நோயாளி ஒரு மாசம் இங்க தங்கி இருக்கார். அந்த செலவே இதுவரைக்கும் எங்களுக்குத் தெரிஞ்சு மூணு லட்சம். இதுக்கு மேல நீங்க ஐந்து லட்சம் சொல்றீங்க. கணக்குப் பார்த்தால் மொத்தம் எட்டு லட்சம் செலவு.” பவித்ரன் தன் கணக்கைச் சொல்லி நிறுத்தினான்.

“கண்டிப்பா?” டாக்டர் பலமாக தலையாட்டினார்.

“இவ்வளவு செலவை அவர் தாங்குவாரான்னு சந்தேகம்..” சோமு மெல்ல சொன்னான்.

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும். உயிர் விசயம். செலவைப் பத்திக் கவலைப்படக்கூடாது.” என்றார்.

மௌனமாய் இருந்தார்கள்.

“நான் உயிரை பகடையாய் வைச்சு பணம் சம்பாதிக்கிறது கெடையாது. எனக்கு அதுல விருப்பமுமில்லே. அதுக்கு அவசியமும் இல்லே. அப்படி கொள்ளையடிக்கிற காசு உடல்ல ஒட்டாது. போற இடத்துலேயும் புண்ணியம் கெடைக்காது. நான் இதைத் தொழிலாய்ச் செய்யலை. தொண்டாய்ச் செய்யுறேன். இன்னும் சொல்லப் போனால் மனுச உயிருக்கு என்னால் ஆன சிறு உதவி. என்கிட்ட செலவு காரண காரியத்தோட இருக்கும். அதிகம் இருக்காது. உயிருக்கு உத்திரவாதம்”. தெளிவாக சொன்னார்.

“அந்த திருப்தியிலதான் சார். நாங்க அவனை உங்க மருத்துவமனையில கொண்டு வந்து சேர்த்தோம்”.

“ரொம்ப சந்தோசம். உங்களால கிட்னி ஏற்பாடு செய்யமுடியும்ன்னா செலவு குறையும். எனக்கு ஒரு லட்சம் கூலி கொடுத்தா போதும்”.

எதிரில் அமர்ந்திருந்தவர்கள் முகத்தில் பிரகாசம் வந்தது.

“நாங்களே தானம் செய்ய தயாராய் வந்திருக்கோம் சார்!” பாலா சட்டென்று தாங்கள் வந்த விசயத்தை உடைத்தான்.

டாக்டர் நிமிர்ந்து அமர்ந்தார்.

“ரொம்ப சந்தோசம். ஆனா நீங்க நினைக்கிறபடியெல்லாம் கிட்னி தானம் செய்ய முடியாது. தானம் கொடுக்கிறவங்க கிட்னி நோயாளிக்கும் பொருந்தனும்.” என்றார்.

நண்பர்கள் முகம் வாடியது.

“கவலைப்படாதீங்க. உங்க நாலு பேர் கிட்னியில ஒன்னு கண்டிப்பா குணாளனுக்குப் பொருந்தும். உங்க நண்பர் உயிர் பொழைச்சுடுவார்.”

கேட்டவர்களுக்குள் தெம்பு வந்து முகம் கொஞ்சம் தெளிந்தது, டாக்டர் அழைப்பு மணியை அழுத்தினார். முப்பது வயது இளைஞன் ஐந்து மணித் துளிகளில் பக்கவாட்டு அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“எத்து! இவங்க நாலு பேரும் நோயாளி குணாளனுக்கு கிட்னி கொடுக்க விரும்பம். பரிசோதனைக்கு அழைச்சுப் போய் நாளைக்கு ரிசல்ட் கொடுங்க..” உத்தரவிட்டார்.

“வாங்க சார்!” அவன் இவர்களை அழைத்தான். எழுந்து அவனைத் தொடர்ந்தார்கள்.


மறு நாள் சோமு, பாலா, பவித்ரன், சுந்தர் நால்வரும் டாக்டர் தனுஷ் முன் பரீட்சை ரிசல்டை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் போல் அவர் எதிரில் அடக்கமாய் திக் திக்கென்று அமர்ந்திருந்தார்கள்.

டாக்டர், எத்திராஜ் வைத்துவிட்டு சென்ற அவர்கள் பரிசோதனை முடிவுகளைப் புரட்டிக் கொண்டிருந்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

கடைசியில், பிரயோசனமில்லே! உதட்டைப் பிதுக்கி பைலை தூக்கி மேசை மேல் போட்டார்.

“என்ன சார்?!” பாலாவிற்குள் திகிலடிக்க… மற்றவர்களும் அப்படியே அவரை ஏறிட்டார்கள்.

“உங்க யார் கிட்னியும் குணாளனுக்குப் பொருந்தலை!” பலமாக தலையசைத்தார்.

நால்வருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது,

“இப்போ அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன சார்?” சுந்தர் தொய்வாய் டாக்டரை பார்த்தான்.

“நோயாளிக்கு ஸ்பெசல் குரூப் இரத்தம். பொருந்தறாப் போல கிட்னி கிடைக்கலை. அதனாலதான் ஆபரேசனுக்கு இவ்வளவு காலதாமதம். இப்போ உங்க கிட்னியும் பொருந்தலை. இன்னும் தேடனும்”. டாக்டர் சொன்னார்.

நால்வருக்கும் என்ன செய்வ தென்று புரியவில்லை. கலக்கமாக இருந்தார்கள்.

“கவலைப்படாதீங்க. என் பங்குக்கு நோயாளியைப் பிழைக்க வைக்க நான் தேடிக்கிட்டிருக்கேன். நீங்களும் தேடினா கண்டிப்பா சீக்கிரம் கிடைக்கும். முயற்சிக்கு என்னைக்கும் அழிவே கிடையாது.”

“கிட்னி தேவைன்னு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கலாமா சார்?” – பவித்ரன் தன் யோசனையைப் படக்கென்று சொன்னான்.

“தாராளமா கொடுக்கலாம். நான் உள்ளூர் கேபிள் டிவி அத்தனையிலும் கொடுத்திருக்கேன். இதுவரை யாரும் முன் வரலை. எந்த பதிலும் இல்லேங்குறதுதான் வருத்தம். கிட்னி தானத்துல மக்கள் விழிப்புணர்வு பெறலை. மனுச் உடல்ல ரெண்டு இருக்கு. உயிர் வாழ ஒன்னு போதும். ஆனா…ஆண்டவன் அறிவுகெட்டத்தனமா ரெண்டு வைச்சிருக்க மாட்டான். ஒண்ணு கொடுத்தா சீக்கிரம் செத்திடுவோம்ங்குற பயத்துல யாரும் தானம் கொடுக்க முன் வரமாட்டேன்கிறாங்க”. டாக்டர் தன் மனதில் உள்ள வலியைச் சொன்னார்.

சோமு மனமுடைந்து சன்னல் கண்ணாடி வழியே வெளியே பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான்.

அறையில் அடுத்து என்ன பேசுவதென்று யாருக்கும் தெரியாமல் அசாத்திய மௌனம்.

அழுக்கு உடை சிக்குப் பிடித்த தலை. தாடி மீசையுடன் ஒரு பைத்தியக்காரன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான்.

சோமுவிற்குள் பளிச்சென்று மூளையில் மின்னலடித்தது.

“டாக்டர்!” அழைத்தான்.

“சொல்லுங்க?” அவர் இவனைப் பார்த்தார்.

“வெளியே ஒரு பைத்தியம் போறான் பாருங்க.”

பார்த்தார். “ஆமாம் போறான்!”

“அவனுக்கு மூளை மட்டும்தானே கோளாறு. மத்தபடி உடல் உறுப்புகள்ல பாதிப்பு இருக்குமா?”

“தெரியலை. பரிசோதனை செய்து பார்க்கனும். ஏன் கேட்குறீங்க?” கூர்ந்து பார்த்தார்.

“பொரும்பாலான பைத்தியங்கள் ஆரோக்கியமாத்தானே இருக்காங்க.”

“ஆமா.”

“அவுங்களால இந்த நாட்டுக்கு மக்களுக்கு பிரயோசனமில்லே. பிரயோசனமில்லாத அந்த உடல்லேர்ந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டா என்ன?”

டாக்டருக்குள் துாக்கிவாரிப் போட்டது. இந்த குதர்க்க கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் நிதானித்தார்.

“நீங்க சொல்றது நல்ல யோசனை. ஆனா அது சட்டப்படி குத்தம். மருத்துவத்துக்கே ஆனாலும் யார் சம்மதம் இல்லாம… எவர் உடல்லேர்ந்தும் யாரும் எதுவும் எடுக்க முடியாது. எடுக்கக் கூடாது. மருத்துவக்கல்லூரி பரிசோதனைக் கூடத்துக்கு கூட சம்மதப்பட்டு தானம் செய்தவங்க உடல் தான் வரும். மனித உறுப்புகளை அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு பாடம் சொல்லிக் கொடுக்கிற மருத்துவக் கல்லுாரிக்கே அந்த சட்ட திட்டம்.. அதனால எவர் சம்மதமில்லாம யாரும் எதையும் தொட முடியாது.”

“பைத்தியத்துக்கிட்ட எப்படி சார் சம்மதம் வாங்க முடியும்?”

“அவுங்க உறவுக்காரங்க சம்மதம் வாங்கலாம்.”

சோமுவிற்கு இந்த பதில் திருப்தியாய் இருந்தது.

“ஓ.கே சார். இன்னும் ரெண்டே நாள்ல இப்படி ஒரு ஆளோட வர்றேன்.” எழுந்தான்.

டாக்டர் தனுஷ் மிரண்டார். இருந்தாலும் சமாளித்து….

“உக்காருங்க. நீங்க பைத்தியத்தை அழைச்சு வந்தா மட்டும் போதாது. அவுங்களை வைச்சு காபந்து பண்றவங்க. நெருங்கிய உறவுக்காரங்க கிட்டே இருந்து சம்மதக் கடிதம் வாங்கி வரனும். எனக்கு அதுதான் முக்கியம்!” சம்மதக் கடிதம் இருக்கும் போது செய்வதில் என்ன தவறு. நினைத்து கறாராக சொன்னார்.

“அப்படியே வர்றேன் சார்!” எழுந்த சோமு “இன்னொரு முக்கியமான விசயம் சார்.” நின்றான்.

“என்ன?”

“இந்த பைத்திய விவகாரம் என் நண்பனுக்கோ அவன் குடும்பத்துக்கோ தெரியக்கூடாது. அவன் யோக்கியன் தெரிஞ்சா நீங்க சொன்னது மாதிரி இது தப்பு, சட்ட விரோதம்ன்னு மறுப்பான். அவன் மனைவி மனோண்மணிக்கும் விசயம் தெரிஞ்சா நம்ம புருசன் உடம்புல உள்ளது பைத்தியம் கிட்னியா… வேணாம் சொல்லி அருவறுத்து மறுப்பாங்க. எங்களுக்குத் தெரிஞ்சவங்களைக் கூட்டி வந்து ஏற்பாடு செய்தோம்ன்னு சொல்லனும்”, சொன்னான்.

‘இவன் விஷயாளி!’ தனுஷீக்குள் பட்டது. “‘உங்க விருப்பப்படியே சொல்றேன்.” சம்மதித்தார்.

“வர்றோம் சார்!” சோமு விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.

மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தார்கள்.

அத்தியாயம் – 2

டாக்டர் அறைக்குள்ளேயே பாலாவிற்குக் கோபம். மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அடுத்த வினாடியே, “என்னடா! நீ பாட்டுக்க பைத்தியத்தைப் பத்தி பைத்தியம் போல சம்பந்தா சம்பந்தமில்லாம டாக்டர்கிட்ட உளறிட்டு வர்றே?” சோமுவைக் காய்ந்தான்.

சோமு கோபப்படவில்லை.

“எல்லாம் காரண காரியத்தோட தான் உளறிட்டு வர்றேன். நான் சொன்னதுல தப்பு இருக்கா?” பொறுமையாக அவனைத் திருப்பிக் கேட்டான்.

“இல்லே! இருந்தாலும் இது சட்டவிரோதம் குத்தம்ன்னு டாக்டர் சொன்னாரே?!”

“சொன்னார். சொல்லிட்டு சம்மதக் கடிதம் இருந்தால் போதும்ன்னு அதுக்குப் பரிகாரமும் சொன்னார்”.

“ஆமா.”

“அதை நடைமுறைப்படுத்தப் போறேன். என் வீட்டாண்ட நாலைஞ்சு மாசமா ஒரு ஒரு பைத்தியம் சுத்தி வர்றான். அவனைப் புடிச்சு வரப்போறேன்.”

“என்ன விளையாடுறீயா ?” பவித்ரன் சீறினான்.

“நான் விளையாடலை. உண்மையைத்தான் சொல்றேன்.” சோமு கொஞ்சமும் அசரவில்லை.

“வில்லங்கம் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கப்போறே!” சுந்தர் எச்சரித்தான்.

“எதுவும் வராது. நான் பக்கா, சரியானத் திட்டத்தோட செயல்பட போறேன்.!”

“உளறாதே!”

“உளறலை. நான் சொல்றதைக் கவனமாய்க் கேளுங்க. எந்த பைத்தியத்துக்கும் எவனும் காவல் இல்லே. பராமரிப்பும் கெடையாது. அதனால நம்ம பைத்தியத்தை நாமளே புடிச்சு கொண்டு வந்து நாமளே உறவுக்காரங்க சம்மதம் கொடுத்தாப் போல ஒரு கடிதத்தை எழுதி எடுத்து… டாக்டர்கிட்ட ஒப்படைச்சா வேலை முடிஞ்சுடும். குணாளனும் சீக்கிரம் குணமடைஞ்சுடுவான். செலவு மிச்சம்.” ரொம்ப சுலபமாக சொன்னான்.

“ஆளைக் கடத்துற விசயம்!” பாலா பயம் காட்ட…சுந்தரம், பவித்ரன் அவனை மிரட்சியாகப் பார்த்தார்கள்.

“இதோ பாருங்கப்பா. இதுல பயப்படுறதுக்கு ஒன்னுமில்லே. மனுசன் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாப் போதும். அதைத்தான் டாக்டர் பைத்தியத்துக்கிட்ட எடுக்கப் போறார். இதுனால உயிருக்கு ஆபத்து கெடையாது. அடுத்து… என்கிட்ட இன்னார் கொண்டு போய் இந்த டாக்டர் கிட்னியை எடுத்துட்டார். இவன் வயத்துல என் கிட்னி இருக்குன்னு பைத்தியம் சொல்லப் போறதில்லே. அப்படியே சொன்னாலும் பைத்தியக்காரன் உளறலை யாரும் பெரிசா எடுத்துக்கப் போறதில்லே. அப்படியே பெரிசா எடுத்துக்கிட்டாலும் நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆளை யாருக்கும் தெரியாமல் கடத்தறோம்.” சோமு நிறுத்தினான்.

பாலா பவித்ரன், சுந்தர், மௌனமாக வந்தார்கள். அவர்களுக்குள்ளும் சோமு சொன்னது படிந்தது.

பாலா சிறிது நேரத்தில் தெளிந்து, “ஓ.கே. இதுனால வில்லங்கம் வராதுன்னா எனக்குச் சம்மதம்.” என்றான்.

மற்றவர்களும் தலையசைத்தார்கள்.

“பைத்தியத்தை எப்படி கடத்துறது?” சுந்தர் கேட்டான்.

“அதுக்கும் ஐடியா இருக்கு. நான் பார்மாசிஸ்ட் படிச்சவன். பைத்தியத்துக்கு என்ன மருந்து. எப்படி கொடுத்தா சுருள்வான்னு தெரியும். அதிகமா அட்டகாசம் செய்யுற பைத்தியத்தைக்கூட ஒரு மணி நேரம் ஒரே ஊசியில பேச்சு மூச்சு இல்லாம வைக்க முடியும். அப்படியே கார்ல அள்ளி போட்டு டாக்டர்கிட்ட விடவேண்டியதுதான். வேலை சுலபம்.”

பாலா, சுந்தர், பவித்ரனுக்கு… சோமு பேச்சின் மீது நம்பிக்கை வந்தது.

“சரிடா.” ஆளாளுக்கு விடைபெற்று பிரிந்தார்கள்.


சோமு வரும் வழியிலேயே காரியத்தில் கண்ணாகி விட்டான்.

‘பைத்தியம் பார்வையில் படுகிறானா?’ என்று கண்களால் துழாவி தேடிக் கொண்டே வந்தான்.

இல்லை.

‘எங்கு சென்றான்?’ வீடு வந்தும் இவனுக்குள் யோசனை ஓடியது.

“என்னங்க!” மனைவி மங்கை அழைத்தாள்.

‘என்ன?’ ஏறிட்டான்.

“உங்க நண்பர் எப்படி இருக்கார்ன்னு சேதி சொல்லாம என்ன யோசனை?..” பக்கத்தில் வந்தாள்.

இவளிடம் உண்மையைச் சொல்லி… ‘ஆள் எங்கே விசாரிக்கலாமா.?’ யோசனை வந்தது.

அடுத்த வினாடி அதற்குத் தடையும் வந்தது.

‘சொன்னால்… அடுத்த வினாடி “ஐயோ! வேணாம்! தப்புங்க.” மறிப்பாள், பயப்படுவாள். சமாளித்து சரி செய்தாலும் பெண்களிடம் ரகசியம் என்பது இருக்காது. அதை அடுத்தவளிடம் சொன்னால்தான் தங்களுக்குள் இருக்கிற சுமை குறையும். விசயம் ஒருவர் மாற்றி ஒருவர் சென்று… இறுதியில் ரகசியம் ரகசியமாக இருக்காது..!’ எண்ணம் வர மனதை மாற்றினான்.

“என்னைப் பார்த்துக்கிட்டு என்ன யோசனை? உங்க நண்பர் ரொம்ப முடியாம இருக்காரா?…” ரொம்ப அக்கறையாய் கணவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள் மங்கை.

“ஆமாம்.” வருத்தப்படுவன் போல் முகத்தைத் தொங்கப் போட்டான்.

மங்கையும் வாடினாள்.

பொழுதுக்கும் வீட்டிலிருக்கும் இவளை விசாரித்தாள் விசயம் தெரியும்! – முடிவிற்கு வந்த சோமு…

“நம்ம தெருவுல ஒரு பைத்தியம் திரிஞ்சானே எங்கே?” ஏறிட்டான்.

”என்ன… அவன் மேல திடீர் அக்கரை. விசாரிக்கிறீங்க..?” முதல் முயற்சியே முகத்திலடிக்கிறாப்போல ஒரு மாதிரியாகக் கேட்டாள்.

துணுக்குற்றான்.

“இல்லே. அவனைத் தேடிக்கிட்டு ஒரு ஆள் வந்தான். இவன் அடையாளத்தைச் சொல்லி நான் அவரோட உறவு சார். அவர் இங்கே சுத்தறார்ன்னு கேள்விப்பட்டு அழைச்சுப் போக வந்தேன். ஆளைக் காணோம். எங்கேன்னு கேட்டான். எனக்குத் தெரியாது சொல்லி வந்தேன். அதான் விசாரிக்கிறேன்.” – தான் அழைத்துக் கொண்டு போய் பின்னால் தன் மீது பழி வந்து விடக் கூடாதென்பதற்காக வருமுன் காத்துக் கொள்ளும் யோசனையில் இப்போதே சாமார்த்தியமாக சொன்னான். சமாளித்தான்.

“அதான் ரெண்டு நாளா அவனை ஆளைக் காணோமா?” மங்கை ஆச்சரியப்பட்டாள்

“என்ன ரெண்டு நாளா காணலையா?” இவன் திடுக்கிட்டான்.

“அந்த ஆள் உங்களை என்னைக்கு விசாரிச்சான் ?…”

“ரெண்டு நாளைக்கு முந்தி..”

“அதான் காணலை. புடிச்சிக்கிட்டு போய்ட்டான் போலிருக்கு.!”

மனைவி பேச்சு வழியிலேயே பேசி ஆளை காணோம் என்று உறுதி செய்து கொண்ட சோமுவிற்கு ‘ஆளை எங்கு தேடுவது?’ கவலை வந்தது.

வெளியே வந்தான். சாலையில் நின்று வலம் இடம் கண் எட்டும் துாரம் வரை பார்த்தான். தெருவில் காக்காய் குருவி இல்லை. வீடுகள்தான் வரிசையாக இருந்தது,

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதை. தேடும் பொருள் எதுவும் சுலபத்தில் கிடைக்காது. விரும்பிப் போனால்தான் விலகிப் போகும். சோமு மனசுக்குள் என்னென்னவோ உதாரணங்கள் வந்தது,

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.’ ‘முயற்சி திருவினையாக்கும்!’ தேடிப் பார்க்க வேண்டியதுதான்.!

வாசலில் இருந்த ஹீரோ இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். வண்டியை மெதுவாக விட்டு ஒரு இடம் விடாமல் கண்களால் அலசிக் கொண்டே வந்தான். ஒரு மணி நேரத்திற்கு மேல் அலைச்சல் ! பெட்ரோல் செலவுதான் மிச்சம். சோர்ந்து வந்து சாலையோரம் உள்ள நிழலில் நின்றான்.

“டேய் ! உன்னை எங்கெல்லாம் தேடுறது?” கூவிக்கொண்டே வந்து இவன் அருகில் தன ஹோண்டா தன ஹோண்டா இரு சக்கர இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான் பவித்ரன்.

“ஏன்… என்ன விசயம்?”

“நீ சொன்ன ஆள். என் வீட்டாண்ட இருக்கான்!” அவன் இவன் காதில் ரகசியமாய்ச் சொன்னான்.

பவித்ரன் வீடு இவன் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர். “உண்மையா ?!” சோமுவின் சோர்ந்து கிடந்த உள்ளத்திற்குள் சட்டென்று புத்துயிர் புது தெம்பு வந்தது.

“நிசம்டா.!”

இருவரும் வண்டியை விட்டார்கள்.

பாதி வழியில் சோமு நிறுத்தி, “இருடா ஒரு நிமிசம் !’ சொல்லி எதிரே இருந்த மெடிக்கல் ஷாப்பை நோக்கி ஓடினான். என்னவோ மருந்தும், ஒரு முறை உபயோகப்படுத்தும் டிஸ்பொசல் சிரஞ்சியையும் வாங்கி பேண்ட் பாக்கெட்டிற்குள் சொருகி வந்து தன் வண்டியில் ஏறி கிளப்பினான்.

இவர்கள் நேரம்…. அந்த பைத்தியம் காந்தி பூங்கா வாசலில் அமர்ந்து தானே பேசி.. தானே சிரித்து.. எவரையோ வைது கொண்டிருந்தான். மதிய வேளை அக்கம் பக்கம் யாருமில்லை.

நல்ல நேரம், இடம், காலம். ஆளைக் கடத்தியே ஆகவேண்டும்.! – என்ற முடிவிற்கு வந்த சோமு “பவி!” அழைத்தான்.

“சொல்லு?” அவன் தயாராய் இவனுக்குக் காது கொடுத்தான்.

“நான் இவன்கிட்ட பேச்சு கொடுத்து சரி பண்றேன். நீ உடனே போய் பெட்டிக்கடையில ஒரு தாள் வாங்கி… ‘சின்னச்சாமி மகன் கந்தசாமி மூளை குழம்பின பைத்தியம். இவன் கிட்னி கொடுக்க எனக்குச் சம்மதம்ன் ‘னு எவன் பேரையாவது போட்டு ஒரு சம்மதக் கடிதம் எழுதி இடது கையால கையெழுத்துப் போட்டு தயார் செய்து உடனே ஒரு வாடகைக் காரும் பிடிச்சு வா…” அனுப்பினான்.

அவன் அகன்றான்.

சோமு மெல்ல இவனை நெருங்கி வந்து “சின்னச்சாமி!” அழைத்தான்.

பைத்தியம் கொஞ்சம் அரண்டு திடுக்கிட்டு இவனைப் பார்த்தான்.

“இங்கே வா..” அழைத்தான்.

“எதுக்கு?…”

“நீ இப்போ யாரைத் திட்டிக்கிட்டு இருந்தே …?” சோமு அவன் அருகில் சென்றான்.

“என் அண்ணனை.”

“எதுக்குத் திட்டினே?”

“அவன் என் சொத்தையெல்லாம் புடுங்கிக்கிட்டு எனக்குச் சோறு போடலை!”

“அதனாலதான் நீ இப்படி பைத்தியம் ஆனீயா?”

“நான் பைத்தியம் இல்லே. நீ பைத்தியம், உன் அம்மா பைத்தியம், அப்பா பைத்தியம்…”

பைத்தியத்தை எதிர்த்து பேசினால்தான் முரண்டு செய்யும். இணக்கமாய் பேசினால் இறங்கி வரும்! – புரிந்த சோமு “ஆமாம் நீ சொல்றதுதான் சரி. நான் பைத்தியம், என் குடும்பம் பைத்தியம். இந்த பைத்தியம் சொல்றதைக் கேட்பியா?” என்றான்.

“கேட்கறேன்.”

“நீ என்கூட கிளம்பு.”

“எங்கே?”

“ஆஸ்பத்திரிக்கு.”

“ஏன்?”

“வைத்தியம் பார்க்க.”

“எதுக்கு வைத்தியம்?”

“உன் அண்ணன்-எதிரியை உதைக்க.”

“அப்படின்னா வர்றேன்!” எழுந்தான்.

“அதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு ஊசி போட்டுக்கோ.”

“ஏன்?”

“உடம்புல தெம்பு வரும்..”

“தெம்பு எதுக்கு ?’

“உன் எதிரியைக் கொல்ல.”

“சரி. அப்போ போடு.”

சட்டையைத் தூக்கி கையைக் காட்டினான்.

பவித்ரன் வேலை முடித்து காருடன் துாரத்தில் நின்றான்.

“அப்படியே அசையாம உட்கார்”. சொன்ன சோமு விடுவிடுவென்று காரியத்தில் இறங்கினான்.

மருந்து பாட்டிலை உடைடத்து சிரஞ்சியில் ஏற்றி அவன் கையில் குத்தினான்… போட்டு எடுப்பதற்குள்ளேயே கண்கள் சொருகி சரிய….

இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த பவித்ரன் அம்பாசிட்டர் வாடகை காரை தாமதமில்லாமல் கொண்டு வந்து நிறுத்தினான்.

இருவரும் சின்னச்சாமியின் தலை, கால்களைப் பிடித்து அப்படியே அலேக்காக தூக்கி காரில் ஏற்றி அமர்ந்தார்கள்.

“டாக்டர் தனுஷ் மருத்துவமனைக்குப் போப்பா”. சோமு உத்தரவு கொடுக்க….. கார் பறந்தது,

“எப்படி சோமு இவ்வளவு சீக்கிரம்?” பவித்ரன் ஆச்சரியமாக மெல்ல நண்பனைக் கேட்டான்.

“இது பைத்தியங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்குறதுக்கு முன்னாடி இப்படி போட்டு துாங்க வைச்சி கொடுக்கிறது. ரொம்ப வீரியம்..” சொன்னான்.

கார் மருத்துவமனையை அடைந்தது, உள்ளே ஓடிப்போய் ஸ்டெச்சரை வரவழைத்து… அள்ளிக்கொண்டு போய் டாக்டரிடம் ஒப்படைத்தார்கள். அப்படியே தாங்கள் தயாரித்து வந்து சம்மதக் கடிதத்தையும் அவரிடம் நீட்டினார்கள்.


மறுநாள் டாக்டர் தனுஷ் முன் நால்வரும் ஆவலாய் நின்றார்கள்.

அவர் பரிசோதனை முடிவைப் பார்த்து இப்போதும் உதட்டைப் பிதுக்கினார்.

“என்ன சார்?” சோமு அதிர்ந்தான்.

“சரி இல்லே…!”

நண்பர்களுக்குள் இடி விழுந்தது

சோமு சமாளித்து, “இன்னும் ரெண்டு ஆள் புடிச்சு வர்றோம் சார்!” சொல்லிக் கொண்டு எழுந்தான்.


பத்து நாட்கள் அதே வேலையாய் அலைந்து பத்து பைத்தியங்களைக் கொண்டு வந்து சேர்த்தும் காரியம் பலிக்கவில்லை. குணாளனுக்குச் சரியான கிட்னி கிடைக்கவில்லை.

சோமு, சுந்தர், பாலா, பவித்ரன் சோர்ந்து போனார்கள். மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியே வந்து துாரத்தில் உள்ள பூ ங்காவில் துவண்டு அமர்ந்தார்கள்.

“மச்சி! எனக்கு டாக்டர் மேல சந்தேகம் வருதுடா..” பாலா மெல்ல சொன்னான்.

“என்ன?” சோமு அவனை ஏறிட்டான்.

“நாம கிட்னி கொண்டு வர்றதுல விருப்பமில்லேன்னு நெனைக்கிறேன். அதனால் டாக்டருக்கு எல்லாத்தையும் தட்டிக் கழிக்கிறார்ன்னு தோணுது.”

“ஏன் அப்படி சொல்றே?”

“அவரே கிட்னி தேடி அறுவை சிகிச்கை முடிச்சா… அவர் நீட்டுற பில்லுக்கு நாம பணம் செலுத்தனும். நம்ம ஏற்பாட்டின்படி நடந்தா அவருக்கு கூலி மட்டும்தான். வருமானம் கம்மி. ”

அவன் சொன்ன அர்த்தம் எல்லாருக்கும் புரிந்தது.

“நானும் ஒரு அனுமானத்துலதான் சொல்றேன். அது உண்மையாவும் இருக்கலாம். பொய்யாவும் இருக்கலாம். அவர் எல்லாத்தையும் தட்டிக் கழிக்கிறதைப் பார்த்தால்… ஏன் இப்படி அவர் இருக்கக்கூடாதுன்னு எனக்கு யோசனை.” நிறுத்தினான்.

இது எல்லார் மனதிலும் நியாயமாகப் பட்டது.

எந்த டாக்டர்கள் மனித உயிரின்மேல் அக்கரை வைத்து வைத்தியம் செய்கிறார்கள். எல்லாரும் படித்து செலவு செய்த காசை எடுப்பதற்கும், மருத்துவமனை கட்டவும், வாங்கி வைத்திருக்கும் இயந்திரங்களுக்கு வேலை கொடுக்கவும், சின்ன தலைவலி என்றால் கூட… சி.டி. ஸ்கேன், எக்ஸ் ரே, இரத்தம், சிறுநீர், மலம் என்று எல்லா சோதனைகளையும் செய்யச் சொல்கிறார்கள். தங்களிடம் இல்லாவிட்டாலும் வைத்திருப்பவர்களிடம் கமிசன் பேசி அனுப்புகிறார்கள். எல்லார் மனங்களிலும் ஓடியது.

பாலா தொடர்ந்தான்.

“இப்போ… நம்ம டெஸ்ட் மேலேயே மேலேயே எனக்குச் சந்தேகம் வருது. குணாளன் ரத்தம் என்ன குரூப்ன்னு தெரிஞ்சு நம்மை வேற டாக்டர்கிட்ட சோதனை செய்தால் இவர் வண்டவாளம் தெரியும்.” நிறுத்தினான்.

“இதுவும் நல்ல யோசனை. சோமு உனக்குத் தெரிஞ்ச டாக்டர் இருந்தா சோதிச்சு பார்க்கலாம்.” என்றான் சுந்தர்.

“எனக்கு எல்லா டாக்டர்களையும் தெரியும். ஆனா அவனெல்லாம் தொழில் முறையில ஒருத்தனை ஒருத்தன் காட்டிக் கொடுக்க மாட்டான். நெருங்கிய உறவு முறையில டாக்டர் இருந்தால் இது சாத்தியம்.” சோமு சொல்ல… ஆளாளுக்கு விழித்தார்கள்.

“டாக்டர் தனுஷ் நாம சந்தேகப்படுறாப் போல எல்லாம் இல்லே. நம்மகிட்ட யோக்கியமாய்ப் பேசினார். அவர் மேல நம்பிக்கை வைச்சு.. மேலே தொடர்வோம். வாங்க போகலாம்.” பவித்ரன் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து எழுந்தான்.

நால்வரும் பூங்காவைவிட்டு வெளியே வந்தார்கள்.

‘ஆ…ஊ….’ என்று முக்கி முணகிக் கொண்டு ஒரு உருவம் வாசலில் சுருண்டு படுத்திருந்தது. பார்த்த பாலா திடுக்கிட்டான்.

“ஏய்… இங்கே பாருங்க….” அலறினான். பார்த்தவர்களுக்கும் துாக்கிவாரிப் போட்டது

இவர்கள் இரண்டாவதாய் கொண்டு வந்த பைத்தியம். கால் கைகளைக் குறுக்கிக் கொண்டு இருந்த அவன் உடல் தூக்கி தூக்கி போட்டது, சோமு தொட்டுப் பார்த்தான். கை நெருப்பைத் தொட்டது போல் சுட்டது.

“ஏய்.. ராமு ! ராமு ! அசைத்தான். அவனும் முடியாமல் புரண்டான்.

விலாப்பகுதியில் இரத்தக் கசிவு. ஆபரேசன் செய்து கிட்னியை எடுத்ததற்கான அடையாளம்.

அதிர்ந்தார்கள்.

“மச்சி! நாம மோசம் போய்ட்டோம்!” பாலா வெளிறினான்.

“என்ன?”

“டாக்டர் இவன்கிட்ட கிட்னி எடுத்திருக்கார்!”

“சிகிச்சைக்கு முன் தனக்கு என்ன நடந்ததுன்னு தெரியாம இவன் ஓடி வந்தானோ.. இல்லே வேலை முடிஞ்சதும் அவுங்களாத் துரத்தி விட்டாங்களோ தெரியலை. ஆனா இது கண்டிப்பா கிட்னி எடுத்த அடையாளம்தான். அதனாலதான் இவனுக்கு குளிர் சுரம்.” சோமு அடித்துச் சொன்னான்.

“மொதல்ல இவனை ஒரு மருத்துவமனையில சேர்த்து சிகிச்சை கொடுத்து உயிர் பிழைக்கிற வழியைப் பார்க்கனும் துாக்குங்க.” சுந்தரம் அவசரப்பட்டான்.

“பொறு!” பவித்ரன் அவனைக் கையமர்த்தினான்.

“ஏன்?”

“மருத்துவமனைக்குக் கொண்டு போறதுல ஒரு சிக்கல்!”

எல்லாரும் அவனைப் புரியாமல் பார்த்தார்கள்.

– தொடரும்…

– கிட்னி காவுகள்! (நாவல்), முதற் பதிப்பு: 20-12-2019, காரை ஆடலரசன் வெளியீடு, காரைக்கால்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *