கிட்னி காவுகள்!





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம் – 7

சோமு, பாலா, பவித்ரன், சுந்தர் அறையில் ஆளுக்கொரு மூலையில் இருந்தார்கள். அவர்களுக்குள்ளும் பயம். கலக்கம்.
“பாலா! நாம தொட்ட நாலு பைத்தியங்களில் மூணு பொணம். சின்னச்சாமி மட்டும்தான் உசுரோட இருக்கான். அவனும் இப்போ உசுரோட இருக்கானா செத்திருக்கானா… எங்கே எப்படி இருக்கான்னு தெரியலை. இனி போலீஸ் சும்மா இருக்காது. விசாரணையில் இறங்கும். நம்மை நெருங்கும். இதிலேர்ந்து நாம தப்பிக்கனும்ன்னா.. நாம குற்றவாளிகளைக் கண்டிப்பா கண்டு பிடிச்சே ஆகனும்!” பவித்ரன் ஆணித்தரமாகச் சொன்னான்.
“நானும் இதைத்தான் நெனைச்சேன்!” என்றான் சுந்தர்.
“எனக்கென்னமோ அப்படியெல்லாம் நடக்கும்ன்னு தோணலை.” சோமு மெல்ல சொன்னான்.
“எதை வைச்சு இப்படி சொல்றே?” பவித்ரன் அவன் முகத்தைப் பார்த்தான்.
“நாலு பைத்தியங்களையும் ஆளில்லா இடமாப் பார்த்து, அக்கம் பக்கம் வேற நல்லா கவனிச்சு, எவர் கண்ணிலேயும் படாம அமுக்கி இருக்கோம். அப்படி இருக்கும் போது எவர் சொல்லி போலீஸ் நம்மைத் தொடும்? சொல்ல வாய்ப்பில்லே!” சொன்னான்.
“போலீஸ் மூளை சாதாரணமானதில்லே. கிரிமினல்களைவிட அதிகமா வேலை செய்யும். அப்படி செய்தால்தான் புத்திசாலித்தனமா வேலை செய்துட்டு தப்பிக்கிற குற்றவாளிகளைப் பிடிக்க முடியும். இரும்பை இரும்பால அறுக்கிற, வெட்ற சாதி. அதனால போலீசுக்கு இது சாதாரணம். இவுங்க எப்படியாவது ஒரு சின்ன துரும்பு பிடிச்சு டாக்டர் தனுஷைத் தொட்டுட்டாங்கன்னா…. நாம காலி.” என்றான் சுந்தர்.
“சொன்னா அவரும் மாட்டிப்பார்.”
“இது அடுத்து விசயம். நாம் அவரைப் பார்க்கனும். சந்திச்சாதான் அவர் நம்மை திருப்பி…. தான் தப்பிக்கப் பார்க்கிறாரா இல்லையா புரியும். தப்பு செய்யலைன்னா அவரையும் நாம எச்சரிக்கை செய்யனும். இல்லேன்னா நம்மளால அவருக்கும் தொந்தரவு.”
“இதுதான் சரி.” அவன் சொன்னதை ஏற்று பாலா பலமாய்த் தலையாட்டினான்.
“ஆமாம்..!” சோமுவைத் தவிர மற்ற இருவரும் அவன் சொன்னதை ஆமோதித்தார்கள்.
எல்லாரும் எழுந்தார்கள்.
மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
அறையில் அவர் இல்லை.
உள் நோயாளிகளைப் பார்க்க ரவுண்ட்ஸ் போயிருப்பதாக சொன்னார்கள்.
அரை மணி நேரம் காத்திருக்க…. தனுஷ் வந்தார்.
“வாங்க…” வாசலில் அமர்ந்திருந்த இவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
இவர்கள் எதிர் நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
“எப்படி இருக்கீங்க?” விசாரித்து அவரும் இருக்கையில் அமர்ந்தார்.
“நல்லா இருக்கோம் டாக்டர்.” சோமு அடக்கமாயப் பதில் சொன்னான்.
“அறுவை சிகிச்சை முடிச்ச உங்க நண்பர் எப்படி இருக்கார்?”
“நல்லா இருக்கார் சார்”. பவித்ரன்.
“ம்ம்… பிரச்சனை முடிஞ்சாலும் இப்போ உங்களால நான் கெட்டேன்.”
“என்ன டாக்டர்?” சோமு திடுக்கிட்டான்.
“உங்கள் யோசனையை நானும் முட்டாள்தனமாய் கேட்டு முழிக்கிறேன். நீங்க கொண்டு வந்த மூணு பைத்தியங்கள் காலி. எந்த மருத்துவமனையில் அவுங்களைக் கொண்டு போய் அட்மிட் செய்து கிட்னி எடுத்து வித்தீங்க?”
“சார்ர்…!” பாலா, சோமு, சுந்தர், பவித்ரன் அரண்டு போய் ஒரே குரலில் அலறினார்கள்.
“நான் அவுங்களைச் சோதனை செய்து அனுப்பி விட்டதோட சரி. அப்புறம் அவுங்களுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லே. உங்களை விட்டால் இந்த வேலையைச் செய்ய வேற ஆளில்லே. எந்த டாக்டர் உதவி. எவ்வளவு காசுக்கு வித்தீங்க?”
தாங்கள் எதிர்பார்த்து வந்ததற்கு மாறாக காற்று மாறாக காற்று இவர்கள் திசையிலேயே திரும்பி அடிக்க…நால்வரும் திகைத்து திக்குமுக்காடிப் போனார்கள்.
சோமுவிற்கு மட்டும் நிமிடத்தில் நிதானம் வந்தது.
“சார். இது நாங்க கேட்க வேண்டிய கேள்வி. இதுக்காகத்தான் வந்தோம். நீங்க முந்திக்கிட்டு நல்லபிள்ளையா நடிக்கிறீங்க.” என்றான்.
“என்னப்பா சொல்றே ?” இப்போது அவர் திடுக்கிட்டார்.
“உங்க கேள்வியை நீங்களே திருப்பிக்கோங்க.”பாலா.
“நா…நானா…? என் மேல பழி சொல்லாதீங்க. நாக்கு அழுகிடும். போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திடுவேன்..!” சீறினார்.
“தாராளமாய் செய்யுங்க. யார் செய்ஞ்சாங்கன்னு சீக்கிரம் புரிஞ்சுடும்!” சுந்தர்.
ஐந்து நிமிடங்கள் அடை மௌனம். யாரும் பேசவில்லை.
“இப்போ நீங்களும் செய்யலை.. நானும் செய்யலை. இடையில புகுந்து யார் இந்த காரியத்தைச் செய்திருப்பா?” தனுஷ் திகைப்பாய் அவர்களை ஏறிட்டார்.
“நீங்க கண்டிப்பாய் செய்யலைன்னா…இதுல விசயம் தெரிஞ்ச மூணாவது மனுசன் யாரோ புகுந்திருக்காங்க.” சுந்தர் திட்டவட்டமாய் சொன்னான்.
“அப்படி மூணாவது ஆள் இல்லேன்னா நாம அஞ்சு பேரும் குற்றவாளி. எல்லாரும் கூண்டுக்குப் போகனுமா?” திகிலடித்தார்.
“அதுக்கு முன்னாடி நாம குற்றவாளியைக் கண்டு பிடிச்சா தப்பிக்கலாம் சார்.”
“எப்படி கண்டு பிடிக்க முடியும்?”
“நாம கண்டுபிடிக்கிறதுக்குள்ளே சின்னச்சாமி உளறி நம்மைக் காட்டிக் கொடுத்திடுவான்.”
“ச்சின்னச்சாமி !?….” தனுஷ் அவர்களைத் திகைப்பாய்ப் பார்த்தார்.
“ஆமாம் சார். நாங்க முதலாவதாய் கொண்டு வந்த ஆள். அவன்தான் இப்போ நம்ம தலை மேல் கத்தி! அவன் பைத்தியமாய் இருந்தாலும் அவன் உளறலைப் பத்து பேர் கேட்பாங்க. சந்தேகப்பட்டு போலீஸ் காதுல போடுவாங்க. போலீஸ் நம்மை நெருங்கும்.”
பாலா சொல்லச் சொல்ல… டாக்டருக்கு மயக்கம் வரும் போலிருந்தது, உயிர் மேல் பயம் வந்தது.
“நாம அநாவசியமா போலீஸ்ல மாட்டி உதை வாங்காம இருக்கனும்ன்னா சின்னச்சாமி வெளியில திரியறது தப்பு சார்.” பவித்ரான் டாக்டரைப் பார்த்துச் சொன்னான்.
“என்ன செய்யனும்?” இவர் அவனை ஏறிட்டார்.
“முன்னே மாதிரி யாருக்கும் தெரியாம அவனைப் புடிச்சு வந்துவிஷ ஊசி போட்டு கொன்னுடலாம்!” பவித்ரன்.
“பைத்தியம் போல பேசாதே. இப்பவே நாம வம்புல மாட்டி திரியறோம். தப்பு மேல தப்பு கூடாது. கொல்லனும், பொணத்தை மறைக்கனும்…. நிறைய நிறைய சிக்கல் இருக்கு. சிறைக்குப் போனாலும் போகலாம். நமக்குக் கொலை வேணாம். நான் இதுக்குத் துளிகூட சம்மதிக்க மாட்டேன்!” தனுஷ் உறுதியாக சொன்னார்.
“நாம சம்பந்தப்பட வேணாம் டாக்டர். லாரிகாரன்கிட்ட கண்ணைக் காட்டிவிட்டு பணத்தைக் கொடுத்தா அடிச்சுட்டுப் போயிடுவான் பைத்தியம் லாரியில மாட்டி செத்துட்டான்னு பேராய்ப் போயிடும். நாமும் சுலபமாக தப்பிக்கலாம்.”
“செய்யலாம். தர்மம் பார்த்துக்கிட்டே இருந்து பின்னால மாட்டி வைக்கும். பாண்டிச்சேரியில ஒருத்தனைக் கொன்னு வயக்காட்டுல பொதைச்ச கொலையாளிங்க. அஞ்சு வருசம் கழிச்சு மாட்டி இருக்காங்க.”
“அப்படின்னா ஆளைக் கொண்டு போய் கண்காணாத இடத்துல விட்டுட்டு வந்திடலாம்.”
“இந்தியாயாவுல எங்கே இருந்தாலும் போலீஸ் புடிக்கும்.”
“அப்போ நாம தப்பி வழி ?”
சோமுவைத் தவிர எல்லாரும் மாறி மாறி பேசினார்கள். அவனும் கடைசியாக பேசினான்.
“ஒரே வழி. சின்னச்சாமியைக் கொல்லக்கூடாது. அவன் தலை வெளியில தெரியக்கூடாது. எவர் கண்ணிலேயும் படாம மூடி வைக்கனும் அவ்வளவுதான் விசயம்!” என்றான்.
“அது எப்படி?”
“எங்காவது அடைச்சு வைச்சு குற்றவாளி கிடைச்சதும் வெளியில விடனும்.”
“எங்கே மறைக்க?”
“சுலபமா மறைக்க ஒரே இடம். இந்த மருத்துவமனை!” இதைக் கேட்டதும் டாக்டர் துணுக்குற்றார்.
கொஞ்சம் யோசிக்க…சிறிது உதைத்தாலும் சரியாகப்பட்டது.
“ஏன்…. அப்படியே வைத்தியம் பார்த்து, அவனைச் சரிபடுத்தியும் அனுப்பலாம்..” பாலா தன் யோசனையை வெளியிட்டான். எல்லாரும் டாக்டரைப் பார்த்தார்கள்.
“மொதல்ல ஆளைப் புடிச்சு வாங்க. அடுத்து என்ன யோசனையோ அதன்படி செய்யலாம்!” எழுந்தார்.
அத்தியாயம் – 8
எல்லாரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.
சோமு நண்பர்களைக் கையமர்த்தி நிறுத்தினான்.
“நான் சொல்றதை எல்லாரும் கவனமா கேளுங்க. சின்னச்சாமியைப் புடிக்கிற வேலையை நாம இப்போ ரொம்ப ரகசியமா செய்யனும். யாரும் அவனைப் பத்தி மத்தவங்ககிட்ட பேசக்கூடாது, விசாரிக்கக்கூாடாது. அப்படி செய்தா போலீஸ் காதுக்கு இந்த சேதி போகும். இவன்தான் சார் கேட்டான். அவனை விசாரிங்கன்னு அவன் நம்மை போட்டுக் கொடுக்க…ஆபத்து.! ஆகையினால் நாம் யாரையும் விசாரிக்காம தானேத் தேடனும். என்ன தேடறீங்கன்னு மத்தவங்க விசாரிச்சாக்கூட விசயத்தைச் சொல்லாம எதையாவது சொல்லி வரனும்.” எச்சரிக்கை செய்தான்.
“ஆமாம்.!” பாலா, சுந்தர், பவித்ரன் பலமாய்த் தலையாட்டினார்கள்.
“நாம எல்லாரும் ஒன்னா சேர்ந்த மொத்தமாய் போய் தேடினாலும் ஆபத்து. நாலு பேர் கண்ணுல படும். கவனிப்பாங்க. இப்பவே பிரிஞ்சு ஆளுக்கொரு திசையில போகலாம். நான் தெற்கு, பாலா மேற்கு, சுந்தர் கிழக்கு, நீ வடக்கு.” சோமு பவித்ரனைக் கைகாட்டினான்.
“வம்பை விலை கொடுத்து வாங்கிட்டோம்!” சுந்தர் முணகிக் கொண்டே வண்டியை எடுத்தான்.
அவனுக்குச் சிக்கலில் மாட்டியதில் வெறுப்பு.
“சும்மா வராதுடா சொர்க்கம். நல்ல நட்பைத் தக்க வைச்சுக்கனும்ன்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகனும்!” என்று அவனைக் கண்டித்த சோமு…அடுத்து…
“எல்லார்கிட்டேயும் கைபேசி கண்டிப்பா இருக்கட்டும். சின்னச்சாமியை யார் கண்டாலும் மத்தவங்களுக்குத் தகவல் கொடுங்க. மத்தவங்க தேடுதல் நிற்கும். இடம் பொருள் ஏவல் சரியா இருந்தால் அவனை யாருக்கும் தெரியாம கொண்டு போய் டாக்டர்கிட்ட சேர்த்துடுங்க. எங்கே போய் சுத்தினாலும் சரியாய் ஏழு மணிக்கு நாம இங்கே திரும்பவும் கூடனும். என்ன செஞ்சோம்., அடுத்து என்ன செய்யப் போறோம்ன்னு பேசிக்கலாம்.” சொல்லி வண்டியை விட்டான். ஆளாளுக்கு அவரவர்கள் திசையில் பிரிந்தார்கள்.
முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவாக தங்கள் வண்டியை ஓட்டி எல்லா இடங்களையும் உன்னிப்பாக பார்த்தார்கள்.
டீக்கடையில் இறங்கி டீ குடித்து, பெட்டிக் கடைகளில் இறங்கி சிகரெட் பிடித்து… நோட்டமிட்டார்கள்.
ஆள் அடிபட்டு செத்துக் கிடக்கிறானா என்று கூட்டமாய் மக்கள் நிற்கும் இடத்தில் பதை பதைப்பாய் இறங்கிப் பார்த்தார்கள். சின்னச்சாமியைக் காணோம்!
காலையில் சொன்னபடி மாலை ஏழு மணிக்கெல்லாம் நால்வரும் அதே இடத்தில் கூடினார்கள்.
அனைவரின் முகங்களும் சோர்ந்து போய் இருந்தது. பாலா ரொம்ப வாட்டம்.
“எங்கே தேடியும் கெடைக்கலை.” அலுத்து சொன்னான்.
“ஒருவேளை சின்னச்சாமி கால் போன போக்கில் நடந்து இந்த ஊரை விட்டே போயிருப்பானா?!” சுந்தர் சந்தேகத்தை எழுப்பினான்.
“இருக்கலாம்!” சோமு ஆமோதித்தான்.
“எந்த ஊருக்குப் போய் எப்படி கண்டுபிடிக்கிறது?” பவித்ரன் திகைத்தான்.
“அவன் எந்த ஊர்ல இருந்தாலும் கண்டு பிடிச்சே ஆகனும்!”
“அவனை எவனாவது கடத்தி இருப்பானா?”
“கடத்தக் காரணம்?”
“நம்மை மாதிரியே நிசக் குற்றவாளிக்கும் பயம் வந்து அப்படி செய்திருந்தால்?!”
இந்த கேள்வி எல்லோரையும் யோசிக்க வைத்தது. “இன்னொரு யோசனை. யார் கையிலேயும் அவன் சிக்கக்கூடாதுன்னு போலீஸ் புடிச்சு வைச்சிருக்குமா?”
“ஒருவேளை டாக்டரே மறைச்சு வைச்சு நம்மை சுத்தி விடுறாரா?”
“அவர் மருத்துவமனையைக் கண்காணிச்சா விசயம் வெளிச்சத்துக் வரும்?”
“எப்படி கவனிக்கிறது? அது பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி எத்தினி கட்டிடம், எத்தனை அறை இருக்குன்னு வெளி ஆள் யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அங்கே வேலை செய்யிற ஆட்களுக்குத் தெரியலாம். எவனையாவது புடிச்சு காசை விட்டெறிஞ்சு கண்காணிக்கச் சொன்னா விபரம் புரியும்.”
“அவனும் நமக்கு நம்பிக்கையான ஆளாய் இருக்கனும்!”
”சரி. அங்கே சின்னச்சாமி ஏதோ ஒரு அறையில அடைஞ்சிருக்கான். அடைச்சு வைக்கப் பட்டிருக்கான். அடுத்து என்ன?”
“டாக்டரை உண்டு இல்லை பண்ணனும். நாமே போலீசுக்கு நேரடியாய்ப் போய் விசயத்தைச் சொல்லி மாட்டி விடனும்..”
சோமுவின் கைபேசி ஒலித்தது. தனுஷ்தான் !
“வணக்கம் டாக்டர்.”
“வணக்கம். சின்னச்சாமி கெடைச்சானா ?”
“இன்னும் இல்லே.”
“கெடைச்சுட்டான்!?”
“என்ன சார் சொல்றீங்க?”
“சௌக்கியாபுரத்துல சுத்திக்கிட்டிருக்கான்.”
“அது எங்கே இருக்கு டாக்டர்?”
சொன்னார்.
“ஓ.கே டாக்டர் ஒரு சின்ன சந்தேகம். அவன் அங்கே இருக்கிற விசயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?”
அணைத்தார்.
– தொடரும்…
– கிட்னி காவுகள்! (நாவல்), முதற் பதிப்பு: 20-12-2019, காரை ஆடலரசன் வெளியீடு, காரைக்கால்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |