கிட்னி காவுகள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 3,182 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

நால்வருக்கும் போலீஸ் ஸ்டேசனைப் பார்ப்பதற்கே பயமாய் இருக்க…. விதுக் ! விதுக்..! தயக்கமாய்ப் படி ஏறினார்கள்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம், யாரோ ஒரு குற்றவாளியை பட்டாப்பட்டி அண்டர்வேயருடன் நிற்க வைத்து விசாரித்துக் கொண்டிருந்தார். விசாரிக்கப்பட்டவனின் உடம்பு அடியில் கன்றிப் போயிருந்தது. திருட்டு கேசோ, சந்தேக கேசோ நன்றாக சவட்டி இருப்பார் போல தீவுத் தீவாய் உப்பி இருந்தது.

“ம்ம் நடந்ததை ஒப்புத்துக்கிட்டே. மேலே சொல்லு?” என்று அவனைப் பார்த்து மிரட்டலாய்ச் சொன்னவர் புதிதாக ஆட்கள் உள்ளே வருவதைப் பார்த்ததும் விசாரணையை நிறுத்தி, “நீ போய் அந்த மூலையில உட்கார்.” அனுப்பினார்.

அவன் நகர்ந்து அவர் காட்டிய இடத்தில் அமர்ந்தான்.

சோமு, பாலா, பவித்ரன், சுந்தருக்கு தடக்! தடக்! பயத்துடன் அவர் முன் நின்றார்கள்.

”யார் நீங்க?”

“சா..சார்! நான் பவித்ரன், இவன்! பாலா, சுந்தர்….அவன் சோமு!”

“வந்த விசயம் என்ன?”

“எ…எங்க வண்டி….”

“நான்- பார்க்கிங் ஏரியாவுல விட்டுப் போயிருக்கீங்களே நியாயமா?”

“ஏதோ யோசனையில தெரியாம….”

“எங்கே வேலையில இருக்கீங்க?”

சொன்னார்கள்.

“எல்லாரும் படிச்சு உத்தியோகத்துல இருக்கீங்க. இப்படி தப்பு பண்ணலாமா?”

“மன்னிச்சுக்கோங்க சார்.”

“வண்டி ஓட்டுநர் உரிமம், ஆர்.சி, இன்சூரன்ஸ் காட்டுங்க?”

“வண்டியிலேயே இருக்கு சார்.”

“போய் எடுத்து வாங்க. எல்லாம்… ஸ்டேசன் பின்னால இருக்கு.”

வெளியே வந்தார்கள். வண்டிகளுக்குப் போய் பெட்டிகளைத் திறந்து நிமிடத்தில் எடுத்துக் கொண்டு திரும்பினார்கள்.

“உட்காருங்க.” சொல்லி அவர் இவர்கள் கொடுத்தவைகளை ஆராய்ந்தார்.

அப்போதுதான் அந்த பெண் வந்தாள். வயசு முப்பது இருக்கும். வாடி வதங்கிய முகம். ஏழ்மையான தோற்றம். முந்தானையால் உடல் போர்த்தி வந்தாள். முகம் வாட்டம். ஏதோ துக்கம் அவளைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது,

சந்தானம் ஆராய்வதை, “நிறுத்தி என்னம்மா?” அவளை ஏறிட்டார்.

அருகில் வந்தவள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

“அழாமா விசயத்தைச் சொல்லு?”

“எ…என் பேர் மாலா சார். இது என் புருசன்.” தன் கையில் பத்திரப்படுத்தி இருந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை நடுக்கத்துடன் அவர் முன் மேசை மேல் வைத்தாள்.

படத்தைப் பார்த்த சோமு, சுந்தர், பாலா, பாலா, பவித்ரனுக்குள் வயிற்றைக் கலக்கியது. நாலாவதாய்ப் பிடித்த பைத்தியம்!

படத்தைப் பார்த்த சந்தானம், “விசயம் சொல்லு?” ஏறிட்டார்.

“பேர் கோவாலு சார். பாதி பைத்தியம். வீடு தங்காது. ஏதேதோ புலம்பிக்கிட்டு ஊர் சுத்தும். ஆனா எங்கே சுத்தினாலும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் எனக்குக் காவல் போல வீட்டுக்கு முன்னால இருக்கிற தெரு சுத்தும். விடிஞ்சதும் காணாம போகும். ரெண்டு வருசமா இப்படி இருந்ததைப் பத்து நாளாக் காணலை சார். நானும் இன்னைக்கு வரும், நாளைக்கு வரும்ன்னு தேடாத இடமில்லே. காணலை சார்.” அழுதாள்.

“பைத்தியம் மனம் போன போக்குல போயிருக்கும். இல்லே லாரி பஸ்ல அடிபட்டு…” அதற்கு மேல் பேசாமல் தன் தவறை உணர்ந்து நிறுத்தினார்.

“தெரியலை சார். நான் கூலி வேலை செய்ஞ்சு பொழைக்கிறவ மானத்தோட வாழ்றவள். அது இருந்தவரைக்கும் என் மானத்துக்கு நிம்மதி. பயந்துக்கிட்டு எந்த நாய் நரியும் சுத்தலை. பத்து நாளாய்க் காணலைங்குதை மோப்பம் புடிச்சு இப்போ கண்ட நாய்ங்க என்னை ஒரு மாதிரியாய்ப் பார்க்குது. என் புருசனைக் கண்டு பிடிச்சு குடுங்க சார்.” அழுதாள்.

‘பைத்தியமாய் இருந்தும் மனைவிக்குப் பாதுகாப்பு!’ சந்தானத்திற்கு ஆச்சரிமாக இருந்தது.

மாலா மீதும் மதிப்பு மரியாதை வந்தது.

“கடைசியாய் உன் புருசனை என்னிக்கும்மா பார்த்தே?” கேட்டார்

“சரியாய் பத்து நாளைக்கு முன்னால சார். காலையில எழுந்து வாசல்ல தண்ணி தெளிக்கும் போது என் கண் முன்னால நடந்து போனது சார். சாயந்தரம் திரும்பலை. தினைக்கும் பகலெல்லாம் எங்காவது சுத்திட்டு ராத்திரிக்குத் திரும்புறதுதானே… அன்னைக்குத் திரும்பலை. இப்ப வரும் அப்ப வரும்ன்னு முழிச்சிருந்தேன். நேரம் ஆக ஆக…எங்ககாவது அடிபட்டு செத்துடுச்சோன்னு பயம். விடிஞ்சுதிலேர்ந்து தேடினேன். இல்லே. அது உசுராய் இருந்தால் திரும்பி இருக்கும் சார்.” அழுதாள்.

சந்தானத்திறகு மனதைப் பிசைந்தது.

“சரிம்மா. நீ ஏட்டுக்கிட்ட புகார் எழுதிக் குடுத்துட்டுப் போ சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்”. சொன்னார்.

விழித்தப்படி நின்றாள்.

“எழுதத் தெரியாதா?”

“ப…படிக்கலை.”

“பரவாயில்லே. நீ சொல்லு. ஏட்டு எழுதிக்குவார்.”

நகர்ந்தாள். ஏட்டு முன் நின்றாள்.

சப்-இன்ஸ்பெக்டர் சரிபார்த்து தாட்களைத் திருப்பித் தந்தும் இவர்களுக்கு உணர்வில்லை. நடைபிணமாய் எழுந்து வண்டிகளை எடுத்துக் கொண்டு வந்து ஓரிடத்தில் நின்றார்கள்.

“ஆக…. நாலாவது பைத்தியம் கிட்னியும் அவுட்! இல்லேன்னா காணாம போக காரணம்?” சுந்தர் அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

“நாம பைத்தியங்களைக் கொண்டு விட்டு பரிசோதனை முடிஞ்சதும் திருப்பிக் கொண்டு வந்து விட்டிருந்தால் இந்த பிரச்சனை இல்லே. டாக்டர் பரிசோதனை செய்து சரியாய் இருந்தா வைச்சிருப்பார். இல்லேன்னா விட்டுடுவார்ன்னு நெனைச்சுப் பாராமுகமாய் இருந்தது இன்னைக்கு இவ்வளவு பெரிய சிக்கல். இவன் ஆள் சிக்காம செத்து தொலைஞ்சான்னா இன்னும் ஆபத்து,” பாலா சொன்னான்.

கேட்டவர்கள் முகங்களில் இருள். சிலையாக இருந்தார்கள்.

“இன்னும் முதல் பைத்தியம் முடிவு தெரியலை.” பவித்ரன் அடுத்து ஆரம்பித்தான்.

“வாங்க போகலாம்!” சோமு வண்டியிலிருந்து நிமிர்ந்தான். அவனுக்கு நிற்கப் பிடிக்கவில்லை.

‘எல்லாம் தன்னால் வந்தவினை !’ – நினைக்க உறுத்தலாக இருந்தது.

நால்வரும் வண்டியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்கள். பாதி வழியில் சாலை ஓரத்தில் பத்துப் பதினைந்து பேர் கூட்டமாக நின்றார்கள்.

சோமு அங்கிருந்து எதிரில் வந்தவனை நிறுத்தினான்.

“அங்கே என்ன கூட்டம். விபத்தா?” கேட்டான்.

“இல்லே சார். தாடியும் மீசையுமாய் எவனோ பிச்சைக்காரன் போல செத்துக் கிடக்கான்!”

‘நம்ம ஆளா?’ சோமுவிற்குள் சந்தேகம்.

வண்டியை அங்கு ஓரம் கட்டி நிறுத்தி நண்பர்களுடன் சென்று கூட்டத்தை விளக்கிப் பார்த்தான்.

மூன்றாவது பைத்தியம் முருகேசன்! இவர்கள் தலையில் இடி இறங்கியது உறைந்தார்கள்.

அடுத்த இடி மேல் இடியாய்….

“எந்த கயவாளிப் பயலோ இதுகிட்ட கிட்னி எடுத்திருக்கான்.”

“இந்த பைத்தியக்காரன்கிட்ட எந்த டாக்டர் எப்படி எடுத்தான்னு தெரியலை.”

“எடுத்து முறையாய் சிகிச்சை செய்து அறுத்த இடத்தைக் குணப்படுத்தி அனுப்பி இருந்தா இவன் செத்திருக்க மாட்டான். வேலை முடிஞ்சதும் துரத்தி விட்டுட்டான்ங்க. தையல்லேர்ந்து ரத்தம் கசிஞ்சு செத்துட்டான். மூளை உள்ளதா இருந்தா முறையா சிகிச்சை எடுத்துப் பொழைச்சிருக்கும். இது இல்லாததுதானே…கண்டபடி இருந்து கவனிக்காம செத்திருக்கு..!”

“எடுத்தவன் குடும்பம் விளங்காது.”

“என்ன அறிவுகெட்டத்தனமாப் பேசுறே ? அறுத்தவன் ஒழுங்கா குணப்படுத்தனும்ன்னு தான் தைச்சதை மூடியிருக்கான். மூளை கெட்டவனால ஒழுங்கா ஒரு ஒழுங்கா ஒரு இடத்துல உட்கார முடியலை. புறப்பட்டு வந்திருக்கான். செத்திருக்கான்.”

“இப்போ எல்லாம் ஆஸ்பத்திரிக்கு நம்பி போக முடியறதில்லே. வயித்துல கட்டி அது இதுன்னு சொல்லி ரெண்டு நாள் படுக்க வைச்சு கிட்னியை எடுத்து அனுப்பிடுறானுங்க”

“கொஞ்ச நாளைக்கு முன்னால டி.வி கூட இந்த சேதியெல்லாம் காட்டினாங்க.”

“ஏன்… மலைக்கு கல்லுடைக்கன்னு அழைச்சுப் போய் நிறைய அப்பாவி மக்களுக்கு இப்படி வெட்டி அனுப்பி இருக்கிறதைகூட இப்போ டி.வி பொட்டியில காட்டினாங்க.”

மக்களின் பேச்சுகளால்…

தாக்குப் பிடிக்க முடியாதவர்களாய் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

மாலை பத்திரிக்கையில்

ஊட்டி மலைப் பகுதியில் வாலிபர் பிணம்! – தலைப்பில் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகி இருந்தது

அது நண்பர்கள் தலையில் மேலும் இடியை இறக்கியது.

அத்தியாயம் – 6

அந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருபது இருபத்தைந்து ஆட்டோக்கள் வரிசையாக நின்றன. எல்லா டிரைவர்களும் கும்பலாக நின்று அரட்டையடித்துக் கொண்டு இருந்தார்கள். எல்லாரும் இருபதிலிருந்து நாற்பத்தைந்து வயது. முப்பது வயது கணேசன்தான் தலைவர். நல்ல நெட்டையாய் செவலையாய் இருந்தான்.

சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமும், ஏட்டும் துாரத்தில் புல்லட்டை நிறுத்தி விட்டு இவர்களை நோக்கி வந்தார்கள்.

“வந்துட்டானுங்க. எவன் செத்து சுடுகாட்டுக்குப் போனான், எவ செத்து அழுகிக் கெடக்காள்ன்னு தெரியலை. ஊர்ல கொலை, கொள்ளை ஒன்னு நடந்துடக்கூடாது. உடனே இவனுங்களுக்கு விசாரிக்கத் தோன்றது ஆட்டோக்காரனுங்க, ரிக்ஷாகாரனுங்கதான்.” முணுமுணுத்தான்.

“கணேசு! மெல்ல. அவனுங்க காதுல விழுந்துடப்போகுது, என்னைக்காவது எக்குத் தப்பா மாட்டிக்கிட்டா இதை மனசுல வைச்சு விடாம கேசெழுதுவானுங்க.” அடுத்து நின்ற பசவராஜ் எச்சரித்தான் அவர்கள் இவர்கள் அருகில் வந்தார்கள்.

“இந்த போட்டோவுல உள்ள ஆளை எங்கேயாவது பார்த்தீங்களா?” மாலா கொடுத்த புகைப்படத்தை அவர்கள் முன் நீட்டி சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.

கணேசு வாங்கினான். எல்லாரும் கவிழ்ந்து பார்த்தார்கள்.

“இவனை தாடி மீசையோட எங்கேயோ பார்த்திருக்கேனே….!” பசவராஜ் படத்தைப் பார்த்துவிட்டு அன்னாந்து நெற்றியைத் தேய்த்தான்.

“அட! இவன் பைத்தியம் சார்!” உற்றுப் பார்த்த ஒருத்தன் கூவினான்.

“ஆமாம். இவன் பைத்தியம்தான். பத்து நாளா காணலை. எங்கே பார்த்தே சொல்லு?”

“பத்து நாளைக்கு முன்னாடி பார்த்ததுதான் சார். இப்போ பார்க்கலை.”

“அவசரம் இல்லே. நல்லா யோசிச்சு சொல்லு?”

“இல்லே சார். நாங்க பார்க்கலை.” ஒருத்தன் சொல்ல எல்லாருமே பலமாக தலையாட்டினார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் ஏமாற்றமில்லை. எந்தவித வருத்தமுமில்லாமல் திரும்பினார். புல்லட்டில் ஏறி அமர்ந்ததும், “கணேசு! இங்கே வா.” அழைத்தார்.

அருகில் வந்தான்.

“நீ சொன்னது என் காதுல விழுந்துது. போலீஸ்காரன் எல்லாத்துக்கும் ஆட்டோ, டாக்சி, ரிக்ஷாவெல்லாம் ஏன் விசாரிக்கிறான்னா…நீங்க எல்லா இடத்திலேயும் புகுந்து புறப்பட்டு வர்றீங்க. உங்களுக்குத் தெரியாம எதுவும் நடக்க வாய்ப்பில்லே. விசாரிச்சா சீக்கிரம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம்ங்குற காரணம். மத்தபடி நீங்க அதுக்கு உடந்தை, கூட்டுங்குற தப்பான எண்ணமெல்லாமில்லே.” மென்மையாய்ச் சொன்னார்.

கணேசுக்கு முகம் தொங்கிப் போனது.

“மன்னிச்சுக்கோங்க சார்!” உருகினான்.

‘ஓ.கே.’ வண்டியை விட்டார்.

அடுத்து ரிக்ஷா ஸ்டாண்ட்.

நாலைந்து பேர்களிடம் விசரித்தும் எந்த உருப்படியான பதிலும் இல்லை. ஐந்தாவது ஆள்தான்….

“இவன் பேஜார் புடிச்ச பைத்தியம் சார். அங்கே இங்கே சுத்தும். திடீர்ன்னு சமயத்துல கார் பஸ்ஸை மறிப்பான். எவனாச்சும் அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான் அடையாளம் காட்டனுமா சார் ?” கேட்டான்.

“சாகலை. பத்து நாளா காணலை. இவன் பொண்டாட்டி புகார் கொடுத்திருக்காள்.”

“இவனுக்குப் பொண்டாட்டி வேற இருக்காளா ? லாரியில அடிபட்டு செத்திருப்பான் சார். நாய் நரி இழுத்துப் போயிருக்கும் கண்டு பிடிக்கிறது வேஸ்ட்.”

சப்-இன்ஸ்பெக்டர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

“ஐயோ சாமி! நான் மனசுல பட்டதை மறைக்காம சொன்னேன். என்னைக் குத்தவாளியாயக் குறி பார்க்காதீங்க.” அவன் பதறினான்.

சந்தானம் புன்னகைத்து புல்லட்டில் ஏறினார். ஏட்டு பின்னால் தொற்ற… உதைத்தார். மனம் போன போக்கில் சுற்றி…. ஏறக்குறைய பத்து லிட்டர் பெட்ரோல் செலவானதுதான் மிச்சம். மாலா கணவனைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்க வில்லை.

“இவன் பைத்தியம். தேடிப் பார்த்தோம் கெடைக்கலை. மனம் போன போக்கில எங்கேயாவது போயிருப்பான். தேடிப் பார்க்கிறோம்ன்னு ஆள் வந்தா சொல்லிடலாம் சார். இவனுக்கு இவ்வளவு கஷ்டப்படத் தேவை இல்லே.” பின்னால் இருந்த ஏட்டு சொன்னார்.

“ஆளையேக் காணலைன்னு சுலபமா மூடிடலாம். இவன் காணாம போனது வில்லங்கமா இருந்தால் பின்னால நமக்குச் சங்கடம். ஏன்…? புருசன் பைத்தியம்ன்னு இவளுக்கே கள்ளப்புருசன் இருக்கலாம்.! பைத்தியமா இருந்தாலும் புருசன் இருக்கிறது தொல்லை. கஷ்டம்ன்னு நெனைச்சு ரெண்டு பேருமே கூட்டுச் சேர்ந்து அவனைக் கொன்னிருக்கலாம். நம்ம கண்ணுல மண்ணைத் துாவுறதுக்காக… காணலை, கண்டு பிடிச்சு கொடுங்க ன்னு நடிக்கலாம். நாட்டுல என்னென்னமோ நடக்குது. இதுல மேல் மட்டம் கீழ் மட்டம்ன்னு வித்தியாசம் கெடையாது. எங்கேயும் நடக்குது. நம்மகிட்ட புகார் வந்தவரை சரியாய் துப்புத் துலக்கிட்டோம்ன்னா பின்னால நமக்குப் பிரச்சனை கெடையாது. எந்த மேலதிகாரிக்கும் நின்னு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லே. ஆனா…ஏட்டு சார் ! புகார் கொடுத்த பொண்ணைப் பார்த்தா அப்படி தப்பானவளாய்த் தெரியலை. கண்ணுல கண்ணியம் தெரியுது. இவ புருசனைக் கண்டு பிடிச்சு கொடுத்தால் நாம இவளுக்குச் செய்யிற உபகாரமாய் இருக்கும்ன்னு என் மனசுல படுது.” நிறுத்தினார்.

இதுவரை எந்த புகார் வந்தாலும் லஞ்சம், மாமூலுக்கு அலைந்து இரக்கக் குணம் இல்லாத சப்இன்ஸ்பெக்டர்களாகப் பார்த்து பழக்கப்பட்டு ஏட்டுவிற்கு சந்தானம் குணம் சந்தோசத்தைக் கொடுத்தது, இவர்கள் ஸ்டேசனுக்குள் நுழைந்த அடுத்த வினாடி…

வெளியிலிருந்து மாலா தலைவிரிக்கோலமாய் கையில் செய்தி தாளுடன் ஓடி வந்தாள்.

“ஐயா…! என் புருசனை யாரோ கொன்னுட்டாங்க. பேப்பர்ல சேதிய்யா.” – அலறி அடித்துக் கொண்டு வந்து சப்-இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து மயங்கினாள்.

சந்தானத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வரச் செய்து மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகுதான் மூச்சு விட்டார்.

‘படிக்கத் தெரியாத இவளுக்கு யாரோ படித்துச் சொல்லி இருக்கிறார்கள். இல்லை புகைப்படத்தைப் பார்த்து பேப்பர் வாங்கி மற்றவர்களைப் படிக்கச் சொல்லி…. ஒடி வந்திருக்கிறாள். இல்லை படித்தவர்கள் வந்து சொல்லி வந்திருக்கிறாள்.’ சந்தானத்திற்குப் புரிந்தது.

‘யார், எந்த சமூக விரோத கும்பல் இப்படி செய்தது. இல்லை காசுக்கு ஆசைப்பட்டு இப்படி எந்த டாக்டராவது…? எங்கே எப்படி ?’ மூளையைக் கசக்கினார்.

ஊட்டிக்கு…. தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

“ஹலோ ! நான் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம்.!”

“நான் ஆரோக்கியம் பேசுறேன்டா.”

“பேப்பரைப் பார்த்தேன். கொலையா தற்கொலையா?”

“கொலைதான். ரெண்டு கிட்னியும் எடுத்திருக்கு. முதல் கிட்னியை ஒரு வாரத்துக்கு முன் எடுத்திருக்காங்க. அடுத்து இன்னொரு கிட்னியையும் எடுத்து.. ஆள் குளோஸ். கொடுமை.”

“போஸ்ட்மார்ட்ட ரிப்போர்ட்டா?”

“ஆமாம். அதைத்தான் இப்போ படிச்சிக்கிட்டிருக்கேன். என்ன விசயம்?”

“என் ஏரியா ஆள்!”

“உன் ஏரியா ஆளா?!”

“ஆனா எப்படி என்ன விசயம்ன்னுதான் தெரியலை?….”

“குழம்பாதே. ஆள் யார் என்னன்னு கண்டுபிடிக்கிற பாதி வேலையை நீ இப்போ முடிச்சுட்டே. ஆளை ஊட்டிக்குக் கொண்டு வந்து கிட்னிகளை எடுத்து பொணத்தைக் கடாசினாங்களா. இல்லே… சென்னையிலேயே எடுத்து கொலையை மறைக்க இங்கே கொண்டு வந்து எறிஞ்சாங்களா. இல்லே.. யார் மேலேயாவது பழியைப் போட இப்படி செய்தாங்களா..? கொலையைச் செய்தது டாக்டரா, கும்பலா, யார் என்னன்னு நான் விசாரிச்சு மீதி வேலையை முடிச்சு நான் உனக்குப் போன் பண்றேன்.” வைத்தார்.

‘என்ன கொடுமை இது ?!’ சந்தானம் போனை வைத்துவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டார்.

“என்ன சார்?” – ஏட்டு பவ்வியமாய் வந்து அவர் முன் நின்றார்.

“நம்ம கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற ஏரியாவுல இதோட மூணாவது கேஸ். உதவும் கரங்கள் உதவியால ஒருத்தன் அரசாங்க ஆஸ்பத்திரியில அனாதைப் பொணம். அடுத்து ரோட்டோரத்துல ஒருத்தன். இப்போ ஊட்டி. எல்லாருமே கிட்னி எடுக்கப்பட்ட பைத்தியங்கள். மன நோயாளிகளை யாரும் மதிக்கமாட்டாங்க. அவுங்க பேச்சை யாரும் பொருட்டா எடுத்துக்க மாட்டாங்க. அதுங்களை வைச்சு வழக்கு நடத்த முடியாது. செத்தாலும் சொந்தக்காரங்ககூட தொல்லை விட்டுதுன்னு கண்டும் காணாம போவாங்க. இப்படி ரொம்ப யோசிச்சு பைத்தியங்களாய்ப் புடிச்சு யாரோ கிட்னி எடுத்திருக்காங்க. மூணு பொணங்களும் அடுத்தடுத்து கெடைச்சதால யாரோ ஒரு ஆள், இல்லை..ஒரு சமூக விரோத கும்பல் ஒரு டாக்டரை கையில போட்டுக்கிட்டு இவங்ககிட்ட கிட்னி திருடி வியாபாரம் பண்றாங்க”. சொல்லி நிறுத்தினார்.

ஏட்டுவிற்குத் திகைப்பாய் இருந்தது.

– தொடரும்…

– கிட்னி காவுகள்! (நாவல்), முதற் பதிப்பு: 20-12-2019, காரை ஆடலரசன் வெளியீடு, காரைக்கால்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *