கிட்னி காவுகள்!





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

“108 உதவி இல்லாம் அனாதையாய் அடிபட்டு கிடக்கிறவனை அனுதாப முறையில் மருத்துவமனையில சேர்க்க முடியாது. சேர்த்தாலும்… போலீஸ்ல நாம யார், அடிபட்டவன் எவன், விபத்து எப்படின்னு நாம புகார் கொடுக்கனும். அதுக்கு அப்புறம்தான் சிகிச்சை”. பவித்ரன் நடைமுறையைச் சொன்னான்.
நண்பர்கள் விழித்தார்கள்.
“நாம ஏற்கனவே இவனைத் தொடாமல் இருந்திருந்தால் மருத்துவமனையில கொண்டு சேர்த்து, சேர்த்து, ஐயா ! இவன் ரோட்டுல ரத்தக்கசிவு நடுக்கச் சுரத்தோட அனாதையாய்க் கிடந்தான். நாங்க மனிதாபிமான முறையில ஆளைக் கொண்டு வந்து மருத்துவமனையில சேர்த்திருக்கோம். எங்களுக்கும் இவன் உடலிலுள்ள காயத்துக்கும் சம்பந்தம் கிடையாது. இதை நாங்க எங்கு சொல்லவும் தயார். இது எங்க விலாசம். தேவைப்பட்டால் அழைங்கன்னு தைரியமா போலீஸ்ல புகார் கொடுத்துட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துட்டு திரும்பலாம். இப்போ அப்படி செய்ய முடியாது. காரணம்… ஏற்கனவே இதே காரணத்துக்காக நாம இவனைத் தொட்டிருக்கோம். நாம ஜாக்கிரதையாய்ச் செய்தாலும் போலீஸ் விசாரணையில துப்புதுலங்கினா ஆபத்து. உதை, சிறை..!” பவித்ரன் முடித்து நிறுத்தினான்.
சோமு, பாலா, சுந்தருக்குள் திகிலடித்தது.
இருந்தாலும் சோமுவிற்கு ராமுவை இப்படியே விட்டுப் போக மனமில்லை.
“நாம விட்டுப் போனா செத்துடுவான்!” பீதியடித்தான்.
“விதி. அவன் சாகவேண்டியதுதான்!”
“இல்லே பவி. நாம் இவனைத் தொட்டதுக்காகவாவது காப்பாத்தனும்.” சொன்னான்.
“இன்னொரு வழி இருக்கு 108, உதவும் கரங்கள் அமைப்புக்குச் சேதி சொன்னோம்ன்னா அவுங்க வந்து ராமுவை எடுத்துப் போய் உயிர் பிழைக்க வைப்பாங்க.”
இது எல்லாருக்குமே பிடித்திருந்தது. திருப்தியாய் இருந்தது,
“ஓ.கே. உதவுங்கரங்களுக்குப் போன் செய்.” சோமு பாலாவிற்கு உத்தரவிட்டான்.
பாலா செல் எடுத்து “நம்பர் சொல்லு?” பார்த்தான்.
சோமு மட்டுமில்லாமல் மற்றவர்களும் விழித்தார்கள்.
“இரு வர்றேன்.”
சுந்தர் துாரத்திலிருக்கும் பெட்டிக் கடையை நோக்கி ஓடினான். அவசர அவசரமாக ஒரு வார இதழை வாங்கி புரட்டினான்.
நல்ல வேளையாய் அதில் உதவும் கரங்கள் விளம்பரம் இருந்தது. போன் நம்பரைக் குறித்துக் கொண்டு திரும்ப வந்தான்.
“இந்தா…” அந்த துண்டு சீட்டை பாலாவிடம் கொடுத்தான்.
அவன் எண்களை அழுத்தி…. சேதி சொல்லி அணைத்தான்.
“வாங்க துாரத்துல இருந்து உதவும் கரங்கள் எடுத்துப் போறாங்களான்னு பார்த்துப் போவோம்”. சோமு சொல்லி பெட்டிக்கடையை நோக்கிச் சென்றான். மற்ற நண்பர்களும் அவனைத் தொடர்ந்தார்கள்.
கடையில் ஆளுக்கொரு சிகரெட் வாங்கி பற்ற வைத்து புகைத்துக் கொண்டு பூங்கா வாசலை நோட்டமிட்டார்கள்.
கால் மணி நேரத்தில் உதவும் கரங்கள் ஆம்பூலன்ஸ் வந்து ராமுவைச் சுறுசுறுப்பாக அள்ளிப் போனது.
திருப்தியாய் …இவர்கள் இருந்த இடத்தை விட்டு வந்தார்கள்.
“இப்போ யோசிங்க இது யார் வேலை…?” என்றான் சுந்தர்.
“டாக்டர் தனுஷ்தான். சந்தேகமே இல்லை.” பவித்ரன் அடித்துச் சொன்னான்.
“ஆமா.! நாம் பைத்தியங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறதோட சரி. உள்ளே நுழைஞ்ச ஆட்களை நாம திரும்பி பார்க்கலை. பரிசோதனைக்குப் பிறகு ஆள் மருத்துவமனையில இருக்கானா, செத்தானா, துரத்தி விட்டாங்களான்னும் நாம கவனிக்கலை. இப்போ உள்ள நிலைமையைப் பார்க்கும்போது டாக்டர் நம்மகிட்ட கிட்னி பொருந்தலைன்னு பொய் சொல்லி இவனுங்ககிட்ட கிட்னி திருடி இருக்கார். நீ என்ன சொல்றே ?” சொல்லி… பாலா சோமுவைப் பார்த்தான்.
“இவ்வளவு பெரிய டாக்டர் இப்படியெல்லாம் செய்வாரான்னு எனக்கு யோசனை”. சோமு தன் மனதில் பட்டதைச் சொன்னான்.
“அப்போ இந்த பைத்தியம் ராமுகிட்டேயிருந்து கிட்னி திருடினது யாரு?” பாலா அழுத்தம் திருத்தமாக கேட்டான்.
பாலா கேள்விக்கு… பவித்ரன், சுந்தர் விழித்தார்கள்.
“கண்டுபிடிக்கனும்.” – சோமு
“இல்லே டாக்டரை விசாரிக்கனும்..” பாலா
“அவரை விசாரிக்கிறது எப்படி?” சுந்தர் கேட்டான்.
“நாங்க கொண்டு வந்த பைத்தியத்துக்கிட்டே இருந்து கிட்னி எடுத்திருக்கு. போய் ஏன்டா எடுத்தேன்னு அவர் சட்டையைப் புடிச்சி உலுக்கனும்!”
“அவ்வளவு பெரிய டாக்டரை இப்படி சட்டையைப் பிடிச்சு உலுக்குறது சாத்தியமா? சரியா?”
“சரியோ தப்போ… நாம கொண்டு வந்த விட்ட ஆள்கிட்டே தப்பு நடந்திருக்கு. அவர் செய்யலைன்னா தப்பு நம்ம மேல விழும். இந்த விசயம் எப்படியாவது போலீசக்குத் தெரிஞ்சு… அவுங்க துப்புத் துலக்கி, கடைசியா… ஏன்டா அவனைக் கடத்தி கிட்னியை எடுத்தீங்க. வித்தீங்கன்னு போலீஸ் நம்மைப் புடிக்கும். அதனால போலீஸ் நம்மைத் தொடுறதுக்கு முன் நாம குற்றவாளியைக் கண்டுபிடிக்கனும்!” பாலா சொன்னான்.
“அவர் எடுக்கலைன்னா?” பவித்ரன் கேட்டான்.
“குற்றவாளிகளைத் தேடுறது நம்ம பொறுப்பு. போலீஸ் நம்மைத் தொடுறதுக்கு முன் இவன்தான் அப்படி செய்ஞ்சான்னு நாம அவுங்களுக்கு முன்னாடி குற்றவாளியை நிறுத்தனும். அப்போதான் நம்ம தலை தப்பிக்கும். இல்லேன்னா…போலீஸ், குற்றத்தை நம்ம மேல சுமத்தி நம்மைப் புடிச்சு உள்ளே போட்டு உண்மையான குற்றவாளியைத் தப்பிக்கவிட்டு கேசை முடிச்சுடும்.”
“சோமு சொல்றது ரொம்ப சரி. நாம ஏதோ நெனைச்சு எதுவோ செய்யப் போக…. இக்கட்டுல மாட்டி இருக்கோம். நாம் நிஜ குற்றவாளியைக் கண்டுபிடிக்கலைன்னா நமக்கு ஆபத்து.! பவித்ரன் ரத்தினச் சுருக்கமாக தங்கள் நிலையைச் சொன்னான்.
சோமு இந்த யோசனையிலிருந்து வேறு யோசனைக்கு மாறினான்.
“என்ன சிந்தனை?” சுந்தர் அவனைப் பார்த்தான்.
“ராமுக்கு மட்டும் இந்த கதியா? இல்லே நாம கொண்டு போன அத்தனைப் பைத்தியங்களுக்கும் இந்த கதியான்னு யோசிச்சேன். பயமாய் இருக்கு.” தன் யோசனையைச் சொன்னான்.
கேட்ட மற்றவர்கள் ஆடிப் போனார்கள்.
“அப்படி ஆகி இருந்தால்…. சத்தியமா நம்ம தலைக்கு மேல கத்தி!” பாலா நடுங்கினான்.
“இதுக்கு வழி… நாம டாக்டரைப் புடிச்சு உலுக்கிறதைத் தவிர வேற வழி இல்லே. ” பவித்ரன் திட்டவட்டமாக சொன்னான்.
“இந்த விசயத்துல நமக்கு பொறுமை, நிதானம் வேணும்!” சோமு அமைதியாக சொன்னான்.
“ஏன்…?”
“நாம சட்டையைப் புடிச்சு உலுக்கிற அளவுக்கு டாக்டர் சாதாரண ஆளில்லே. கிட்னி அறுவை சிகிச்சையில பேர், புகழ், பணம் சம்பாதிச்ச பெரிய மனுசன், புத்திசாலி. அவர் அயோக்கியத்தனம் செய்திருந்தாலும்…தப்பிச்சிருவான். தப்பிக்க வழி இருக்கு. அந்த ஆள் சட்டையைப் பிடிக்க வேணாம். அவன்…நிழலைத் தொட்டாலே போதும். ‘என்ன தம்பி! நீங்களே இந்த காரியத்தைச் செய்துட்டு என் மேல திருப்புறீங்க..’ன்னு நம்மையே திருப்பி, போலீஸ்ல புகார் கொடுத்து நம்மை சிறைக்கு அனுப்பிடுவார். நமக்கு… பைத்தியங்களைத் தொடலை என்கிறதுக்கு ஆதாரமில்லே. அவர்கிட்ட நாம பைத்தியங்களைக் கொண்டு போனதுக்கு ஆதாரம் இருக்கு. நாமளே எழுதி தயாரிச்ச சம்மதக் கடிதம். அந்த கடிதமும் சரியானதில்லே. நமக்கு சுருக்குக் கயிறு. நாம வசதியாய் மாட்டி இருக்கோம்.!” விளக்கினான்.
ஆடிப்போனார்கள்.
“அப்போ டாக்டரைத் தொடவேணாமா சோமு…?” பவித்ரன் கேட்டான்.
“வேணாம். மொதல்ல ராமுவைத் தவிர மத்தவங்க கதி என்னன்னு பார்க்கனும். அதுக்கப்புறம் டாக்டரைத் தொடனும். அதுவும் கோபமா இல்லே. நட்பாய்!”
“போய் நண்பனைப் பார்த்தோமா… நம்மாள முடிஞ்ச அளவுக்குக் கிட்னியைத் தானம் கொடுத்தோமான்னு இல்லாம இப்படி விளையாட்டுத்தனமாய் யோசிச்சு நாமளே வம்புல மாட்டிக்கிட்டோம். தேவையா இது?!” முணகிய சுந்தர் “அட வாங்கப்பா போவோம்”. நொந்துகொண்டு எழுந்தான்.
மறு நாள் காலை பத்திரிக்கை அவர்களை மிரட்டியது.
அத்தியாயம் – 4
சோமு, சுந்தர், பாலா, பவித்ரன் வரிசையாக அமர்ந்து ஆளுக்கொரு தாளை விரித்து வைத்து படித்துக் கொண்டிருந்தாலும் பாலாதான், “ஏய்! இங்கே பாருங்க” தன் கையில் வைத்திருந்த தாளைக் காட்டி அலறினான். மற்ற மூவரும் அவன் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தார்கள்.
‘உதவும் கரங்களால் மீட்கப்பட்ட நபர் அரசு பொது மருத்துவமனையில் சாவு’. கொட்டை எழுத்தில் ராமு புகைப்படத்துடன் செய்தி.
‘நேற்று காலை யாரோ கொடுத்த தகவலின் பேரில் நேரு பூங்கா வாசலில் கிட்னி எடுக்கப்பட்டு குளிர் சுரத்துடன் பரிதாபமாக கிடந்த ஒரு பைத்தியத்தை உதவும் கரங்கள் மீட்டு அரசு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தது. டாக்டர்கள் உடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போக நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பைத்தியத்திற்கு இந்த கொடுமையைச் செய்த குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் இறங்கியுள்ளார்.’
படித்து முடித்தவர்கள் முகங்கள் வெளிறியது,
“இந்த பேப்பரைத் துாக்கிப் போய் டாக்டர் முகத்துல வீசி எப்படி இது, ஏன் எடுத்தேன்னு உலுக்கிறதைத் தவிர வேற வழி இல்லே.” சுந்தர் ஆவேசப்பட்டான்.
“சோமு சொன்னாப் போல டாக்டர் நிரபராதின்னு நடிச்சு போலீஸ்ல நம்மை மாட்ட வைச்சுட்டார்ன்னா?” சுந்தர் அவர்களுக்குள் பயப்பிராந்தியை ஏற்படுத்தினான்.
“இப்படி பயந்துகிட்டிருந்தால் நம்மைத்தான் போலீஸ் புடிக்கும்!” -பவித்ரன்
“தப்பிக்க வழி?”
“இந்த கொடுமை இந்த மருத்துவமனையில் நடந்திருக்குன்னு நாமே ஒரு மொட்டைக் கடுதாசி எழுதி போலீசுக்கு அனுப்பலாம்..”
“போலீஸ் அதை ஆதாரமா வைச்சு நடவடிக்கை எடுக்கலாம். மொட்டைக் கடுதாசின்னு தூக்கிப் போட்டு போட்டு எடுக்காமலும் போகலாம். அப்படியே எடுத்தாலும் குணாளன் இன்னும் உள் நோயாளியாய் டாக்டர் தனுஷ் மருத்துவமனையில் இருக்கான். இந்த நோயாளிக்காக இன்னின்னார்தான் இந்த மருத்துவமனைக்கு அவனைக் கொண்டு வந்தாங்க. இதோ பாருங்க சம்பந்தப் பட்டவங்களோடு சம்மதக் கடிதம்ன்னு நீட்டினார்ன்னா… போலீஸ் குணாளன்கிட்ட போய் யார் யார்ன்னு விசாரிச்சு நாம கூண்டோட கைலாசம்!” பாலா விளக்கினான்.
“எப்படி போனாலும் போனாலும் ஆபத்தா இருக்கே?!” சுந்தர் திகைத்தான்.
எல்லார்க்குள்ளும் அதே திகைப்பு, பயம் வந்தது.
”யாரும் பயப்பட வேணாம். போய் டாக்டர் சட்டையைப் புடிச்சு உலுக்க வேணாம். நாலு பேரும் அமைதியாப் போய் ‘டாக்டர் இப்படி நடந்திருக்கு இதுக்கு யார் காரணம்’ன்னு சாதாரணமாய் விசாரிப்போம். அவர் கேசை நம்ம மேல திருப்பினார்ன்னா… ‘ஒரு நல்ல டாக்டர் தப்பான யோசனை சொன்னா கேட்க மாட்டார். நீங்க கேட்டிருக்கீங்க. தப்பு உங்க மேலேயும் இருக்கு. அதனால நாங்க மட்டும் குற்றவாளி இல்லே. நீங்களும் குற்றவாளி. போலீஸ்ல புகார் கொடுத்த நாம எல்லாரும் மாட்டுவோம்.’ திருப்பி பிடிச்சா வழிக்கு வருவார்.” என்றான் சோமு.
“ஆமாம். இப்படித்தான் செய்யனும். வாங்க கிளம்பலாம்”. சுந்தர் எழுந்தான்.
“பொறு. அவசரப்படாதே. நாம போய் ஆள் இல்லேன்னு சும்மா திரும்பக்கூடாது. அதே சமயம் அவர் தவறாவனராய் இருந்தா இப்போ நம்ம தலையைக் கண்டால் பதுங்குவார். தொலைபேசி செய்து ஆள் இருக்காரான்னு பக்குவமாய் விசாரிச்சுப் போகலாம்”. என்ற சோமு கைபேசி எடுத்து மருத்துவமனை எண்களை அழுத்தினான்.
“ஹலோ! டாக்டர் தனுஷ் மருத்துவமனை.” வரவேற்பாளினி எடுத்தான்.
“நான் ராஜகோபால் பேசறேன்.”
“அமைச்சரா?”
“இல்லே. நான் கிட்னி நோயாளி. டாக்டரைப் பார்க்கனும்.”
“அவர் இல்லே.”
“எங்கே?”
“ஒரு கான்பரன்ஸ் சம்பந்தமா அமெரிக்கா போயிருக்கார். திரும்ப பத்து நாளாகும்.”
“என்னைக்குப் பார்க்கலாம்ன்னு சரியாச் சொல்லுங்க.”
“பதினெட்டாம் தேதிக்கு மேல பாருங்க வைத்தாள்.” சோமு கைபேசியை அணைத்து மற்றவர்களுக்குச் சேதி சொன்னான்.
“அப்போ நமக்கு நிச்சயம் சிறையா?”
“அந்த ஆள் வர்றவரை நாம் எங்காவது தலைமறைவாகிடலாம்.” பாலாவும் பவித்ரனும் மாறி மாறி ஒப்பாரி வைத்தார்கள்.
“நிறுத்துங்கடா!” என்று அதட்டிய சுந்தர், “சோமு… இப்போ அடுத்து என்ன செய்யலாம்? யோசிங்க..” என்றான்.
“அந்த ஆள் வர்றதுக்குள்ள மத்த பைத்தியங்கள் கதி என்னன்னு பார்க்கலாம்.”
“அதுக்குள்ளே போலீஸ் நம்மை புடிச்சுட்டா?”
“புடிக்க வாய்ப்பில்லே. அப்படியே புடிச்சாலும் தோண்டி துருவி நம்மைத் தொட ஒரு மாசத்துக்கு மேல ஆகும்.”
“சரி. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டு நம்ம வேலையைப் பார்ப்போம்” என்ற பவித்ரன், “இப்போ மத்த பைத்தியங்கள் எங்கே இருக்காங்க?” கேட்டான்.
“ம்ம்…நம்ம வீட்டு அடுப்பங்கரையில இருக்காங்க. போடா முண்டம்! தேடிப் பார்க்கனும்.” என்று எழுந்த பாலா “வண்டிகளை இப்படியே விட்டுட்டு மொதல்ல இங்கே இருந்து ஆரம்பிக்கலாம்.” சொல்லி நடந்தான்.
சோமு, சுந்தர், பவித்ரன் அவனைத் தொடர்ந்தார்கள். பொறுமையாய் நடந்து சந்து பொந்தெல்லாம் துழாவினார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் அலசியும் எந்த இடத்திலும் யாரையும் காணவில்லை. சோர்ந்து போய் ஒரு சாலையோர மரத்தடியில் அமர்ந்தார்கள். “பைத்தியங்களைத் தேடுற நாம ஒரு பைத்தியம். ஏன் பைத்தியங்களைத் தொட்டதிலிருந்தே நாம பைத்தியம்தான். விட்டது போதுமின்னு அவனுங்க எங்கே போய் தொலைந்தார்களோ!?” பவித்ரன் சலித்தான்.
“இல்லே. எங்கேயாவது போய் செத்துத் தொலைஞ்சுட்டானுங்களா?” சுந்தர் ஆயாசப்பட்டான்.
அப்போது… “அண்ணே! அண்ணே!” குரல் கேட்டது..
திரும்பினார்கள். இவர்கள் மூன்றாவதாக பிடித்த பைத்தியம் முருகேசன்.
சோமுவை நோக்கி வந்த அவன் இவர்கள் அருகில் வராமல் சடக்கென்று பத்தடி துாரத்திலேயே நின்றான்.
“முருகேசு! இங்கே வா…” சோமு அவனை அழைத்தான்.
“வரமாட்டேன் போடா.”
“ஏன்?”
“நான் கிட்ட வந்தா நீ ஊசி போடுவே.”
“போட மாட்டேன்.”
“பொய் சொல்றே. அன்னைக்கு இப்படி அழைச்சிதானே எனக்கு ஊசி போட்டு ஆஸ்பத்திரியில படுக்க வைச்சே. இங்கே பார்த்தியா என் விலாவுல நீட்டா அறுத்து பிளாஸ்திரி ஒட்டி இருக்காங்க. குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனா?” சட்டையைத் துாக்கிக் காட்டினான். கிட்னி எடுத்த அடையாளம்.! அதிர்ந்தார்கள்.
“திருட்டுப் பையா. வா என் பொண்டாட்டிகிட்டு சொல்றேன்!” முருகேசன் அடுத்த நிமிசம் நிற்கவில்லை. ஓடினான்.
இவர்களுக்கு மயக்கம் வரும்போலிருந்தது.
சுந்தர் வெகு நேரம் சுயநினைவிற்கு வரவில்லை. உறைந்திருந்தான்.
“என்னடா?” பவித்ரன் அவனை உலுக்கினான்.
“இவன் பைத்தியம் இல்லே. பைத்தியம் போல நடிச்சு ஊரை ஏமாத்துற ஆள். ஊசிப் போட்டது, ஆஸ்பத்திரியில இருந்ததையெல்லாம் சோமுவைப் பார்த்து சரியாச் சொல்றான். இவன் இப்படியே உளறி கொட்டினான்னா போலீஸ் காதுல விழுந்து நமக்கு ஜெயில்!” என்றான் திகிலாய்.
முருகேசன் சொன்னதைக் கேட்டு வந்த ஒருவர் இவர்களிடம் நின்று, “என்ன சார்! அரண்டு போய் இருக்கீங்க. அந்த பைத்தியம் உங்ககிட்டேயும் வந்து நீதான் எனக்கு ஊசிப் போட்டு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணினேன்னு குழப்பி விட்டுட்டுப் போறானா? நாலு நாளா பார்க்கிற ஆள்கிட்டேயெல்லாம் இப்படித்தான் சொல்லி பயமுறுத்திட்டுப் போறான். இவனுக்கெல்லாம் குடும்பக்கட்டுப்பாடு செய்ஞ்சு காசு சம்பாதிச்சிருக்கானுங்க பாருங்க. அவனுங்களைச் செருப்பால அடிக்கனும்!” திட்டிக் கொண்டே சென்றார்.
“அப்பாடா தப்பிச்சோம்! பைத்தியம்தான்!” சுந்தர் நிம்மதி முச்ச விட்டான்.
மற்றவர்களுக்கும் முகத்தில் சுமை நீங்கிய தெளிவு வந்தது.
“இப்போ இவன் ரெண்டாவது ஆள். இவனுக்கும் கிட்னி எடுத்திருக்கு. மத்த பைத்தியங்களுக்கும் கண்டிப்பாய் எடுத்திருக்கனும்.. டாக்டர் வேலைதான். நல்ல புள்ளையாய் நடிச்சு நம்ம கண்ணுல மண்ணைத் துாவிட்டு இப்போ அமெரிக்கா போய் பதுங்கி இருக்கான். சும்மா விடக்கூடாது.” பாலா பொரிந்தான்.
எல்லாருக்கும் முகம் மாறியது.
“வாங்க. டாக்டர் அமெரிக்காவுல இருக்காரா உள்ளூர்ல பதுங்கி இருக்காரா பார்க்கலாம்.” சோமு எழுந்தான்.
நால்வரும் வண்டி விட்ட இடத்திற்கு வந்தார்கள். காணோம்! சொரக்கென்றது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.
பாலா கையே உடைந்தது போல பதறி ‘எங்கே விட்டோம்?’ என்று அங்கே இங்கே அலைந்தான்.
“‘என்ன சார் தேடுறீங்க?” பெட்டிக்கடைக்காரன் கேட்டான்.
“வண்டி…”
“அதை போலீஸ் எடுத்துக்கிட்டுப் போச்சு”
“ஏன்?!“
“நான்-பார்க்கிங் இடத்துல நிறுத்தி இருந்தீங்க. போலீஸ் வந்து சுத்தும் முத்தும் பார்த்து ஆள் இல்லேன்னதும் லாரி வைச்சு தூக்கிப் போயிடுச்சு.”
‘இது என்ன வம்பு?’ எல்லோருக்குமே மூடு அவுட்டானது.
“பயப்படாதீங்க. சப்-இன்ஸ்பெக்டர் நல்லவர். தெரியாம வைச்சுட்டோம்ன்னு மன்னிப்புக் கேட்டா கொடுத்துடுவார். போங்க.” சொல்லி கடைக்காரன் வியாபாரத்தைப் பார்த்தான்.
இப்போதுதான் கவனித்தார்கள். அங்கு ‘வண்டிகளை நிறுத்தாதே!’ போர்டு இருந்தது. மனக்குழப்பம் வேறு சிந்தனையில் இதைக் கவனிக்காதது புரிந்தது.
“ச்சே!” பாலா தலையில் தட்டிக் கொண்டான்.
“அடுத்து நாம போலீஸ் போறதுக்கு இது அச்சாரம்!” அலுத்தான்.
“போலீசெல்லாம் வெளியில பார்த்தா நல்ல மாதிரியாத்தான் தெரிவாங்க. ஸ்டேசனுக்குப் போய் கோட்டைக்குள்ளே நுழைஞ்சாதான் ஆட்டமெல்லாம் தெரியும்!” சுந்தர் முணுமுணுத்தான்.
– தொடரும்…
– கிட்னி காவுகள்! (நாவல்), முதற் பதிப்பு: 20-12-2019, காரை ஆடலரசன் வெளியீடு, காரைக்கால்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |