காலம் மாறவில்லை! – ஒரு பக்க கதை





சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இருபதை நெருங்கிக் கொண்டிருக்கும் பேத்தி தீபிகா தன்னோடு மியூசிக் கிளாஸ் படிக்கும் பரத்தைக் காதலிக்கிறாள்.அது சதாசிவத்தின் மகள் காயத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் மியூசிக் கிளாஸீக்கும் தீபிகாவை தற்போது அனுப்புவதில்லை. அதனால்தான் தாத்தாவிடம் சொல்லி தங்கள் காதலை அம்மாவிற்கு புரிய வைக்க தூது விடுகிறாள் தீபிகா!
காயத்ரி ஆபிஸிலிருந்து வந்தவுடன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் சதாசிவம்
“காயத்ரி! தீபிகா ஒரு பையனை விரும்புகிறாள் .அந்த பையனையே கல்யாணம் பண்ணணும்னு சொல்கிறாள்.என்னம்மா செய்யறது?”
“அப்பா இந்த வயசுல அவளுக்கு நல்லது கெட்டது எப்படிப்பா தெரியும்?. சொன்னா கேட்கமாட்டேங்கிறா! அதுவும் அந்த பையனைப் பற்றி விசாரிச்சுட்டேன். நல்ல பையன் கிடையாது. நீங்களாவது சொல்லுங்கப்பா”
“எப்படிம்மா சொல்றது?! இதையேதான் இருபது வருஷத்துக்கு முன்னாடி நீ காதலிக்கும் போது நான் சொன்னேன்.அப்ப நீ கேட்கல. ஒரே வருஷத்துல நீ அவனை டைவர்ஸ் பண்ணிட்டே ! அதே மாதிரி தாம்மா அவ பிடிவாதம் பிடிக்கிறாள்”
சதாசிவம் பேச பேச, கண்கலங்கி தலைகுனிந்தாள் காயத்ரி