காரணமின்றி துன்புறுத்தினால் காரணமின்றியே அழிவு வரும்





பிராணிகளின் பராமரிப்பு பற்றியும் அவற்றின் உரிமைகள் பற்றியும் இன்றைய தினம் நிறையவே பேசப்படுகிறது. ஆனால் உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் நாய்களைப் பற்றிய உயர்வான குறிப்புகள் காணப்படுகின்றன. தெய்வீகப் பசுக்களை போலவே தெய்வீக நாய்களும் தேவதைகளுக்கு சேவை செய்த்துள்ளன. அவற்றை உயர்வாக நடத்தியள்ளனர் இந்திரன் முதலான தேவர்கள்.
ரிக் வேதத்தில் “சரமா” என்ற பெண் நாய் இந்திரனின் நாயாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பசுக்களை திரும்பப் பெற தூது சென்றது.
மேலும் மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் கூட நாய்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
ரிக் வேதத்தில் சரமா என்ற பெண் நாய் எவ்வாறு தன் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி மனித இனத்திற்கே பசுவின் பால் கிடைக்கும்படி செய்தாள் என்ற நிகழ்ச்சி பற்றிய குறிப்பு உள்ளது.
பிருகஸ்பதியின் பசுக்களை ‘பணிகள்’ என்ற திருடர்கள் திருடிச் சென்று விட்டனர். அவர்கள் மகா பலசாலிகள். கொலையாளிகள். கொடூரமானவர்கள். அசுரர்களின் தோழர்கள். மகா நீசர்கள். இவர்கள் இவ்வாறு பலமுறை தேவர்களின் பசுக்களைக் களவாடி உள்ளனர். அவற்றை மீட்டு வர தேவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. எரியும் நெருப்புக் கோளங்களை ஆகாயத்திலிருந்து பணிகளின் மேல் பொழிந்து அவர்கள் ஒளித்து வைத்திருந்த பசுக்களை மீட்டு வர வேண்டி வந்தது. பசுக்களைத் தான் மீட்க முடிந்ததே தவிர ‘பணிகள்’ தப்பி ஓடி விட்டனர்.
இப்போது மீண்டும் தம் கைவரிசையைக் காட்டி விட்டனர். தேவ கணங்கள் அனைத்தும் தலை குனிந்து யோசனையில் ஆழ்ந்தன. யாருக்கும் வார்த்தை வெளிவரவில்லை. நம்பிக்கையிழந்து காணப்பட்டனர். நிராசையில் மூழ்கினர். செய்வதறியாது திகைத்தனர்.
அந்த துஷ்டர்களுடன் யுத்தம் செய்யும் உற்சாகமோ சாகசமோ தேவதைகளிடம் குறைந்து விட்டது. அவர்களோடு ஏதாவது சமரசம் செய்து கொண்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் யாரைத் தூதாக அனுப்புவது? தூது சென்றவரை பணிகள் உயிரோடு விடுவார்களா?
தேவேந்திரன் அந்த பாரத்தை சரமாவின் மேல் போட நினைத்தான்.
“சரமா! தூதராக நீ அந்த அசுரர்களிடம் செல்ல வேண்டும்” என்றான்.
“அப்படியே ஸ்வாமி!” என்று வணங்கினாள் சரமா. “நீங்கள் என்னைத் தேர்ந்தேடுத்தது என் பாக்கியம்” என்றாள்.
“தூதன் என்றால் பணிவு, அடக்கம், கீழ் படிந்து நடத்தல். தைரியம், பேச்சில் தெளிவு இருக்க வேண்டும். ஆவேசப்படாமல் நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளின் மன ஓட்டத்த்தைப் புரிந்து கொள்ளும் சக்தி, பொறுமை கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களிடம் பிரியமாகப் பேசி ஒப்புக் கொள்ள வைக்கும் விதத்தில் அழகாகப் பேசத் தெரிய வேண்டும், நம் உத்தேசத்தை தைரியமாக, தெளிவாக, பக்குவமாக எடுத்துக் கூற வேண்டும். நாம் பலவீனமானவர்கள் என்றோ, வெற்றுப் பேச்சாளர்கள் என்றோ எதிரிகள் எண்ணும்படி நடந்து கொண்டால் அவர்கள் நம்மை ஒரு ஆட்டம் ஆட்டி விடுவார்கள். தூதன் மிகவும் ரகசியமாக நடந்து கொள்ள வேண்டும். பிடி கொடுத்தும், கொடுக்காமலும் சாமர்த்தியமாக பேச வேண்டும். புரிந்ததா?” என்று இந்திரன் சரமாவுக்கு அறிவுறுத்தினான்.
“புரந்தரரே! தங்கள் அருளாசி ஒன்றே போதும். என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்றாள் சரமா.
“சரமா! அவர்கள் நம் பசுக்களை ‘ரஸா’ நதிக்கு அப்பாலிருக்கும் மலைக் குகையில் சிறை வைத்துள்ளார்கள். போகும் மார்க்கம் மிகவும் கடினமானது. ஆனால் நீ நிச்சயம் வெற்றியோடு திரும்புவாய். என் ஆசிகள் எப்போதும் உன்னுடனிருக்கும்” என்றான் இந்திரன்.
சரமா உண்மையைத் துணையாகக் கொண்டு கடினமான அந்த மார்கத்தில் பயணித்து, பசுக்களைக் கவர்ந்து சென்ற வழியை தன் நுண்ணுணர்வால் அறிந்து ‘பணிகள்’ வசிக்கும் பிரதேசத்தை அடைந்தாள்.
அவளைப் பார்த்த பணிகள் வியப்பிற்குள்ளாயினர்.
“சரமா! இங்கு எவ்வாறு வந்தாய்? ரஸா நதியைத் தாண்டுவதென்பது மிருத்யுவின் முகத்தைப் பார்த்துத் திரும்புவது போன்றதாயிற்றே! எத்தனை பகல், எத்தனை இரவு பிரயாணம் செய்தாய்?” என்று கேட்டனர்.
“இதனைத்தும் தேவதைகளின் கருணை” என்றாள் சரமா புன்னகையுடன்.
“அவர்கள் எதற்காக உன்னை அனுப்பினார்?’
“தேவ தூதராக உங்களிடம் வந்துள்ளேன். என்னை மத்தியஸ்தராக அனுப்பி உள்ளார்கள். நீங்கள் பிருகஸ்பதியின் பசுக்களைக் கவர்ந்துள்ளீர்கள். தயவு செய்து அவற்றை என்னுடன் அனுப்பி வையுங்கள்” என்றாள் சரமா நயமாக.
“ஒரு முறை கவர்ந்து வந்த பொருளைத் திருப்பிக் கொடுப்பதென்பது நடவாத செயல்” துடுக்கோடு பேசினார் பணிகள்.
“திருடுவது பாவமல்லவா?” திடமாக ஆனால் பணிவாகக் கேட்டாள் சரமா.
“பாவம், சாபம் இதெல்லாம் தேவதைகளுக்குத் தான். எங்களுக்கு கிடையாது” என்றனர் விடாப்பிடியாக பணிகள்.
“நீங்கள் பசுக்களைத் திரும்பத் தராவிட்டால் தேவேந்திரன் உம் மேல் கோபம் கொள்வான். அது உமக்குத் தீங்காக முடியும்” சரமாவின் சொற்களில் எச்சரிக்கை ஒலித்தது.
“முடிந்தால் வந்து எடுத்துச் செல்லச் சொல்”
சரமா தேவதைகளின் பலத்தையும் இந்திரனின் வஜ்ராயுதத்தின் சக்தியையும் எடுத்துக் கூறியும் பணிகள் மசியவில்லை.
“உன் தேவதைகள் பயங்கொள்ளிகள். அதனால் தான் உன்னை தூதாக அனுப்பி உள்ளார்கள். நீ எங்களுக்குச் சகோதரி போன்றவள். எங்களோடு சேர்ந்துவிடு. உனக்கு வேண்டிய செல்வம் அனைத்தும் அளிக்கிறோம்” என்று ஆசை காட்ட ஆரம்பித்தனர்.
சரமா அதனைச் சட்டை செய்ய வில்லை.
“பணிகளே! இந்திரனும், அங்கீரசரும் என்னை எந்நேரமும் பாதுகாத்து வருகின்றனர். அவர்களை விட்டு திருட்டுக் கூட்டமாக பதுங்கி வாழும் உங்களோடு சேருவேன் என்று கனவு காணாதீர்கள்” என்று நிராகரித்து விட்டு தேவதைகளின் பெருமையை விளக்கிக் கூறினாள்.
பணிகள் கொஞ்சம் ஆட்டம் கண்டனர். அவர்கள் மனதில் பயம் தோன்றியது. ஆனாலும் பசுக்களைத் திரும்பக் கொடுக்க அவர்களின் ஆணவம் இடம் கொடுக்க வில்லை.
சரமா திரும்பத் தன் இருப்ப்பிடம் வந்து சேர்ந்தாள். இந்திராதி தேவர்களிடம் நடந்ததை விவரித்தாள்.
தேவர்கள் பணிகளோடு தீவிர யுத்தம் செய்து அவர்களைக் கொன்று பசுக்களை மீட்டனர்.
தான் செய்த மத்யஸ்த வேலைக்குப் பரிசாக தன் பிள்ளைகளுக்கு உணவாக பசுவின் பால் கிடைக்க ஏற்பாடு செய்தாள் சரமா என்று கூறுகிறது ரிக் வேதம். அதன் மூலம் தன் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி அனைத்து மனித இனத்திற்கும் பசுவின் பால் கிடைக்கக் காரணமாயிருந்தாள் என்று போற்றப்படுகிறாள் சரமா.
‘சரமா’ என்றால் விரைவாக ஓடக் கூடிய பெண் நாய் என்று பொருள்.
பிற்காலத்தில் மாக்ஸ் முல்லர், அரவிந்தர் போன்றோர் சரமாவை ‘அழகிய பாதங்கள் கொண்ட பெண்’ என்று வர்ணிக்கின்றனர்.
நம் பாரதிய சம்பிரதாயம் வாயில்லாப் பிராணிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது. நாம் எதற்காக ஊமைப் பிராணிகளுக்கு சேவை செய்ய வேண்டும்? அவற்றுக்குப் பேச முடியாவிட்டாலும் அவற்றுக்கும் உயிர் உள்ளது. சுக துக்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விஷயத்தை பெரும்பாலும் நாம் நினைவில் கொள்வதில்லை.
வளர்ப்புப் பிராணிகளானாலும் வீதியில் திரியும் பிராணிகளானாலும் பெரும்பாலும் அன்போடு நடத்துவதில்லை என்பதை கண் கூடாகப் பார்க்கிறோம். ரோடில் ஒரு ஓரமாக ஒரு நாய் படுத்திருந்தாலும் அதனை ஒரு கல்லை எடுத்து சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள் கூட அடிப்பதை காண்கிறோம். அவ்வாறு செய்வது தவறு என்று யாரும் கண்டிப்பதில்லை. அது ஒரு வினோதமாக, விளையாட்டாக இருக்கிறது.
ஆனால் இது குறித்து மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் ஒரு கதை உள்ளது.
ஜனமேஜெயன் ஒரு யாகம் செய்கிறான். பலர் கூடி பக்தி சிரத்தையுடன் கவனித்து வந்தனர். ஜனமேஜயனின் சகோதரர்கள் அந்த யாகத்தைப் பொறுப்பாகக் கண்காணித்து பாதுகாத்து வந்தனர். யக்ஞம் தடங்கலின்றி சிறப்பாக நடக்கிறது.
அப்போது ஒரு நாய் யாக சாலைக்கருகில் வந்தது. பவித்திரமான யக்ஞ சாலையில் ஒரு நாய் வருவதை அபவித்திரமாக நினைத்தனர் அனைவரும்.
அந்த நாயின் பெயர் ‘சாரமேயன்’. அதாவது ‘சரமா’ என்ற தேவ நாயின் புதல்வன்.
அந்த சாரமேயன் யாக சாலைக்குள் புகுந்து அங்குமிங்கும் திரிந்தது. யாக சாலைக்குள் ‘சுனகம்’ புகுவதை அசுபம் என்று நினைத்ததால் அது எதுவும் செய்யாவிட்டாலும் ஜனமேஜயனின் தம்பிகள் அதனை அடித்து விரட்டினர்.
நம்மை ஏதாவது துன்புறுத்தினால் தானே நாம் அதனை தண்டிக்க வேண்டும்? யாக வேள்வி நடக்கும் பகுதியில் சும்மா திரிந்ததற்கே அவர்கள் அதனை அடித்து விட்டனர்.
சாரமேயன் உடனே தன் தாய் சரமாவிடம் சென்று முறையிட்டான்.
தன் மகனின் உடலில் ஏற்பட்ட காயங்களைக் கண்ட சரமா “நீ என்ன செய்தாய்?” என்று கேட்டாள்.
“ஏதாவது பொருளை பாழ் செய்தாயா?”.
“இல்லை”.
“எதிலாவது வாய் வைத்தாயா”.
“இல்லை. எந்த யக்ஞ பதார்தத்தையும் பார்க்கவுமில்லை. நக்கவுமில்லை”
“யாரையாவது கடித்தாயா?”.
“இல்லை”.
“குலைத்து தொந்தரவு செய்தாயா?”.
“இல்லை”.
“இது எதுவும் செய்யாத போது அவர்கள் எதற்காக உன்னை அடித்தார்கள்?” என்று கேட்டு தன் மகனை அழைத்துக் கொண்டு ஜனமேஜயனின் யாக சாலைக்கு விரைந்தாள் சரமா. அங்கிருந்த அரசரும் புரோகிதர்களும் மற்றவர்களும் நாயுடன் வந்த தெய்வீக சுனகமான சரமாவை வியப்புடன் பார்த்தனர்.
ஜனமேஜயனை சமீபித்த சரமா,” மகாராஜா! சாரமேயன் என்னும் என் மகனை உங்கள் தம்பிமார் அடித்துள்ளார்கள். காரணம் அறிய வந்தேன்” என்றாள்.
அரசன் தன் தம்பிகளின் பக்கம் திரும்பினான்.
“நாய் யாக சாலைக்குள் வந்ததால் அடித்தோம்” என்று பதிலளித்தனர் தம்பிகள்.
“அது எந்த தவறும் செய்யாத போது காரணமின்றி ஏன் ஒரு பிராணியை தண்டித்தீர்கள்?” என்று கேட்டு அரசன் வருந்தினான். இத்தனை பெரிய வேள்வி நடக்கையில் இவ்வாறு தவறு நேர்ந்து விட்டதே என்று கவலை கொண்டான்.
தாய் நாயான சரமாவின் மனதில் துக்கம் தளும்பியது. அரசனைப் பார்த்து கூறினாள், “இது சரி, இது தவறு என்ற யோசனையற்று பிராணியைக் காரணமின்றி துன்புறுத்தியதால் காரணமின்றியே உனக்கு அழிவு நேரும்” என்று சபித்து விட்டு மகன் உடன் வர சரமா திரும்பிச் சென்று விட்டாள்.
ஜனமேஜயன் மிகவும் வருந்தினான். சரமாவின் சாபத்தைக் கேட்டு கவலை கொண்டான். தம்பிகளைக் கண்டித்தான். பிராணிகளைப் பாதுகாக்க வேண்டுமே தவிர துன்புறுத்தக் கூடாது அல்லவா? இப்போது என்ன செய்வது? என்று யோசனையில் ஆழ்ந்தான். அங்கிருந்த பண்டிதர்கள், ஜோதிடர்கள், புரோகிதர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தான்.
அவர்கள் கூறினர், “அரசே! வருந்த வேண்டாம். இதற்குப் பிராய்ச்சித்தமாக வேறொரு யாகம் செய்ய வேண்டும்’ என்று கூறி அரசனை சமாதானப்படுத்தினர்.
நமக்குத் துன்பம் தராத போதும் பிறரை அடித்துத் துன்புறுத்தும் வினோத மனப்பான்மை, அகம்பாவ குணம் எப்போதும் தீமையையே விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதைத்தான் நாம் இன்று கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். பிளாட்பாரத்தில் ரயிலுக்கு நிற்கும் பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொல்லும் வினோதம்.
ஜீவ ஹிம்சை என்றும் தவறானது. மகாபாரதத்தில் சரமா, சாரமேயன் என்று இரண்டு நாய்களின் கதாபாத்திரம் மூலம் இக்கருத்தை அழகாக விளக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மகாபாரதக் கதையில் பாண்டவர்களுக்கோ கௌரவர்களுக்கோ சம்பந்தமில்லாதது. ஆயினும் நீதியைப் போதிக்கும் விதமாக, தர்ம மார்கத்தை உணர்த்தும் விதமாக நடுநடுவில் இவ்வாறான உபாக்கியானங்களை மனித விழுமியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தேசத்தோடு நம் முன்னோர் அமைத்துள்ளனர்.
ஊமைப்பிரங்களை மட்டுமேயல்ல. வறியவர்களையும், நம்மைத் துன்புறுத்தாத குரூர பிராணிகளையும் கூட நாம் துன்புறுத்தலாகாது என்பதை எடுத்துரைக்கிறது மகாபாரதம்.
சிறுவர்கள், இளைஞர்கள் இது போன்ற கதைகளை படிக்கவோ கேட்கவோ செய்தால் இம்சை செய்யும் குணம் வளராமல் தடுத்து சமுதாயத்திற்கு மேன்மை செய்ய முடியும்.
–சினேகிதி, செப்டம்பர் 2016 ல் பிரசுரமானது.