காயிதக் கப்பல்





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அங்கு நிற்கவேணும் உத்தேசத்தில் அங்கு நிற்க வில்லை. வானமே ஒரு மாபெரும் பூவிதழ் போலும்,பொல பொல புலு புலு நலு நலு மலர்ந்துகொண்டிருக்கும் அத்தனை விடி நேரத்தில், மேலே பூச்சரங்கள் தொங்கிக் கொண்டு கலர் பல்புகள் மாறி மாறிச் சிமிட்ட அந்தப் போர்டு என்னவெனும் சிறு அவாவில் கண் இமைக்கும் நேரத்துக்கு நடை தடைப்பட்டு நின்றதெனச் சொல்லக் கூடியபடி நேரம்கூட இல்லை. ஏதோ ஒரு நொடித் தயக்கம். அதற்குள், உள்ளேயும் இருளைப் பகலாக்கும் பளிச்சு வெளிச்சம். புத்தம் புதிய நாற்காலிகள் மேசைகள் மாடிக்குப் படிக்கட்டு – யாவதும் மனத்தில் தாக்கலாகி விட்டது.
ஸ்ரீ கணேஷ் பவன்
நான் மேலே நகர்வதற்குள் உள்ளிருந்து, கூப்பிய கரங் களுடன் ஆசாமி படியிறங்கி வந்தார். கட்டை குட்டை யாகச் சற்று அகலவாட்டில், ஆனால், கட்டுமஸ்தான தேகம். சந்தன நிற மேனி.
“வரணும் வரணும் வாங்கோ உள்ளே வாங்கோ-“
காதில் கடுக்கண் சிமிட்டிற்று. கழுத்தில் மைனர் செயின், இரண்டு கைகளிலும் மோதிரங்கள் ஸில்க் சட்டை.
பைசா நஹி என்கிற ஜாடையில் கை விரித்தேன்.
“அது பற்றி யார் பேசினா? உள்ளே வாங்கோ சும்மா”
ஏதோ அச்சமோ, கூச்சமோ அவரைத் தடுத்தது. அல்லேல் என்னைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே உள்ளே போயிருப்பார். வரவேற்பில் அத்தனை ஆர்வம், அவசரம்.
நேரே மாடி. அங்கே தனி அறை (ஆபீஸ்?)யில், தம் நாற்காலியில் உட்கார வைத்தார்.
“இதோ ஒரு நிமிஷம். ஏலே நாராயணா!” உரக்கக் கூவிக்கொண்டே வெளியே போனார்.
என்னைச் சுற்றிலும் பார்க்க அவகாசம் கிடைத்தது. ந்த அறையிருக்கிற வளத்தைப் பார்த்தால், இவர் கல்லா வில் உட்காரமாட்டார் என்று தோன்றுகிறது. அதற்கு வேறே ஆள். எனக்குப் பின்னால் சுவரில் பெரிய வெங்கடாசலபதி படம் தொங்கிற்று. படத்துக்கடியில் ஷெல்பில் ஸ்டாண்டில் ஒரு டஜன் அத்தர் ஊதுவத்திகள் கமகமாய்த்தன.
இதோ முதலாளி வந்துவிட்டார். பின்னாலேயே நாராயணன், முதலாளி நிறத்துக்குத் தோற்காமல், அப் போதுதான், ஸ்நானம் பண்ணி நெற்றியில் குழைத்திட்ட விபூதி மூன்று பட்டைகளாகத் துலங்கிற்று நடுப்பட்டையில் சந்தனப்பொட்டு, நடுவே கண் திறந்தாற்போல் குங்குமம். ஒரு கையில் புது எவர்ஸில்வர் தட்டில் ட்ட வாழையிலைப் பாளத்தில், தும்பை போன்று மூன்று இட்டிலி, இரண்டு மெது வடையை ஒட்டி, கெட்டிச் சட்னி;மறுகையில் எவர் ஸில்வர் குவளையில் சாம்பார் மணமும் ஆவியும் பறந்தது. தட்டை மேசை மேல் வைத்த பின்னர்தான் தெரிந்தது, அதன்மேல் இன்னொரு இலைப் பாளத்தில் சர்க்கரைப் பொங்கல். முழிமுழியென முழு முந்திரிப்பருப்பும் நெய்யும் மினுமினுத்தன.
முதலாளி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
“அண்ணா, மன்னிக்கணும் ஸ்வாமிஜி – பிஷை நடக்கட்டும்”.
என் புருவங்கள் வினாவில் உயர்ந்தன.
“இன்னிக்கு ஹோட்டல் திறப்பு விழா. தை பிறந்துடுத் தில்லியா? நேத்து ராத்ரியே மனசில் என்னவோ தோணித்து. என் சொந்த வேண்டுதலையோ, ஆண்டவன் கட்டளையோ ஐயப்பன்தான் அறிவான். இன்னி காலையில், இந்த வழி யில் முதல் முதலா வரும் யாராயிருந்தாலும் சரி, அவர்தான் ஓட்டலின் முதல் அதிதி என் சங்கல்பத்தைச் சாஸ்தா உங்கள் தரிசனத்தில் நிறைவேற்றிக் கொடுத்ததுக்கு நான் தனி பாக்கியம் பண்ணியிருக்கணும். இனி இந்த ஹோட்டலின் அதிர்ஷ்டம் பற்றி எனக்குக் கிஞ்சித்கூடச் சந்தேகம் இல்லை”.
Courtier’s language. ராஜஸ்னேகனின் பாஷையென்று சொல்வார்கள். அதில் முகஸ்துதியையும் இன்பமயத்தையும் தவிர வேறு ஏதும் காணமுடியாது, காணக்கூடாது.
இந்த அளவு அபிமானத்துக்கு இவர் என்னிடம் என்ன கண்டார்? மார்பிலிருந்து கால்வரை என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். மேல் முண்டு, இடுப்பில் கட்டை வேட்டி, வேறு தெரியவில்லையே, ஓ.பூணூல்? ஓஹோ. நேற்று இரவே பனியனோடு கழன்று கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறதோ? அதனால்தான் சாமியார் ஆயிட்டேனோ? சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.
“தேவ முகூர்த்தத்தில் எங்களுக்காக ப்ரஸன்னமாகி யிருக்கிறீர்கள். தித்திப்பை ஒருகணம் வாயில் போட்டுக் கொள்ளும்படி பிரார்த்திக்கிறேன்”.
டிபன் என்னவோ அமர்க்களந்தான். அடுத்து நாராயணன் கொண்டுவந்த அந்தக் காபி இதுவரை நான் எங்கும் அருந்தியதில்லை. இனிமேலும் அருந்தப் போவது மில்லை. இது கணேஷ் பவனின் போணிக் காபி. இதுபோல் இங்கேயும் இனி கிடைக்கப் போவதில்லை. டிகாக்ஷனையும் பாலையும் ஒன்று சேர்க்கும் வேளை ஏதோ ராசியில் நேர்ந் திருக்கிறது. அந்த ராசி திரும்ப நேராது. எதுவுமே திரும்ப நேர்வதில்லை.
“நாராயணா!”
பேரைச் சொன்னதிலே அந்த அந்தச் சமயத்துக்கு என்ன என்ன கட்டளையென்று நாராயணனுக்கு வாசனை யிலேயே தெரியும் போலும். சட்டென வெள்ளி விபூதி மடலைக் கொண்டுவந்து கொடுத்தான்.நானும் இட்டுக் கொண்டு அவர்களுக்கும் ட்டேன். இருவரும் மீண்டும் சேவித்து எழுந்தனர்.
“நான் பரம சந்தோஷம் ஆனேன். இனிமேல் கீழே போய்க் கவனிக்கணும். உத்தரவு வாங்கிக்கறேன். சுவாமி கள் அவசரப்பட வேண்டாம். நன்னாயிருந்து சிரமப் பரிகாரம் பண்ணிண்டு-”
காஷாயம் கட்டவில்லை. தலையை மழித்துக் கொள்ள வில்லை. ஆனால் எனக்குப் பட்டம் சூட்டியாச்சு; அவரவர் மனசு அவரவரது இன்று விழித்த வேளை இப்படி. என் நடையைத் தொடர்கிறேன். இல்லை. என் நடை தொடர் கிறது. காரணம் தெரியாத உள் பூரிப்பில் நெஞ்சு வெளியே குதித்துவிடும்போல் தாவுகிறது. நான் ஏன் ஸ்வாமி? தேஜஸ்? இத்தனைக்கும் ஒருவேளைதான் ஸந்தியா வந்தனம்; அதுவும் ஸ்திரமில்லை. 108 காயத்ரிதான், அதுக்கே இத்தனை மவுசா? அப்போ தினம் 1008க்கு எப்படி இருக்கும்? அர்த்தமே இல்லாத குருட்டுக் கணக்கில் மனம் இறங்கிவிட்டது. ஆனால் மனசை யார் கேட்பது? மனசை மனசாலேயே அடக்க முடியல்லையே!
சூரியோதயம் கம்பீரமாய், அவகாசமாய் – சூரியோ தயமா உலகத்துக்கே ஜானவாசமா? அவனே வானத்தின் வாயிலாகக் காட்டுகிறான். அந்தத் திசையிலிருந்து வரும் மாந்தர், தூரப் பார்வையோடு சேர்ந்த மனோல்லாசத்துக்கு அவன் வாயிலிருந்தே புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் சூரிய புத்திரர்கள், புத்திரிகள். விழா உடை யில் விழாக் களியில், பேசிச் சிரித்துக்கொண்டு வரு கின்றனர், போகின்றனர். எல்லாரும் ஓர் குடும்பம். ஓ, இன்று மாட்டுப் பொங்கல் அல்லோ?
ஏனோ இன்று மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. இனித் தூக்கம் இல்லையெனத் தெளிந்துவிட்டது. தெரு விளக்கின் மெர்க்குரி வெளிச்சம், என் கிடக்கைக்கு எதிர்ச் சுவரில் பட்டு, ஏதேதோ பிம்பங்கள்,நிர்ணயிக்க முடியாத உருவங்களில் கோடுகளில் பிழம்புகளில் மிதந்தன.ஓடின. ஒளிந்தன, மாறின, மறைந்தன, மீண்டும் தோன்றின.
இயற்கையின் கெலிடாஸ்கோப் Modern artஐக் காட் டிலும் Modern art. இனி, உருவாகப்போகும் எண்ணத்தின் நிழல்கள்? அந்த ஜாலக்கின் குறுக்கே ஓர் எண்ணம்- இல்லை. அதன் கிறுக்கல் மின்னல் வெட்டிற்று. இப்பவே, இப்படியே, மேல்துண்டு, அரை வேட்டியோடு படியிறங்கி விட்டால் என்ன? கால்போன வழி – மனம் வகுக்கும் திசை அல்ல. கால் எங்கே தன் இச்சையில் இழுத்துச் செல்கிறதோ அவ்வழியே போய்க்கொண்டு… போய்க்கொண்டே, இன்று பூரா, அதாவது இரவு படுக்கும் நேரம் வரை – கையில் ஒரு செல்லி கூடாது. பசி? அந்த Problem தானே தன்னைப் பிரித்துக்கொள்ள வேண்டியதுதான். அதெப்படியப்பா? வயிறு கேட்குமா? வயிறு வயிறு வயிறே! உலகமே அதில் தானே இருக்கிறது! அம்மா வயிற்றிலிருந்து விழுகிறாய். வாழ்க்கையின் மறுபெயர் வயிறு. ஈசுவரோ ரக்ஷது; சமஸ் கிருதம் எல்லாம் இருக்கட்டும். உனக்குத் தெரிந்த ஸம்ஸ் கிருதமும் அவ்வளவுதானே! வயிற்றைக் கிள்ளும்பேதல்லோ தெரியப்போகிறது! வாய் திறந்து கேட்பையா பழக்கமிருக்கா? எனக்கு இப்போ எப்படித் தெரியும்? பசி எனக்கு இப்போ வந்திடப் பத்தும் – பறந்து போகட்டும். எப்படித் தெரியும்? பழக்கம் இருக்கா, பிச்சையெடுக்கவோ பல்லை இளிக்கவோ, திருடவோ, அடித்துப் பிடுங்கவோ, அகப்பட்டுக் கொண்டால் கொடுப்பதை வாங்கிக் கொள்ளவோ-
லிஸ்டை அடுக்கிக்கொண்டே போனால்? இனிமேல் தான் தெரியணும். பட்டினி – உன் புளிச்சேப்பத்துக்கு. டாக்டர் விதிக்காமல், பட்டினிக்காகவே பட்டினி, பட்டி னின்னா அது ஒரு தின்பண்டத்தின் பெயர் என்று நினைத் இல்லையப்பா மகனே, பசிக் துக்கொண்டிருக்கிறாயா? கொடுமை படர்றபோதுதானே தெரியப்போகிறது.
தெரியட்டும் சைத்தான்.
மனமெனும் சைத்தான்.
கேம் ஆரம்பித்துவிட்டது. இதோ நடந்துகொண்டிருக் கிறேன். என்ன கேம்? இன்றைக்கு நான் எனக்குப் பொறுப்பு. இல்லை. ஆனால் கேம் ஆரம்பம் நன்றாத்தானிருக்கிறது. ஏ! சைத்தான் நீ காட்டின பசிப் பூச்சாண்டி,எடுத்தவுடனே மறைஞ்சு போச்சு, என்ன சொல்றே? கத்துக்குட்டியின் ஆரம்பம் அதிர்ஷ்டம் என்பார் அல்லவா?
உள்ளிருந்து எதிர்ப் பேச்சு எழவில்லை. பாம்பு படுத் திருக்கிறது, நம்ப முடியாது. ப்போதுதானே, போதே ஆரம்பித்திருக்கிறது.
சன்யாசியாகவே நாடு முழுதும் திரிந்த ஸ்வாமி விவேகானந்தரின் எந்தப் படத்திலும் அவரது கன்னங்கள் ஆப்பிள்களாகத்தானே பிரகாசிக்கின்றன!
அவருடைய குருநாதரும், தானாகத் தன் தவங்களில் தன்னை வருத்திக்கொண்ட பட்டினிகள் அன்றி, பசியால் வருந்தியதாக வரலாறே இல்லை. கேட்கப் போனால் அவர் தித்திப்பு நொறுக்குத் தீனிக்காரராமே! அதனால் மதுர் எப்பவும் ஸ்டாக்கில் மிட்டாய் வைத்திருந்ததாகவே வரலாறு சொல்கிறது.
இவர்கள் பேருக்கோ, சொற்களுக்கோ. செயல் களுக்கோ காப்பிரைட் இல்லை. இவர்கள் உலகத்தின் சொத்து, இவர்களைப் பற்றித் தைரியமாகப் பேசுகிறோம். வேறு பெயர்களும் எனக்குத் தெரியும். இப்போது சன்யாசி கள். தனியாகவோ, சேர்ந்தோ ஸ்தாபனமாக விளங்கு கிறார்கள். இலை, சருகு, கிழங்கு, காற்றைப் புசித்த ரிஷிகள் புராணங்களோடு சரியா?
மேலே ஆகாசம், கீழே பூமி – இவன்தானே சன்யாசி? சரி இன்று திடுக்கென, இப்படிக் கிளம்பிவிட்டேனே. இதனு டைய மன அடிவாரம் என்ன? தோ பார், உன்னைப் பற்றி எல்லாமே உன்னால் தெரிந்துகொள்ள முடியும் என்று எண்ணாதே! எல்லாம் பையப் பைய. இதுவே ஒரு சூத்திரம். இதன் சரடு ஜன்மா ஜன்மாவாக ஜன்மாவுக்குமப்பால் நீளம் கொண்டது. முடிவேயற்ற நீளம்.
இதைப் பேசுவது இப்போது என்னுள் யார்?
இது சைத்தான் அல்ல.
வீட்டில் தேடுவார்கள். கொஞ்ச நாழி கவலைப்படுவார்கள் உனக்கு அதிர்ஷ்டமிருந்தால், ஓரிரு கண்ணீரும் சிந்தலாம். அவ்வளவுதான் உனக்காக யாரும் ஒருவேளை காபியைத் தவறப் போவதில்லை. அடுப்பில் பூனைக்குட்டி விளையாடப் போவதில்லை. அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை வார்க்காமல் விடப்போவதில்லை. நீயே சொல், புளித்துப் போகாதா? பலூனை ஊசியால் குத்தி னாற்போல்,என் மானம் எனக்கே குலைகிறது. Track மாறு gearஐ மாற்று. சீட்டைக் குலுக்கு மறுபடியும் வெட்டு.
மனமெனும் சீட்டு.
எங்கு வந்திருக்கிறேன்? சாலையோரம் என் வலம் பக்கத்தில் என்னுடையே ஒரு வாய்க்கால் வந்துகொண்டிருக் கிறது. குழைந்து குழைந்து, இழைந்து, இழைந்து, வளைந்து வளைந்து, நெளிந்து நெளிந்து, தொடர்ந்து தொடர்ந்து. இதன் விசுவாசம் உயிர்கொண்டு எனக்கு ரொம்ப வேண்டி யிருக்கிறது, பிடித்தமா யிருக்கிறது. காவேரி வாய்க்கால் தான்.
பேர், ஊர், பரம்பரை, மூலம் – எல்லாம் உங்களுக்குத் தான் அவசியமாயிருக்கின்றன. ஏனோ? இதில் என்னத் தைக் கண்டீர்கள்? எனக்கு ஏதுமே இல்லை. இதோ பாய்ந்து கொண்டே இருக்கிறேனே – மேலே ஆகாசம், கீழே பூமி. இரவு வேளைக்கு என்மேல் சந்திரிகை என் அலைபாயலில் சிதறிய அதன் நிழல் சுக்கல்கள் என் ஓட்டம்தான் என் வழி என் பிராணன் என் பலன் என் ஆதி, என் அந்தம். என் பாஷை, என் எல்லாமே வேறெதும் அறியேன்; வேறெதும் வேண்டேன். ஆனால் உங்கள் பாஷையிலேயே உங்களுக்குப் பேசிப் பார்க்கிறேன். அதுகூட ஒரு ப்ரயத்தன மாக இல்லை, அதுவும் என் ஓட்டத்தில்தான்…
மனப்ரவாஹத்தில் மணிப்பிரவாளம்.
வயல்களில் கதிர்கள் கனத்துச் சாய்ந்து பொன்னிறத்தில் அறுவடைக்குக் காத்திருக்கின்றன. வான விளிம்பின் முத்தத்தின் நாணத்தில் பூமி ஒரு பெரிய கன்னமாகப் பொற் பிழம்பு குழம்புகிறது. மண், பெண், பொன் மூன்றுமே ஹே பூமா நீயேதான்.
வாழைக் கொல்லைகள் இலைகள், பசும்பொன் தகடு களாக,தாம்பாளங்களாக, தட்டாமாலை சுற்றும் பாவாடை யில் கிழிசல்களாகக் காற்றில் ஆடுகின்றன.வாழ்வே ஏமாந்துபோன சமயங்களின் கோவை போன்று, மனதில் ஏதோ ஏக்கத்தைத் தூண்டுகின்றன. ஏதோ ஓர் உண் மையை, ஒரு ருவேளை என்னுடைய உண்மையைத்தானோ நிர்வாணத்தில் பார்க்கிறேன். வெட்கமாயிருக்கிறதா?
வெட்கம் வேறு உண்மை வேறு. வாய்க்கால் இப்போது ஒரு தென்னஞ் சோலைக்குள் புகுந்துகொண்டது. “போய் வா” என்று அதற்குக் கையாட்டிவிட வேண்டுமா என்று தோன்றுகையில், தாழம் புதர்களிடையே வெளிப்படுகிறது.
நட, நட, நடந்துகொண்டேயிரு.
ஆம், ரஸ்தாவும் நடக்கிறது மேடு ஏறுகிறது. ஒரு வளைவில் பாலம் தென்படுகிறது. வாய்க்காலின் இரு கரை களும் திடீரென மணற் குன்று அலைகளாக உயர்ந்து விட்டன. ஓரமாக வந்துகொண்டிருந்த வாய்க்கால், இப்போது சாலையின் குறுக்கே பாலத்தின் கீழ் ஓடுகிறது.
கரை மேட்டில் இரு மணல் அலைகளின் இடை தாழ்வில் ஒரு ஸ்திரி இடுப்பில் குடத்துடன் தோன்றுகிறாள். கரைச்சரிவில் சறுக்கினாற்போல், தடதடவென இறங்கி, தண்ணீர் ஓரமாகக் குடத்தை வைத்துவிட்டு -ஆ! ஆ! அவசரமாகப் புடைவையை அவிழ்க்கிறாள். முப்பது இருக்குமா? வாய்க்காலின் அடிவயிற்றில் கிடக்கும் கூழாங் கற்களின் மேல் கவனம்போல் பாலத்தின்மேல் குனிகிறேன்.
அவள் என்னைச் சட்டை செய்யவே இல்லை. புடைவைக் கொடுக்கை மோவாயால் மார்மேல் அழுத்திக் கொண்டு ரவிக்கையை உரித்தெறிகிறாள். அது கொப்புளம் போட்டுத் தண்ணீரில் மிதந்து செல்கிறது. புடவையை அதி வேகமாக இடுப்பில் சுற்றி நுனியை விலாவில் இறுக்கிச் செருகிக்கொள்கிறாள். சதையோ, உடலின் வரையோ, ஒரு இம்மிகூடவா காட்டாது? துறை ஸ்நானத்தில் சர்வீஸ் ஆனவள்போல் இருக்கிறது. ஏமாற்றத்தோடு பின்வாங்கு கிறேன். கால்கள் நடையைத் தொடர்கின்றன. அவள் கொக்கரிப்பு என்னைத் துரத்துகிறது.
“வயசாச்சு மனுசனுக்கு! ஏய், உனக்கு மவ இருக்காளா?”
பேசினது அவளா, அல்ல அவள் குரலில் மனத்தின் எதிரொலியா? – நட நட நடந்து கொண்டேயிரு. ஓடாதே நட – நான் ஏன் ஓடணும்? ஆகாது என்ன செய்து விட்டேன், என்ன நடந்துவிட்டது?
ஆண்டவனே நீ என்று ஒன்று இருந்தால், நீயும் ஒப்புக் கொள்ளவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. உயிர் என்று படைத்தாய். அதை உடலினுள் வைத்தாய். உடலைப் பாலென்று பிரித்தாய். கன்றுப் பருவத்திலேயே அதற்குரிய உணர்வுகளையும் வேட்கைகளையும் ஊட்டி உயிரை வேதனையாக்கி, ‘நீ மனிதன், ஆறு அறிவு படைத் தவன், மனத்தை அடக்கி ஆளவேண்டும் என்று எனக்கு நியாயம் பேசுவது நீயா, அல்லது மனிதன் கூட்டுவாழ்வின் பத்திரத்துக்காக, குற்றமுள்ள நெஞ்சு, மனசாட்சியென்று என்னையே எனக்குக் காவல் வைத்துக் காட்டும் பூச்சாண்டியா?
சிந்தனா சுவாரஸ்யம், நடை தெரியாமலே வெகுதூரம் வந்துவிட்டேன்.
அட! வாய்க்கால் இன்னுமா கூடவே!- வயிறுள் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. இருக்கட்டும் ஒருவேளைப் பட்டினியில் பிராணன் போய்விடுமா? வார்த்தைகள் தைரியம் சொல்லும் பாணியில், உண்மையில் கேலி செய்கின்றன.
ஓடை, சட்டென என்னை விட்டுப் பிரிந்து, வேகமாக, அகலமாக ஒதுங்கிய விசாலத்தில் ஒரு கோயில் தோன்றுகிறது. மதில் மூலைகளின் மேல் ரிஷப்பங்கள் படுத்திருக் கின்றன. ஆலயம் தோன்றிய திடீர், ஏதோ எனக்காகவே அப்பவே படைக்கப்பட்டது போன்ற ஓர் எண்ணத்தில் ஏதோ ஒரு பெருமிதம், சிருஷ்டிக்கு நன்றி. நான் நினைப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் என்பதுகூட மறந்து உணர்கிறேன். இந்த எண்ணத்தில் பசிகூட மறக்கிறது. நான் இவ்வேளைக்கு வழிபடல் வேண்டுமென்று ஆண்டவனுக்கே விருப்பமானால், அது என் பாக்கியமல்லவா?
கோயிலுக்கு வெளியே திருக்குளத்தில் கை கால்களைச் சுத்தி செய்துகொண்டு உள்ளே போகிறேன். துவஜஸ்தம்பத் தருகே ஒரு குட்டித் தூணில் தொங்கிய குடுக்கையிலிருந்து விபூதியை எடுத்துப் பூசிக்கொள்கிறேன்.
கோயில் காலியாகத் தோன்றுகிறது. ஒரே இருட்டு. தரை கரடு முரடு. ஆனால் கர்ப்பகிருகத்தில் சங்கிலியினின்று தொங்கும் பெரிய வெண்கல அகலில் சுடர், அதுவும் துணை விளக்கிலாது — லிங்கமும் அதுவும் ஒன்றுக்கொன்று துணை – அந்த வெளிச்சத்தில் சுவாமி இருளிலிருந்து மங்கலாகப் பிதுங்குகிறார். ஆவடையாரைச் சுற்றிய அழுக்குத் துணி மீது ஒன்றிரண்டு பொன் அரளிகள்,
சாமிக்கும் வளப்பனாக அம்மன் நிலை. சுள்ளி பொறுக் கும் சிறுமியாட்டம் கிழிந்த பாவாடை ; முழங்காலுக்கு மேல் தூக்கிக்கொண்டு, வடிவமும் வாளிப்பால், சரியான நாட்டுக் கட்டை. கோவில் பராமரிப்பு இவ்வளவு குறைவாக இருக்க முடியுமா? இல்லை, கோயில் மஹாத்மியமே,அம்மையும் அப்பனும் இத்தனை பரதையாக இருப்பதுதானா? நம் ஐதீகங்களை எதுவும் சொல்ல முடியாது. கதையும் அப்படி யும் திரும்பிவிடுவதுண்டே!
உள் பிராகாரத்தைச் சுற்றிவிட்டு வெளிவந்ததும் நடராஜர் சந்நதியில் குருக்கள் உட்கார்ந்திருந்தார். பக்கத் தில் தாம்பாளத்தில் விபூதி,குங்கும மடல்கள். எதிரே ஒரு கூடை அதில் நான்கு பொட்டலங்கள் இருந்தன. நெருப் பைக் குளிப்பாட்டின மேனி.
விபூதி குங்கும ப்ரசாதம் வாங்கிக்கொண்டேன்.
“ஏன் சாமியாரே. பசிக்கல்லியா? பட்டைசாதம் வாங்கிக் கோமேன்!”
காசுக்கு வழியில்லையென்று தெரிவிக்கக் கை விரித்தேன்.
குருக்கள் ஏதோ உரத்த சிந்தனையில் ஆழ்ந்தவராய். “ஹும், நாழியாச்சு. இனிமேலும் எவனும் வரமாட்டான். விலைபோக வழியில்லை. ஹும், பாழாப்போவதில் பரதேசி வயித்தில் போகட்டும் – சரி இந்தாரும் பிடியும்!”
மறுபடியும் கையை விரித்தேன்.
“தெரிகிறது சுவாமி! உம்மிடம் இருந்தாலும் இனிமேல் இருக்கிறதாகக் காண்பிப்பேளா? எனக்கும் வீட்டுக்குப் போகணும். பிடியும்!”
மூன்று பொட்டலங்களைத் திணித்தார். “இதையும் கொடுத்துடலாம். ஆனால் கூடையைக் காலியாக்க வேண்டாம்னு பார்க்கறேன், நடவும் உம் காட்டிலே மழைதான்”.
குளத்தங்கரையில் உட்கார்ந்து பொட்டலங்களைப் பிரித்தேன். ஒரு புளியம்சாதம், இரண்டு தயிர்சாதம். முதல் பொட்டலத்தில் கொஞ்சம் வாழைக்காய்க் கறி, தயிர் சாதத்தின் ஓரமாய் விட இலையில் புளிக்காய்ச்சல்.
தேவாமிர்தம்.
பசித்துப் புசிக்க தனிப் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும். பசி வேளையின் ருசியே தனி! பசிக்கு எதுவும் ருசி. உயிர் வாழவே உண் எனும் சூத்திரத்தை அநுபவமாக. அறியும் வேளை புண்ய காலம். ஆனால் இந்தச் சாதங்கள் உள்ளபடி ருசியாகவும் இருக்கின்றனவே! பாகம் குருக்களா, மாமியா? யாராயிருப்பினும் வாழ்க!
கடைசிப் பொட்டலத்தின் பாதியில் வயிறு ‘தம்’ ஆகிவிட்டது. காக்கைக்கும் நாய்க்கும் போட்டேன். ஆண்டவன் அவைகளுக்கும் சேர்த்துத்தான் எனக்கு அளந்திருக்கிறான்.
என் பசியாற்றவே கோயிலைக் காட்டி. உள்ளே இழுத்தாயோ? அடுத்த நிமிடம் நேரப்போவது என்னென்று பொத்தி மூடுகிறானே. அதிலேதான் கருணையிருக்கிறது. தெரியாமல் இருப்பதே உனக்கு நல்லது. நல்லதை மதிக்க மாட்டாய். தீம்பைப் பொறுக்கமாட்டாய்.
துண்டை உதறிப்போட்டு, மரத்தடியில் படுத்தேன்.
Our Father which art in Heaven
Hallowed be thy name
Thy Kingdom come – எத்தனை அர்த்தங்கள், எத்தனை ஆறுதல்கள்! கண் செருகுகிறது. உலகம் சுற்றும் அச்சில் (axis) தேன் சொரிகிறது!
பிறகு எப்பொழுது எழுந்தேன்! எப்பொழுது நடக்க ஆரம்பித்தேன்? தூக்கத்திலேயே நடந்து வந்திருக்கிறேனா? அங்கே மூடு சூளையாக இருக்கிறது! நினைப்பு வந்தபோது நடந்து கொண்டிருக்கிறேன். Somnambulism?
இடது பக்கத்தில் வாய்க்கால் துணை வந்து கொண்டிருக்கிறது.
ஏதேனும் புதுப்பரிணாமத்துள் புகுந்துவிட்டேனா? எனக்கு நேர்ந்து கொண்டிருப்ப தெல்லாம் உண்மைதானா? கனவில்லை; பொய் இல்லை. ஆனால் ஏதோ நம்பத்தக்க தல்லாத நிலை. கவிதை மாதிரி. கவிதையே நடப்பாக.
வெயிலில் மஞ்சள் காணத் தொடங்கிவிட்டது முதிர்ந்த பிற்பகல்.
வாய்க்கால் இப்போது வெகு நெருக்கத்தில் வந்திருக் கிறது. கரைமேலே நடந்துகொண்டிருக்கிறேன். கரை உயரம் தண்ணீர் தாழ. அதோ அந்தச் சின்னப் பையன் தண்ணீர் மேல் ஏன் கவனமாக இருக்கிறான்? பக்கத்தில், புத்தகப் பை அலக்ஷியத்தில் கிடக்கிறது இறங்கிப் போய் அவன் அருகே நிற்கிறேன், பிறகு உட்காருகிறேன். ஓ காயிதக் கப்பலா? பள்ளிக்கூடத்துக்கு ‘டிமிக்கி’யா? என்னைத்தான் கேட்டுக்கொள்கிறேன். அப்படியே இருந்தாலும் இவன் வயதுக்குப் பொருத்தம்தானே!
என் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறான். வெயிலில் நீலக் கண்கள் கூசுகின்றன. தலை தங்க மோதிரக் குவியல் வேர்வை விட்டுக்கொண்டு, மேனி, ஒரு பொன் ரோஸில் தகதகக்கிறான் அழகான பையன்.
அவனுடைய கப்பல் சரியாக இல்லை. அவனுக்குச் செய்யத் தெரியவில்லை. நான் உதட்டைப் பிதுக்குகிறேன். சுற்றுமுற்றும் பார்க்கிறேன். செய்து காண்பிக்க, குப்பைக் காயிதம் ஏதேனும் தென்படாதா? அவனுக்குப் புரிந்து விட்டது. சடேரென்று பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை உருவி நடுப்பக்கத்தைக் கிழிக்கிறான். ஆட்சேபிக்க எனக்கு நேரமே தரவில்லை. இந்தக் காலத்துப் பையனில்லையா? துணிச்சலுக்குக் கேட்கணுமா?
Spoilsport ஆக இருக்காதே இது இவனுடைய நேரம். இப்போ நீயும் இவன்தான். பெரிய கப்பல் என் விரல்களி னிடையினின்று புறப்படுகிறது. பேப்பர் நல்ல தடுமன். ஆதலால் கப்பலும் திடம்.
கப்பலைப் பார்த்ததும் பையனுக்குப் பரபரப்புத் தாங்க வில்லை. தன்னைத் தழுவிக்கொண்டான். எகிறிக் குதித் தான். என் கையிலிருந்து பிடுங்க முயன்றான். அமைதிக்கு அவனைக் கையமர்த்தி, கப்பலைத் தண்ணீரில் விட்டேன். அவனிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் என்னுடைய குழந்தைத்தனம் தலை தூக்கிவிட்டதே!
கம்பீரமாக ஒரு திரும்புத் திரும்பித் தன் சமனைக் கண்டு கொண்டு, கப்பல் நகர்ந்தது. அதன் பயணத்தில் எங்கள் இருவரின் கவனங்களும் ஒருமித்தன.
ஆனால் அதன் கம்பீரம் நீடிக்கவில்லை. வாய்க்காலின் ஓட்டம், தன்போக்கில் அதை இழுத்துக்கொண்ட டது. எங்கள் கை எட்டலைத் தாண்டிவிட்டது. சாய்ந்து, சரிந்து. பிரிந்து, அலங்கோலமும் அவமானமுமாகி, தட்டாமாலை சுற்றி, தண்ணீருள் போய்விட்டது.
அடக்கிய அழுகையில் அவனுடைய உதடுகள் தவித்தன முகம் குங்குமம். சமாளித்துக்கொண்டு, தோளில் பையை மாட்டிக்கொண்டு பெரிதாகக் கொக்கரித்தபடி ஓடினான். பெருமூச்செறிந்தேன். சொல்ல இயலாத விசனம், என் கப்பல் கவிழ்ந்ததற்கு, என்னை உதறி விடுவித்துக்கொண்டு கரையேறி நடக்கிறேன்.
இந்த வாய்க்கால் எனக்கு ஏதோ போதிக்கத்தான் இப்படிக் கூடவே வந்துகொண்டிருக்கிறது.
“என் ஓட்டம் என் கையிலிருக்கிறதா? ஓடுகிறேன், ஓடிக்கொண்டேயிருக்கிறேன். பயிருக்குப் பாய்ச்ச என்னை எங்கெங்கே வெட்டுகிறார்களோ அந்த வழி பாய்கிறேன். வரப்புப் போட்டுத் தடுத்தால் தடை படுகிறேன்; தேங்கு கிறேன். என்னைப் பற்றி,எதைப் பற்றியுமே சிந்திக்க அறியேன். என் தாய் மூல நதிக்கு ஒரு வேளை தனிப்புத்தி, தனிக் கோபம், தனி உணர்ச்சிகள் இருக்கின்றனவோ என்னவோ? ஆனால் நான் கவலையற்றவள். எதைத் தெரிந்து எனக்கென்ன ஆக வேண்டும்?”
இன்னொன்றும் சொல்லாமல் சொல்கிறது. “உங்கள் வழியும் உண்மையில் என் வழிதான். உங்கள் இஷ்டத்துக்கு உங்களைப் பற்றி நீங்கள் எதுவேணுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அதோடு சரி. எண்ணத்துக்கும் நடப்புக்கும் எடை சம்பந்தமேயில்லை”
“ஈசனே என் செயலாவது ஏதுமில்லை” ஏதோ பாட்டின் அடி இப்போ சமயம் பார்த்து நினைப்பின் ஆழத்தி லிருந்து மேல் வந்து மிதப்பானேன்?
ஆம், இதுவேதான் பேருண்மையாகத் தோன்றுகிறது! மேம்பாடுக்கு விருதாவாய்,காரியம் அற்ற இந்த நடையில் எண்ணம் விழுந்ததற்கே முன் என்ன, பின் என்ன? இந்தச் செயலில் என்னை உந்திவிட்டதால் எங்கும் பரவிய உயிர் சக்தியின மகத்தான நோக்கம் ஏதோ நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அது என்ன? என்னை அறியாமலே என்னை பற்றி நான் படும் கவலையை ஏதோ மேலிடத்தில் ஒப்படைத்துவிட்ட விச்ராந்தி. அந்த மேலிடம் எது? தற்போதைய நிலையாலே இருக்கலாம். ஆனால் இதில் ஏதோ ஒரு ‘ஹாய்’ இருக்கிறது. பழகிக்கொண்டு விட்டால் இதைவிடச் சுகம் இல்லை.
பிறந்த குழந்தையைப் பசி தாக்கும் வேகத்தில் ‘வீல் என்று துடித்து அழுகிறது. உடனே அதன் வாயில் திணிக்கப் படும் முலைக்காம்பின் வழி உள் பாயும் அன்பின் சுரப்பும், இன்னும் பார்வையும் நிலைக்காத நிலையில், அதன் பிஞ்சுக் கரம் தேடிக் கண்டு அதன் கீழ் அழுந்தும் ஸ்தன பாரத்தின் மெத்துதான்.உணர்ச்சி பூர்வமாய் அதன் பூரண சரணாகத விளைவு, முடிவாய் அனுபவானந்தம்.
உயிரின் இந்த முழு அடைக்கலத்தைக் கடைசிவரை, அது பிறந்த தூய்மையுடன் வேண்டுவானெனில், அதில் இருவருமே அடையும் ஏமாற்றம் தவிர்க்கமுடியாதது. ஏதோ ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று அவனே தன்னுடைய அகண்ட கருணையில் ஏற்றுக்கொள்ளும் சமாதானத்தில்தான் இன்று என்னுடைய நடை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏதோ ஒரு விதத்தில் அவன் விதித்தபடி அவனை நோக்கிய யாத்திரைதான்.
வெயிலில் கடுமையில்லை. நிழல்கள் நீளத் தொடங்கி விட்டன. லேசான பனி.
என்னை யாரோ பின்தொடர்வது போன்ற உணர்வில் திரும்புகிறேன். ஆம்.
முதலில் என் கண்ணில் பட்டதும் கவனத்தைத் தன்னில் இருத்திக்கொண்டதும், பெரிய இளநீர் போன்ற அந்தக் கூந்தல் முடிச்சுத்தான். கண்படுகிற பெரிது. பிடரிக்கு ஒரு பாரமாவேயிருக்கும் கனம். அந்த உடல் வாட்ட சாட்டத் தைப் பார்த்தால் ஆந்திரவாகு? 30, 35?
சற்றுப் பின்தங்கி வந்த நடை, நான் அவளைப் பார்த்து விட்டதால் என் சம தூரத்தை அடைந்தது. என் நடை ஏனோ அவளுக்காகவே அனுதாபத்தில் அவளுக்குச் சரியாகத் தளர்ந்தது.
இருவர் நடக்கையில், ஒரு விஷயம் கவனத்துக்குரியது. நடை அதன் சுருதியைக் கண்டுவிட்டால் மூன்றாவது நண்பன் ஒருவன் கூடவே வருகிறான். மோனம். எங்கு, எப்போது சேர்ந்துகொண்டது தெரியாது. ஆனால் அதன் ஆதிக்கம்தான் ஓங்கி வருகிறது. ஆறுதலான ஆதிக்கம்.
இப்போது, இங்கு நாங்கள் நால்வர்- நான், அவள் மோனம், வாய்க்கால்.
எங்கள் மௌன நிலையில் என்னை நான் என்று பிரித்துக் கொள்வது அசம்பாவிதம் அஸ்ருதி.
நான் எனும் என் அகந்தையை இங்குக் கழற்றி அவன் ஆகிவிடுதலே இந்தச் சமயத்தின் சாந்தி, சுஸ்ருதி.
ஆகவே, அவன், அவள், மோனம், வாய்க்கால்.
இங்ஙனம், நான் அவனாய விரக்தி, வியப்பாயில்லை. இயற்கையாய், இயல்பாய், தன்வழியாய், அதன் விளைவாய் உள்ளமும் உடலும் ஒரு தனி லேசாய் அவனும் அவளும் ஒருவருக்கொருவார் ஊடே காணும் பளிங்குத் தெளிவில்-
மோனம் ஒரு வாயில், உள் நுழைந்ததும் வியாபிக்கும் விதானங்களை வியப்பது மனத்தின் ஏழைமை.
மோனம் மேலே ஸ்பரிசம் படா ஆலிங்கனம்.
மோனம் ஒரு வானம்.
மோனம், பல் படாத பாம்புக் கடி
மோனம், லக்ஷ்மணக் கோடு, உள்ளே பத்ரம்.
மோனம், தன் மேல் நூற்ற கூடு.
மோனம், ஒரு சரடு. என்னை, நானாய் அவனை அவளை வாய்க்காலை வாய்க்கால் வழி அதன் தாய் நதியை, வேளையை, கவியும் இருளை, இதுவரை கடந்து போனதை, இப்போ நிகழ்ந்துகொண்டிருப்பதை, இனி எதிர் நோக்கியும், எதிர்பாராமலும் வரப்போவதை,யாவதையும் கோத்த உள்ளோட்டம்.
மோனம் ஒரு காவல்.
மோனம் ஒரு விடுதலை.
மோனம் ஒரு சுருதி.
நடந்துகொண்டேயிருந்தவர், சட்டென யாரோ தடுத்து நிறுத்தினாற்போல், நடுவழியில், எதிருக்கெதிர் நின்றனர். அவன் கையை, அவள் பற்ற, அவள் நடத்திய வழியே அவன் சென்றான்.
தண்ணீரில் இறங்கிக் கடந்து, எதிர்க் கரையேறியதும் அடர்ந்த புதர்களை அவள் மறுகையால் விலக்கியதும், அங்கே அடக்கமாய் மறைவாய். பறவைக் கூட்டின் உட்புறம்போல், சுற்றிலும் புதர் சூழ்ந்து, சிறு வட்டமான மணற்பாங்கு. அவள் உட்கார, எதிரே அவன் அமர்கிறான்.
விழிகொட்டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந் தவள், திடீரெனக் கையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, குலுங்கிக் குலுங்கி அவள் உடல் குலுங்கிய குலுக்கலில், அங்கங்கள் தனித்தனி விண்டுவிடும்போல்-
ஈதென்ன மடை திறந்தது? அவள் கண்ணீர் அவன் நெஞ்சில் விழுந்தது. அவனுக்குத் தொண்டையை அடைத்தது. எப்படித் தேற்றுவது? புரியாது திகைத்தான்.
இரு கைகளையும் ஏந்தித் தாலாட்டினான். தோள் மேல் சார்த்திக்கொள்வதுபோல் தன் இடது மார்பை இரு கைகளாலும், ஒன்றின் கீழ் ஒன்று பொத்தினாள். அப்படியே ஊஞ்சாடினாள். சட்டென அவன் கைகளைப் பற்றி இழுத்து, தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டாள். அவள் வயிற்றுக் கொதிப்பில் அவன் உள்ளங்கைகள் கன்றின.
நான் என் செய்வேன்? என்னால் என்ன செய்ய முடியும்?
அவளை அலட்டிய புயல்,படிப்படியாக அடங்கியது. அவளுடைய விரித்த கைகள், துவண்ட மலர்கள்போல் மடியில் கிடக்க கைகளை மூடித்திறந்து, மூடித்திறந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அவளை அழகு என்று சொல்வதற்கில்லை. ஆனால் விழிகள் கரை புரண்ட ஆழிகள்.
மல்லாந்து, அவனைத் தன்மேல் இழுத்துக்கொண்டாள். அவள் முகத்தில் அழைப்பு இல்லை. சிரிப்பு இல்லை, ஏதோ விதியின் அவசியம் இருந்தது.
மரங்களில் தொங்குவன விழுதுகளா, பாம்புகளா. இருள் சரங்களா? நக்ஷத்ர ஜாலக் ஒரு சமயம்,சிறு வெளிச்சம், உள்ளே இருட்டு.
அழுது அழுது வீங்கிச் செவந்துபோன ஒரு மாபெரும் செவ்விழிபோல. மரங்களின் அடவியின் பின்னணியில் அம்புலி எழுகிறது. அவிழ்ந்த அவள் கூந்தல் அவ்வப்போது அவன் முகத்தின்மேல், கருமேகமாய்க் கவிந்தது.
ஆத்மா என்பது என்ன? எல்லாப் பாதிப்புகளையும் தாண்டிய, ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதார நிலை என்ப தெல்லாம் இருக்கட்டும். அந்த நுண்ணிய தர்க்கங்களுக்கு அவன் தன்னைத் தகுதியாக நினைக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை, அது ஒரு ப்ரக்ஞை நிலை என்றே அறிவான்.
உடல் இல்லாமல், ப்ரக்ஞைக்குச் செயல்பாட்டுக்கு வழி யில்லை. ப்ரக்ஞையில்லாமல், உடலும் சவம். ஆகவே, ஒன்றுக்கொன்று இன்றியமையாத உறுதுணை. அதே சமயத்தில் ஒன்றுக்கொன்று வெளியீட்டின் வேதனையில் அவளுக்கு ஒன்றையொன்று காயப்படுத்திக்கொள்கிறது. ஏமாந்த தாய்மையின் தவிப்பு. அவனுக்கு அவன் தனிமை யின் சுமை. அவரவருக்கு அவரவர் காயம். அதனாலேயே ஒருவருக்கொருவர் காயம். காயத்தினின்று புறப்படும் ஜீவ நதி.
காலமெனும் ஜீவநதி.
பிரக்ஞை உடலை மீட்டுகிறது.
ஸரிகமபதநி
நித்யா லோலௌ
வித வித கானமு-
மோன கானத்தின் உச்சஸ்வரத்தில், மூர்ச்சையில் மூழ்கிப் போனான்.
‘அவனி’ல் இருந்து, நான் மீண்டதெப்போ?.
என் கையின் துழாவலுக்கு அவள் பக்கத்தில் இல்லை. முழு விழிப்பில் எழுந்து உட்கார்ந்தேன். எப்போது போனாள்? எங்கே?ஏன்? திரும்பி வருவாளா? மாட்டாளா? இல்லை, இதுவரை எல்லாமே கனவா? மணலில் ஏதோ கைக்குத் தட்டுப்படுகிறதே, என்ன?
-ஸில்வர் வளையத்தில், ஒரு சாவி. மெல்லியதாய், மாட்டுக் கொம்பில் செய்தது. அவள் ஆடை நெகிழ்ச்சியில் விழுந்திருக்கிறது. ஆகவே நடந்தது கனவு அல்ல. நிலா சிரிக்கிறது. இந்த நனவின் ருசுவை வைத்துக்கொண்டு அவளை எங்கே தேடப்போகிறாய்? எந்தப் பூட்டைத் திறக்கப்போகிறாய்?
இல்லை, இரவெல்லாம் அவளுக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கப் போகிறாயா?
அப்போதுதான் மனம் பூரா தெளிந்தது.
மீண்டும் தண்ணீரைக் கடந்து, கரையேறி மீண்டும் சாலையை அடைவதற்கும்,
இதுவரை நான் வந்த வழியை நோக்கி, எதிர் திக்கில், சக்திமிக்க ஒளி தூலங்களைப் பாய்ச்சிய வண்ணம் இரண்டு வெளிச்சங்கள் நெருங்குவதற்கும் சரியாயிருந்தது. ஹெட் லைட்டைப் பார்த்தால், லாரி போல் தோன்றுகிறது.
நிறுத்தக் கைகளைப் பலமாக வீசி ஆட்டுகிறேன்.
லாரி வேகம் குறைந்து, மெதுவிடத் தொடங்குகிறது!
– அமுதசுரபி
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |