கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: சமூக நீதி புனைவு
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 2,386 
 
 

வால்மீகியின் இடக் கரத்தில் வெற்றுச் சுவடி. வலது கரத்தில் எழுத்தாணி. இன்றைக்காவது எழுதலாமென அமர்ந்து ஒன்றரை நாழிகையாகிவிட்டது. இருந்தும் எழுத இயலவில்லை. மனதில் ஒரு வித தவிப்புடனான ஆற்றாமை. எழுத்தாணியின் கூரிய முனையிலிருந்தே உதித்து வருகிற சொற்களை அது தடுத்து நிறுத்தி விடுகிறது.

அவருக்கு முன்பாக அயோத்யா காண்டம் வரை எழுதி முடிக்கப்பட்ட ஓலைச் சுவடிகள். ஆரண்ய காண்டத்தையும் துவக்கியாயிற்று. கதையைத் தொடர முடியாதபடி சில தினங்கள் வெறுமனே கழிந்துகொண்டிருக்கின்றன.

“என்ன இது? ஏன் எனக்கு இவ்வாறெல்லாம் சோதனைகள்?”

கண்களை மூடி அவர் தன்னுள் வினவிக்கொண்டார். ஓயாமல் அவரைச் சுழன்றடிக்கிற கேள்வி. விழிப்பிலும் உறக்கத்திலும் தியானத்திலும் அதேதான்.

கண் திறந்தவர், வெற்றுச் சுவடியையும் எழுத்தாணியையும் கீழே வைத்தார். பார்வை தமது தளர்ந்து சுருங்கிய உள்ளங் கைகளில் படிந்தது. வலது உள்ளங்கையின் குறுக்கே எழுத்தாணியைப் பிடிப்பதின் காய்ப்பு. அதற்கப்பால் அஷ்ட திக்கிலும் நெளிந்தோடும் ரேகைகள்.

‘இதில் இன்னும் பூர்வாஸ்ரமப் பாவத்தின் கறைகள் மீதமுண்டா? கொலை வாளின் தழும்பும், குருதிகளின் வாசமும் இவற்றில் இன்னும் மறையவில்லையா?’

உள்ளங்கை ரேகைகள் நெளிந்து கூத்தாடுகின்றன. கரத்தினின்றும் வழிந்து, பர்ணசாலையை விட்டு வெளியேறி, அடர்ந்த கானகத்தினுள் ஓடுகின்றன. முன்னம் அவர் இங்கே வந்தடைந்த வழித் தடங்களாக.


வால்மீகி, அப்போது ரத்னாகர் என்ற பெயருடையவனாக இருந்தார். காவியுடை தரித்திருக்கவில்லை. வேட்டையாடப்பட்ட மிருகங்களின் ரத்த வீச்சமடிக்கிற தோலாடை. இடையிலே மனிதக் குருதி குடிக்கிற குறுவாள். கானக வழி வரும் வழிப்போக்கர்களுக்காகக் காத்துக்கொண்டு அவன் மரக் கிளைகளிலும் புதர்களிலும் மறைந்திருப்பான். எப்போதாவதுதான் யாரேனும்

வருவார்கள். தோது பார்த்து அவர்களின் முன்பாகப் பிரவேசிப்பான். பொன்னும் பொருளும் கேட்டு, வழிப்பறி. மறுத்தால் குறுவாள் காட்டி மிரட்டுதல். அப்படியும் பணியாதவர்கள் அதற்கு இரையாக நேரிடும்.

அந்த வாழ்க்கையின் மாறுதலும் அதன் வழியிலேயே நிகழ்ந்தது.

நானாவிதப் பட்சிகள் மரக் கிளைகளில் பாடிக்கொண்டும், சிறு பிராணிகள் மரத்தடிச் சருகுகளை சப்தித்தபடி ஓடித் திரிந்துகொண்டும் இருந்த கானக வழியே ஒரு நாள் அவன் மறைந்திருக்கையில் தம்பூராவின் மீட்டலை செவிகள் உணர்ந்தன. “நாராயண… நாராயண…! நாராயண… நாராயண…!” சிப்ளாக் கட்டையின் தாளத்தோடு வரும் குரல். ஒற்றை ஆள் மட்டுமே என்பதை கவனித்த பிறகு அவரை ரத்னாகர் வழிமறித்தான்.

அவர் சொன்னார். “உனக்குத் தருகிறபடியாக என்னிடம் ஏதுமில்லையே…!”

அவரை சோதித்தான். அவர் சொல்வது நிஜம்தான். இப்படியும் சில பரதேசிகள் வந்து அவர்களிடம் எதுவும் கிட்டாமல் போவதுண்டு. அவன் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தான். “போய்த் தொலை!”

மற்றவர்களாக இருந்தால் உடனே உயிர் பிழைத்த நிம்மதியில் ஓடிச் சென்றிருப்பார்கள். அவர் அங்கிருந்து நகராதது மட்டுமல்ல; அவனிடம், “இப்படி வழிப்போக்கர்களைக் கொள்ளையடித்து அக்கிரமம் செய்கிறாயே… எதற்காக?” என்று வேறு கேட்டார்.

“ஹ – எதுக்கா? என் குடும்பத்தக் காப்பாத்த.” ரத்னாகர் அலட்சியத்தோடு சொன்னான்.

“ஓ,… அப்படியா? உனது இந்தப் பாவத்தில் அவர்களும் பங்கெடுத்துக்கொள்வார்களோ?”

“பின்ன…? நான் சம்பாரிக்கற எல்லாத்துலயும் அவுங்குளுக்கும் பங்கிருக்குதுல்ல?!”

பரதேசி சிரித்தார். “நீ கூறுவது தவறு ரத்னாகரா!. அவர்கள் நீ ஈட்டும் பொருளில் வேண்டுமானால் பங்கு போட்டுக்கொள்வார்கள். உன் பாவத்தை ஒருபோதும் பங்கிட்டுக்கொள்ளப்போவதில்லை!”

விவாதம் வளரவே, தான் சொல்வதை பரீட்சிப்பதெனில் அவனது குடும்பத்தாரிடமே இதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளச் சொன்னார் அவர்.

“நீ சென்று வரும் வரை நான் இங்கே காத்திருக்கவும் தயார்.”

அவரது கூற்றிலும், காத்திருப்பார் என்பதிலும் நம்பிக்கையற்ற ரத்னாகர், பரதேசியை ஒரு மரத்தோடு சேர்த்து காட்டுக் கொடிகளால் பிணைத்துவிட்டு, தன் இல்லத்தை அடைந்தான். பரதேசியின் கூற்றைக் குடும்பத்தாரிடம் வினவினான்.

முதலில் தாய் தந்தையர்:

“மகனே…! உன்னைப் பெத்துப் பாதுகாத்து, வாலிபம் வரைக்கும் வளத்திட்டோம். அதோட எங்க கடமை முடிஞ்சுது. இனி எங்களக் காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை. அதை நீ எப்படி செஞ்சாலும் பாவ புண்ணியம் உனக்குத்தானப்பா.”

பிறகு மனைவி:

“பொண்டாட்டியோட தேவைகளை நிறைவேத்தறது புருசன்தான். அதுக்காக, நானா உங்களைக் கொள்ளையடிச்சு, கொலை பண்ணி சம்பாரிக்கச் சொன்னேன்? நீங்களேதான அதச் செய்யறீங்க. அதோட பாவத்தை அனுபவிக்க வேண்டியது நீங்கதான்.”

இறுதியில் குழந்தைகள்:

“அப்பா! நாங்க சின்னப் பசங்க. எங்கள வளத்தறது உங்க பொறுப்பு. அதுக்காக உங்க பாவத்தை நாங்க எப்படிப்பா ஏத்துக்க முடியும்?”

அந்தக் கணத்தில் ரத்னாகருக்கு சகலமும் அர்த்தமற்றுவிட்டது. இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை, குடும்பம், அன்பு, பாசம் யாவுமே. இந்தப் புறக்கணிப்பில் அவன் தனியனானான். இல்லத்திலிருந்து வெளியேறி வாசலுக்கு வந்தபோது அவனுடன் இருந்தது அவனது நிழல் மட்டும்தான். அவன் செய்த பாவத்தின் கரிய நிழல். தளர்ந்த கால்களின் நடை துவள, தனக்குப் பின்னே நீளும் அந்த நிழலையும் இழுத்தபடி அவன் நடந்தான்.


பரதேசியிடம் மீண்டும் வந்து சேர்ந்தபோது அவர் அவனை எதுவும் விசாரிக்கவில்லை. அவரது முகத்தில் இப்போது சாந்தம் தவழ்கிற புன்னகை. தனது குறுவாளை எடுத்து பரதேசியைப் பிணைத்திருந்த கொடிகளை வெட்டி அகற்றினான். அதுதான் குறுவாளினுடைய இறுதி உபயோகம். பிறகு அது ஒரு

புதருக்குள் வீசியெறியப்பட்டது. விடுபட்டு விலகி நின்ற பரதேசியின் காலடிகளில் மண்டியிட்டான். இல்லத்தில் நடந்ததையும் ஒப்பித்தான்.

“நான் தோத்துப் போயிட் டேன் சாமீ…”

ரத்னாகர் அழுகையோடு நிமிர்ந்து பார்க்கையில் பரதேசியின் புன்னகை மேலும் விரிந்தது. “நீ எந்தத் தோல்வியைச் சொல்கிறாய்? என்னிடம் தோற்றதையா, அல்லது உன்னிடமே நீ தோற்றதையா?”

பதில் பேச வகையற்று, வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன. கண்ணீர்த் துளிகள் உதிர்ந்து பரதேசியின் பாதங்களில் விழவும், அவர் அவனைத் தோள் தொட்டு எழச் செய்தார். “இப்போதாவது புரிகிறதா, நீ வாழ்ந்த வாழ்க்கை எத்தகையது என்பது?”

கண்ணீர்ப் படலத்தினூடே அவனுள் கடந்த காலம் மங்கலாய் மீண்டு நிகழ்ந்தது.

அப்போது, யாரைப் பற்றியும் – தன்னைப் பற்றியே கூட – சிந்தித்துப் பார்த்ததில்லை அவன். அவனுக்கு வேண்டியதெல்லாம் வழிபோக்கர்களிடமிருந்து பறிக்கக் கூடிய உடமைகள். அவர்களின் வசதியோ வயதோ அவனுக்குப் பொருட்டல்ல. தீர்த்த யாத்திரை செல்கிற கிழத் தம்பதியில் ஒரு கிழவனிடமிருந்து கழற்ற வராத மோதிரத்துக்காக விரலைத் தனியே வெட்டி எடுத்திருக்கிறான். தன்னை எதிர்த்த நடுத்தர வயதுக்காரனிடம் சண்டையிடும்போது குறுக்கே வந்த அவனுடைய பச்சிளம் பாலகனை, தலையைக் கல்லில் மோதியே கொன்றிருக்கிறான். மாங்கல்யத்தைத் தர மறுத்த ஒரு கர்ப்பிணியை வயிற்றிலேயே எட்டி உதைத்ததில் அங்கேயே கர்ப்பம் கலைந்து துடித்தாள்.

முகத்தைப் பொத்திக்கொண்டான். “ஏழேழு ஜென்மத்துக்கும் தீராத பாவத்தச் சொமந்துட்டு நிக்கறேனே… இனி நான் என்ன செய்வேன்? இந்தப் பாவத்தையெல்லாம் எப்படித் தீப்பேன்?”

பரதேசி கனிவுடன் அவனை நோக்கினார்.

“இந்தக் கண்ணீர் உனது கண்களிலிருந்தல்ல; வெம்பி வருந்தும் இருதயத்திலிருந்து வருவது. ஆகவே, அது உன்னைக் காக்கும்.”

அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான். மென்மையான குரலில் தொடரும் பரதேசியின் ஆறுதல் மொழிகள்:

“இதுவரை நீ வாழ்ந்த வாழ்க்கை வெறும் ஒரு பயணம் மட்டுமே. இப்போதுதான் நீ அடைய வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறாய். கவலைகளை விட்டுவிடு.”

அவன் தலை நிமிர்ந்து, பணிவுடன் கைகட்டி, செவிமடுத்துக் கொண்டிருந்தான்.

“உனது மெய்யான வாழ்க்கை இனிமேல்தான். எதற்காக நீ பிறந்தாயோ, அந்தக் காரியம்… ஆஹா!”

சம்பந்தமில்லாமல் அவர் ஏதேதோ பேசவும் அவனுக்குக் குழப்பம். “சாமி, என்ன சொல்றீங்க?” வாய் பொத்திக் கொண்டு பவ்யமாக வினவினான்.

“படைப்பின் ரகசியத்தை! ஆம், உன் மூலமாக இந்த உலகத்தில் உன்னதமான ஒரு செயல் ஈடேறவுள்ளது.”

பரதேசி தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கவே, அவர் தன்னை கேலி செய்கிறாரோ என்கிற ஐயம் ஏற்பட்டது ரத்னாகருக்கு. சுயம் மறந்த மோன நிலை போலவும் தோன்றியது.

“எனது மானசீகத் தந்தை ப்ரம்மா எழுதிய விதி இது. இப் பூவுலகில் தற்சமயம் அநீதிகளும் அக்கிரமங்களும் பெருகிவிட்டன. இவற்றை அழித்து, தர்மத்தைக் காக்கும் பொருட்டு கூடிய விரைவிலேயே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதராக, ராமாவதாரம் எடுக்கவிருக்கிறார். இதைப் பற்றிய காவியத்தை இயற்றப்போவது நீதான்!”

இதன் பிறகே அந்தப் பரதேசி, தேவரிஷி நாரதர் என்று தெரிந்தது. அவன் அவரை மீண்டும் பயபக்தியோடு வணங்கினான்.

“சாமீ,… ஏதேதோ சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் வௌங்கலீங்களே. எளுதப் படிக்கத் தெரியாத முட்டாளுங்க நானு. நான் எப்படி காவியம் எளுதுவன்ங்கறீங்க?”

“அதுதான் இந்த ப்ரபஞ்சம் முழுதையும் இயக்குகிற படைப்பின் ஆற்றல். இந்த விஷயத்தில் ஏன், எப்போது, எப்படி என்ற வினாக்களை நீ ஒதுக்கிவிடுவது நன்று. வேளை வரும்போது தேவையானவை தாமே நிகழும். அதுவரை நீ செய்ய வேண்டியது, ராமநாமத்தை ஜெபித்து தவமிருப்பது மட்டுமே. உனது கடந்த காலத்திலிருந்து நீ முற்றிலுமாக விடுபடவும், எதிர்காலத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகும்படியுமாக.”

“அப்படியே செய்யறேன் சாமி.”

ஒப்புக்கொண்டாலும் அவனுக்கு தேவரிஷி கூறிய ராமநாமத்தை உச்சரிக்க வரவில்லை. நாரதர் எவ்வளவோ முயன்று பார்த்தும் கூட. பிறகு அவருக்கு வேறொரு யுக்தி தோன்றியது. அருகிலிருந்த ‘மரா’ என்கிற மரத்தை அவனுக்கு சுட்டிக் காட்டினார். “அதன் பெயரையே தொடர்ந்து உச்சரித்தாயானால் போதும்.”

நாரதர் அவனை ஆசீர்வதித்து, விடைபெற்றுக்கொண்டார். தம்பூராவின் மீட்டலுடன் நாராயண நாம ஜெபிப்பும் சிப்ளாக் கட்டையின் தாளமுமாக ஒற்றையடிப் பாதையில் சென்று மறைந்தார்.


ரத்னாகர் வேறு திசையில் நடந்தான். மனிதக் காலடிகள் அது வரை பட்டே இராத கானகத்தின் உட்பகுதியை நோக்கி. பெரும் மரங்களும் அடர் புதர்களும் செறிந்து, இடுப்புயரப் புற்கள் மிகுந்திருந்தன. இடையிடையே துஷ்ட மிருகங்களின் உறுமல்கள். கொடிய நச்சுப் பாம்புகளும் பூச்சியினங்களும் கண்ணில் பட்டன. தவமிருக்கத் தகுந்த தனிமையும் பாதுகாப்பும் கொண்ட ஓர் இடம் தேடி அவன் நடந்தான். முட் செடிகள் உடம்பில் பட்டுக் கீறுவதையோ, கால்கள் களைத்திருப்பதையோ சற்றும் பொருட்படுத்தாமல்.

கானகத்தின் மையத்தில் தகுந்த ஓரிடம் வாய்த்தது. தேவதாரு மரங்கள் சூழ்ந்த சுனையின் அருகே, பாறை ஒன்றின் குகை. அதனுள் அவன் செல்லும்போது உள்ளிருந்த இருளில் தலைகீழாய்த் தொங்கும் வௌவால்கள் பதட்டமாய் கீச்சிட்டுப் பறந்தன. அவற்றின் கழிவுகளை சுத்தப்படுத்தி அங்கேயே அமர்ந்துகொண்டான். கண்களை மூடி, தேவரிஷி சொன்னவாறு ‘மரா’ மரத்தின் பெயரை உச்சரிக்கலானான்.

“மரா…, மரா,… மரா,… மரா…

மராமராமராம…ராம… ராம…

ராம… ராம… ராம…”

குகைக்குள்ளிருந்த புறச் சூழலின் ஒலிகளோடு பொருந்தி காற்றில் ராமநாமம் பரவியது. பசி மறந்து, கேள் திறன் உணர்வற்று அவன் ஜெபித்தான். உச்சியிலிருந்து சரிந்த சூரியன் மேற்கில் சிவந்து விழுந்து மறைந்தது. பொழுது இருண்டது. பறவைகள் கூடடைந்தன. விலங்குகள் தம் வளைகளுக்கும் மறைவிடங்களுக்கும் சென்று பதுங்கின. வானில் நட்சத்திரங்கள் மின்ன, கானகத்தினூடே ஒளி சிந்தியது கீற்று நிலா.

அவன் மட்டும் கண் திறக்கவில்லை; ராம நாம ஜெபத்தை நிறுத்தவில்லை.

அந்த ஜெபம் அவனருகே வரும் விஷ ஜந்துக்களை விரட்டியது, கொடிய மிருகங்கள் குகையருகே வராமலும்.

இரவு புலர்ந்து, பகல் முடிந்து, மீண்டும் இரவு வந்தது. பகலும் இரவும் மாறி மாறி நகர, கோடை உக்கிரம் கொண்டு கனிந்து, மழைப் பருவம் தொடங்கியது. அது வலுத்து ஓய்ந்த பின்னர் பனிப் பருவம். குளிரோ வெக்கையோ எதுவும் உணராதவனாக அவன் தவம் தொடர்ந்தான். குகையிருளில் அவனுக்குத் தோல் வெளுத்து, முகத்திலும் தலையிலும் ரோமங்கள் அடர்ந்தன. கரையான்கள் அவன் மீது புற்றுக் கட்டின.

வருடங்கள் பூமியில் சுழன்று தீரும் நியதி. அவனறியாமல் அவனைப் புற்றுக்குள் வளர்த்தியது அது. வேற்று மனிதர் யாருமறியாத வகையிலும்.

வேனலின் வைகறைப் பொழுதொன்றில் அவன் தவம் கலைந்து எழுந்தபோது அவனை மூடியிருந்த காலம் மண் திப்பிகளாய் உதிர்ந்தது. அதை மிதித்து நொறுக்கியபடி வெளியே வந்தான். அருகிலிருந்த சுனையில் குளித்துக் கரையேறும்போது, பூத்துக் கிளை விரித்த தேவதாரு மரங்களின் வரவேற்பு.

“வால்மீகியே,… வருக, வருக!” புள்ளினம் அவரது புகழ் பாடின.

“ஆதி மகாகவி வாழ்க, வாழ்க!”

தான் வந்த வழியே திரும்ப நடந்தார் வால்மீகி. குற்று மரங்களே கொண்ட கானகத்தின் எல்லைப் பகுதியைச் சேரும்போது, சூரியன் கீழ்வானில் எழுந்து அவர் மீது தன் முதல் கிரணங்களைப் பொழிந்தான். வால்மீகியின் கரங்கள் சூரியனை நமஸ்கரித்தன. மூடிய கண்களுக்குள் இருண்டிருந்த கணக்கற்ற காலங்களுக்குப் பிறகு அவர் காணும் முதல் வெளிச்சம். அங்கேயே தனக்கு ஒரு பர்ணசாலையை அமைப்பதற்கான இடத்தையும் அவர் தேர்ந்துகொண்டார்.

2

காவியுடை தரித்து, சுவடிகளும் எழுத்தாணியுமாக இங்கே அமர்ந்தபோது, ஸ்ரீராமனின் கதை அவருள் துவங்கியது. நவக்கிரகங்களின்

சஞ்சாரத்திலும் நட்சத்திரங்களின் அமைப்புகளிலுமிருந்து பூமியில் படிகிற விதியின் கோடுகள் வால்மீகியின் எழுத்தாணி முனையில் சொற்களாயின. பேருண்மையை தரிசிப்பதற்கான கற்பனையின் புனித யாத்திரை.

அதேசமயம் அயோத்யாவில் அவரது கண் காணாமல் நிகழ்ந்துகொண்டிருந்தவை அனைத்தும் ஞான திருஷ்டியில் அவருக்குத் தெரியலாயிற்று. மிதிலாபுரியும் லங்காபுரியும் இவற்றின் சகல இயக்கங் களுமே. வால்மீகி கண் மூடிக் காணும் அதையெல்லாம் கண் திறந்து எழுத்தாக்கிக்கொண்டிருந்தார்.

கண்களின் மூடலா, அல்லது அந்தத் திறப்பா? எதிலே குறையோ! மற்றொரு முக்கிய காரியம் வால்மீகி அறியாமல் விடுபட்டுவிட்டது.

ஸ்ரீராமன் ஜானகியுடனும் லஷ்மணனுடனும் அஞ்ஞாதவாசம் செய்துகொண்டிருக்கிற கட்டத்தில் இருந்தார் வால்மீகி. அதனிடையேதான் பர்ணசாலைக்கு தேவரிஷி நாரதரின் அடுத்த வருகை. சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்த பின்னர் அவர் கூறினார். “ஸ்ரீராமனின் சரிதையை ஹனுமனும் எழுதிக்கொண்டிருக்கிறான்.”

வாலியால் விரட்டப்பட்ட சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்குப் பாதுகாவலனாக, கிஷ்கிந்தைக்கு வெளியே மலங்காடுகளில் அவனுடன் மறைந்து திரிந்துகொண்டிருக்கிறான் ஹனுமன். அவ் வழியே ஸ்ரீராமனின் வருகைக்காகக் காத்துக்கொண்டும். வெறுமனே கழிகிற அந்தப் பொழுதுகளில் அங்குள்ள பாறைகளின் மீது ஸ்ரீராமனின் சரித்திரத்தை வடித்துக்கொண்டிருக்கிறானாம் அவன்.

நாரதர் இதைத் தெரிவித்துவிட்டுச் சென்றதிலிருந்தே வால்மீகியால் தன் ராமாயணத்தில் தொடர்ந்து ஈடுபட மனம் ஒன்றவில்லை.

ஹனுமன் சாட்சாத் ருத்ராவதாரம். சகல சித்திகளும் வாய்க்கப் பெற்றவன். எதிர்க்கிற எவரின் சக்தியிலிருந்தும் பாதியைத் தனதாக்கிக் கொள்கிற வரம் பெற்றவனும், ராவணனையே தோற்றோடச் செய்தவனுமாகிய மஹாவீரன் வாலியையே துவந்த யுத்தத்தில் வென்ற பராக்கிரமசாலி. தவிர, ஸ்ரீராமனின் பூரண பக்தனுமாவான். அவ்வாறு இருக்கையில் அவன் எழுதுகிற ஸ்ரீராம சரிதைக்கு முன்னால் தனது காவியம் எடுபடாமல் போய் விடும் என்பது உறுதி.

அதை எண்ணும்தோறும் செயலிழந்து தவித்தார் வால்மீகி. இதுவரையில் தான் எழுதியதே வீண். இனியும் எழுதுவது அர்த்தமற்றது என்றே அவர் அதைத் தவிர்த்துக்கொண்டிருந்தார். ஆனால், எழுதியும் எழுதாமலும் கட்டி வைத்துள்ள ஓலைச் சுவடிகள் சதா உறுத்தின. அவற்றின் மடிப்பு

இடுக்குகளுக்குள்ளிருந்து வரும் துக்கம் நிரம்பிய பெருமூச்சுகள் அனலடிக்கிறபடியாக.

தேவதாரு மரங்கள் இலையுதிர்க்கிற மலைச் சுனையின் கரை. மனசின் இருண்ட பாறைக் குகையுள்ளே தலைகீழாய்த் தொங்கும் வௌவால்கள் கெக்கலித்துச் சிரிக்கின்றன. கர்ஜனையோடு சிங்கங்களும், உறுமலுடன் புலிகளும் பாய்ந்தோடுகிற கானக அடர்த்தியில், இரை விழுங்கி உடல் நெரிக்கிறது மலைப் பாம்பு. மரக் கிளையில் அமர்ந்த க்ரௌஞ்சப் பட்சி இணையில் ஒன்றை அம்பெய்து வீழ்த்தும் வேடன், வில்லோடு மீண்டும் குறி பார்க்கிறான். அவனுக்கு உப தேசமாக தனது முதல் கவிதையைப் பாடிய வால்மீகியின் இதயத்தை நோக்கி.

“ராமா… ராமா…” அவரது உலர்ந்த உதடுகள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தன.


வால்மீகியின் கரங்களில் இப்போது ஓலைச் சுவடிகள் இல்லை. எழுத்தாணி இல்லை. அவர் வெறுமனே அமர்ந்து, ஞான திருஷ்டிக்கும் எட்டாத தொலைவுகளில் ஒளிந்துகொண்டிருக்கிற விடைகளை அறிய வகை தேடிக்கொண்டிருந்தார்.

“ஜெய் ஸ்ரீராம்!”

வாசலிலிருந்து கம்பீரக் குரல் கேட்டது. வால்மீகி எழுந்து வாயிலுக்குச் சென்று பார்த்தார். தலையிலே க்ரீடமும் இடையில் பட்டாடையும் அணிந்த, கன்னங்கரியதொரு மனிதக் குரங்கு, வலது தோளில் கதையைத் தாங்கியபடி நின்றிருந்தது.

“வால்மீகி முனிவருக்கு வணக்கங்கள்.” பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கியது அது. “அடியேன் ஹனுமன்.”

“என்ன! ஹனுமனா?” திகைப்பில் உறைந்தார் வால்மீகி. தனது பிரமையோ எனக் கருதும் விதமாக இருந்தது. பணிவும் கம்பீரமும் ஒருங்கே அமையப் பெற்றதாக நிற்கும் ஹனுமனின் முகத்தில் மந்தகாசம். வால்மீகி பதட்டத்துடன், “வரவேண்டும், வர வேண்டும்” என்று வரவேற்றார். உள்ளே அழைத்து வந்து ஹனுமனை ஆசனத்தில் அமர்த்தினார்.

“தேவரிஷி நாரதர்தான் எனக்குத் தங்களைப் பற்றியும், தாங்கள் எனது பகவான் ஸ்ரீராமனின் கதையைக் காவியமாக இயற்றுவது பற்றியும் தெரிவித்தார். அதை அறிந்தது முதலே தங்களைச் சந்திக்க வேண்டும் என்று

பேராவல் கொண்டேன். அது நிறைவேறியது எனது பெரும் பாக்கியம்.” ஹனுமன் சொன்னான்.

அதோடு, அவரது ராமாயணம் எந்த அளவுக்கு எழுதப்பட்டிருக்கிறது, எப்போது அது முடிவுறும் என்றெல்லாம் விசாரித்தான்.

“என்னுடைய காவியம் ஸ்ரீராமனுடைய வாழ்வின் நடப்புகளை ஒட்டி எழுதப்படுவது. ஆகவே, ஸ்ரீராமனின் வாழ்க்கை முடிவடைகிற தருணத்திலேயே என் காவியமும் முடிவடையும்.” சொல்லிவிட்டு வால்மீகி ஹனுமனிடம் கேட்டார்.

“நீயும் கூட ஸ்ரீராமனின் சரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக நாரதர் என்னிடம் கூறினாரே…?”

“ஆம், முனிவரே! எனக்குத் தெரிந்த வரையிலான ஸ்ரீராம மகிமைகளைப் பாறைகளில் கல்வெட்டாக வடித்துக்கொண்டிருக்கிறேன்.”

“ம்…” தனது மார்பில் புரளும் தாடியை வால்மீகி இழுத்துவிட்டுக்கொண்டார். “காலத்தால் அழியாதபடியாக; இல்லையா?”

“ஜெய் ஸ்ரீராம்! என்னுடைய எழுத்துகள் காலத்தால் அழியாதவையாகுமா? அவ்வளவுக்குப் புலமையோ காவியத் தேர்ச்சியோ சிறிதும் அற்றவன் நான். முனிவரே…! காலத்தால் அழியாததெனில் அது தங்களுடைய காவியமாகத்தான் இருக்க முடியும்.”

ஹனுமனின் முகத்தை வால்மீகி உற்று நோக்கினார்.

தீர்க்கமான அவனது கண்களில் ஒளிர்வு. “ஸ்ரீராமரின் கதையைப் பின்வரும் காலங்களில் கூட, வெவ்வேறு ப்ரதேசங்களைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு மொழிகளில் எழுதுவார்கள் என்றும் நான் அறிந்துள்ளேன் முனிவரே. அவைகளுக்கு மூலமாகவும், அவை அனைத்திலும் சிறந்ததாகவும் அமையப்போவது தங்களின் காவியம் மட்டுமே.”

அவரிடமிருந்து நம்பிக்கையின்மையுடனான ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்டது. கூரையை அண்ணாந்து வெறித்தார்.

“இல்லை, ஹனுமன்! அப்படியல்ல. நான் வெறும் கவிஞனும், கதைசொல்லியும்தான். என்னிடமுள்ளது கற்பனையும் சொற்களும் மட்டுமே. ஆகவே, எனது காவியமும் அவைகளாலேயே புனையப்படுவது. நீயோ சாட்சாத் ருத்ராவதாரம். நீ எழுதும் ஸ்ரீராம சரிதையானது உனது அவதார மகிமையினாலும், பக்தியினாலும் ப்ரபல்யமடையும். ஆகவே, அதுதான்

வேறெந்த ஸ்ரீராம கதைகளைக் காட்டிலும் உயர்ந்ததாக இவ்வுலகில் போற்றப்படும்.”

“தாங்கள் என்னை அதிகமாகப் புகழ்கிறீர்கள் முனிவரே.”

“புகழ்ச்சியல்ல ஹனுமன்; சத்தியம். எனது தவ வலிமையால் இதை நான் உணர்கிறேன்.”

வால்மீகி, தான் எழுதி முடித்த ஓலைச் சுவடிகளை ஹனுமனிடம் காட்டினார். “இதோ,… அரைகுறையாக நிற்கிற எனது ராமாயணம். இதைத் தொடர்வதா வேண்டாமா என்ற யோசனையிலேதான் நான் இப்போதும் இருக்கிறேன்.”

“ஏன், என்ன ஆயிற்று? எதனால் இவ்வாறு கூறுகிறீர்கள் முனிவரே?”

அவர் உடனடியாக பதிலளிக்கவில்லை. ஹனுமன் காத்திருந்தான். அவர்களுக்கிடையே நிலவிய மௌனமெனும் உலகப் பொது மொழியிலிருந்து வால்மீகி தனக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

“சிறப்பில்லாத ஒன்றை ஏன் படைக்க வேண்டும் என்றுதான்.”

ஹனுமன் அதிர்ச்சிகொண்டு ஆசனத்தினின்றும் எழுந்தான். வயோதிகத்தின் நெற்றிச் சுருக்கங்களுடே ஒளிந்திருக்கும் வால்மீகியின் கவலைகளை உன்னித்தான்.

‘ஹே… ஸ்ரீராம்! உமது சரிதையை எழுதும் என் செய்கை, இத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்துமென்பது தெரியாமல் போய்விட்டதே எனக்கு!’’ ஹனுமன் கலங்கினான். பல கால தவத்தில் வால்மீகி முனிவர் அடைந்த மகாகவி ஸ்தானம் அநித்யமாகிவிடுமா? அதற்கு நான் காரணமாவதா?

இருவரும் தத்தமது அகத்தினுள் ஆழ்ந்தவர்களாகவே இருந்தனர். ஸ்ரீராமனைத் தாங்கிய ஹனுமனின் நெஞ்சம் அதில் தெளிவுற்றது.

“முனிவரே,… தங்களுடைய கவலை எவ்வளவு இயல்பானது என்பதை நான் உணர்கிறேன். நான் வடிக்கும் ஸ்ரீராமசரிதையினால் தங்களின் ராமாயண காவியம் சிறப்பு குறையுமெனில், நான் அதை அனுமதியேன். இது எனது கதையின் மீதும், என் பகவான் ஸ்ரீராமரின் மீதும் ஆணை!”

இருந்தாற்போல ஹனுமன் சூளுரைக்கவே வால்மீகிக்குத் திகைப்பாயிருந்தது. கூடவே, அவன் சொல்வது புரியாத குழப்பம்.

உணர்ச்சி வசப்பட்டதில் இறுகிய அவனது முகமோ உடனே இளகுகிறது. அவன் அவரிடம் வேண்டுகிறான்: “தயைகூர்ந்து தாங்கள் ராமாயண காவியப் பணியைத் தொடரவும். மனதில் இனி எந்த சஞ்சலங்களும் வேண்டாம். உங்களுக்குக் கொடுத்த வாக்கை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன்.”

வால்மீகியும் ஆசனத்திலிருந்து எழுந்தார். அவர் அவனிடம் ஏதோ கேட்க வாயெடுக்கும் முன்பாகவே ஹனுமன் விடைபெறப் பணிந்தான். கேளாமலேயே அவனை வாழ்த்தி வழியனுப்பிவைக்க வேண்டியதாயிற்று.

3

இனியும் கூட தெளிவடையாத மனத்தோடுதான் மகாகவி வால்மீகி தனது பர்ணசாலைக்குள் இருந்தார். நிஷ்டையில் அமர்ந்த அவரின் மூடிய கண்களின் ஞான திருஷ்டியில், காற்று அலைக்கழித்து நகர்த்தும் மேகங்களின் திசைக்கெதிராக, ஆகாயமார்க்கமாகப் பறந்துகொண்டிருந்தான் ஹனுமன். பின்னணியில் வெயிலால் வெளிறிய நீல வானம். வெகு கீழே பின்னுக்கு நகரும் கிஷ்கிந்தை நகர மாட மாளிகைகள் கையடக்கமாகத் தெரிந்தன.

ஆனால், வால்மீகியின் ஞானதிருஷ்டிக்குப் புலப்படாத மனத்தோடும் உணர்வுகளோடும்தான் பறந்துகொண்டிருந்தான் ஹனுமன். கிஷ்கிந்தையின் எல்லைக்கு வெளியே உள்ள மலங்காட்டில், ஸ்ரீராம சரிதை வடிக்கப்பட்ட பாறைகளின் முன்பாக அவன் தரையிறங்கினான். அவனிலும் பன்னூறு மடங்கு பெரியதாயிருந்தன அவை. அவற்றின் கருமையில் உளியால் செதுக்கப்பட்டு வெள்ளையாய் பளிச்சிடும் எழுத்துகள். ஹனுமன் துயருடன் அதை வெகுநேரம் பார்த்துக்கொண்டே, அந்தப் பாறைகளைச் சுற்றிச் சுற்றி வந்தான்.

பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டவனாக, உறுதியோடு நின்று, “ஜெய் ஸ்ரீராம்…” என வணங்கினான். அவனது உருவம், அந்தப் பாறைகளைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக விஸ்வருபம் கொள்ளலாயிற்று. இப்போது மண்ணில் பாதி புதைந்த அந்தப் பாறைகளை அடியோடு பெயர்த்தெடுக்க அவனால் முடிந்தது. கதையை இடது தோளுக்கு மாற்றிக்கொண்டு, பெயர்த்தெடுத்த பாறையை வலது கரத்தில் தாங்கியபடி அவன் பூமியை உதறி ஆகாசத்தை நோக்கிப் பாய்ந்தான். அந்த வேகத்தை எதிர்கொள்ள அஞ்சி, வானம் மேலும் உட்குழிந்துகொண்டது. உச்சியிலிருந்த சூரியன் முந்தைய ஞாபகத்தில் நடுங்கித் தவித்தான். உக்கிரமான வெயிலாயிற்று. அதில் ஆகாச மார்க்கமாகத் தென்திசையே பறந்த ஹனுமனுக்கு மேனி

வியர்த்தது. குளிர்ந்த மேகங்கள் அவனது வியர்வைத் துளிகளைத் துடைத்து ஆதுரமாய்த் தழுவிச் சென்றன.

அவன் இந்து மகா சமுத்திரத்தினை அடைந்தான். மீன் பிடித் தொலைவுகளைக் கடந்து பல காத தூரத்திற்கு அப்பால் சென்ற பிறகே பறத்தல் நின்றது. மேலிருந்து பாறையை நழுவ விட்டான். காற்று மண்டலத்தை ஊடுருவி அது கடலில் மோதும்போது இடியெனப் பேரோசை. அலைகளற்ற மேற்பரப்பில் அப்போது கடல் நீர் நாலு பனை உயரத்திற்கு எழும்பியது. பாறை உள்ளிறங்குகையில் சுறாக்களும் திமிங்கிலங்களும் அஞ்சி விலகின. ஆயிரமாயிரம் மீனினங்களும், வினோத கடல் வாழ் உயிரிகளும் கொண்ட பவளத்திட்டுகளிடையே அந்தப் பாறை தரை தட்டி நின்றது, ஆழ்கடலின் பேரமைதியோடு.

ஹனுமன் திரும்ப வந்து ஒவ்வொரு பாறைகளையும் பெயர்த்தெடுத்துக்கொண்டு இவ்வாறே கடலில் எறிந்துகொண்டிருந்தான். கடைசிப் பாறையை, கல்வெட்டிற்கு உபயோகித்த உளியுடனும் சுத்தியுடனும் கடலில் போடும்போது அந்தியாகிவிட்டது. மேற்றிசையில் சூரியச் செம்பொன் வட்டம். ஹனுமன் உடற் களைப்பும் மனச் சோர்வுமாக கடற்கரையில் தரையிறங்கி சுயரூபம் கொண்டான்.

தூரத்தே ராட்சத அலைகள். புயலின் அறிகுறியாய் கடலில் கொந்தளிப்பு. ஸ்ரீராம சரிதை தன்னுள் மூழ்கடிக்கப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள இயலாமல்தான் சமுத்திரத்தில் இவ்வளவும். ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து வருகிற அலைகள், “ஏன் இவ்வாறு செய்தீர்கள் ஹனுமன் – ஏன் இவ்வாறு செய்தீர்கள் ஹனுமன்?” எனக் காரணம் கேட்டு கரையை அரிக்கலாயின.

“ஹே,… சமுத்திரமே! அமைதி கொள்க!” ஹனுமன் கூறினான். கடலில் கொந்தளிப்பும் சூறாவளியும் குறைந்தன. அவன் அலைகள் கரையெட்டும் தூரம் வரை சென்று நின்றான்.

“எனது பகவான் ஸ்ரீராமரின் காவியத்தை இயற்றுவதற்காகவே தோன்றியவர் மகாகவி வால்மீகி முனிவர். நானோ ஸ்ரீராமருக்கு சேவை புரிவதற்கே ஆனவன். எனது சேவையில் ஒன்றாகவே ஸ்ரீராம சரிதையைக் கல்வெட்டில் வடிப்பதையும் கருதினேன். ஆயினும், எனக்கு – என் பெயரை வருங்காலம் நினைவுகொள்வதற்கு – நான் ஸ்ரீராமருக்குப் புரியும் பிற தொண்டுகளே போதுமானவை. கூடுதலாக நான் ஒரு படைப்பாளியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் வால்மீகியோ, தனது காவியத்தின் மூலமாகவே உலகில் நிலைக்க வேண்டியவர். அவ்வாறுள்ள பட்சத்தில், எனது படைப்பு அவரது காவியத்தைக் காட்டிலும் புகழ் பெறுமாயின் அது

முறையாகாது. ஆகவேதான் அவற்றை அழிக்கும் விதமாக உனக்குள் மூழ்கடித்துவிட்டேன்.”

அலைகள் ஹனுமன் சொல்கிறவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு திரும்பச் சென்று கடல் முழுதிலும் பரப்பின. அதனால் பழைய அமைதியையும் அது பெறலாயிற்று.

“நான் ஒரு படைப்பாளியாக இருப்பதைக் காட்டிலும், வால்மீகியின் பாத்திரமாக உலகிற்கு அறியப்பட்டாலே போதும்.” ஹனுமனின் வார்த்தைகள் காற்றில் மிதந்தன.

கடல் ஆர்ப்பரித்தது. அலைகள் அவனது பாதங்களை முத்தமிட்டு வாழ்த்தின.

“நின் புகழ் ஓங்கட்டும்!”

பணிந்து அந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ஹனுமன் சொன்னான்: “எனது வாழ்வின் கடமைகளை முடித்த பிறகு நான் மடிவேன், வால்மீகி மடிவார், ஸ்ரீராமரும் மற்றுள்ளோரும் மடிவார்கள். ஆனால், ராமாயணம் மட்டும் காலத்தால் அழியாததாக இருக்கும். யுகங்கள் மாறும்தோறும் ப்ரளயத்தில் உயிர்கள் முழுமையும் அழிந்து அழிந்து புதிதாய்த் தோன்றும். சமுத்திரமே…! இந்த மண்ணும், விண்ணும், சூரியனும், காற்றும், நீயும் என்றுமே அழிவதில்லை. உனக்குள்ளே நான் மறைத்த ஸ்ரீராம சரிதையும் அவ்வாறே அழியாவிட்டாலும், என்றென்றைக்கும் அது ரகசியமாகவே இருக்கட்டும். தயைகூர்ந்து எனக்கு இந்த உதவியை வரமாக அருள்வாயாக!”

“அப்படியே ஆகட்டும் ஹனுமன்!”

மண்ணும், விண்ணும், சூரியனும், காற்றும் சாட்சியாக சமுத்திரம் உறுதியளித்தது. ஹனுமன் நன்றி கூறி விடைபெற்றான். ஈர மணலில் அவனது பாதச் சுவடுகள் படிந்தன. உலர்ந்த மணற் பரப்பில் ஏறி அவன் மறைந்த பிறகு சூரியன் கடலில் விழுந்தான். இருள் படரும் கரையில் அலைகள் ஓடோடி வந்து ஹனுமனின் பாதம் பதிந்த ஈரச் சுவடுகளையும் அழித்துவிட்டுச் சென்றன, அவன் வந்து சென்றது வேறு எவர்க்கும் அறியப்படாத விதமாக.

– கணையாழி, ஜூலை 1999.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *