காதல் காவியம்




(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி 16-20 | காட்சி 21-23
இருபத்து ஒன்றாம் காட்சி
(மணியின் வீட்டுத் திண்ணை இரவு நேரம் ஊர்ப் பெரியவர்கள் மற்றும் மணியும் அவனது சகோதரர்களும்)

பாதிரியார்:
அக்கம் பக்கத்து
ஊர்களில் காட்டுத் தீ போல்
பரவி வரும்
சாதிச் சண்டையும்
மதக் கலவரமும்
இங்கு பரவக் கூடாது
என்பதுதான் என்னுடைய அவா.
உங்கள் அனைவரையும்
அதுபற்றி அறிவுறுத்துவதற்காகவே
இந்த அவசரக் கூட்டம்
ரகீம்பாய்:
இறைவனின் அருளால்
நாம் அனைவரும்
அன்பால் இணைந்தவர்கள்
இங்கு குழுமியுள்ளவர்கள்
அனைவரும் நல்லிணக்கக் குழு
போல் செயல்பட்டு
அந்தக் காட்டுத் தீ
நம்மைப் பற்றாமல் செய்தல் வேண்டும்.
பஞ்சாயத்துத் தலைவர்:
பெரியவர்கள் இருவரும்
இங்கு உரைத்ததை
நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
நமது பூஞ்சோலை அமைதிப்
பூஞ்சோலையாகத் திகழ
அனைவரும் அவரவர்
பங்கை ஆற்ற வேண்டுகிறேன்.
மணி:
ஏழுமலை சாமிகளும்
பாதிரியாரும்
ஊரெங்கும் மக்களிடையே
எச்சரிக்கை
பேசி வருதல் நலம் பயக்கும்
என்பது அடியேனுடைய விண்ணப்பம்.
பாதிரியார்:
நானும் அவரும் அதை
செய்யத் தயராகவே உள்ளோம்.
நம்மிடையே நஞ்சை
விதைக்கும் ஆட்கள் உள்ளனர்.
எச்சரிக்கை செய்ய
ரகீம்பாயின் தொண்டு
நிறுவனத்தின் மனிதாபிமானத்
தொண்டர்களும் எங்களுடன்
ஈடுபடலாம் என்பது என் வேண்டுகோள்.
ரகீம்பாய்:
அவர்கள் தங்கள்
பங்களிப்பைச் செய்வார்கள்.
கிராமத்தை விழிப்புடன் இருந்து
காப்பற்றுவது அவர்கள் பொறுப்பு
என்பதை உறுதிப்படுத்துகிறேன்
இந்தப் பெரியவர்கள் கூட்டத்தில்.
பாதிரியார்:
கலவரம் நம்மைப் பற்றாமல்
கர்த்தர் காப்பாற்றுவாராக.
அனைவரும் பிரிவோம்
மீண்டும் சந்திப்போம்.
(அனைவரும் செல்லுதல்)
(மாணிக்கம், கபிலன், மணி ஆகிய மூவரும் மேடையில்)
(தங்கம் வருகிறாள்)
தங்கம்:
தம்பியின் நண்பிகள்
அனைவரும் உண்டு
உறங்கச் சென்று விட்டனர்.
நீங்கள் மூவரும்
சாப்பிடுவதில்லை
என்று விரதம் பூண்டு விட்டீர்களா?
புதுத் தாலியுடன் ஒரு
பெண் உள்னே உங்கள்
தமையனுக்காகக் காத்திருக்கிறாள்
என்பதையும் அவருக்குச்
சொல்ல
தம்பிகள் இருவரும் மறந்து
போனீர்கள்.
ம்…. அவரவர் உலகத்தில்
இருக்கிறீர்கள் தனித்தனியாக.
இப்போதாகிலும் வாருங்கள்.
கபிலன்:
நீங்கள் இருவரும்
சாப்பிடுங்கள் அண்ணே.
அடியேன் நண்பன் பாரிக்காகக்
காத்திருக்கிறேன்….
(மாணிக்கம், மணி, தங்கம் ஆகியோர் உள்ளே செல்லுதல்)
(பாரி வருதல்)
கபிலன்:
எங்கேயடா மாயமாய்
மறைந்து போனாய்?
பாரி:
பெரும் உண்மை ஒன்றினை
அறிந்து வந்துள்ளேன்
கேட்டால் மகிழ்ச்சியில்
நடனம் ஆடுவாய்.
கபிலன்:
என்னுடைய நடனத்தை
எவர் சகித்துக் கொள்வார்கள்?
செய்தியைச் சொல்லப்பா.
பாரி:
கேள் செல்லப்பா
மலர்விழியின் நாயகன்
மரித்துப் போகவில்லை.
உன் இல்லத்தில் இருக்கும்
இன்னொரு சாமியார்
மலர்விழியின் கனவன்தான்.
கபிலன்:
அந்தப் பெண்ணுடைய
மனஉறுதியும் மனோசக்தியும்
இறையருளும் அவளைக்
காப்பாற்றி உள்ளன.
செவியில் தேன் ஊற்றும்
செய்தியைத்தான் சொல்கிறாய்.
உள்ளே வா.
நமக்கு உணவு பரிமாறக்
காத்திருக்கிறார் அண்ணி.
(இருவரும் உள்ளே செல்லுதல்)
(ஏழுமலை சாமிகளும் செல்வாவும் வருகின்றனர்)
ஏழுமலை சாமிகள்:
உன்னைக் கரம்பிடித்தவளைப்
பிடித்த கஷ்டம் யாவும்
விலகி
நீயும் அவளும்
ஒன்று சேரும் தருணம் இது.
இறந்த காலத்தை மறந்து
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
என்று வாழ்வைத் துவக்குங்கள்.
குழந்தையைப் பெற்றோரிடம்
விட்டு இவள் இங்கு
வந்துள்ளாள்.
இந்த மாவட்டம்
கலவரத்தின் நாவுகளில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
செல்வா:
நாளை தன் சகோதரர்களிடம்
உண்மை எடுத்துரைத்து
மனைவியுடன் ஐக்கியப்படுத்தி
விடுவதாய் மாணிக்கம்
சொல்லியிருக்கிறான் சாமிகளே.
குணாவின் கைத்தடிகள்
எங்கள் உயிருக்கு
எமனாகி வந்துவிடக்
கூடாதே என்றுதான்
அஞ்சுகிறான் அவன்.
ஏழுமலை சாமிகள்:
மனிதன் படாத பாட்டை
எல்லாம் பட்டு விட்டாய்.
இனிமேல் உனக்குத் துயரம்
இல்லை. நிம்மதி கொள்.
இப்போது ஓய்வு கொள்.
செல்வா:
அடியேன் நண்பனைப்
பார்த்துத் திரும்புகிறேன் ஐயா.
(திரை)
இருபத்து இரண்டாம் காட்சி
(மேடையில் ஜோடி ஜோடியாய் தம்பதியரையும் காதலர்களையும் தனித் தனியாய் உரையாடுவதாகக் காண்பித்தல். ஒவ்வொரு முறை ஒளி பாய்ச்சப்படும். போது ஒவ்வொரு ஜோடி தோன்றிப் பேசுதல்)
முதலில் கபிலன் – சுடர்விழி தோன்றுதல்
சுடர்விழி:
ஒரு வழியாய் என் காதலை
அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்.
நண்பனின் தங்கை உம்மையே
எண்ணி ஏங்கி இருக்க
எங்கெங்கோ அலைந்தீர்
ஜோடி தேடி.
கபிலன்:
ஆண் புத்திக்கு ஆழமான
அறிவில்லையம்மா.
நானே உன்னிடம் தஞ்சம்
ஆக நீ காத்திருந்தாய்.
சுடர்விழி:
வெட்கத்தை விட்டாகிலும் எடுத்துக்கூறி
காதலரை வசப்படுத்து
என்று செல்லம்மா அக்காதான்
அறிவுரை செய்தார்.
அவரை நன்றிப் பெருக்குடன்
நினைப்பேன் என்றும்.
கபிலன்:
என்னுடைய முன் கதைச் சுருக்கம்
மொழியட்டுமா உனக்கு?
சுடர்விழி:
யாரையோ காதலித்து ஏமாந்து
திரைநாயகன் போல் மதுவுக்கு
அடிமையான கதை எனக்குத்
தெரியும்.
பழசை மறந்து எனக்காகப்
புது வாழ்வைத் தொடங்குங்கள்.
கபிலன்:
என் மீது ஆர்வமே இல்லாதவள் போல்
அல்லவா நீ உலா வந்தாய்.
புரிந்து கொள்ளாது போனதால் வந்த
சலிப்பு என்று
அதைக் கொள்ள
வேண்டுமா?
சுடர்விழி:
நடந்த கதையையே ஏன் பேசி
வருகிறீர்கள்?
கபிலன்:
நடக்க வேண்டிய
நிகழ்ச்சிகளை அரங்கேற்ற
அடியேனுக்கு ஆர்வம் பொங்குகிறது!
சுடர்விழி:
எல்லை மீற ஆசையா
இப்போதே….
திருமணம் வரை காத்திருப்பீர்!
கபிலன்:
அப்படிச் சொல்லாதே
எய்ட்ஸ் விளம்பரம் போல்
அல்லவா ஒலிக்கிறது?
கம்மீசைக் கைவீட்டுத்
தாவணிக்கு மாறி விட்டாய்.
அழகை அறிவிக்க
இந்த உடையே ஒரு சாதனம்.
சுடர்விழி:
தொடங்கி விட்டீர்களா
உங்கள் உடை ஆராய்ச்சியை?
ம்.. அருகில் வராதீர்கள்
காதலி என்று பெண் அருகில்
வந்தாலே ஆடவரின்
கரங்கள் அத்து மீறுதல் நியாயமா?
கபிலன்:
உன் அழகும் என் வயதும்
உன் உடையும்…
முறைப்பைக் கைவிடு.
உன் அன்னையின் அங்கீகார
முத்திரை கிடைத்து விடுமா
நம் திருமணத்திற்கு?
சுடர்விழி:
என் அண்ணன் சொல்லும்
முடிவு எதுவானாலும் என்
அம்மாவுக்குச் சம்மதமே.
ம்…. காத்திருங்கள்
மணமேடை ஏறும் வரை.
இப்போது
நம் உள்ளங்கள் மட்டும்
சங்கமம் ஆகட்டுமே…
கபிலன்:
சங்கமம் ஆகி விட்டது
என் வாழ்வு உன்னோடு
என் காதலியே நீ என் நெஞ்சின் சுடர்,
கூடரை அணைக்கத்தான்
முடியவில்லையே…..
(விளக்குகள் அணைந்து மீண்டும் ஒளிரும் போது)
(செல்லம்மாவும் மணியும்)
செல்லம்மா:
மலர்விழியும் அவளது
கணவரும் பாதுகாப்பாய்த்
திரும்ப வேண்டியன
செய்து விட்டாரா மாணிக்கம்?
மணி:
மாவட்டமே எரிந்து
கொண்டிருக்கிறது.
வன்முறையின் கரங்களில்
சுற்றுவட்டாரம்
கைப்பாவையாகி விட்டதே,
நம் இல்லத்தில்தான் இருப்பார்கள்
நிலைமை சுதாரிக்கும் வரை.
செல்லம்மா:
பெண் பிறவியின் இலக்கணம்
அந்தப் பெண்தான் ஐயா
அவளையும் அவளது கணவனையும்
துரத்தி வந்த அந்த
மனித உருவில் உலவும் அரக்கன்
உயிருக்கு ஊசலாடும்
நிலையில் வந்து நின்றபோது
சிகிச்சை அளிக்கக் கெஞ்சி
நின்றாளே அங்குதான் அவள்
உயர்ந்து நின்றாள்-
பெண் கருணையின் வடிவம்
என்பதைக் காட்டி நின்றாள்.
மணி:
மறந்தே போனேன் செல்லம்மா
அந்த இளைஞன்
உயிர் பிழைத்து
உலவ முடியுமா?
மருத்துவர் தருகிற செய்திதான் என்ன?
செல்லம்மா:
அந்நியனாய் நம் மாவட்டத்துக்குள்
நுழைந்த அவனை
பக்கத்துக் கிராமத்தார்
கலகக்காரனாய் நினைத்துப்
பதம் பார்த்தனர் வன்முறையால்.
அவன் முன்னோர் செய்த நற்பயனால்
நம் வீட்டில் அருகே வந்து விழுந்து
கிடந்தான்.
உயிர் பிழைத்து விட்டான்
உலா வருவான் மீண்டும்!
எங்கள் மருத்துவர் சொல்வது
அவன் வாழும் காலம் சில காலமே.
உடலின் சக்தியை முற்றாக
இழக்கச் செய்யும்
இருபதாம்
நூறாண்டின்
இணையற்ற நோய்
அவனுள் குடி புகுந்துள்ளது.
மணி:
அடப்பாவமே!
செல்லம்மா:
அவன் புரிந்த பாவத்திற்குக்
காலம் தரும் தண்டனை இது.
தப்பி விடமுடியுமா அந்த மிருகம்?
குருவிக் கூட்டைக்
கலைத்ததைப்
போல்
ஒரு குடும்பத்தைப் பிரித்தவன்
வாழ்வதுதான் நியாயமா?
அப்புறம்…..
உங்கள் இளவலின் நாயகியைப்
பார்த்தீர்களா?
அதைப் பகருங்கள்.
மணி:
ஒருதலைக் காதலில்
அவனை நினைத்து வந்த
ஏந்திழையை அவனோடு
இணைத்து விட்டாயே.
பார்த்தேன் அந்தப் பெண்னை.
செல்லம்மா:
அவர்களாகிலும் காலா காலத்தில்
பூத்துக் குலுங்கி நிற்கட்டும்.
திருமணத்தால் அவர்கள் இருவரையும்
கட்டிப் போடுங்கள் சீக்கிரம்.
மணி:
அவர்களாகிலும் என்றால்….
என்னை அரைக் கிழவன் என்று
பரிகாசமாய்ச் சொல்கிறாயா?
ஆ.. ஆ….
செல்லம்மா:
நீங்களா அரைக் கிழவர்?
இளமை மாறா கட்டழகும்
நெஞ்சழகும் கொண்ட மாமனிதரன்றோ
நீங்கள்?
மணி:
அரைக் கிழவன் பட்டமே
நல்லது போலிருக்கிறதே
வஞ்சப் புகழச்சி வேண்டாம் தாயே…
செல்லம்மா:
வஞ்சப் புகழ்ச்சி அல்ல
என் நாயகரே.
என் நெஞ்சார்ந்த புகழ்ச்சி!
பெண்ணாய்ப் பிறந்தவள்
வேறு எப்படித்தான் வெளிப்படுத்துவாள்
நாயகன் மீதுள்ள அன்பை?
மணி:
கல்யாண வீட்டின்
கூட்டம் போகாததில் உனக்கு
வருத்தம் ஏதும் உண்டா?
செல்லம்மா:
வருத்தமா? மகிழ்ச்சியின்
விளிம்பில் நிற்கிறேன் நான்.
கல்யாண வீட்டின் களை
மாறாமல் நம் வீடு ஜொலிப்பதில்
மேலும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி.
கபிலனுக்கும் அவனது நண்பனுக்கும்
திருமணத்தை நம் வீட்டில்
உடனடியாக நீங்கள் அரங்கேறச்
செய்யுங்கள் இங்கே.
கலகலப்பு நீடிக்கும் இல்லத்தில்.
குதாகலம் பரவும் உள்ளத்தில்.
மணி:
கபிலனுக்கும் பாரிக்குமா?
நம் கலாசாரத்தில் இந்தப்
பழக்கங்கள் இல்லையே என் செல்லா
மேலை நாடுகளில் ஆணும் ஆணும்…
செல்லம்மா:
இருவருக்கும் தனித் தனியே
காதலிகள் இருக்கிறார்கள் என் ஐயா
அறிந்தும் அறியாதவர் போல்
இது என்ன நாடகம்?….
எங்கே புறப்பட்டீர் என் தலைவா?
மணி:
யாம் பெற்ற இன்பம்…. பிறர் பெறத்தான்.
இன்பமா? துன்பமா?
திருமணத்திற்குப்
பின் அன்றோ தெரியவரும்?
கண்களால் எரிக்காதே. இளவலின்
மங்கல மணக்கோலத்திற்கு
நாள் பார்த்து வருகிறேன்.
(விளக்குகள் அணைந்து மீண்டும் ஒளிரும் போது)
(பாரியும் திருமகளும்)
திருமகள்:
பார்வையாலேயே விழுங்கியதுபோதும்.
திடீரென்று திருமணம் பார்க்க வந்த
இடத்தில் நம் திருமணம் என்று
சேதி சொல்கிறீர்களே…..
நிதானத்தில்தான் பேசுகிறீரா?
பாரி:
குடிகாரன் போலவா என்னை
நினைத்தாய்?
இதை விட வேறு
இழுக்கு உண்டா எனக்கு?
திருமகள்:
சிங்கம் போல் கர்ச்சனை
புரியவேண்டாம்
உமது முன்கதை
முழுவதும் அறிவேன்
நான்.
அதை விடுங்கள்
திடீர்த் திருமணம் என்பதன் பொருள்
என்ன?
பாரி:
திடீர்த் திருமணத்திற்கும்
திட்டமிட்ட திருமணத்திற்கும்
நோக்கம்
இருவரை
மண வாழ்வில் இணைய வைத்து
வேடிக்கை பார்ப்பதுதானே!
திருமகள்:
கபிலனோடு சேர்ந்து
பிதற்றல்போல் பேசுவது
கை வந்த கலையாகி விட்டது உமக்கு.
பாரி:
இருவரும் சேர்ந்து தான் ஒரே
ஒரே நாளில் உன்னை….
திருமகள்:
என்ன ? ? ?
வெடிகுண்டா போட்டு விட்டேன்.
இப்படி அலறலைப் பரப்புகிறாய்.
இருவருக்கும் ஒரே நாளில்
சிக்கனமாய்த் திருமணம்
ஒரே வேளையில்
அடியேன் உன் கரத்தையும்
கபிலன் என் தங்கையின் கைகளையும்
பற்றும் அந்தத் திருநாள்….
திருமகள்:
நீங்கள் கனவுதான் காணவேண்டும்
அதுபற்றி,
எனக்குச் சம்மதமில்லை என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்.
பாரி:
என்னைக் காட்டிலும்
நல்லதோர் துணைவனைத்
தெரிவு செய்து விட்டாயா?
இது தெரியாமல் போனேனே….
திருமகள்:
நீங்களும் உங்கள் எண்ணமும்…
இந்த ஊரில் திருமணம்
எனக்கு இல்லை சம்மதம்.
இதுதான் என் தீர்மானம்.
என்னை உருவாக்கிய
பெற்றோரின் நேரடி ஆசியில்லாமல்
திருட்டுக் கல்யாணம் வேண்டாம்.
காதலி சொல்வதைச் செவிமடுங்கள்.
பாரி:
இது திருட்டுக் கல்யாணம் இல்லை
திருமகளின் திருக்கல்யாணம்
திருமகள்:
என்னைப் பெற்றவர்கள்
எதிரில் இல்லாமல் என்
திருமணம் நடைபெறாது எந்நாளும்,
(திருமகள் செல்லுதல், பாரி அவள் பின்னே திருமகள் என்று கத்திக் கொண்டே செல்கிறான்)
(மீண்டும் விளக்குகள் அணைந்து ஒளிரும் போது செல்வமும் மலர்விழியும்)
மலர்விழி:
என்னென்ன நடந்து விட்டன
நம் வாழ்வில்.
நாம் செய்த பாவம்….
இல்லை நான் செய்த பாவம்.
விதி துரத்தியது உங்களை…
செல்வம்:
ஏன் அவ்வாறு எண்ணமிடுகிறாய்
என் இனியவளே
நடப்பது நடந்தே தீரும்.
நடந்தவற்றைக் கெட்ட கனவாய்
நினைத்து மறந்து விடு.
புதிய நாள் புதிய வாழ்வு.
புதிய அத்தியாயம்….
இனி நம் வாழ்வில்…
மலர்விழி:
இவ்வளவு இடிகளைத் தாங்கியும்
நீங்கள் இப்படிப் பேசுவதில்
உங்கள் நெஞ்சுரம் தெரிகிறது.
வளர்ந்த பிறகு
குழந்தை தந்தை
எங்கே என்றால்
என்ன பதிலளிப்பது
என்று கலங்கி வந்தேன் நாளும்.
இறைவன் உங்களை உயிருடன்
திருப்பித் தந்தான்.
செல்வம்:
குழந்தை எங்கே என் கண்ணே
உறங்குகிறானா உள்ளே?
மலர்விழி:
தாய் தந்தை அவனை
அழைத்து வந்து சேர்ந்தனர்.
இங்கே
கலவரம் தொடங்குமுன்
கிளம்பியவர்கள் நலமாய்
இங்கு சேர்ந்ததே நாம் செய்த
நல்வினைப்பயனால்.
உறங்கி விட்டான் உங்கள்
முகம் மறந்து போன பாலகன்.
செல்வம்:
நிலைமை இயல்பாய் உருமாறும்
ஓரிரு நாட்களில்,
சென்று விடலாம் சென்னைக்கு!
மலர்விழி:
பாரி, கபிலன் ஆகியோரின்
மண விழாவுக்கு ஏற்பாடுகள்…
விலகி ஓடலாமா நாம்
அவர்களின் சுபப் பொழுதுகளைப்
பார்க்காமல்?
செல்வம்:
பாரியின் காதலி
நினைத்ததும் தாலி கட்டிக் கொள்ள
சம்மதமில்லை என்று சென்னாளாமே…
மலர்விழி:
பெற்றோரின் முன்னிலையில்
சுபம் நடக்க வேண்டும்
என்று ஒரு பெண்
நினைப்பதில் தவறு என்ன?
திருமகளின் பெற்றோரும்
பாரியின் அம்மாவும்
எப்படியேனும் இங்கு
வர உங்கள் நண்பர்
மாணிக்கம் செய்ய வேண்டும் ஏதேனும்.
இன்ப அதிர்ச்சியாய்ப்
பெற்றோர் வந்தால்,
நீட்டி விடுவாள்
அவள் கழுத்தை.
செல்வம்:
சொல்கிறேன் மாணிக்கத்திடம்.
அவன் எடுத்த செயலை
முடித்துத் திரும்புவான்….
மலர்விழி:
தாடி என்ன செல்லப்பிராணியா?
இப்படி வளர்க்கிறீர்கள்
என்னைப் பார்த்த பின்னராகிலும்
தாடி நீக்கி
முகத்தை அழகு ஆக்கிக்
கொள்ளக் கூடாதா?
செல்வம்:
உத்தரவு – அப்படியே-
கவிதைகள் ஏதேனும் செய்தாயா
சமீபத்தில்?
மலர்விழி:
காதல் பற்றியும் தாம்பத்ய
வாழ்வு குறித்தும்
ஒரு கவிதை இயற்றினேன்.
கேட்கிறீர்களா?
செல்வம்:
காத்திருக்கின்றன என் செவிகள்.
தாம்பத்யம்
கனவுகளோடும்
தங்கைகளோடும்
குதி போட்டு
மகிழ்ச்சி ஜதியுடன்
வளர்ந்த பெரிய வார்ப்படமான
குழந்தை அவள்….
சின்னஞ்சிறு
படிகளில்
சின்னஞ்சிறு
பதவிகளில்
உழைத்துக்
களைத்து
மீண்டும்.
உழைத்து
விழுந்து எழுந்து
முன்னேறிக் கொண்டிருக்கும் அவன்…
இருவருக்கும்
திருமணம்
மங்கல முடிச்சு இட்டது.
குழந்தையாக இருந்த
அவள்-
அவளது
அன்றாட
எரிச்சல்களைத்
துடைத்து
அவனைப் புதிதாக்கும்
தாயானாள்…
ஆம். அவளது
முதல் குழந்தையாக
அவள் அன்பில்
அவன் தினமும் நீந்தினான்
தாம்பத்யத் தொழிற்சாலைகள்
தங்கள் உற்பத்தியைக்
காட்டாமல் இருப்பதில்லை.
அவர்கள் வாழ்விலும்
அவர்களுக்கு
குழந்தைச் செல்வங்கள் கிட்டின.
குழந்தைகளைப் பராமரிப்பதிலும்
அவர்களிடம் அன்பைப்
பொழிவதிலும் இருவரும்
போட்டியிட்டனர்.
அவர்கள் வாழ்வு பற்றிய
கனவுகளை நிர்மாணிப்பதிலும்
இருவரும் போட்டியிட்டனர்.
காலதேவன்
பல ஆண்டுச் சாக்குகளிலிருந்து.
பல மாதத் தாட்களைக்
கொட்டிய வண்ணம் இருந்தான்.
மழலையர் மலர்ந்து
மானிடர் ஆனார்கள்.
அவர்கள் தங்ளைப் பற்றி
தனியாகச் சிந்தித்தார்கள்.
தனியாகத் தேடினார்கள்.
தனித் தனியாய் ஆனார்கள்.
அவர்கள் தங்கள்
பெற்றோரைப் பழைய கால
நண்பராய்க் கட்டாயப்
பாசத்தில் எப்போதேனும்
பார்த்துச் சென்றார்கள்.
அவள்-
இப்போது மீண்டும்
தனது முதல் குழந்தையைக்
கண்டெடுக்கிறாள்…..
நரைத்த அவன் தலையை
காதலுடன் வருடுகிறாள்.
(மலர்விழி கவிதையைப் படித்து முடித்து செல்வத்தின் தலையை வருடுகிறாள் ஸ்பரிசத்தால் அவன் மெய்சிலிர்த்து நிற்கிறான்)
(மீண்டும் விளக்குகள் அணைந்து எரியும் போது மாணிக்கமும் தங்கமும் தோன்றுகிறார்கள்)
தங்கம்:
எங்கே செல்கிறீர்கள்?
வெகு வேகமாய்ச் செல்கிறீர்கள்?
அவசிய காரியமா? அவசர காரியமா?
மாணிக்கம்:
போகும் போது எங்கே என்று
கேட்பது நம் ஊரில் பெருந்தவறு.
அறிந்தவள் இல்லையா நீ?
காரியமாய்ப் போகவில்லை
கல்யாண வேலையாய்ப் போகிறேன்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு
இயல்புக்கு வந்தது அல்லவா?
பாரியின் அன்னையையும்
திருமகளின் பெற்றோரையும்
அழைத்து வரத்தான் செல்கிறேன் நான்.
தங்கம்:
மனைவியிடம் முன்னமே பயணத்
திட்டத்தைச் சொல்லக் கூடாதா?
வழியில் உண்பதற்கு ஏதேனும்
தயாரித்துத் தந்திருப்பேனே.
எத்தனை முறை சொன்னாலும்
என் நினைவு வருவதில்லை உமக்கு.
மாணிக்கம்:
வருந்தாதே என் தங்கம்
உன்னிடம் சொல்லாமல்
செல்வேனா நான்.
சொல்லத்தான் வந்தேன்
உன்னைத் தேடி.
அண்ணியுடன் அளவளாவிக்
கொண்டிருந்தாய் நீ.
தங்கம்:
கொண்டவள் நினைப்பை
மறந்து விட்டு சமாளிப்புகள்
செய்கிறீர்கள்.
பயணம் செல்வதால் ஏதும் பேச மனம்
வராமல் விடை கொடுக்கிறேன்.
ஜாக்கிரதையாய் சென்று
திரும்பி வாருங்கள்.
நீரே வண்டி ஓட்டுவதால்தான்
எனக்குள் கவலை உதிக்கிறது.
போய் வாருங்கள்.
தெய்வம்
உங்களுடன் இருக்கட்டும்.
மாணிக்கம்:
கவலைகளில் தோய்ந்து போகாதே.
நாளையே திரும்பி விடுவேன் இங்கே.
(தங்கம் மாணிக்கத்தின் கரங்களிலிருந்து தன் கரங்களை அரை மனத்துடன் விடுவித்துக் கொண்டு விடை கொடுத்தல்)
(மீண்டும் விளக்குகள் அணைந்து ஒளிரும் போதும் நம்பியும் செல்வியும் தோன்றுகின்றனர்)
செல்வி:
இவனைக் கொஞ்சம்
ஆறுதல்படுத்துங்கள்
ஓயாத அழுகை
உங்கள் இருவருடனும்
நான் எங்கும் வெளியே
செல்ல சிந்திக்கவும் கூடாது.
நம்பி:
தொட்டதற்கெல்லாம் –
முகம் சுருங்கிப் போதல் தகுமா?
குழந்தை அழுதல் இயல்பு
இதை அறிய மாட்டாயா நீ?
செல்வி:
ஏதும் தெரியாமல்தான்
குழந்தையை ஈன்று புறந்தந்து
வளர்த்து வருகிறேன் நான்!
நீர்தான் குழந்தை
பராமரிக்கும் கலையில் வல்லுனர்
ஆயிற்றே.
நீரே கவனித்துக்
கொள்ளும் அவனை!
கண்ணை இமை காப்பது போல்,
நம்பி:
வாதம் புரிதல் வேண்டாம்
குழந்தையை என்னிடம் கொடு
வாடா.
தந்தையிடம் வாடா.
என்ன ஆயிற்று?
அம்மா சினம் கொண்டாளா உன்னிடம்?
குழந்தையின் அழுகை நிற்கிறது)
நம்பி:
அன்பரசனின் இல்லத்தினர்
ஏதேனும் சொன்னார்களா?
திடீர்த் திருமணம் குறித்து
மகிழ்ச்சிதானே
அவர்களுக்கு?
செல்வி:
மகிழ்ச்சிதான் அவர்களுக்கு
நாமா திடீரென்று
திருமணம் செய்யச் சொன்னோம்?
அன்பரசனின் தந்தையின்
உடல்நிலையால் திடீர்த் திருமணம்
வேண்டும் என்றார்கள்.
தங்கையைப் புரிந்து கொண்டு
அவர்கள் அவளை
ஏற்றுக் கொண்டதே என்
மனதில் குளிர்ச்சியைக் கொடுத்தது.
அதுபோதும் எனக்கு.
தங்கையின்
திருமணத்திற்கு ஓடியாடியதில்
என் உடல் என்னும் கட்டை ஓய்ந்து
போயிற்று.
நீங்களோ இன்னொரு
திருமணம் பார்க்க உடனே கிளம்பு
என்று அழைத்துச் செல்கிறீர்கள்.
நம்பி:
என் நீண்ட நாள் நண்பன்
பாரியின் திருமணம்
போகாமல் நான் இருக்கலாமா?
நண்பன் மனம் வாட விடலாமா?
செல்வி:
நண்பர் மனம் வாட வேண்டாம்.
அதற்காக நீர் எம்மைக் குறை சொல்ல
வேண்டாம்.
பேருந்து வந்து விட்டதா? என்று
பார்த்து வாருங்களேன்.
என் தங்கையும் அவளது கணவரும்
வருவார்கள் அல்லவா
இந்தத்
திருமணத்திற்கு?
நம்பி :
திருமணத்திற்குப் பின் அவர்களும்
எங்கும் செல்லவில்லை.
நிச்சயம் வருவார்கள் இந்தத்
திருமணம் காண.
செல்வி:
வசதிகளில் வாழ்ந்த நீங்கள்
என்னைத் திருமணத்தால்
இணைத்துக் கொண்டு
கஷ்டமுறுகிறீர்கள்.
என்னால் சுகம் பெறவில்லை நீர்.
சிடுசிடுக்கிறேன் படபடக்கிறேன்
உம்மை வறுத்தெடுக்கிறேன்.
என் குணச்சித்திரத்தை
என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையே
மன்னியுங்கள் என்னை.
மீண்டும் சாமியாராகி விடத்
தயாராகாதீர்கள்.
நம்பி:
துறவறம் பற்றி நான்
துளியும் எண்ணமாட்டேன்.
நீ என் கண்ணின் மணி.
நீயே என் வாழ்வின் ஒளி
பேருந்து வந்து விட்டது. வா
செல்வோம்.
(திரை)
இருபத்து மூன்றாம் காட்சி
(மேடையில் கட்டியங்காரன் தோன்றுதல் கட்டியங்காரன் வந்து நின்றவுடன் இன்னொரு இளைஞர் மேடைக்குள் நுழைகிறார்)
இளைஞன்:
வணக்கம் வணக்கம்
தாங்கள் எவரோ ஐயா?
கட்டியங்காரன்:
இருமுறை வணக்கம்
சொன்ன இனிய இளைஞனே.
அடியேன் கட்டியங்காரன்
இந்தப் புதுக்கவிதை
நாடகத்தின் கட்டியங்காரன்.
இளைஞன்:
அப்படியா சேதி?
கட்டியங்காரன் என்பவன்
கூத்துகளிலும் நாடகத்திலும்
முதற்காட்சியில் தோன்றிப்
பேசி அறிமுகித்துச் செல்பவன்.
நீர் இவ்வளவு நேரம்
கடந்து வருகிறீர்.
உறங்கி விட்டீரோ வழியில்?
கட்டியங்காரன்:
மாறுதலுக்காகத்தான்
இப்போது வருகிறேன்
உம்மிடம் பேசியது போதும்.
காத்திருக்கும் ஜனங்களிடம்
பேசுகிறேன் சிறிது நேரம்.
அனைவருக்கும் வணக்கம்.
வாழ்க! தமிழ் வாழ்க! நற்றமிழர்!
வாழ்க தமிழ்நாடு! வாழ்க நவபாரதம்!
பரத கண்டத்தின் ஒற்றுமை வெல்க!
மனித குலம் வாழும் பிரதேசம்
யாவும் அமைதியின் கைகளில்
தவழும் குழந்தை போலாகட்டும்.
இளைஞன்:
கட்டியங்காரரே அதெல்லாம்
சரிதான்.
பாத்திரங்கள் இல்லாமல்
நீர் வந்து தோன்ற
என்ன காரணம்?
அதை உரைப்பீர் நேயர்களிடம்.
கட்டியங்காரன்:
புதுக்கவிதை நடையில்
நாடகம் படைக்க நாம் எண்ணினோம்
இதன் குறைகள் ஆக்கியோரையும்
நிறைகள் தமிழ்ப்புதுக்கவிதை
இயக்கத்தையும் சார்தல் வேண்டும்
இளைஞன்:
நாடகத்தின் இறுதியில்
கூறவேண்டிய குறிப்புகள் அல்லவா
இவை?
நாடகம் நிறைவுற்றதா அதைச்
சொல்லுங்கள் ஐயா.
படைப்பாளி பார்ப்போரைக்
குழப்புதல் ஏன் ஐயா?
கட்டியங்காரன்:
இதுதான் இறுதிக்காட்சி
உமது குழப்பங்களுக்கு
எல்லாம் ஓரிரு விநாடிகளில்
விடை கிடைக்கும்.
(கட்டியங்காரன் கையசைக்க மேடையின் விளக்குகள் அணைகின்றன. மீண்டும் விளக்குகள் உயிர் பெற்று ஒளிரும் போது)
(அன்பரசனும் கோதையும் தோன்றுதல்)
அன்பரசன்:
பாரி, கபிலன் இருவரின்
திருமணம் எத்தனை எளிமையாய்
சிக்கனக் கல்யாணமாய்
நடந்து சிறந்தது பார்த்தாயா?
கோதை:
என் தோழி
மலர்விழியின் வாழ்வைச்
சின்னாபின்னமாக்கிய அந்தச்
சின்ன மனிதன் குணாவும்
வந்திருந்தான் திருமணத்திற்கு.
மலர்விழி அவனை
உயிருக்குப் போராடும் தருணத்தில்
காப்பாற்ற ஏற்பாடுகள் செய்திருக்கிறாள்.
குணா மனம் திருந்தியதாய்க்
கேள்வியுற்றேன்.
அவன் புரிந்தவை எல்லாம்
கொடும் பாதகச் செயல்கள் அல்லவா?
மலர்விழி வாழ்வையே
தேனிலவாய்க் கருதி மகிழ்ச்சியில்
ஆழ்ந்து ஊற வேண்டும்
அவன் பட்ட துன்பங்கள்….,
அம்மம்மா…
அன்பரசன்:
நம் தேனிலவு எப்போது?
அதைச் சொன்னால் என்
செவிகள் சந்தோஷத்தில் சிலிர்க்கும்.
கோதை:
திருமணம் புரிந்த நாள் முதல் இன்றுவரை புரட்டி புரட்டி இன்பப் பாடங்கள் படித்து விட்டீர். தேனிலவு என்று தனியாய் வேறு போக வேண்டுமா?
அன்பரசன்:
நம் வீட்டு மொட்டைமாடியில் தான்
நமது தேனிலவு என்கிறாய்.
அதுவும் உகந்த வழிதான்.
செலவு இல்லா சிக்கன வழி.
கோதை:
ஏழுமலை சாமிகள் பூஞ்சோலையில்
அமைந்திருக்கும் ஆசிரமம்
பார்க்க ஆசைகொண்டேன்.
மணப்பெண்கள் கழுத்தைத் தாலி
பற்றிக் கொண்டதும்
இழுந்து வந்து விட்டீர்கள்.
அன்பரசன்:
பிறிதொரு சமயம் நிச்சயம்
செல்வோம் அங்கே.
சாமிகளைத் திருமணத்தின் போது
சந்தித்து ஆசிகள் பெற்றேன்.
பூஞ்சோலை கிராமத்தில் ஏழுமலை
சாமிகளும் பாதிரியாரும்
ரகீம்பாயும் ஒன்றாகவே
காட்சி தருவது மனதிற்குக்
குளுமை தரும் காட்சி.
இந்த நல்லிணக்க அலைகள்
இந்தியப் பூமி எங்கும் பரவி
நின்றால் அமைதிப்
பாரதம் படைக்கலாம்.
கோதை:
சொல்ல மறந்து போனேன்
கபிலனுக்கும் சுடர்விழிக்கும்
வீடுதேடும் பொறுப்பை
ஏற்றிருக்கிறேன் நான்.
அவர்கள் ஊர் திரும்பு முன்னர்
அலைந்து திரிந்து
வீடு தேடி வாருங்கள் என் அன்பரே.
அன்பரசன்:
வங்கி ஊழியனை வீட்டுத்
தரகனாக உருமாறச் சொல்கிறாய்.
மனைவி சொன்னால் தட்ட
முடியுமா?
காதலியை மனைவியாய்
அடைந்தேன்
மனைவியைக் காதலிக்கிறேன்.
முன்பெல்லாம் காதல் வாழ்க
என்று சொல்வாய்.
இப்போது என்ன சொல்வாய்?
கோதை:
ஆணையும் பெண்ணையும்
இணைய வைப்பது இல்லறம் அல்லவா?
இல்லறம் வாழ்க என்று
செப்புவதில் உவப்பு அடைவேன்
அன்பரசன்:
ஒருவனுக்கு ஒருத்தி
என்பதே இல்லறம் என்று
பறை சாற்றுகிறார்களே
ஒருத்தியுடன்….
கோதை:
இருவரும் ஒருவராய்
இணைந்து வாழ்தல் வேண்டும்.
நப்பாசையில் சிக்கித் தவிப்பதால்
திருமண வாழ்வில் சிலர் தடுமாறி
தடம் மாறிப் போகின்றனர்.
எச்சரிக்கையாய் உமக்குச்
சொல்லி வைக்கிறேன்.
அன்பரசன்:
நீ என் இதயத்தில்
வீற்றிருக்கிறாய்
இருப்பினும் அழகான மங்கையரைப்
பார்த்தால்….
முறைக்காதே என் காதலியே….
வேறு எவரையும் நான்….
கோதை:
மனதாலும் நினைக்காதீர்.
கண்ணதாசன் காதலையும்
இல்லறத்தையும் திரைப்பாடல்
ஒன்றில் அழகாய்ப் பதிவு
செய்துள்ளார்…
“நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்”
அன்பரசன்:
கோதை நாயகியே
அருமையான மேற்கோளைக்
கூறினாய் நன்றாக.
இல்லறம் வாழ்க!
நல்லறம் ஓங்குக!
(அன்பரசனும் கோதையும் ஒருவரையொருவர் கைகோர்த்து நிற்றல்)
(ஒளி அணைந்து மீண்டும் தோன்றும் போது கட்டியங்காரன் தோன்றுதல்)
கட்டியங்காரன்:
மனித வாழ்வின் சில
கூறுகளைக் காண்பித்தோம்.
காதலையும் காதலர்களையும்
காண்பித்தோம்.
வன்முறைக்கு விடை கொடுக்க
வேண்டிய தருணம் வந்துவிட்டதைச்
சுட்டிக் காட்டினோம்
இந்தப் பாத்திரங்களின் மூலம்.
அன்பு வாழ்க!
அன்பு வெல்க!
அமைதி ஓங்குக!
விடைபெறுகிறோம். நன்றி.
(நிறைந்தது)