காதல் காவியம்




(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி 6-10 | காட்சி 11-15 | காட்சி 16-20
பதினோராம் காட்சி

(கணிப்பொறிப் பயிலகத்தின் வாயிலில் இரண்டு இளைஞியர் எதிரெதிர் மோதிக் கொள்கின்றனர்.. தலையைத் தேய்த்தபடி முறைத்து இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்தபோது)
அவர்கள் கோதை – திருமகள்
கோதை:
ஏனடி உன் கண்
எதிரில் வரும் ஆளைப்
பார்க்காதா?
காதல் கனவா?
நீண்ட நாள் கழித்துப்
பார்க்கிற உன்னை
விசாரிக்க விடாமல்
தலையில் வலியைத் தந்து
விட்டாய்.
உனக்கு உன் பேச்சைக்
கேட்காத கணவன்
கிடைக்கட்டும் என்று….
திருமகள்:
வேண்டாம் தாயே.
திருப்பாவை பாடியவளின்
பெயருடைய நீ
என்னை சபித்து விட வேண்டாம்.
நெற்றியடி என்று பேசுவது
என்ன என்று புரியாமல் இருந்தேன்
நீ மோதியதால் அறிந்தேன்.
அப்பா வலி வாட்டுகிறது.
நீ காதலிப்பதுதான்
ஊரறிந்த இரகசியம்.
என்னைக் காதல் கனவில்
சுற்றுகிறேன் என்கிறாய்.
நல்ல வேடிக்கைதானம்மா
கோதையம்மா.
கோதை:
போதும் அம்மா
கணிப்பொறியைக்
கருத்தாய்ப் படித்து
அலுவலகத்தில்
பதவி உயர்வுகளையும்
பண உயர்வுகளையும்
பெறுகிற வழியைப் பாரம்மா.
காதல் வலையில்
சிக்கிக் கொள்ளாதே.
அப்புறம் சம்பள உயர்வும்
பதவி உயர்வும்
பகல் கனவுகளாகி விடும்.
திருமகள்:
உன்னிடம் சொல்வதற்கு
என்ன?
எனக்கொரு காதலர்
உண்டு.
கோதை:
ஒருத்திக்கு ஒருவன்
என்பது தான் உலக நடைமுறை.
திருமகள்:
சரி சரி,
வார்த்தைகளால்
மடக்காதே. எனக்குக்
காதலர் உண்டு.
எப்போதேனும் பார்த்துக் கொள்வோம்.
கொஞ்ச நேரம் பேசிக் கொள்வோம்.
ஆ னால், தினந்தோறும்
தொலைபேசியில் ஒரு தடவை
அவசியம் அளவளாவுவோம்!
அவர் குரல்தான் என்னை
வேலைகளில் உற்சாகப்படுத்தும்!
கோதை:
காலத்தின் அருமை தெரிந்த
கண்ணியக் காதலில்
என் தோழி ஈடுபட்டுள்ளாள்
என்பதைக் கேட்க
எனக்குப் பெருமையே.
கடமை கடமை என்று
காலில் சக்கரம் சுட்டியதுபோல்
ஓடிக்கொண்டே இருந்து விடாதீர்கள்.
திருமணத்தில் இணைவதற்குத்தான்
காதல் என்பதை மறந்து விடாதீர்கள்.
என் வாழ்த்துக்கள்.
வகுப்புக்குச் செல் விரைந்து.
திருமகள்:
பிறகு பார்க்கிறேன். நன்றி.
உன் காதல் திருமணமாய்க்
கனிய வாழ்த்துக்கள்.
(திருமகள் உள்ளே செல்ல – வெளியே வந்த கோதை தன்னுடைய மிதிவண்டியைத் தேடிக் கண்களை இங்கும் அங்கும் சுற்ற அனுப்புகிற போது, அன்பரசன் தனது இரண்டு சக்கர வண்டியில் அங்கு வந்து நிற்கிறான்)
அன்பரசன்:
வணக்கம்
என்னுடன் வரலாமே
இரண்டு சக்கர வண்டியில்
இருவர் பயணிக்கலாம்.
கோதை:
காலம் வரும்போது
பயணிக்கலாம்.
என் மிதிவண்டியைத்
தேடித் தேடி ஓய்ந்து போய்விட்டேன்.
அன்பரசன்:
உன்னுடன் பேசிச் சென்ற
அந்த அழகிய நங்கை யாரோ?
கோதை:
அவள் என்ன அத்தனை அழகா?
அவள் என்
தோழி திருமகள்.
அன்பரசன்:
திருமகள் நல்ல பெயர்.
திருமகள் தேடி வந்தாள்
என்று அவளுடைய
காதலன் தினமும்
பாடி அவளை மகிழ்விக்கலாம்.
கோதை:
நான் மிதிவண்டியைக்
காணவில்லை என்கிறேன்.
நீங்கள் அவளைப் பற்றி
அளந்து கொண்டிருக்கிறீர்கள்.
அன்பரசன்:
பேரீச்சம்பழத்துக்கும்
விலைபோக முடியாத
அந்தக் காலத்து
நினைவுச் சின்னத்துக்காக
ஏன் இந்த அழுகை?
கோதை:
கிண்டலைத் தவிர வேறு
என்ன தெரியும் உமக்கு?
(அன்பரசனின் தந்தை கோபாவேசமாக வருதல்)
முத்தரசன்:
முழுதாகப் பத்தாயிரம்
ரூபாயும் பார்க்காத
குடும்பத்தில் உதித்த உனக்கு
வங்கி ஊழியம் புரியும்
வாலிபன் தேவையா?
என் சொத்துக் கணக்கை
அறிந்து என் சொந்த மகனைச்
சொந்தமாக்கிக் கொள்ளத்
துடிக்கிறாயா?
கல்லூரிப் பெண்
சுற்றி வரும் வேலையில்லாப்
பையன்களை
விட்டு விட்டு
என் மகனுக்குக்
காதல் வலை
விரித்ததேன்?
கோதை:
பெரியவர் என்பதால்
பொறுமை காக்கிறேன்.
உம் மகன்தான் என்னைத்
தொடர்ந்து வந்து
காதல் வலை விரித்தாரேயன்றி
நான் அவருக்கு விரிக்கவில்லை.
எதுவாகிலும் வீட்டில்
பேசுவது தானே முறை?
(மிதிவண்டியுடன் நம்பி வருதல். நம்பி – கோதையின் தமக்கையைக் கரம் பற்றியவர்)
நம்பி:
கோதை மிதி வண்டியைப் பூட்டும்
எண்ணம் கூட இல்லாமல்
அப்படி என்ன சிந்தனையில்
ஊறித் திளைக்கிறாய்?
நான் எடுத்துச் சென்று
காற்று நிரப்பி வந்தேன்.
எவருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் நீ?
கோதை:
இவர்தான் பாரி…
நான்..
நம்பி:
புரிகிறது
நீ காதலிக்கும் நபர்.
உன்னைக் காதலிக்கும் நம்மவர்
இவர் யார்?
கோதை:
அவருடைய தந்தையார்
தெருவில் நின்று
என் மீது குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்கிறார்.
அடியேனால்தான் இவருடைய
அருமைப் புதல்வர் காதலிக்கத்
தொடங்கினாராம்.
முத்தரசன்:
தெரு நாய்களைப் போல்
தெருவில் காதலிக்க
ஆரம்பித்தவள் தானே
உன்னைத் தெருவில்
வைத்துத்தான்
மானம் போகக் கேள்வி
கேட்க வேண்டும்.
ஆனால், மானம் என்று
உனக்கு உண்டா என்ன?
நம்பி:
ஐயா வாழ வேண்டியவர்களை
வாழ்ந்து முடித்தவர்
வாய்க்கு வந்தபடி
வசவுரை செய்வது
நியாயம்தானா?
நீதிதேவன் உம்மை மன்னிப்பானா?
முத்தரசன்:
நீ என்னடா நியாயம் பேசுவது?
பணக்காரப் பெற்றோரைத்
தவிக்க விட்டு
இவளுடைய அக்காவின்
பின்னால் ஓடிப்போனவன் தானடா நீ.
உனக்கு என்னடா தெரியும்
பெற்றவன் படும் பாடு?
பணத்துக்காக,
சொத்துக்காக
தெருவில் போகிறவனைத்
துப்பட்டாவில் சுற்றிக் கொள்ள
நினைக்கும் பெண்களின்
ஜம்பம் என்னிடம் பலிக்காது.
கோதை:
சின்னத்தனமான சிந்தனை
உடைய பெரியவரே.
உம் சொத்து மதிப்பும்
பண ரொக்கமும் தெரியாமல்தான்
இவரைக் காதலித்தேன்.
நீர் பேசக் கூடாத வாத்தைகளை
எல்லாம் பேசி விட்டதால்
தெரு முனையில்-என் காதலின்
மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
நீர் ஆயிரம் தடை விதித்தாலும்
உம் புதல்வரையே ஊரறிய மணப்பேன்.
இந்தத் துப்பட்டாப் பெண்ணின்
துணிச்சலான சபதம் இது.
துளியும் பின் வாங்குதல் இனி இல்லை.
முத்தரசன்:
அதையும் பார்த்து விடுவோம்
குலம் சாதி பாராமல் எவர்
வேண்டுமானாலும் கொத்திச் செல்ல
பிள்ளை பெறவில்லை நான்.
அன்பரசன்:
அப்பா அவளுடன் ஏன்
இந்த விபரீதச் சண்டை?
காதல் குற்றம் புரிந்தவன் நான்தானே?
முத்தரசன்:
நீ வீட்டிற்கு வாடா
உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.
(முத்தரசன் செல்லுதல்)
அன்பரசன்:
கோதை கோதை
கோதை:
வாருங்கள் நீங்கள் என்னைத் தேடி
வரும் நேரம் வரும்.
அப்போது பார்த்துக் கொள்கிறேன்.
(கோதை மிதிவண்டியில் செல்லுதல்)
அன்பரசன்:
நம்பியண்ணே எனக்கு ஒரு
சந்தேகம்
நம்பி:
இருவரும் உம்மைப் பார்த்துக்
கொள்வதாக் கூறுவதன்
பொருள் அறிய ஆவலா?
அன்பரசன்:
எப்படி என் மனதைப்
படித்துவிட்டீர்கள் சரியாக?
நம்பி:
உம்மைப் பார்த்தாலே புரிகிறதே
சும்மாவா சொன்னார்கள் தமிழர்கள்
அகத்தின் அழகு முகத்தில் என்று
இதுவரை உம்முடைய தந்தையும்
என் மைத்துனியும் உம்மைப் பார்த்து
இருந்தபோதிலும் இனி பார்ப்பது
வித்தியாச மாகிவிடும் பாரும்.
அன்பரசன்:
அது தான் அவர்களே
சொல்லிவிட்டார்களே!
அனுபவத்தில் தோய்ந்தவர்
ஆலோசனையாய் ஏதேனும்
சொல்வீர் என்று பார்த்தால்….
சரி சரி வருவதை
எதிர்கொள்கிறேன்!
நம்பி:
இது தான் ஆடவனின்
அழகு.
நல்வாழ்த்துக்கள்.
(கைகுலுக்கி விடைபெறுதல்)
(திரை)
பன்னிரண்டாம் காட்சி
(பாரியின் தங்கை சுடர்விழியின் அலுவலகம். மாலைநேரம். அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல இருந்த சுடர்விழியைச் சந்திக்கிறாள் திருமகள்)
திருமகள்:
நலமா சுடர்விழி?
இரண்டு நாளாய் என்னுடன் உமது
அண்ணன்
தொலைபேசியில் பேசவில்லை.
அவர் குரல் கேட்காமல்
அலுவல் ஒன்றும் ஓடவில்லை எனக்கு.
உன் தொலைபேசி எண்ணையும்
மாற்றி மாற்றிச் சுழற்றி
என் வீரல்கள் ஓய்ந்து விட்டன.
சுடர்விழி:
அண்ணன் அவசரமாய்
அலுவலக வேலையாய்
வெளியூர் பயணித்துள்ளார்.
உன்னிடம் தெரிவிக்கச்
சொன்னதை மறந்து போனேன்
அடியேன்.
என்னை மன்னித்துவிடு
மங்கையர் திலகமே.
திருமகள்:
செய்வதைச் செய்துவிட்டு
கிண்டல் ஒரு கேடா உனக்கு?
சரி அண்ணன் நலம் தானே?
சுடர்விழி:
ஆமாம்
அண்ணனைப் பற்றி மட்டுமே
கேள்.
வருங்கால தாத்தியான
என் நலம் வினவக் கூடாதா?
திருமகள்:
உனக்கு என்ன
துடைத்து வைத்த குத்து விளக்குபோல்
ஜொலிக்கிறாய்.
பெயருக்கு ஏற்றாற்போல்
எப்போதும் இப்படியே பளிச்சிட
என் வாழ்த்துக்கள்!
சுடர்விழி:
பெண் ஜென்மங்களுக்கும்
மகிழ்ச்சிக்கும் நல்ல பொருத்தம்.
இதை அறிந்தும் என்னை
ஆசீர்வதிக்கிறாய் நீ.
அதை விடு.
தொலைபேசிக் காதலுக்கு
திருமணமுடிச்சுப் போடும்
எண்ணமே உங்கள் இருவருக்கும்
இல்லைபோலும்.
திருமகள்:
எதுவும் இப்போது சொல்வதற்கில்லை.
மிகவும் எளிய சிக்கனக்
கல்யாணத்திற்கு
அவர் தயாராகத்தான்
உள்ளார்
நான்தான் சற்றேனும் நிறைவாய்த்
திருமணம் நடத்த போதிய..
சுடர்விழி:
போதிய பணம் சேர
ஓடி ஓடி உழைக்கிறாய், சேமிக்கிறாய்
பெற்றோரால் ஏதும் முடியாததால்.
உழைப்பதும் சேமிப்பதும்
நல்ல செயல்களே.
அதன் நடுவே வாழ்க்கை
என்ற ஒன்றை நினைத்துப் பார்.
என் தாய் சொல்லி விட்டாள்-
உங்கள் நீண்ட நாள் காதல்
சுபமாய் முடிந்தபின்தான்
என் திருமணம் நடக்கும் என்று.
திருமகள்:
நீ யாரையேனும்
காதலிக்கிறாயா?
அல்லது
பெரியவர்கள் காட்டும்
மாப்பிள்ளைக்கே கழுத்தை
நீட்டி நிற்பாயா?
சுடர்விழி:
எப்படி ஆனாலும் கழுத்தை
நீட்டித்தானே தீர வேண்டும்?
இதில் என்ன பாகுபாடு
தெரிந்த முகம் தெரியாத முகம் என்று?
உன் திருமணத்திற்குப் பின்னரே
என் திருமணம் என்பதால்
கல்யாணக்கவலை தற்சமயம் இல்லை
அப்படி முடிவு எடுத்த அன்னைக்கு
மானசீகமாய் நன்றி சொல்லி நிற்கிறேன்.
திருமகள்:
நான் கேட்ட கேள்விக்கு
விடை சொல்லவில்லையே?
சுடர்விழி:
என் வாயிலிருந்து
பீடுங்காமல் விடுவதில்லை
என்று நிச்சயித்து விட்டாயா?
ஏழுமலை சாமிகளின் சிஷ்யகோடிகளில்
ஒருவர் என் அண்ணன் உன் அன்பன்
இன்னொருவர்தான் என் காதலர்
ஆனால்,
ஒரு தலையாகவே நிற்கிறது;
என் காதல்
திருமகள்:
புதிராகச் சொல்கிறாயே!
சுடர்விழியே.
சுடர்விழி:
சரி சரி வா
நாம் இருப்பதை அறியாது
அலுவலகத்தைப் பூட்டிச் சென்று
விடுவார்கள்.
இரவிலும் அலுவலகத்தில்
தூங்க என்னால் முடியாது
வா போவாம்.
(திரை)
பதிமூன்றாம் காட்சி
(மாணிக்கம், செல்லம்மா, தமிழாசிரியர் மணி, ஆகியோர் மருத்துவமனையில்)
செல்லம்மா:
என்ன தம்பி
அப்படி என்னதான்
பேசினீர்கள் அந்தக்
கிராமத்தில்?
நையப்புடைத்து இன்பம்
அடைந்திருக்கிறார்கள்.
மாணிக்கம்
எனக்கு வலி உங்களுக்கு
நகைச்சுவையா?
ரசீம்பாயின் தொண்டு நிறுவனம்
சார்பில் கிழக்குப்பட்டி கிராமத்தில்
எய்ட்ஸ் என்னும் கொடிய நோயின்
இயல்பை ஏதும் அறியா மக்களுக்குச்
சொல்லப் போனோம்.
அங்கிருந்த ஒரு
கும்பல்
எங்கள் வாகனத்தை
அடித்து நொறுக்கி
எங்களையும் வன்முறையால்
பதம் பார்த்து விட்டார்கள்!
மணி:
செல்லம்மா சிகிச்சைகள் செய்யேன்.
பேசமுடியாதவனிடம் இப்போதே
பேசித் தீர்க்க வேண்டுமா?
அடி வாங்கிய வரலாற்றை அப்புறம்
அறிந்து கொள்ளலாகாதா?
செல்லம்மா:
அப்பப்பா!
தம்பியிடம் இவ்வளவு
பரிவா?
அதிசயச் சகோதரர்கள்தாம்
ஆண்டுக்கணக்கில் ஒருவரை
ஒருவர் பார்ப்பதும் இல்லை.
கடிதம் எழுதிக் கொள்வதும் இல்லை.
நேரில் பார்த்துவிட்டாலோ
பாச வெள்ளம்! அப்பப்பா!
அதிசயச் சகோதரர்கள்தாம்.
சரி, சரி என்னை முறைப்பால்
எரித்து விடாதீர்கள்.
இப்படி இங்கே படுத்துக் கொள்ளுங்கள்
தம்பி.
செவிலியின் எதிரில் சட்டையைக்
கழற்றலாம்.
(மாணிக்கத்திற்கு செல்லம்மா சிகிச்சைகள் செய்தல்).
(மருத்துவர் வருதல்)
(மாணிக்கத்தைப் பரிசோதித்தல்)
மருத்துவர்:
செல்லம்மா செய்த சிகிச்சைகள் போதும்
எழுதியுள்ள மாத்திரைகளைக்
கொடுத்து வாருங்கள்
அச்சமில்லை.
விரைவில் குணமாவார்.
{மாணிக்கமும் மணியும் விடைபெற்றுச் செல்லுதல்)
(காட்சி மாறுதல்)
(மணியின் வீடு, ஏழுமலை சாமிகள் காத்திருக்கிறார். மாணிக்கமும் மணியும் வருதல். மாணிக்கத்தின் மனைவி தங்கம் மாணிக்கத்தைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லுதல்)
மணி:
வாருங்கள் சாமி
எப்போது வந்தீர்கள்?
உங்களைப் பார்த்ததுமே
என் குழப்பங்கள் நீங்கி
தெளிவை நோக்கிப் போகிறேன்.
ஏழுமலை சாமிகள்:
மாணிக்கத்திற்கு ஒன்றும்
ஆபத்து இல்லையே மணி? இறைவன் அவனுக்கு
அருள்பாளிக்க வேண்டுகிறேன் நான்.
மணி:
வேலைக்குப் போக வேண்டாம்
என்றுதான் நானும் சொல்லிவருகிறேன்
நிதம்
அவன் எங்கே கேட்டான்?
இவன் இப்படி….
இன்னொருவன்
சென்னையில் இருக்கிறான்.
ஊரார் ஏதோ சொன்னதால்
அண்ணனுக்குப் பாரமாக மாட்டேன்
என்று ஊரை விட்டுப் போனவன்
இன்றுவரை என்னைப் பார்க்க
வந்ததில்லை.
நல்ல வேலையில் நலமாய் உள்ளான்
என்று செவிகளில் செய்தி விழுந்தது.
அதுபோதும் எனக்கு.
மணமாகாமல் இவர்கள் இருவருக்கும்
தந்தையானவன் நான்..
ஒருவன் இந்த மாணிக்கம்
இன்னொருவன் கபிலன்
ஏழுமலை சாமிகள்:
உனது தம்பி தானா கபிலன்?
கபிலன் சென்னையில்
நலமாகத்தான் இருக்கிறான்
எதிர் நீச்சலில் வெற்றிகளைக்
கண்ட எனது சீடர்களில்
ஒருவன்தான் கபிலன்
மணி:
சாமிகளிடம் ஒரு முக்கிய
விஷயம் பேசிட மனது துடிக்கிறது.
என்னைத் திருமணம் கொள்ள
இந்த ஊரின் செவிலி
காத்திருக்கிறாள்.
தம்பிகளோ ஒருவன்
நிலைமை இப்படி.
இன்னொருவனோ
அங்கே.
அடியேன் என்ன செய்யலாம்
தாங்கள்தான் அருள் கூர்ந்து
ஆலோசனை கூற வேண்டும்.
ஏழுமலை சாமிகள்:
துறவறத்தில் வாழ்பவனிடம்
இல்லறம் பற்றிக் கேட்கிறாய்.
இருந்தாலும் சொல்கிறேன்.
இனிமேலும் காலதாமதம் வேண்டாம்.
நல்ல நாளில் அவள் கரம் பற்று.
இந்தக் கிராமத்தில் என்னை
அறிந்தவர்களைப் பார்த்துவிட்டு
பூஞ்சோலைக் கடவுளையும்
தரிசித்து வருகிறேன்.
மணி:
என் குடிலுக்குத் தாங்கள்
வந்தது என் மனதை நிறைக்கிறது
சாமி. நான் உடன் வரவேண்டுமா?
ஏழுமலை சாமிகள்:
இதுகாறும் தனியாகத்தான்
போகிறேன் வருகிறேன்.
இறைவன்தான் துணை எனக்கு.
(ஏழுமலை சாமிகள் செல்லுதல்)
(ரகீம் பாய் வருதல்)
மணி:
வணக்கம் ஐயா வாருங்கள்.
ரகீம்:
வணக்கம் மணி
தம்பி நலமாய் உள்ளானா?
அபாயம் ஏதும் இல்லையே?
மணி:
இல்லை பாய் ஐயா
அபாயமும் ஆபத்தும் ஏதும் இல்லை.
கடவுள் அருளோ
அவன் மனைவியின் தாலி பாக்கியமோ
ஏதோ நின்று அவன்
உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.
உங்கள் வாகனமும் வெகுவாகச்
சேதமுற்றிருக்கிறது என்று
கேள்வியுற்றேன்.
ரகீம்:
வாகனத்தை விடுங்கள்
மாணிக்கம் போன்ற மனிதர்
அல்லவா எனக்கு
நிஜமாகவே மாணிக்கம்.
முதியோர் இல்லத்தையும் தொண்டு
நிறுவனத்தையும் நிர்வாகம்
செய்ய அவன் வந்த
சிறிது நாளிலேயே இப்படி
ஆனதில் எனக்கு தாங்க முடியாத
வருத்தம்.
மணி:
நீங்கள் கவலையுறாதீர்கள்.
வியாபாரத்திலும்,
மக்கள் தொண்டிலும்
உங்களையே
கொழுகொம்பாய்க் கொண்டு
படர்ந்து நிற்போர்
பலர்.
அனுபவத்தால் பதப்படுத்தப்பட்ட
நீங்கள்
வருத்தத்தில் விழாதீர்கள்.
ஒரு வாரத்தில் தம்பி
பணிக்குத் திரும்பி விடுவான்.
ரகீம்:
உடல் இயல்புக்குத் திரும்பிய பிறகே
அவன் வரட்டும் மணி.
நான் உள்ளே சென்று
அவனைப் பார்த்து வரலாமா?
மணி:
தாராளமாக ஐயா
(ரகீம் உள்ளே செல்லுதல் )
(செல்லம்மா வருதல்)
மணி:
வா செல்லம்மா
கோபம் ஏதும் இல்லையே
என் மீது.
செல்லம்மா:
சினம் கொள்ள உரிமையை
நீங்கள் முற்றிலுமாக
எங்கே கொடுத்தீர்?
மாணிக்கம் எப்படி உள்ளார்?
மாத்திரை உண்ட பின்னர்
உறங்கினாரா?
மணி:
உறங்கி இப்போது தான் எழுந்தான்
ரகீம்பாய் பார்க்கச் சென்றிருக்கிறார்.
உன் முகத்தில் ஏன்
கலக்க ரேகைகள்?
கவலையுறாதே.
சென்ற மாதம் நான்
சந்தித்த மகான் ஏழுமலை சாமிகள்
இங்கே எழுந்தருளியுள்ளார்.
அவரது ஆசியுடன் விரைவில்
உன்னை மணம் முடிக்கிறேன்.
செல்லம்மா:
திருமணம் என்றதும்
வெட்கத்தால் சிவக்கிற வயது
எனக்கு இல்லை என்றாலும்
வாழ்க்கைத் துணை கிடைக்கிறது
என்கிற எண்ணம்
நிம்மதி பெருமூச்சைத்
தருகிறது.
(திரை)
பதினான்காம் காட்சி
(பாரியும் கபிலனும் – பூங்கா ஒன்றில் மாலை நேரம்)
பாரி:
ஏனடா அவசரமாய் இங்கு
வரச் சொன்னாய்?
அலுவலகத்தில் நேரங்கள்
கடந்தாலும் ஓயாத வேலைகள்.
உனக்காகத்தான் அனைத்தையும்
அந்தரத்தில் விட்டு வந்தேன்.
கபிலன்:
ஹெர்குலிஸ் பூமியைத்
தாங்குவது போல் நீதான்
உன் அலுவலகத்தைத் தாங்குகிறாயா?
உன்னைப் போல் சிலர்
அளவுக்கு மீறி உழைப்பதால்
பல தொழிற் களங்களிலும்
அலுவலகங்களிலும் மிதமாய்
வேலை செய்வோர் நமது
நாட்டில் பல்கி விட்டனர்.
பாரி:
வேறு எதுவும் விவாதிக்காதே.
என் மூளை உழைத்துக்
களைத்து ஓய்ந்து விட்டது.
செய்திகளைச் சொல்.
கபிலன்:
மலர்விழியைத் துரத்தும்
அந்தத் தீயசக்தி குணா
தந்தையின் வியாபாரத்தின்
நிர்வாக இயக்குநர் ஆகி விட்டானாம்.
மலர்விழி இருக்கும் பகுதியில்
பெரும் வாகனத்தைக் கொண்டு
இரண்டு முறை அலைந்தானாம்
அந்த நிறுவனத்தின்
ஓட்டுநர் சொன்ன செய்தி இது.
அந்த வக்கிரமிருகம்
வெறியில் எதுவேண்டுமானாலும்
செய்யும்.
எனக்கு ஒரு யோசனை
உதித்தது. அதைச் சொல்லவே
உன்னை விரைந்து வரச் சொன்னேன்
பாரி:
தவறு ஏதும் இல்லை அன்பனே.
என்ன திட்டம் சொல்லப்பா.
கபிலன்:
சில நாள் மலர்விழியின்
கல்லூரிக்கு விடுமுறையன்றோ?
அவளையும் குழந்தையையும்
என் சொந்த ஊரான
பூஞ்சோலை கிராமத்தில்
தங்கச் செய்யலாம்.
அடியேனும் நீண்ட விடுமுறை
எடுத்து கிராம வாசனையில்
திளைக்க எண்ணியுள்ளேன்.
பாரி:
எனக்கு இதில் மறுப்பேதும்
இல்லை. அவளிடம் கேட்டுப்
பார்க்கிறேன்.
என்னால்
உடன் வர இயலாது.
அலுவலக
வேலை என்னைப் பிடித்துக் கொண்ட…
கபிலன்:
உன்னைப் பிடித்துக் கொண்ட
அட்டையடா.
உன்னை முழுக்க உறிஞ்சுமுன்
உன் வாழ்க்கையைக்
காப்பாற்றிக் கொள்
சரி மலரிடம் பேசிச் சொல்,
பாரி:
நிரந்தரமாய் அவளைக்
காப்பாற்ற வழி ஏதும் உண்டா,
சிந்தித்துப் பாரடா.
பூஞ்சோலையிலும் அந்த
அரக்கன் வந்து சேருவானடா
கபிலன்:
தற்காலிக ஏற்பாடாக இதைக்
கொள்வோம் தோழா.
பாரி:
சரி வேறு என்ன செய்திகள்?
கபிலன்:
வேறு என்ன? திருமகள்
உன்னைக் காணாமல்…
மன்னிக்க
உன்னிடம் தொலைபேசியில்
பேசாமல்
மெலிந்து
உணவு
உண்ணாமல் ஏங்கி
வாடி…
பாரி:
வதங்கிப் போய் விட்டாள்
என்றெல்லாம் அளக்க வேண்டாம்.
ஊரிலிருந்து வந்ததுமே
அவளிடம் தொலைபேசித்து விட்டேன்.
வேறு என்ன?
கபிலன்:
அன்பரசன் தந்தைக்கும்
காதலிக்கும் இடையே
அலைபாய்ந்து தவிக்கிறானாம்.
பாவம் காதலைப் போல்
கொடிய நோய் வேறு எதுவும் இல்லை.
பாரி:
அதுவும் நான் அறிவேன்.
நம்பி என்னிடம் தொலைபேசியில்
தெரிவித்து வருந்தினார்.
நான் என்ன செய்வேன்?
அன்பரசன் தான் காதலைக்
கைவிட வேண்டும் அல்லது காதலியைக்
கைப்பிடிக்க வேண்டும்.
சரி வேறு என்ன?
கபிலன்:
நீதான் செய்தி நிறுவனம் போல்
எல்லாம் தெரிந்து வைத்துள்ளாயே.
பாரி:
உன் தரப்பு விடயங்களை
ஏனடா மறைத்தாய்?
கபிலன்:
என் தரப்பில் என்ன?
இன்னமும் காதலி
கிடைக்கவில்லையடா நம்பு.
பாரி:
மாங்காய் மடையா.
உன் அண்ணனுக்குத் திருமணம்
கிராமத்தில்.
அதற்காகத்தான்
கிராமத்தை நோக்கி ஓடுகிறாய்.
அதை ஏனடா மறைத்தாய்?
கபிலன்:
நீ எல்லாச் செய்திகளையும்
தெரிந்து வைத்திருக்கும்
தகவல் களஞ்சியம்.
உன்னைப் போற்றுகிறேன்.
வாழ்த்துகிறேன்.
உடனே பற்றிக் கொள்ளும்
கற்பூரத்திற்கு நிகர் நண்பா நீ.
உனக்கு இணை இம்மாநிலத்தில்
வேறு எவர் உள்ளார்?
பாரி:
வஞ்சப்புகழ்ச்சியால்
என்னை வீழ்த்தத் திட்டமா?
இப்போதும் விசேடத்தைச்
சொல்ல உன் நாவு
தயங்குகிறதே!
நான் நண்பன்தானா இல்லையா?
கபிலன்:
ஆ! உணர்ச்சியால் என்னை
வீழ்த்தி விட்டாய்.
நெடுங்காலம் திருமணமே
வேண்டாம் என்று
விரதம் பூண்டிருந்த
என் அண்ணன்
திருமணத்தில்
சங்கமம் ஆக உள்ளார்.
தவறு ஒன்றும் புரியாமல்
மனிதன் ஜீவித்து விடமாட்டானே.
அழைப்பிதழ் வந்ததும் தருகிறேன்
அலுவல் என்று இங்கேயே
இருந்து விடாதே.
(திருமகளும் சுடர்விழியும் உலவுகிறார்கள். இவர்களைக் கண்டு இவர்கள் அருகே வருகிறார்கள்)
சுடர்விழி:
உன் காதலரைப் பார்க்கவே இல்லை
என்று கண்கள் பூத்தாயே.
இதோ எங்கள் அண்ணன்
பார்த்துக் கொள்.
விழிகளால் அள்ளி
மனதில் வரைந்து கொள்.
தொலைபேசியிலேயே காதல்
வளர்க்கிறீர்கள்
முகம் மறந்து போய்விடக்
கூடாதல்லவா?
திருமகள்:
போதும்.
சுடர், கேலிப்பேச்சால்
என்னைச்
சோதித்தது போதும்
(பாரியிடம்)
என்ன இப்படி இளைத்துப் பாதி
உடலாய் ஆகி விட்டீர்கள்!
கபிலன்:
பாதி உடலைத் தனியாக
வைத்துள்ளார் பத்திரமாய்.
அந்த உடல் மூலம்
அதற்குத் தனியாய் வேறொரு காதலி.
அந்தக் காலத்துச்
சித்து விளையாட்டுகள்
அறிந்தவர் உங்கள் நாயகர்.
பாரி:
சும்மா இரடா
அவள் நிஜமெனநம்பி விடுவாள்!
அப்பாவி என்பதற்கு
அகராதியைப் பார்த்தால்
திருமகள் என்றுதானிருக்கும்
சுடர்விழி:
இப்போதே உருகுகிறார்
பாருங்கள் காதலிக்காக.
திருமணத்திற்குப் பின்
எங்கள் நினைவு
எங்கள் அண்ணனுக்கு
இருக்காது என்று கருதுகிறேன்.
கபிலன்:
கண்டிப்பாய் நினைவு வரும்
அவருக்குக் குழந்தை
பிறந்ததும் தாலாட்டுப் படிக்க
உங்களை அழைப்பார்.
நீங்கள்தானே பாட வேண்டும்
அத்தைமடி மெத்தையடி என்று?
சுடர்விழி:
என்னைப் போன்றவர்கள்
குழந்தைகளுக்குத் தாலாட்டுப்
பாட ஆரம்பித்தால்
இசையின் மகிமையை இந்த
உலகம் மறந்து போகும்.
அண்ணனும் அவளும்
பேசி மகிழட்டும்.
நீண்ட நாள் கழித்து
சந்திப்பால்
இணைகிறார்கள் அண்ணனும் அவளும்.
கபிலன்:
அவர்களை இணைத்து
நாம் விலக வேண்டாமா?
இங்கிதம் என்பது
தெரியவே
தெரியாதா என்று
எண்ணம் கொள்கிறீர்கள் அல்லவா?
சுடர்விழி:
அப்பா இப்பொழுதாவது
புரிந்ததே என்று…
கபிலன்:
நீங்கள் நிம்மதி கொள்கிறீர்கள்
சரி வாருங்கள்
உங்களுக்குத் துணை நான்
சுடர்விழி:
என்ன?
கபிலன்:
பேருந்து நிறுத்தம் வரை
உங்களுக்குப் பேச்சுத் துணை நான்
என்று சொன்னேன் அம்மா.
வருகிறேன் பாரி
சுடர்விழி:
விடைபெறுகிறேன் திருமகளே.
பாரி அண்ணா.
(இருவரும் செல்லுதல்)
(பாரியும் திருமகளும் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கியபடி இருத்தல்)
(திரை)
(பதினைந்தாம் காட்சி
(பூஞ்சோலை கிராமம். மருத்துவமனை வாசலில் செல்லம்மாவும் தமிழாசிரியர் மணியும் )
மணி:
குழந்தை உறக்கத்தில்
ஆழ்ந்து விட்டானே.
காய்ச்சல் இல்லையே இப்போது?
குழந்தையை என்னிடம் கொடு
நான் சொல்கிறேன்..
செல்லம்மா:
குழந்தை கொஞ்சநேரம்
இங்கேயேதான் உறங்கட்டுமே.
எனக்கும் இங்கே
வேலையின்றித் தானே இருக்கிறேன்.
உங்கள் நேரத்தைச் சிறிது
இங்குதான் செலவழியுங்களேன்.
எதுவும் புரியாது உங்களுக்கு எளிதாக!
மணி:
குழந்தையை அங்கே கிடத்து.
இங்கேயே நிற்கிறேன்
உன் கட்டளைப்படி.
செல்லம்மா:
நீங்கள் நின்றால்
என் கால் வலி கண்டுவிடும்.
இங்கே அமகுங்கள்.
மணி:
என் தம்பியின் மனைவி
ஏதேனும் சொன்னாளா?
நேற்று வெகு நேரம்
பேச்சே மூச்சாக
இருந்தீர்கள்.
செல்லம்மா:
பெண்பிறவிகள் பேச்சைத்
தவிர வேறு என்னதான் கண்டோம்?
மணமுடிக்காததால் என்
வாழ்வில் போராட்டம்..
மணம் முடித்த அவளுக்கும்
வாழ்வில் போராட்டம்….
மணி:
உங்கள் போராட்ட வரலாற்றைப் பற்றி
நான் வினவவில்லை.
என் தம்பிக்கு என்னதான்
ஆயிற்றாம்?
செல்லம்மா:
அது பற்றி அவள் ஏதும்
அறிய முடிந்ததா?
செல்லம்மா அது பற்றி அவர் ஏதும்
அறிந்திருக்கவில்லை.
சில நாளாய்ப் பித்துப்
பிடித்தவர்போல் இருந்தாராம்.
ஒரு காலைப் பொழுதில்
சென்னையை விட்டு
இங்கு வந்தார்களாம்
தம்பதிகளாய்.
மணி:
புதிதாய் ஏதும்
தகவல் கூறுவாய்
என்பதே என் எதிர்பார்ப்பு!
செல்லம்மா:
அவளேதும் சொல்லாமல்
நானே கற்பனையாய்
ஏதும் முடியுமா?
வீணாய்க் கவலையுறாதீர்கள்.
அவரே பீரச்சினையை
உங்களிடம் சொன்னதும்
தீர்வுக்காய்ச்
சிந்தியுங்கள்.
மணி:
நம் திருமண அழைப்பிதழ்கள்
இரண்டொரு நாளில்
நம் கைக்குச் சேர்ந்து விடும்.
நீயும் உன் நண்பர்களுக்கு
அழைப்பிதழ்கள் கொடுத்து
அழைத்து விடு.
செல்லம்மா:
பூஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும்
ஈஸ்வரனும் அம்பிகையும் பூவராகப்
பெருமாளும் பூவனம் மாரியம்மாவும்
தாம்
என் நண்பர்கள்
அவர்களை அழைக்க
அழைப்பிதழ் எதற்கு?
(குழந்தை விழித்து அழுதல்)
செல்லம்மா:
உங்கள் தம்பியின் திருமகன்
விழித்து விட்டான்.
இந்தாருங்கள்
உங்களிடம் சேர்ந்ததும்
அழுகை இருந்த இடம் தெரியவில்லை.
சின்ன உயிருக்கும் உறவுகள்
புரிகிறது பாருங்கள்.
மணி:
சரி
நான் இல்லம் விரைகிறேன்.
தாயிடம் சேயைச் சேர்க்க
வேண்டும்
நாளை சந்திப்போம்.
(பெட்டியுடன் கபிலன் செல்லுதல். மணியைக் கண்டதும் அங்கேயே நிற்கிறான்)
கபிலன்:
அன்பார்ந்த அண்ணன்
அவர்களே!
அடியேன்தான்
உங்கள் அன்புத்தம்பி கபிலன்.
நலம்தானா நீங்கள்?
மணி:
வாடா என் இனிய இளவலே
நலம்தானா நீ?
அண்ணனிடம் தம்பி சுய அறிமுகம்
செய்துகொள்ளும் நிலையை
என்ன சொல்வது?
வீதிவசம் என்றுதான் சொல்ல
வேண்டும்.
செல்லம்மா:
உணர்ச்சிகளில் வசப்பட்டு
விடாதீர்கள்.
பயணக் களைப்பில் இருக்கும்.
இளவலை இல்லத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள்.
கபிலன்:
நீங்கள் கரம்பற்றப்
போகும் செவிலியம்மா
இவர்தானா?
வணக்கம் அண்ணி.
(மணியை நோக்கி)
உடல் நிலை சரியில்லாமல்
போனால்
இவரே உங்களைச்
சரி செய்து விடுவார்
(குழந்தையைப் பார்த்து)
அண்ணா இது என்ன
திருமணத்திற்கு முன் குழந்தை!
குழந்தை பெற்றபின்
மணம் முடித்துக் கொள்கிறீர்களா?
வித்தியாசமான திருமணம்.
மணி:
சீச்சி விடயம் புரியாமல்
உளறாதே.
இது நம்
குழந்தைதான்.
நம் சகோதரன் மாணிக்கத்தின்
செல்வன்.
பெரியப்பாவின் திருமணம்
காணப்போகிற குழந்தை இவன்,
செல்லம்மா:
ஆசிரியர் அவர்களே…
கபிலன்:
உணர்ச்சி வசப்பட்டு
உணர்ச்சி வசப்பட்டு
உடல்நிலையைக் கெடுத்துக்
கொள்ளுதல் வேண்டாம்
என்று அன்போடு சொல்ல
எண்ணுகிறார்
அதுதானே அண்ணியாரே.
மணி:
போதுமடா உன் கதைப்பு
வா செல்வோம்.
கபிலன்:
வருகிறேன் அண்ணியாரே.
(காட்சி மாற்றம்)
(இரவு ரேநம். மணியின் இல்லம் திண்ணையில் ஏழுமலை சாமிகள், மாணிக்கம், மணி, கபிலன் ஆகியோர் அமர்ந்திருத்தல் மணியின் மடியில் குழந்தை படுத்துக்கொண்டிருக்கிறது)
கபிலன்:
சாமிகளே
இந்தச் சின்னப் பிஞ்சு
அம்மாவைக் காட்டிலும்
பெரியப்பாவிடம் தஞ்சம் ஆகி
இருப்பதைப் பார்த்தீங்களா?
ஏழுமலை சாமிகள்:
தாயின்றி குழந்தை
இருக்குமா?
மணிக்குப்
புதிய உறவு பிடித்தது
புதிய உறவும் இவனைப்
பிடித்துக் கொண்டது.
கபிலன்:
நீங்கள் குழந்தையைப்
பற்றித்தானே சொல்கிறீர்கள்?
மணி:
போதுமடா அதிகப்பிரசங்கி.
உன் கேலிக்கு நான்தானா
அகப்பட்டேன்?
தங்கம் குழந்தை உறங்கி
விட்டான் எடுத்துச் செல்.
உன் மைத்துனன் என் மீது
கேலி அம்பு தொடுக்கிறான்.
தங்கம்:
சின்னத்தம்பியைக் காணத்தானே
இத்தனை நாள் ஏங்கினீர்கள்.
அவர் எப்படிப் பேசினாலும்
இரசிக்கத்தானே வேண்டும்.
(பேசிவிட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்)
மணி:
மாணிக்கம் நாளை முதல்
பணிக்குச் செல்லப் போகிறாயா?
திருமணம் முடிந்ததும்
போய்க் கொள்ளலாமே தம்பி.
மாணிக்கம்:
இத்தனை நாளாய்
படுக்கையில் அடைக்கலம்
ஆகிக் கிடந்ததால்
வேலைக்குச் செல்ல விழைகிறேன்.
அண்ணா
திருமண வேலைகளுக்கு உதவத்தான்
கபிலன் வந்து விட்டானே.
மணி:
உன் விருப்பம் போல் செய்!
பணியில் கவனமாய் விழிப்புடன்
இருப்பா மாணிக்கம்
போய் ஒய்வுகொள்.
(மாணிக்கம் எழுந்து உள்ளே செல்லுதல்)
கபிலா சாமிகளிடம் பேசிக்
கொண்டிரு.
நான் பாதிரியாரைச்
சந்தித்துத் திரும்புகிறேன்.
சாமிகளே விடைபெறுகிறேன்.
ஏழுமலை சாமிகள்:
போய்வா மணி
(மாணிக்கம் செல்லுதல்)
ஏழுமலை சாமிகள்:
இந்தக் கிராமத்திலேயே
ஆசிரமம் அமைத்து
இருக்கலாம் என்று எண்ணுகிறேன்
கபிலா
இத்தனை நாள் நாடோடியாய்த்
திரிந்தது போதும் என்றாகி விட்டது.
இறைவன் திருவுள்ளம் எப்படியோ
எவர்
அறிவார்?
கபிலன்:
அண்ணனின் உதவி கொண்டு
ஆசிரமத்திற்கான முயற்சிகளை
நாளையே தொடங்கி விடுகிறேன் ஐயா.
ஏழுமலை சாமிகள்:
மலர்விழி உன்னுடன்
இங்கு வந்து சேர்வாள் என்று
பாரி எனக்குக் கடிதம்
எழுதியிருந்தானே.
அவள் வரவில்லையா
கபிலா?
கபிலன்:
மனஉறுதியின் மறுபெயர்தான் மலர்விழி,
வெளிநாடு சென்ற அந்த மிருகம்
உள்நாட்டுக்கு வந்து விட்டதால் அவள்
நாட்டுப்புறத்துக்கு வந்து
ஒளியமாட்டேன் மாட்டேன் என்று
சொல்லி விட்டாளாம் சாமி.
ஏழுமலை சாமிகள்:
சக்தித் தெய்வம் அவளுடன்
துணை இருந்து அவளைக் காக்கட்டும்.
நீ வீட்டினுள் சென்று உறங்கி ஓய்வெடு.
திண்ணை விளக்கு ஒளிரட்டும்
அடியேன் வாசித்தலில்
சிவு நேரம் செலவழிக்க வேண்டும்.
கபிலன்:
விடைபெறுகிறேன் ஐயா நன்றி.
(திரை)
– தொடரும்…
– காதல் காவியம் (தமிழின் முதல் புதுக்கவிதை நாடகம்), முதற் பதிப்பு: 1998, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.