காதல் காவியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் நாடகம்
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 6,363 
 
 

(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-5 | காட்சி 6-10 | காட்சி 11-15

ஆறாம் காட்சி

(கோதையின் வீடு, மலர்விழி வருகை)

கோதை:
வா வா
என் சிநேகிதியே
என்றும் வாடாத
ரோஜா மலரே!

மலர்விழி:
கிண்டல் கலந்த
வரவேற்பு
இதுதான் அனைவருக்கும்
செய்வாயா?
மீண்டும் எவரும் வீடு
தேடி வருகை புரிதல்
கூடாது என்பதற்காகவோ?

கோதை: 
நீ என்றும்
வாடாமலர்தான் 
நிஜத்தைத் திறந்து சொன்னால்
உற்ற தோழியைக்
கிண்டல்காரியாக்குதல்
தர்மம்தானா? 

வேறு என்ன விசேடங்கள்?
உன் வீட்டுக்கு அழைத்து
உன் மழலைப் பிஞ்சைக்
காட்டாமல் இருக்கிறாயே. 

மலர்விழி:
எப்போது வேண்டுமானாலும் 
நீ வா
அம்மா என்றழைக்கின்ற
சேய் ஒன்று இருப்பதால்தான்
ஜீவித்து இருக்கிறேன் நான். 

நான் வந்த நோக்கம்
என்னவென்று வினவினால்…. 

கோதை:
முதலில் அமர்ந்துகொள்.
மீன்விசிறியின் கீழ் அமர்.
வியர்வையிலிருந்து விடுபடு.
நீ அருந்த 
ஏதேனும் கொணர்கிறேன். 

மலர்விழி:
சமையலறை இருக்கும் திசை 
தெரியுமா? 
சோதனை முயற்சியாய் 
ஏதேனும் செய்து 
என் வயிற்றைச் 
சோதனைக்குள்ளாக்கி வீடாதே. 

கோதை: 
கிண்டல் அம்பு,
இப்போது 
நீ பிரயோகிக்கிறாயா? 

(கோதை உள்ளே செல்லுதல். சிறிது நேரம் கழித்து உண்ணவும் அருந்தவும் தட்டில் ஏந்தி எடுத்து வருதல்) 

கோதை:
முதலில் இவற்றை உண்டு 
மகிழ். 
விருந்தோம்பலைத் 
தவறுதல் கூடாது அல்லவா?
சொல்லடி என் பிரிய சகி, 
எதனால் தீ என் இல்லம் தேடி
வரலாயிற்று? 

மலர்விழி:
உன் காதலரை நீ 
மூன்று நாட்களாகக் 
காணச் செல்லவில்லையாமே. 
அவர் உன்னை எண்ணி 
எண்ணி…. 

கோதை: 
மெலிந்து மெலிந்து 
கைவளை கழன்று விட்டதாமா? 
இல்லை… கைக்கடிகாரம் 
கழன்று விட்டதாமா? 

மலர்விழி: 
அப்பப்பா இன்னமும் 
கோபம் மிச்சம் உள்ளதா? 

கோதை: 
நீ எப்படி அறிந்தாய் 
எங்கள் முன்கதையை? 

மலர்விழி: 
நீ சொல்லாவிட்டால் 
தெரியாமல் போகுமா? 
உன்னுடைய அவரின் 
அண்ணன் எனக்கு 
உடன்பிறவா அண்ணன்…. 

அன்பரசன் வெகுளித்
தனத்தால் ஆனவர். 
உன் மீதுள்ள கொள்ளை
அன்பு கொண்ட 
அவரை நாட்கணக்கில் ஏக்கத்தில்
ஆழ்த்தாதே.t 

கோதை:
சரியம்மா. 
உன் கட்டளைப்படியே. 
நாத்தி முறையாகவும் ஆகப்
போகிறாய். 
தட்ட முடியுமா இந்தப் 
பாவையால்? 
நாளையே 
அவருடன் சந்திப்பால் 
இணைகிறேன். 

மலர்விழி:
கட்டுப்பாடு உங்களுக்கு 
நடுவே இருக்கட்டும் 
கோதை. 

கோதை:
கட்டளைப்படியே என்
இனிய வருங்கால நாத்தியே
வேறு ஏதாகிலும் கவிதைகள் 
செய்தாயா?
வாசிக்கத் 
தருவாயா? 

மலர்விழி: 
‘திலகா’ என்று ஒரு கவிதை
செய்தேன். 
உன்னுடைய சுபவேளை கூடுகிற 
நேரத்தில் அது எதற்கு? 
வேண்டாம் கோதை. 

கோதை: 
அதனால் என்ன? 
உளறுகிறாய் நீ 
என்னிடம் அந்தக் 
கவிதைக் காகிதத்தைக் 
கொடு. 

(படித்தல்) 

திலகா 
ஊரெல்லாம் 
திலகாவின் 
திருமணத்தை 
உச்சரித்தது. 

கோயிலினுள் உள்ள 
சிற்பங்கள் 
அவளுக்குப் புதிய 
அர்த்தங்களைக் கற்பித்தன. 

திலகவதியின் தோழிகள் 
திசைதோறும் தோன்றி 
அவளைக் கேலி செய்தனர். 

திலகவதி 
தனக்கு. வாழ்க்கைத் துணையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட 
ஆடவனை முதன் முதலாக 
பார்த்தபோது 
நாணத்தில் நீந்தினாள். 

அந்த மலையனைய தோள்களும்
பூஞ்சிரிப்பும் அவளுடைய
கனவுகளில் வருவது
வழக்கமாகிவிட்டது. 

அந்த ஆடவன் 
திலகா என்று இரகசியமாய்
ஒருமுறை கூப்பிட்டதும் 
அவளுக்குள் திக்குமுக்காடல்கள்.. 

ஒரு நாள்… 
போன இடமெல்லாம் 
கேலி செய்துவந்த 
தோழிகள் மௌனம் காத்தனர். 

பார்ப்பவர்கள் அவளிடம் 
பரிதாபம் காட்டி 
முகம் தாழ்த்தினர். 

அவளுக்கு மங்கல நாண் 
தர இருந்த 
அந்த ஆடவன் 
வாணிபத்திற்காகக் 
கப்பலில் கடல் கடந்து 
போன போது 
மரணத்திடம் வாணிபமாகி 
விட்டான் என்ற செய்தியைச்
சொல்லி அவள் நெஞ்சைப்
பிளந்தனர். 

வேறு ஓர் ஆடவனை 
எண்ண முடியாத 
திலகவதி தவித்தாள். 
கனவுகள் உடைந்ததால் 
அவளும் உடைந்தாள். 

அவளுக்குள் ஆன்மீகம் 
என்னும் சின்னக் குத்துவிளக்கு 
அவளது மன இருட்டைப்
போக்கியது. 

மனதைப் பக்குவமாக்கி 
இறை வழிபாட்டில் 
தன்னை அர்ப்பணித்தாள். 

தம்பி திருநாவுக்கரசையும்
இறைவனிடம் திருப்பி
விட்டாள் திலகவதி. 

கோதை:
நன்றாகச் சொன்னாய் மலர். 
தேவாரத் திருமலர் தந்த
திருநாவுக்கரசு என்னும்
மகானைத் தந்த திலகவதி
பற்றி இன்றுதான் நான்
தெரிந்துகொண்டேன்.
நன்றி என் பிரிய சகி. 

மலர்விழி: 
நலங்கள் சூழ வாழ்த்துக்கள்
கோதை – விடைபெறுகிறேன் நான். 

(திரை) 

ஏழாம் காட்சி

(கபிலனும் பாரியும் -கபிலனின் அறையில்) மதிய நேரம் 

பாரி:
என்னதான் ஆயிற்று கபிலா?
கால்கட்டுப் பெற வேண்டிய
காலத்தில் கையில் கட்டுடன்
காட்சி தருகிறாய். 

கபிலன்: 
இரண்டு நாள் 
வெளியூர் அலுவல் வேலை 
உன்னை அழைத்தது. 

இங்கு நான் வசிக்கும் 
தெருவில் இரு குழுக்களிடையே 
பெருங்கலவரம் 
வன்முறையைத் தடுக்கப்போன
எனக்குச் சமூகம் 
கொடுத்த பரிசுதான் இந்தக் கைக்கட்டு. 

பாரி:
அச்சத்திற்கு உள்ளாக 
ஏதும் இல்லையே? 

கபிலன்:
கையில் வெட்டோடு
போயிற்று. 
கடவுள் அருள் உதவியது. 

ஏழுமலை சாமிகள்தான்
வெட்டுப்பட்டவனை 
மருத்துவத்தாலும் 
அன்பாலும் காப்பாற்றினார்.
அதோ சாமிகளே வருகிறாரே… 

ஏழுமலை சாமிகள்:
நலமா, என் அடியவனே! 

கபிலன்: 
தங்கள் ஆசி என்னை 
வாழ வைக்கிறது சாமி 

பாரி: 
என்னவாயிற்று ஐயா
இந்தத் தெரு மக்களுக்கு? 

சாமிகள்:
மனிதர்கள் எல்லாம் கற்றனர்.
அகில உலகத்தையும்
வியப்புலகம் ஆக்கினர். 

ஆனால், அன்பையும் 
விட்டுக்கொடுத்தலையும் 
முழுவதுமாய்க் கற்கவில்லை.
அரைகுறையாய்க் கற்றும்
அதன்படி ஒழுகவில்லை. 

எதுவும் கல்லாதவரை
ஒற்றுமை இருந்திருக்க 
வாய்ப்பு உண்டோ என்னவோ? 

எல்லாம் கற்றுத் தெளிந்தபின்
இவர்கள் ஒற்றுமை 
என்பதை மறந்தனர். 

படிப்பைக் கொண்டு 
பணம் பண்ணவே 
பயன்படுத்தினர். 

சாதிபேதமும் சாதித் 
துவேஷமும் நோயினும் 
கொடியவை என்பதை 
மறந்தனர். 

மனிதர்கள் எல்லாம் 
கற்றனர். 
கற்றபின் மனிதம் 
மறந்தனர். 

இவர்கள் 
வசதிகள் துறந்து 
நாகரிகம் விலக்கி மீண்டும் 
ஆதிகாலத்து 
மனிதர்களாகி விடலாம். 

ஆமாம் அப்போதும் 
தங்களுக்குள் சண்டை –
இப்போதும் தங்களுக்குள் 
சண்டை- 
பின் எதற்கு 
இந்த நாகரிகப் பூச்சு? 

பாரி:
அகில உலகமும் 
செவிசாய்த்து செயலில் 
மொழிபெயர்க்க வேண்டிய 
வார்த்தைகளைச் சொன்னீர்கள். 

ஏழுமலை: 
நீ அருகிருந்து 
நண்பனுக்கு உறுதுணையாய் இரு.
நான் பிறகு வருகிறேன். 
வரட்டுமா கபிலா. 
வாழ்த்துக்கள். 

(ஏழுமலை செல்லுதல்) 

கபிலன்:
எனக்கு உதவிகள்
வேண்டுமானால் 
கீழ் வீட்டில் உள்ள
சிறுவர்கள் 
நொடிப் பொழுதில்
வருவார்கள். 
நீ உன் வேலைகளைப் பார், பாரி, 

பாரி:
இன்று விடுமுறை நாள்தானேடா.
சிறிது நேரம் உன்னுடன்
இருந்தால் சுகம்தானேடா. 
அன்று மலரைப் பற்றிச் 
சொல்கிறேன் என்று சொன்னாயே. 

கபிலன்: 
மலர் உனக்கோ 
அண்டை வீட்டுப் பெண்ணாக 
அறிமுகம் ஆனவள். 
எனக்கோ எங்கள் கல்லூரியில் 
பயின்றவள். 

இன்று முதுகலை படிக்கும்
அவள் 
இளங்கலை பயின்றது 
எங்கள் கல்லூரியில். 

மூன்றாம் ஆண்டில் 
கல்லூரியின் வரலாற்றிலேயே, 
மாணவர் தலைவர் 
தேர்தலுக்கு வேட்பு மனுச்
செய்த முதல் மாணவி அவள்…. 

அவள் தேர்தலில் போட்டியிட்டாள்
பலரையும் கலங்கச் செய்தாள். 

பணக்காரப் பையன் குணாவுக்கோ
இது பேரிடி. 

தனியாக நின்று போட்டியில்லாமல் 
வெற்றியை எட்டிவிடுவோம் 
என்று நினைத்தவன் ஆடிப் போனான். 

அவளை மிரட்டிப் பார்த்தான். 
ஆள் வைத்து அடித்துப் பார்த்தான். 
கற்புக்குச் சவால் விட்டான் 
கல்லூரி நூலகத்தில் 
அவளை வைத்துப் 
பூட்டி 
நாவுக்கு வந்தபடி நச்சுப் 
பிரசாரம் செய்து பார்த்தான். 
எதுவும் மலரை ஒன்றும் செய்யவில்லை. 

பாரி: 
அப்புறம் என்னவாயிற்று? 

கபிலன்: 
ஆனால், 
சிலபல காரணங்களால் 
அவள் போட்டியிலிருந்து விலகினாள்.
காரணங்களை முழுதுமாக நான்
அறியேன். 

குணாவின் பெற்றோர் அவளைப் 
பார்த்துப் பேசியதாய்க் கேள்வியுற்றேன். 
அதனால்தான் விலகியிருப்பாள். 
இதன்பின்னரும் குணா அவளைத் 
துரத்துவதை விடவில்லை. 

திருமணத்தை – நீ பார்த்து வைத்த 
திருமணத்தையும் நிகழ விடாமல் 
செல்வத்தின் பெற்றோரைக் கலைக்கப்
பார்த்தான். 
செல்வத்தையும் குழப்பிப் 
பார்த்தான். 

திருமணம் இனிதே நடந்தது.
செல்வத்திற்கு ஒரு செல்வனும்
பிறந்தான். 
ஆனால் செல்வமோ மரணத்தின் 
செல்வம் 
ஆகிப் போனான். 

பாரி: 
நீ சொல்வதைப் பார்த்தால் 
செல்வத்தின் மரணம் 
விபத்து போல் ஆக்கப்பட்டதாக
இருக்கும் என்றே என்னுள் எண்ணம்… 

கபிலன்:
எனக்குள் பலநாளாய் 
அந்த எண்ணம் உறுத்தலைத் 
தருகிறது நண்பா. 

(திரை) 

எட்டாம் காட்சி

(வள்ளலார் மன்றம். பேராசிரியர் முத்துக்குமரன் பேசவிருக்கிறார். பாரி, அன்பரசன், மலர்விழி, கோதை ஆகியோர் அங்குள்ளனர்) 

போசிரியர் முத்துக்குமரன்: 
வணக்கம் 
இன்று வள்ளலார் பற்றிப்பேச 
என்னை அழைத்துள்ளனர். 
என்னிடம் பயின்ற மாணவர்கள் 
இங்கு வந்துள்ளனர். 
அவர்தம் அன்புக்கு நன்றி. 
இதோ என்னுரையைத் துவக்குகிறேன். 

வாடிய பயிரைக் கண்டு 
வாடியவர் அவர். 
மனிதனின் பசிப்பிணி 
கண்டு வருந்தியவர் அவர். 
சாதிகள் சாதிப்பதில்லை
என்பதைச் சொன்னவர் அவர். 

இறைவனைச் சோதியாய்ச்
சுடராய் அறிந்தவர் அவர். 

பாடம் படிக்கும் வயதிலேயே
ஆன்மீகப் பாடம் சொன்னவர் அவர். 

உயிர்வதையின் வலியை
உணர்ந்து நிறுத்தி, 
தமிழ் கூறும் நல்லுலகத்தில்
அன்புப் பிரசாரம் செய்தவர்
அவர்…. 

இராமலிங்க வள்ளலார்
அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை’
என்பது தமிழ்ச்சாதிக்கு
அவர் விரித்த கடை..
இந்தக் கடையைத் 
தமிழர்கள் புறக்கணிக்கலாமா? 

கூட்டம்: 
கூடாது கூடாது என்று உரைக்கிறது. 

முத்துக்குமரன:
இராமலிங்க அடிகள் 
வழியில் செல்வோம். 
நன்றி. வணக்கம் 
நண்பர்களே! 

(பாரி எழுந்து நின்று ‘வள்ளலாரைப் பற்றிச் சொன்னீர்கள். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக ஏதேனும் சொல்லுங்கள் ஐயா’ என்கிறான்) 

முத்துக்குமரன்: 
சொல்கிறேன்.. 
நிகழ்காலத்தில் வாழ்
இறந்தகாலம் –
இறந்துவிட்ட
காலமாயினும் 
கசப்பு அனுபவங்கள் 
பசப்பு மனிதர்கள்
உங்களுள் ஏற்படுத்திய 
ரணங்கள் ஆறுவதில்லை, 
பெரும்புலவர் 
வள்ளுவன் சொன்னதுபோல். 

இருப்பினும் 
இறந்தகால எண்ணங்களான 
பெரும்பாரத்தைக் கீழே இறக்கி விட்டு
நிகழ்காலத்திற்கு
வாழ வாருங்கள். 

எதிர்காலத்திற்காகத்
திட்டமிடுங்கள். 
கனவு காணுங்கள். 
எதிர்காலத்தை 
எதிர்பாருங்கள். 
ஆனால், 
எதிர்காலக் கனவுச் 
சுமையில் 
வருங்காலம் பற்றிய
அச்ச உணர்வில் 
நிகழ்காலத்தைக் – 
கோட்டை விடாதீர்கள். 

நிகழ்காலம் உங்களுடன் 
உங்கள் அருகிலேயே 
இருக்கிறது. 

ஆட்டைத் தோளில் 
வைத்துத் தேடியவனைப் போல் 
எதையோ தேடி 
அலைந்து எண்ண முற்று 
மறுகி மாய்ந்து 
நிகழ்காலத்தை ஏன் 
நிற்கவைத்துக் கொலை 
செய்கிறீர்கள்? 

வாழ்வின் பக்கங்களில்-
இறந்த காலம் இனிக்கவும்
எதிர்காலத்தில் இமாலய 
சாதனைகள் படைக்கவும் 
நிகழ்காலத்திற்கு வாருங்கள்- 
நிகழ்காலத்திற்கு வாழ வாருங்கள்! 

(நிகழ்ச்சி முடிந்ததும் – முத்துக்குமரனை, பாரியும் அன்பரசனும் கோதையும் மலரும் சந்திக்கின்றனர்) 

முத்துக்குமரன்: 
நலங்கள் சூழ வாழ்க 
வளங்கள் சூழ வாழ்க 

(பாரியைப் பார்த்து)
கபிலனைப் பற்றிக் கேள்வியுற்றேன். 
எப்படி உள்ளார் உன் தோழர்? 

பாரி:
கையில் மட்டும் அடிபட்டு
அலுவலகம் செல்லாமல் 
ஓய்வில் வாழ்கிறான். 
விரைவில் முழு நலம் பெறுவான் ஐயா. 

முத்துக்குமரன்:
உன் அலுவல்களுக்கு இடையே
நண்பனையும் ஆதரவால் 
அரவணைத்துக் கொள். 
அவனுக்கு உற்றாரும் 
இல்லை. 
உறவினரும் இல்லை. 

(மலர்விழியிடம்) 

மலர், உன் புதல்வன் நலமா? 
மழலையர் பள்ளிக்குச் செல்லும்
கடமையை அவனுக்குக் கொடுத்து
விட்டாயா? 

மலர்விழி (சிரித்து):
இன்னமும் இல்லை ஐயா,
எதிர்வரும் கல்வியாண்டில்தான் 
சேர்க்க வேண்டும் 
பிஞ்சுகளுடன் அவனை
ஐக்கியப்படுத்த வேண்டும். 

முத்துக்குமரன்:
நன்று. 
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
பாரி மட்டும்
என்னுடன் வா 
கொஞ்சம் பேசுதல் வேண்டும்
உன்னோடு 

(பாரியும் முத்துக்குமரனும் செல்லுதல்) 

(வள்ளலார் மன்றத்திற்கு வெளியே – பேருந்து நிறுத்தத்தில் – அன்பரசன், மலர்விழி – கோதை)  

மலர்விழி: 
என்ன – மௌனம் 
காக்கிறார் உன் 
காதலர்? 

அன்பரசன்: 
காதலில் 
வாயைத் திறப்பதே 
ஆபத்துக்கு விடும்
அழைப்பாக இருக்கிறது. 

காதலி ஏதாவது 
சாப்பிடக்கொடுத்தால் மட்டுமே 
வாயைத் திறப்பது 
என்று உறுதி பூண்டுள்ளேன். 

கோதை: 
உங்கள் உறுதி 
எவ்வளவு நேரம் என்பது 
எனக்குத் தெரியாதா? 

அன்பரசன்:
நெஞ்சுறுதிக்கு அன்பரசனுக்கு 
நிகரில்லை என்று…. 

கோதை:
தெரியுமே உங்கள் தந்தை 
பெருமை கொள்வார்! 

அன்பரசன்: 
இல்லை நானேதான் 
சொல்லிக் கொள்வேன் 
நம் அருமையும் பெருமையும்
வேறு எவருமே சொல்லாதபோது 
நாமே தான் நம் கீர்த்திகளைச்
சொல்லிக்கொள்ள வேண்டும். 

கோதை:
அப்படிப் பேசுவதற்குத்தான்
தற்புகழ்ச்சி என்று 
பெயர் சூட்டிக் கொள்ள
பலகாலம் ஆயிற்று. 

மலர்:
நீங்கள் பேசி மகிழுங்கள் 
காதலருக்கு குறுக்கே 
அடியேன் என்ன செய்யப் போகிறேன்? 

அன்பரசன்:
அனுபவத்தில் உதித்த 
ஆலோசனைகளை உரைக்கலாமே. 
கூடாது எவை 
வேண்டியவை எவை என்று 

மலர்:
அவற்றை நீர் அனுபவித்து 
உணர்ந்து கொள்வீர் 
இனியொரு முறை எனக்கு 
தூது வேலை வைத்து விடாதீர்.
விடைபெறுகிறேன். 

(ஏழுமலை சாமிகள் வருதல்) 

ஏழுமலை: 
மலர்விழி, 
பாரி எங்கே? 

மலர்விழி: 
எங்களுடன்தான் இருந்தார்
தனியாகச் சென்றார் சாமீ
அவசரமாய் அவரைச் 
சந்திக்க- வேண்டியுள்ளதா? 

ஏழுமலை:
நம் கபிலனை 
அறையில் காணோம்.
உடல் நலம் 
குறைந்தவன் எங்கே சென்றானோ 
என்பதே எனக்குள்ள கவலை. 

அன்பரசன்:
அவரது அலுவலகத்திற்குத்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு 
கேட்கட்டுமா சாமி? 

ஏழுமலை:
அவன் வீடுப்பில் அல்லவோ
உள்ளான். 
இங்கும் 
அவன் வராது போனால்… 
சரி அடியேன் பார்த்துக் 
கொள்கிறேன். 
விடைபெறட்டுமா? 
ஆசிகள். 

(ஏழுமலை சாமிகள் செல்லுதல்) 

கோதை:
இந்தப் பெரியவர் 
பற்றிய அறிமுகம் தாயேன் மலர்… 

மலர்விழி: 
இவர் ஒரு சாமியார். 
சாமியார்கள் பற்றி இப்போது 
பரவலாய் வரும் செய்திக் கதைகளால்,
இந்த சாமியார் பற்றித் தவறாக
நினைத்து விடாதே 
இவர் மிகவும் நல்லவர். 
நிஜமான சாமியார். 
வித்தியாசமான சாமியார் 
வசதிகளைத் துறந்த துறவியை 
நாம் எங்கேனும் பார்க்க 
முடியுமா? 
கபிலனுக்கும் பாரிக்கும் ஆசான். 
பேருந்து அருகில் வராமல் 
எங்கோ நிற்கும். 
ஆயத்தமாக வேண்டும். 
விடைபெறுகிறேன் நான். 

(கோதையும் அன்பரசனும் வேறு திசையில் செல்கிறார்கள்) 

(திரை)

ஒன்பதாம் காட்சி

(பூஞ்சோலை கிராமம். கதிரவன் விடைபெறும் மாலை நேரம். மாதாகோயிலிலிருந்து சாந்தத்தின் மறுபதிப்பாய் இருக்கும் பாதிரியார் ஜேம்ஸ் வருதல். அவர் மாணிக்கம் என்னும் இளைஞனைச் சந்தித்தல்) 

பாதிரியார்: 
வருக வருக மாணிக்கம்.
கர்த்தர் அருளால் நீயும் உன் 
குடும்பமும் 
நலம் பெறட்டும். 
எப்போது வந்தாய் நம்மிடம் தேடி?
பூஞ்சோலை நினைவு வர இவ்வளவு
காலங்கள் கரைய வேண்டியுள்ளதோ…

மாணிக்கம்:
நான் பூஞ்சோலையின்
மைந்தன்தானே ஐயா
அன்னையிடம் திரும்பி
வருவது இயற்கைதானே! 

பாதிரியார்: 
ஏதேது! முகத்தில் 
முதிர்ச்சியாகி 
 பேச்சில் பழைய
மாணிக்கத்தின் அடையாளம் 
இல்லையே 
என்னதான் ஆயிற்று? 
சென்னை, 
மனிதர்களை 
இப்படியும் வெவ்வேறு 
விதங்களில் வார்க்கிறதா? 

மாணிக்கம்:
சென்னை பலருக்கு- 
வாழ்வு தந்து அணைக்கும் அன்னை. 
நான் வளர்ப்புத்தாயை 
விட்டு பெற்ற தாயிடம் 
வந்து சேர்ந்துள்ளேன். 

பாதிரியார்: 
உன் மனம் 
சஞ்சலத்தில் வசிக்கிறது போல் 
தெரிகிறது மாணிக்கம். 
கவலைகளைக் கைவிடு 
கடவுள் உன்னை ஆதரிப்பார்! 

மாணிக்கம்:
பாவத்தைச் செய்து அலைபாய்கிறேன், 
ஐயா! 

பாதிரியார்:
செய்த குற்றத்தை எண்ணித்
திருந்துபவனுக்கும், 
வருந்துபவனுக்கும் இறைவனின் 
நீதி மன்றத்தில் 
நியாயமே கிட்டும்.
நீ என்ன செய்து 
இப்படி 
வருந்துகிறாயோ! 
அறிய ஆசை கொள்ளவில்லை நான்.
இருப்பினும் சொல்லுகிறேன் 
போனது போகட்டும் 
சென்றதினி மீளாது 
உன் வாழ்வின் புதிய
அத்தியாயத்தை இங்கு
தொடங்கு. 

மாணிக்கம்:
மனைவி மகனுடன் 
இங்கு தஞ்சம் ஆகியுள்ளேன்.
எனக்கு தாங்கள்தான் 
வழிகாட்ட வேண்டும். 

பாதிரியார்: 
நம் கிராமத்தில் 
புதல்வர்களால் கைவிடப்பட்ட 
உதிர்ந்த மலர்களைப்
பாதுகாக்கும் முதியோர்
இல்லம் நடத்தும்
ரகீம் அவர்களுக்கு 
ஓர் உதவியாளர் தேவை
என்று ரொம்ப நாளாய்ச்
சொல்லி வந்தார் என்னிடம்.
பாயிடம் கேட்டுச் சொல்கிறேன் 
நாளை என்னைக் காண வா. 

மாணிக்கம்:
வருகிறேன் ஐயா!
மிக்க நன்றி. 

பாதிரியார்: 
கடவுள் உனக்கு 
அருள் தருவாராக. 

(இருவரும் வெவ்வேறு திசைகளில் * செல்லுதல்) (ஊரின் ஒதுக்குப்புறம் ஆளரவமற்ற இடம். ஒரு மரத்தடியின் கீழ் யோசனையுடன் அமர்கிறான் மாணிக்கம். மரத்தின் பின்னால் இருந்து பேச்சுக்குரல்கள் மாணிக்கத்தின் செவிகளை வந்தடைகின்றன) 

பெண்குரல்:
தமிழ்ப்புலவர் பெருமானே! 
முதிர் கன்னியைக் காதலித்தீர். 
முதிர்கன்னியை மேலும் 
காக்க வைக்கீறீரே. 
முதியவள் ஆனபிறகே 
திருமணம் செய்ய உத்தேசமா? 

ஆண்குரல்: 
 சாமியாரையே
இல்லறத்திற்குறாய்
இட்டு வந்துவிட்ட 
பெண்ணைப் பற்றிப் 
பத்திரிகைச் செய்திகள் 
பறைசாற்றுகின்றன. 

வாழ்நாள் முழுக்கத் தனியனாக
வாழவிருந்த என்னைக்
காதலித்தாய். 
காதல் கற்பித்தாய். 
அரைக்கிழவனைக் காதலிக்க
அகிலத்தில் ஆள் உண்டு என்று
நிரூபித்த ஆரணங்கே, 
எனக்காக பொறுத்தாய் இவ்வளவு நாள்
மேலும் சிறிது நாள் பொறுத்தல்
முடியாதா என் கண்ணே! 

பெண்குரல்:
காத்திருக்கிறேன் ஆசிரியர் ஐயா
எனக்கென்ன தாயா?
தந்தையா?அண்ணனா? 
தம்பியா? 
முதிர்கன்னியின் 
மூன்று முடிச்சுக்கு வழி 
செய்ய வேண்டும் என்று 
ஒற்றைக்காலில் நிற்பவர் யார்? 
கிராமத்து செவிலியின் 
வாழ்க்கை விடியும்போது விடியட்டும். 

ஆண்குரல்: 
விரக்தியில் தோய்ந்து போகாதே
தம்பியிடம் இதுபற்றிப் பேச
எண்ணினேன். 
தம்பியே வந்தான் என்னைத் தேடி-
குடும்பத்துடன் தஞ்சம் தேடி- 
அவன் ஏதோ சுவலையில் 
இருக்கிறான். சொல்லவும் தயக்கம் 
காட்டுகிறான் 
எல்லாம் சரியாகட்டும் 
கொஞ்சம் காத்திரு என் 
தங்கமே! 

பெண்குரல்:
தம்பியரைக் கரைசேர்த்து விட்டேன்.
இனி ஏதும் தடங்கல் இல்லை
என்றெல்லாம் சொன்னீர்கள் முன்பு.
எவ்வளவு நாள்தான் காத்திருப்பது?
நீங்களே முடிவு செய்யுங்கள்.
நான் வருகிறேன். 

ஆண்குரல்:
செல்லம்மா சற்றே நில்லம்மா
நில். நில்… 

(மாணிக்கம் மேலும் கவலையுடையவனாகிச் செல்லுதல்) 

(திரை) 

பத்தாம் காட்சி

(மலர்விழியின் வீடு. மலர்விழியின் தந்தை, தாய், மலர்விழி, பாரி மற்றும் கபிலன்) 

மலர்விழி: 
அப்பா அம்மா
இந்த இளைஞர்தான் 
நம் பாரி அண்ணனின் 
உற்ற தோழர் கபிலன். 

மலர்விழியின் பெற்றோர்: 
வாருங்கள் கபிலன் 
வாருங்கள் பாரி 
நலம்தானா இல்லத்தில்
அனைவரும்? 

பாரி:
அனைவரும் நலம்தான்
மலர்விழியின் மலர் 
போன்ற மைந்தன் எங்கே? 

மலர்விழி:
உறங்குகிறான் அண்ணா 
எழுந்ததும் அவனே 
தளர்நடையில் வந்து விடுவான். 
கபிலனின் கை எப்படி
உள்ளது? 
சரியாகி விட்டதா? 
கைக் கட்டைக் 
காணவில்லையே! 

கபிலன்:
வெட்டுக் காயங்கள்
ஆறிவிட்டன. 
ஏழுமலை சாமிகளின் 
அன்பும் பாரியின் பரிவும்தாம் 
என்னை காப்பாற்றின. 

மலர்விழி: 
சென்ற வாரம் 
எங்கே சென்று விட்டீர்கள்? 
துறவியைக் கலங்க
வைத்து விட்டீர்கள். 

கபிலன்: 
எவ்வளவு நேரம் 
தனிமைச் சிறையில் 
தள்ளாடுவது என்றுதான் 
வெளியே சென்றேன் 
அதற்குள் சாமிகள் வந்து 
என்னைத் தேடினார். 

அன்று வெளியே வந்து நான் கண்ட
காட்சி… 
என்னை… 

பாரி:
ஒரு வாரம் படுக்கையிலேயே 
அடைக்கலம் ஆனதால் 
வெளியுலகக் காட்சி 
அவனைப் பரவசப்படுத்தியது
என்று சொல்ல நினைக்கிறான்.
அப்படித்தானே கபிலா? 

கபிலன் (பாரியின் குறிப்பை உணர்ந்து):
ஆம் ஆம் அதுதான்… 
சரி நாங்கள் செல்லலாமா? 

மலர்விழி:
உடனே செல்லவிடுவோமோ? 
உண்பதற்கு ஏதேனும் 
தருகிறோம். 
காத்திருங்கள். 

பாரி: 
இதுவும் ஒருவிதமான தண்டனை 
என்று சொல்வான் 
கபிலன் அடிக்கடி 

மலர்விழி:
விருந்தினரை உபசரிப்பது 
தமிழரின் பாரம்பர்யம். 
அதைத் தண்டனை என்று 
நாமகரணம் செய்வதா? 
தமிழர்தானா நீங்கள்? 

(மலர்விழியின் பெற்றோரும் மலர்விழியும் செல்கிறார்கள்) 

பாரி (மெல்லிய குரலில்):
உளறலை விட்டு வைக்காதா 
உன் நாவு? 

இப்போதுதான் சற்றே
சிரிக்க ஆரம்பித்திருக்கும்
மலரைக் கவலைக்குள்ளாக்குவதில்
உனக்கேன் ஆர்வம்? 

கபிலன்:
சீச்சி. என்ன செப்புகிறாய் நீ.
என்னை அறியாமல் 
என் மனது வெளிக்கொட்டப்
பார்த்தது அந்தக் காட்சியை. 
அவளைக் கவலை கொள்ளச்
செய்ய நினைப்பேனா நான்? 
எப்படி உன் நாவு அப்படிப் பேசுகிறது? 

பாரி:
சரி சரி விட்டுவிடு நண்பா. 
நீ பார்த்த காட்சியை 
நமது பேராசிரியர் முத்துக்குமரனும்
கண்டு, 
என்னிடம் உரைத்திருந்தார். 

(மலர்விழி வருதல்) 

மலர்விழி: 
நீங்கள் இருவரும் 
துணிச்சலோடு சாப்பிடலாம். 
உங்கள் வயிறு 
வாழ்த்துமே தவிர… 

கபீலன்:
வயிற்றுக்குள் 
கலவரத்தை உண்டாக்காது
என்று உறுதி கூறுகிறீர்களா?
சாப்பிடச் செய்வதில் 
உங்களுக்குள்ள துணிச்சலைப்
போற்றுகிறேன். 

மலர்விழி: 
கிண்டல் திலகம் அண்ணா 
உங்கள் நண்பர் 
காண்பதற்குத்தான் 
சாதுபோல் 
தோன்றுகிறார். 

பாரி:
உண்ணக் கொடுத்தாய்
செவிக்கு உணவு இடுவாயா? 

மலர்விழி:
செவிக்கு உணவா? 
நான் பாட வேண்டுமா? 
நான் பாடினால் என் மகனே 
அழ ஆரம்பித்துவிடுவான். 

பாரி: 
இல்லையம்மா,
நீ எழுதிய 
கவீதைகளில் ஒன்றை… 

மலர்விழி:
கேட்க ஆள் 
கிடைத்தால் விடுவதில்லை நான். 
கவியரங்கத்தில் பாட
வாய்ப்பில்லாத போதிலும் 
இரண்டு பெரும் ஆர்வலர்களிடம்
உரைப்பதில் எனக்குப் பெருமைதான்
ஒரே ஒரு கவிதை சொல்கிறேன்.
கேளுங்கள் 

அகம் 

மனிதனுக்குள் இரண்டு
இயக்கங்கள். 

நல் இயக்கம் ஒன்று.
நச்சியக்கம் ஒன்று. 

நல் இலக்கியம்
நச்சு இலக்கியம் 
என்று வழங்குவதுபோல். 

நல்லியக்கம் 
தேவதைபோல் 
உங்களுடன் வந்து 
உங்கள் புண்ணிய வங்கியின்
இருப்பை அதிகரிப்பது. 

நல்லியக்கம் 
கீதை சொல்லும் 
கண்ணன் என்றால்
நச்சியக்கம் 
தப்புத் தப்பாய் 
புத்தி சொல்லும்
சகுனிமாமன். 

நல்லியக்கம் 
உங்களைச் சாதனைச் 
சிகரத்துக்குப் 
படிப்படியாய்க் 
கொஞ்சம் கொஞ்சமாய் அழைத்துச் 
செல்வது. 
நச்சியக்கம் 
அவநம்பிக்கை நரகத்தில் 
சோம்பலின் மடியில் 
உங்களைத் தள்ளிவிடுவது. 

நல் இயக்கம்- 
அன்பு, நேசம். 
மனிதாபிமானம், கருணை, 
நல் அறிவு, ஆன்மீகம் 
போன்ற நல் உறுப்பினர்களைத் 
தன்னகத்தே கொண்டது. நச்சியக்கத்திலோ 
பொறாமையும் காழ்ப்பும் 
வெறுப்பும் குயுக்தியும் 
வக்கிர புத்தியுமே 
உறுப்பினர்கள். 

புதியதோர் உலகம் செய்ய, 
கெட்ட போரிடும் 
உலகை வேரோடு சாய்க்க 
உங்களுள் நல் இயக்கம் 
வளர்ப்பீர். 
அப்புறம் பாருங்கள்- 
இந்த உலகைத் 
தாங்கும் ஹெர்குலிசாக 
அமைதி நிற்கும். 

கபிலன் (கைகூப்பி):
ஆஹா! எத்தனை 
அற்புதமாய் வாழ்க்கையை 
வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள்! 

உளவியல் உண்மை 
நீங்கள் சொன்னது. 
பாராட்டு மொழிகளன்றி 
வேறு ஏதும் தர இயலாதவனாய் 
உள்ளேன் 
மன்னியுங்கள். 

மலர்விழி:
விரக்தியடைந்தாலும் 
எல்லை கடக்கிறார் ; 
உணர்ச்சி வயப்பட்டாலும் 
எல்லை கடக்கிறார் அண்ணா
உங்கள் நண்பர். 

பாரி:
என்ன செய்வது? 
சிலர் எதையும் மனதில் 
பொத்தி வைக்க முடியாமல்
உணர்ச்சிகளாய் வெளிக்காட்டிடுவர்.
அந்த சிலருள் ஒருவன் கபிலன்.
அனுபவம் அவனைச் செதுக்கிச்
செதுக்கி மாற்றிவிடும். 

(குழந்தை அழுது கொண்டு தளர்நடையில் மலர்விழியின் கால்களைப் பின்னிக்கொள்ள அழுகிற குழந்தையைக் கொஞ்ச முயன்று, தோற்று கபிலனும் பாரியும் விடைபெறுகின்றனர்) 

(திரை) 

– தொடரும்…

– காதல் காவியம் (தமிழின் முதல் புதுக்கவிதை நாடகம்), முதற் பதிப்பு: 1998, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *