காதல் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 10,806 
 
 

காலையில் கல்யாணியிடமிருந்து ஈ மெயில் வந்தது.

ராகவன் பரபரப்புடன் மெயிலைத் திறந்து படித்தான்.

“டியர் ராகவன்,

நம்முடைய ஐந்து வருடக் காதல், இந்த வருடமாவது நம் கல்யாணத்தில் முடியும் என்று நினைக்கிறேன்.

தை பிறந்து விட்டது.

இனி நம் காதலுக்கு வழியும் பிறந்துவிடும் என்று திடமாக நம்புகிறேன். ‘எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’ என்று தாயுமானவர் சொன்னது போல், இந்த நேரத்தில் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்று நாம் எண்ணுவோம்.

நீங்கள் மும்பையிலும், நான் சென்னையிலும் இருந்ததால் சென்ற வருடம் கொரோனாவினால் நம் திருமணம் தடைபட்டுப் போனது. விமானம், ரயில் என்று எதுவும் இயங்கவில்லை. கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளுமே ஸ்தம்பித்துப் போயின.

எந்த ஆண்டிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். அது உலக நியதி. ஆனால் 2020 ல் நல்லவற்றை விட, கெடுதலானவை மிகத் தூக்கலாக இருந்தன.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, உலகெங்கிலும் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்களைப் பலி வாங்கியிருக்கிறது. அதன் அழிவுச் சக்தி சற்றே குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படும் நேரத்தில், இப்போது இரண்டாவது அலை துவங்கி இருப்பதாகவும், அந்தக் கிருமியின் புதிய வடிவம் ஒன்று உருவாகி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த இரண்டாவது அலைக்கு மருந்தே கிடையாது என்றும் சொல்லி நம்மைப் பயமுறுத்துகிறார்கள்.

ஆக, கொரோனா, உலகையே தலை கீழாகப் புரட்டிப் போட்டதுதான் சென்ற ஆண்டின் முக்கிய நிகழ்வு. வரலாறு அப்படித்தான் பதிவு செய்யும்.

மாணவர்களே வராத பள்ளிக் கூடங்கள்; கல்லூரிகள்; அலுவலர்களே இல்லாத அலுவலகங்கள்; பயணிகள் இல்லாத சுற்றுலாத் தலங்கள்; நீதிபதிகள் இல்லாத நீதிமன்றங்கள்; விமானங்கள் வந்து செல்லாத விமான நிலையங்கள்; வெறிச்சோடிக் கிடந்த ரயிலடிகள்; பேருந்துகள் இல்லாத பேருந்து நிலையங்கள்; திரைப்படங்கள் இல்லாத திரையரங்குகள்; வீட்டிலிருந்தே வேலை செய்யும் அலுவலர்கள்; இதையெல்லாம் தாண்டி செய்து கொண்டிருந்த வேலைகளை இழந்து, வருமானமும் இழந்தவர்கள் பலர் ராகவன்…

வியாபாரம் படுத்துப்போன ஆலைகள்; தொழில்கள்; கடைகள்; தேர்வு எழுதாமலே தேறிவிட்ட மாணவர்கள்… கொடுமையின் உச்சம்.

நமக்கு நடந்ததைப் போலவே, பல திருமணங்கள் தள்ளிப் போடப்பட்டன. ஊருக்குப் போய் பண்டிகைகளை உற்றார் உறவினர்களுடன் கொண்டாட இயலாத திண்டாட்டம்; நெருங்கிய சொந்தங்களின் இறப்பிற்குகூட செல்ல முடியாத அவலம்…

சாதாரண இருமல் தும்மலுக்கே நடுங்கிய மக்கள்; கை குலுக்க அச்சம்; சமூகம் என்றாலே மக்கள் நெருக்கமாக இருப்பதுதான், அத்தகைய அழகான நெருக்கத்துக்குப் பதில், எப்போதும் மாஸ்க் அணிந்து கொண்டு, சமூக இடைவெளி கண்டிப்பாக விட வேண்டும் என்கிற கேவலம்.

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற நம் நாட்டில், வீட்டுக்கு யாருமே வராமல் இருந்தாலே நல்லது என்று பயந்து போனவர்கள் ஏராளம்.

இந்த வருடமாவது நம்முடைய திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். சென்ற வருடம் கொரோனாவினால் நம் கல்யாணம் தள்ளிப்போனது. இப்போது மாற்றுக் கொரோனா என்று புதிதாக ஒன்றைச் சொல்லி, நம்மைப் பயமுறுத்துகிறார்கள். இந்தப் பம்மாத்துக்கு எல்லாம் நாம் அசரக்கூடாது ராகவன். இந்த வருடம் நம் காதல் கல்யாணம் நடந்தே தீர வேண்டும்.

ஆனால் ஒன்று, பல நல்ல பழக்கங்களை நாம் கற்றுக்கொண்டோம் என்பதற்காக 2020 க்கு நாம் நன்றி சொல்வோம்.

அடிக்கடி சோப்பு போட்டு நம் கைகளை கழுவுவது; வெளியே சென்று திரும்பினால் கால்களைக் கழுவியபின் வீட்டுக்குள் நுழைவது; முகக் கவசம் அணிவது; தேவையான சமூக இடைவெளி போன்ற நல்ல பழக்கங்கள் நமக்குக் கிடைத்தன.

தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவது, வெளியே கண்டதையும் உண்பது, கை கழுவாமல் சாப்பிடுவது மூக்கைக் குடைவது, வாய்க்குள் விரல்களை விடுவது போன்றவற்றை முற்றிலுமாகக் கைவிட்டோம். புகை, தூசு அதிகம் வெளியேறாததால், சுற்றுச்சூழல் மேம்பட்டது.

மக்கள் நெரிசலாக இருந்த ஒரே இடம் மருத்துவமனைகள்தான். அதுதவிர நெருக்கடியான இடம் இணையதளம் மட்டுமே எனலாம். 2020 ன் மிகப்பெரிய கோழைத்தனமான காமெடி ரஜினிகாந்த்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற இயற்கை நியதிப்படி, புத்தாண்டில் பல புதிய நன்மை பயக்கும் நிகழ்வுகள், நம் திருமணம் உட்பட, நடைபெறும் என்று நம்புவோம். தற்போது கொரோனாவுக்கு ஆற்றல் மிக்க தடுப்பூசிகள் வந்துவிட்டன.

2021 ல் நாம் மேற்கொள்ளும் உறுதி மொழிகள் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

சென்னையில் சீக்கிரம் நம் திருமணம் நல்லபடியாக நடக்கும்…

கல்யாண ஆசையுடன்,

கல்யாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *