காதல் உள்ளம்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காதல் கதை எழுதியதன் பலனை அனுபவித்த கதாசிரியர் காதலே இல்லாமல் கதை எழுத வேண்டுமென்று உட்கார்ந்தார். சிந்தனை ஓடவில்லை. அந்த நிலையில் அங்கு வந்த புலவர் இலக்கியக் கதையொன்றைச் சொல்லுகிறார். ஆனால் அது பயன்பட்டதா?

அற்புதக் காதல், அதிசயக் காதல் என்று சொல்கிறார்களே அல்லது சிரஞ்சீவிக் காதல், தெய்வீகக் காதல் என்று சித்தரிக்கிறார்களே, அப்படிப்பட்ட காதல் கதை ஒன்று என் மூளையில் உதயமாகியதால், அதை உடனே எழுதி முடித்துவிட வேண்டுமென்று உட்கார்ந்தேன். அப்போதுதான் ‘காதற்கதைகள் எழுத வேண்டா’மென்று எனது வாழ்க்கைத் துணைவியார் உத்தரவிட்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆம். சிறிது நாட்களுக்கு முன்னர் காதல் கதை ஒன்று எழுதி எக்கச்சக்கமாக, மாட்டிக்கொண்டுவிட்டேன். என் கதையில் வந்த கதாநாயகியே நிஜ உருவில் வந்து என் பிராணனை வாங்கிவிட்டாள். என் மனைவியும், அவளும் ஒருவர் கூந்தலை மற்றவர் பிடித்துக்கொண்டு மல்லுக்… சே. சே, சே! அந்த வெட்கக்கேட்டை
எனினும், காதலில்லாத கதையும் ஒரு கதையாகுமா? ஐயோ! சந்திரனில்லாத விமானம் போலும், தாமரை இல்லாத தடாகம் போலும், பருப்பு இல்லாத சாம்பார் போலும், சட்னி இல்லாத இட்லி போலும்’ என்ற பழமொழிப் பட்டியலில், இனிமேல் இந்தக் ‘காதலில்லாத கதை போலும்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறதே! அதுதான் போகட்டும். கதாசிரியர்களுக்குக் காதல் கதைகள் எழுது வதிலுள்ள உற்சாகம் வேறு ‘வெட்டிக்’ கதைகள் எழுதும்போது ஏற்படுகிறதா? காதலர்களின் முதல் சந்திப்பும், அப்போது காதலன் காதலியை, ‘மானே, மயிலே, குயிலே’ என்று மிருகங்களையும், பறவைகளையும், ‘மலர்க்கொடியே, அல்லித் தண்டே, பூங்கொம்பே’ என்று தாவரங்களையும், ‘கட்டாணி முத்தே, கற்கண்டே’ என்று அஃறிணைப் பொருள்களையும் உவமை காட்டிப் புகழ்வதையும், காதலி அதை ஆமோதிப்பவள் போல் அவனை ‘மதயானையே, சிங்கமே, புலியே’ என்று வருணிப்பதையும், பிறகு அவர்கள் கண்கள் பேசாத பாஷையைப் பேசிக்கொள்வதையும் எவ்வளவு அழகாக, ஆசை தீர எழுதி முடித்து பிறகு அதைப் படித்துப் படித்து இன்புறலாம். இதற்கு பின் புலன்களாக கடற்கரைகளையும், பூஞ்சோலைகளையும், மலைச் சரிவுகளையும் எவ்வளவு சுலபமாகக் கொண்டு வரலாம்? பால் வெண்ணிலா, குளுகுளுவென்று வீசும் தென்றல் காற்று, மல்லிகை ரோஜா போன்ற மலர் மணம் முதலியவைகளெல்லாம் நமது கற்பனையில் மிதந்து வருமே. பிறகு அந்தக் காதலர்களுக்கு ஒரு ‘வில்லன்’ முளைப்பதனையும்,
அவனால் ஏற்படும் இடையூறுகளையும், அதனால் காதலர் படும் துன்பங்களையும், பிறகு கதாநாயகனுக்கு மோட்டார் காரிலோ, அல்லது இரயிலிலோ, ஏரோப்பிளேனிலோ விபத்து நேர்வதையும், சொல்லி வைத்தது போல் அவனை ஆஸ்பத்திரியில் காதலி கண்டு புலம்புவதையும், அப்போது வில்லனின் தந்திரம் வெளியாவதையும், இறுதியில் காதலர்கள் மங்களமாக திருமணம் புரிந்துகொள்வதையும், வில்லன் விஷம் குடித்து சாவதையும் எவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கலாம்! இதையெல்லாம் விட்டுவிட்டு என்னத்தை எழுதுவது என்று பென்சிலைக் கடித்துக் கொண்டு, தலையைச் சொரிந்துகொண்டு உட்கார்ந்திருந்தேன்.
சற்றும் எதிர்பாராதபடி தமிழ்ப்பண்டிதர் தம்புசாமிப் பிள்ளை வந்து சேர்ந்தார். எனக்கு இந்தப் பண்டிதரிடத்தில் எப்போதும் ஒரு அச்சம். சில தமிழ்ப்பண்டிதர்களுக்கே இயல்பாக உள்ள குற்றம் கண்டுபிடிக்கும் கலையில் இவரும் பின் வாங்கியவரல்லர். நாம் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருக்கும் போதே உச்சரிப்பு பிழையைத் திருத்துவார். மொழிப் பிரச்சினையைக் கிளப்புவார். பாவம்! பள்ளிக்கூட அனுபவம் அவர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது. அவ்வளவுதான்.
‘தம்பீ! என்ன ஆழ்ந்த யோசனை?’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆசிரியர்.
“ஒன்றுமில்லை, ஐயா! சிறுகதை ஒன்று எழுத வேண்டும். காதற்கதையாக” என்று நான் கூறி முடிப்பதற்குள், பண்டிதர் குறுக்கிட்டு, “இதற்குத்தானா இவ்வளவு யோசனை? நமது பழந்தமிழ் இலக்கியத்தில் எத்தனையோ காதற் சம்பவங்கள் இருக்கின்றன. உதாரணமா..” என்று ஆரம்பித்துவிட்டார். ஐயோ! நான் காதற்கதையாக இருக்கக் கூடாது என்று சொல்வதற்குள், மனிதர் தொடர்ந்து சொல்ல முனைந்துவிட்டார். இனி அவரை நிறுத்துவதென்பது எவராலும் இயலாத காரியம்! தடுத்துப் பேசுவது தம்மை அவமதிப்பதென்று நினைக்கும் இயல்புடையவர் அவர். எனவே, அவர் சொல்லி முடிக்கும் வரை, சிவனே! என்று கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியவனானேன். பண்டிதர் ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சிவிட்டு ஆரம்பித்தார்.
பழந்தமிழகம், அழகும் அமைதியும் குடி கொண்ட ஒரு குக்கிராமத்தில் குழந்தைகள் விளையாடுகின்றனர். பெண் குழந்தைகள் மணல் வீடுகள் கட்டுகின்றனர். ஆண் குழந்தைகள் சிறு தேர் உருட்டுகின்றனர். இந்தக் குழந்தைக் குழுவிலே, ஆணும் பெண்ணுமான இரண்டு பிஞ்சு உள்ளங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. எப்படி ஒட்டின? அதுதான் விந்தை! சிறுமி பாடுபட்டு மணலில் கட்டிய சிறுவீட்டைச் சிறுவன் காலால் உதைத்துச் சிதைப்பான். அவளை அழவிட்டு வேடிக்கை பார்த்த பிறகு, அவளுக்காக தானே ஒரு சிறு வீடு கட்டித் தருவான். உடனே சிறுமியின் அழுகையெல்லாம் மாயமாகப் பறந்தோடிவிடும். இருவரும் கை கோர்த்து விளையாடுவார்கள்.
அவள் மங்கைப் பருவ மெய்தியதும் காதலர் பந்தாடுவார்கள். அப்போது அவன் அவள் கூந்தலிற் புனைந்த மாலையை அறுத்துக் கொண்டு ஓடிவிடுவான். அவள் ஆடும் பந்தினை எடுத்துக்கொண்டு தரமாட்டான். இந்தக் குறும்புத்தனம் அவளுக்குச் சீனி சர்க்கரை கட்டி போல இனிக்கும்.
இவ்வாறு காலம் கடிதிற்பறந்து சென்றது. மங்கை பதினெட்டு வயதான மடந்தையாயினள். சிறுவன் கட்டிளங் காளையானான். இனி முன்போல் ஓடியாடித் திரிதல் பண்பாகாது என்பதை அவளே உணர்ந்து கொள்கிறாள். அவளது வீடே அவளது கன்னிப்பருவத்து பாசறை யாகிறது.
தலைவனுக்கு இப்போது அவளைக் காண வேண்டுமென்ற பேராவல் மேலோங்குகிறது. ஒருமுறை அவளைக் கண்டுவிட்டால் போதுமென்று எண்ணுகிறான். எனவே, அவள் வசிக்கும் வீதி வழியே வருகிறான். அதோ, காதலியின் வீட்டையும் நெருங்கிவிட்டான். இப்போதுதான் தன் அன்பிற்குரியாளுடன் அவள் அன்னையும் அங்கு இருப்பதைத் தெரிந்து கொள்ளுகிறான். இனி எப்படி தன் காதலியைச் சந்திப்பது என்று ஏங்குகிறான்.
ஆனால் காதலர்களுக்கு வழி கண்டுபிடிப்பதா கஷ்டம்! அபூர்வமான யுக்தி ஒன்று பளிச்சிடுகிறது. கதவைத் தட்டி, “அம்மா! குடிப்பதற்கு நீர் வேண்டும்.விடாய் மிக்கது” என்கிறான்.
சூதறியாத காதலியின் அன்னையும், அருகிருந்த தன் மகளை அழைத்து, “மகளே! நீர் வேட்கை மிகுந்தவர் எவராயினும் அவர் விடாய் தீர்த்தல் நமது கடன். நீ சென்று அவனுக்கு இப்பாத்திரத்தில் நீர் கொடுத்து விடாய் தீர்த்து வா” என்கிறாள்.
குரலொளியிலிருந்தே வந்தவன் யாரென்பதை உணர்ந்து கொண்டாள் காதலி. அவனைத் தானும் காண வேண்டுமென்ற வேட்கை மிக்கவளாய், பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறாள்.
ஆம். அவனேதான். தன் உள்ளங்கவர்ந்த கள்வன்தான். இருவர் கண்களும் சந்திக்கின்றன. காதலனுக்குத் துணிவு பிறக்கிறது. உடனே அவன் அவள் கையைப் பிடிக்கிறான். காதலி அந்தக் கணத்தில் இன்பபுரியை எட்டிவிட்டதாகவே உணர்கிறாள். ஆயினும் தன் அன்னை இருக்கும்போது இவன் மேலும் என்ன செய்வானோ என்று அஞ்சுகிறாள். ‘அன்னாய்! இவன் செய்வதைப் பார்!’ என்று அவள் வாய் குழறிவிடுகிறது. காதலனும் திடுக்கிட்டு அவள் கையை விட்டு விடுகிறான்.
மகளின் குரல் கேட்டு அன்னை பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவருகிறாள், என்று கூறிய ஆசிரியர் ஒரு ‘பிரேக்’ போட்டுவிட்டு, “இந்த இடத்தில் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறாய்?” என்று என்னிடம் கேள்வி ஒன்றை வீசினார்.
“என்ன நடந்திருக்கும்? அன்னை தன் மகள் மூலம் நடந்த விஷயத்தை அறிந்து, அவனை ஏசிப் பேசி இருப்பாள். அல்லது எச்சரிக்கை செய்து அனுப்பி இருப்பாள்” என்றேன்.
“அதுதான் இல்லை. உண்மைக் காதல் காட்டிக் கொடுக்காது. அப்படியெல்லாம் செய்ய விடாது. இந்தச் சம்பவத்தை ஒரு பாடலாகப் புனைந்த கபிலர் எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார் என்பதைப் பார்.”
என்ன நடந்தது என்று அன்னை கேட்கவும், ‘ஒன்றுமில்லை, அம்மா! இவர் நீர் அருந்தும்போது விக்கல் எடுத்துக்கொண்டது. அதுதான் எனக்குப் பயமாகப் போய்விட்டது’ என்று கூறி தன் காதலனைக் காப்பாற்றிவிடுகிறாள் காதலி. அப்போது காதலன் அவளைத் தன் கடைக்கண்களால் நோக்கி நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறான். இதை ஒரு காதலி தன் தோழிக்குச் சொல்வதாக புலவர் பெருமான் கபிலர் பாடி இருக்கிறார் என்று கூறி முடித்த ஆசிரியர், “இதை இன்னும் சற்று விரிவாக எழுதினால், ஒரு அற்புதமான காதற்கதையாக ஆகிவிடாதா?” என்றார்.
“ஐயா! நான் காதல் இல்லாத கதை ஒன்று எழுத வேண்டுமென்று முயன்றேன். தாங்களோ காதற் கதை ஒன்றையே சொல்லிவிட்டீர்கள். இது எனக்குப் பிரயோசனப் படாது” என்றேன்.
“இலக்கியச் சுவை அறியாத உனக்கு இதன் நயம் எங்கு புலப்படப் போகிறது? கற்பனை கற்பனையென்று வெறும் வாய்ப்பந்தல் போடுவாய்” என்று எரிந்து விழுந்துவிட்டு, வெளியேறினார் தமிழாசிரியர் தம்புசாமிப் பிள்ளை.
– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.