காதலென்னும் தேரேறி…






அந்த சாஃப்ட்வேர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனந்துக்கு அப்போது உடனே சுதாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனதில் போட்டு பூட்டி வைத்த இரண்டு வருடக் காதல். இன்னமும் அவளிடம் சொல்லவில்லை. சொல்லக் கூடாது என்றில்லை. அவள் என்றாவது ஒரு நாள் தன்னோடு சுமுகமாகப் பேசுவாள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு இரண்டு வருடங்களாகி விட்டது.
ஆனந்துக்கு இன்னமும் அவன் அந்த ஆபீசில் சுதாவை முதல் முதலாகப் பார்த்த தினம் ஞாபகம் இருக்கிறது. வெளிர் நீல வண்ணச் சுடிதாரில் , அழகாக பாப் செய்யப்பட்ட முடி புரண்டாட தன் பெரிய கண்களால் இவனை அளந்த போதே தீர்மானித்து விட்டான் இவள் தான் தன் காதல் தேவதை என்று. ஆர். சுதா என்ற பெயர்ப் பலகைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த அவளிடம் தான் இவன் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை நீட்டினான். தன்னுடைய உணர்வின் சாயல் எதுவும் அவளுக்குள் தெரிகிறதா என்று பார்த்தான். ம்ஹூம்! இல்லை. மருதுக்குக் கூட ஒரு புன்னகை இல்லை.
இது நடந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் சுதாவின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. மற்றவர்களிடம் நல்ல விதமாகப் பேசும் அவள் ஆனந்தை மட்டும் ஏனோ அவாய்டு செய்தாள். அது ஆனந்துக்கு ஒரு கேள்விக் குறியாகவே இருந்தது. மெல்ல மெல்ல மற்ற நண்பர்கள் பழக்கமானார்கள். ரேணு, ப்ரியா என்று ஆனந்த் சுதாவிற்கு நெருக்கமானவர்களிடம் தேடிச் சென்று நட்பு பூண்டான். அவர்கள் மூலமாக அவளை நெருங்கலாம் என்ற நப்பாசை.
வருகிற பிறந்த நாளின் போது எல்லா நண்பர்களையும் அழைத்து ஒரு பார்ட்டி கொடுக்க வேண்டும். அப்போது தனிமையை ஏற்படுத்திக் கொண்டு சுதாவிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று பக்காவாக பிளான் போட்டுக் கொண்டான். ஆனால் பிறந்த நாளன்று சுதாவுக்கு உடல் நலமில்லாமல் போய் அவளால் பார்ட்டிக்கே வர முடியாமல் போய் விட்டது.
ஒரு நாள் காரிடாரில் இருவரும் எதிரும் புதிருமாக வர நேர்ந்தது. மிகவும் குறுகலான அந்தக் காரிடாரில் வேண்டுமென்றே விளையாட்டாக வழி மறித்து நிற்பது போல நின்றான் ஆனந்த்.
“என்ன சார்? விளயாடறீங்களா? வழி விடுங்க!”
“சுதா உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும். இன்னிக்கு மதியம் சாப்பிட வெளியில போகலாமா?”
“மிஸ்டர். ஆனந்த் நீங்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல? வழிய மறிச்சதும் இல்லாம கண்ணியக் குறைவா வேற பேசுறீங்க? எனக்கு இண்டீசண்டா பிஹேவ் பண்றவங்களைப் பிடிக்கவே பிடிக்காது. இத்தனை நாள் நல்லவர் மாதிரி வேஷம் போட்டது எதுக்குன்னு இப்ப இல்ல தெரியுது. இடியட் , ஸ்கவுண்டரல்!” என்று பொரிந்து தள்ளி விட்டாள்.
அதிர்ந்து போன ஆனந்த் மௌனமாய் வழி விட்டான்.
மனதுள் கேள்விகள் பல மொய்த்தன. ஒரு சாதாரண செயலுக்கு ஏன் இத்தனை கடுஞ்சொற்கள்? பிடித்தால் ஆமாம் பிடித்திருக்கு இல்லையென்றால் இல்லை. அவ்வளவு தானே? நான் என்ன கட்டாயப் படுத்தவா போகிறேன்? சுதாவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுள் கேள்வி வண்டு குடையும். அவள் எதுவுமே நடக்காதது போல இருந்தாள். முகத்தில் மட்டும் இனம் புரியாத சோகம் மட்டும் இருந்தது.
அவள் தோள் தொட்டுத் தழுவி அணைத்து “என்னாச்சு கண்ணம்மா? ” என்று கேட்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டான். சுதாவின் நெருங்கிய தோழி ப்ரியாவிடம் ஒரு நாள் தன் மனதைத் திறந்து சொல்லி விட்டான்.
“ப்ரியா! நான் சுதாவை டீப்பா லவ் பண்றேன். ஆனா அவ எங்கிட்டப் பேசவே மறுக்கறா! நீ கொஞ்சம் எனக்காகப் பேச முடியுமா?” என்று தன் தயக்கத்தை உதறி விட்டு சொல்லி விட்டான்.
“சுதாவையா? அவ சரியான அல்லி ராணியாச்சே! ஜெண்ட்ஸ் யார் கூடவும் அனாவசியமாப் பேசவே மாட்டாளே ! அவளைப் போயா? ஏன் நான்லாம் உனக்குக் கண்ணுக்குத் தெரியலையா” என்று கேட்டுச் சிரித்தாலும் உதவுவதாகச் சொல்லிப் போனாள்.
ஒரு வாரம் கழித்து வந்தாள் ப்ரியா. அவள் முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் இறுக்கமாக இருந்தது.
“ஆனந்த்! நீ சுதாவை மறக்கறது தான் உனக்கு நல்லது. ” என்றாள்.
“அவ என்ன சொன்னா ப்ரியா? அவளுக்கு என்னைப் பிடிக்கலையா? வேற யாரையாவது லவ் பண்றாளா? அப்படி ஏதாவது இருந்துதுன்னா சொல்லு. என்னால தாங்கிக்க முடியும்”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆனந்த். நீ காரணம் கேக்காதயேன். நான் காரணம் சொன்னா நீயே அவளை வேணாம்னு சொல்லிடுவ”
ஆனந்துக்கு எங்கோ நெருடியது.
காதலைச் சொல்வதற்கு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்? வேறு ஏதோ இருக்கிறது. என்று முடிவு செய்து கொண்டவன் ப்ரியாவை நேரே பார்த்தான்.
“இதப் பாரு ப்ரியா! என்னவோ இருக்கு. நீ அதைச் சொல்லாம மூடி மறைக்கற. இப்போ நீ சொல்லப் போறியா இல்ல நான் சுதா கிட்டயே நேர்ல கேக்கட்டுமா?”
ப்ரியாவின் முகத்தில் மின்னல் வேக மாற்றம். ஆனந்தை ஒரு சேரில் அமரச் செய்தவள் ஒரு கணம் தயங்கினாள் .
“இத நீ தெரிஞ்சுக்கறதால தப்பு ஒண்ணும் இல்லன்னு நெனக்கிறேன். நீ வெளியில யார்கிட்டயும் இதச் சொல்ல மாட்டேங்கற நம்பிக்கையில அவ சொன்னதை நான் உங்கிட்ட சொல்றேன்.” என்றவள் மிடறு விழுங்கி விட்டுத் தொடர்ந்தாள். ”
சுதா பாவம் ஆனந்த். சின்ன வயசுல அதாவது அவ ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போது யாரோ ஒரு கேவலமானவன் அவளை பாலியல் பலாத்காரம் பண்ணியிருக்கான். அறியாத வயசுல நடந்த அந்த கோரம் அவ மனசுல அப்படியே தங்கிடிச்சு. அவளோட அம்மாவும் , அப்பாவும் அவளை அந்த நிகழ்ச்சியிலருந்து வெளியில கொண்டு வர நல்ல நல்ல சைக்கியாட்டிரிஸ்டுங்க கிட்ட காட்டியிருக்காங்க. அதனால அவ கொஞ்சம் கொஞ்சமா அந்தத் தாக்கத்துல இருந்து வெளியில வந்து படிச்சு ஒரு வேலையும் பாக்கறா. ஆனாலும் மேல அவளுக்கு குடும்ப வாழ்க்கை மேல ஒரு நடுக்கம் , ஒரு பயம். அதிலும் குறிப்பா ஆண்கள் மேல உள்ள வெறுப்பு இன்னும் கொறயல. அதனால நீ அவளை மறந்துட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ ஆனந்த்” என்றாள் நீளமாக.
“ப்ரியா நீ இந்த விஷயத்தை எங்கிட்ட சொல்லுவேன்னு சுதாவுக்குத் தெரியுமா?”
“தெரியும்னு தான் நெனக்கிறேன். சொல்லக் கூடாதுன்னு அவ சொல்லல்ல”
கேட்டுக் கொண்டிருந்தவன் நெஞ்சில் அலைகள் ஓசையிட்டன. “சே! சுதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமா? சுதா பாவம். அறியாத வயதில் நிகழ்ந்த அந்தக் கொடுமைக்கு அவள் என்ன செய்வாள்? எவனோ ஒரு முகம் தெரியாத கொடூரன் செய்த தப்புக்கு சுதா தண்டனை அனுபவிப்பதா? மனதுள் அவளுடன் பேச ஆரம்பித்தான்.
” நீயும் என்மேல் காதலாகத் தான் இருக்கிறாயா? சுதா? அது தான் ஒதுங்கி ஒதுங்கிப் போகிறாயா? உன் ஆழ்மனம் என்னை நாடியிருக்கிறது. ஆனால் நீயாக உனக்கு விதித்துக் கொண்ட தண்டனை உன்னை ஆமையாக ஒடுங்க வைத்திருக்கிறது. ஆனால் இத்தனை நாளும் யாரிடமும் சொல்லாத பயங்கர ரகசியத்தை எனக்காக நீ ப்ரியாவிடம் சொல்லியிருக்கிறாய். இது கூட புரியாத முட்டாளா நான்! என் மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால் உன் வாழ்க்கையின் பயங்கர ரகசியத்தை எனக்கும் தெரியட்டும் என்று சொல்லியிருப்பாய்? கவலைப் படாதே சுதா! இந்த ஆனந்த் எப்பவும் உன் கூடத்தான். கல்யாணம் என்பது அந்த ஒரு விஷயம் மட்டுமல்ல.
ரசனைகளின் பரிமாற்றம் , புரிதல், விட்டுக் கொடுத்தல் என எல்லாம் சேர்ந்தது தான் காதலும் அதனால் விளையும் கல்யாணமும். உன் மனம் உன்னை மீறும் போது தோள் சாய நானிருப்பேன் உனக்கு. நீ கண்ணீர் வடித்தால் அதைத் துடைக்கும் கை நிச்சயம் என் கையாகத்தான் இருக்கும். பறவைகளை , வானத்தை, கடற்கரையை மனிதர்களை, மழையை சேர்ந்து ரசிப்போம் நம் வாழ்க்கையில்.
“நீயாக விரும்பும் வரை எல்லாமே காத்திருக்கும். ஏன் நானும் கூடத்தான். என் அருமைக் காதலி! நீ என் கை சேர்த்துக் கொண்டாலே போதும் . உன் மனப் புண்ணுக்கு நானே மருந்து . உன் மனம் என்னை நாடும் வரை , உன் மனம் என்னை ஏற்கும் வரை , உன் மனப்புண்ணுக்கு நானே மருந்து என்று நீ உணரும் வரை என்னால் காத்திருக்க முடியும் கண்மணி”
என்று தான் நினைக்கும் விஷயங்களை சுதாவிடம் சொல்லி அவள் முகம் மலர்வதைப் பார்க்க ஆவலோடு சுதாவின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான் ஆனந்த்.
– ஜனவரி 2013