காதலில்லா காதல்…!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 4,577
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

விசயம் தெரிய… நட்ராஜ் அலுவலகத்தில் கலகலப்பு.
அந்த அறையில் இருபது நாற்காலி மேசைகளில் ஆட்கள் நிறைந்து இருந்தார்கள். நான்கு பெண்களைத் தவிர மற்ற எல்லாரும் ஆண்கள். வயசு 28லிருந்து 55. தலை நரைத்த ராமசாமி மூத்தவர். அவர் மட்டுமே சோடாபாட்டில் கண்ணாடி. ஐம்பதைத் தொடும் நாலைந்து பேர்கள் மூக்கில் தொங்கும் ரீடிங் கிளாஸ். இரண்டு ஒன்று பெற்ற இளசுகள். அவர்கள்தான் திருமணமாகாதவர்கள் போல் பெண்களைக் கவரும் முயற்சி.
பெண்களில் ஒருத்திக்கு மட்டும் நாற்பதைத் தொடும் வயசு. நல்ல சிகப்பு. பின்னால் ஒரு மடிப்பு. தலை செயற்கை கருப்பு. ஓரளவிற்குப் பருமன். பார்க்கலாம் பரவாயில்லை. மற்றொருத்தி ஒன்று பெற்ற மாது. அடுத்த இரண்டும் இருபத்து மூன்றைத் தொடாதது. ஆண்கள் ஆளாளுக்கு வழிவார்கள். எல்லாரையும் சமாளித்து இவர்கள் கழுவிய மீன்களில் நழுவிய மீன்கள். யாரிடமும் கோபம், தாபம், முகச்சுளிப்புக் கிடையாது.
அலுவலகங்களில் ஆண்களைச் சமாளித்து பெண்கள் எந்த ஒரு பாதிப்பு, தொந்தரவுமில்லாமல் வீடு திரும்புவதென்பது ஒரு அசாதரண களை. பெண்கள் எந்த பேச்சிலும் கலந்து கொள்வார்கள். ஆண்கள் அசிங்கமாய்ப் பேசுகிறார்கள் என்று முகம் சுளிக்க மாட்டார்கள். தங்களுக்குத் தேவை இல்லாதது என்று பாரா முகமாக வேலை செய்வார்கள்.
“ஆளுக்குச் சுக்கிர திசை!” நட்ராஜ் வந்து தன் பக்கத்தில் அமர்ந்ததுமே ஆரம்பித்து விட்டான் விநாயகம்.
“என்ன மச்சான் பேரம்?” இன்னும் கலியாணமாகாத கன்றுக்குட்டி கலியாணராமன்.
“வரதட்சணைக்கு எவ்வளவு கொச்சை!” நட்ராஜ் வாயைத் திறக்கவில்லை.
“அதிக பட்ச விலை. பொண்ணு வீடே காலி. பெத்தவங்க காசி கமண்டலமா?”
“மச்சான் அழகு, தகுதி, திறமைக்கு பெண்ணைப் பெத்தவங்க பத்ரிநாத் போய் செத்துப் போகலாம்.”
“என்ன நட்ராஜ்! புள்ளைங்க கலாய்க்குது?” ராமசாமி வாழைப்பழத்தில் ஊசியாய் வந்தார்.
“இல்லே சார். ஒரே பொண்ணு….” இவன் இழுத்தான்.
“அப்போ மொத்த சொத்துமா?!” – வினோத்.
“பெரிய இடமா?”
“நான் சொல்றேன். பெண்ணோட அப்பா ராமநாதனுக்கு அம்பத்தூரில் ஒரு கம்பெனி இருக்கு. முறையான கணக்கு வழக்குகளோட வங்கிகள்ல சில கோடி. அப்புறம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சில கோடிகளில் அசத்தல் மாளிகை. கொடைக்கானில் தங்கி வர ஒரு வீடு. கொடுத்து வைச்ச காவலாளி குடும்பம் நடத்துறான்.” பன்னீர் செல்வம் படபடவென்று வாக்குமூலம் கொடுத்தான்.
“என்னப்பா?”
“தெ….தெரியலை சார்…..”
“சார்.! திருட்டுப்பயல்…! நாம பொறாமைப்படுவோம்ன்னு நழுவுறான். நிச்சயமே முடிச்சுட்டான். இவன் வீட்டு வாசல்ல பி.எம்.டபுள்யூ கிடந்தது. நான் விசாரிச்சேன்” – பாலு.
“என்னப்பா அப்படியா!?”
நட்ராஜிக்கு, ‘ஆமாம்!’ சொல்ல கூச்சமாக இருந்தது.
“எப்புடிடா புடிச்சே?!!”
“தானா வந்துது சார். தரகர்கிட்ட என் ஜாதகம் இருக்கு.”
“உனக்கு மனப்பூர்மான சம்மதம்தானே?” – ராமசாமிக்கு ரொம்ப அக்கறை.
“சம்மதம் சார்.”
“பணம், சொத்து பத்துக்கு ஆசைப்படலையே?”
“இ… இல்லே சார்.” – பொய்! அவன் மனசாட்சியே அவனை இடித்தது.
“அப்படியே ஆசைப்பட்டாலும் என்ன சார் தப்பு? இந்த அலுவலகத்துல முப்பது வருசம் குப்பைக் கொட்டி ஓய்வில் போனாலும் கோடியில ஒரு தூசு சேர்க்க முடியாது. ஊனம் குறை கிடையாது?”
”நட்ராஜ் ! ரொம்ப ஊனமா?” ராமசாமி பார்த்தார்.
“இல்லே சார். மூணு வயசுல இளம்பிள்ளைவாதத்தினால் ஒருகால் மட்டும் சூம்பல். நடையில் மட்டும் அது தெரியும். நொண்டும். மத்தப்படி பெரிசா எதுவும் கிடையாது.”
“வைப்பாட்டி வைச்சிக்கலாம் போ.” ரொம்ப அக்கரையாய் அவனுக்குச் சமாதானம் சொன்னார்.
“நானே அப்படி ஒரு பொண்ணை முடிக்கனும்ன்னு நெனைச்சேன் சார்” – விநாயகம்.
“வைப்பாட்டி வைச்சிக்கலாம்ங்குற நெனப்புலேயா?” – வினோத்.
“மச்சான்! கோழி குருடாய் இருந்தாலும் குழும்பு ருசிக்குக் குறை இருக்காது.” பக்கத்து இருக்கை குணா.
அனுபவம் பேசியது. குணா வேலைக்கு வருவதற்கு முன்பே லோலோ! வேலைக்கு வந்து முதல் சம்பளம் எடுத்ததும்…நட்ராஜை வற்புருத்தி இழுத்துக்கொண்டு பலான வீடு சென்றான்….அங்கு குணா வரிசை பிடித்து நின்றவள்களில் அழகானவளைக் கைப்பிடிக்க…அவள் நொண்டி…இவன் முகம் மாறியது.
வீடு திரும்பும்போது மீசையில் மண் ஒட்டவில்லை காட்ட….அவன் இதே வசனத்தை நட்ராஜிடம் சொன்னான்.
“எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வந்தது சார். என் அப்பாவும் இப்படி ஒரு சொல்லித்தான் என்னைச் சமாதனப்படுத்தினார். நானும் தலையசைச்சேன். கடைசியில் சாதகம் சரி இல்லேன்னு ஒத்துவரலை.” வருத்தப்பட்டான் விநாயகம்.
“பொண்ணு எப்படி?” ராமசாமி நட்ராஜை விசாரித்தார்.
“நல்ல களை.”
“நிறம்?”
“கோதுமை.”
“கோதுமை என்ன நிறம்..?”
விழித்தார்கள்.
“எல்லோரும் சொல்றதால நாமும் சொல்றோம். விடு.. இதெல்லாம் எப்படி கமுக்கமா முடிச்சே?”
“விடுப்பெடுத்துப் போய் பார்த்து வந்தேன்.”
“திருமணம் எப்போ?”
“எண்ணி ஏழு நாள் இருக்கு.”
“பாவி! வந்த வாய்ப்பை விடக்கூடாதுன்னு இப்படி ஏற்பாடா?” – பாலு வாயைப்பிளந்தான்.
குணா நன்றாக நாற்காலியில் சரிந்து இவன் பக்கம் சாய்ந்து, ‘காதல் என்னாச்சு?’ நட்ராஜிக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான்.
“காதலா ?!…நட்பு!” இவனும் அடுத்தவர்களுக்குக் கேட்காமல் பதில் சொன்னான்.
:காதுல பூ. மெரினாவுல கையும் மெய்யுமாய் ஒரு நாள் என்கிட்ட காதலி சொன்னே!”
உண்மை உடைய….நட்ராஜ்க்குள் பதற்றம். மறைக்க எழுந்து வெளியே வந்தான்.
கான்டீன் பக்கம் சென்றான். டீ குடித்தான்.
“கழட்டி விட்டுட்டியா?” பின்னாலேயே குரல்.
“வேணாம் குணா அந்த பேச்சை விடு.”
“ரெண்டு பேருக்கும் வருத்தம், சண்டையா?”
பதில் சொல்லாமல் சென்றான்.
இருக்கையில் அமர்ந்ததும் கொஞ்சம் சூடு தணிந்தது.
‘சியாமளாவிற்குப் பத்திரிக்கை வைத்தால் எடுப்பாளா? வைக்க வேண்டுமா? விடுவது முறையா?’ – யோசனை வந்தது.
மதியம் சாப்பாட்டு நேரத்தில் கைபேசியில் அவள் எண்கள் அழுத்தினான்.
“ஹலோ!”
“சொல்லுங்க?”
“எடுக்க மாட்டேன்னு பயந்தேன். பத்திரிக்கை வைச்சா வருவீயா?”
“கலியாணம் எப்போன்னு சொல்லவே இல்லியே…!?”
“….”
“ஏன்.. கதறுவேன், கலாட்டா செய்வேன்னு பயமா?”
”ச்சேச்சே!”
“வருவேன், மொய் வைப்பேன். மேடையில் மணப்பெண்ணிடம் எப்படி என்னை அறிமுகப்படுத்துவீங்க?”
“நட்பு, தோழி….?”
“வேணாம். கண்டுக்காம விடுங்க. அப்பா அம்மா, வீட்ல மத்தவங்க சொந்தபந்தம், நட்புன்னு நெனைக்கட்டும்.”
“உண்மையிலேயே என் மேல கோபதாபம், வெறுப்பு கொஞ்சம்கூட இல்லையா சியாம்?”
“இல்லே. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்கிறதுல அர்த்தமில்லே. அப்படியே ஒன்னு சேர்த்தாலும் அது பழையபடி ஆகாது. புரிஞ்சு தெளிஞ்சுட்டேன்.”
“நான் ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன் சியாம்.”
“செத்துடுவேன்னா?”
“இல்லே….உடைஞ்சுடுவீயோன்னு.”
“மாட்டேன். செத்துப் போறதுல பிரயோஜனம் இருக்கா?”
“இல்லே.”
“பின்னே!? ஆனா ஒரு வருத்தம்.”
“என்ன?”
“என்கிட்ட உண்மையைச் சொல்லி இருக்கலாம்.”
“எந்த உண்மையை?”
“நட்ராஜ் சொன்னது மொத்தமும் பொய்!”
“சியாம்!!”
“ஆமாம். பெண் சொந்தம் பந்தம் கிடையாது. தலையிலேயும் விடியலை. என்னைக் கையில வைச்சுக்கிட்டே…எனக்குத் தெரியாம போய் பொண்ணு பார்த்திருக்கீங்க. நிச்சயம் முடிச்சிருக்கீங்க. எனக்கு உங்களைத் தெரியும்! பணத்துக்கு ஆசைப்பட்டு விழுந்திட்டீங்க.
எனக்கு நிறைய புரியுது நட்ராஜ். ரெண்டு சம்பளம். சவுகரியமாய் வாழலாம்ன்னு கணக்குப் பண்ணியே என்னைக் காதலிச்சதா நடிச்சிருக்கீங்க. அதிகம் பணத்தைக் கண்டதும் தாவிட்டீங்க. எனக்கு ஒரே ஒரு ஆறுதல். எனக்கு இதில் ஒன்னே ஒன்னு பிடிச்சிருக்கு. பணத்துக்கேன்னாலும் மாற்றுத் திறனாளியை முடிக்கிறது.”
“இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?”
“அது உங்களுக்குத் தேவை இல்லாதது. என்னைக்கோ ஒருநாள் எனக்குத் தெரியப்போறது. சீக்கிரம் தெரிஞ்சுடுச்சு. பேயோடாயினும் பிரிதல் அரிது. அந்த சின்ன வருத்தமேயொழிய பிரிதலில் எனக்குப் பெரிய ஏமாற்றம்; இல்லே.”
“அப்போ நீயும் என்னை தாமரை இலைத் தண்ணீராய்த்தான் காதலிச்சியா?”
“உங்களைப் போல நான் உறுமீன் கொக்காய் உள்ளுக்குள் ஒன்னும் வெளிக்கு ஒன்னுமாய் இல்லே. நல்லா மனசாற காதலிச்சேன். இப்போ அழுக்கானதும் அத்தனையும் துடைச்சிட்டேன். பிரிதல் சந்தோசமே.”
“வஞ்சம், பழி வாங்கல்?”
“அப்படி ஏதாவது பண்ணனுமா?!”
“….”
“பயப்பட வேணாம். மாட்டேன்!”
“ஒரு நல்லதைத் தவற விட்டுட்டேன் சியாம்.”
“அதை மாத்தி யோசிக்கலாம். இப்போ….மகாலட்சுமியே தனக்கு மனைவியாய் வந்ததாய் நினைக்கலாம். அதுதான் சரி. ஒரு உண்மை… காதலில் பெண்கள் சத்தியமாய்க் கத்துக்கொள்ள வேண்டியது ஒன்னே ஒன்னுதான். தாலி கழுத்தில் ஏறி திருமணம் முடிக்கும்வரை காதலன் தன்னைத் திறந்து பார்க்க அனுதிக்கக்கூடாது.”
“சியாம்!”
“அப்போதான் காதல் உடைந்து வேறு வேறு ஆனாலும் தாலி கட்டினவனோட உறுத்தலில்லாமல் வாழலாம். இன்னையக் காலக்கட்டம் அதுவும் தேவையில்லே. எந்த ஆணும் யோக்கியமில்லே. பெண்ணும் யோக்கியமில்லே.”
“உன் மனதில் இருக்கும் என்னை அழிக்கக் கஷ்டப்படுறீயா சியாம்?!”
“சந்தேகம் வேணாம். அன்னைக்கே நான் சுத்தமா அழிச்சு இப்போ மனசு கழுவி விட்ட கரும்பலகை. நாளைக்கே மாப்பிள்ளை வந்தாலும் தாலி கட்டி சந்தோசமாய் வாழ நான் தயாராகிட்டேன்.”
“ஓ.கே. சியாம். பிரிஞ்சாச்சேத் தவிர உன் தெளிவு எனக்கில்லே. உன்னை நேரடியாய்ப் பார்த்து பத்திரிக்கை வைக்கிற அளவுக்கு என் மனசில் தெம்பில்லே. தபால்ல அனுப்புறேன். வந்துடு.”
“கண்டிப்பா.” அணைத்தாள்.
மொத்தப் பேச்சையும் அருகில் இருந்து கவனமாய்க் கேட்ட நந்தினி, “பொறுக்கி!” – உறுமி கோபத்தைக் காட்டினாள்.
அத்தியாயம் – 4
நட்ராஜ் – சுகாசினி திருமணம் கோலாகலமாக நடந்தது. மாப்பிள்ளை பணத்திற்கு வாங்கப்பட்டவன் என்பது விழா ஏற்பாடு, நடப்புகளில் தெளிவாகத் தெரிந்தது.
‘தனக்கும் நட்ராஜிக்கும் இப்படி தடபுடலாய்த் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை. ரொம்ப சாதாரண திருமண மண்டபத்தில், சுற்றம் நட்பு சூழ…எளிதாய் தாலி கட்டும் வைபோகம். இந்த திருணமன ஏற்பாட்டிற்கே இருவரும் கடன் கட்டாயம் வாங்க வேண்டும்.!’ – சியமளா நினைத்தாள்.
“புடிச்சாலும் நல்ல புளியங்கொம்பாய்த்தான் புடிச்சிருக்கான்!” – ராமசாமி தன் அலுவலக சகாக்கள் எல்லாரிடமும் சொன்னார்.
சியாமாளவிற்குத்தான் மணமக்களுக்கு பரிசு பொருளைத் தேர்ந்தெடுப்பதில் ஏகக் குழப்பம்.
பணம் எவ்வளவு வைத்தாலும் இவ்வளவுதானா…!? தோன்றும். வெள்ளி சவரன் எதுவாய் இருந்தாலும்… அன்பை அடையாளம் காட்ட அவைகளுக்குத் தகுதியே இல்லை. மேலும்… அதெல்லாம் தனக்குச் சாத்தியப்படாத சமாச்சாரங்கள்.
அன்பளிப்பு கடைக்குள்…. ஜோடிப் புறா, ஆண்பெண் ஜோடி என்று எல்லாம் காதலை வெளிப்படுத்தும் சாமாச்சாரங்கள். இது பார்க்கிற ஆணுக்கு மனசைப் பாதிக்கும். விசயமே வெளிப்படாமல் இருந்தாலும் இப்படி இருக்குமோ என்று பெண்ணுக்கும் மனசுக்குள் சின்ன சலசலப்பு, சந்தேகத்தை ஏற்படுத்தும். மண்டைக்காய…. சின்னதாய் ஒரு ஈபில் டவர் வாங்கி பரிசாளித்தாள்.
சுகாசினி மட்டும் கால் ஊனமில்லை என்றால் அவளைக் கொத்திக்கொண்டு போக எத்தனை மில்லியனர்களோ! அத்தனை அழகு.
அன்றைக்கே தேனிலவு. மணமக்கள் கொடைக்கானல் பயணம்.
முழுதாய் ஒருவாரம் கழித்துதான் நட்ராஜ் வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரத்திலேயே புதிதாய் சொர்க்கம் கண்டதற்கான அடையாளமாய் புது மாப்பிள்ளை மினுமினுப்பு உடல், முகம் எங்கும் தெரிந்தது. மேலும் பணக்காரனாய் ஆகி விட்ட பெருமிதம் வேறு. தானாகவே களை வந்திருந்தது.
“என்ன! உன் பழைய ஹீரோ ஹோண்டாவுல வந்திருக்கே கார்ல வரலையா?”. ராமசாமி கேட்டார்.
“இல்லே சார்.”
“கார் இல்லியா?”
“எனக்குத் தேவை இல்லே. அது பத்தி பேச்சு இல்லே.”
“பொண்ணு எங்கே இருக்கா?”
“என் வீட்ல.”
“வீட்டோட மாப்பிள்ளையா, தனிக்குத்தனமா?”
“தனிக்குடித்தனம்தான். புது வீடு வாங்க பேச்சு வார்த்தை நடக்குது.”
“மச்சான்! ஒரு வாரம் மஜாவா?” – பாலு கண் சிமிட்டி கேட்டான்.
“சொதப்பலையே?” – குணா. நக்கல்.
நண்பர்கள் கலாட்டா….வர்ஷினிக்கும் வசந்தாவிற்கும் முகம் சிவந்து போனது.
“உங்களுக்கு எப்போம்மா வைபோகம்?” – ராமசாமி அவர்களையும் இழுத்தார்.
“பார்த்திக்கிட்டிருக்காங்க சார்.” – வர்ஷினி. முகத்தில் என்ன நாணம், செம்மை!
“வசந்தா நீ?” – ராமசாமி அவளைப் பார்த்தார்.
“மாமன் பையன் ஒருத்தர் தயார் சார்.”
“எப்போ முடிச்சு?”
“தை மாசம் நாள் வைச்சாச்சு.”
“இங்கே கூடாரம் காலியா…?” ராமசாமி ஆதங்கப்பட்டார்.
‘கிழத்துக்குப் புத்தியைப் பாரு…’ – ஒருத்தி பொருமினாள்.
“எங்களுக்குச் சொல்லவே இல்லே…!?”
குணாவிற்கு கை நழுவி போய்விட்ட அவசரம்.
“சொன்னா எப்படி சைட்டடிப்பீங்க. அதான் சொல்லலை!” மடிப்பு மஞ்சுளா நமட்டு சிரிப்பில் கலாய்த்தாள்.
“பொறாமை! வயசு வித்தியாசமில்லாம நாங்களும் எல்லாரையும் பார்த்துதானே வைக்கிறோம்.”
“அது ஆண்களுக்கே உள்ள வியாதி. எவ என்னைக்கு மாட்டுவாள்ன்னு கண்ணுல கொள்ளி!” மஞ்சுளா வேலையைப் பார்த்துக் கொண்டே எல்லாரையும் அடிக்கண்ணால் பார்த்து சாட்டை அடி கொடுத்தாள்..
‘இந்த காலத்து ஆண் பெண்கள் சளைக்காமல், சங்கோஜமில்லாமல் எப்படியெல்லாம் பேசுகிறார்கள்.?!’ – ராமாசாமிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“மாப்பிள்ளை! வேலையைத் தொடர்வீங்களா, மாட்டீங்களா?” – விநாயகம்.
“உத்தியோகம் புருச லட்சணம்!”
“மயிரு! கஞ்சப் பிசினாரி!” – பன்னீர்செல்வம்.
“விட்டுடுடா. இப்பவே கம்பெனி கணக்கு வழக்கெல்லாம் கத்துக்கோ. உத்தியோகம் புருச லட்சணம்ன்னு பீலா விடாம மாமனாரோடு போய் நிர்வாக இயக்குநராய் உட்கார்ந்து பயிற்சி எடுத்துக்கோ. அவர்கிட்ட நெளிவு சுளிவு கத்துக்கிட்டீன்னா இளரத்தத்துல நாளைக்குக் கம்பெனியை இன்னும் நல்லத்தனமாக நடத்தலாம்.” – பாலு புத்தி சொன்னான்.
இத்தனை காலமாகத்தான் வரவுக்கும் செலவுக்கும் என்று கையைச் சுருக்கிக் கொண்டு இருந்தோம். இப்போது எதிர்பாராத அளவு பணம், நகை, சொத்து. வேலையை விட்டு உட்கார்ந்து பணக்கார மாப்பிள்ளையாய் செலவழிக்கலாம். பின்னால் எப்படியும் கம்பெனி கைக்குள் வரும். அப்போது தடுமாறாமல் இருக்க இப்போதே போய் பயிற்சி எடுக்க இவனுக்கும் ஆசை.
ஆனால் மாமனார் மாமியார் வாயில் அது பற்றிய பேச்சே இல்லை. வலிய எப்படிப் போய் பிடுங்க?
பெரிய கம்பெனி முதலாளியின் மருமகன் சாதாரண எழுத்தராக ஒரு அலுவலகத்தில் குப்பைக் கொட்டுவது அவருக்கே அவமானம். கண்டிப்பார் அழைப்பார். கவுரமாக போகலாம். ஆற்றுத் தண்ணீரை வெள்ளம் அடித்துக்கொண்டு போகாது. புதுத்தண்ணீர் புகுந்து நிரம்பும். அவசரப்பட்டால் அசிங்கம். அதனால் இவன் அது பற்றி பேச்சே எடுக்க வில்லை.
“மாமனார் அப்படித்தான் சொன்னார். எனக்குத்தான் உத்தியோகம் புருச லட்சனம். வேலையை விட்டால் மதிப்பு மரியாதை இருக்காதுன்னு மறுப்பு சொன்னேன்.” மீசையில் மண் ஒட்டாமல் சொன்னான்.
மாலை நடராஜ் மனைவிக்குப் பூ வாங்கினான். இருபது ரூபாய்க்கு நான்கு முழம்.
சுகாசினிக்கு மல்லிகைப் பூ என்றால் கொள்ளைப் பிரியம். கொஞ்சமும் மற்றப் பூக்கள் கலப்பில்லாமல் முதலிரவு கட்டிலை வெறும் மல்லிகைப் பூவினாயே அலங்கரித்து வைத்திருந்ததிலிருந்தே அது தெரிந்தது.
“உனக்கு மல்லிப்பூ என்றால் உயிரா?” – இவனே அன்று அவளிடம். வாய்விட்டு கேட்டான்.
“ஆமாம்.”
“அப்போ வீட்டுக்கு வந்தா மல்லிப்பூவோடத்தான் வரனுமா?”
“ம்ம்…”
இவனை இப்படி மாற்றியதற்கு அம்மா அப்பாவும் ஒரு காரணம்.
“இதோ பார் நட்ராஜ்! உன் கஞ்சத்தனத்தையெல்லாம் தாலி கட்டினதும் மூட்டைக் கட்டி வை. நீ கையைச் சுருக்கி தினம் வெறும் கையோடு வந்தால்… பணம்தான் கொட்டிக்கிடக்கே சம்பளத்திலேயாவது பூ வாங்கி வரலாமேன்னு புதுப்பொண்ணுக்கு நினைப்பு வரும். இல்லே… பணத்தாலத்தான் தன் கழுத்துல தாலி மத்தப்படி விரும்பி திருமணம் முடிக்கலைன்னு தன்னிரக்கம் வரும். மாற்றுத் திறனாளி அப்படித்தான் யோசிக்க வைக்கும். தினம் பூவோடும் அவளுக்குப் பிடிச்ச தின்பண்டத்தோடும் வா.”
“நீ பொண்ணைக் கொண்டாடுவதைப் பார்த்து பெத்தவங்களுக்கு உன் மேல மதிப்பு, மரியாதை, அன்பு, ஆசை, அக்கறை வரனும். தங்கமான மாப்பிள்ளையைத் தேடி எடுத்திருக்கிறோம்ன்னு நெனைச்சு பெருமைப்படனும்.” சொன்னார்.
சுகாசினிக்கு…தான் பணக்காரி, பெரிய இடத்துப் பெண் என்கிற கர்வம் துளி இல்லை. சாதாரண ஒரு நடுத்தர வர்க்கப் பெண் போலவே அவள் நடப்பு, பேச்சு…எல்லாம்.
“நமக்கு வீடு பார்த்து தனிக்குடித்தனம் போகும்வரை நாம என் வீட்டிலேயே இருக்கலாம். அதுதான் எனக்கு மரியாதை.” – என்று சொன்னதற்குக் கூட அவள் மறுப்பு சொல்லவில்லை. இவன் சின்ன வீட்டில் சிறிய அறையில் மனம் கோணாத வாழ்க்கை.
தனக்கு ஏன் எல்லாமே நல்லபடியாக அமைகிறது. அவனுக்கே பல சமயங்களில் யோசனை, பெருமை. இப்போதும் அதே புளகாங்கிதத்தில் பின்னால் வரும் லாரியைக் கவனிக்காமல் வண்டியைத் திருப்ப…
சென்ற நிமிசம் வரை உயிர் உடலாய் இருந்த நட்ராஜ் சடுதியில் இரத்தச் சகதி ஆனான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
