கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 8,312 
 
 

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-16

விரலிலிருந்த மோதிரத்தைப் பார்த்தவள், “முதற்கணவனுடன் நடந்த திருமண ஒப்பந்தத்திற்கு எனக்கு அணிவித்த ஒற்றைக்கல் மோதிரம், நினைவுக்கு வருகிறது”, என்றாள். பதிலுக்கு “மிஸியே ஓப்ஸ்க்குயுர்( -தெளிவற்ற என்று பொருள்). ஞாபகமிருக்கு”, என்கிறேன். இருவரும் சிரிக்கிறோம். “ஆமாம். அந்த ஆளுக்கு அப்படியொரு பெயர், இல்லையென்றா சொல்ல முடியும்”.- அவள்.

வெகுநேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம், மெல்லியதாக ஒரு சிரிப்பு, அதிலுள்ள கேலியை அறிவேன், “என்பிள்ளைகளை எனக்குத் தெரியாதா, எவ்வளவு நல்லா படிச்சுவச்சிருக்கேன், கொலென்ல என்ன நடந்ததென்று சொல்லாம போய்விடுவாயா என்ன?” என்பது மாதிரியான சிரிப்பு.

அன்றைக்கென்று இல்லை, அதற்குப்பிறகும் அதைச் சொல்லவேண்டுமென்று நினைத்ததில்லை.

தொடர்ந்து பேசுவதற்கு முன்பாக வெகுநேரம் காத்திருந்தாள், பேசியபோது, அவள்குரல் தழுதழுத்தது, தாய்ப்பாசத்தில் உருகினாள்,” இங்கே இதற்குமேலே உனக்கு செய்ய ஒன்றுமில்லை, என்பதையாவது தெரிந்து வைத்திருக்கிறாயா? காலனி நாட்டிலே கல்யாணமென்பதெல்லாம், என்றைக்கும் சாத்தியமில்லை என்பதாவது தெரியுமா?. தோளை உயர்த்தி, பதிலுக்குச் சிரிக்கிறேன். தெரியாது, தெரிந்து என்ன செய்யப்போகிறேன் என்று அதற்கு அர்த்தம். “எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒருவனை கல்யாணம் பண்ணிக்கொள்வேன், யாரென்னை தடுப்பது” – நான். ‘நீ நினைக்கிற மாதிரி எதையும் செய்திட முடியாது’, என்பதுபோல தலையாட்டுகிறாள். இங்கே, ரகசியமென்று எதுவுமில்லை. ஊர்பூரா உன்னைப் பத்தி தெரிஞ்சிருக்கும், இங்கே வேறொருத்தனோட உனக்கு கல்யாணம் என்பதெல்லாம் ஆகிற காரியமா என்ன?, என்றவள் வாயிலிருந்து அடுத்து வந்த சொற்களை அத்தனை சுலபமாக என்னால் மறக்க முடியாது: அவர்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்கில்லையா? – அவள். பதிலுக்கு நான்,” அதுதான், தப்பான அபிப்யாரங்கள் இருந்தாலும், இங்குள்ள அத்தனை பேருக்கும், நான் வேண்டும்., ” ஆமாம், உன்னை அவங்க விரும்பறதுக்கு உன்னிடமுள்ள வேறொருத்தியும் காரணம்”, மீண்டும் அவள்.

“பணத்திற்காகத்தானே, அவன்கிட்டே போயிட்டு வர”, – அம்மா. இப்படி நேரிடையாகப் கேட்பாளென்று நினைக்கவில்லை, அவளுக்கு என்ன பதில் சொல்லலாமென்று தயக்கம், “ஆமாம் பணத்திற்காகத்தான்”- நான். என்னுடைய பதிலில் அவளுக்குத் திருப்தியில்லை என்பதுபோல, மறுபடியும், வெகுநேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ” உனக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம், படிப்பிலே நான் கொஞ்சம் அப்படி இப்படித்தானிருந்தேன், நீ பரவாயில்லை. ஆனால் எதிலும் தீவிரமாயிருப்பேன், வெகுகாலம் அப்படித்தானிருந்தேன், சொந்த சந்தோஷத்தையெல்லாம் தொலைத்தாயிற்று”, – என்றாள்

சாடெக்கில் அன்றைக்கு விடுமுறைதினம். கால்களிரண்டும் நாற்காலிமீது கிடக்க, சாய்வு நாற்காலியொன்றில் அமர்ந்திருந்தாள். வெளிக்காற்றுக்காகவென்று, சமையல் மற்றும் வரவேற்பறைக் கதவுகளை திறந்து வைத்திருக்கவேண்டும். முகத்தில் கடுகடுப்பில்லை, அமைதியாகத்தானிருந்தாள், சின்னப்பெண் நிற்பது தெரிந்தது. அவளைப் பற்றிப்பேச அவளுக்கு பேச விருப்பம்.

அணைக்கட்டு அருகே வாங்கியிருந்த நிலத்தையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு, புறப்படுவதற்கான கடைசி நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. பிரான்சுக்குப் புறப்படுவதற்கான நாள் அதிகத் தூரத்திலில்லை.

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி ஆணைகள் பிறப்பிப்பது, அவளுக்கு வழக்கமென்றாகிவிட்டது. நாளைக்கு நிழற்படமொன்றெடுக்க ஸ்டுடியோவுக்குப் போகிறோம், ஒரு பக்கம் பண அதிகமாக கேட்கிறார்களென்று புலம்பலிருந்தாலும், குடும்ப நிழற்படத்திற்காகும் செலவைக்குறித்து அவள் கவலைப்படுவதில்லை. நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறோமோ இல்லையோ, போட்டோக்களில் பார்த்துக்கொள்கிறோம். போட்டோவை கையில் வைத்துக்கொண்டு, அடுத்தவரை விமர்சிக்கும் வழக்கமில்லை. தனித்தனியாகவோ அல்லது எல்லோரையும் சேர்ந்தாற்போலவோ எங்களை நாங்களே பார்த்துக்கொள்வது வழக்கம். பழையபோட்டோக்களிளிருந்த மிகவும் இளவயது தோற்றங்களையும், சமீபத்தில் எடுத்த நிழற்படங்களிலுள்ள, இப்போதையை எங்கள் தோற்றத்தையும் நேரங்காலமின்றி பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கிடையேயான இடைவெளி அதிகமென்றே சொல்லவேண்டும். ஒரு முறை பார்த்துமுடித்த பிறகு பழையபடி போட்டோக்கள், அலமாரித் துணிகளுக்கிடையில், பதவிசாக சேர்ந்துவிடும். எதற்காக எங்களையெல்லாம் போட்டோ எடுக்கிறாளென்று நினைக்கிறீர்கள், போட்டோக்களிலிருந்தே எங்கள் ஒழுங்கான வளர்ச்சியைப்பற்றிய முடிவுக்கு அவளால் வரமுடிகிறதாம். எல்லா அம்மாக்களையும் போலவே பிள்ளைகளை வெகுநேரம் போட்டோக்களில் அவதானிக்கிறாள், அவற்றைக் கையில் வைத்துக்கொண்டு, ஒன்றை மற்றோடு ஒப்பிட்டாகவேண்டும், ஒவ்வொரு பிள்ளையின் வளர்ச்சியைப் பற்றியும் பேசியாகவேண்டும், பேசுவாள். அவள் பேசப்பேசக் கேட்டுக்கொண்டிருப்போம் பதில் சொல்வதில்லை.

பிள்ளைகளை படமெடுப்பதோடு சரி, வேறெதையும் படமெடுத்து வைத்துக் கொள்ளவேண்டுமென்கிற ஆசைகளெல்லாம் அவளுக்கில்லை, என்னிடத்தில் வென்லோங் சமபந்தமான படமெதுவுமில்லை அதாவது அங்குள்ள பூங்கா, நதி, நீண்ட பெரிய சாலைகள், சாலைகள் ஒட்டிய பிரெஞ்சுப்பெண்ணை வசீகரிக்கற புளியமரங்களென்று எதையும் நிழற்படமாக எடுத்துவைத்துக்கொண்டதில்லை. வீடு, இரும்பும் பொன்னிறமாயும் மின்னும் பெரியகட்டில்கள், பெரிய அவென்யூக்களுக்குண்டான சிவப்பு ஒளியை உமிழும் பல்புகள், அவை பிராகாசமாய் எரிய வகுப்பறைபோல தோற்றத்தைத் தரும் வெள்ளையடித்த சுவர்களைக்கொண்ட அறைகள், பல்புகளை அலங்கரிக்கிற பச்சைவண்ணை லேம்ப்ஷேடுகளென்று – தலைவிதியேயென சகித்துக்கொண்டிருக்கும் அவைகளெல்லாம் நிரந்தரமாக பிரான்சுக்கு செல்லும்வரை (அங்கே பா-தெ-கலேக்கும் ஆந்த்ர் -தே-மேருக்கும் இடையில், அவளுடைய குணத்திற்கும், வயதுக்கும், மனச்சுமைகளுக்கும் பொருந்தக்கூடிய இடமொன்று இருப்பதாகச் வெகுகாலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்) எங்களுக்கு வேண்டும், அனால் அவற்றைக்கூட நிழற்பட நினைவுகளாக எடுத்து வைத்துக்கொண்டதில்லை. இனி எதுவும் வேண்டாம் என தீர்மானிக்கிற நேரத்தில் சாடெக்க்கில் இருப்பதைப்போன்றே ஒரு வீட்டையும் அறையையும் பார்த்துக்கொண்டு பிரான்சில்- லுவாரில் தங்கிவிடுவாள், அதற்குப்பிறகு வேண்டுமானால் இவற்றையெல்லாம் அவள் மறக்கக்கூடும்.

இடங்கள், காட்சிகளென்றெல்லாம் படங்கள் எடுத்துவைத்திருப்பதில்லை, அத்தனை படங்களிலும் நாங்கள்தான், அதாவது அவளுடைய பிள்ளைகள் மாத்திரமே இருப்பார்கள், அதுவும் எங்கே ஒவ்வொருவரையும் தனித்தனியாக எடுத்தால் பணம் செலவாகுமென்று பயந்து, எப்போதும் எங்களை ஒன்றாக நிற்கவைத்துத எடுத்த நிழற்படங்களாகவே அவ்வளவும் இருக்கும். எப்போதாவது இடங்கள், காட்சிகளோடு நாங்கள் நிழற்படங்களில் இடம்பெற்ற அதிர்ஷ்டமுமுண்டு, அப்படங்கள் எங்களுக்குச் சொந்தமானவையுமல்ல, அவைகளை அம்மாவுடைய நண்பர்களோ அல்லது புதிதாக காலனியில் பணிபுரிய வந்திருக்கும் சக ஊழியர்களோ, பிரான்சிலுள்ள தங்கள் சொந்தங்கள், நட்புகள் ஆகியவற்றிர்க்கு காட்டுவதற்காக எடுத்ததாக இருக்கும், அம்மாதிரியான நிழற்படங்களில், வெப்பமண்டல பகுதிகளுக்கே உரிய காட்சிகள், தென்னைமரங்கள், காலனி நாட்டுத் தோட்டத் தொழிலாளிகளான கூலிகள் ஆகியோர் இடம்பெறுவர்.

அதிசயக்கத் தக்கவகையில், அம்மாவும் தன்னுடைய பிள்ளைகளுடைய நிழற்படங்களை, இந்தமுறை பிரான்சுக்குப் போக நேர்ந்தபோது தன்னுடைய சொந்தங்களுக்குக் காட்டுகிறாள். எப்போதுமே சொந்தக்காரர்களின் வீடுகளுக்கெல்லாம் போய்க்கொண்டிருந்த வழக்கம் எங்களுக்கிருந்ததில்லை, என்னுடைய சகோதரர்களும் அவர்கள் யார், எப்படி சொந்தம் என்றெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பியவர்கள் கிடையாது. நான் வயதிற் சிறியவளென்பதால், அவள் போகுமிடமெல்லாம் வரவேண்டுமென்று எனக்குக் கட்டளை. அடுத்த பயணத்தில் அதுவும் நின்றுபோயிற்று. அப்பாவுடைய சகோதரிகளுக்கும், அம்மாவுடைய சகோதரிகளுக்கும், காலனி நாட்டிலிருந்து வந்திருந்த என்னைப்பற்றிய செய்திகள் எதுவும் நல்லதாக இல்லை, நான் வேண்டாதவளாகிவிட்டேன். அவர்களுடைய பெண்களிடமிருந்து, நான் < தள்ளி வைக்கப்படவேண்டியவள். அம்மா மட்டும் எதுவுமே நடவாதமாதிரி அவர்களுடைய வீடுகளுக்கெல்லாம் போய்வந்துகொண்டிருந்தாள். தன்னுடையை பிள்ளைகளை நேரில் அழைத்துபோய் அவர்களிடம் காட்டமுடியாது, நிழற்படங்களில்தான் காட்டியாகவேண்டும், எனவே அவற்றைச் சொந்தங்களுக்குக் காட்டுகிறாள். இம்மாதிரியான காரியங்களிலிருந்து அவளுடைய உயிர்வாழ்க்கையின் நோக்கங்களை அனுமானிக்க முடியுமா? சொந்தம், வாழ்க்கையில் உற்ற இன்னல்கள், அத்தனையிலும் போதுபோதுமென்று அலுத்து, இடையிலேயே ஒதுங்கிக்கொள்கிற வழக்கமெல்லாம் எனக்கில்லை, மாறாக எடுத்துக்கொண்ட காரியத்தில் கடைசிவரை போராடும் குணம் தனக்குண்டு என்று சொல்வதைப்போல அவள் நடந்துகொள்ளவில்லை? அப்படித்தான் நினைக்கிறேன். இதுபோன்ற அசட்டுத்தனமான அவளுடைய காரியங்களை துணிச்சலென்றுதான் வர்ணிக்கவேண்டும், இதுபோன்ற துணிச்சலில்தான் அவளுடைய ஆழமான பரிவும் அன்பும் ஒளிந்துக்கிடக்கின்றன.

அவள் மூப்டைந்து, தலைமுடியெல்லாம் நரைத்தகாலத்திலுங்கூட புகைப்படம் எடுக்கிறவர்களைத் தேடிப்போயிருக்கிறாள். அவள் தனியாகப் போவாள். படம்பிடித்துக்கொள்வாள், தங்கத்திலான சங்கிலி, பொன்வேலைப்பாடுடன்கூடிய பச்சைக்கல் பதித்த தங்க ப்ரூச், அழகான கருஞ்சிவப்பு நிற கவுணென்று அப்படங்களில் காட்சிதருவாள். முடியைப் படியவாரி, எழுதிய சித்திரம்போல நிழற்படத்தில் இருப்பாள். வசதிபடைத்த உள்ளூர் மக்களுங்கூட, வாழ்நாளில் ஒருமுறை, குறிப்பாக தங்கள் அந்திமக் காலங்களில் புகைப்படகாரர்களைத் தேடிப்போவதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எடுத்துக்கொள்ளும் படங்களெல்லாம், கொஞ்சம் பெரியதாக, ஒன்றுபோலவே இருக்கும், பொன்னிற சட்டங்களிட்டு, தங்கள் முன்னோர்களின் நிழற்படங்களுக்கு அருகிலேயே தங்கள் படங்களையும் சுவரில் தொங்கவிட்டிருப்பார்கள். படமெடுத்துக் கொண்டவர்களையும் பார்த்திருக்கிறேன், அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களையும் பார்த்திருக்கிறேன், அத்தனைப் படங்களும் ஒன்றுபோலவே இருக்கும். அவர்களுக்கிடையேயுள்ள உருவ ஒற்றுமைகண்டு மூர்ச்சையாகாதது ஒன்றுதான் குறை. வயதான தோற்றத்தில்மாத்திரம் என்றில்லை, அசலான முகங்களை அடையாளப்படுத்துவதைபோல, ஆங்காங்கே தூரிகையால் தொட்டிருப்பார்கள் (எல்லாப் படங்களிலும் தூரிகையின் கைவண்ணமிருக்கும்) தூரிகைக்குத் தப்பி, மங்கலாகத் இருப்பவைகளிலுங்கூட ஒற்றுமையைக் காணலாம். கால முச்சூடும் இருப்பதற்கெனவே தயாரிக்கப்பட்டவைபோல இளமையும், பளபளப்புமாக அவைகள் இருக்கும்.. அதைத்தான் அங்குள்ள மக்கள் விரும்பினார்கள். வழிவழியாக தொடரும் தங்கள் குடும்ப நினைவுக்கு வடிவ ஒற்றுமையையும், தன்னடக்கத்தையும் அணிவித்து, சம்பந்தப்பட்ட படத்தின் தனித்தன்மைக்கும், பல்வகைபுரிதலுக்கும் ஆதாரங்களாக அவற்றைக் கருதினார்கள். தோற்றத்தன்மைகளில், படங்களுக்கிடையேயான வேறுபாடுகள் குறையக்குறைய, அக்குடும்ப உறவில் அவர்களுக்கான பாத்யதையும் வலுப்பெறுகிறது என்று பொருள். தவிர, ஆண்களின் தலைப்பாகை, பெண்கள் தங்கள் தலைமுடியை இழுத்துக் கொண்டைபோட்டிருக்கும் விதம், ஆண்பெண் இருவரும் அணிந்திருக்கும் ஆடைகளுக்கான கழுத்துப்பட்டைகளெல்லாங்கூட ஒரே மாதிரியாக அமைந்தவை. அவர்களுடை முகபாவங்களும் அப்படித்தான் வேறுபாடுகளின்றி இருந்திருக்கின்றன, அங்கெடுக்கப்படுகிற எல்லா நிழற்படங்களிலும் அவற்றைக் கண்டிருக்கிறேன். சிவப்பு கவுணுடன் அம்மா எடுத்துக்கொள்ளும் நிழற்படங்களுக்கும் அதுபோன்ற முகபாவங்களுண்டு, பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்குரிய முகபாவம், அம்முகபாவத்தை அம்மாவின் சிலபடங்களில் பார்த்திருக்கிறேன், சிலபடங்களில் அவை தொலைந்திருந்தன.

அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளில்லை. இனி அவ் விஷயத்தைத் தொடுவதில்லையெனத் தீர்மானிக்கபட்டதுபோல அவனும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வது குறித்து தந்தையிடம் பேசுவதைத் தவிர்க்கிறான். தகப்பனுக்கு பிள்ளைமேல் பரிவோ பாசமோ இல்லையென்றுதான் சொல்லவேண்டும், இரக்கமில்லாதவன், மகனென்றில்லை, பிறரிடமும் அந்த ஆள் அவ்வாறே நடந்துகொள்கிறவன். அங்கே வியாபாரத்தைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் அத்தனை சீனர்களையும் பார்க்க மோசமான குணத்தில் மாத்திரமல்ல, பணத்திலும் முதல் நபராக இருந்தார். அவருடைய சொத்துக்கள் சாடெக்கையும் தாண்டி, பிரெஞ்சு காலனி நாட்டின் தலைநகராகவிருந்த கொலென்வரை பரவிக்கிடந்தன. கொலென் மனிதனுக்கு, தனது தகப்பனின் பிடிவாதம், ஒரு குழந்தையின் பிடிவாதத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்பது நன்றாகத் தெரியும். தன்னுடைய மகனின் காதல் விவகாரம், பெண்ணின் சொந்தநாட்டுப் பயணத்தினால் முடிவுக்கு வந்து விடுமென்ற செய்தியையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை என்பதுமாதிரி அம்மனிதர் நடந்துகொண்டார். அவளைப்போன்ற பெண்களுக்கெல்லாம் திருமணம் அவசியமா என்ன? திருமணமென்று பேசிப்பார், ஓடி ஒளிந்துவிடுவாள், அவள் தலைமுழுகப்படவேண்டியவள், மறக்கப்படவேண்டியவள், நமக்கு சரிவராது, எவனாவது வெள்ளைக்காரன் ஒருவன் அவளுக்கு அமைவான் அதுவுமில்லையென்றால் இருக்கவே இருக்கிறார்கள் அவளது சகோதரர்கள்.

தனது உடல்மேல் அவனுக்கு அப்படியொரு வெறி, அதற்காக எதுவும் செய்ய அவன் தயாராக இருந்தான். எனவே, அவனை அடைவதிலிருந்த பெண்ணுக்கிருந்த சிரமங்கள் வெகுவாக குறைந்திருந்தன, அவனது மெலிந்த உடல்கூட பரவாயில்லை என்றாகிவிட்டது, தாய் கூட கூட முன்புபோல கேள்விகேட்பதில்லை, அதுபற்றிய கவலைகளேதும் தனக்கில்லை என்பதுபோல நடந்துகொள்கிறாள். அவளுக்குங்கூட அவனது உடல் அப்படியொன்றும் தீண்டத் தகாததல்ல, பிறருடைய உடல்களுக்கும் அவனுடைய உடலுக்கும் பெரிதாக வித்தியாசமேதுமில்லலை, ஏற்றுக் கொள்ளகூடியதுதான் என்பதை புரிந்துகொள்கிறாள். காலணி நாட்டின் வெயிலிலே வதைபட்டு அப் பெண் வளர்ந்திருப்பதாக, கொலென் காதலன் நினைக்கிறான். அவன் மாத்திரமென்ன, கலணி நாட்டு வெயிலை அறியாதவனா என்ன, பிறந்ததும் வளர்ந்ததும் அந்த நாட்டில் தானே? இவ்விஷயத்தில் அவளும் அவனும் ஒத்துப்போவதாக அவன் நினைக்கிறான். இத்தனை வருடங்கள், சகிக்க முடியாத ஓர் அட்சரேகையில் காலத்தைகழித்ததின் பலனாக, அப்பெண்ணையும் தனது நாட்டுப் பெண்களில் (இந்தோ-சீன நாட்டைச்சேர்ந்த) ஒருத்தியாகவே பார்க்கவேண்டுமென்கிறான். விரல்களை மடிக்கும்போதுள்ள மென்மை, நீளத்தில் அவர்களுடைய வீட்டுப்பெண்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, அவளுடைய பலத்தையெல்லாம் தம் வசமெடுத்துக்கொண்டதைப்போல அடர்த்தியாகவிருந்த தலைமயிர், பெண்களும், பிள்ளைகளும் குளிக்கவேண்டுமென்றே மழைநீரை பாத்திரங்களில் பிடித்துவைக்கும் பழக்கம் இந்தோசீனாவிலுண்டு, அப்படிப்பட்ட மழைநீரில் குளித்து உருவான அவளுடைய சரீரம் என்று அனைத்திலும், அப்பெண் தங்கள் நாட்டுப்பெண்ணைப்போலவே இருப்பதாகச் சாதிக்கிறான். அவளோடு ஒப்பிடுகிறபோது பிரான்சு நாட்டுப் பெண்களின் உடல்கள் சொரசொரவென்று, அத்தனை தடிப்பு, மென்மையற்ற சரீரம். அடுத்து வெப்பமண்டல நாடுகளுக்கே உரிய எளியவகை உணவுகளான மீன்கள், பழங்கள் ஆகியவையுங்கூட அவளுடைய உடலின் மென்மைக்குக் காரணமானவை. அவளை நிர்வாணத்தில் வைத்திருப்பதுபோல சரீரத்தில் ஒட்டாமல் அளவிற் பெரியதாய் அணிந்துள்ள பருத்தி பட்டாலான உடைகளுக்குங்கூட அவளுடைய சரீரத்தின் மென்மையில் பங்குகள் உண்டென்று நினைக்கிறான்.

அத்தியாயம்-17

கொலென் பிரதேசக் காதலனுக்கு வெள்ளைக்காரகுட்டியின் பதின் பருவமே எல்லாமென்றாகி அவளே கதியென்று கிடக்கிறான். ஒவ்வொரு மாலையும் அவளிடத்தில் கிடைக்கும் சந்தோஷத்திற்கென்றே அவனது வாழ்க்கையும், காலமும் என்றாகிறது. அவளைப்பற்றியோ, இதுவரை அறிந்திறாத அக்காதல் அனுபவம் குறித்து என்னபேசுவதென்கிற தமது குழப்பத்தைப்பற்றியோ ஏதேனும் பேசினால், அதைபுரிந்துகொள்ள அவளுக்குப் போதுமோ என்கிற ஐயமிருக்கவேண்டும், வாய்ச் சொற்களைத் தவிர்க்கிறான். மாலையை ஒன்றாக அவர்கள் கழிக்க உதவிய அறையில், ஒருவரையொருவர் உரத்து அழைத்துக்கொண்டதன்றி இதுவரை உரையாடியதென்றில்லையே? ஒருவேளை, அந்த உண்மை தெரியவந்திருக்குமோ. ம்.. தெரிந்திருக்காதென்றுதான் நினைக்கிறேன், இதுபற்றிய அறிவின்றியே இத்தனை நாளும் இருந்திருக்கிறோம் என்ற உண்மைவேண்டுமானால் அவனுக்குப் புரிந்திருக்கும்.

அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். மூடிக்கிடக்கும் விழிகளைத் திறக்காமல் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் முகத்தைச் சுவாசிக்கிறான். சிறுமியைச் சுவாசிக்கிறான். இமைகளைத் திறக்காமல் அவளுடைய சூடுதணியாத சுவாசத்தை மாத்திரம் சுவாசிக்கிறான். பிறரிடம் காணமுடியாத சரீரம், அதன் வடிவம் அவனுக்குப் பிடிபடமாட்டேனென்கிறது, ஒவ்வொருகணமும் முடிவில்லாமல் அறையில் அசுரத்தனமாக வளருகிறது, அவன் அவளை பார்க்கின்ற நேரங்களில் மட்டும் வளர்கிறதென்று நினைக்கவேண்டாம், சந்தோஷ தருணங்கள், இறப்பு மற்றும், அவனுடைய பார்வைக்கு அடங்காத பிற இடங்களிலுங்கூட வளர்கிறது. மிகவும் மென்மையானது. கலவியின் உச்சத்தில், வன்மமற்று அளவுகடந்த புத்திகூர்மையுடன் வயதிலும், பிறவற்றிலும் தான் பெரியவன் என்பது போல தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறது.

என்னை என்னவெல்லாம் செய்தான் என்பதைப் பார்க்கிறேன். இப்படியெல்லாங்கூட சாத்தியங்களுண்டு என்று நான் நினைத்ததில்லை அப்படி என்னை நடத்தினான். எனது உடலின் தேவை மற்றும் அதன் எதிர்பார்ப்புக்கு மேலாகவே அவனது காரியங்களிருந்தன. அந்த வகையில் அவனுக்கு நானொரு குழந்தையாகவும், அவனும் ஏதோவொன்றாக எனக்கும் மாறினோம். அவனிலும் பார்க்க அவனது மேல்தோலும் சரி அவனது ஆண்குறியும் சரி விவரிக்கவொண்ணாத மென்தன்மை கொண்டதென்பதைக் கண்டுகொள்கிறேன். இளம் கொலையாளி தோற்றத்தில் அன்னியன் ஒருவனின் நிழலைக்கூட அறையில் பார்த்த ஞாபகம், இதுவரை என்கண்களில் அவன் படவில்லை, அவன் யாரென்றும் தெரியாது. வேட்டையில் ஆர்வமுள்ள ஓர் இளைஞனையும் அறைக்குள் கண்டிருந்தேன், அவனை யாரென்று தெரிந்து வைத்திருந்தேன். கலவியில் உச்சத்தில் திளைக்கிறபோது அவனுடைய முகம்தான் தெரிகிறது. என்னுடைய கொலென் காதலனிடத்தில் அதுபற்றி பேசினேன். வேட்டை இளைஞனின் உடம்பு, சொற்களுக்குள் அடங்காத அவனது ஆண்குறியின் மிருதுத்தன்மை, கருஞ்சிறுத்தைகள் உலாவும் நதிகளின் முகத்துவாரங்களிலும், காடுகளிலும் அவனிடம் வெளிப்படும் வீரமென அவனைப் பற்றிய நிறைய தகவல்களைக் கூறினேன். அவனது விருப்பப்படியும், என்னை ஆட்கொள்ளவும் எல்லாம் நடந்தது. நான் அவனது குழந்தையாகிப்போனேன். அவனுடைய குழந்தையுடனேயே ஒவ்வொரு மாலையும் புணர்ச்சியை மேற்கொண்டான். கூடியசீக்கிரத்தில் அவளை இழக்கப் போகிறோமென்கிற வருத்தம். அவள் நிரந்தரமானவளல்ல என்பதைப் புரிந்துகொள்கிறான், அதுவே அவனது உடல்நிலைகுறித்தும் கவலை கொள்ளவைக்கிறது, எனவே சில நேரங்களில் கலவரப்படுகிறான். அதிலும் அவள் மிகவும் ஒல்லியாக இருப்பதால், சிலநேரங்களில் திடீர்திடீரென்று பயம் அவனைக் கவ்விக்கொள்கிறது. பிறகு இருக்கவே இருக்கிறது அவளுக்கென்று வரும் தலைவலி, உயிரற்ற ஜடத்தைப்போல, ஈரத்துணியை கண்களில் கட்டிக்கொண்டு, கட்டிலைவிட்டு அசையாமல் படுத்துக்கிடக்கிறாள், அடுத்து உயிர் வாழ்க்கைமீதும் அது தன்மீது செலுத்தும் ஆதிக்கத்தின் மீதும் அவள் கொண்டிருக்கிற கோபம். அம்மாவை நினைத்துக் கொள்கிறாள், அம்மாவின் எண்ணம்போல எதுவும் நடவாததாலும்; தமது எதிரிகள் துடிதுடித்து மடிவதைப் பார்த்தபிறகே அம்மா சந்தோஷமாக சாகவேண்டும், அதற்கெதுவும் தன்னால் செய்யமுடியவில்லையே என்பதாலும் விளைந்த கோபத்தில் சத்தம்போடுகிறாள் பின்னர் அழுகிறாள். அவளுடைய முகத்தோடு தனது முகத்தைப் பதித்து, அவளது சோகத்தையெல்லாம் தனதாக்கிக்கொள்கிறான், அவளது கோபம், துக்கம் அனைத்திலும் தீராத மோகம்கொண்டவன்போல வாரி இறுக அணைத்துகொள்கிறான்.

அவனுக்கொரு குழந்தை இருந்தால் எப்படி கொஞ்சுசுவானோ, அப்படித்தான் அவளிடத்தில் நடந்து கொள்கிறான். சரீரத்தோடு விளையாடுகிறான், அதைத் தொட்டுத் திருப்புகிறான், முகம், வாய், கண்கள் என்று பரவுகிறான். அவளோ, அவன் விளையாட்டினைத் தொடங்க தன்னை மறந்தவளாய் அவன் அடியொட்டிப் பயணிக்கிறாள். சட்டென்று காரணமேதுமில்லாமல் அவனிடம் கெஞ்சுகிறாள், ‘வாயை மூடிக்கிட’ என்று பதிலுக்கு அவன் கத்துகிறான். “இனியெனக்கு உன் உறவும் வேண்டாம், உன்னால் கிடக்கும் சந்தோஷமும் வேண்டாம்” என்று சத்தம்போடுகிறான். ஆ.. அவர்களுக்குள் மற்றொரு சர்ச்சை என்றாகிவிட்டது. இருவருக்கிடையேயான பீதியில் விளைந்த சர்ச்சை. அப்பீதி கண்ணீர், விரக்தி, சந்தோஷதருணமென்று தன்னை கரைத்துக்கொள்கிறது.

அன்றுமாலை முழுக்க இருவரும் பாராமுகமாக இருக்கின்றனர். தனது விடுதிக்குக் காரில் திரும்பும்போது அவனுடைய தோளில் தலைவைத்திருக்கிறாள், அவன் அவளை அணைத்தபடி இருக்கிறான். பிரான்சிலிருந்து கப்பல் வருவதும், அவனிடமிருந்து அவளைப்பிரித்து கூடிய சீக்கிரம் அழைத்து செல்வதும் ஒருவகையில் நல்லதென்கிறான். வழியெங்கும் அமைதியாக இருக்கிறார்கள். சில சமயங்களின் காரோட்டியிடம் நதியைச் சுற்றிக்கொண்டு போகுமாறு பணிக்கிறான். அவள் களைப்புற்றிருக்கவேண்டும், அவன் மீது சாய்ந்தபடி உறங்குகிறாள். முத்தமிட்டு அவளை எழுப்புகிறான்.

நீல விளக்கொளியில், விடுதியின் தூங்குமிடம் மூழ்கிக்கிடக்கிறது. ஊதுபத்திவாசம். அந்தி நேரத்தில் ஊதுபத்திகொளுத்தும் பழக்கம் விடுதியிலுண்டு. எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வெப்பம் அன்றைக்கும் இருக்கிறது. சன்னற் கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தார்கள். காற்றென்று ஏதுமில்லை. காலிலிருந்த சப்பாத்துகளை கழட்டிக் கைகளில் எடுத்துக்கொண்டபோதிலும், எனக்கு யாரிடமும் பயமில்லை, வார்டன் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்திருக்கமாட்டாள் என்பது மட்டுமல்ல இரவுநேரங்களில் நான் விரும்பிய நேரத்திற்கு திரும்புகின்ற உரிமை எனக்கிருந்தது. உடனடியாக நான் செய்யவேண்டிய காரியம் ஹெலெனைத் தேடி செல்வது., மனதில் ஒருவித பதட்டம், பகல் நேரத்தில் விடுதியைவிட்டு அநேககமாகப் புறப்பட்டு சென்றிருக்கலாம் என்பதால் அச்சம். அவளுடைய இடத்திற்குச் சென்று பார்க்கிறேன் நல்லவேளை உறங்கிக்கொண்டிருக்கிறாள். இதற்குமுன்பும் இப்படி விருப்பமில்லாமல் உறங்குவதைப்போலதொரு தோற்றத்துடன் அவள் படுத்திருக்க பார்த்திருக்கிறேன். சண்டைபோடும் மனபாவத்துடன் வெற்றுக்கைகளை தலைக்குக் கொடுத்து அநாதைபோல படுத்திருக்கிறாள். பிற பெண்களைப்போல உடலை வசதியாகக் கிடத்தி நித்திரைகொள்ளும் வழக்கமெல்லாம் அவளுக்கில்லை கால்களிரண்டும் மடிந்திருக்கின்றன. அவளுடைய முகத்தைத் தேடவேண்டும், தலையணை நழுவிக் கிடக்கிறது. அநேகமாக என்னை எதிர்பார்த்திருந்த கோபமாக இருக்கலாம். அவளும் வெகுநேரம் அழுதிருப்பாள், பிறகு அதளபாதாளத்தில் விழுந்திருப்பாள். அவளை உறக்கத்தைக் கலைக்க ஆசை, இருவரும் ரகசியக்குரலில் உரையாடுகிறோம். கொலென் மனிதனிடத்தில் பேசுவதை நிறுத்தியாயிற்று, எனக்கு இப்போதெல்லாம் ஹெலென் கேட்கும் கேள்விகள் முக்கியம், பிறரைப்போல அல்லாமல், அடுத்தவர் பேசுவத்தைக் கவனத்தோடு கேட்கும் பண்பு அவளிடம் நிறைய இருந்தது. ஆனால் இப்போது அவளை எழுப்புவதென்பதெல்லாம் கூடாது. இப்படித்தான் ஒருமுறை அவளுடைய நித்திரையை கலைத்துவிட, அதற்குப் பிறகு அவள் உறங்கவே இல்லை. அவள் எழுந்திருக்கிறாள், அவளுக்கு வெளியே எங்கேயாகிலும் போய்வரவேண்டும் போலிருக்கிறது. படிகளில் தாவி இறங்குகிறாள், தாழ்வாரங்களைக் கடக்கிறாள், மைதானம் வெறிச்சோடி கிடக்கிறது, ஓடுகிறாள், என்னை அழைக்கிறாள், அவளுக்கு சந்தோஷம், அதைத் தடுப்பது யார்? வெளியிற் செல்ல அனுமதி இல்லை என்கிறபோது, அவளது எதிர்பார்ப்பென்னவென்று தெரியும். தயக்கமாக இருக்கிறது, பின்னர் அவளை எழுப்பக்கூடாதென்று முடிவெடுக்கிறேன். கொசுவலைக்குள்ளே வெப்பம் கடுமையாக இருக்கிறது, அதை மூடியபிறகு சகிக்கமுடியவில்லை. நான் வெளியிலிருந்து வந்திருப்பவள் என்பதால் எனக்குத் தெரியும். இரவு நேரங்களில் நதிக்கரைகளில் எப்பொழுதும் குளுகுளுவென்றிருக்கும். எனக்கு பழகி இருக்கிறது, வரும்போது வரட்டுமென காத்திருக்கிறேன், அசையாமல் இருக்கிறேன், ஒருவழியாய் வந்து சேர்ந்தது. சமீபகால நடவடிக்கைகள் தந்த களைப்புகூட எனக்கு உடனடியாக உறக்கத்தைக் கொடுப்பதில்லை. கொலென் மனிதன் இந்நேரத்தில் என்ன செய்வானென்று யோசிக்கிறேன். சூர்ஸ்க்கு அருகிலுள்ள ஓர் இரவு விடுதியில், அவனும் அவனது காரோட்டியும் அமர்ந்து அரிசியில் தயாரித்த மதுவொன்றை வழக்கம்போல அமைதியாகக் குடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது அவனது இருப்பிடத்திற்கு திரும்பி, அறையின் வெளிச்சத்துக்கிடையில் எப்போதும்போல பேச்சுத்துணைக்கு ஆளின்றி ஆழ்ந்து உறங்கலாம். அன்றைய தினம், கொலென் மனிதனின் நினைப்புகளையெல்லாம் சகிக்கமுடியாதவளாக இருக்கிறேன். ஹெலெனையும் என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்களுக்கென்று ஒருவித வாழ்க்கை இருக்கிறது அவ்வாழ்க்கைக்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்றுதான் சொல்வேன். அம்மா சொலவ்துபோன்று எனக்கு என்றுமே நிறைவுகாணாத வாழ்க்கை. எனது வாழ்க்கை என்னவென்று புரியத் தொடங்குகிறது. அதைச் சொல்லும் ஆற்றலும் எனக்குண்டென்று அறிவேன். ஏனென்று தெரியவில்லை செத்தொழியலாம் போலிருக்கிறது. இதுதான் முதல்தடவை என்றில்லை, பலமுறை இம்மாதிரியான எண்ணம் வருகிறது. அவ்வாறே தனித்திருக்கவும் ஆசைப்படுகிறேன், அதற்கும் காரணத்தைச் சொல்ல எனக்குப் போதாது. இத்தனித்திருக்கும் எண்ணங்கூட எளிதில் திருப்தியுறாத குடும்பத்து பிள்ளைப்பருவத்திடமிருந்து என்னை விலக்கிக்கொண்டபோது ஆரம்பித்தது. புத்தகங்கள் எழுதப்போகிறேன் இக்கணத்தினை கடந்து, மாபெரும் பாலைநிலத்தில் அதன் சாயலில் எனது வாழ்க்கையின் அங்க அடையாளங்கள் பரவிக்கிடப்பதைப் பார்க்கிறேன்.

அத்தியாயம்-18

சைகோனிலிருந்து வந்திருந்த தந்தியில் சொல்லப்பட்ட வாசகம் சரியாக நினைவிலில்லை, எனது இளைய சகோதரன் இறந்து விட்டானென்றோ அல்லது கடவுள் அழைத்துக்கொண்டாரென்றோ இருந்ததாக ஞாபகம். யோசித்துப்பார்க்கையில் கடவுள் அழைத்துக்கொண்டார் என்றே தந்தியில் படித்த நினைவு. நிலமையைப் பரிசீலித்ததில், தந்தியை அவள் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. இளையசகோதரன். இறந்துவிட்டான். தொடக்கத்தில் என்னவோபோலிருக்கிறது, பார்த்துக்கொண்டிருக்க மடமடவென்று உயர்ந்து, எங்கும்பரவி, பூமிக்கடியியிலிருந்து வெளிப்பட்டுச் சட்டென்று என்னைச்சுற்றிக்கொண்ட துயரம், எங்கோ என்னைத் தூக்கிச் செல்கிறது. எனக்கு என்ன நடந்ததென்று நினைவில்லை, நான் இல்லையென்றாகி, என்னிருப்பை வேதனைகள் கபளீகரம் செய்துவிட்டன. ஒரு சிலமாதங்களுக்கு முன்பு எனது குழந்தையொன்றை இழந்ததால் இப்படித்தான் தாங்கவொண்ணா வேதனையிற் துடித்தேன், அவ்வேதனைதான் திரும்பவும் என்னைத் தேடிக்கொண்டி வந்திருக்கிறதா அல்லது இதுவேறா? ஆம் இது வேறு, புதியது. தவிர அக்குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது, எனக்கும் அக்குழந்தைக்குமான அறிமுகத்தைக் குறித்துப் பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை, இளையசகோதரனின் மரணச்செய்தி எனது உயிர் வாழ்க்கையையே அர்த்தமற்றதாக மாற்றிவிட்டது, இதுபோன்ற அனுபவத்தினை எனது குழந்தையின் மரணம் தந்ததில்லையே.

தவறிழைத்துவிட்டோம். செய்தத் தவறு அடுத்த சில நொடிகளிள், உலகெங்கும் என்றாகிவிட்டது. இமாலயத் தவறு. எனது இளைய சகோதரன் இறப்பற்றவனாகத்தான் இருந்திருக்கிறான், நாங்கள் அவதானிக்கவில்லை, உண்மை அதுதான். எங்கள் குடும்பத்திலொருவனாக அவன் உயிர் வாழ்ந்தபோது இறவாமை(immortality) அவனது உடலில் ஒளிந்திருந்திருக்கிறது, அதனை அதாவது அவனது சரீரத்திற்றான் இறவாமைத் தங்கியிருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கிறோம். எனது சகோதரினின் உடல் மரணித்துவிட்டது, இறவாமையும் அவ்வுடலுடன் சேர்ந்து உயிர்நீத்திருக்கிறது. விருந்தினர் பிரவேசித்த உடலுமில்லை, விருந்தினருமில்லை, இன்றைக்கு உலகமெங்கும் இதுதான் நிலைமை. இதுதான் நடக்கிறது, நாங்கள் செய்தது முழுக்க முழுக்கத் தவறு, அத்தவறு உலகமெங்கும் இழைக்கப்பட்டது, அநியாயம்!

அவன்- எனது இளைய சகோதரன் – இறந்தபோது, அவனைத் தொடர்ந்து அனைத்துமே இறந்தாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப்போலத்தான் நான் உணர்ந்தேன், குழந்தை அவனுடைய இறப்புக்குபின்னே என்னைச் சுற்றியுள்ள அனைத்துமே ஒன்றன்பின்னொன்றாக மரணத்தைத் தழுவின.

இதுபோன்ற விளைவுகளுக்குத் தனது மரணம் காரணமாக இருக்கிறதென்கிற உண்மையை அப்பிஞ்சு உடல் அறியவில்லை. தனது இருபத்தேழு ஆண்டுகால உயிர்வாழ்க்கையில் இன்னாரென்று தெரிந்து கொள்ளாமலேயே இறவாமைக்குத் தங்க இடம்கொடுத்திருக்கிறான்.

என்னைத் தவிர வேறொருவர் இவ்வுண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களில்லை. உண்மையைப் உணர்ந்த மறுகணமே, எனது சிறிய சகோதரனின் உடலும் எனதுடலும் வேறுவேறல்ல என்ற ஞானமும் எளிதாய்ப் பிறந்தது, அவன் இறந்தவுடன் நானும் மரணிக்கவேண்டும். மரணித்தேன், இன்றைக்கு நான் பிணம். இளையசகோதரன் என்னை அழைத்துக்கொண்டான், அவனுடன் கலந்துவிட்டேன், நான் இறந்திருக்கிறேன்.

மக்களுக்கு இவ்வுண்மையை எடுத்துச் சொல்லவேண்டும், இறவாத்தன்மைகொண்டதென்று எதுவுமில்லை, இறவாமையும் அழிவுறும், மரணிக்கக்கூடும், அதுதான் நடந்தது, இனியும் தொடரும். தன்னை இன்னாரென்று வெளிப்படையாக அடையாளப் படுத்திக்கொள்ளும் வழக்கம் இறவாமைக்கில்லை, அது பிறரை ஏமாற்றவல்ல கபடவேடதாரி. தன்னை விவரணைக்கு உட்படுத்திக்கொள்ளும் வழக்கம் அதற்கில்லை, மூலக்கோட்பாடாகவேயிருந்துப் பழகிக்கொண்டது. தம்மிடத்திலுள்ள இறவாமையை பிறர் அறியக்கூடாதென ஒருசிலர் கவனமாய் இருப்பர், வேறுசிலர் அவ்விருப்பை வெளிச்சமிட்டுக் காண்பிக்க விழைவர், இரண்டையுமே அவர்கள் சுயநினைவுடன் செய்வதில்லை என்பதை நாம் அறியவேண்டும். இறவாமையென்பது உயிர்வாழ்க்கையால் உணரப்படுவது, கூடுதல் அல்லது குறைவென்ற கால அளவீடு சார்ந்தது அல்ல, அது இறவாமைத் தொடர்பானதுமல்ல, இதுவரை நம் கவனத்திற்கொள்ளத்தவறிய ஒருபொருள். இறவாமைக்கு தொடக்கமுமில்லை, முடிவுமில்லை என்பதும், தற்காலிக நிலைபாட்டுடன் பொருளற்ற காரியங்களில் ஈடுபடும் ஆத்மாவுடன் பிறந்து, ஆத்மாவுடனே முடிந்துவிடும் தன்மையதென்றும் இறவாமையை விமர்சிப்பதும், இரண்டுமே தவறு. சவமாய் பாலையிற்கிடக்கும் மணலும் சரி, குழந்தைகளின் இறந்த சரீரங்களும் சரி, இறவாமைக்கு இரண்டுமே ஒன்றுதான், அது அவைகளைத் தாண்டிச் செல்வதில்லை, ஒதுங்கியேச் செல்கிறது.

எனது இளைய சகோதரனுக்கு நேர்ந்த இறவாமையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை, கட்டுக்கதையின் சாயலுமில்லை, விபத்தாகவும் அமையவில்லை, அப்பழுக்கற்று சுருக்க முடிந்தது. அவன் பாலைநிலத்தில் நின்றுகொண்டு புலம்பவில்லை, புலம்ப அவனுக்கு என்ன இருந்தது, பாலைநிலமென்றில்லை, வேறெங்குங்கும், சொல்லப்போனால் இங்கேயுங்கூட, புலம்புவதற்கு அவனுக்கென்று எதுவுமில்லை. ஞானமற்றிருந்தவன், எதையும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களும் அவனுக்கில்லை. அவன் அதிகம் பேசியதில்லை, வாசிப்பவனுமல்ல, எழுத உட்காருபவனுமல்ல, அனைத்திலும் சுமாரென்றே சொல்லவேண்டும், சில நேரங்களில், வருந்துவதற்குக்கூடக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலிருந்தான், ஞான சூன்யம், பயந்தாங்கொள்ளி.

என் இளைய சகோதரன்மீது நான் கொண்டிருந்த பைத்தியக்காரத்தனமான அன்பிற்கான காரணம் ஒரு புரியாத புதிர். அவன் இறந்தவுடன், எதற்காக எனது உயிரையும் மாய்த்துக்கொள்ளவேண்டுமென்ற அளவிற்குப் போனேன்?தெரியாது. சம்பவம் நடந்தபோது, எனக்கு அவனுக்குமான இடைவெளி பத்து ஆண்டுகள், அதாவது பத்து ஆண்டுகள் பிரிந்திருந்தேன். அவனை அதிகம் நேசித்ததைப்போலத்தான் உணர்ந்தேன், அவன் மீதான எனது அன்பினை வேறொன்றினால் ஈடு செய்யவியலாதென்றே தோன்றியது, எனது நினைவிலிருந்து அவனது மரணம் தப்பியது.

நாங்கள் எங்களுக்குள் உரையாடியது குறைவு. அப்படியே நடந்தாலும் அவ்வுரையாடலில், எங்கள் மூத்த சகோதரனும், எங்கள் தரித்திர வாழ்க்கையும் அரிதாகவே இடம்பெறும், அதுபோலவே அம்மாவுடைய தரித்திர வாழ்க்கையை மட்டுமல்ல, நாங்கள் குடியிருந்த பிரதேசத்தின் சோகங்குறித்துப் பேசுவதுகூட மிக அரிதாக இருந்தது. மாறாக வேட்டை, துப்பாக்கிகள் அவை இயங்கும்விதம், மோட்டார் வாகனங்கள் என்று பேசுவோம். அவனுடைய பொம்மை மோட்டார்வாகனங்கள் உடைபடுகிற நேரங்களில் கோபப்படுவான். எதிர்காலத்தில், எம்மாதிரியான வாகனங்கள் தம்வசமிருக்கும் என்றெல்லாம் பேசியிருக்கிறான். அதுபோன்ற உரையாடல்களால் வேட்டைக்கு உபயோகப்படுகிற துப்பாக்கிகளின் வகைகளையும், விதவிதமான மோட்டார் வாகனங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தேன். கவனமாக இல்லாதுபோன புலிகளுக்கு இரையாகக்கூடும், ஓடும் நீரில் தொடர்ந்து நீந்திப்போனால், மூழ்கி இறக்கக்கூடுமென்றும் நாங்கள் பேசிக்கொண்டதுண்டு. என்னைவிட இரண்டு வயது மூத்தவன் என் இளைய சகோதரன்.

காற்று வீசுவது நின்றது, மழையைத் தொடர்ந்து, மரங்களுக்குக்குக் கீழே அசாதாரண ஒளி, தொண்டைகிழிய பறவைகள் போடும் சத்தம், ஒரு வித எதிர்ப்புக்குரல், குளிர்காரணமாக தமது அலகுகளை உரசிக்கொண்டு, வெளியெங்கும் அவ்வோசையைப் பறவைகள் ஒலிக்கச் செய்கின்றன பயணிகளின் கப்பல்கள் சைகோன் ஆற்றை நெருங்க அவற்றின் எஞ்சின்கள் நிறுத்தப்பட்டன, இனி அவற்றை இழுவைகள் மூலம், மீகாங் துறைமுகத்து வளைவுகளில், சைகோனுக்கு அருகே கொண்டுபோய் நிறுத்துவார்கள், மீகாங் நதியின் கிளைபோன்று பிரியும் அவ்வாற்றுக்கு சைகோன் ஆறென்று பெயர். அங்கே எட்டு நாட்கள் கப்பல்கள் தங்கும். கப்பல்கள் சைகோன் துறைக்கு வரும் நாட்களில் பிரான்சே அங்கு திரண்டதுபோல இருக்கும், அங்கே டின்னர் சாப்பிடமுடியும், நடனமாடமுடியும்.. அதிற் கலந்துகொள்ள கட்டணம் பொதுவாக அதிகம், அம்மாவுக்கு அக்கட்டணம் மேலும் அதிகமென்பதால் எதற்காக அநாவசியச்செலவென்று நுழைவதில்லை, ஆனால் கொலென் பிரதேசத்துக் காதலன் விரும்பினால் உள்ளே நுழைந்திருக்கமுடியும், அவன் அவ்வாறு செய்வதில்லை, வெள்ளைக்காரச்சிறுமியோடு தான் சுற்றுவதைப் பிறர் பார்க்கக்கூடும் என்று நினைத்தான், வெளிப்படையாக அதை அவன் சொல்வதில்லையென்ற போதிலும் அவள் அறிவாள். அப்போதெல்லாம், அதிக வருடங்களில்லை, ஐம்பது வருடங்களுக்கு முன்பு உலகின் எப் பகுதிக்குப் போவதென்றாலுல் கப்பல்களிற் பயணித்தாக வேண்டும், சாலைப்போக்குவரத்தும் இரயில் போக்குவரத்துமின்றியே பெரும் பாலான நாடுகளிருந்தன. அவைகளில் நூறு நாடுகளிலாவது, பல்லாயிரக்கணகான கி.மீ இருப்புப்பாதைகள் வரலாற்றுக்கு முந்தையகாலத்தைச் சார்ந்தவை என்று சொல்லும்படியிருந்தன. அந்த நேரம் பயணக்கப்பல்களாக சைகோனுக்கு வந்தவை அனைத்துமே மெசாழெரி கப்பல்போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்தவை, அவற்றுள் குறிப்பாக மூன்று மஸ்கட்டீயர் என்றழைக்கபட்ட -பொர்த்தோஸ், டர்த்தாஞ்ன்னான், அராமி- கப்பல்கள் பிரசித்தமானவை, அவைகள்தான் அப்போது பிரான்சுக்கும் இந்தோசீனாவுக்கும் போக வரயிருந்தன.

பயணத்திற்கு இருபத்து நான்கு நாட்கள் பிடிக்கும். பயணக்கப்பல்களில் எல்லாமுண்டு:, வீதிகளோடு கூடிய நகரங்கள், மதுச்சாலைகள், காப்பி பார்கள், நூலகங்கள், ஓய்வுக்கூடங்கள், சந்திப்புகள், காதலர்கள், திருமணங்கள், மரணமென்று அத்தனையும் அங்குண்டு. எதிர்பாராமல் ஒரு சில அணிகள் உருவாகும், சிறு குழுக்களாக சேர்ந்துகொள்வார்கள், தவிர்க்க முடியாதது, உருவாகியேத் தீரும், அறிந்தஒன்று, மறக்க முடியாதது. ஒரு சில நாட்களில், அக்குழுவினரின் நடவடிக்கைகள் உயிரோட்டமிக்கதாக மாறிவிடுமென்பதால், பயணம் நினைவில் நிறுத்தக்கூடியவகையில் இனிமையாக அமையும். பெண்களைப் பொருத்தவரை, பயணமென்று சொன்னால் அதுதான். பெரும்பாலானப் பெண்களுக்கும், சில நேரங்களில் ஆண்களுக்குங்க்கூட காலனீய நாடுகளுக்கான பயணங்களென்பது துணிச்சலான அனுபவம். அம்மாவுக்கு ஓவ்வொருமுறையும், தனது இளம் வயது பிள்ளைகளுடன் செய்யும் பயணங்கள் அவ்வாறுதானிருந்தன. அவள் மொழியில் சொல்வதென்றால், “எனது வாழ்வின் உன்னதமான தருணங்கள்”.

புறப்பாடுகள். இவைகளில் மாறுதல்களில்லை, பெரும்பாலும் அவை ஒரேமாதிரியிருந்தன. ஒவ்வொரு முறையும் முதன் முதலாக கடற்பயணம் மேற்கொள்வதுபோலத்தான் அவைகளிருக்கும். மண்ணைப் பிரிவதென்பது மிகுந்த வேதனைகளுடனும், திரும்பவும் வருவோமென்ற நம்பிக்கையின்றியும் நடைபெறுகிறது எனினும், பயனத்தை மேற்கொள்வதற்கு ஆண்களோ, யூதர்களோ, சிந்தனைவாதிகளோ, அல்லது விரும்பி கடற்பயணத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்பவர்களோ தயங்கியதில்லை, அவர்கள் வீட்டுப்பெண்களும் அதை அனுமதித்தார்களேயன்றி அவர்களைத் தடுத்ததில்லை. பெண்கள் பயணிப்பதில்லை, பிறந்த இடத்தை, தங்கள் இனத்தை, உடமைகளை அவர்கள் காவல் காக்கவேண்டும், போனவர்கள் திரும்பிவர ஒரு காரணம் வேண்டுமல்லவா எனவே அவர்கள் காத்திருப்பார்கள். வெகு காலமாக கப்பல் பயணமென்பது அதிக நாட்கள் பிடிக்கக்கூடியதாகவும், இப்போதைய பயனங்களைக் காட்டிலும் ஆபத்தானதாகவுமிருந்தது. பயனகாலமென்பது, பயணதூரத்தைப் பொருத்து அமைந்தது, அந்நாட்களில் எல்லோருமே எல்லாவற்றுக்குமே பழகிக்கொண்டிருந்தார்கள், நிலத்திலும் நீரிலும் குறைவான வேகத்திலும் குறைந்த வேகத்தில் மேற்கொள்ளும் பயணம், கால தாமதங்கள், காற்றுக்கான காத்திருப்பு, மின்னல்கள், சூறாவளி, சூரியன், மரணமென்று அப்பட்டியல் நீளமானது. வெள்ளைக்காரப் பெண்ணறிந்த கப்பல்கள் அந்த வகையில் கடைசியென்று சொல்லவேண்டும், அவள் சிறுமியாயிருக்கும்போதுதான், விமானப் போக்குவரத்துகள் தொடங்கின, பின்னர் மனிதகுலத்தைக் கடற்பயணத்திலிருந்து பிரித்தவையும் அவைதானென்று சொல்லவேண்டும்.

கொலெனிலிருந்த அவனுடைய அறைக்கு ஒவ்வொரு நாளும் போய்வந்தோம். வழக்கத்தைப்போலவே அவன் நடந்துகொண்டான். அங்கிருந்த நேரங்களிலெல்லாம் அவனுடைய நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமுமில்லை. ஜாடியில் தண்ணீரெடுத்து என்னைக் குளிப்பாட்டினான், கட்டிலிற் கிடத்தினான், அருகில் வந்தான், படுக்கவும் செய்தான், பலத்தைப் பிரயோகிக்கவோ, வலிமையைக் காட்டவேண்டுமென்றோ முயற்சிகளில்லை. நாங்கள் புறப்படுவதற்கு நிறைய நாட்களிருந்தன. முடிவான பிறகு எனது உடலுடன் செய்யஒன்றுமில்லை. அவன் எதிர்பார்க்கவில்லை, திடீரென்று அந்நாளும் வந்தது. இனி அவனுடைய உடலுக்கு, நாட்டைவிட்டுப்போகவிருக்கிற பெண்ணினுடல் தேவைக்குரியதல்ல. “இனி எனக்கு நீ வேண்டாம், நீ புறப்பட இன்னும் நாட்களிருக்கின்றன, அதுவரை சேர்ந்திருக்கலாமென்று நினைத்தேன். என்னால் முடியாது”, சொன்னான். செய்திகேட்டதுமுதல் தான் இறந்துபோனதாக உணர்கிறானாம், மெல்ல புன்னகைத்தான், இனி தன் வாழ்க்கையில் சிரிப்புக்கு இடமில்லை யென்றான், விரும்பியே புன்னகைத்தாயாவென்று கேட்கிறேன். ஏறக்குறைய அப்படித்தான், மீண்டும் சிரித்தான். “தெரியாது, இதோ இப்போது சிரித்தேனில்லையா, அதை வேண்டுமானால் விரும்பிச் சிரித்ததாகக்கொள்ளலாம்”, என்றான். அவ்வளவு வேதனைகளுக்கிடையிலும் அவனிடத்தில் ஒருவித மென்மை, பரிவு. அப்போதைய மனவேதனைகளைக்குறித்து அவன் பேசியவனில்லை, குறைந்த பட்சம் ஒரே ஒரு சொல்லாவது, ம்.. இல்லை. சில சமயங்களில் அவன் முகம் நடுங்குவதுண்டு, பற்களைக் கடித்தபடி, விழிகளை மூடியபடியிருந்தான், ஆனால் மூடிய கண்களில் தெரிந்த காட்சிகளோடு ஒன்றியவனாக இருந்தான். பார்க்கிறவர்களுக்கு, அப்படியான வேதனையை அவன் விரும்புவதுபோலவொரு தோற்றம், என்னை நேசித்ததுபோலவே மனவேதனைகளையும், அதற்காகத் தனது உயிரையும் கொடுக்கத் தயார் என்பதுபோலக் கடுமையாக நேசித்தான். அவன் என்னை வருடவேண்டுமென்று விரும்பினான், ஏனென்று கேட்டபோது, அதற்கு, எனக்கும் அவ்வாறானா அவா இருப்பதாகக் கூறினான். புணர்ச்சியின் உச்சத்தில் எனது முகத்தைப் பார்க்கவேண்டுமாம், புணர்ந்தான், என்னைப்பார்க்கவும் செய்தான், என்னைத் தன் குழந்தைபோல நடத்தினான். இனி இருவரும் சந்திப்பதில்லையெனத் தீர்மானித்தோம், ஆனால் அது இயலாததாகயிருந்தது, முடியவும் முடியாது. ஒவ்வொரு நாளும் மாலையில், அவனது கறுப்பு நிற வாகனத்தில், கௌரவக்குறைவென்று தலைகுனிந்தபடி எனது பள்ளியின் முன்பு எனக்காகக் காத்திருந்தான்.

புறப்படும் நாளன்று, கப்பல் மூன்றுமுறை சத்தமிட்டது, ஒவ்வொருமுறையும் நீண்டு, கர்ணகடூரமாய் முழங்கியது, நகரமெங்கும் கேட்க முடிந்தது. சைரன் முழங்கிய அதே நேரத்தில் துறைமுகப்பகுதியில் வானமெங்கும் கரியபுகை. இழுவைகள் கப்பலை நெருங்கி ஆழமான பகுதிக்கு அதனை இழுத்துச்சென்று விட்டுவிட்டு, மீண்டும் அவை தங்கள் துறைக்குத் திரும்பின. மறுபடியும் கப்பல் புறப்படுவதற்கென்று தனது சைரனை முழக்கியது, அதன் முழக்கத்தில் இன்னதென்று விளங்கிக்கொள்ளவியலாத சோகம், அச்சோகம் அங்கிருந்த பலரையும் அதாவது பயணிப்பவர்கள், அவர்களை வழியனுப்பவந்தவர்கள், பார்வையாளர்கள், யாரையும் நினைத்து வருந்தவேண்டிய அவசியமின்றி வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களென பலரையும் அழவைத்தது. அதன்பிறகு கப்பல் தனது சொந்த சக்தியை உபயோகித்து மெல்ல ஆற்றினை நோக்கி ஊர்ந்தது. வெகுநேரம் கடலை நோக்கிச் செல்லும் அதன் மிகப்பெரிய உருவத்தை அவதானிக்க முடிந்தது. பெரும்பாலான மனிதர்கள் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள், அவர்கள் கைகளிலிருந்த கழுத்துக்குட்டைகளும், கைக்குட்டைகளும் அசையும் வேகத்தில் தொய்வு, முகத்தில் நம்பிக்கையின்மை.. இறுதியாக பூமி கப்பலைத் தனது விளிம்புக்குள் ஒளித்துக்கொள்வதுபோல காட்சி. கால நிலை நன்றாகவிருக்கும் காலங்களில், கப்பல் மெல்லமெல்ல நிழலாக மறைவதைப் பார்க்கமுடிவதுண்டு

கப்பல் தனது முதல் விடைபெறலை சைரன் மூலம் அறிவித்தபோதும், கப்பலுக்கும் கரைக்குமான நடைபாலத்தை உயர்த்தியபோதும், இழுவைகள் கப்பலைத் துறையிலிருந்து ஆழமானப் பகுதிக்கு இழுத்துச் சென்றபோதும் அவளும் அழுதாள். ஆனால் சாமர்த்தியமாக கண்ணீரைச் சிந்தாமல் அழுவதற்குத் தெரிந்துவைத்திருந்தாள். அவன் சீனன். அவனைப்போன்ற காதலர்களுக்கெல்லாம் கண்ணீர் சிந்தி அழக்கூடாது. தனது மனதிலிருந்த வேதனைகளை தாயிடத்திலும், தனது சிறிய சகோதரனிடத்திலும், வழக்கம்போல ஒளித்து எதுவுமே நடக்கவில்லையென்பதுபோலக் காட்டிக்கொண்டாள். அவனது மிகப்பெரிய நீண்ட கறுப்பு நிறவாகனம் அங்கே நின்றிருந்தது, முன்னிருக்கையில் வெள்ளை சீருடையணிந்திருந்த காரோட்டி. அவ் வாகனம் மாத்திரம் மெசாழெரி கப்பற் போக்குவரத்து நிறுவனத்திற்கென்று ஒதுக்கியிருந்த நிறுத்தத்தில் மற்ற வாகனங்களுடன் நிற்காமல் தனித்திருந்தது. காரின் பின்னிருக்கையில் அசைவின்றி, பிறர்கண்ணிற்படக்கூடாதென்பதுபோல அமர்ந்திருந்தான். அவள் கப்பற் தளத்தின் கைப்பிடியைப் பிடித்தபடி ஆரம்பத்தில் நின்றதுபோல இருந்தாள். அவன் தன்னைப் பார்க்கிரானென்று அவள் அறிந்திருந்தாள், அவளும் அவனைப் பார்த்தாள், சற்றுமுன்னர் போல இல்லாவிடினும் கறுப்பு மோட்டார் வாகன வடிவில் அவனைப் பார்க்கமுடிந்தது., கடைசியாக அக்காட்சியே தொலைந்துபோனது. துறைமுகமாத்திரமல்ல, பூமியும் கண்ணிலிருந்து மறைந்தது.

தென் சீனக் கடல், செங்கடல், இந்தியப்பெருங்கடல், சூயஸ் கால்வாயென்று எல்லாவற்றையும் கடந்தாக வேண்டும், காலையில் விழித்துக்கொள்வது வழக்கம், விழித்துக்கொண்டோம், கப்பல் அதிக ஆட்டங்காணாமல் முன்னேறிக்கொண்டிருப்பதைவைத்து, ஆழ்கடல் மணற்படுகையால் மூடப்பட்டிருக்கிறதென்பது தெளிவு. பயணத்தில் இந்தியப்பெருங்கடல் முக்கியமானது, தென் துருவம் வரை விரிந்து பரந்திருக்கும் நீர்ப்பகுதி, ஒரு நிறுத்தத்திற்கும் மற்றொரு நிறுத்தத்திற்குமிடையே( குறிப்பாக இலங்கைக்கும் சோமாலிக்குமுள்ள இடைபட்டதூரத்தைக் கடக்க) நீண்ட நேரம் பயணிக்க வேண்டும், சிலநேரங்களில் அதிர்ஷ்டவசமாக அப்பயணம், வேறுகடல்களில் பயணிப்பதைப்போல, மிகவும் அமைதியாக, அதிக ஆரவாரமற்று, பிரச்சினைகள் எதுவுமின்றி அமைந்துவிடும். அந்நேரங்களில் கப்பலில் கொண்டாட்டந்தான், விடுதிகள், நடைபாதைகள், ஜன்னல்களென்று எல்லாவற்றையும் பயணிகளுக்குச் சௌகரியமாக திறந்துவைத்திருப்பார்கள். காற்றோட்டமின்றி தவித்துக்கொண்டிருந்த பயணிகள் தங்கள் கேபின்களிலிருந்து தப்பித்தால் போதுமென்று வெளியேறி உலாத்துவதைப் பார்க்கலாம், ஒருசிலர் கப்பல் தளங்களிலேயே உறங்கிப்போவதுமுண்டு. இவ்வாறான ஒரு பயணத்தின்போது, இந்தியப்பெருங்கடலை கடக்கிறபோதுதான் அச்சம்பவம் நடந்தது, பின்னிரவொன்றில் ஒருவன் இறந்துபோனான். அச்சம்பவம் எப்பொழுது நிகழ்ந்ததென்று நினைவிலில்லை, கடைசியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேனே அப்பயனத்தின்போதா அல்லது வேறொரு பயனத்தின்போதா, சொல்வதற்கில்லை. முதல் வகுப்புப் பயணிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பார் என்று நினைக்கிறேன். ஒரு சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் இளைஞனொருவனும் இருந்திருக்கிறான். விளையாடிக்கொண்டிருக்கிறபோதே, வார்த்தைகளேதுமின்றி எழுந்து நின்றவன், கையிலிருந்தச் சீட்டுகளை மேசைமீது எறிந்திருக்கிறான், பின்னர் தளத்தினைக் வேகமாக ஓடிக் கடந்தவன், தண்ணீரில் குதித்து விட்டான். வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தக் கப்பலை நிறுத்தியபோது, உடற் கூட கிடைக்கவில்லை.

எழுதுகிறபோது அக்கப்பல் கண்களுக்குப் புலப்படவில்லை, மாறாக சாடெக்கும் அங்கே கேட்டக் கதைகளும் நினைவுக்கு வருகின்றன. சாடெக் நகர நிர்வாகியின் மகன் அவன், சைகோன் பள்ளியில் இவளுடன் ஒன்றாகப் படித்தவனென்பதால் அவனை அறிவாள். நல்ல உயரம், சாதுவான முகம், மாநிறம், கண்களிற் கண்ணாடி. அது பற்றிய வேறு தகவல்களோ, அல்லது ஒரேயொரு கடிதாமவது கேபினில் கிடைத்திருக்குமா, இல்லை. வயது மாத்திரம் நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, நினைத்துப்பார்க்க்கையில் உடல் நடுங்குகிறது, பதினேழு வயதென்று நினக்கையிலும் அதுதான் அனுபவம். விடிந்தபோது கப்பல் இல்லை அது புறப்பட்டுவிட்டது, இதில் மிகவும் வேத்னைக்குறியக் காட்சி, சூரியன் உதித்தபொழுது கடல் வெறிசோடிக்கிடந்தது.

பிறகு மற்றொரு சம்பவம், இதுபோன்றதொரு பயணத்தைமுன்னிட்டு இந்தியப் பெருங்கடலைக் கடந்தபோதுதான் அது நிகழ்ந்தது. இரவுதொடங்கி வெகுநேரமாகியிருந்தது. முக்கிய தளத்தில் வால்ஸ் நடனத்திற்கான ஷோப்பென் இசையை பியானோவில் வாசிக்கிறார்கள், மாதக்கணக்கில் அந்த இசையைக் கற்றுக்கொள்ளமுயன்று கடைசிவரை அதை ஒழுங்காக வாசித்தவளல்ல, பியானோ வாசிப்புச் சரிவராது நிறுத்திக்கொள்ளலாம் என நினத்தபோது, தாயும் அதற்கு உடன்பட்டாள், அவளுக்குப் பிடிபடாத அந்த இசையைத்தான் வாசித்துக்கொண்டிருந்தார்கள். எத்தனையோ இரவுகளில் அதுவும் ஒன்றுதான், ஆனால் அந்த இரவு முக்கியமானது, மேலே வானம் ஜொலித்துக்கொண்டிருக்க ஷொப்பென் இசை பொங்கிப் பிரவாகமாகப் பாய்ந்த அந்த இரவு கப்பலிற்றான் பயணம் செய்துகொண்டிருந்தாள். காற்றின் சுவடற்ற இரவு, இருளில் மூழ்கிக்கிடந்த கப்பலெங்கும் இசைவெள்ளம், ஏதோ விண்ணுலகத்தின் ஆணையை நிறைவேற்றுவதுபோல. ஷொப்பென் இசையுடன் அவளை இணைத்தது எது, கடவுளால் தீர்மானிக்கபட்டதா, அவ்வாறாயின் அதன் ஆற்றால்தானென்ன? சொல்லவியலாது. கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள இம்முறை அவள் விரும்பியதைப்போல எழுந்து நின்றாள், கொலென் மனிதனை நினைத்து அழுதாள். அவனை உண்மையிலேயே நேசித்திருப்பாளா என்ற சந்தேகம், ஏனெனில் மணலிற் கலந்த நீர்போல அவளுடைய காதல் நிகழ்ந்ததால், அதன் தன்மையை உணர்வதற்கான வாய்ப்பு அவளுக்கு அமையவில்லை. பியானோ இசை மெல்ல மிதந்து கடலிற்கலக்கிறநேரத்திற்றான் அவனிடத்தில் தான் கொண்டிருந்த காதலின் வலிமையை அவள் உணர்ந்தாள். அதாவது பிற்காலத்தில், மரணத்தினூடாக, இளையசகோதரனின், அமரத்துவத்தை உணர்ந்ததைப்போல.

அவளைச் சுற்றிலும் பயணிகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இசையில் மூழ்கியிருந்தார்கள் நல்லவேளை அவள் அதற்கு இடையூறாகயில்லை. அமைதி. இந்தியப்பெருங்கடலில் இதுபோன்ற மிக அமைதியான இரவொன்றைப் பார்ப்பது இதுதான் முதற்தடவையென்று அவள் நினைத்தாள். அன்றைய இரவின்போதுதான், அவளுடைய இளைய சகோதரன் பெண்மணியொருத்தியோடு கப்பலின் தளத்திற்கு வரும்போது பார்த்ததாக நினைவு. அவன் தளத்திலிருந்தப் பாதுகாப்பு வளைவை பிடித்தபடி நின்றிருந்தான். அவனை அவள் கட்டிப்பிடித்தாள், இருவரும் தழுவிக்கொண்டனர். அக்காட்சியைத் தவறவிடக்கூடாது என்பதைப்போல இளம்பெண் தன்னை ஒளித்துக்கொண்டுப் பார்த்தாள். அப்பெண்மணியை அடையாளப்படுத்த முடிந்தது. அவளுடைய இளைய சகோதரனோடு பலமுறைப் பார்த்திருந்தாள், அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள், அவள் திருமணமானவள். தம்பதிகள் இருவரும் ஆளுக்கொரு திசைக்காய் இருந்தனர். கணவன் மனைவியின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமலிருந்தான். பயணத்தின் இறுதி நாட்களில், இளைய சகோதரனும் பெண்மணியும் பகலில் அவரவர் கேபின்களிற் கழிப்பதும், இரவுவேளைகளில் சந்திப்பதுமாக இருந்தார்கள். அந்நாட்களில் தனது தாயையும் தனது சகோதரியையும் பார்க்கிறபோதெல்லாம் பாராமுகமாக இருந்தான். தாய்க்குக் கடுமையானக் கோபம் அதை அடக்கிக்கொண்டு அமைதியாகயிருந்தாள், ஒருவகையிற் பொறாமையும் அவளுக்கிருந்தது. ஆனால் அந்த இளம்பெண் அழுதாள். பெண்மணி சந்தோஷமாக இருப்பதாக நம்பினாள், தனது இளைய சகோதரனுக்குப் பிற்காலத்தில் என்ன நேருமோவென்று அஞ்சினாள். தங்களைவிட்டுச் இளையசகோதரன் பிரிந்து அப்பெண்மணியுடன் செல்லக்கூடுமென்று நினைத்தாள். அப்படியேதும் நடக்கவில்லை, பிரான்சை அடைந்ததும், இளைய சகோதரன் அவர்களைத் தேடித்தான் வந்தான்.

வெள்ளைக்காரபெண் புறப்பட்டுப்போனபிறகு, தனது தந்தைக்குக் கீழ்ப்படிய அவனுக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்குமென்று அவளுக்குத் தெரியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவனுடைய குடும்பம் பார்த்துவைத்திருந்த பெண்ணையே – உடல் முழுக்க தங்கம் வைரம், வைடூரியமென்று பூட்டிவைத்திருந்த பெண்- அவன் மணம் செய்துகொள்ளவேண்டுமென்று, அவனது திருமணத்தின்போது கட்டளைப்பிறப்பிக்கபட்டது. சீனப்பெண், அவளுக்கும் பூர்வீகம் வடதிசை, ·பூ-ஷ¥வென் நகரம்.

அப்பெண்ணோடு இணைத்துக்கொள்ள அவனுக்கு அதிகக் காலம்பிடித்திருக்கும், அவ்வாறே அவனது சொத்துக்களையும் உடனடியாக உரிமை கொண்டாடியிருக்க மாட்டான். வெள்ளைகார பெண்ணைச் சுலபத்தில் மறந்திருக்கமாட்டான்., அவள் உடல், கட்டில், அதில் அவள் குறுக்காக படுத்திருந்ததென்று ஒவ்வொன்றும் நினைவிலிருக்கும்., அவனது இச்சைகளின் மகுடமாக, அவனது தாபத்தின் சாட்சியாக, அவனது காதல் அனுபவங்களுக்கு எல்லைகளற்ற வெளியாக, புலன் நுகர்ச்சியின் இருட்தன்மைகொண்ட பாதாளமாக அவள் இருந்திருக்கிறாள். பிறகு அதற்கான நாளும் வந்திருக்கும், வெள்ளைகாரச் சிறுமியிடம் கண்ட காதல் அனுபவம் கட்டுக்குள் அடங்காதது, கடுமையான காய்ச்சலையொத்த அத்தாபத்தை வேறொருத்தியின் உடலில் இறக்கியாகவேண்டும், தனது கடந்த கால காதல்வாழ்க்கையை அப்பெண்ணிடத்தில் பொய்களைக்கொண்டு மீள் உருவாக்கம் செய்திருப்பான், தங்கள் குலப்பெருமையை நிலைநாட்டும் வகையில், அவனுடைய செயற்பாடுகள் பொய்த்தன்மைகொண்டதாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தே உறவும், மேலுலகமும், வடதிசையிலுள்ள அவனது முன்னோர்களும் இருந்தார்கள்.

வெள்ளைக்காரப் பெண்ணைப்பற்றிய விவகாரங்கள் அவளுக்குத் தெரிந்திருக்குமா? சாடேக்கைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் அவள் வீட்டில் வேலைசெய்தார்கள், அவர்களுக்கு இக்கதைகளெல்லாம், தெரியும், அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். அவளுக்கும் மனவேதனைகளுண்டு, அதை அலட்சியம் செய்ய அவளால் முடியாது. இருவருமே ஒத்தவயதினராக இருக்கவேண்டும் – பதினாறுவயது. அந்த இரவு அவளுடைய கணவன் அவளிடம் அழுதிருப்பானா? அவள் சமாதானம் செய்திருப்பாளா. அவளுக்கோ பதினாறுவயது, அவளுக்குக் கணவனாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சீனனுக்கு முப்பது வயது, தனக்கேற்படும் விளவுகள் குறித்த கவலையின்றி இதுபோன்ற கள்ளக் காதல் விவகாரங்களில், கூச்சமின்றி சமாதானபடுத்திக்கொண்டிருக்க அவள் முனைவாளா? யாருக்குத் தெரியும், ஒரு வேளை அவளுக்கும் கள்ள உறவுகளிருக்குமோ என்னவோ? யார் கண்டது? இரவுமுழுக்க வார்த்தைகளேதுமின்றி இருவரும் சேர்ந்தே அழுதிருக்கக்கூடும். அழுதுமுடித்து, புணர்ச்சியில் இறங்கியிருக்கலாம். அவளுக்கு (வெள்ளைக்காரப் பெண்ணிற்கு) சீனனுக்கும் அவனுடைய புதுமனைவிக்குமிடையில் என்னதான் நடந்ததென்று உண்மையில் தெரியாது.

போருக்குப்பிறகு பல வருடங்கள் கடந்திருந்தன திருமணங்கள், பிள்ளைகள், மனவிலக்குகள், புத்தகங்களென்று என்னென்னவோ இடைப்பட்டகாலத்தில் வந்துபோயின. தனது மனைவியுடன் பாரீஸ¤க்கு வந்திருந்தான். அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்: “நாந்தான் பேசறேன்”, அவனது குரலென்று புரிந்தது. “உன்னுடைய குரலைக் கேட்கவேண்டும் போலிருந்தது”, என்றான். “வணக்கம், நாந்தான் பேசறேன்”, அவள். அவன் சங்கடப்பட்டான், எப்போதும் அவனுடனிருக்கும் அச்சம், அவனது குரலில் திடீரென்று பதட்டம், அவன் குரலிலிருந்த நடுக்கங் காரணமாக, அவனது உச்சரிப்பு சட்டென்று சீனருக்கு உரியதாக மாறியதைக் கவனித்தாள். அவள் புத்தகங்கள் எழுதுகிறாளென்று தெரிந்து வைத்திருந்தான். சைகோனில் அம்மாவை மறுபடியும் பார்க்க நேர்ந்தபோது, அவள் சொல்லியிருக்கிறாள். இளைய ச்கோதரன் விவகாரமும் கேள்விப்பட்டிருக்கிறான். அம்மாவுடைய நிலைமைகண்டு வருந்துவதாகச் சொன்னான். அதன்பிறகு அவளிடம் அவனுக்குச் சொல்ல எதுவுமில்லை என்பதுபோல நடந்துகொண்டான், பிறகு மீண்டும், வழக்கமான தனது வசனத்தை ஒப்புவிப்பவன்போல, இன்னமும் அவளைக் காதலிப்பதாகவும், அவளை மறக்கும் எண்னமில்லையென்றும், அவன் மரணிக்கும்வரை அவளைக் காதலிப்பானென்றும் கூறினான்.

-முற்றும்-

– பதிவுகள் சஞ்சிகை , ஜூன் 2008, மூலம்: மார்கெரித் த்யூரா (1914-1996), தமிழில: நாகரத்தினம் கிருஷ்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *