காதற் பறவைகள்
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 212
(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நானும் அவனும் இதே அறையில்தான் இரண்டு வருடங் களாக இருந்து வருகின்றோம். நான், கண்டியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் உதவி மனேச்சராக கடமை யாற்றுபவன். அவன் பதினேழு வயதேயான சந்திரசேகரன். கண்டியில் பிரபலமான கல்லூரியொன்றில் எச். எஸ். ஸி. முதலாம் ஆண்டில் பயின்றுகொண்டிருந்தான்.
எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி யது. மனைவி தேவியையும் கண்டிக்கு அழைத்துக்கொண்டு தனியாக ஒரு புதிய வீடு எடுத்துப் புதிய வாழ்வைத் தொடங்க எண்ணியிருந்தேன், எனது அதிர்ஷ்டம், நான் இருந்த வீட்டிலேயே-ஒரு குடும்பம் வாழக்கூடிய பகுதி ஒன்று இருந்தது. அதில் குடியிருந்தவர்கள் இந்த மாத முடிவோடு அந்த இடத்தைவிட்டு வேறு எங்கோ போகின் றார்கள். வீட்டு சொந்தக்காரனிடம் அப்பகுதியை எமக்கு தரும்படி விண்ணப்பித்திருந்தேன்.
எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால், அதுவும் நாங்கள் இருக்கும் அறை ஜன்னல் வழியாகப் பார்த்தால் கண்டியின் ஒரு பகுதி மிகவும் அழகுடன் தெரியும். கண்டி வாவிக்கு நேர் மேலே சிறிய பூங்காவொனறிற்குப் பக்கத்திலேதான் எனது வீடு. சந்திரசேகரனும் நானும் மாலை ஐந்தரை மணிக்கு எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள ‘அரச குடும்ப நந்தவனம் என்ற சிறிய நந்தவனத்திற்குப் போய்விடுவோம். சிறிய நந்தவனமேயாயினும், மனதை அள்ளும் அழகு, தனிமை யைத் தந்து அதிலேயே மனச்சாந்தியைத் தோற்றுவிக்கும் அமைதி ஆகியன அந்தப் பூங்காவில் நிறைந்திருந்தன. சிறிய நீருற்றுக்களைச் சுற்றி, பச்சைவிரிப்பில் நீலமாய், மஞ்சளாய், சிவப்பாய் எனது நெஞ்சையள்ளும் துளிர் நீலமாய் மலர்கள் கொத்தாய்க் குலுங்கி அழகென மலர்ந்து கிடக்கின்றன. பூங்காவை ஏழு மணியோடு பூட்டிவிடுவார்கள். நாங்கள் இருவரும்தான் பூங்காவில் இருந்து வழக்கமாகவே கடைசி யில் போவோம்.
இரண்டு வருஷகாலப் பழக்கத்தில் சந்திரசேகரன் எனக் குச் சிறந்த நண்பனாய் வந்துவிட்டான். எங்கள் இருவருக் கிடையே எந்தவொரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இல்லை. சந்திரசேகரன் கலை என்ற இடத்திலேயிலுள்ள கணபதி ராமனின் ஐந்தாவது மகன். அவனை உயர்ந்த படிப்பாளி யாக்கவும் பதவியாளனுமாக்க வேண்டுமென்ற லட்சியத் துடன்தான் காசைக் காசென்று பாராமல் கணபதிராமன் இங்கே படிக்க விட்டிருக்கின்றார்.
சந்திரசேகரன் மிகவும் அமைதியான பையன். அவன் பயின்ற கல்லூரியின் கட்டுப்பாட்டால் ஏற்பட்ட அமைதி யென்றும் அதனை நான் சொல்ல மாட்டேன். எதிலுமே அவன் ஒழுங்கானவன்.
எல்லாவற்றிலுமே திட்டமிட்டாற்போல அவன் நடந்து கொள்வான். உடுப்புக்களை மடித்துப் போடுவதில் ஒழுங்கு. புத்தக அடுக்கில் ஒழுங்கு. படிக்கும் நேரத்தில் ஒழுங்கு. அவனுடைய நோட்ஸ் கொப்பிகளை அடிக்கடி பார்த்திருக் கின்றேன். அழகான எழுத்தில், பார்ப்பவர்கள் வாசிக்க ஆசைப்படும்படி ஒழுங்காக எழுதியிருப்பான். இந்த ஒழுங்கே அவனில் தனி அழகாக மாறிவிட்டது என்று நான் மனதில் நினைப்பதுண்டு. இந்த ஒழுங்கான பழக்க வழக்கங்களே அவனில் அமைதியை தோற்றுவித்திருக்க வேண்டும். வார முடிவில் வரும் இரண்டு நாட்களையும் அவன் பூரண ஓய்விற்காக எடுத்துக்கொள்வான். இந்த இரண்டு நாள் வாழ்க்கையிலும்தான் முதல் ஐந்து நாள் வாழ்க்கைக்கு மாறுபட்டவனாய் அவன் நடந்து கொள்வான்.
எனக்கு அவனில் பிடிக்காத குணங்களும் இருக்கத்தான் செய்தன. அவன் சினிமாவிலும் புத்தகங்களிலும் மிகவும் பிரியமுள்ளவனாயிருந்தான்.
2
”சந்திரா, நீ புத்தகங்கள் வாசிப்பதையோ, சினிமாப் படங்கள் பார்ப்பதையோ நான் தவறாக எடுக்கின்றேன்என்று நினைக்காதே. ஆனால் நீ வாசிக்கும் புத்தகங்கள் எல்லாம் காதற் கற்பனைக் கதைகளாகத்தான் இருக்கின்றன. ஒரு கதாநாயகன், நாயகியின் காதல் ஏக்கங்கள், பெருமூச்சு நிறைந்த புத்தகங்களைத்தான் நீ படிக்கிறாய்”.
சந்திரசேகரனுக்கு ஏதோ சந்தர்ப்பம் ஒன்றில் நான் என் மனதினுள் நீண்ட நாளாய் வைத்திருந்த விஷயத்தைச் சொன்னபோது அவன் முதலில் திடுக்கிட்டாலும், பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு எனக்குச் சொன்னவை ஏனோ தெரியவில்லை. இன்னமும் என் மனதிலே நன்கு பதிந்திருக் கின்றன. அவன் சொன்னான்:
“ஓய்வு நேரம் என்று இருப்பதே சந்தோஷமாகக் களிப் பதற்குத்தானே? பிறகு எதற்காகத் துக்கங்கள், விரக்திகள், பிரச்சினைகள் நிறைந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும்? ‘றோமான்றிக் டைப் பான புத்தகங்கள் என்று இவை களைக் கேலி செய்கின்றீர்கள்… இவைகளை நீங்களே படித்துப் பாருங்கள். இவைகளைப் படிக்கும் நேரத்தில் நமக்கு உலகமே மறந்து போய் விடுகின்றது. மோகனமான கனவுகளிலே உலாவி வருவோம். எல்லாத் துன்பங்களுமே மறக்கப்பட்டு விடும்…”
அவன் வெறி மயக்கத்தில் சொல்லுபவன் போல, ஆங்கி லத்தில் தன்னையே மறந்து கூறிக்கொண்டே இரண்டு புத் தகங்களை என்னிடம் தந்தான். ஒன்றின் பெயர் மட்டும் நல்ல நினைவில் இருக்கின்றது. அந்த ஒன்றின் பெயர் “லவ் பேர்ட்ஸ்”- காதற் பறவைகள். எனக்கு மனதி னுள்ளே இனந்தெரியாத சிரிப்பும், அவன் மீது பரிதாப மும் தோன்றியது. அவனைப் பார்த்துச் சிரித்ததையும் கவனியாமல் அவன் எதையோ படித்துக் கொண்டிருந்தான்.
சில நாட்களாகச் சந்திரசேகரனின் உடுப்பிலும், செயல் களிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வந்ததை நான் அவதானித்தேன். சந்திரசேகரன் இளமையின் உதயத்தில் இருக்கும் வயதினன். இப்போதுதான் மீசைகூட இலேசாக அரும்புகின்றது. முகத்தில் தேஜஸ், சாந்தமாயும், வாலி பத்தின் அழகாயும் பொலிந்திருந்தது. உடுப்பில் அவன் மிகக்கூடிய கவனம் செலுத்துவதில்லை. ஆயினும் எதையும் சுத்தமாகவும், கவர்ச்சியாகவும் அணிந்து கொள்வதிலேயே வசீகரமும், வனப்பும் பொலிந்தன.
ஆனால் சில நாட்களாக அவன் மிகவும் அழகான உடை அணிய ஆரம்பித்தான். கண்ணாடியின் முன்பாய் நின்று தன்னை அலங்கரிப்பதிலும், மனதைக் கிறங்க வைக்கும் வாசனைத் திரவியங்களைப் பாவிப்பதிலும் அக்கறையானான். பாத்ரூமிற்குள் நின்று திடீரென நான் அறைக்குள் வந்த போது, கண்ணாடி முன் நின்று இப்போதே அரும்பிய மீசைக்கு எரிந்த நெருப்புக் குச்சியின் முனைக்கரியால் கருமை தீட்டிக் கொண்டிருந்தவன் சடக்கென்று தன்னைச் சமாளித்து, நெருப்புக் குச்சியை கைக்குள் மடக்கிக்கொண்டு முகத்தில் இல்லாத பருவொன்றைச் சுரண்டுவது போலப் பாவனை செய்ய, நான் மீண்டும் பாத்ரூமிற்குள் அலுவல் உள்ளவன் போலப் போய் விட்டேன்.
இது குமரப் பருவத்தின் ஆவேசமான, அவசரப்பட்ட ஏக்கமென்பதனை நான் அறிவேன்.
சந்திரசேகரனின் போக்கு ஏதோ அனர்த்தம் ஒன்றை என் நெஞ்சிற்குள் காரணமேயற்றுச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. அவன் நெருப்புப் பட்டவுடன் கருகும் மெல்லிய பூப்போன்ற மனம் கொண்டவனாதலால் கேலி பண்ணியாவது அவனிடம் விஷயத்தைச் சுட்டிக்காட்ட எனக்கு மனம் வரவில்லை. எல்லாவற்றையும் நான் மிக மௌனத்தால் அணுகிக் கொண்டிருந்த நாட்களில் எங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி நீண்டுகொண்டு போகும் தன்மை காணப்படுவதுபோலத் தோன்றியது. முன்பென்றால் நாங்கள் இருவரும் ஒழுங்காக நந்தவனத் திற்குப் போவோம். ஏழு மணிவரை பேசிக்கொண்டிருக்கும் எங்களின்முன் நந்தவனத்துக் காவற்காரன் வந்து செருமும் வரை நாங்கள் அங்கிருப்போம். சில நாட்களாக, வாரங் களாக என்றே சொல்லலாம், படிக்கவேண்டும் – அந்த வேலை, இந்த வேலை என்று சொல்லிவிட்டு சந்திரசேகரன் வீட்டிலேயே நின்றுவிடுவான். நானே தனியனாக மாலைப் பொழுதைக் கழிப்பதற்காக நந்தவனத்திற்கோ என் சிநேகிதர்கள் வீட்டிற்கோ செல்வேன்.
கண்டியில் எனது நண்பர்கள் என்று சொல்லத்தக்கதாக இருந்தவர்களில் கனகரத்தினமும் ஒருவன். பேராதனை விவசாயப்பகுதிக் கந்தோரில் வேலைபார்க்கும் அவன் பழகுவதற்கு இனியவனாதலால் அவன்மீது எனக்கு அளவற்ற அன்பும் நட்பும் இருந்தது. அவனுடைய வீட்டினர் நல்லவர் கள். அவனுக்கு அழகிய தங்கச்சி ஒருத்தியும் இருந்தாள்; இடையிடையே நான் கண்டதுண்டு.
மாலையில் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குப் போனபோது பள்ளிக்கூட உடுப்புக்களைக் கழற்றது கட்டிலில் சாய்ந்தபடியே சந்திரசேகரன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதைக் கண்டதும் எனக்கு மனதிற்குள் ஏதோ போலிருக்கவே, கிட்டச் சென்று அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தேன்.
அவனுக்குச் சுகயீனமில்லை என்ற முடிவுக்கு நான் வரு முன்னரே அவன் தனக்குக் களைப்பாயிருப்பதால் அப்படிப் படுத்துக் கிடப்பதாகச் சொல்லிவிட்டு “பாத்ரூம்’ பக்கமாகப் போனான். நடையிலும் சோர்வு இருந்தது.
அவனது மேசையில் “பாரதியார் கட்டுரைகள்” என்ற புத்தகம் கிடந்தது. ஏதோ நினைவில், யதேச்சையாகப் பக்கங்களைத் தட்டிக்கொண்டு போன நான் சிவப்புக் கோடிட்ட பக்கமொன்றில் என் கவனத்தைப் பதித்தேன். “சிட்டுக் குருவி” என்ற கட்டுரையில் இருந்த பத்தி ஒன்றிற்கு இடப்பட்டிருந்த சிவப்புக்கோடு அடங்கிய வசனங்களை நான் மனதிற்குள்ளாகவே வாசித்தேன்… “இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழு கின்றன. ஒன்று ஆண், மற்றொன்று பெண். இவை தம் முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக் கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டை யிட்டுக்குஞ்சுகளைப்பசியில்லாது காப்பாற்றுகின்றன. சிட்டுக் குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடிப் பொறாமையுண்டாகும்.”-“தெய்வமே எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதர்கூட்டத் தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களை யும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?”-நான் புத்த கத்தை மூடினேன். சந்திரசேகரனைப் பற்றி எனக்குள் துயரம் கனத்த சந்தேகம் தோன்றியது.
அவனின் பிடிதராத புதிய போக்கு, பெருமூச்சுகள், எங்கோ சூனியத்தைத் துளாவும் சிந்தனைகள் – இவைகளுக்கு அர்த்தம்தான் என்னவோ?
சில வேளை யாரையாவது காதலிக்கின்றானோ?
என் மனதினுள் இப்படியொரு நினைவு பதுங்கியிருந்து வெளியே துள்ளிக் குதித்தது அதிசயமில்லை. இருபது வயதிற் குள் எல்லாரும்தான் இளமைப் பருவத்தை மனோகரமான கனவுகளில் கழிக்கின்றார்கள். ஆனால் யாவையும் மறந்து அந்தக் கனவுகளையே வாழ்க்கையாய் வளர்க்கின்றபோது தான் இளமையின் வழி பாழடைந்து போகின்றது. காதல், அதுவும் பதினேழு வயதுக் காதல் உணர்ச்சி ஒரு குமரனின் மனதில் சுவாலையாய் எரிந்து, அவனையும், அவ னது தேசத்தின் தலைவிதியையும், இளமையின் இலட்சியங் களையும் நாசப்படுத்தி விடுகிறது. இயல்பான இந்த இளமை உணர்ச்சியைத் திசை திருப்பி நாசப் பாதையில் கொண்டு போய்த் தள்ளும் சக்திதான் எது?
நானும் தேவியும்கூடக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்தான். இருபத்தியாறு வயதில் தேவி யோடு நான் பழகி, அறிந்து காதலித்து, இருவரும் அதனையே எங்கள் மனதிற்குள் மௌனமாய் காப்பாற்றி, ஆசைகளை எல்லாம் அறிவு பூர்வமான எண்ணங்களால் மறைத்து மூன்றாண்டுகளாய் எங்கள் இருவரதும் நெஞ்சறிந்த ரகசிய மாய் வைத்திருந்த காதலை, மனதார வாழ்ந்த வாழ்வை, மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் உலகறிய திருமணம் என்ற வினை மூலம் சட்டபூர்வமாக்கி வாழத் தொடங்கினோம்!
அறிவு பூர்வமாய் ஒருவரை ஒருவர் உணர்ந்து இருபத் தொன்பது வயதில் நான் செய்த காதல் மணத்தை, இந்தப் பதினேழு வயதுச் சிறுவனுக்கும் கற்பித்த மறுகணமே என் மனதில் சிரிப்பும், அருவருப்பும் தோன்றியது…
என் சிந்தனையின் நடுவே, எனக்கு முன்பாய் கனகரத்தி னம் வந்து நின்றதையும் கவனிக்கவில்லை. அவன்தான் என்னுடைய தோள்களை உலுப்பி என்னை இவ் உலகிற்குக் கொண்டு வந்தான்.
பாத்ரூமிற்குள் போய்விட்டு அறைக்குள் வந்த சந்திர சேகரனின் முகம், கனகரத்தினத்தைக் கண்டதும் இலேசாக இருளடைந்ததை நான் அவதானித்தேன். கனகரத்தினத்தை அவனுக்கு அறிமுகப்படுத்துமுன் கனகரத்தினமே, சந்திர சேகரனைத் தனக்கு ஏற்கனவே தெரியுமென்று சொன்னான். பிறகு மேசையில் இருந்த “பாரதியார் கட்டுரைகள்” புத்தகத்தை எடுத்துப் பார்த்தவன், முகத்தில் சிரிப்பு மலரச் சொன்னான்:
“இந்தப் புத்தகம் நேற்று எனது வீட்டிலே தங்கச்சி லலிதா வைத்திருந்தாள்… நீர் லலிதாவோடு படிக்கின்றீரோ?”
சந்திரசேகரன் என்னைப் பார்த்து தயங்கியபடியே தலை யசைத்தான். நான் என்னையறியாமலே ‘ஓ, அப்படியா?” என்றுவிட்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன்… அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
3
மூன்று நாட்கள் கழிந்த பின்புதான் நான் வீட்டிற்கு வருவேன் என்று தேவிக்குக் கடிதம் எழுதிப் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தேன்.
சமீப நாளைய வழக்கம் போலவே, மேசையில் சாய்ந்து சந்திரசேகரன் எதையோ யோசித்திருக்க, கண்டும் காணா ததும்போல நான் உடுப்பை மாற்றிவிட்டுக் கட்டிலில் இருந் தேன். சந்திரசேகரன் என்னைப் பார்த்தான்.
“உங்களோடு சில விஷயங்கள் பேசவேண்டும். லேக் பக்கமாகப் போவோமா?”
மனதில் நலுங்கிய அதிசயத்தைக் காண்பிக்காமலே தலை அசைத்தேன். சிறிது நேரத்தில் இருவரும் கண்டி வாவிப் பக்கமாகச் சென்று, வாவிக்கு எதிர்த்தாற் போலிருந்த சிமெந்து வாங்கொன்றில் அமர்ந்தோம். எங்கள் எதிரே கிர்ரென்று குருவியொன்று பறந்து சென் றது.
“சந்திரா, அப்படி என்ன விஷயம்? பேசாமலே இருக்கின்றீரே?” எங்கள் இருவரிடையேயும் நிலவிய மௌனத்தை நானே கலைத்தேன்.
“அன்றைக்கு நான் தந்த ‘லவ் பேர்ட்ஸ்’ புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
நான் அதன் கதையை நினைவு கூர்ந்தேன். ஒரு கல்லூரி மாணவன் தன்னோடு பயிலும் சக மாணவியைக் காதலிக் கின்றான் பலதடவை முயன்று, கடைசியில் தன் காதலைச் சொல்லி விடுகின்றான். அவள் பதினைந்து வயதேயான சிறுமி யானாலும் ஏதோ விதத்தில் சம்மதித்து விடுகின்றாள். பிறகு அழுகை… கலக்கம்… கடைசியில் இருவரும் ஒன்றாகினர் இதுதான் கதை!
“சுத்த மண்ணாங்கட்டிக் கதை. இவைதான் நமது இளஞ் சந்ததியைப் போதையிலாழ்த்தி, மன முறிவுகளையும், விரக்தியையும் அடையச் செய்கின்றன”.
அவனுக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை என்பதை முகஞ்சுழித்து காட்டினானாயினும் நான் தொடர்ந்தேன்!
”சந்திரா, இன்றைய அநேக புத்தகங்களும், சினிமாவும் இல்லாத ஒன்றையே இன்றைய தலைமுறைக்குக் கற்பிக் கின்றன. இவைக்கு காசுதான் லட்சியமே தவிர தேசத்தின் புதியவாழ்வு லட்சியமில்லை. இவர்கள் கதாநாயகன்- காதலி, உல்லாச வாழ்வு என்ற வட்டத்திற்குள் எல்லாவற்றையும் காண்பிக்கிறார்கள். மனிதப் பருவங்களுக்கு லட்சியங்கள் இருக்கின்றன. தொல்லையும் துயரமும் சூழ்ந்த உலகின் தலை விதியை மாற்றிப் புது உலகாக்க முயற்சிகள் நடைபெறும் மகத்தான சகாப்தத்தில் நாம் வாழுகின்றோம்…சந்திரா, நீ உன்னை நினைத்துப் பார், உனக்கு இப்போது பதினேழு வயது. படிக்கும் மாணவன். உன் உத்தியோகம் என்ற நிழலிலே குளிர்மைப் பெறக் காத்திருக்கும்உன் குடும்பத்தைநினைத்துப் பார்…நான் பிரசங்கம் செய்ய வில்லை… நீ முதலிலே படி. பிறகு உன் அயலைச் சுற்றிப் பார். வாழ்க்கையின் குரூர வசீகரங்கள் தெரியும். நாங்கள் ஒரு முறைதான் வாழுகின்றோம். அந்த ஒரு முறைக்குள் சரியாக வாழ்ந்துவிட வேண்டும்.”
அவன் மீண்டும் பைத்தியக்காரனைப் போலக் கேட்டான்.
“காதலைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?”
எனக்கு நெஞ்சினுள் கோபம் பற்றி மறு கணமே ஆறி அடங்கிற்று. நான் அவனுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் வாவியைப் பார்த்தேன்: “சந்திரா, இந்த வயதில் உனக்கு எதற்காக இந்த விசாரங்கள்?”
“மனிதனுக்கு வாழ்க்கையில் தின்பதும், உறங்குவதும், உழைப்பதும் மட்டுந்தான் கடமைகளல்ல. தான் வாழும் உலகில், அவலப்பட்டு அல்லலுறும் மக்களின் புதிய வாழ் விற்காக உழைப்பதும் ஒப்பற்ற கடமையாகும். சாகும் போது ஒளிவாய்ந்த புத்துலகு தோன்றுவதற்கு நூலள வாவது பங்கைக் கொடுத்தேனே என்ற மன நிறைவுடன் மனிதன் சாகாதவரை அவனது சாவு மதிக்கப்படாத சாவாகிறது. மன நிறைவுடன், மனிதன் சாகும்வரை வாழ்ந்த வாழ்வுதான் நிறைவான வாழ்வு. அந்த வாழ்விலே அவனுக்குப் பங்கு நிற்கக்கூடிய பெண் தேவைதான். காதலும், பசியும் மனித குலத்தைக் காலங்காலமாக ஆட்டி வந்திருக்கின்றன. ஆனால் பசியற்ற சமுதாயம் தோன்றும் போதுதான் இரு மனங்களின் உறவை வழிமறித்திருக்கும் தடைகளும் உடைந்து போகின்றன… எங்களையே பார்… தேவியும் நானும் ஒரேயளவு குடும்ப அந்தஸ்து இருந்தமை யால்தான் திருமணம் செய்துகொள்ள முடிந்தது…அல்லா விடில்…? காதலை நான் நம்புகின்றேன். அது மனிதனின் அறிவை, செயலை உற்சாகப்படுத்துகின்றது. ஆனால் சினிமா விலும், புத்தகத்திலுள்ளவற்றையும் படித்துவிட்டு, பிஞ்சுப் பருவத்தில், அறிவறியா இளமையில் காதல் செய்யப் புறப்பட்டு வெம்பற் பிஞ்சுகளாய் அழிந்துவிடும் போலி உணர்ச்சி களை நான் காதலென்று ஒப்பமாட்டேன். அது சரி, நீ ஏன் இவைகளை எல்லாம் கேட்கிறாய்? ஒருவேளை நீ யாரையாவது காதலிக்கின்றாயா?”
எதற்கும் ஒரு எல்லையுண்டு; அடங்கியிருக்கும் பொறுமைக் குந்தான். நான் இப்படிக் கேட்கும்போது சந்திரசேகரன் அதிர்ச்சி வசப்பட்டு சிரிப்பிற்கும், தடுமாற்றத்திற்கும் இடையே முகம் மாறுவான் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவனோ சலனமின்றி எழுந்து என்னைப் பார்த்தபடி சொன்னான், “வாருங்கள் போவோம், பிறகு சொல்லுகின்றேன்.”
4
வீட்டுக்குப் போய் ஒரு வாரம் கழித்து, கண்டிக்கு தேவி யையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டேன். சந்திரசேகர னுக்கு அறிவித்திருந்தபடியால் அவன் புகையிரத நிலையத் திற்கு வந்திருந்தான். ஆனால் ஒரு வாரத்திற்குள் சந்திர சேகரன் மாறிப்போய்விட்டவன் போல முகமெல்லாம் சுருங்கி, கண்கள் இடுங்கி வளையம் விழுந்திருந்தன. அவன் எங்களைக் கண்டதும் சிரித்த சிரிப்புக்கூட ஏதோ வலிந்து சிரித்த மலர்ச்சியற்ற சிரிப்பாக எனக்குப்பட்டது.
தேவிக்கு அவனை அறிமுகப்படுத்தினேன்.
தேவி வீட்டுக்குள் வந்ததும் சமையலறைக்குள் நுழைந்து பார்த்துவிட்டு, சிரித்தபடி வெளியே வந்தாள். தனக்குப் பிடித்த பச்சை நிறம் சுவர்களுக்குப் பூசப்பட்டிருந் தது அவளுக்குப் பெரிய பூரிப்பு.
சந்திரசேகரனின் அறைக்குள் போன எனக்கு அந்த அறையே ஆச்சரியமாயிற்று. ஒழுங்கே இலக்கணமாயிருந்த அறை இப்போது சிதறிக் கிடந்தது மனதிற்குச் சங்கடமா யிருந்தது. சந்திரசேகரனைப் பார்த்தேன், சோகமான மௌனத்தால் அவன் என்னை எதிர்கொண்டபோது துக்கம் நெஞ்சை அடைத்தது.
”சந்திரா, நீண்ட காலம் ஒன்றாகப் பழகினோம். எங்க ளுக்குள் எந்த ஒளிவு மறைவுமிருக்கவில்லை. இப்போதோ நீ எதையோ மனதுள் வைத்துக்கொண்டு வேதனைப்படு கின்றாய். ஏன் எனக்கு அதைச் சொல்லக் கூடாதா?” நான் சொல்லி முடிக்கவில்லை. சந்திரசேகரன் கட்டிலில் குப்புற அப்படியே விழுந்து தலையணையுள் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பலும், விக்கலுமாய்க் கேவினான்: “எனக்கு பொலிடோல் வாங்கித் தாருங்கோ”
என்னை யாரோ பிடரியில் ஓங்கி அடித்தாற்போல இருந் தது. நெஞ்சிற்குள் சொற்கள் விக்கி, அவனைக் கட்டிலில் இருந்து நிமிர்த்தி அவன் கண்களுக்குக்கூடாக அவனைப் பார்த்தேன். “டே…டே என்னடா சொன்னாய்?”
அவன் கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தான்.
அவனுடைய விசும்பலைக் கேட்ட தேவி, என் பின்னாலே வந்து நின்றாள். அவள் எனக்குப் பின்னால் வந்து நின்றதைக் காணாமலே சந்திரசேகரன் கொன்னான்: பெண்களை நம்பவே கூடாது. பேய்கள். நான் ஒரு கள்ளியை நம்பி ஏமாந்து விட்டேன்.. ஐயோ நான் ஒரு பேயன்”
எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மனதிற்குள் “ஓகோ” என்று கொண்டு வெளியே வந்தேன். என் மனதிலே கணபதிராமனின் குடும்பம் வந்து நின்றது. நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நிற்கும் அவர் களுக்கு இவன் என்ன பிரதிபலிப்பைக் கொடுத்து விடப் போகின்றான்.
இவனைப் போல இன்னும் இன்னும் எத்தனை பேர்? இந்த இளைஞர்களை சீரழிவுப் பாதையிலிட்டுச் செல்லும் அமைப்பை முறியடிப்பதல்லாது இதற்குத் தீர்வு காண வேறு வழிதான் என்ன இருக்கின்றது?”
அவன் படித்த புத்தகங்கள். சினிமாக்கள் யாவும் இவ னுக்கு ஆக்கிக் கொடுத்த இலட்சியம் இந்த மடத்தனம் ஒன்று தானே…
தேவியிடம் அவனை மிகவும் கவனமாகப் பேசி ஆறுதல் படுத்தும்படி கூறிவிட்டு நான் வெளியே போய்விட்டு ஒரு மணித்தியாலத்தால் வீடு திரும்பினேன்.
அந்த ஒரு மணித்தியாலத்துள் தேவிக்கு சந்திரசேகரன் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். தேவி இளகிய மன முள்ளவள். சிறிது நேரத்துக் கனிவான உரையாடலால் அவனைத் தன்னோடு நெடுநாள் பழகியவன் போல ஆக்கி விட்டாள். அவளை அவன் மிகவும் நம்பினான்.
அவன் காதலித்தவளின் பெயர் லலிதா. எனது சிநேகி தன் கனகரத்தினத்தின் தங்கச்சி!
“ஓ… எல்லாம் விளங்குகின்றது. அன்று ‘பாரதியார் கட்டுரைகள்’ புத்தகத்தில் கோடிட்டு அவளுக்கு இந்தக் காதல் மன்னன்தான் கொடுத்திருக்கின்றார். ஒன்றாகப் படித்து வந்ததால் வந்த கல்லூரிக்காதல். ‘லவ் பேர்ட்ஸ்’ காதல்!”
பாரதியைத் தன் காதலுக்கு அப்புக்காத்தாய் இழுக்கும் சந்திரசேகரனுக்கு ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று அவன் சொன்னது தெரியாதா? என்னையறியாமலே நான் திரித்து விட்டேன். என் சிரிப்பினைத் தேவி மறித்துச் சொற் களால் முறித்தாள்:
“சந்திரனும் இதைத்தான் சொன்னான். நீங்களே மன வேதனைகளை அறியாதவராம். அவன் பாவமல்லவா?”
தேவி ஒரு பெண். அவள் பெண்ணாகத்தான் பேசு கின்றாள்; உணர்ச்சிக்குத் தலை வணங்கும் அறிவை மறைத்த இரக்கக் குரல்.
“தேவீ! அழுவதற்கும் கலங்குவதற்கும் மனந்தளர்ந்து அதையே சரியென்று நியாயம் என்று ஒப்புக்கொள்வன மிக அபத்தமானது, தேவீ, இவனுக்கு வயது பதினேழு. லலிதா வுக்கும் பதினேழிருக்கும். இவர்களுக்குள் எதுவித பரஸ்பர மன உடன்பாடுமின்றிக் காதல். இது உமக்குமிக அசிங்கமாக தெரியவில்லையா? பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு எவ்வளவு நம்பிக்கையுடன் பெற்றோர் இவர்களைக் காத்து நிற்கிறார்கள். இந்த தேசமும் உலகமும் வேண்டி நிற்கும் இம் மாணவர்களை அழிப்பதற்குக் கலாச்சாரம் என்ற பெயரில் விஷவாயு வீசப்படுகின்றது. அழிவின்றி ஆக்க மில்லை. இந்தக் கழிசறைக் கலாசாரங்கள் தவிர்க்கப்படும் வரை இத்தகைய அழிவுகள், மன முறிவுகள் இந்த நாட்டில் தொடர்ந்து நிலவிக்கொண்டே இருக்கும்.”
ஆத்திரம் நெஞ்சை அடைக்க அங்கிருந்து நான் வெளியேறினேன்.
5
சந்திரசேகரன் சுகவீனம் என்று சொல்லிவிட்டு ஒரு வாரமாய்ப் படுக்கையிற் கிடந்தான். தேவிக்கு அவனிலே பெரிய பரிதாபம். ஆனால் அவனுக்குச்சார்பாக பேசப் பயந்து என்னோடு ஒன்றும் பேசவில்லை.
அன்று மாலை தேவியும், நானும் கண்டி வாவிப்பக்கமாகச் சென்றிருந்தோம். இனிய மாலை நேரம். தேவி, வாவிக்குள் ஓடிய மீன்களுக்கு அரிசிப் பொரி போட்டுக் கொண்டிருக் கையில், தொலைவில் கனகரத்தினம் வருவதை நான் கண்டேன், கனகரத்தினம் எங்கள் இருவரையும் அன்று கட்டாயம் தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டான்; நிராகரிக்க முடியாத அழைப்பு அது. நான் சந்திரசேகரனை மனதினுள் நினைத்துத் தயங்கிக் கொண்டிருக்கையில் கனகரத்தினம் எனது கையைப் பிடித்து இழுத்தான்.
கட்டுக்கலைப் பிள்ளையார் கோயிலில் இருந்து நூறு யார் தள்ளி அவனது வீடு. வீட்டு வாசலிலே அவனது தங்கச்சி நின்றாள் – லலிதா!
லலிதாவை கனகரத்தினம் எங்களுக்கு அறிமுகப்படுத்தி னான். லலிதாவை நன்றாகப் பார்த்தேன். அமைதியே வடிவாகி நின்றாள். பெரிய கண்களிலே மின்னும் பிரகா சத்தில் அவளை யாருமே தீய பார்வை பார்க்கமுடியாத கம்பீரமும் அந்த அமைதியோடு கலந்திருந்தது. இவளா அவனைக் காதலித்தாள்; ஏமாற்றினாள்…
லலிதாவும் தேவியும் உள்ளே சென்றார்கள். தேவி யாரோடும் வெகு சீக்கிரம் ஒன்றிவிடுவாள். அது அவளின் இயல்பு.
வீதியில் காலடி எடுத்து வைத்ததும் தேவியே பேசத் தொடங்கினாள் : “பாவம் சந்திரசேகரன் நீங்கள் சொன்னது போலவே நடந்திருக்கின்றது. சந்திரசேகரனின் இயல்பாய் அமைந்த நல்ல குணங்கள் காரணமாய் அவனோடு லலிதா பழகினாளாம். அவனின் கெட்டிக்காரத்தனம், பேச்சுத் திறன் ஆகியவற்றை அவள் பாராட்டி இருக் கின்றாள். அதை என்னவாகவோ நினைத்து அவளுக்கு அவன் கடிதம் எழுதிக்கொடுக்க அவள் பயந்து என்ன செய்கிற தென்று தெரியாமல் அதை அவன் முகத்தில் வீசி எறிய…”
நான் சிரித்தேன். ஆறுதலான நிம்மதியோடு தான் எனி. னும் என் மனம் இரங்கிற்று. அந்தக் கணத்திலேயே அந்தச் சிரிப்பு அழிய என் இருதயம் நினைத்துக் கொண்டது. ‘சந்திரசேகரன், உன்னைப் போல எத்தனை இளைஞர்கள் இப்படித்தவறான வழியிலே போகிறார்கள்… இந்த வழியைத் திறந்து விட்டவர்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்படும்வரை இந்த சரித்திரம்தானே தொடர்ந்து நடைபெறப் போகின்றது!’
– 1968
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இலக்கியவாதியும் காதலும்
இளையவேணி கிருஷ்ணா
August 19, 2026
நீ, நான், சுஜாதா…
ச.சிவபிரகாஷ்
August 7, 2026
ரகு என்ன செய்து விட்டான்?
இந்திரா பார்த்தசாரதி
August 6, 2026
