காட்டுக்குத்திரும்பிய காரிகை!




நடிகை ரயாவுக்கு உடல் புண்ணாக வலித்தது. அதை விட மனது அதிகமாகவே வலித்தது. இருபது வயதிலும் இரண்டு வயது குழந்தை போல் மனம் இருந்ததாலும், தேவலோகப்பெண் போல தோற்றம் கொண்ட உடல் செழிப்பாக வளர்ந்த அளவுக்கு உள்ளம் வளராததாலும், நகரத்தில் நவீனம் எனும் பெயரில் வாழும் பசுந்தோல் போர்த்திய புலி குணம் கொண்ட மனிதர்கள் பலரது பொய்யான வார்த்தைகளை உண்மையென நம்பி பணத்துக்கு ஆசைப்பட்டதாலும், யோசிக்காமல் பல படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டதாலும் வலையில் அகப்பட்ட பறவை போல் மனதால் துடித்தாள்.

உடல் மிகவும் மோசமான நிலைக்கு சென்றிருந்தது. மருத்துவர் ஓய்வெடுக்குமாறு ஆலோசனை கூறினார்.
இரவு பகலாக இடை விடாமல் நடித்ததால் உடல் வேலை செய்ய ஒத்துழைக்க முடியாமல் போக, சோர்வில் ஓய்வெடுக்கப்பயன்படும் சாய்வு நாற்காலியிலேயே படப்பிடிப்பு இடை வேளை நேரத்தில் அடிக்கடி உறங்கிப்போவாள். மனமிரக்கமில்லாமல் ஒரு காட்சியையே பல டேக் எடுப்பார்கள். ஒரு முறை முத்தக்காட்சியை கதாநாயகன் விரும்பியதால் நூறு முறை எடுத்து சீரழித்தார்கள்.
உடையில் மற்ற நடிகைகளை விட ரயா தாராளம் காட்டியதால் அவள் கதாநாயகியாக நடித்த திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. காட்சி இயல்பாக இருக்க வேண்டுமென்பதற்ககாக சில காட்சிகளில் துணிந்து, துணியின்றி நடித்திருந்தாள்.
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், முன்னணி நடிகர்களும் அவளை வைத்து படம் எடுக்க போட்டி போட்டனர். பெண்களே அவளது இயற்கையான அழகை ரசிக்க அதிகளவில் படம் பார்க்க வந்தனர். கால்சீட்டுக்காக அவளது வீட்டின் முன் நாட்கணக்கில் பலர் காத்துக்கிடந்தனர். உடல் நிலை ஒத்துழைக்கவில்லை’ எனக்கூறி நடிக்க மறுத்த போது ‘ஒப்பந்தப்படி நடந்து கொள்ளவில்லையேல் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவோம்’ என மிரட்டினர்.
அவள் மற்ற பெண்களைப்போல் சராசரி பெண் இல்லை. ஒரு வீட்டில் பிறந்து, வளர்ந்து பள்ளியில் படித்து, உறவுகளோடு கலந்து வளர்ந்தவள் இல்லை. சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் அவளது சொந்தக்கதை தான். அதில் இயல்பாக நடித்ததால் அவளது மார்க்கெட் உச்சத்துக்கு போனதில் மகிழ்ச்சியிருந்தாலும், ‘அவள் வந்த வழி இதுவா? இவ்வளவு கேவலமானவளா? ச்சீ…’ என்பது போன்ற வார்த்தைகளால் வலைத்தளங்களில் கேவலமாகப்பலரும் எழுதியது அவளை மேலும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தியது.
திரைப்படத்தின் முதல் காட்சியில் வனத்திற்குள்ளிருந்து தப்பி ஊருக்குள் புகுந்த, இலையுடை அணிந்து பல வருடங்களாகக்குளிக்காமல் அழுக்கேறி ஒன்றோடொன்று பிரியாமல் இணைந்திருந்த நீண்ட முடிகளைக்கொண்ட பெண், சேலையணிந்திருந்த பெண்களைக்கண்டதும் புலியைக்கண்ட புள்ளி மானைப்போல மிரண்டாள். அவள் இது வரை நாகரீக மனிதர்களைக்கண்டதில்லை என்பது அவளது செய்கைகளிலேயே வெளிப்பட்டது.
பதிலுக்கு இலையுடையணிந்த பெண்ணைக்கண்டு வீடுகளில் இருந்த பெண்கள் மிரண்டு வாசற்கதவைச்சாத்தி தாழிட்டனர். ‘பைத்தியம்’ என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
இரவு தொடங்கியதால் நடு ஊருக்குள் வந்தவள் திரும்பி காட்டுக்குள் செல்ல வழி தெரியாமல் ஒரு மரத்தடியே உட்கார்ந்து கொண்டாள். நடு இரவு நேரத்தில் வீடுகளில் எரியும் விளக்கு வெளிச்சத்தைக்கண்டு ஒவ்வொரு வீடாகச்சென்று ஜன்னல் வழியே உள்ளே பார்த்துக்கொண்டிருந்தவள் அதிகாலையில் ஒரு வீட்டின் வாசலில் படுத்து உறங்கிப்போனாள்.
அடுத்த நாள் ‘காட்டு வாசி’ என புரிந்த வீட்டினர் தட்டில் உணவு கொடுக்க, அதை நாய் போல் நக்கி உண்டாள். உணவும், அதன் ருசியும் பிடித்துப்போக பின் ருசி கண்ட பூனையாய் காட்டிற்குள் செல்லாமல் வீடு வீடாக உணவை வாங்கி மற்றவர்கள் கையில் எடுத்து உண்பதைக்கண்டு தானும் அதே போல் எடுத்து உண்ணப்பழகிக்கொண்டாள். மற்றவர்கள் செய்வதைப்பார்த்து அதே போல் தானும் செய்து பழகிக்கொண்டாள்.
மனமிறக்கமுள்ள சில பெண்கள் அவளது முடியை வெட்டி விட்டு, குளிக்கச்செய்ய முயன்றும் அவள் ஒத்துழைக்காததால் சேலையை மட்டும் சுற்றி விட்டனர்.
அழும் குழந்தைகளை காட்டுவாசிப்பெண்ணைக்காட்டி மிரட்டி தூங்க வைக்கும் அளவுக்கு அந்த ஊரின் அரக்கியாக குழந்தைகளால் அறியப்பட்டிருந்தாள்.
அவளைப்பிடிக்காத சிலர் தடி எடுத்து அடித்தும் விரட்டினர். சில பிச்சைக்காரர்கள் அவளருகே சென்று அமர்ந்து கொண்டனர். ஒரு பிச்சைக்காரன் தான் கொண்டு வந்த உணவை அவளுக்கு ஊட்டியும் விட்டான். அவள் மடியில் தலை வைத்து தூங்க முற்பட்ட போது தடுக்காமல் விட்டு விட அதுவே ஒவ்வொரு நாளும் தொடர் கதையானது.
ஒரு நாள் சினிமா சூட்டிங் நடத்த வனத்தின் அருகே இருந்த, இயற்கை வளம் நிறைந்த பகுதியான அந்த ஊருக்கு படம் பிடிக்க வந்தவர்கள் காட்டுவாசியைக்கண்டதும் இணக்கமாகப்பேசி உணவைக்காட்டி தங்களுடன் கூட்டிச்சென்று விட்டனர். திரைப்படம் வெளியான போது காட்டுவாசிப்பெண், படத்தில் பாத்திரத்துக்கு பொருத்தமாக காட்டுவாசியாகவே மேக்கப் எதுவும் போடாமல் காட்டப்பட்டிருந்தாள். ஒரு வருடத்துக்கு பின் வெளியான அவள் நடித்திருந்த மற்றொரு திரைப்படம் கதாநாயகிக்காகவே நூறு நாள் ஓடியது. அதில் மிகுந்த கவர்ச்சியைக்காட்டியிருந்தாள்.
தனக்கெனத்தனியாக சம்பளம் கொடுத்து தமிழ் ஆசிரியர் வைத்து எழுதப்படிக்கக்கற்றுக்கொண்டதோடு வேறு பல மொழிகளையும் கற்றாள். பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சொந்தமாக வீடு வாங்கினாள். கார் வாங்கினாள். விலையுயர்ந்த படுக்கையில் படுத்துறங்கினாள்.
படத்தின் வெற்றியை நினைத்து அவளால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. பலர் அவளை பொய் சொல்லி ஏமாற்றி வெளியில் அழைத்துச்சென்று சீரழித்தனர். உதவியாளராக வந்த ஒருவன் காதலிப்பதாகக்கூறி அவளிடம் பெரும் தொகையை வாங்கிக்கொண்டு சொல்லாமலே சென்று விட்டான்.
உடல் நிலை பாதிக்கப்பட அருகில் வந்து அன்புடன் கவனித்துக்கொள்ள யாருமில்லாமல் வருந்தியவள், தனது பழைய வாழ்க்கைக்கே செல்ல முடிவு செய்து தனது விலையுயர்ந்த சொகுசு காரில் அமர்ந்து ஓட்டுனரை வனப்பக்கம் ஓட்டச்சொன்னாள்.
தான் சிறு வயதில் சுற்றித்திரிந்த இடத்தைக்கண்டதும் காரை நிறுத்தச்சொல்லி இறங்கியவள் சில நொடிகளில் மரம்,செடிகள் நிறைந்த வனத்துக்குள் பிரவேசித்தாள்.
ஊ…ஊ…ஊ… என சத்தம் எழுப்பினாள். பதிலுக்கு நான்கு திசைகளிலிருந்தும் அதே போல் பதில் சத்தம் கேட்க வேகமாக ஒரு திசையை நோக்கி ஓடினாள். சென்றவள் திரும்பி வரவில்லை. காரில் பின் சீட்டில் அவள் அமந்திருந்த பகுதியில் ஒரு கடிதம் இருந்தது.
‘நகர வாழ்க்கை நரகமாகப்போனதாலும், நம்பிக்கையானவர்கள் யாரும் இல்லாததாலும், என்னை பலர் தங்கள் சுயநலத்துக்கு பயன் படுத்தியதாலும் இந்த நாகரீக வாழ்க்கையை வெறுத்து காட்டு வாழ்க்கைக்கே, எனது ரத்த உறவுகளுடன் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக வாழ நான் பிறந்த பகுதிக்கே செல்கிறேன். வனத்தில் மிருகங்களோடு சிறு வயது முதல் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அவற்றைக்கண்டு பயமே வந்ததில்லை. அவைகளில் ஒன்று கூட என்னை இரையாக்க நினைத்ததில்லை. ஆனால் நகரத்தில் என்னை பலர் அவர்களது பசிக்கு இரக்கமின்றி இரையாக்கிக்கொண்டார்கள். உண்மையான மிருகங்களை காட்டிற்குள் நான் பார்க்கவில்லை. வீட்டிற்குள் தான் பார்த்தேன். மிருகங்களில் கூட ‘எது கொடிய மிருகம்?’ என தெரிந்து ஒதுங்கிக்கொள்ள முடியும். மனிதர்களில் யாருக்குள்ளிருந்து எப்படிப்பட்ட மிருகம் வெளிப்படும் என கண்டு பிடிக்க முடியவில்லை. படிக்க பள்ளிக்கு செல்லாவிட்டாலும் ஆறறிவோடு வாழ்பவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். ஓரறிவோடு வாழ்வதால் தான் பலரும் படித்திருந்தும் மிருகம் போல் நடந்து கொள்கின்றனர்.
இனிமேல் நகரத்திலிருந்து என்னைத்தேடி யாரும் வந்து விடாதீகள். எனக்கு காகிதப்பணம் வேண்டாம். பசிதீர மரம் கொடுக்கும் பழங்கள் மட்டுமே உயிர் வாழப்போதும்’ என முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களைப்போல் கிறுக்கள்களாக, அதே சமயம் தனக்கு நடந்த நிகழ்வுகளின் உண்மையை மறைக்காமல் எழுதியிருந்தாள்.
கடிதத்தைப்படித்த நகரில் வாழும் மனிதனான கார் ஓட்டுனர் மெத்த படித்து விட்டு, ஆறறிவு என சொல்லிக்கொண்டு மிருகங்களைப்போல வாழும் தன் இன கொடிய மனம் கொண்ட சக மனிதர்களுக்கும் சேர்த்து மொத்தமாக வெட்கித்தலை குனிந்தார்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |