காசே தான் காதலப்பா!
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 4,199
பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்தவனைக்கைப்பிடித்து வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் வந்தாலும் வறுமை ஆட்டிப்படைத்தது மகிக்கு. கணவன் முகனுக்கு வேலை நிரந்தரமாக அமையவில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைக்கும். அதில் கிடைக்கும் வருமானம் சிக்கனமாக செலவு செய்தாலும் போதுமானதாக இல்லை.
தான் டிகிரி படிப்பு படித்திருந்தாலும் வயிற்றில் கரு வளர்வதால் ஓய்வில் இருக்க மருத்துவர் ஆலோசனை. அதனால் வேலையை விட வேண்டிய சூழ்நிலை. வீட்டில் சாப்பாட்டிற்கு அரிசி சுத்தமாக இல்லை. கொஞ்சம் பயத்தம் பருப்பும், வெங்காயம், மிளாகாய், உப்பு, சிறிது எண்ணை தவிர வேறு எதுவும் இல்லை. வேலைக்கு இன்று சென்ற கணவன் வரும் போது அரிசி வாங்கி வருவதாகச்சொல்லிச்சென்றிருந்தான்.
கணவனது உறவினர் தன்னைப்பார்க்க வந்திருந்தனர். சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என சொன்ன போது சரி என இருந்து விட்டனர். உணவுக்கு அரிசி இல்லாதது பசியை விட கவலையில் வயிறு கலக்கியது. தாகம் அதிகரித்தது. இரண்டு முறை தண்ணீரை மோந்து குடித்தாள். யோசித்தாள்.
இருக்கும் பயத்தம்பருப்பை தண்ணீரில் ஊற வைத்தாள். சிறிது சிறிதாக பாத்திரங்களில் ஒளிந்து கிடந்த அரிசி, உளுந்து, கோதுமை அனைத்தையும் ஊற வைத்தாள். ஊறியதும் கழிந்து ஆட்டினாள். இருந்த ஒரு மூடி தேங்காயோடு கடலையை அரைத்து சட்டென சட்னி செய்தாள். தோசையாக சுட்டாள்.
“வாழ்க்கையில் இத மாதர தோசைய நாங்க சாப்பிட்டதே இல்லை. ஆம்லெட் மாதர அருமையா இருந்துச்சு” என வந்த கணவனின் உறவினர் சொல்லி பாராட்டி விட்டுச்சென்றனர். வந்தவர்களுக்கு போதுமானதாக இருந்தால் போதுமென கடவுளை வேண்டிக்கொண்டாள். தன் பசிக்கு வேண்டுமென நினைக்கவில்லை. வனவாசத்தில் ஒரு பருக்கை உணவை வைத்துக்கொண்டு கிருஷ்ணனை வேண்டியதால் ஒரு பருக்கை அட்சயமாக வளர்ந்து உணவு பாத்திரம் நிறைந்த நிலையில் வந்த துறவிகளுக்கு பசி நீங்க உணவளித்த பாஞ்சாலியின் மன நிலை கொண்டிருந்தாள்.
அப்பாடா நிம்மதி என கதவைத்தாழிட்டு பாயை விரித்து படுத்தவாறு தனது இளமைக்காலத்தை யோசித்தாள்.
பெற்றோருக்கு திருமணமாகி பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் அதன் பின் பிறந்த ஒரே குழந்தை என்பதால் இளவரசியைப்போல வளர்த்தனர். இல்லையென்று சொல்ல எதுவுமில்லையென வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ராஜ வாழ்க்கை வாழ்ந்தவளுக்கு, டிகிரி படிப்பு படித்தவளுக்கு படிக்காத வசதி குறைந்த ஏழை வீட்டு உறவினரான முகனை ஒரு திருமண நிகழ்வில் பிடித்துப்போக பேசி பழகியது பெற்றோருக்குத்தெரிய வர பெரும் புயலே அடித்தது.
தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசியலில் பதவியில் உள்ளவர்கள் வீட்டு பையன்களுக்கு பெண் கேட்கும் தகுதியில் இருந்து கொண்டு தின சம்பளத்துக்கு பெயிண்டர் வேலை செய்யும் முகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. என திட்டவட்டமாக மறுத்த நிலையில் பிடிவாதமாக தன் மனதில் உள்ளவனையே எளிய முறையில் நான்கு பேர் சாட்சியாக மணம் முடிக்க கழுத்தை நீட்டினாள் மகி.
கற்பத்தில் உள்ள குழந்தையின் நிலையை அறிய, மருந்து மாத்திரை வாங்க, மருத்துவ ஆலோசனை பெற அரசு மருத்துவ மனைக்கு சென்று காத்திருந்தாள். அவள் பார்த்த காட்சிகள் இதுவரை பார்த்திராத வேறு உலகமாகத்தெரிந்தது. நினைவு தெரிந்த நாளிலிலிருந்து படிப்பு, படிப்பு என வளர்ந்தவளுக்கு அதைத்தவிர வேறு நிலையை அறிந்திருக்கவில்லை. ஒன்று வேண்டுமென கூறிய அடுத்த சில நிமிடங்களில் தேவைகள் பூர்த்தியானதால் வறுமை எனும் வாசலைக்கூட அவள் மிதித்திருக்கவில்லை. தற்போது வறுமையின் எல்லையில் நிற்பவர்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தாள்.
‘கடவுள் ஏன் இப்படி மனிதர்களைப்படைக்கிறார்? அனைவரையும் பணக்காரர்களாக ஏன் படைத்திருக்கக்கூடாது? நான் கடவுளாக இருந்திருந்தால் ஏற்றதாழ்வில்லாத மனிதர்களாகப்படைத்திருப்பேன்…’ எனும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
காய்ந்து சுருக்கம் விழுந்த முகம். கந்தலான, சாயம் போன ஆடைகள், தேய்ந்த செருப்புகள், நடந்தோ அல்லது குறைந்த கட்டண பேருந்து பயணம். ‘இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பற்றி அறியாதவர்களா? விதியே கதியென வாழப்பழகியவர்களா? வெளியுலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளா?’ என பலவாறு யோசித்தாள்.
“எல்லாரு கிட்டையும் தேவைக்கு மேல பணம் வந்திருச்சுன்னா யாருமே வேலைக்கு போக மாட்டாங்க. யாருமே வேலைக்கு போகலைன்னா சகஜ வாழ்க்கை முடங்கிடும். அதனாலதான் கடவுள் ஆசையக்கொடுத்து கடன வாங்க வெச்சு அதக்கட்ட மனுசங்கள ஓடிகிட்டே இருக்க வெச்சிருக்காரு” என ஒரு முறை பள்ளி ஆசிரியை மகந்தா சொன்னது நினைவிற்கு வந்த போது சாந்தமானாள்.
“ஆரும் கூட வரலியா…? சத்துள்ள உணவ நீ எடுத்துக்காததுனால குழந்தை சரியான வளர்ச்சி இல்லாத மாதிரி ஸ்கேன் ரிசல்ட்ல தெரியுது. பார்த்தா பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்கே…? லவ் மேரேஜா….?” என மருத்துவர் கேட்ட போது ‘ஆமாம்’ என்பதாக தலையாட்டியவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“ஒன்னும் கவலைப்படாதே…. இங்கயே வயித்துல இருக்கிற குழந்தை வளர்ற மாதர சத்து மாவு கொடுப்பாங்க. அதத்தவிர வைட்டமின் மாத்திரை எழுதியிருக்கறேன். சாப்பிடறது தவிர கவலைப்படாம நிம்மதியா தூங்குனா போதும். அடுத்த தடவை வரும்போது அவரையும் கூப்புட்டு வா” என தாயன்போடு பேசிய தாய் வயதுள்ள பெண் மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு வெளியே வந்தாள்.
இரவு வீட்டிற்கு வந்த கணவன் முகனின் அருகில் சென்று அணைத்த போது என்றுமில்லாமல் இன்று அவனிடம் மது வாசனை வீசியது. வாசனை வாந்தி வரும் நிலையைக்கொடுத்தாலும் வயிற்றில் உணவில்லாததால் எதுவும் வரவில்லை. தன்னிலை மறந்தவனாய் வார்த்தைகள் தடுமாறியது. ‘பாதை மாறி விட்டானோ….? இனி நம் வாழ்க்கைப்பயணம் என்னாகுமோ….?’ என நினைத்து பயந்தாள். பாயில் படுக்க வேண்டியவன் செல்லும் பாதையிலேயே படுக்கப்போன போது பதறினாள். தன் நிலையை எண்ணிக்கதறினாள்.
அவன் வாங்கி வந்திருந்த அரிசியை எடுத்து ஓராமாக வைத்து விட்டு சமைக்க மனமின்றி பசி மறந்து சுருண்டு ஒரு துணியைக்கூட கீழே விரிக்காமல் படுத்தவள் விசும்பினாள். காதல் தரும் மன சுகம், காமம் தரும் உடல் சுகம் நிலையற்றது, நிரந்தரமற்றதாகப்பட்டது.
காலையில் எழுந்த முகனுக்கு இரவு என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லை. விரிந்த கூந்தலுடன் கண்கள் சிவந்திருக்க கோபப்பார்வையை கணவன் மீது வீசினாள் மேனகா.
சட்டென அனைத்தும் புரிந்தவனாய் அவளது காலில் விழுந்து ” என்னை மன்னிச்சிடு மேனகா. உன்னை இந்த வறுமை நிலைக்கு கொண்டு வந்துட்டமேங்கிற கவலைல கொஞ்சமா குடிச்சிட்டேன். இனிமே உன் மேல சத்தியமா வாழ்க்கை பூராம் குடிக்கவே மாட்டேன்” என கெஞ்சிய போது மனம் மாறியவள் சாந்தமாகி, சகஜமான மன நிலையில் வயிற்றில் வளரும் கருவின் நிலையை மருத்துவர் சொல்லக்கேட்டது நினைவுக்கு வர கணவனது சட்டைப்பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து பால் வாங்கி வந்து சத்து மாவு கலந்து குடித்து விட்டு அரிசி எடுத்து சாப்பாடு செய்ய ஆரம்பித்தாள்.
“என்னதான் உயிருக்குயிராய் காதலித்தாலும் அடிப்படைத்தேவைகளைப்பூர்த்தி செய்த பின் திருமணம் செய்து கொண்டால் தான் காதல் இனிக்கும். இல்லையேல் கசக்கவே செய்யும்.
நானும் இன்னும் சிறிது காலம் வேலைக்குச்சென்று பணம் சேமித்த பின் திருமணம் செய்திருக்க வேண்டும். அப்போது காதல் வாழ்வு ஜொலிக்கும். இல்லையேல் தினம் தினம் மனம் வலிக்கும் .பணப்பாதுகாப்பே வாழ்வில் மிகவும் முக்கியம். இது தான் நிஜ வாழ்க்கைத்தத்துவம்” என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய மேனகாவின் அனுபவம் மிக்க பேச்சு கைதட்டல் நிற்க சிறிது நேரமானது.