கஸ்தூரியின் காலணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2025
பார்வையிட்டோர்: 1,451 
 
 

பெண்கள் எதாவது ஒரு பொருள் மேல் ஆசை வைப்பது சகஜம் . சேலை , வளையல்கள், கைப்பை நகைகள் ஆகியவற்றில் ஆசை உள்ளவர்கள் அனேகர். அவர்களில் சற்று வித்தியாசமான ஆசை உள்ளவள் பிரபல வர்த்தகர் மகேந்திரனின் ஒரே மகள் கஸ்தூரி . காலணிகள் மேல் கஸ்தூரிக்கு விருப்பம் அதிகம். அந்த ஆசை உருவானதே ஒரு தனிக் கதை.

ஒரு நாள் வீட்டில் கஸ்தூரி தொலை காட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் போது அப்போது பிலிப்பைன் நாட்டு முன்னைய தலைவர் மார்கோஸ் என்பவரின் பணக்கார மனைவி இமெல்டாவை பற்றிய ஆவணப் படம் போய்க்கொண்டு இருந்தது . இமெல்டா மார்கோஸ் 21 ஆண்டுகளாக பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணியாக இருந்தவள் இந்த சமயத்தில் அவளும் அவளது கணவரும் சட்டவிரோதமாகச் சொத்து பலவற்றைச் சேகரித்ததாகப் பரவலாக நம்பப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடி. மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவற்றின் போதும் கூட அவளும் அவரது குடும்பத்தினரும் ஒரு பகட்டான வாழ்க்கை முறையை வாழ்ந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டனர் . இமெல்டா தனது பெரும்பாலான நேரத்தை வெளிநாடுகளிலும் அரசு வருகைகள், ஆடம்பரமான கேளிக்கைகளில் மற்றும் ஷாப்பிங் ஸ்பிரீஸ்களுக்காக செலவிட்டாள். மேலும் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதியை அவளது தனிப்பட்ட நகைகள் மற்றும் காலணி சேகரிப்புகளுக்காக செலவிட்டாள். 1,200 க்கும் மேற்பட்ட ஆடம்பர காலணிகளின் சேகரிப்பு அவளுக்கு “மேரி அன்டோனெட், காலணிகளுடன்” என்ற பெயரை ஊடகங்கள் கொடுத்தது. இமெல்டாவின் காலணிகளைத் தொலைக் காட்சியில் பார்த்ததும் கஸ்தூரிக்கு காலணிகள் பிரியம் வந்தது.

விதம் விதமான காலணிகளை அவளும் சேகரிக்கத் தொடங்கினாள் அவளின் அதிர்ஷ்டமோ என்னவோ அவளின் பிறந்த நாளுக்குக் கஸ்தூரியின் தந்தை வியாபார விசயமாகச் சிங்கப்பூருக்கு போய் வந்த போது 200 டொலர்கள் கொடுத்து இமெல்டா காலணி என்ற பெயரில் . தனது ஒரே மகளுக்கு ஒரு அழகான காலணி வாங்கி வந்து கொடுத்தார். அதைக் கஸ்தூரிக்குப் பிடித்துக் கொண்டது அதக்கு பொருத்தமான நிற ஆடை அணிந்து தன் சிநேகிதி ஜமுனாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குக் கஸ்தூரி போனாள். அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அவளின் சினேகிதிகள் பலர் வந்திருந்தார்கள் அவர்களின் பார்வை கஸ்தூரி அணிந்திருந்த இமெல்டா பிராண்ட் காலணி மேல் விழுந்தது.

“அடேயப்பபா கஸ்தூரி நீ எவ்வளவு கொடுத்து வைத்தவள் இந்த அழகிய விலை உயர்ந்த காலணியை அணிவதுக்கு” கஸ்தூரியின் சினேகிதி தேவகி சொன்னாள்.

“ஆமாண்டி தேவகி இது வெளி நாட்டில் இவளின் அப்பா வாங்கிய காலணி என் நினைகிறேன்” கங்கா சொன்னாள்.

“அதன் அடிப்பாகம் மிருக தோலினால் தயாரிக்கப் பட்டதென நான் நினைக்கிறேன். இது போன்ற காலணியை எனக்குத் தெரிந்த எவரும் அணிந்ததை நான் காணவில்லை” என்று சித்திரா சொன்னாள்.

கஸ்தூரியின் பல சினேகிதிகளிடம் இருந்து அவள் அணிந்திருந்த காலணி பற்றி விமர்சனங்கள் வந்தன. கஸ்தூரிக்கு மனதுக்குள் பெரும் சந்தோசம்.

“எங்கையடி இதை வங்கினனி” ?சுமித்திரா கெட்டாள்.

“என் அப்பா சிங்கப்பூருக்குப் போன போது 200 டொலர் கொடுத்து வாங்கி வந்தவர் “ பெருமையாக கஸ்தூரி சொன்னாள்”.

“உன் ஆடைக்கும், கை பையுக்கும், வளையல்களுக்கும் தோட்டுக்கும் பொருத்தமாக இருக்குதடி இந்த காலணி “ செல்வி சொன்னாள்.

கஸ்தூரிக்கு தன் காலணியைப் பார்த்து பலர் ரசித்து விமர்சித்ததில் பெரும் மகிழ்ச்சி பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பமுன் ஒரு சினேகிதி வந்து கஸ்தூரியிடம் இடம் கேட்டாள்.

“கஸ்தூரி உன்னிடம் இது போல் எத்தனை காலணிகள் இருக்கு ?

“சுமார் இருபது . என் அப்பா வெளிநாடு போய் வரும் பொது விதம் விதமான காலணி வாங்கி வருவார்”

“என் அப்பாவுக்கு . நான் ஒரு மகள் மட்டுமே.”

“நீ கொடுத்து வைத்தவள் கஸ்தூரி . நான் போட்டு இருக்கும் பழைய காலணி பல தடவை மாற்ற அப்பாவைக் கேட்டும் அதை மாற்ற என் அப்பா பணம் தரவில்லை .”

தன் பெற்றோரைக் குறை சொன்னாள் கஸ்தூரியின் சினேகிதி மாலதி,

“இந்தக் காலணி நீண்ட காலம் பாவிக்கக் கூடியது”: பெருமையாகக் கஸ்தூரி சொன்னாள்.


கஸ்தூரி பணக்காரி ஆனாலும் இரக்கச் சுபாவம் உள்ளவள். கோவிலுக்குப் போனால் பிச்சை எடுப்பவர்களுக்குக் காசும் உணவும் கொடுக்க தவற மாட்டாள். அன்று பிறந்த நாள் கொண்ட்டாட்டம் முடிந்து அவளைக் கூட்டிச் செல்ல கார் வராததால் அருகில் உள்ள தன் வீட்டுக்கு குடையைப் பிடித்த படியே நடக்கத் தொடக்கினாள். போகும் வழியில் ஒரு முதிய பெண் ஒருத்தி தலையிலொரு கூடையோடு, காலணி இல்லாமல். கொதிக்கும் தாரில் நடக்க முடியாமல் நடந்து செல்வதைக் கஸ்தூரி கண்டாள். அவள் நிலையைக் கண்டு கஸ்தூரி பரிதாபப்பட்டாள்.

அந்த முதிய பெண்ணுக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். கிழிந்த சேலை, சட்டை அணிந்திருந்தாள் . வறுமை அவள் தோற்றத்தில் தெரிந்தது .

ஐயோ பாவம் இந்த கொதிக்கும், வெய்யிலில் இந்த தார் ரோடில் நடந்து போகிறாளே இந்தக்கிழவி . அவள் காலில் காலணி இல்லை. அவளை அணுகி கஸ்தூரி கேட்டாள்

“ஆச்சி தலையில் சுமையோடு காலில் காலணி இல்லாமல் நடந்து போகிறாயே உனக்குகால் பாதம் சுடவில்லையா?”.

“அம்மா காலணி வாங்க என்னிடம் பணம் இல்லை. என் கணவர் தேக நலம் இல்லாமல் வேலைக்குப் போகாமல் வீட்டில் படுத்திருக்கிறார் . நான் இந்த கூடையில் உள்ள பழங்களை விற்றால் தான் என் குடிசை அடுப்பில் நெருப்பு எரியும் “

“ம் அவ்வளவுக்கு வசதி இல்லையா உனக்கு ? உன் கணவனுக்கு என்ன தொழில் ஆச்சி “?

“அம்மா அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழில் செய்பவர் . கடந்த இரண்டு மாதமாய் வருத்தம் காரணத்தால் அவர் வேலைக்குப் போகவில்லை வீட்டில் ஒரு பழுதடைந்த காலணி ஒன்று உண்டு. அதைத் திருத்தி எனக்குத் தர அவரால் முடியவில்லை அதுதான் வெறும் காலில் வியாபாரம் செய்யப் புறப் பட்டுவிட்டேன்” கிழவி தன் நிலையைச் சொன்னாள்.

கஸ்தூரி ஒரு கணம் யோசித்தாள் . வசதி உள்ள என் அப்பாவிடம் கேட்டால் அப்பா எனக்கு உடனே ஓன்று வாங்கித் தருவார். என் காலணியை இந்த கிழவிக்குக் கொடுத்தால் என்ன. புண்ணியமாக போகும். கிழவியிடம் கஸ்தூரி கேட்டாள்: “ஆச்சி என் காலில் உள்ள காலணி உனக்கு பிடித்திருக்கா?”.

“அம்மா இந்த காலணியைப் பார்த்தல் பிற நாட்டில் வாங்கிய விலை உயர்ந்த காலணி போல் இருக்கிறது. என் கணவர் இதைப் பார்த்தால் இதன் மதிப்பைச் சொல்லுவார்“.

“உனக்கு இந்த காலணி பிடித்திருக்கா?”

எனக்கு பிடித்திருக்கு ஆனால் இது எனக்குப் பொருத்தம் இல்லை . இது போன்ற காலணியை அணிய எனக்கு எங்கே பணம் அப்படி பணம் இருந்தால் நான் இந்த கொதிக்கும் வெய்யிலில் வெறும் காலில் நடந்து போக வேண்டிய அவசியம் இல்லை”

“நீ சொல்வது உண்மை ஆச்சி. நான் என் காலணியை நீ அணிய என் பரிசாகத் தரப்போகிறேன். இது உனக்கு அளவாக இருக்கும் என் நினைக்கிறேன் நீ என்ன சொல்லுகிறாய்?”.

அம்மா உண்மையாகச் சொல்லுகிறீர்களா?”

“ஆம் உண்மையாகத் தான் சொல்லுறன்”

“அம்மா அப்ப உங்களுக்குக் காலணி?”

“என் அப்பாவிடம் பணம் இருக்கிறது. இந்த காலணி போல் ஓன்று கேட்டால் அப்பா எனக்கு வாங்கித் தருவார்.: கிழவிக்குக் கஸ்தூரி சொன்னதை நம்ப முடியவில்லை கஸ்தூரியை அணைத்து முத்தம் கொடுத்தாள்.

“அதுசரி அம்மா காலணி இல்லாமல் எப்படி உங்களால் இந்த கொதிக்கும் வெய்யிலில் நடக்க முடியும் உங்களுக்குக் காலணி இல்லாமல் நடந்து பழக்கம் இருக்காதே?”.

“காலணி இல்லாமல் நடந்தால் எப்படி இருக்கும் என்று அனுபவித்து பாப்போமே” என்றாள் கஸ்தூரி சிரித்தபடி.

கஸ்தூரியின் காலணி ஆச்சிக்கு அளவாக இருந்தது .சுமையோடு தன் காலணியை அணிந்து கிழவி நடப்பதைப் பார்த்து இரசித்தாள் கஸ்தூரி

அந்த கொதிக்கும், வெய்யிலில் காலணி இல்லாமல் கஷ்டப் படு நடந்தாள் கஸ்தூரி. அது அவளுக்கு புது அனுபவம் நூறு யார் நடந்ததும் அவளால் மேலும் நடக்க முடியவில்லை .

வெகு தூரம் நடக்க முடியாமல் மரத்துக்கு கீழ் உள்ள சீட்டில் உட்கார்ந்து விட்டாள் அவளின் அதிர்ஷ்டமோ என்னவோ அந்த வழியே அவளின் மாமன் காரில் வந்தார்

“என்ன கஸ்தூரி இந்த வெய்யிலில் உன்காலில் காலணி இல்லாமல் உடகார்ந்து இருக்கிறாய்”? மாமன் காரில் இருந்து இறங்கி வந்து அவளிடம் கேட்டார்.

கஸ்தூரி நடந்ததை அவருக்குச் சொன்னாள் அதைக் கேட்டதும் கஸ்தூரி செய்த காலணி தானத்தை எண்ணி பெருமைப் பட்டார் .

இந்த சிறு வயதிலும் தர்மம் செய்யும் குணம் தன மருமகளுக்கு இருப்பதை அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை

“வா கஸ்தூரி வந்து காரில் ஏறு. உனக்குக் கடையில் உனக்குப் பிடித்த காலணி வாங்கித்தாறன்” மாமா சொன்னார்.

“நன்றி மாமா“ என்று கஸ்தூரி சொல்லிய படியே அவரின் காரில் போய் ஏறினாள் கார் பிரபல காலணிக் கடை நோக்கிப் பயணித்தது.

காலணி கடையில் இருந்து திரும்பும் போது அதே கிழவி காலணி இல்லாமல் நடந்து போவதைக் கஸ்தூரி கண்டாள்.

மாமாவிடம் காரை நிறுத்தச் சொல்லி, இறங்கி கிழவி இடம்போய் “ஆச்சி எங்கே நான் தந்த காலணி?” கஸ்தூரி கேட்டாள் .

“அம்மா உங்கள் காலணியை பார்த்து ஒரு நல்ல விலைக்கு ஒரு பெண் கேட்டாள். விற்று விட்டேன் இனி சில நாட்களுக்கு என் வீட்டு அடுப்பு எரியும்” என்றாள் அந்தக் கிழவி.

கஸ்தூரி அந்த பதிலைக் கிழவியிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. தன் காலணி ஒரு குடும்பத்தின் பசியை சில நாட்களுக்கு போக்கிற்றே எனச் சந்தோசப் பட்டாள்.

(யாவும் புனைவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *