கவலையில்லாத மனிதன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,707 
 
 

உலகில் கவலையே இல்லாத மனிதன் யாராவது இருக்கிறானா என்றறிய வேண்டும் என்ற எண்ணம் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. அதனால், ஒருநாள் மாறுவேடத்தில் அவன் பல இடங்களுக்கும் சென்றான்.

நண்பகல் வேளையில் வயல்புறத்தில் மன்னன் வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு விவசாயி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். அவன் மிகவும் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த மன்னன் அவன் அருகில் சென்றான்.

கவலையில்லாத மனிதன்“அப்பனே, இந்த வெயில் வேளையிலும் கவலையேதும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே வேலை செய்கிறாயே, உன்னுடை வருமானம் எவ்வளவு?’ என்று அவனிடம் கேட்டான்.

அதற்கு அந்த விவசாயி, “ஐயா, தினமும் என்னுடைய வருமானம் இருபது வராகன்… அதில் நான்கு வராகனைப் பழைய கடனுக்கும் மூன்று வராகனை தருமத்துக்கும் ஐந்து வராகனை வட்டிக்கும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தைக் கொண்டு நானும் எனது மனைவியும் வாழ்கிறோம்!’ என்று அமைதியாகக் கூறினான்.

இதைக் கேட்ட மன்னன், “நான்கு வராகனைப் பழைய கடனுக்குக் கொடுக்கிறேன் என்கிறாய்… கடன் இருந்தும் உனக்குக் கவலை இல்லையா? அப்புறம் என்ன தருமம்? எதற்கு வட்டி?’ என்று வியப்புடன் கேட்டான்.

அதற்கு விவசாயி, “ஐயா, நான் பழைய கடன் என்று சொன்னது என்னுடைய வயதான பெற்றோருக்குச் செலவு செய்வதை! தருமம் என்று கூறியது எனது விதவைச் சகோதரிக்கும் அவள் பிள்ளைகளுக்கும் செலவு செய்வதை! வட்டிக்குக் கொடுப்பதாகச் சொன்னது என்னுடைய பிள்ளைகளின் படிப்புக்குச் செலவிடுவதை!’ என்றான்.

கவலையில்லாத மனிதனைக் கண்டறிந்த மகிழ்ச்சியுடன் மன்னன் அரண்மனைக்குத் திரும்பினான்.

– செவல்குளம் “ஆச்சா’ (டிசம்பர் 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *