கல்வி பொருள் அளிக்கும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளிலே மதுரையில் நற்றமிழ் நம்பி என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார். அவர் பல நூல்களைக் கற்றுச் சிறந்திருந்தார். அவர் படிக்காத நூல்களே இல்லை. அக்காலத்தில் மதுரையில் இருந்த சங்கப் புலவர்கள் தங்கட்கு ஏதேனும் ஐயம் நேரிட்டால், தங்கள் ஐயத்தை நற்றமிழ் நம்பியிடம் கேட்டுத் தான் போக்கிக் கொள்வார்கள்.
நற்றமிழ் நம்பி பெரும் புலவராக விளங்கியிருந் தமையின் எப்பொழுதும் நூலாராய்ச்சியிலே ஈடுபட் டிருந்தார். அவருடைய குடும்பம் எளிய நிலைமையில் இருந்தது. ஒருநாள் சில புலவர்கள் பாண்டிய மன்னனைக் கண்டு நற்றமிழ் நம்பி வறுமையால் வருந்துவதைத் தெரியப்படுத்தினார்கள். அதனைப் பாண்டிய மன்னன் கேள்விப்பட்டு, “ஆ அப்படியா! பெரும் புலவராக விளங்கும் அவர் செல்வத்தினுஞ் சிறந்து விளங்குவார் என்று எண்ணி நான் இதுவரையில் அவருடைய வாழ்க்கை நிலைமையைக் கருதாமல் இருந்துவிட்டேன்,” என்று கூறி நற்றமிழ் நம்பிக்கு மிகுந்த பொருள் அளித்ததுடன் ஓர் ஊரையும் உரிமையுடன் பயன்படுத்திக்கொள்ளுமாறு அளித்தான்.
வறுமையில் வருந்தி நின்ற புலவர், திடீரென்று செல்வக் கடலில் வீழ்ந்து திளைக்குமாறு நேர்ந்தது அறிவின் மாட்சியே என்று அனைவரும் வியந்தனர். அவருக்கேற்பட்ட பெருமையைக் கண்டு பலரும் பல நூல்களைக் கற்றுச் சிறப்படைந்தனர்.
“நூல்பல கல்” (இ – ள்.) நூல்பல – அறிவை வளர்க்கும் நூல்கள் பல வற்றையும்; கல் – நீ கற்றுக்கொள்வாயாக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,